தடை செய்யப்பட்ட பலூன்கள்
சுப்ரபாரதிமணியன் :
சிறுகதை
வானத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தன அந்த இரண்டு பலூன்கள்.
நீலநிற பலூன் வானத்தின் நீல நிறத்தோடு சேர்ந்து கொண்டிருந்தது. சிவப்பு பலூன் நான்
தனியாளாக்கும் என்று சொல்வது போல் ஆகாசத்தில் நின்றது. பப்லு வானம் பார்த்தபடி
இருந்தாள்.நடந்து கொண்டே வானம் பார்ப்பது ஒரு சாகசம் என்பது போல் அம்மா எப்போதும்
அவளைத் திட்டுவாள். சட்டெனக் காதுகளை அதிர வைத்த மோட்டார் பைக் சப்தம் அவள் உடம்பை
உலுக்கியது.
கிரிஜா அவளை இறுக அணைத்துக்
கொண்ட போது பப்லுவின் தலை அவளின் உடம்போடு சேர்ந்துகொண்டது. அவளின் கைகளிலிருந்த
பலூன்களின் இணைப்பு நூல்கள் கைகளிலிருந்து விடுபட்டு பலூன்கள் காற்றில் தவழ்ந்தன..
மோட்டர் பைக் சப்தம் கிரிஜாவின் உடம்பை ஊடுருவதாக இருந்தது. அது இரண்டு
பைக்குகளின் இயக்கச் சப்தமாக இருந்தது.புர்புர் என்ற சப்தம் ஓங்காரமிட்டு சேர்ந்து
அலைந்தது.
அந்தக்குறுக்குச்
சந்திலிருந்து அந்த பைக்குகள் வந்திருக்க வேண்டும். நஞ்சப்பா வீதி முக்கு அடைவதற்கு
அய்நூறு மீட்டர்களாவது இருக்கும். அதற்கப்புறம் கொஞ்சம் நடமாட்டம் இருக்கும்.
ஆளற்ற அந்த குறுக்குச் சந்து அவளை நுழைகையிலேயே பயமுறுத்திக் கொண்டிருந்தது.பயப்பட்டது
போலவே ஏதோ நிகழ்ப்போவது மாதிரி புர்புர்
சப்தம் வேறு வந்து விட்டது.பைக்குகள் அவர்களைச் சுற்றிக்கொண்டிருந்தன. கிண்டலா,
விளையாட்டா, ஏதாவது பறிக்கும் கும்பலா ..
அதிர்ச்சியாக இருந்த்து அவளுக்கு.
மாலை நேர
ஓய்வென்று வெளியே வந்திருந்தார்கள் அவர்கள்.டவுன் ஹால் பொருட்காட்சியில் மணல்
சிற்பங்கள் பப்லுவுக்கும் ரொம்பவும் பிடித்திருந்தது. பாட்டி கண்கொட்டாமல்
அதைப்பார்த்துக் கொண்டிருந்தாள். சுனாமியில் செத்துப்போனவர்கள், வெள்ளத்தில்
சிக்கியவர்களின் உருவங்கள் மணலின் சூடாய் அவர்களின் உடம்பில் இறங்கின. டவுன்ஹால்
எப்போதும் தனியிடமாக நின்று கொண்டிருக்கும். அங்கிருந்து பேருந்து பிடிக்க
நஞ்சப்பா சாலையை கடந்தாக வேண்டும்.
பைக்குகள் அவர்களைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருப்பது
தெரிந்தது.புர்புர் சப்தம் உச்சத்தில் இருந்தது. பப்லுவின் அலறலும் உச்சத்திலிருந்தது.” பாட்டி”
கிரிஜா அப்போதுதான் இடது புறம் பார்த்தாள். அவள் அம்மா
அழுகையான முகத்துடன் தாறுமாறாய் உடம்பை அசைத்தபடி ஓடி வந்து கொண்டிருந்தாள்.
மூன்று பேராய் சேர்ந்து ஒன்றாய் கட்டிக் கொண்ட மாதிரிதான்
இருந்தது. ஒன்றாய் இணைந்து கொண்டார்கள். காற்று புகாதபடி இறுக்கிக் கொணடார்கள்.புர்புர்
சப்தத்தைத் சகித்துக் கொள்ளாதவர்கள் போல் அவர்களின் முகங்கள் இறுகியிருந்தன.புர்புர்
என்று மோட்டர்பைக்குகள் அவர்களைச் சுற்றி சுற்றி வந்தன. அவற்றை அசுரவேகத்தில் ஏறத்தாழ
வட்டமாய் ஓட்டிய அவர்களின் தலை மாட்டப்பட்டிருந்த ஹெல்மெட்டால் குண்டுச் சட்டியாகியிருந்தது.
மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி உடம்புகளைக் குறுக்கிக்
கொண்டனர். பப்லுவின் வீறிடல் மட்டும்
உச்சத்தில் இருந்து கொண்டே இருந்தது. இரு பக்கமும் மனிதர்கள் அற்றதாக் கறுப்புத்
தார்ச் சாலை விரிந்து கிடந்தது. இந்த மாலை நேரத்தில்
மனிதர்கள் எங்கே போய் விட்டார்கள். ஏதோ துயர நிகழ்ச்சி நடக்க ஒத்திகையை வேடிக்கை பார்க்க ஒளிந்து கொண்டிருக்கிறார்களா. மூன்று
பைக்குகள், அவர்கள் மூன்று பேர். அவளுள் தவிப்பு உடம்பை தடுமாறச் செய்தது. இன்னும்
சீக்கிரம் உடம்பு நடுங்க ஆரம்பித்ஹ்டு விடும் போலிருந்தது.
பப்லுவின்
காதுகளில் இன்னொரு பைக் சப்தம் போல் ஏதோ விழ ஆரம்பித்தது. அதன் தனி உறுமல் சட்டென நின்றிருந்தபோது
கண்களைத் திறந்தாள்.
வந்தவனின் சட்டை நீலமும் சிவப்பும் கலந்த கோடுகள் நிரம்பியதாக
இருந்தது. அது பப்லுவின் கண்களில்
பளிச்சென்று பட்டது. அவன் விரைசலாய் வந்து பைக்கில் உட்கார்ந்தபடி அவர்களருகில்
நின்றான்.எதிரிலிருந்த அந்த மூன்று பைக்காரர்களைப் பார்த்தான்.ஏய்.. ஏய்ய் என்று
பரபரப்பாய் குரல் எழுப்பினான். அதில் எரிச்சல் மிகுந்திருந்தது. கைகளை பரபரப்பாய்
வீசிய போது பைக்குகள் சுற்றடிக்கும் வட்டம் நீண்டு சற்றே பெரிதானது. பைக்காரர்கள்
தங்கள் வட்டப்பாதையை விரிவாக்கிக் கொண்டது போல் சற்றே விலகியபடி வண்டிகளை
ஓட்டினர். ப்பலுவின் குரல் சற்றே ஓய்ந்து அவளின் பார்வை வந்தவனின் மேல் நிலைத்தது.
“ பயப்படாதீங்க “ சொல்லியபடி அவன் கைகளைத் தாறுமாறாய்
வீசினான். அவன் உடல் பரபரத்து எல்லா திசைகளிலும்
சுழன்றாடியது. அந்த மூன்று பைக்காரர்களின் வட்டம் சற்றே விரிவடைந்திருந்தாலும் பைக்குகளின்
ஓட்டம் இன்னும் இருந்து கொண்டே இருந்தது. வந்தவன் சட்டையை விறுவிறுவென்று
கழட்டினான்.கறுப்பு பேண்ட்டும், வெள்ளை பனியனுமாக அவன் உடல் மீண்டும் கழற்றிய
சட்டையுடன் சுழன்றாடியது. நீல சிவப்பு கலந்தசட்டையை அவன் அசைத்த்து கொடியை கைகளில் வைத்து சுழற்றுவது போலிருந்தது
பப்லுவுக்கு.
மூன்று பைக்காரர்களின்
வட்டம் மெல்ல விரிவடைந்தது. வட்டப்பாதையிலிருந்து அவர்களின் இயக்கம் சிதைந்து
பைக்களின் உறுமல் சப்தம் குறைய ஆரம்பித்தது. சட்டையை சுழற்றியவன் ஒரு பைக்காரனை
துரத்தியபடி ஓடினான். இன்னுமொரு பைக்காரன் விரைந்து ராயபுரம் பக்கம் அதிவிரைவாய் மறைந்து
போயிருந்தான்.
அவனின் சட்டை
சுழன்று மீதமிருந்த பைக்காரனின் தலை ஹெல்மெட்டினைத் தாக்கியது. அடுத்த சுழற்சி
அவனின் உடம்பின் மீது பட்டது. பைக்பின்னால் துரத்தி சென்றவனின் சட்டை வீச்சு
இன்னுமொருமுறை அவன் உடம்பைத் தாக்கியது.அவன்
நிலை தடுமாறுவது தெரிந்தது.ஒரு பைக்காரன் கீழே விழ ஆயத்தமானான்.
அவன் வசத்திலிருந்து பைக் நழுவி கிரிச்சிட்ட சப்தத்துடன்
நஞ்சப்பா பள்ளி சுவற்றில் மோதி உடம்பைப் பரத்திக் கொண்டு கிடக்க வைத்தது. பைக்கை
ஓட்டிக்கொண்டிருந்தவனின் உடம்பும் தாறுமாறாய் சுவற்றில் பட்டு அவனின் அலறல்
சப்தத்துடன் தூரப்போய் விழுந்தது. விழுந்தவனின் கழுத்தைச்சுற்றி நீலசிவப்பு கோடு
சட்டை பாம்பாய் சுற்றியிருந்தது.பப்லுவும்
அவள் அம்மாவும் பாட்டியும் அதைப் பார்த்தவாறே தங்களின் பிடியை மெல்ல நழுவ
விட்டனர். அவர்களின் கண்கள் பள்ளி சுவற்றோரம் கிடந்தவனின் உடம்பைக் கூர்ந்து
நோக்கின. அவனின் உடம்பிலிருந்து ரத்தம் வழிய ஆரம்பித்தது.
சட்டையில்லாமல்
மேல் பனியனோடு இருந்தவன் விழுந்து
கிடந்த பைக்காரனின் உடம்புப் பக்கம் போய்
நின்று உடம்பைக் குனிய வைத்து மூக்கருகில் வலது கையை வைத்தான்.அவனின் பைக்
தூரத்தில் அனாதையாக நின்றிருந்தது.
* அந்த சிறைச்சாலை முகப்பு ரொம்ப
நேரம் பப்லுவைப் பயமுறுத்திக் கொண்டே இருந்தது.உள்ளே வந்து உட்கார்ந்த பின்னும் எதிரில்
இருந்த கம்பி வேலியையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். பப்லு இன்றைக்கு பள்ளிக்கு
விடுமுறை போட்டிருந்தாள். அம்மா அவள் விடுமுறை போடுவதை அவ்வளவாய் விரும்பமாட்டாள்.
இன்றைக்கு கட்டாயப்படுத்தி விடுமுறை போடச்சொல்லியிருந்தாள். :
“ நாம அந்த அங்கிளைப்
பாக்கப் போறம்”
“ அந்த அங்கிள்தா”
“எந்த அங்கிள் “
“ அன்னிக்கு .. “
“ அன்னிக்கு பைக்காரனோட சண்டை போட்டாரே அவரா.”
“ அவர்தா..”
“ எதுக்கு ஜெயிலுக்கு அவர் வந்தார்”
இவர்கள் மூவரையும்
காப்பாற்ற, அல்லது பைக்க்காரர்களின் துன்பத்திலிருந்து காப்பாற்றச் சட்டையை கழற்றிச்
சுழற்றியபோது ஒரு பைக்காரன் நிலைகுலைந்து
விழுந்து இறந்து போனான். வழக்கு
நீதிமன்றத்துக்கும் சிறைச்சாலைக்குமாக
நீண்டு விட்டது.
“ நீலமும் சிவப்பும் கலந்த கட்டங்கள் போட்ட சர்ட்காரர்’ “
“ ஆமாம் “
“ எங்க போறம்”
“ஜெயிலுக்கு..”
கம்பித்தடுப்பிற்கு அந்தப்புறம் வந்து நின்றவனை உடனே அடையாளம் கண்டு கொண்டாள்.
“ அய்.. நீல சிவப்பு சட்டைக்காரர்”
“ அங்கிள் “
“ ஆமா. நீல சிவப்பு சட்டைக்கார அங்கிள் “
பப்லு அவர்
முகத்தைக் கூர்ந்து பார்த்தாள் . முகத்தில் கறுப்பு தாடி அப்பியிருந்தது.
கன்னங்கள் ஒடுங்கியிருந்தன. அம்மாவும் பாட்டியும்
எதுவும் பேச இல்லாதவர்கள் போல நின்றிருந்தார்கள். அவனையேப்
பார்த்துக்கொண்டிருந்தனர். இளைத்துப் போயிருந்தான்.
” ஞாபகம்
வந்திருச்சு அங்கிள் உங்களை. அன்னிக்கு நீலமும். சிவப்பும்ன்னு ரெண்டு பலூன்
வாங்கியிருந்தேன். ரொம்ப நேரம் ஒண்ணும் அதுகள வெச்சுட்டு வெளையாட முடியலே.
ரெண்டும் பைக்காரங்க பண்ணுன சண்டையிலே
கையிலிருந்து நழுவிருச்சு.. இன்னிக்கும் அதே மாதிரி நீலமும் சிவப்பும் ரெண்டு
பலூன் வாங்கிட்டுதா வந்தேன். ஜெயில் வாசல்லியே புடுங்கிட்டாங்க “
அம்மாவும் பாட்டியும் பப்லுவின் முகத்தைக் கூர்ந்து
பார்த்தனர்.
“ ஜெயில்லெ பலூன் வெச்சுக்கக் கூடாதா’ அங்கிள் “
அவர்கள் எதுவும் பேச முடியாதவர்கள் போல் மீண்டும் பப்லுவைப்
பார்த்தார்கள்.
“ நீலத்துக்கும், சிவப்புக்கும் ஆகாதுன்னு ஏதாச்சிம்
இருக்கா அங்கிள் “
( சுப்ரபாரதிமணியன்., 8/2635 பாண்டியன் நகர்., திருப்பூர் 641 602. 9486101003 ) www.rpsubrabharathimanian.blogspot.com
Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602