சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 29 டிசம்பர், 2020

புத்தகம் பேசுது இம்மாத இதழில்; பேரிரைச்சலாய் மாறிய பறவை ஒலி:சுப்ரபாரதிமணியனின் தறி நாடா நாவல் பற்றி  ஸ்ரீநிவாஸ் பிரபு தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போலவே கொங்கு நாட்டிற்கும் தனித்த சமூக, அரசியல், பண்பாடு உண்டு. பசுமை போர்த்திய நெய்தல் நிலமும், நொய்யல் ஆறும் கொங்கு நாட்டிப் பழமையின் அடையாளங்களாக இருந்து கொண்டிருக்கிறது. கொங்கு தேசத்தின் ஒரு பகுதியான திருப்பூர் நகரம், தமிழகத்தில் தொழில் துறையில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. கூடவே ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. இன்றளவும் அதனுள் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமும் உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். தொழிலில் இருத்தலுக்கும் மாற்றத்திற்குமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையிலான சித்தரிப்புகள் யாவும் படைப்பிலக்கியத்தைப் பொறுத்தவரை பெருங்கதை வடிவமான சீவக சிந்தாமணி முதல் வையாபுரிப்பள்ளு போன்ற சிற்றிலக்கியங்கள் வரை பல பதிவுகளாக இருக்கிறது. சர்வதேசப் பிரச்சினைகளுள் ஒன்றான சூழலியலை அடிப்படையாக வைத்து சாயத்திரை நாவலை எழுதிய சுப்ரபாரதிமணியன் கைத்தறிநெசவாளர்கள் குறித்து எழுதியுள்ள நாவல் ‘தறிநாடா’. சமகாலத் தமிழ் இலக்கியத்தில் கொங்கு வட்டாரச் சமூகப் பண்பாடு வாழ்க்கை குறித்தான சித்திரிப்புகளுக்கு மத்தியில் முன்மையானதாகவும், முக்கியமானதாகவும் இருக்கிறது சுப்ரபாரதிமணியனின் படைப்புகள். அவர் படைப்பில் எழுந்து நிற்கும் தறிநாடா ஒருதனித்த அழகுடன் மிளிரவே செய்கிறது. இந்நாவல் திருப்பூர் வட்டாரத்தில் கைத்தறிநெசவு நசிந்து விசைத்தறிகளும் பனியன் கம்பெனிகளும் நுழைந்த சமூக வரலாற்றுப் பின்புலத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. நெசவாளர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைச் சித்திரிக்கிறது, தொழிற் சங்கம் சார்ந்த வர்க்க அரசியலைப் பேசுகின்றது. திருப்பூரில் நாற்பதாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நெசவாளர் போராட்டம் தான் இந்நாவலின மையம். கூலி உயர்விற்காகக் கூட அவர்கள் போராடவில்லை. குறைத்த கூலியை சீராக்கக் கோரி நிற்பதுதான் போராட்டத்தின் அடித்தளத்தளம். நெசவாளர் சமூகம் சார்ந்த தொன்மக்கதைகள் இந்நாவலில் விரவிக் கிடக்கின்றன. தொன்ம மனிதர்களின் பிரதிகளான அவர்கள் வாழ்க்கை நிகழ்காலத்தில் விரிகிறது. சாதிய வன்முறைகளைக் கண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அவர்களை அந்நியமாக்குகிறது. பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு அரிசி கடத்தவும் செல்கிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்காலலட்சியமும் மாறுவதை யதார்த்தமாக சித்தரிக்கிறது நாவல். கொங்கு நாட்டின் முக்கியத் தொழில் நகரமான திருப்பூரை இந்நாவல் அதன் முழு அழகுடன் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறது. ‘பின்னலாடை நகரம்’ என்றும் ‘பனியன் ஊர்’ என்றும் சொல்லப்படும் திருப்பூர் நகரம் கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரமாகவே வெளிப்படுகிறது. கொங்கு நாட்டுப் படைப்பாளிகள் பலரும் கொங்கு வட்டாரத்து கிராமிய வாழ்க்கையை கதைகளாக்கும் போது, சுப்ரபாரதிமணியன் திருப்பூர் நகரை, அதன் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வாழ்க்கையை, அதன் மனிதர்களை கதைகளுக்குள் உலவ விடுகிறார். மனிதர்களின் மூலம் அறிமுகமாகிறது மண். திருப்பூர் நகரம், அதன் இயற்கை வளத்தை, மரபான நெசவுத் தொழிலை, பேரெழிலை இழந்து முதலாளித்துவத்தின் அகோரப்பசிக்கு உணவாகி, வாழ்விடமும் தொழிலிடமும் தனித்தனியே பிரிக்க முடியாத பெரும் தொழில் நகரமாக, மாசுபட்ட ஊராக மாறிய விதத்தை திருப்பூர் நகரத்தையும், அது உருமாறிய விதத்தையும், அது கொண்டிருக்கும் இன்றைய முகத்தையும் எவ்வித ஒப்பனையுமினறி விவரிக்கிறது நாவல். நவீனத்துவம் காட்டும் வாழ்க்கைச் சூழலில் அதன் இயங்கு விசையை அக்கரையுடன் கவனித்து இயல்பான மொழியின் வழியாக வடிவம் கிடைக்கிறது. திருப்பூர் வட்டாரத்தைப் பின்னணியாகக் கொண்ட தறிநாடா’ நாவல் 1970களின் முற்பகுதியை திருப்பூர் நகரத்தின் நெசவாளர் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது. நாவல் நகரம் தொழில் மயமாதலின் விளைவாக நிலவியலிலும், மனித வாழ்வியலிலும் ஏற்படும் மாற்றங்களை விவரிக்கின்றன. திருப்பூர் நகரம் தொழில் மயமாதலின் பின்புலத்தில் இயற்கையின், மனித வாழ்க்கையின் சீரழிவைக் கொண்டு விவரித்தபோதும், பெருநகர வாழ்வின் இயந்திரத் தனத்தையும், ஓயாத பதற்றத்தையும், பரபரப்பையும் கொண்டிருப்பதாகவே சித்தரிக்கப்படுகிறது. நகரத்து நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை பெரும்பாலான படைப்புக்களின் பக்கங்கள் எங்கும் பார்க்க முடிகிறது. ஒரு தொழிலின் நசிவென்பது முதலில் உணரப்படுவது அதை மேற்கொள்ளும் தொழிலாளிகளால்தான். அவர்களின் குரல்களை அலட்சியப்படுத்தப்பட்டு செய்யும் எந்தச் செயலும் முழுமையற்றுப் போகும் என்பது வரலாறு. அந்த வரலாறு இங்கே புனைவுகளாக மாறி திருப்பூர் நகரத்தின் கரங்களாக சித்தரிக்கப்படுகிறது. தறிநாடா நாவலில் கொங்கு வட்டாரத்தில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த ‘தேவாங்கர் செட்டியார்’களின் சமூகப் பண்பாட்டு வாழ்க்கை மிக நெருக்கமாக பதிவு செய்கிறது. நெசவாள மக்களின் மரபான செயலான கைத்தறி முறை விசைத்தறி முறையாக மாறுவதும், திருப்பூர் நகரத்திற்குள் நுழைவதும் அதனால் கைத்தறி நெசவு நலிவதுமே நாவலின் முக்கியப் பிரச்சினையாக முன்நிறுத்தப்படுகிறது. விசைத்தறிகளின் வருகையும் பனியன் கம்பெனிகளின் நுழைவும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளையும் தறிநாடா நாவல் அனுதாபத்துடன் சித்திரிக்கின்றது. அது ஒரு வகையில் திருப்பூர் நகர் கண்ட மாற்றமாகவே இருக்கிறது. கைத்தறி நெசவுக்கான கூலி குறைக்கப்பட்டதை எதிர்த்து நெசவாளர்கள் நடத்திய ‘நெசவுக்கட்டு’ எனும் வேலைநிறுத்தப் பேராட்டத்தில் துவங்கி, படிப்படியாக வளர்ந்து, அது திருப்பூர் நகரை உலுக்கிய மிகப்பெரிய போராட்டமாக மாறுகிறது. போராட்டம், தறி நெசவு செய்யும் குறிப்பிட்ட சாதியினர் நடத்திய போராட்டமாக மட்டும் அமைந்ததாலும் அது தொழிலாளர் வர்க்கப் போராட்டமாக உருவெடுக்காததால் வெற்றி பெற முடியாமல் போகிறது. போராட்டத்தினால் நெசவுத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை, உறவுகளை இழந்து உயிர்ப்பலிக்கு ஆளாகிச் சிதைந்து போகிறார்கள். அப்போராட்ட வரலாறுதான் நாவலின் மையக்கரு.‘ரங்கசாமி’ எனும் சராசரி நெசவாளியின் குடும்பத்தை மையமாக வைத்து நீள்கிறது நாவல். அவன் மனைவி ‘நாகமணி’, மகள்கள் ‘மல்லிகா’, ‘ராதிகா’, மகன் ‘பொன்னு’; தருமன், சோமன், அருணாசலம், வெள்ளியங்கிரி, நடேஷ், கோவிந்தன், ஆறுமுகம், சிவசாமி என சக நெசவாளர்கள், பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த தோழர் ராஜாமணி, கல்யாணசுந்தரம் ஆகியோர் நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். கூலிக்குறைப்பை எதிர்த்து நெசவாளர்கள் ஒன்று சேர்ந்து சங்கம் அமைத்துப் போராடியபோதும் பசியும் பட்டினியும் தடியடிகளும் சிறைவாசமும் உயிர்ப் பலிகளுமே அவர்களுக்கு எஞ்சி நற்கின்றன. இந்நாவலில் வரும் ‘அருணாசலம்’ போராட்டத்தைச் சாதியின் எழுச்சியாக செயல்படுகிறார். ஆனால், நெசவாளர் இன சமூகத்தின் பணக்கார முதலாளிகள் தங்கள் வர்க்க உணர்வை வெளிப்படுத்தி போராட்டத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள். சாதியாக அணி திரண்டு, வர்க்கமாக உருமாறியபோதும், பெறாமையும் அரசியல் கட்சிகளின் ஆதரவு இல்லாமையுமே போராட்டத்தின் பின்னடைவுக்கும், தோல்விக்குமான காரணங்கள் என ரங்கசாமி மகன் பொன்னு எண்ணுகிறான். நாவலின் இறுதியில் அவன் கொள்கைப் பிடிப்புள்ளவனாக மாறிப்போகிறான்.காலச் சுழற்சிக்கு ஏற்ப விசைத்தறிகள் பனியன் கம்பெனிகளாக மாறுவதுதான் தொழிலாளர்களின் வாழ்க்கை இருத்தலிற்கான தீர்வு என உணர்கிறான். திருப்பூர் நகரின் பல்வேறு மட்டத்து மனிதர்களைப் போல் நாவலில் வரும் ரங்கசாமி சபிக்கப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொள்பவனாகவும் அருணாச்சலம், பொன்னு ஆகியோர் சபிக்கப்பட்ட வாழ்க்கையை எதிர்த்துப் குரல் கொடுத்து போராடுபவர்களாகவும் இருக்கிறார்கள். கைத்தறி இன நெசவாளர்களின் சமூக வாழ்க்கை மட்டுமில்லாமல் திருப்பூர் நகரத்து சமகால பண்பாட்டு வாழ்க்கையையும் நாவலில் விரிவாக முன்வைக்கிறது. நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவன் நெசவாளியாகத் தான் இருக்க வேண்டும் என்கிற சமூக விதியை நாவலில் வரும் பொன்னு மாற்றுகிறான். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தொழில் இருந்தது. ஆனால் எல்லா ஜாதிகளும் செய்யக்கூடிய தொழிலாகும் நெசவு என்பதும், நெசவாளர் சமூகம் சார்ந்த தொன்மக்கதைகள் நாவல் எங்கும் விரவிக் கிடக்கின்றன. தொன்மத்தின் பிரதிநிதிகளாக வாழ்க்கை நிகழ் காலத்தில் இருக்கிறது. தறியோட்டிய நெசவாள எளிய மனிதர்கள் சாதிய வன்முறைகளைக் கண்டு ஒடுங்கிப்போகிறார்கள். அரசின் அலட்சியமும் அந்நியமாக்குகிறது. பனியன் தொழிலுக்கு இடம் பெயர்கிறார்கள் சிலர். கேரளாவிற்கு வேறு தொழிலுக்கு போகிறார்கள். போராட்டங்களும் சிறை வாழ்க்கையும் அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது. அச்சமூகத்திலிருந்து வரும் இளைஞன் ஒருவனின் வாழக்கை மீதான பார்வையும் அவனின் எதிர்கால லட்சியமும் கொள்ளும் மாற்றத்தை சித்தரிக்கிறது நாவல். ‘இதென்ன எம்.ஜி. ஆர் வாளா. கையில் எடுத்ததும், பிரச்சினை தீர்ந்து போறதுக்கு. கொல்லன் பட்டறையிலே இருக்கறது, தட்டித்தட்டிதா செழுமையாக்க முடியும்’ என்ற வாழ்வின் யதார்த்தவியலே வாழ்க்கைக்கான வித்தாகிறது. ஒரே ஜாதி என்ற போதும், நெசவு நெய்கிறவன் கீழ் ஜாதி, நெய்யாத முதலாளி மேல்ஜாதி என்கிற உண்மையை நெசவுத்தொழிலாளர்கள் உணர்ந்து கொள்வதாக நிறைகிறது. எந்த ஒரு போராட்டமும் அரசியல் சார்பும் கருத்துச் சார்பும் கூடி நிற்கும் போதுதான் வெற்றிபெற முடியும். அதற்கு தொழிற்சங்கங்கள் வேண்டும். மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டங்கள் மக்கள் மனதில்தான் முதலில் தீட்டப்பட வேண்டும் என்ற சமூக உண்மையை உழைக்கும் நெசவாளர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். தறிநாடா நாவல் முழுக்க நெசவாளர் குடியிருப்புகளைப் பற்றியதாக இருந்தாலும் அந்தச் சமூக மக்களின் வாழ்க்கையை மட்டும் தனித்துக் காட்டாமல், மற்ற சமூகப் பிரிவினருடன் அவர்கள் கொண்டிருக்கிற உறவுகளையும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுதான் திருப்பூர் நகரத்தின் உள்ளீடான மனிதர்களின் பண்பை புரிந்து கொள்ள உதவுகிறது.திருப்பூர் நகரத்து சமகால நெசவாளிகளின் வரலாறு மட்டுமில்லாமல் வெள்ளையர் காலத்து நெசவாளர் வரலாறையும் அப்போதிருந்த கூலிப் பிரச்சினையும் தெளிவாக விவரிக்கிறது நாவல். திருப்பூரின் இன்னொரு முகமான நெசவாளர்களின் போராட்டத்தை இலட்சியப்படுத்தி புனைவாக மட்டும் முன்னிருத்தாமல், தன்னெழுச்சியாக நிகழும் போராட்டத்தின் பலன்களையும், பலவீனங்களையும் யதார்த்தமாக வெளிப்படுத்தியிருப்பது நல்ல சமுக பிரதிபலிப்பாகவே இருக்கிறது. கைத்தறிகள் ஓடிய வீடுகள், விசைத்தறிகளின் கிடங்குகளாக, பனியன் கம்பெனிகளாக மாறிப்போவது, கைத்தறி தொழிலும், கைத்தறி நெசவாளர்களும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். வெளியிலிருந்து வந்து பனியன் கம்பெனிகளைத் தொடங்கும் புதிய மனிதர்கள் நகரத்தை ஆட்டிப்படைப்பவர்களாக, அதிகாரம் நிறைந்தவர்களாக மாறுகின்றனர். அனைவரையும் ஏற்றுக் கொள்கிறது நகரம். இயந்திரமயமும், முதலாளித்துவமும் இணைந்து இயற்கையின் மீதும், மனித உழைப்பின் மீதும், மனிதர்கள் கொண்டிருந்த அன்பை, மனித நேயப் பண்பாட்டை தொலைந்து போகச் செய்கின்றன. பனியன் தொழிற்சாலை இயந்திரங்களில் நெய்து, கசக்கி, பிழிந்து, சாயமேறிய எண்ணெய் மணத்துடன் வெளிவரும் பனியன்களைப் போல திருப்பூர் நகரத்து சமகாலத் தொழிலாளர்களும் சக்கையாய்ப்பிழிந்து வெளியே வந்து விழுகிறார்கள். தறிநாடா நாவல் தனிமனித சோகமாகக் கதையை நிறுத்தியபோதும், உலகம் அதன் போக்கில் சென்று கொண்டுதான் இருக்கிறது. கூடித்திரியும் பறவைகளின் சப்தங்களைப் போல் தறிநெசவில் விசையினின்றும் எழும் ஒலிகளால் நிரம்பி வழிந்த தறிநகரான திருப்பூர் நகரம், பேரிரைச்சல் கொண்ட மின் இயந்திரங்களால் இயங்கும் பனியன் தொழிற்சாலைகள் நிறைந்த பேட்டையாக கால மாற்றத்தில் உருமாறுவது தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கிறது. தறிக்குழிகள், தறிநாடா, பாவு இலைகள், பில்வார்கள், கஞ்சிப்பசை, பல எண்களைக் கொண்ட நூல்கள், துண்டுத் துணிகள், ஜரிகை நூல் ஆகியவற்றுடன் தறி இயங்கும் ஓசை நாவலின் வரிகளெங்கும் பின்னணி இசையாக கேட்டுக் கொண்டே இருக்கிறது. நாவல்களை வாசிப்பவர்கள் அவற்றை ஒரு போதும் வெறும் கதைகளாக மட்டும் வாசித்துக் கடந்து சென்று விடுவதில்லை. நாவலின் கதையை தங்கள் அனுபவத்துடன் பொருத்திப் பார்த்து, அதிலிருந்து நிறைவுகளையும், தெளிவுகளையும் சாத்தியங்களையும் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கதாபாத்திரங்களைத் தங்களுடன் ஒப்பிட்டு எடை போட்டுக் கொள்கிறார்கள், புரிந்து கொள்கிறார்கள். அந்த வகையில் மனிதர்களைப் புரிந்து கொள்ள சாத்தியமான, வாழ்க்கையின் நிறைவையும், தெளிவையும் தரிசிக்கத் தரும் நாவலைத் தந்திருக்கிறார் சுப்ரபாரதிமணியன். மனிதர்கள் வாழப்பிறந்தவர்கள். கால ஒட்டத்தில் மின்னல் கீற்றுகளாக வாழ்வு குறித்தான கேள்விகளை முன் வைத்து காணாமல் போகிறார்கள். அடக்கமும், ஆழமும், மெல்லிய பகடியும் ஒன்றிணைந்த கலை நேர்த்தியை தனக்கே உரித்தான மொழியில் வெளிப்படுத்தும் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் திருப்பூரின் மண்ணும் மனிதர்களும் தனித்தன்மை கொண்டவர்களாக காணக் கிடைக்கிறார்கள். சுப்ரபாரதிமணியனின் படைப்புக்கள் எப்போதும் புதுமையையும், மாற்றத்தையும் எதிர்நோக்கி இருப்பவை. வாழ்வின் பழைய மதிப்பீடுகளை உதறி புதிய மதிப்பீடுகளைப் புகுத்த முயன்று தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை புனைவுகளின் வழியெங்கும் விரித்துக் காட்டுகிறார். அது திருப்பூர் நகரின் தனித்த வாசனையாக நுகரக் கிடைக்கிறது. நாவலை முடிக்கும் போது திருப்பூர் நகரம் ஒரு சித்திரமாய் கண் முன் உருவெடுத்து நிற்கிறது. கூடவே காலங்களில் கரைந்த தறிநாடாவின் டக்… டடக்….டக்….டடக்… என்ற அதன் ஆதார இயக்க ஒலி ஒரு பறவையின் குரலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரூ 150 என் சிபி எச் , சென்னை வெளியீடு