Kasu
velayutham From Facebook
ஆளுமை 22: சுப்ரபாரதிமணியன்
(1)
‘‘என்
தாய்மண்ணின் ரீங்கார ராகம்’’
-----------------------------------------------------------------
எண்பதுகளின்
தொடக்கம். கல்கியில் வெளியான தன் முதல் சிறுகதை ‘சார் ரேசன் கார்டு!’க்கு அந்த
மாதத்திற்கான இலக்கிய சிந்தனை பரிசு கிடைத்திருப்பதாக, அப்போது
அறிமுகமான எழுத்தாள நண்பர் பாரிஜாதன் தெரிவித்தார்.
அப்போது
வரை எனக்கு இலக்கிய சிந்தனை என்ற ஒரு அமைப்பு இருக்கிறது; அது
மாதந்தோறும் தமிழ் இதழ்களில் வெளியாகும் சிறுகதைகளை படித்து சிறந்த ஒன்றை
தேர்ந்தெடுத்து ரூ. 50 பரிசு தருகிறது. வருட முடிவில்
தேர்வாகியுள்ள 12 சிறுகதைகளில் ஒன்றிற்கு அந்த வருடத்தில் சிறந்த கதை என
அறிவித்து ரூ. 500 பரிசு அளிக்கிறது. அதற்கு விழா நடத்தி வருடந்தோறும்
நூலாகவும் வெளியிடுகிறார்கள். அது தவிர அந்த ஆண்டின் சிறந்த நாவலுக்கும் விருது
அறிவித்து பரிசு தருகிறது என்பதெல்லாம் சுத்தமாக தெரியாது.
இப்போது
போல் தடுக்கி விழுந்தால் விருது தரும் அமைப்புகள் எல்லாம் அப்போது இல்லை.
அதேபோல் இதற்கு மாதந்திரம், வருடாந்திர நடுவர்கள் கூடுவதெல்லாம்
வெளிப்படை நிகழ்வு. ஒருவர் மற்றவரை செறிவாக சொறிந்தாலன்றி விருது இல்லை என்ற
நிலையும் அன்று இல்லை. அப்படி இலக்கிய சிந்தனையை பற்றி நான் அறிந்த வருடத்தில்
அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இன்னமும் மீதமிருக்கிற பொழுதுகளில்’ சிறுகதை
பரிசு பெற்றிருந்தது.
அந்த
சிறுகதை ‘இனி’ என்ற சிற்றிதழில் பரிசு பெற்றதாக நினைவு.
அந்த கதையின் சாரமும், ஆழமும் இன்னமும் என் நினைவு அடுக்கில்
இருக்கவே செய்கிறது. முதுமை தள்ளாட்டத்துடன் ஒரு முதியவர் கிராமத்து வீட்டுத்
திண்ணையில் சுவர் தேய அமர்ந்து, அது மொழு,மொழுப்பாக மாறி
அவர் வாழ்ந்ததன் அடையாளத்தை அற்புதமாக சொல்லும் கதை. ஒற்றை சருகை எடுத்து
வைத்துக் கொண்டு அப்படியொரு யதார்த்தவாத, உணர்வுகளை மீட்டிய
கதையை நான் படித்ததில்லை என்றே சொல்லுவேன்.
அதே
காலகட்டத்தில்தான் கல்கி சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசோ, மூன்றாவது
பரிசோ பெற்றிருந்தார் சுப்ரபாரதி மணியன். அதே வேகத்தில் லில்லி தேவிசிகாமணி
பரிசுத் திட்டத்தில் அவர் சிறுகதைத் தொகுப்பு தேர்வு பெற்றதும் நினைவு அடுக்கில்.
அவர் விவரணைகளை
தேடியதில் கிடைத்த அபூர்வ விஷயம். அவர் கோவையை சேர்ந்தவர்; அதிலும்
சோமனூர் செகுடந்தாளி எனும் குக்கிராமத்தை சேர்ந்தவர் என்பதுதான். அதற்கு ஒட்டியே
இருக்கும் சேடபாளையம் கிராமம்தான் என் அப்பா, தாத்தாவின் சொந்த
ஊர்.
என்
அப்பத்தா, அத்தை எல்லாம் சேடபாளையத்தில் வசித்து வர, என்
பெரியப்பத்தா செகுடந்தாழியில்தான் இருந்தார். சின்ன வயசில் முழுப்பரிட்சை லீவில்
சின்னப்பத்தா, பெரியப்பத்தா வீட்டிற்கு போவதும், அங்கே
எல்லாம் ஓயாமல் நெசவு நெய்யும் சத்தம் கேட்பதும், எந்நேரமும்
பெரியப்பத்தா வீட்டு மண்ணு மொடாவில் முருக்கு, அதிரசம், சீடை போன்ற
திண்பண்டங்கள் இருப்பதும், அதை அள்ளி, அள்ளி சட்டைப்
பாக்கெட், டிரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வாயிலும் அதக்கிக்
கொண்டு திரிந்ததும் மறக்க முடியாத நினைவுகள்.
அப்படியான
நினைவுகளாலும், மீட்டப்பட்ட உணர்வுகளாலும், தாய் மண்ணை கண்டது
போல் அதையொட்டிய வாஞ்சையும், பாசமும் சக எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனை
பார்க்காமலே எனக்கு ஏற்பட்டதில் வியப்பொன்றுமில்லைதான். அவர் எழுத்துக்களை
படிக்கும்போது என் மண்ணுக்கான ஏதாவது ஒரு ரீங்காரம் எழாமல் போனதில்லை.
அந்த
ரீங்கார ராகத்துடன்தான் கோவை அன்னபூர்னா ஓட்டல் அரங்கில் அப்போது வெகுதடபுடலாக
நடந்த லில்லி தேவசிகாமணி பரிசளிப்பு விழாவிற்கு சென்றேன். சுப்ரபாரதி மணியன்
மட்டுமல்ல,. மேலாண்மை பொன்னுசாமி, தனுஷ்கோடி ராமசாமி, கந்தர்வன், சூர்யகாந்தன், சி.ஆர்.ரவீந்திரன், சிற்பி என
ஒரு பெரிய எழுத்தாளர் படையே அங்கே முகாமிட்டிருந்தது.
என்னை
மேலாண்மை பொன்னுசாமி சுப்ரபாரதி மணியனிடம் அறிமுகப்படுத்தியதும், நீண்ட காலம்
பழகியது (அக்காலகட்டத்தில் எனது கதைகள், சுப்ரபாரதிமணியன்
கதைகள் கல்கியில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வந்தது) போல் அவர் தனக்கே உரிய
பண்போடு அரவணைத்துக் கொண்டு, தன்னுடன் இருந்த தனுஷ்கோடி ராமசாமியை
அறிமுகம் செய்ததும், அத்தனை எழுத்தாளர்களும் ஒரு சேர அளவளாவி
விருந்துண்டதும் எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள்.
அன்றிலிருந்து
இன்று வரை அவருக்கும் எனக்குமான நேசம் நெருக்கமாகியிருக்கிறதே ஒழிய குறைந்ததில்லை.
அந்தக் காலத்தில் எல்லாம் ஒரு சிறுகதை நூல் கொண்டு வருவதே பெரும் சிரமம். 1300 பிரதிகள்
அச்சடித்தே ஆக வேண்டும். அதில் 500 பிரதிகள் நூலகப்பிரதி எடுத்தால்தான் ஆச்சு.
இல்லாவிட்டால் பதிப்பகத்தார் தலையில் துண்டை போட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
அதனால்
பெரும்பான்மை எழுத்தாளர்கள் கதைகள் வெகுஜன இதழ்களில் வெளியாகி இருந்தாலும்
தொகுப்புகள் போட முடியாது தவிப்பார்கள். அப்படி தொகுப்பு என்று ஒன்று போடாத
ஒரு எழுத்தாளரை எழுத்தாள மேடைகள் அங்கீகரிக்கவும் செய்யாது. அப்படி ஒரு தொகுப்பு
கூட போடாத நிலையில் கூட என்னை எழுத்தாளன் என்று அந்தக் காலத்தில் அங்கீகரித்து
திருப்பூர் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு அழைத்து உரிய கெளரவம் கொடுத்து அனுப்பியவர்
சுப்ரபாரதிமணியன்.
அப்போது
இருந்து இப்போது வரை அவர் தோளில் ஜோல்னா பை இல்லாதிருந்ததில்லை. அப்படியே பை
மாறியிருந்தாலும் கனவு இலக்கிய இதழ் இல்லாமல் அவர் வந்ததில்லை. யாரைப்
பார்த்தாலும் தான் அச்சடித்து வெளியிடும் அந்த மாத கனவு இதழை கொடுத்து ‘பார்த்தீங்களா? படிச்சீங்களா?’ என்று
கேட்டு விடுவார்.
தொலைபேசித்துறையில்
அதிகாரி. எஞ்சினியர். மனைவியும் கவிஞர். எழுத்துலகப் பிதாமகர் சுந்தரராமசாமியின்
செல்லப் பிள்ளை. அவர் பரிந்துரைத்ததன் பேரில் அந்தக் காலத்திலேயே ஜெயமோகனுடன்
சென்று கதா விருது பெற்றவர். ஓயாமல் எழுதிக் கொண்டே இருப்பவர். துளி பந்தா இல்லை.
என் சிறுகதைத் தொகுப்புகள் பொய்த்திரை, தணிவது வந்தபிறகு, அதை தன்
தொகுப்புகளாகவே கொண்டாடினார். போகிற மேடையில் எல்லாம் அதைப் பற்றி பேசினார்.
அதை கேட்கும்போது எனக்கு கூச்சமாகவே இருக்கும்.
மேடையில்
பேசக் கூப்பிட்டால் நான் நடு, நடுங்கி விழும் காலம் அது. திருப்பூரில்
மூன்று நாட்கள் குழந்தைத் தொழிலாளர் எழுத்தாளர் முகாம். தோப்பில் முகம்மது
மீரான், மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன், என 30க்கும்
மேற்பட்ட தமிழகத்து முன்னணி எழுத்தாளர்கள் பிரதிநிதிகளாக கலந்து கொண்ட அந்த
நிகழ்வில் நானும் ஒருவன். அதில் என் கன்னிப் பேச்சு உருண்டது இன்னமும் மறக்க
முடியாது.
கல்கியில்
பணியில் சேரும் முன்பு கல்கி திருப்பூர் சிறப்பிதழ் வெளியிட்டு, அதற்கான
வாசகர் வட்டத்தை நடத்தியபோதும் முன்னிலை வகித்தவர் சுப்ரபாரதி மணியன். அதில் என்
பங்களிப்புக்கும் அவரே காரணியாக நின்றார். கல்கியில் பணியில் சேர்ந்த பின்போ அந்த
நெருக்கம், இன்னமும் கூடுதல் ஆனது.
திருப்பூர்
செய்தி ஏதும் என்றால் உடனே போன் செய்து விடுவார். யோசனைகள் சொல்லுவார்.
அப்போது திருப்பூரின் சாயக்கழிவு, சாக்கடைக் கழிவு
இந்த அளவு விஸ்வரூபம் எடுக்கவில்லை. ஆனால் பனியன் கம்பெனிகளில் குழந்தைத்
தொழிலாளர் என்பது நீக்கமற நிறைந்திருந்தது. அதை அகற்ற பெரும் இயக்கத்தையே
எடுத்தது சேவ் அமைப்பு. இப்போது மாதிரி அப்போது அந்த அமைப்பு பெரிய கட்டிடத்தில்
இல்லை.
அவிநாசியில்
சேவூரில், திருப்பூரில் என சிறு, சிறு தென்னங்கீற்று
ஓலைக்குடிகள்தான். அவர்கள் அறிமுகப்பட்டதும், அந்த அமைப்பின்
தன்னார்வலர்களை அழைத்துக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு சுற்றி செய்தி
எடுத்ததும் இப்போதும் இனிக்கும் நினைவுகள். அதில் எனக்கு அப்போதே படு நெருக்கம்
ஆனவர் அலோசியஸ்.
அமரர் கல்கி
நூற்றாண்டு விழா. அதற்காக நாவல், சிறுகதை, குறுநாவல், கவிதை என
இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் நாவல் போட்டிக்கான காலக் கெடு
முடியும் நேரத்தில் நான் திருப்பூரில் இருந்தேன். ஒரு ஸ்டோரிக்கு சென்றவன்
வழக்கம் போல் சுப்ரபாரதி மணியன் வீட்டிற்கும் சென்றேன்.
‘என்
வேலாயுதம். கல்கியில் நாவல் போட்டிக்கு டைம் முடிஞ்சுடுச்சா?’ பேச்சு
வாக்கில் கேட்கிறார் அவர்.
‘ஒரு நாளோ, ரெண்டு
நாளோதான் இருக்குன்னு நினைக்கிறேன். ஏன் கேட்கிறீங்க?’
‘இல்லே, டைம் தள்ளி
வைப்பாங்கன்னு கேள்விப்பட்டேன். எத்தனை நாளோ, மாசமோ தெரியலை. அதை
உங்க ஆபீஸ்ல கேட்டு சொல்ல முடியுமா?’
‘அதற்கென்ன
கேட்டுட்டா போச்சு!’
அப்போது
கல்கி துணையாசிரியர் பா.ராகவனுடன்தான் இயல்பாக பேசுவேன்.
அவருக்கே
போன் செய்தேன்.
அவருடன்
பேசும் முன்னே ரிசீவரை பொத்தினார் சுப்ரபாரதி. என்ன காரணமோ,‘வேலாயுதம்
நான் கேட்டேன்னு சொல்லாதீங்க. யாருக்கோ கேட்கிற மாதிரி கேளுங்க!’ என்றார்
தாழ்ந்த குரலில். ராகவன் போனை எடுத்தார். கேட்டேன்.
‘ஏன் கேட்கறே
வேலாயுதம்? நீ நாவல் எழுதப்போறியா?’
‘இல்லை. ஒரு
நண்பர் கேட்டார். அதுதான்!’
‘அது
யாருன்னு சொல்லு!’ ‘அது உங்களுக்கு சொன்னா தெரியாது. என்ன நாவல்
போட்டிக்கு கால நீட்டிப்பு செய்யப்போறாங்களா?’ ‘யோவ் சும்மா
சொல்லுய்யா. நீதானே எழுதப்போறே!’
‘சரி, உங்க வாய்
முகூர்த்தம். அப்படியே ஆகட்டும். சொல்லுங்க!’
‘எழுதுய்யா.
நல்லா வரும். எத்தனை நாளைக்குத்தான் சிறுகதையே எழுதீட்டிருப்ப? நாவல்
போட்டிக்கு டைம் நல்லாவே கொடுக்கப் போறாங்க. எப்படியும் ஒன்றரை மாசமாவது
கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன். இந்த வார கல்கி இதழ்ல அறிவிப்பு வந்துடும் பாரு!’
பட, படவென்று
இன்னும் நிறைய பேசினார். ரிசீவரை வைத்து விட்டு சுப்ரபாரதிமணியனிடம் விஷயத்தை
சொன்னேன்.
‘ஏன் உங்க
பேரை சொல்ல வேண்டான்னீங்க?’
‘காரணமாத்தான்!’ என்றவர்,
‘ஏன்
வேலாயுதம். ராகவன் சொன்ன மாதிரி நீங்களே ஒரு நாவல் எழுதுங்களேன்!’
யோசித்தேன்.
‘என் மனசுல
ஒரு நாவலுக்கான கரு பத்து வருஷமா ஓடிட்டுத்தான் இருக்கு. இருந்தாலும் எழுத
முடியுமான்னு தெரியலை. பார்ப்போம்!’ அப்போதுதான்
அதற்கான யோசனை முளை விட்டது.
‘நிச்சயம்
முடியும். செய்யுங்க!’
அவர்
சொன்னதன் எதிரொலியில் அப்போது உருவானதுதான் ‘பொழுதுக்கால் மின்னல்!’ என்ற நாவல்.
(தொடரும்)