சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 20 ஏப்ரல், 2017

மரணம் : சுப்ரபாரதிமணியன்

    நாற்காலியிலிருந்து எழ முயன்றவருக்கு தலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.அப்படியே படுத்துக்கிடக்கலாம் என்று தோன்றியது.மரணம் வாசலில் வந்து காத்திருப்பதாக பலர் எழுதுவார்கள் . சொல்வார்கள். தான் மரணத்தை எதிர்பார்த்துதான் இருக்கிறேனா என்று அவர் சிலசமயங்களில் சொல்லிக் கொள்வார்.
  கொஞ்ச நேரத்திற்கு முன் எதிர்த்த வீட்டுப் பெண் ஓடிவந்தாள். எட்டாம் வகுப்புப் படிக்கிறாள். ஒரு மதுக்கிடங்கு தீப்பற்றி எரிகிறதாம்.அந்த மதுக்கிடங்கு அவர்கள் பள்ளிக்கு அருகாமையில் இருக்கிறது. தீப்பற்றிய போது பலர் உள்ளே இருந்திருக்கிறார்கள்.  அவர்கள் என்னவாகியிருப்பார்கள். பள்ளிக்கு இன்றைக்கு விடுமுறை உண்டா. அவர்களின் கருகிய பிணத்தை பார்த்தால் பயம் வருமே.. எப்படி தவிர்க்கலாம் என்று படபடப்புடன் கேட்டாள். அவருக்கு பதில் சொல்லத் தோன்றவில்லை. அவள் பதிலை எதிர்பார்க்காதவள் போல் விருட்டென்று சென்று விட்டாள். பள்ளிக்கு இன்றைக்கு விடுமுறையா என்பதில் அவளின் அக்கறை இருந்திருக்கும் என்று நினைத்தார். அவரின் அக்கறை கறிக்கட்டையாய் போய் விட்ட மனிதர்களைப் பற்றி என்பதாய் நினைத்துக் கொண்டார்.
                  மேற்கு சன்னலின் ஓரத்தில் வந்து மின்னலென சென்ற பறவை என்னவாக இருக்கும் என்ற யோசனையில் மூழ்கியிருந்தார் மணியன். முந்தா நாள் பப்பாளி மரத்தடியில் ஒரு முட்டை கிடந்தது. காக்கை முட்டையாக இருக்கலாம். சின்னதாகத்தான் இருந்தது. ஆனால் அதன் ஓடு ரொம்பவும் மெல்லியதாக இருந்தததால் குழைந்து சிதைந்தபடியே  கிடந்தது. இவ்வளவு மெல்லிசான ஓட்டால் முட்டை சிதைந்து விட்டதா.. இல்லை கொத்தி அதுவே சிதைந்து விட்டதா.. என்பது யோசிப்பிற்குள் வந்தது மணியனுக்கு.
     தன் உடம்பு கூட இப்படித்தான் ஆகிவிட்டது. ஒரு சிதைந்து போன முட்டை போல கலகலத்துவிட்டது. ஓடு மெல்லிசானதால் சிதைந்தது போல உடம்பு ஹோட்டல் சாப்பாடு, அலைச்சல் என்று மெலிந்து விட்டது. உடம்பினுள் இருக்கும் பாகங்களெல்லாம் லொடலொடவென ஆடுவது போலிருந்தது. இந்த உடம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி பிரமாண்டமாய் நின்றது.
     வெள்ளியங்கிரி மலைக்குப் போன வெங்கடாசலம் காணாமல் போய்விட்டர். சித்ரா பவுர்ணமியில் மலையேறுகிறேன் என்று போனவர் திரும்பி வரவில்லை. எங்கு தவறி வீழ்ந்திருப்பார் என்று தெரியவில்லை. கைபேசியும் ஸ்விட்ச் ஆப்நிலைக்கு காணாமல் போன அடுத்த நாளே வந்துவிட்டது. பிளாஸ்டிக்கைத் தவீர்ப்பீர் என்ற வாசகங்களுடன் அலைந்து திரிந்த ஓசைபணியாளர்களுக்கு கூட எந்தத் தடயமும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினரிடம் சொல்லிவிட்டனர். அதென்ன தற்கொலையா.. இருக்காது. அப்புறம் காணாமல் போனது எதேச்சையானதா.. தான் காணாமல் போனால் பழியைப் போட்டு விட பல காரணங்கள் இருந்தன. காணாமல் போகச் செய்யும் சதியில் காவல்துறை, முதலாளி வர்க்கம் என்று எதையாவது கற்பித்து விடலாம். ஆனால் வெங்கடாசலத்திற்கு அப்படியெதுவும் இல்லை. நல்ல லெளகீகவாதி. குடும்பத்திற்கென்று இருக்கும் தீயாகதீபம் போலானவர். அவர் காணாமல் போனது ஓடு சிதைந்து கூழாகிப் போன ஏதோ பறவையின் முட்டையை ஞாபகப்படுத்தியது அவருக்கு. அவர் கழுத்தில் புலியின் பல்லும், நகமும் கோர்த்து சிறு மாலையாக்கிப் போட்டிருப்பார். அது அவரை நெடுநாள் வாழ வைக்கும் என்று திடமாக நம்பினார். இதுக்கு சிட்டு குருவி லேகியம் சாப்புடலாங்கஎன்று அவர் மனைவியும் கிண்டல் செய்வாள்.இப்போதுதா சிட்டுக் குருவிக் கொறஞ்சு போச்சே. செல்போன் டவர் அவற்றை ஒழித்து விட்டதே. அவை அடைக்கலம் புக வீடுகளில் ஓடுகள் கூட இல்லையே.
மேசையின் மேல் விரிந்து கிடந்தது அந்த கவிதைப்புத்தகம்.
பஞ்சம் பிழைக்கத்
 தஞ்சை நோக்கி ..
 பழசானது சொலவடை.
இப்போது புழக்கத்தில்
தேகம் வளர்க்கத்
 திருப்பூர் நோக்கி..” ( மருதத்திணை-மீனாசுந்தர்  )
கவிதையெல்லாம் படிக்கிற பழக்கம் அவருக்கிலை. பழையபுத்தகக் கடையில் பழையதினசரி தாள்கள் போடும் போது  கண்ணீல் பட்ட இரண்டு கவிதை நூல்களை விலையில்லாமல் எடுத்து வந்திருந்தார். இலவசமாய் புத்தகம் படிப்பது நேற்று உறுத்தியது அவரை.
     அவரின் உடம்பின் வலது பகுதியிலிருந்து உயிரை ஊடுருவும் வலி பரவியது. வலது பகுதியை அறுத்தெடுத்து விட்ட மாதிரி இருந்தது. பட்டம்விடும் திருவிழாக்களில் இடையில் அகப்படும் பறவைகள் உடல் இப்படித்தான் அறுபட்டு இரத்தம் கசிய கிடக்கும். அதுபோல் எந்த மாஞ்சா கயிறு தன் உடம்பை அறுத்துக் கொண்டிருக்கிறது என்பது அவருக்கு யோசனையாக இருந்தது. ஜன்னல் பக்கமிருந்து ஏதோ சரிந்து விழுந்த சப்தம் கேட்டு மெல்ல எழுந்தார். சிறுமூங்கில் குச்சிகள் ஜன்னலின் ஓரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. உலக தண்ணீர் நான் ஊர்வலத்தின் போது அட்டைகள் கட்ட ஆல்பிரட் கொண்டு  வந்த மூங்கில் குச்சிகள் அவை. அவைகளை  காற்றோ, ஏதாவது பறவையின் இடைஞ்சலோ  சரிய வைத்திருக்கும் அவையென்ன ஈட்டிகளா.. போரில் மனிதர்களை, மிருகங்களைக் கொன்ற ஈட்டிகளா. அந்த முனைகளில் ஏதாவது மாமிசம் ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று ஏதாவது பருந்து வந்து போயிருக்குமா. பருந்தைப் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது. சாய்ந்து கிடக்கும் மூங்கில் குச்சிகளின் சலசலப்பு சப்தம் இன்னும் சற்றே கலவரமாக்கியது அவரை. ஏதாவது பூனை எலியைத் தேடி அலைகிறதா. பூனையைப் பார்த்து தேடி அலைகிறதா. பூனையைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது என்பதைச் சொல்லிக் கொண்டார். தேனம்மையைப் பார்த்தும் ரொம்ப நாளாகியிருந்தது அவருக்கு.
               சட்டென வலதுபக்க மூலை சன்னலில்  வெளிப்பட்டு மறைந்து விட்டப் பூனையின் வாயில் ஏதோ பறவை இருப்பதாகப்பட்டது.அதன் வாயில் ரத்தக்கறையும் இருந்த்தாகப்பட்ட்து. இது நிஜமா .. பிரமையா.. நாற்காலியிலிருந்து எழ் முயன்றவருக்கு தலை சுற்றுவது போல் கிறுகிறுத்தது.
 பறவை அந்தப்பூனையின் வாயிலிலிருந்து தப்பித்திருக்கலாம். எப்படி மாட்டிக் கொண்டது. தான் கொஞ்ச நேரம் முன் ரசித்தது குரூரக்காட்சியாக மீண்டும் நிகழ்ந்தேறியிருப்பது பற்றி யோசித்தார்,
       இந்த முறை ஏதோ பறவையொன்று இடது பக்கத்திலிருந்து  சன்னலில்  சர்ரேலென வெளியேறிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது..அது பறவையா, பூனையா என்றக் குழப்பம் சட்டென வந்து தலையை இன்னும் கிறுகிறுக்கச் செய்தது.
பறவையா.. பூனையா.. மரணமா .. எழுந்து நிற்க முயற்சிப்பதா..
அப்படியே படுத்துக்கிடக்கலாம்.
படுத்து கிடக்க..
படுத்து..
படு..