சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 1 ஜூன், 2017

shortstory



பாறைகள் : சுப்ரபாரதிமணியன் 

         முருக நதியின் மேற்கு பக்க வளைவு பாறைகளால் நிரம்பி இருக்கும். ஆளுயரத்திற்கு பாறைகள் எழுந்து நின்று பயமுறுத்தும். பல சமயங்களில் பாறைக்கு அந்தப் புறம் போய் நின்று கொண்டால் ஆள் அடையாளம் அற்றுப் போய் விடுவது போலாகிவிடும். அந்தப் பாறைகளைச் சுற்றி நாலைந்து குடிசைகள் இருந்தன. தாழ்வான பாறைப்பகுதி இன்னும் கொஞ்ச தூரம் வடக்கில் இருந்தது. அதன் ஓரத்திலும் பத்து குடிசைகள் இருந்தன. பத்து நாட்களுக்கு முன் ஜீப்பில் வந்த நாலைந்து பேர் குடிசைகளை எடுத்து விடும்படி சொல்லிவிட்டு போனார்கள். மிரட்டலாகச் சொன்னார்கள். புல்  பூண்டு  கூட இல்லாத பாறைப் பகுதிகள் நீர் சுனை என்பதுபோல் மேற்குப் பகுதியில் கொஞ்சம் நீர் கசியும். கெடா வெட்டிற்குப் பின்னால் ஆடுகளை அறுக்க, சுத்தம் செய்ய பல சமயம் பலர் அங்கு வந்து போவார்கள்

" எதுக்கு காலி பண்ணனும்"

" பாறைகளை எடுத்து உடைக்கப் போறம் "

" வேற இடம் இல்லியா
" எங்களுக்கு தேவையான எடத்திலதான் நாங்க எடுப்பம் "

       வீரபத்திரசாமி பூசாரி மகனிடம் விரோதித்துக் கொண்டு ஊருக்கு வெளியில் வந்து அங்குதான் ஒரு குடிசை போட்டிருந்தார். வீரபத்திரன்சாமி சிலையைக் கொண்டு வந்து இங்கு போட்டு வைத்து மாலை சாற்றி வைத்திருந்தால் அதைக் காட்டி வீரபத்திரன் இந்த இடத்தை விட்டு விலக மாட்டான் என்று காலி செய்வதை மறுத்துப் பார்க்கலாம் என்ற நினைப்பு பூசாரிக்கு வந்தது. ஆனால் காலம் கடந்து விட்டது போலத்தான் இருந்தது
 குவாரிக்காரர்களாக இருக்குமோ என்ற சந்தேகத்தை அந்த குடிசை வாசிகள் கிளப்பினர் மண் சாலை போட்டு வாகனம் வர ஏற்பாடுகள் செய்து கொண்டிருப்பதாக ஒருவர் சொல்லிவிட்டுப் போனார். பாறைகளை உடைக்க பெரும் இயந்திரங்கள் வரும் என்றார்கள்

        பத்து ஆண்டுகளுக்கு முன்பு பழையனூர் முக்கிய வீதி சென்று முருக நதி ரத்துப் பாறைகளை உடைத்து நதியின் பிரவாகத்தைச் சரி செய்தார்கள். அதிக வெள்ளம், மழை என்று வரும்போது பெரிய பாறைகள் இருப்பதால் வெள்ளம் பாறை மீதேறி ஊருக்குள் புகுந்து விடுவதால் பெரும் பாறைகளை உடைக்கும் திட்டம் பாஞ்சாயத்திடம் இருந்தது. அதன்படி உடைத்தார்கள். பாறைகளின் எல்லைகளில் மின் வயர்களால் இணைத்து வெடிமருந்துகள் வைத்து வெடிக்க வைத்தனர். அதில் வேடிக்கை பார்க்க நின்றிருந்த கிறிஸ்டோபரின் அப்பாவின் தலையில் ஒரு கல் பட்டு ரத்தம் வழிந்து செத்துப் போனார். கிறிஸ்டோபர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அப்பாவின் நினைவாக அங்கு திரிந்துக் கொண்டிருப்பான். பாதி ஆள் உயரப் பாறைகளை உடைத்த நீரின் ஓட்டத்திற்குத் தகுந்தபடி பாறைகளை சமன் செய்து கொண்டதால் நீர் பாறை மீதும் ஓடியது. பெரிய மலையில் வெள்ளம் பாறையைத் தொட்டும் தண்ணீர் நிரம்பி வழிந்து நதிக்குள்ளேயே சல சலத்து செல்லும். ஊருக்குள் வெள்ளம் புகுந்ததென்று பேச்சு பத்து வருடத்தில் வரவில்லை. வெள்ளம் வரும்போது தூரமிருந்து நதி பொங்குவதைப் பார்த்தார்கள். இப்போது அப்படியெல்லாம் இல்லை என்றானது.
           பூசாரி " கெடா வெட்டு ஒன்னு பண்ணிட்டு வேண்ணா எடுத்தர்ரங்க " என்று அவர்களை காலி செய்யச் சொல்லி வந்து போகும் ரகுமானிடம் சொல்லிவைத்தார். அப்படியாவது இடத்தை காலி பண்ணுவது தாமதமாகட்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். ஆனால் " அதுக்கென்ன ஒரு கெடா குடுத்தர்ரம் . சீக்கிரம் பாருங்க " என்று சொன்னதைக் கேட்ட போது பூசாரிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இவ்வளவு விரைவு என்று அவசரப்படுத்துகிறார்களே என்றிருந்தது..

 ஊரில் பல நாள் பேச்சாய் இது பரவிக் கொண்டே இருந்தது. கிறிஸ்டோபரும் அந்த பக்கம் பல நாட்கள் வந்து போனான். பூசாரி பஞ்சாயத்து தலைவரை போய் சிக்கண்ணம்பாளையத்தில் பார்த்தார்.
 " காண்ட்ராக்ட் வுட்டிருப்பாங்க போல. சம்பந்தப்பட்டவங்க காலி பண்ணச் சொன்னா காலி பண்ணிர்ரது நல்லது "

" சம்பந்தப்பட்டவங்களான்னா பஞ்சாயத்துதாங்க "

" ஆமாமா ... அதுவும் இருக்குது . செரிதா ...."

அவர் ஏதோ மறைக்கிறார் என்று தோன்றியது பூசாரிக்கு,                  " எங்கைங்க போறது  இத்தனெ வருசமா இருந்துட்டம்"

" ஊருக்கு வெளியே எடமா இல்லே...எங்காச்சும் குடிசை போட்டுக்குங்க "

" எங்கைன்னு "  

ரோட்ல நடந்து போனா பொறம்போக்கு இடம் இருக்கறது கண்லே தட்டுப்பட்டிருக்கும். அங்கங்க நாலஞ்சு பேரு போட்டுக்குங்க . ஒரே எடத்தில போட்டா சிரமம்.. கண்ணே உறுத்தும்  
கெடா வெட்டுக்கு முன்பே வேறு இடத்திற்குப் போய் விடவேண்டும் என்பதில் பூசாரி உறுதியாக இருந்தார். கெடா வெட்டு அன்றைக்கு வரும் புதியவர்களால் " இதெ எதுக்கு காலி பண்ணனும் " என்று புதுக் கேள்வி ரத்தக் காவுக்கு பிரச்னை வந்து விடக் கூடாது என்று உறுதியாக இருந்தார். சுலபமாகக் கிளப்பி ரத்தக் கரையைக் கொண்டு வந்துவிடும்

" கெடா விருந்து கெடைக்குதில்லையா. மத்தது அப்புறம் பாத்துக்கலாம். " என்ற மனோபாவத்தில் பலர் இருந்தனர்.           " செலவு பண்ணி ஒரு ஆளு இதையெல்லா பன்றாரு இல்லையா... அதுவே பெரிசு. பெரிய காரியம்

கிறிஸ்டோபர்  நாலைந்து தினங்கள் தொடர்ந்து பாறைப்பகுதிக்கு வந்து சென்றான். ஒரு நாள் பூசாரியை நெருங்கினான்.
" கெடா வெட்டுக்குத்துத்  தயாராயிட்டீங்க போல "
" ஆமா "

" காலி பண்ணிட்டு எங்க போவீங்க . தேவாலயத்துக்கு வந்துருங்க "
" எங்க "

" சர்ச்சுக்கு எல்லாரும் வந்திருங்கன்னு சொல்றன்"

பூசாரி மெல்ல வானம் பார்த்தபடி யோசிக்க ஆரம்பித்தார்.                " சர்ச்சுக்கு எதுக்குக் கூப்பிடறான். இவன் அந்த மாதிரி ஆளா"
வானம் குழப்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டது போல் தெளிவற்று இருந்தது.அதன் அடர்த்தியான கறுப்பு புதிதாய்பட்டது.மழை வந்து ரொம்ப நாளாகியிருந்தது.

 ****

            தண்ணீர் சொட்ட சொட்ட ஒரு மணல் லாரியொன்று கீழனூர் தெற்குத் தெருவைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்ததை ரத்னவேல் பார்த்தான். சொட்டு சொட்டாய் தண்ணீர் கொட்டி ஒரு வித கோலத்தை ஏற்படுத்தியிருந்தது. அதை பின்பற்றி சென்றால் எங்கு செல்லலாம் என்பதை யோசித்துப் பார்த்தான் ரத்னவேல். எந்த இடத்திலிருந்து ஆற்று மணலை எடுத்து வந்திருப்பார்கள் என்று தெரியவில்லை. பழையனூரில் முருக நதியில் இருந்து எடுக்க வாய்ப்பில்லை. நிறைய இடங்களில் ஆற்றை யொட்டிப் பாறைகள். பெரிய பெரிய பாறைகள்.சரியாகத் தடம் இல்லை. பெரிதாய் மணலை  அள்ளிக் கொண்டு வந்து வெளியேறும் அளவு தடம் இல்லை. யார் தோட்டத்துக்குள்ளாவது புகுந்து வாகனம் வெளிவர யாரும் புதுத்தடம் காட்டவில்லை. இது வேறு பக்கமிருந்து வந்திருக்க வேண்டும் என்ற யோசனை வந்தது. ஆற்றையொட்டி ரொம்ப  தூரம் நடந்து போனதில்லை அவன்

ஆற்றில் தண்ணீர் வருகிறது என்று தண்டோரா போட்டுச் சொன்ன நாட்களைப் பற்றி அவன் அம்மா சொல்லியிருக்கிறாள். அவன் ஞாபகத்தில் ஒரு தரம் வெள்ளம் கரைமீறிப் போன போது வேடிக்கை பார்த்தது ஞாபகம் வந்தது. மீன்பிடிக்க மண்புழுவை தூண்டிலில் போட்டிருந்த நாலைந்து பேர் தண்ணி வருது என்றபடி அலறி அடித்துக்கொண்டு கரைக்கு ஓடி வந்தனர். அவசர அவசரமாய் தூண்டிலை சுருட்டிக் கொண்டிருந்தனர். எறங்காட்டு அம்மன் கோவிலின் முன் ரத்னவேல் நின்றிருந்தான்.
    உர்ரெ ... உர்ரெ ... என்றபடி எருமைகளை பலர் மேட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். சட்டென கிளம்பிய இரைச்சல் கூட அந்த எருமைகளை மேட்டிற்கு கிளப்பி இருக்க வேண்டும்

எங்கிருந்து வந்ததென்று தெரியாது போல் நாலைந்து வெள்ளெலிகள் அவன் காலுக்குப் பக்கம் ஓடின. " அடடா... நாம புகை போட்டு ஊதுனாலும் இங்க எலிக வங்கில இருந்து வெளிய வந்து நம்மகிட்ட அகப்படாது. இன்னைக்கிப் பாரேன் " தூண்டிலைச் சுருட்டிக்கொண்டிருந்தவன் சொன்னான். கருவேல மரங்கள் தண்ணீர் மட்டம் உயர உயர மூழ்கின. காற்றில் தத்தளிப்பது போல் சிரமப்பட்டன.

" மேத்தண்ணி வருது. ஒடுங்கடா..." அந்தக் கிழவருக்கு அப்படியொரு வேகம் வந்தது போல் ஓடினார். தாடியெல்லாம் வளர்ந்து கச முசா என்றிருந்தது அவருக்கு. அவரின் முகம் அவரை வயதானவராகவே காட்டியது. ஆனால் கூச்சலிட்டபடி அவர் வேகமாய் சிறுவன் போல்பள்ளிக்கூட சாலைக்கு  ஓடினார்.

" ஆத்தோரம் மேயற எருமை மாடுகள மேக்காட்டுக்கு இழுத்துட்டு வாங்கடா. " என்று யாரோ சப்தமிட்டார்கள்

        கரை ததும்பி  நீர் ஓடிக்கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச தூரம் கீழிறங்கிப் போனால் கால்கள் நனையும். ஈரம் உடம்பில் படும். ஆனால் வேகமாய் கிளம்பிப் போன வயதானவர் போல் தானும் ஓட வேண்டியிருக்கும் என்ற நினைப்பாலேயே நின்று கொண்டிருந்தான் ரத்னவேல்

மேத்தண்ணி பார்த்திருக்கிறேன். ஆனா தெம்பக்க கோயில் மூழ்கி பாத்து ரொம்ப வருஷமிருக்கும்."

" அவனுக்கு கோயில் கட்டறதுக்கு வேற எடம் கெடைக்கலே பாரேன்."

" ஊருக்கு வெளியதா அவங்க இருக்காங்க. கோயில் அப்புறம் அதுக்கும் வெளியிலதா இருக்கும். வேற எங்க போவாங்க. "

" மேத்தண்ணிக்குப் பயப்படாதவன் வேற எவனாச்சும் இருப்பானா..."

     மழை நின்று அரை நாளாகிவிட்டது . வெள்ளம் இபோதுதான் சாவகாசமாய் வருவது போலிருந்தது." மேக்கே நல்ல மலை பேஞ்சிருக்கு. அதுதா நிதானமா இப்பிடி வருது மேத்தண்ணி " என்றார் நின்றிருந்த சேமலை.
 சேமலையின் தோட்டத்தில் கனகாம்பரம், மல்லிகை என்று பூத்து கிடைக்கும். அமலம்  கூட அங்கிருந்து பூக்களை வாங்கிக்  கொண்டு  போவாள் . " தெனசரி  வருமானத்துக்கு இந்தப் பூவெல்லாம்  "  என்பார். அவர். வாரம் ஒரு ஒரு முறை பழனிக்கு முருங்கைக் காய்பறித்து தேங்காயுடன் கொண்டு செல்வார்.  அவர் தோட்டத்தில் வடக்கு மூலை எப்போதும் வாழை மரங்களால் நிறைந்திருக்கும். வாழை நின்று நிதானமாய் பூத்து அவருக்கு வருமானம் தரும்.                                    

" மேத்தண்ணி வர்றது நல்லதுதா... ஆனா கொஞ்சம் நாசமும் இருக்கும்."

" அதில்லாம இருக்குமா என்ன ... இருக்கத்தா செய்யும். யானைக பண்ற நாசத்தை விடவா"

" இங்கெங்க யானைக வருது"

" கல்லாருக்கு  கீழற என் சகலையோட நெலம் இருக்குது. அங்க வந்திருதுக. வாழைத் தோட்டத்தே நாசம் பண்ணிருதுக. .."

" ஆமா அதுக போற தடத்துல வூடு கட்டி கஷ்ட்டப்படுத்துனா வூட்டுக்குள்ளே வந்து ரேஷன் அரிசிதா கேட்கும். "

" நம்ம ஊர்லெல்லா வராது. மலங்காடு ரொம்ப தூரமாச்சே... வழி தப்பி வேற ஏதாச்சும் வந்தாதா உண்டு. "

ஒற்றையாய் நின்று கொண்டிருந்த தென்னை மரத்திலிருந்து மட்டையொன்று பிய்ந்து கீழிறங்கியது. அடித்த காற்றின் சுழற்சிக்கேற்ப விரைசலாய் வந்து கொண்டிருந்த ஆற்று நீரில் போய் விழுந்தது. குளிரடிக்கும்போது நாலைந்து பேர் சேர்ந்து வந்து சுடுமணலில் நாலு தரம் புரண்டு விட்டு ஆற்றில் குளித்ததை ஞாபகப்படுத்திக் கொண்டான் ரத்னவேல்அதுவொருவகை சுகமாக இருந்தது.

" பௌர்ணமி, பாட்டிமெமின்னு  கடல் பொங்கற மாதிரி ஆறு பொங்கிட்டு வருதே. சாக்கிரதையாத்தா இருக்கோணும் "

பாறைகளைத் தழுவி ஓடும் ஆற்று வெள்ளம் பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தான். பல ஆண்டுகளுக்கும் சொல்லிக் கொள்ள இன்னும் விசயங்கள் இருப்பது போல் பாறைகளில் விஸ்தாரத்தைப் பார்த்தான்.

subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003