சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 19 அக்டோபர், 2023

மனிதர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள் - ஹரணி சிறுகதைகள் சுப்ரபாரதி மணியன் கல்வித்துறை சார்ந்தவர்கள் குறிப்பாக ஆசிரியர்கள் முந்தைய தலைமுறையினர் எழுத்தாளர்களாக இருந்து எழுதுகிற போது அவர்கள் நிறைய லட்சிய மனிதர்களை காட்டினார்கள். அந்த லட்சிய மனிதர்கள் இன்று பல வகைகளில் கேலிக்குரியவர்களான மனிதர்களாகி விட்டார்கள். . ஆனால் அவர்களுடைய லட்சியங்களும் வாழ்க்கை பற்றிய கோணங்களும் இன்றைக்கும் தேவையாக இருக்கின்றன. இப்போது கல்வித்துறை சார்ந்து இருக்கக்கூடிய எழுத்தாளர்களில் பலர் ” மாதிரி மனிதர்களை” உருவாக்குகிறார்கள். எழுத்திலும் சில செயல்பாட்டிலும். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளில் நல்ல கல்வி, மற்றும் ஒழுக்கத்துடனும் மாணவர்களை உருவாக்க ஆசைப்படுகிறார்கள். அதே பிம்பங்களைக் கொண்டு சமூகத்தில் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று பல மாதிரி மனிதர்களை கதைகளில் உருவாக்குகிறார்கள்.. இந்த மாதிரி மனிதர்கள் எல்லோர் கண்களிலும் படுவதில்லை.. எல்லோரும் அவர்களுடன் உறவு கொள்வது இல்லை ஆனால் சிலரின் கண்களில் படுகிறார்கள். சிலரோடு உறவுகள் கொள்கிறார்கள். அவர்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம். எழுத்தாளர்கள் கலைஞர்கள் தாங்கள் விரும்புகிற விஷயத்தை படைப்புகளில் மனிதர்கள் மேல் ஏற்றி பல சமயங்களில் மாதிரி மனிதர்களை உருவாக்குகிறார்கள். பல சமயங்களில் அவர்கள் இயல்பாகவே நம் வாழ்க்கையில் கூடவே இருக்கிறார்கள் அவற்றையெல்லாம் அவர்கள் தொகுத்து பார்க்கிறார்கள்.. . தான் பணிபுரிந்த கல்வித்துறை சார்ந்த அனுபவங்களை பல கதைகளில் கொட்டி இருக்கிறார் ஹாரணி அவர்கள். முன்பே தான் பணிபுரிந்த பள்ளிக்கூடம் இடிக்கப்பட்டு பிளாட் போடப்படுகிறது. காலமாய் சிரமப்பட்டு கட்டி உருவாக்கிய பள்ளியை இப்படி நிலமாக்கி விற்கிற கோரத்தை கண்டு உயிர் விடுகிற ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஹாரணியின் கதைகளில் . இப்படித்தான் பலர் இருக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிரபல பின்னலாடை நிறுவனம் ஒன்று வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து ஒரு இலவச பள்ளியை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார்கள். கட்டணம், புத்தகங்கள் உட்பட அனைத்தும் இலவசம். ஆனால் அந்த வெளிநாட்டு நிறுவனம் ஐந்தாண்டுகளுக்கு பிறகு பின்னலாடை நிறுவனத்தை அவர்களே நிதி வசதியை உருவாக்கிக் கொண்டு கல்வி பணி நடத்த வேண்டும் என்று சொன்னபோது பின்னலாடை நிறுவனம் அந்த முயற்சியை கைவிட்டு அந்த பிரமாண்டமான பல ஆண்டுகள் நடந்த பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு நிலத்தை கூறு போட்டு விற்றார்கள். அந்தப் பள்ளியை இடித்துத் தரை மட்டமாக்கியபோது அந்த புல்டோசர் முன் விழுந்து தடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றி மனம் நொந்தேன். ஹாரணியின் ஒரு கதையை படிக்கும் போது இது ஞாபகம் வந்து வருத்தியது எப்போதுதான் நம்மவர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள்.. வீட்டிற்கு வயது வந்த பெண்ணிற்கு யார் சடங்கு செய்வது என்ற கேள்வி வருகிறது உற்றார் உறவினர் கண்டுகொள்ளாத போது அந்த குடும்பத்திற்கு உதவி செய்து வரும் ஒரு பெண் அக்காவாகிறாள், அதேபோல திருநங்கையின் வாழ்க்கைக்கு ஒளியூட்ட ஒருவர் மனைவியாக்கி கொள்கிறார். அந்த திருநங்கை குடும்பத்திற்காக உழைக்கிறார். ஆனால் அவளை வீட்டுத் திருமணத்திற்கு அழைக்கக் கூடாது என்ற நிர்ப்பந்தம் வருகிற போது திருநங்கையின் இருப்பு பற்றி நியாயம் சொல்லப்படுகிறது. வித்தியாசமான ஒரு கோணத்தில் சொல்லப்பட்ட கதை ஆகிறது வாழ்வதற்கு வயதிருக்கிறது. இறக்கிறபோது பலருக்கு பலர் தெரிய வருகிறார்கள். அப்படித்தான் இறப்புக்கு வயது 46 என்றொரு கதையில் இறந்தபின் நினைக்கப்படும் கருணையுள்ள மனிதர்கள் பற்றி சொல்கிறார். லஞ்சமற்ற வாழ்க்கை, நேர்மையான வாழ்க்கை பற்றி தொடர்ந்து ஹரணி பேசிக் கொண்டே இருக்கிறார். வீட்டில் மனைவி போன்றவர்கள் லஞ்சத்தை விரும்புபவர்கள். ஆனால் கணவர் அதை எதிர்த்து வாழ்க்கை முழுவதும் போராடி ஏதோ ஒரு கட்டத்தில் மனைவி அதை உணர்ந்து கொள்வதை தெரிவிக்கும் கதையில் உயர்ந்த லட்சியங்கள் இருக்கின்றன. கடைசி காலம் தங்க இடமில்லை மருமகன் அடைக்கலம் கொடுக்கிறார் .ஆனால் அவர் லஞ்சம் வாங்கி மோசமானவராக காட்டப்படுகிற போது அந்த அடைக்கலம் தமக்கு தேவையில்லை என்று வெளியேறுகிற மனிதர்கள் இருக்கிறார்கள் . திருடு போன நகை திரும்ப கிடைக்கும் என்ற வகையில் பாதையில் திறந்து விடப்படுகிற போது அதற்காக செய்யப்படும் வழிமுறைகள் ஒரு பெண்ணை நிராகரிக்க சொல்கிறது .இவர்களெல்லாம் ஒருவகையில் உயர்ந்த மனிதர்களாக நிற்கிறார்கள்.பல விசயங்களில் ” மாதிரி மனிதர்களாக” இருக்கிறார்கள் ஒரு கதையில் கணேசமூர்த்தி போல வாழ்வது எளிதான அல்ல தவக்கோலம் தான் என்று சொல்லுகிறார் .அப்படி தவக்கோலத்தில் இருக்கிற பல மனிதர்களை காட்டுவது இந்த தொகுப்பில் அடையாளமாக இருக்கிறது. வீட்டில் வசிக்கும் கடவுளாக வீட்டிற்காக உழைப்பவர்கள் தரிசனம் செய்யப்படுகிறார்கள் .இந்த வாழ்க்கையை தான் அந்த கஷ்டங்களுடன் மனிதர்கள் இலக்கிய பாத்திரங்களாக உலாவும் இருப்பை காட்டுகிறார். இலக்கியம் செய்வோம் என்ற வகையில் வாழ்க்கையின் , நேர்மறையான எண்ணங்கள் கொண்ட வாழ்க்கையை காட்டும் எழுத்தாளர்கள் மத்தியில் நல்ல மனிதர்களை பட்டியலிடுவது தான் ஹரணி அவர்களின் பங்காக இருக்கிறது. கசடுகள் நீங்கி வாழ்ந்த மனிதர்கள், வாழும் மனிதர்கள் பற்றிய கதைகளை எடுத்துக்கொண்டு எழுதுவது சுலபமா என்ன..... ஆனால் அந்த சுலபத்தை சுலபமாக கையாண்டு இருக்கிறார் ஹரணி அவர்கள் . கல்லூரி பணி வாழ்க்கையில் இருந்த ஓய்வு பெற்றாலும் பல கல்லூரியில் அவருடைய பணியை தொடர கேட்டுக் கொண்டாலும் போதும் கல்லூரி வாழ்க்கை இலக்கியப் பணியாற்றலாம் என்று அவருடைய எண்ணங்களை பகிர்ந்து கொண்ட போது மகிழ்ச்சி அடைந்தேன். அதேபோல விடாத முயற்சியும் தரளாத ஒழுக்கமும் கடுமையான உழைப்பும் நியாயமான செயல்பாடுகளும் என்றைக்கும் எல்லாம் கடந்து பேசப்படும் என்று ஹரிணி அவர்கள் முன்னுரையில் சொல்கிறார். அப்படி காலம் கடந்து பேசப்படுகிற மனிதர்களை இந்த கதைகளில் காட்டுகிறார் நாராயணன் என்ற கதாபாத்திரம் பல கதைகளில் வருகிறது இந்த நாராயணன் கதாபாத்திரங்கள் அப்பாக்களாக, தம்பிகளாக தாத்தாக்களா, உறவினர்களாக இருக்கிறார்கள் அல்லது எல்லாமே நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிற நல்ல உறவுகளாக இருக்கிறார்கள். இந்த நாராயணங்களின் எண்ணங்கள் உயர்ந்தவை சக மனிதனை நேசிக்கச் சொல்பவை சக மனிதனோடு நீண்ட பயணம் செய்பவை. நாராயணன் போன்ற மனிதர்களை அடையாளம் கண்டு கொள்வது சுலபமல்ல அவ்வாறான மனிதர்களை கண்டு கொள்வதற்கு நல்ல மனம் வேண்டும். அப்படியான மனிதர்கள் ” கண்டவர் “ கண்களுக்கு எல்லாம் கட்டுப்பட மாட்டார்கள். தட்டுப்பட மாட்டார்கள். ஆனால் கருணையின் கண்களுக்கு கட்டுப்படுவார்கள். காரணம் அவரின் நேர்மையான எண்ணங்கள் தான் அடிப்படையாக இருக்கின்றன. அந்த எண்ணங்களின் அடிப்படையில் பல “ மாதிரி மனிதர்களை” அவர் இந்த தொகுப்பில் காட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது ( ரூபாய் 200 கேஜி பப்ளிகேஷன் தஞ்சாவூர்)