சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
செவ்வாய், 29 டிசம்பர், 2020
On 1098
மலைப் பூக்கள்
~ அகிலா..
இந்தியாவில் இருக்கும் 50 சதவிகித குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் 2007ல் நடத்திய ஆய்வில் தெரிவிக்கின்றது. உடல் ரீதியான அத்துமீறல், பாலியல் வன்முறை மற்றும் மனரீதியான பாதிப்புகள் போன்றவை குழந்தைகள் சந்திக்கின்ற சில வகையான பிரச்சனைகளாகும். இந்த ஆய்வின் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று, 50 சதவீத பாலியல் வன்முறைகள் குழந்தைகளின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வகுப்புத்தோழர்கள் ஆகியோரால் நிகழ்த்தப்படுகிறது.
அரசின் POCSO (போக்சோ - பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டமானது, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்குகிறது. அக்குழந்தைகளைப் பாதுகாக்க பல விதிகளை நடைமுறைபடுத்துகிறது. அவ்வாறு பதியப்பட்ட வழக்குகளின் போதோ அதன்பிறகோ சம்பந்தப்பட்ட குழந்தையின் அடையாளம் ஒருபோதும் வெளியிடப்படாது, குழந்தையின் உதவிக்காக நீதிமன்றத்தில் சிறப்புக் கல்வியாளர், மொழிபெயர்ப்பாளர் போன்றோர்அமர்த்தப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைப் பதிவு செய்வதற்கான அரசின் தொடர்பு எண் 1098 தான், இந்த நாவலின் தலைப்பாய் அமைகிறது.
‘மிருகங்கள்: சிறுவர்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவோர், பாலியல் வன்முறையாளர்கள், மற்றும் பிற பாலியல் குற்றவாளிகள்’ (Predators: Paedophiles, Rapists, And Other Sex Offenders) என்ற நூலில், மனநல மருத்துவரும் சமூக செயல்பாட்டாளருமான அன்னா சால்டர் (Anna Salter) அவர்கள்,
“குற்றம் செய்பவர்கள் நாம் கற்பனை செய்திருக்கும் அரக்கர்களைப்போல் ஒருபோதும் இருப்பதில்லை. பெரும்பாலும், அவர்கள் பிறரின் பார்வையில் ‘அழகான மற்றும் நன்கு விரும்பப்படும்’ ஆண்கள் மற்றும் பெண்களாக உள்ளனர். சிலநேரங்களில், அவர்கள் பொதுவில் சமூகப் பொறுப்பு மற்றும் அக்கறையான மனப்பாங்கினையும் காட்டலாம், இதனால் எல்லாரும் அவர்களை மதிக்கத்தொடங்குகிறார்கள். பெரும்பாலான குற்றவாளிகள் குழந்தைகளுடன் ஒத்துணர்வை உருவாக்க நேரத்தைச் செலவிடுகின்றனர், மேலும் அவர்களைத் துன்புறுத்துமுன் அவர்களுடைய நம்பிக்கையையும் பெறுகின்றனர்.”
என்கிறார். இது ஓர் எச்சரிக்கை மணியாக பெற்றோர்கள் எடுத்துக்கொள்ள உதவும்.
சுப்ரபாரதி மணியன் அவர்களின் இந்த நாவலும் இது குறித்தே ஆழமாய் பேசுகிறது. பதினாறு வயது சிறுமியின் மீதான பாலியல் சீண்டல்கள், துன்புறுத்தல்கள், அவளின் சித்தியே அவளை விபச்சாரத்திற்கு உட்படுத்துவது, அதனால் விளையும் மன உளைச்சல், போடப்படும் வழக்குகள், குழந்தைகள் நல அமைப்புகளின் முயற்சிகள், பணத்தை முக்கியப்படுத்தும் வக்கீல்களின் வாதங்கள் என்று நாவல் இன்றைய சமூக அவலத்தின் யதார்த்தத்தை நிதர்சனமாய் சுட்டிக்காட்டுகிறது.
‘நேத்து ரொம்ப சிரமப்பட்ட போல இருக்கே வா நான் வந்து எப்படின்னு காமிக்கிறேன் அப்படின்னு ஒரு ஆணை கூட்டிக்கொண்டு அங்கிருந்த ஒரு பெண் பிளக்ஸ்பேனருக்கு பின்னால் சென்றார். எனக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன அப்படியே உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது .எங்காவது ஓடினால் நல்லது என்று தோன்றியது..’
என்ற அந்த சிறுமியை விபச்சாரத்துக்கு உட்படுத்தும் நிலையில் சுட்டப்படும் காட்சி மனதை நெருடுகிறது. பெண் என்றாலே, அவள் குழந்தையாக இருந்தாலும், சிறுமியாக இருந்தாலும், வளரிளம் பெண்ணாக இருந்தாலும், பேரிளம் பெண்ணாக இருந்தாலும், வயது மூப்பு அடைந்திருந்தாலும் அவளை உடல் ரீதியாக அணுகவும், வேட்கை கொள்ளவும் சமூகம், அதன் கட்டமைப்புகள் இட்டுச்செல்லவே விழைகின்றன.
‘இனிமேல் குளிக்கிற போது உடைகளை கழட்ட போதும் தன் பெண்குறியில் பக்கமிருந்து விசுவரூபமாய் ஏதாவது ஆவி வந்து தன்னை முகத்தில் அறையக் கூடும் என்று விநோதமாய் அவள் நினைத்தாள். அப்படி ஒரு ஆவி அவளை அறைவதற்குள் இதுபோன்ற உயரமான ஒரு கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து விடுவது தான் ஒரு தற்காலிக நிவாரணமாக இருக்கும் .நிரந்தர நிவாரணமாகக் கூட இருக்கும் என்று நினைக்க ஆரம்பித்தாள்..’
என்னும் வரிகளும் சிறுமியின் மன உளைச்சலை எடுத்தியம்புகின்றன. உடல் குறித்த பெரிய அறிவொன்றும் ஏற்பட்டிராத வயதில், தன் உடலின் மீது கொடுக்கப்படும் பாலியல் துன்புறுத்தல்களின் வலியும் உளவியல் சார்ந்த பாதிப்பும் அச்சிறுமியின் உணர்வுகளில் வாழ்க்கைக் குறித்த அருவெறுப்பையும் சலிப்பையும் ஏற்படுத்தி தற்கொலை சிந்தனையை உரக்க படிப்பிக்கிறது.
இந்த நாவலில், வழக்காடு மன்றத்துக்கு சாட்சியங்கள் எத்தனை முக்கியம் என்பதையும் அவை வழக்கு விசாரணைக்கு வரும் கால அவகாசம் வரை அப்படியே இருப்பதில்லை என்பதையும் மனிதர்களின் ஞாபக அடுக்குகளில் இருந்து அந்த நினைவுகள் கலைந்துவிடுவதையும், கால ஓட்டத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் மனநிலையே வளரிளம் பருவத்தைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிடுவதையும் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
இந்நாவல் சிறுமியிலிருந்து அனுபவித்த துன்பம் கடந்து, வளரிளம் பெண்ணாய் குளிர்பிரதேசம் ஒன்றில் தேயிலை தோட்டத்து வேலைக்குச் சென்று புதுவாழ்வைத் தொடங்கும் சூழலை விவரிக்கும் வகையிலும், அங்கேயும் சாராயம் அருந்திய ஒருவனைக் காட்டி முடிக்கும்போது, சமூகத்தின் நிதர்சனமான முகம் என்பது சற்றும் வேறுபடவில்லை என்பதையே உணரமுடிகிறது. இருந்தும், பெண்ணின் மீள்தலும், அதன்பின் அவளின் நிலைகொள்ளுதலும் அவளிடமே இருப்பதாய், பெண்களாகிய அவர்கள் ‘மலையில் பூக்கும் பூக்கள்’ என இறுதியில் இயம்புகின்றன,கனம் நிறைந்த இப்படைப்பின் வரிகள்.
எழுத்தாளரும் நண்பருமான சுப்ரபாரதி மணியன் அவர்களின் களம் கண்ட எழுத்துமுறை, அனைவருக்கும் பரிச்சயமானதே.‘கனவு’ சிற்றிதழை கடந்த 36 வருடங்களாகத் திறம்பட நடத்திவருபவர். திருப்பூர் மற்றும் அதன் பின்னலாடை தொழில், கலாஸ் தொழிலாளர்கள், நெசவாளர்கள், அவர்களின் வாழ்வியல் போராட்டங்கள், நொய்யலில் கலக்கும் சாயத்தண்ணீர், தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள், நகரக் கழிவுகள் போன்ற சமூக பிரச்சனைகளைக் களம் கண்டு எழுதிக்கொண்டிருப்பவர். அவரின் நாவல்களான சாயத்திரை, நெசவு, சாயத்திரை, கோமணம், வேட்டை, சுடுமணல் என்பதான எழுத்துகள் அனைத்தும், பதினேழு நாவல்களும் சிறுகதைகளும், கட்டுரைகளும் சமூக சீரமைப்பின் மீதான அவரின் பார்வை, சகமனிதர்களின் சிரமங்களைப் புரிந்துகொண்ட தன்மை போன்றவற்றை சத்தமிட்டுச் சொல்லத் தவறியதில்லை.
‘1098’ என்ற இந்த நாவலும் அவரின் முந்தைய நாவல்களைப் போன்றதே. குழந்தைகளின் பாலியல் வன்முறைகள் சார்ந்த சமூக அவலநிலையை எடுத்தியம்பத் தவறவில்லை. குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகளுக்கு கொடுக்கப்படும் போக்சோ சட்டம் குறித்த ஆழ்ந்த அறிவும், குழந்தைகள் நலச்சங்கங்களின் சீரிய பணியும், மகிளா வழக்காடு மன்றங்கள் குறித்தும் அதிகமான விழிப்புணர்வு நம் சமூகத்துக்குத் தேவையான ஒன்றாய் இருக்கிறது. அதை இந்த நாவல் பூர்த்தி செய்திருக்கிறது.
நண்பர் சுப்ரபாரதி மணியன் அவர்களின் களம் கண்ட எழுத்துகளால் சுற்றியிருக்கும் சமூகம் மேன்மேலும் பயனடைய என் வாழ்த்துகள்.
~ அகிலா..
எழுத்தாளர், மனநல ஆலோசகர்,
கோவை. artahila@gmail.com