பாரின் சரக்கு பாலிசி
சுப்ரபாரதிமணியன்
–
கூரியரில் மோதிரம் வந்தது.
அருணகிரிக்குக் கத்த வேண்டும் போலிருந்தது. கண்டேன் சீதையை என்று அனுமன் கத்தியது சம்பந்தமில்லாமல் ஞாபகம் வந்தது.
“ அடப்பாவி கிளம்பீட்டியா “ என்றுதான் கத்தினான்.உடனே அவளைப் பார்க்கவேண்டும் போல் இருந்தது. கைபேசியை முடுக்கினான். மஞ்சள் சுரிதாரில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள். அவள் தேவி..முப்பது வய்தில் அவள் முகத்தில் இல்லாத அழகையெல்லாம் அவன் கண்டிருக்கிறான்
தினம் நூறு குறுஞ்செய்திகள் அனுப்பிய காலம் உண்டு. பிரியலாம் என்று கூட ஒரு குறுஞ் செய்தியில் சொல்லித்தான் பிரிந்தார்கள். அனுப்பியவள் தேவி… .குறுஞ்செய்தியும் , இப்போது இந்தக் கூரியரும்…மோதிரம் போன்ற வஸ்து சுலபமாக திருடு போகாமல் கூரியரில்பத்திரமாக வந்து சேர்ந்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. தொலைந்திருந்தாலும் ரூபாய் அய்ந்தாயிரம் நஷ்டமாயிருக்கும். தொலைந்தது தெரியாமல் கூட போயிருக்கலாம், மோதிரம் அவளிடம்தான் இருக்கிறது என்று அருணகிரி நினைத்திருப்பான். இப்போது தேவி உறவை முறித்துக் கொண்டது நிச்சயமாகி விட்ட்து..
“ யூ டூ ஷரோன் ” என்று வாய் விட்டுச் சொன்னான்.
அவளை ஷரோன் என்றுதான் கூப்பிடுவான். கூரியர் முகவரி பார்த்தான், மீண்டும் தேவி ஆகி விட்டிருந்தாள்.
தேவி பனியன் கம்பனி மெர்சண்டைசிங்கில் சேர்ந்தபோது அந்தப்பிரிவு மேனேஜர் “ யூ டூ கம்பம் “ என்றான். தேவி முழித்த முழிப்பில் சாயப்பட்டறைகள் மூட உத்தரவு இட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்ட சாயப்பட்டறை தொழிலாளியின் திகைப்பு போலத்தான் இருந்த்து. அவனே விளக்கமும் சொல்லிவிட்டான் கேட்காமலே.
.” உங்க ஊரும் கம்பமா.. கம்பம் பள்ளத்தாக்கு எனக்குப் பிடிச்ச எடம். பச்சையாக எங்கயும் கெடக்கும் அந்த ஊர்லைருந்து எதுக்குப் பஞ்சம் பொழைக்க வர்றீங்கன்னுதா.”
அருணகிரி அண்ணாமலை தீபம் ஊர்க்காரன். பல ஏக்கர் பரப்பளவில் இருந்த பனியன் கம்பனியில் இன்னொரு ஓரத்தில் பாக்கேஜ் செக்சனில் அவனுக்கு வேலை.வழக்கமான சந்திப்புகள். புன்முறுவல்கள்.. அப்புறம் காபி ஷாப்புகள், சோடா ஹப்புகள் .இண்ட்ட்னெட்செண்டர்கள் என்று திரிந்த போது பிரிவு அவஸ்தை தருவது என்பது தெரிந்தது..
ஊரின் மத்தியில் இருந்தது மொழிப்போர் நினைவுச் சின்னம்.லேசாக மழைத் தூறிக்கொண்டிருந்து. ஒதுங்கி நிற்பதற்கு இடமில்லை என்பது போல் நினைவுச்சின்னத்தின் அருகில் ஒதுங்கிக்கொண்டார்கள். ஒரு தொழிற்ச்சங்கம் அதன் அழுக்குத்தனத்துடன் ஓரமாய் நினைவுச்சின்னத்தையொட்டியிருந்தது.
“அதென்னங்க அ நொண்டியடிக்குது. ”
“நானும் ஒரு நாள் ஆச்சர்யப்பட்டுத்தா ஒதுங்கிப் பாத்தேன். அப்புறந்த தெரிஞ்சது தமிழ் அ தா அது. அகரம் . முதல் எழுத்து.இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலே செத்துப் போனவங்க நினைவுச் சின்னம் இது.”
” பனியன் கம்பனி, ரெண்டு கட்டிங் டேபிள், ரெண்டு பவர் டேபிளுக்கு இருக்கற மரியாதை இந்த ஊர்லே எந்தச் சிலைக்கோ, எந்த நினைவுச் சின்னத்துக்கோ இல்லைதா. ..”
மழை சற்றே வலுக்கத் தொடங்கியிருந்தது.” இன்னும் கொஞ்சம் ஒதுங்கி ஏதாச்சும் சிலைக்கடியிலாச்சும் ஒதுங்கியிருக்கலாம் ”
” ஒதுங்கறதே நம்ம பொழப்பாப்போச்சு, இன்னம் கொஞ்சம் தள்ளிப் போயிருக்கலாம். ”
இன்னும் கொஞ்சம் தள்ளி அண்ணாவும் பெரியாரும் பக்கம்பக்கம் நின்றிருந்தார்கள்.அவர்களின் தலைக்கு மேல் ஒரு கூடாரமும் உண்டாகியிருந்தது. அதில் எப்போதைக்குமாக கொஞ்சம் காவல் துறையினர் காவலுக்கு இருந்தார்கள். முன்பு நாலைந்து பேர். இப்போது அவர்கள் இருவராகியிருந்தனர். அண்ணாவும் பெரியாரும் இருவர். காவல்துறையினரும் இருவர் அவர்களின் காவலுக்கு. அங்கு கொஞ்சம் நின்று வலது பக்கம் பார்த்தால் குமரன் நினைவுச் சின்னம் இருந்தது. குமரன் நினைவுச்சின்னம் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் அண்ணா பெரியார் நிற்பது பலருக்குப் பிடிக்கவில்லை. குமரனுக்கு முக்கியத்துவம் இல்லை, மாற்ற வேண்டும் என்றார்கள். சப்தம் போட்டார்கள்.கொஞ்சம் கடுசாய் வார்த்தைகள் வந்து விட்டன. காவல்துறை அண்ணா பெரியாரை காத்துக் கொண்டிருந்தார்கள்.
காதர்பேட்டையிலிருந்து திமுதிமுவென்று நாலைந்து நைஜீரியர்கள் அவர்களைக்கடந்து போயினர். தூறல் மழை அவர்களின் உடல் நிறக்கறுப்பை இன்னும் அழுத்தமானக் கறுப்பாக்கியிருந்தது. மழையில் நனைந்து போகும் யானையைப் போல் இருந்தனர்.
” இவங்களையும் வாழ வைக்கிற ஊர். நம்மளெ வாழ வைக்காதா..”
” அதுதா வாழ வைக்குதே, அப்புறம் என்ன கேள்வி. ”
” வாழ வக்கறத்ன்னா அந்த அர்த்தமா. பத்து மணி நேர வேலை. கொஞ்சம் காசு. .கொஞ்சம் சொகுசுன்னு… அதில்லை.. ”
” அப்புறம்… ”
” உன்னை நான் நேசிக்கட்டுமா ”
” அட சக்கை. இவ்வளவு அழகான தமிழ்லே கேட்டுட்டே. லவ் யூன்னு கேட்கறதுக்கு பதிலா இப்பிடி பர்மிசனோட வந்தது நல்லா இருந்துச்சு.”
மழை ஒதுங்கிக் கொண்டாலும் இருவரும் நெருங்கி நின்று கொண்டே இருந்தனர்.சட்டென கதகதப்பு கூடிக்கொண்டிருந்தது. மழை கொண்டு வந்துப்போன லேசான குளிரை அவர்கள் எல்லா திசைகளிலும் கடத்திக் கொண்டிருந்தார்கள்.சிலைகளும், மொழிப்போர் நினைவுச்சின்னமும் அந்தக்கதகதப்பில் ஈரம் தவிர்த்து தங்களை சற்றே சூடாக்கிக் கொண்டன.
அடுத்த முறை நொய்யல் கரையில்தான் ச்ந்தித்துக் கொண்டார்கள்.சாய்த்தண்ணீரும் சாக்கடைக்கழிவுகளும் பல வர்ண நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தன. ” என்ன இங்க வரச் சொல்லீட்டீங்க..”
” அதோ பார் ”
” வளம்” நினைவுச் சின்னம் நொய்யலின் நடுமத்தியில் நின்றிந்தது. நொய்யல் ஓர மேட்டைச்சரிபடுத்தி பாலம் ஏற்படுத்தியிருந்தது வளம் அமைப்பு…அதன் நினைவாய் தூண் ஒன்று சிமென்ட் நிறத்தில் நின்று கொண்டிருந்தது.
“ஊருக்குள்ள இருக்கற சிலைகளெ , நினைவுச்சின்னங்களெ ஒரு ரவுண்டு கூட்டிகிட்டுப்போயி காட்டறதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா ”
‘ இந்த ஊர்லே டாலர், பவுண்டுன்னு இருக்கறதெத்தவிர காட்டறதுக்கு வேறெ என்ன இருக்கு. ”
” இருக்கே .. இதோ ” கறுத்த நிறத்தில் நொய்யல் சலசலத்து ஒடிக்கொண்டிருந்தது. நொய்யல் நதியின் மத்தியிலும் அங்குமிங்குமாய் பல வர்ணங்களில் பாறைகள் இருந்தன. அவ்வப்போது அப்பாறைகள் வர்ணம்டைத்துக் கொண்டன. ஏதோ விசேசம் என்று சொல்லிக் கொண்டன. சமீபத்திய விசேசம். பொங்கல் விழா. நாலைந்து நாட்கள் கரகாட்டம், கும்மியாட்டம், அண்ணன்மார் சுவாமி கதை என்று அந்தப்பகுதியில் மேடை போட்டு நடத்தினார்கள். எல்லாவற்றுக்கும் கூட்டம் சேர்ந்தது.
” ஷங்கர் படத்துலே எல்லாத்துக்கும் பெயிண்ட் அடுச்சு வுட்ட மாதிரி பாறைகளுக்கு பெயிண்ட் அடுச்சு வுட்ட ஊர் இதுவாத்தா இருக்கணும். ”
அவள் மல்லிகைப்பூ கேட்டாள்.
” என்ன திடீர்ன்னு” ”
” ஏதாச்ச்சும் கேட்கணும்ன்னு தோணுச்சு. தலைங்கற பாறையிலெ கொஞ்சம் வெள்ளைப் பெயிண்ட் அடிக்கலாமுன்னு. வேற இங்க சுண்டலும் பலூனுமா கெடைக்கப் போகுது ”
” கொஞ்ச தூரம் போனா மெக்டுவல் இருக்கு..”
அவன் அலைந்து திரிந்து கொண்டிருப்பது அவனின் வெஸ்பா சப்தம் அங்கங்கு கேட்டதில் தெரிந்தது.யுனிவர்சல் திரையரங்கு ஓரத்தில் தெரிந்த ஒரு தையல் செக்சன் பக்கமிருந்து ஏதோ இயந்திரங்களின் பலத்த ஓசை கேட்டது. அவள் அம்மா தையல் வேலை செய்தவள். ரவிக்கைகளும் பழைய துணிகளும் தைத்து அவளை பள்ளிப்படிப்பு வரைக்கும் கடத்திக்கொண்டு படிக்க வைத்திருக்கிறாள். அவளுக்கும் பனியன் கம்பனி என்றதும் தையல் செக்சன்தான் ஞாபகம் வந்தது. தையல் மிசினில் உட்கார்ந்து ஓயந்து போன்தற்குக் காரணம் தையல் மிச்சின் கொடுத்த சூடும், அது சார்ந்த் கொப்பளங்களும் அது சார்ந்த இன்னும் வியாதிகளும்தான். தையல்காரனின் மகளாய் அவள் தொடர வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தாள்.
அவன் திரும்பி வந்து போது அவன் கையில் மினுமினுக்கும் ஜரிகைப்பொட்டலம் ஒன்று இருந்தது.
” மல்லிகைப்பூவே கெடைக்கலே. நாளைக்கு முகூர்த்தம்வேற. இது கல்யாண சீசன்….பெரிய டிமாண்ட் ” .
மினுமினுக்கும் ஜரிகையில் ஒளிந்திருந்தது சின்ன தங்க மோதிரம்.
” பொன் வைக்கிற எடத்திலே பூன்னு சம்பரதாயமா கையாலாகாத்தனத்தை மறச்சு சொல்வாங்க. இப்போ இங்க அதுக்கு மாறா..தலைகீழா .. பூ வெக்கற எடத்திலே பொன். ”
” தலையிலெ பூவும் வெச்சு வுட்டிட்டீங்க.. ஒதுங்க எடம் தேடற மாதிரி. அதுக்கு பர்மிசன் கேட்கற மாதிரி ..”
நினைவுச்சின்னங்களும் , சிலைகளும் பார்த்து அலுத்துப்போகவே கொஞ்சம் லாட்ஜ் பக்கமும் ஒதுங்க ஆரம்பித்தார்கள்.
கல்யாணம் செய்து கொண்டால் வெட்டிப் போட்டிருவாங்க என்று அவள் சொன்னான். அவனும் அதையேதான் சொல்ல வேண்டியிருந்தது.
” பொட்ட்டலம் கட்டி பாலாறுலே வீசிருவாங்களே.”
“ நொய்யல்லியே அதுக்கு சவுகரியம் இருக்கு. சாயத்தண்ணியிலே அடையாளம் காணாமப்போகப் பண்றது சுலபம் “
சேர்ந்து வாழலாம் என்று தீர்மானம் செய்த போது சில மாதங்கள் ஓடியிருந்தது. சாயப்பட்டறைகள் மூடல்கள் என்று என்று வந்தபின் ஊரில் நிரம்ப கம்பனிகள் காலியாகிச் சும்மா கிடந்தன. நாலு பெரிய கம்பனிகள் பார்கள் ஆயின. ஏழு சாயப்பட்டறைகள் பால் கம்பனிகள் ஆயின. நொய்யல் கரையில் இருந்த ஒன்பது சலவைப்பட்டறிகள் ஈமு கோழி பண்ணைகள் ஆயின..
” இந்த சமயத்திலே ஊடு புடிக்கறது சுலபம். நிறைய வூடுக சும்மா கெடக்குது. . ஜாதி மதம்ன்னு விலாவாரியா கேட்க மாட்டாங்க.”
ஊர் விட்டு வந்த் பின் இந்த நகரத்தில் தங்களின் ஜாதி அடையாளம் தெரியாமல் திரிவது சுலபமாக இருந்தது. அதற்காகவே புழுதி, வெயில் சாயக்கழிவுகள், பிளாஸ்டி குப்பைகள் மீறி அவர்களுக்கு ஊர் பிடித்து விட்டது.
” நல்ல காசு. டாலர் பவுண்டுன்னு பத்து வருசத்தில நம்ம பர்ஸ்லே புழங்கும் . சாயம், அழுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்”
” ஜாதி கேட்காட்டியும் புருசன் பொண்சாதியான்னு கேட்காமலா இருப்பாங்க..”” “ கேட்டா ஆமான்னு சொல்லிட்டாப் போச்சு. “
“ என்ன ஆமான்னு சொல்லப் போறீங்க்..”
“ எல்லாத்துக்கும் ஆமாதா. உங்கூட படுத்து சொகம் காண்றதுக்கு எவ்வளவு ஆமா வேண்ணா போடலாம்”
எல்லாம் சுலபமாகவே நடந்தது. லைன் வீடுகளைத் தவிர்த்தார்கள்.தனியாய் ஒரு வீடு தென்பட்டது. வீட்டுக்காரர் நாலு வீதி தள்ளி இருந்தார்.அது பெரிய சவுகரியம். அவளுக்கு கமலி பெண்கள் விடுதியில் இருந்த அவஸ்தை முடிந்தது. அவன் லாட்ஜில் மாத வாடகையில் இருந்த உப்புசம் தீர்ந்தது.
“ சின்னதா ஒரு நஸ்டம்”
” தெரியலையே”
“ முந்தியெல்லா மீட் பண்றப்போ நான் ஒரு குட்டிக் கதை.. நீங்க் ஒரு அறுவை ஜோக் சொல்வமே.”
“ ஆமா அது கட்டாயிருச்சு.”
“ செரி ஒரு குட்டிக் கதை சொல்லீர்ரன்.. கடைசி மனிதன் இருந்த வீட்டுக்கதவு தட்டப்பட்டது.”
“ இது நான் படிச்சதுதா. உபயம் சுஜாதா..”
“ நான் என் பங்குக்கு மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் சொல்றேன். “
“ அதுவும் உபயம் சுஜாதாதானா..”
” இன்னமும் இதை பாலோ பண்ணனும். ஞாயிற்றுக்கிழமையாச்சும் குட்டிக்கதை, கடி ஜோக்ஸ் சொல்லிக்கணும் “
ஒரு ஞாயிற்றுக்கிழமை மாடியில் நின்று பட்டம் விட்டார்கள் டீல் விட்டு அறுத்து விடுதலில் அவன் மன்னன்.மாஞ்சா போடுவதிலும் மகா மன்னன், சாயப்பொடி, கோந்து, கண்ணாடித்தூள் போன்றவற்றைக் கலந்து பசை தயாரிப்பான். அன்று பட்டம் விட்ட போது பட்டத்தைக் கடந்து சென்ற விமானத்தைக் காட்டிச் சொன்னான்: “ உன்னோட இதிலெல்லாப் பறக்கணும் ”
அது அங்கு குடிபோய் ஒரு வாரத்திற்கப்புறம் எதுவும் தொடரவில்லை. எல்லாம் தலை கீழாகிவிட்ட்து. இரண்டாம் நாள் தேவி அவளின் தூரத்து உறவினர் ஒருவரை அவள் குடி போன வீதியில் பார்த்தாள். “இந்த வூட்லே என்ன பண்றே “
“ இங்கிருக்கறவைய பாக்க வந்தன்”
“ காலியாத்தானே கெடந்தது. யாருஇருக்கறா”
“ ஒரு குடும்பம்”
“ குடும்பம்ன்னு இருந்த மாதிரி தெரியலே”
அவரை அந்த வீதியில் அடிக்கடி பார்ப்பதாய் தோன்றியது. அவரும் வேவு பார்ப்பதாய் தோன்றியது.பிரம்மை.. பயம்… அலைக்களித்த்து. ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும். அருவாள் சகிதமாய் நாலைந்து பேர் வருவர் என்பது அவன் அணைப்பில் அவள் கிடந்தபோது விருக்கென்று தள்ளி போகச் செய்திருக்கிறது.
“ வேறு எடம் பாத்தரனம்”
“ நிறைய அட்வான்ஸ் கொடுத்திருக்கம் “
“ அட்வான்ஸ்க்காக அடிபடமுடியுமா.. வெட்டி பொட்டலமாக் கட்டிருவாங்க. ரெண்டு பக்கமும் ஜாதி வெறி புடுச்ச மறவர்கதானே இருக்காங்க் “
கமலி பெண்கள் விடுதிக்கு தேவி திரும்பி விட்டாள். அழுக்குப் படுக்கை, பாத்ரூமுக்கு க்யூ. கலர்கலராய் அஜினோமோட்டா சாதங்கள். அலுத்துவிட்டது எப்போதோ அவளுக்கு,
.’ என்ன கமல் கவுதமின்னு சொல்லிட்டிருந்தே ஊத்திருச்சா..”
“ என்ன திருப்தி பண்ண முடியலையா..யார்….. எவர் “
“ நல்ல திருப்திதா. உசிரு எப்போ போகுமுன்னு ஊசலாட்டம் ..’
இதற்கிடையில் தேவியும் மெர்ச்சண்டைஸில் இருந்த கிராக்கி காரணமாக வேறு கம்பனிக்குப் போய் விட்டாள். அவனைத் தவிர்த்தாள்.
“ என்ன அவாய்டு பண்றேயா.. ”
”இப்போ நெனச்சாலும் உடம்பு நடுங்குது…யோசிச்சுப் பார்த்தா ஒர்க் அவுட் ஆகாதுன்னு தீர்மானமா தெரிஞ்சது நீயும் படுக்கை சபலமெல்லா இல்லாமெ யோசிச்சுப் பாரு…”
முன்பு இண்டர்னெட்கபேயில் இருவரும் சென்று பொழுது போக்கியபோது ஒரு நாள் அருணகிரி “ பேசிக் இன்ஸ்டிங்ட் “ பட்த்தில் இடம் பெற்ற உடலுறவுக் காட்சிகளை காட்டினான். அதன் பின்னரான சந்திப்புகளீல் அவள் அப்படத்து கதாநாயகி ஷ்ரோன் ஸ்டோன் போலத்தான் அவனுடன் படுக்கையில் இயங்கினாள்.
” ஷ்ரோன் ஸ்டோன் நடிச்ச மத்த படங்களைப் பாக்கறையா “
“ இது ஒண்ணுக்கே இடுப்பு வலி தீரலையாமா. “ அதற்கப்புறம் அவளை செல்லமா ஷரோன் என்றுதான் கூப்பிட ஆரம்பித்து தொடர்ந்தான்.
“ வாழ்க்கையிலே யாரையாச்சும் முன் உதாரணமா வெச்சுட்டு
பாலோ பண்ணனும் “
“ என்க்கு ஷரோன்.. உங்களுக்கு “
“ உனக்கு இப்பதா ஷ்ரோன். எனக்கு எப்பவும் மு.வ தா..”
“ அவர் ஒழுக்கத்தை கம்பல் பண்றவர். “
“ லிவிங் டுகதர் பத்தியும் கதை எழுதியிருக்கறார். “
அவளுக்கு அவன் அணிவித்திருந்த மோதிரம் திரும்பி வந்து விட்டது. நிச்சயார்த்த மோதிரமா. நட்பு சின்னமா எதுவுமில்லை. இனி ஒட்டும் இல்லை உறவுமில்லை. சரி என்னதான் சொல்கிறாள் என்று தெரிந்து கொள்ளலாமே என்று அவளின் கைபேசி எண்ணை முடுக்கினான். இன்னும் எண் மாறவில்லை. குறுஞ்செய்தியில் பிரிவு சொல்லி பிரிந்தவள்.. .எடுக்கிறாளா. நிராகரிப்பாளா…
“ சவுக்கியமா தேவி..”
“ சவுக்கியம் .. எப்பவாச்சும் இப்பிடி ஹலோ சொல்லிக்கலாம் அதுதா நல்லது”
“ செரி ..” அவனுக்கு தொண்டை கமறியது.
“ உனக்கு தொண்டை கமறியலையா ஷரோன் .”
“ அதைத் தாண்டி வந்திட்டேன், உசிரு முக்கியமில்லையா.. என்ன ஷரோன்னுட்டிங்க..”
“ ரொம்ப நாளா அப்பிடி கூப்பிட்டு பழக்கமாயிருச்சே.’
‘ நீங்க்தானே யாரையாச்சும் பாலோ பண்ணனும். உங்களுக்கு மு.வ.ன்னீங்க..”
“ உனக்கு ஷரோன்னே “
“ உம் “
“ மோதிரத்தைத் திருப்பி அனுப்பிச்சிருக்கீங்க “
“ அதுவும் ஷ்ரோன் வழிதா. அவங்க் வழி தனி வழி..”
“ எப்பிடி “
“ டாம் டாம் பத்திரிக்கை இந்த இஷ்யூ முப்பத்தஞ்சம் பக்கம் பாருங்க “
டாம்டாம் புதிதாய் வந்திருக்கும் வாரப்பத்திரிக்கை, ஊர் முழுக்க விளம்பரங்கள் பார்த்திருந்தான். பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளி முக்கு பெட்டிக் கடையில் டாம்டாம் அந்த வார அட்டையில் திரிஷாவுக்கும் நயன தாராவுக்கு என்னென்ன வித்தியாசங்கள் என்று தலைப்பிட்டு திரிஷா மார்பைக்காட்டி சாய்ந்து சிரித்தாள். முப்பத்தைந்தாம் பக்கத்தைப்புரட்டினான்.இடையில் சமீரா ரெட்டியின் டீசர்ட்டை கன்னாபின்னாவென்று கிழிக்கும் ஆடம்சாக்ஸ் கண்ணில் பட்டார்.
எனக்குத் தேவை “ பேஸிக் இன்ஸ்ட்ங்ட் “ ஷ்ரோன் ஸ்டோன்.
முப்பத்தஞ்சாம் பக்கம் . அட..முப்பத்தஞ்சாம் பக்கம் நடுப்பக்கமல்லவா.. ஷரோன் மார்புகளின் பிளவு தெரிய தொடையை அகல விரித்துக்க் கொண்டு மேசை மேல் உட்கார்ந்திருந்தாள். ஷரோன் பற்றிய செய்தியை பரபரவென்று படிக்க ஆரம்பித்தான்.
மகா நட்சத்திரம் கூரியரில் காதலனுக்கு மோதிரத்தைத் திருப்பி அனுப்பியிருந்தாள்.
-----------------சுப்ரபாரதிமணியன்--------------