சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 19 ஜூன், 2017

சுப்ரபாரதிமணியனின் ஓ.. செகந்திராபாத்..
செகந்திராபாத் நினைவுக்குறிப்புகள் : தாண்டவக்கோன்

ஓ.. செகந்திராபாத்.. மொத்தம் 114 பக்கங்களில் 24 கட்டுரைகளின்
தொகுப்பாகப் பிறந்திருக்கிறது. திரு.சுப்ரபாரதிமணியன் உத்தியோகம் காரணமாக
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் வசித்த போது நடந்த அவருக்கும்
அந்நகருக்குமான கொடுக்கல் வாங்கல்களை - நேர்ந்த அனுபவங்களை ஒரு
நாட்குறிப்பைப் போல வெள்ளை அறிக்கையாகத் தந்திருக்கிறார். இத்தொகுப்பை
வாசித்து முடிக்கும் யாருக்கும் வாழ்வின் மீது அதுவரை இல்லாத ஒரு புதுப்
பாசம் வந்தே தீரும்.

அநேகமாக நாம் அனைவருமே நம் வாழ்விற்கு ஏதேனும் ஒரு குறிக்கோளை
நோக்கமாக்கிக் கொண்டு அதைச் சார்ந்து சிந்திப்பதும் அதன் வெற்றிக்காக சதா
ஒடுவதுமாக இருக்கிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களில் நம்
ஓட்டத்திற்குச் சாதகமானவற்றைத் தவிர வேறெதையும் நம்மால் நின்று கவனிக்க
முடிவதில்லை. ஒன்று நேரமில்லை அல்லது ஈடுபாடில்லை.  ஒரு ரயில் பயணி
தொலைதூரக் காட்சிகளைப் பார்ப்பதைப் போல அநேக சம்பவங்களை நாம் கடந்து
கொண்டே கவனிக்கிறோம். நமக்கு அவற்றின் மீது பெரிய அக்கறையெதுவும்
வந்துவிடுவதில்லை. (நீங்கள் அவ்வாறு இதுவரை எத்தனை விசயங்களைத் தவர
விட்டிருப்பீர்களென்று உங்களால் ஒரு காகிதத்தில் குறிக்க முடியுமா..?
நினைத்தாலே மலைப்புத்தான் வரும்)

ஆனால் ஓ செகந்திராபாத்தை வாசிக்கும் யாருக்கும் தாம் இதுவரை வாழ்வின்
எத்தனை பகுதிகளைத் தவறவிட்டிருக்கிறோம் என்பது தோராயமாக ஆனால் சட்டெனத்
தெரிந்துவிடும். பிரதான சாலையில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் நம்
வாழ்க்கைப் பேருந்தை ஒருநாள் கிடைத்த மூலைமுடுக்குகளுக்குள் மட்டுமே
மாற்றி மாற்றி ஓட்டிக் கொண்டு ஒரு பயணம் போவோமானால் அதற்குப் பெயர்தான் ஓ
செகந்திராபாத்.

மகாபாரதக் கதையில் இலக்கைத் தவிர வேறெதுவும் தெரியவிவ்லை என்று
கைத்தட்டல் வாங்கிய அர்ச்சுனன் கூட அம்பெய்யும் காரியத்தின் போது மட்டுமே
வேறெதையும் கவனிக்காதிருந்தான். ஆனால் இன்றைய நவயுக அர்ச்சுனன்கள்
அனைவருமே தம் வாழ்வு தம் போக்குத் தவிர வேறெதையும் எப்போதுமே கவனிக்க
மறுக்கிறார்கள். தம் பாதையில் தென்படும் தமக்கு வணிக லாபமற்ற எதையுமே
குறுக்கீடுகளாய் எண்ணி உதைத்துக் கடக்கிறார்கள் அல்லது தாண்டிக்
குதிக்கிறார்கள். கூட்டமாக வசித்ததாலும் அத்தனைபேரும் வெறும் சில்லு
மனிதர்களே உலாவருகிறார்கள்.

ஊழியராக வேலைபார்க்கும் ஒருவர் மேலாளராகும் கனவோடு அலைகிறார். மேலாளராக
இருப்பவர் மண்ணடல மேலாளர் லட்சியத்தில் பறந்து கொண்டிருக்கிறார்.
அடிப்படை வசதிகள் அனைத்தமிருப்பவர்கள் கூட வாழ்வை சுவைபட வாழவில்லை.
கோவிலுக்கு அழைக்கும் மனைவி இடையூறாகத் தெரிகிறார். மருத்துவமனைக்கு
அழைக்கும் பெற்றோர் சுமையாகத் தெரிகிறார்கள். விளையாட அழைக்கும்
குழந்தைகள் எரிச்சல் தருகிறார்கள். ஒரு முறை இந்த ஓ செகந்திராபாத்தைக்
கையிலெடுங்கள் உங்களின் அன்றாட வேலைகளில் ஒரு புதுச் சுவை தெரியவரும்.
சீட்டுக் கட்டைக் கலைத்தப் போட்டு மறுபடி வேறு வரிசையில் அடுக்கியது போல
உங்கள் நினைவடுக்குகளில் ஒரு புது அடுக்கு தோன்றும். உலகத்தில் நாமொரு
சிறு புள்ளி என்பதற்கு மாற்றாக நமக்கு இவ்வளவு பெரிய உலகமிருக்கிறது
என்று பார்வைக் கோணம் மாறிவிடும்.

ஒரு புத்தக மதிப்புரைக்கு ஏன் இத்தனை வெளி விசயங்களைப் பேச
வேண்டியிருக்கிறது என்றால் மனதை அந்த அளவு விஸ்தரித்தக் கொண்டு ஓ
செகந்திராபாத்தைக் கையிலெடுத்தால் மட்டுமே அதன் பலன்களை
அனுபவிக்கமுடியும் என்பதால்தான். சும்மா இளநீரில் ஸ்ட்ரா போட்டு உறிகிற
மாதிரி இதைச் சுவைத்தெறிய முடியாது. நல்ல ஆசுவாசமாக இருக்கும் நாளாகப்
பார்த்து பெரிய வட்டில் அல்லது நன்கு பரந்த தலைவாழை இலையாகப் போட்டு முழு
விருந்தாக உண்டுகளித்தால் மட்டுமே முழுப்பலன் கிட்டும்.

பாபர்மசூதி இடிக்கப்பட்ட நேரம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த ஒரு நகரில்
ஒற்றையாய் நீங்கள் உலாத்தியதுண்டா..? அங்கே அன்றாடப் பிழைப்பிற்கான
அத்தியாவசியப் பொருட்கள் வாங்குதற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரப்
பொழுதில் கூட  தம் உறவுகளின் இருப்புக்களை அறிந்து கொள்ளத் தொலைபேசி
நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மனிதர்களின் உள்ளக்
கிடைக்கைகள் தெரியுமா உங்களுக்கு..? அது போன்றதொரு நெருக்கடியான
நேரத்தில் ஒர சாமானியன் அங்கே உலாவுதலுக்கும் ஒர படைப்பாளி
உலாவுதலுக்கும் பெரிய வேறுபாடுகளிருக்கிறது.

சாமானியனுக்குத் தன்னைக் காத்துக் கொள்வதும் தப்பியோடுவதுமே அந்நேரத்து
தர்மமாக இருந்திருக்கும். படைப்பாளி மட்டுமே தப்பியோடும் போதும்
திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடுகிறான். கண்ட காட்சிகளை பெற்ற
அனுபவங்களை படைப்புகள் வழியாக சமூகத்திற்கு ஒரு கற்பிதக் கலையாகத்
தருகிறான். அதிலும் சுப்ரபாரதி தனக்கென வெளிப்படையான அரசியல்
நிலைப்பாட்டைக் கொண்டவர் என்பதால் அவரின் விவரிப்புகளுக்குள் கூர்மையான
அரசியல் விமர்சனங்களும் கலந்தே வந்திருக்கின்றன.

செகந்திராபாத்தோடு இரட்டை நகரென்று சொல்லப்படும் ஹைதராபாத்திற்குள்
செல்கிறார் படைப்பாளி. தமிழக அரசியலில் முக்கியப் புள்ளியென்று
அறியப்படும் ஒருவரின் திராட்சைத் தோட்டத்தை ஒரு பத்திரிகைச்
செய்திக்காகப் புகைப்படமெடுக்க இவர் செய்த பிரயத்தனங்கள் ஒரு திகில்
கதையின் சிறு பகுதியை ஒத்திருப்பன. புகைப்பட நோக்கத்தோடு திராட்சைத்
தோட்டக் காவலாளியிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொள்ள முயல்வதும்
இருவருக்குமான மொழிகளின் ஒவ்வாமையால் அம்முயற்சியைக் கைவிட்டு
தோட்டத்தின் சுற்றச் சுவரை எங்கேனும் திறப்புக்கள் இருக்காதா ஒர
புகைப்படமெடுக்க முடியாதா என்று  கோட்டைச் சுவர் போன்ற அத்தனை பெரிய
மதிலைச் சுற்றி அலைந்து பிறகு அதுவும் தோல்வியில் முடிவது ஒரு திரைப்படக்
காட்சி போல மனதில் பதிகிறது.

செகந்திராபாத்தின் புறநகர்ப் பகுதியொன்றில் ராணுவப்பயிற்சி
முகாமிருப்பதும் அங்கு பயிற்சியின் போது வெடித்துச் சிதறும் ஈயக் குண்டு
சிதிலங்களுக்காக ஒரு வறிய கூட்டம் மண்ணை அள்ளிப் பிழைப்பதும் ஆச்சரியம்
ஆனால் உண்மை ரகச் செய்திகள். செகந்திராபாத்தின் தமிழர் பகுதிகளில் துணி
விற்றுப் பிழைப்பதற்காகத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு நண்பர் பிழைப்பை
விட்டுவிட்டு தானும் மண்ணள்ளிச் சேகரிப்பதும் அது அவரது தாயாராலேயே
முறியடிக்கப் படுவதும் வலிமிகுந்த நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கிறது.

இத் தொகுப்பு முழுக்க பல நண்பர்களைக் கொண்டாடியிருக்கிறார் படைப்பாளி.
ஒரு எழுத்தாளருக்கு நண்பராய் அமைவதுகூட அதிர்ஷ்டமானதுதான். ஏனெனில்
இத்தொகுப்பில் வரும் முஸ்தபா போல தன் நண்பர்களுக்கு வருடாவருடம் பிரியாணி
பார்சல் கொண்டு வந்து தரும் நிறைய முஸ்தபாக்களை நானறிவேன். ஆனால்
அவர்களுக்கெல்லாம் சுப்ரபாரதியின் முஸ்தபாபோல ஓ செகந்திராபாத் போன்ற
நன்றியறிவிப்பு ஆவணங்கள் எங்கே படைப்பப்படுகின்றன. வட்டித் தொல்லை
காரணமாகத் தற்கொலை நடந்து விட்ட ஒரு தமிழரின் துக்க வீட்டில் தஞ்சமடைந்து
கொண்டு தன் நண்பன் முஸ்தபாவுக்கும் வட்டித் தொல்லை இருக்கிறதே அதுதான்
முஸ்தபாவின் சோர்வுக்காண காரணம் என்றெல்லாம் எண்ணும் ஒரு படைப்பு மனம்
தாய்மைக்கு நிகரானது.

ஆரம்பத்தில் இத்தொகுப்பை வெள்ளை அறிக்கை என்று சொன்னதற்கான சாட்சியங்கள்
நிறைய உண்டு. உதாரணத்திற்கு ஆட்டோக்காரரிடம் இருபது ருபாய்க்காக முரண்டு
பிடித்தது. தகறாரில் தப்பித்து வீடடைந்து மூச்சு வாங்கும் நிகழ்வைப்
படிக்கும்போது நகைப்புக்குரியதாக முதலில் தோன்றுகிறது. பிறகு நம்
ஒவ்வொருவருக்கும் அப்படியான துரத்தலொன்றும் நகைப்புக்குரியதான
தருணமொன்றும் இருக்கவே செய்கிறது என்று உணரும்போது இது போன்ற
சம்பவங்களையும் தயங்காது பதிவு செய்வதன்றோ நிஜத் துணிச்சல் என்றே
முடிவுக்கு வரவேண்டியதாகிறது.

ஆனால் அதே சமயம் வெளிப்படை என்ற ஒன்றிற்காக தொகுப்பு சில வரம்புகளையும்
தாண்டி விட்டதோ என்றெண்ணவும் சில சாத்தியங்கள் இருக்கின்றன.
முஸ்தபாவிற்கான நன்றியைப் போன்ற பதிவுகளின் போது பிரச்சனையில்லை. ஏனெனில்
அதைப் படித்தால் அதற்கான பதிலாக முஸ்தபாவிடமிருந்தும் இன்னொரு நன்றியே
கிடைத்திருக்கும். ஆனால் சிலரின் பாலியல் திரைப்பட ஆர்வங்கள் இங்கே
பதியப்பட்டுள்ளன. குடும்பப அங்கத்தினர் நெருக்கடிகள் தந்ததாகவும்
செய்திகளிருக்கிறது. ஒருவேளை அவ்வாறு குறிப்பிடப்பட்ட அவர்கள்
எதிர்வினையாற்ற வாய்ப்பற்றவர்களாக இருக்கலாம். அது படைப்பாளியின்
பலமாகிவிடாது. புத்தகமெனும்  பொது வெளியில் சாமானியர்களைப் பற்றிய நேரடி
விமர்சனங்களை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.

திரு. சுப்ரபாரதிமணியனின் பயணக் கட்டுரைகளும் பயணக் கட்டுரைகளும்
வரிக்குவரி வார்த்தைக்கு வார்த்தை தகவல் களஞ்சியங்களாக பொங்கிப்
பிரவகிப்பவைதான். ஆனால் பொதுவாக அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர்
இலக்கியங்களுக்கும் அவர்களின் சொந்த மண்ணிலும் வரவேற்பிருக்காது. அவர்கள்
ஊரைவிட்டு ஓடியவர்களாகக் கருதப்படுவதால். புலம்போன இடத்திலும் நல்ல
அனுபவம் கிட்டாது. அங்கே இவர்களை வந்தேறிகள் என்பர்.

அரசுகள் ஆளாளுக்கு உலகக் கார்ப்பரேட்டுகளுக்கு சொந்த மண்ணைக் கிராமம்
கிராமமாகக் கூறு போட்டு குத்தகைக்குத் தந்து கொண்டிருக்கும் ஆபத்தான
வரலாற்றுக் காலத்தைக் கடந்து கொண்டிருக்கும் ஊமைச் சந்ததிகள் நாம்..
நிலைமை சீராகாதெனில் விரைவில் மக்கள் என்றொரு பதமே அழிந்து
கார்ப்பரேட்டுகளும் அடிமைகளும் மட்டுமே எஞ்சியிருக்கப்போகும் நிலைமை
வரும். நடப்பதையெல்லாம் பார்த்தால் யார் எந்தக் கணத்தில் புலம் பெயர்ந்து
கிளம்பப் போகிறோம் என்றோ அல்லது எங்கேனும் வந்தேறிகளாய் விரட்டப்படப்
போகிறோமென்றோ தெரியாது. ஆனால் அப்போதெல்லாம் ஓ செகந்திராபாத் போன்ற
இலக்கியங்கள்தான் நிச்சயம் கையேடுகளாக இருக்கக் கூடுவன. அன்று சுப்ரபாரதி
போன்றோர் உளவியல் யுவான்சுவாங்குகளாகக் கொண்டாடப்படுவர்.
( என்சிபிஎச் வெளியீடு , சென்னை rs 100 )





------------------------------------