சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 15 மே, 2015

ஆனந்த விகடன்  கதை

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

சுப்ரபாரதிமணியன்
   
வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம்   போய் அப்பகுதி  இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலின் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது.

உலகம் இருண்டு விட்டது பூனையாய் கண்களை மூடியிருந்தாள் சுகன்யா.
         கைபேசி ஒளிர்ந்து   “ கண்ணம்மா ..கண்ணம்மா.. “ என்றது. இந்த சமயத்தில் கைபேசியை எடுத்து  பேசி விடக்கூடாது. எடுக்கவில்லையென்றால் வகுப்பில் இருப்பதாக நினைத்துக் கொள்வர்.அது சவுகரியம்.எடுத்து விட்டால் கல்லூரியில் இல்லை வெளியில் இருப்பதாய் காட்டிக் கொடுத்து விடும்.வேண்டாம். எடுத்துப் பேசி மாட்டிக் கொள்ள வேண்டாம்.
             கைபேசியை எடுத்து செல்பி என்று ஒரு படம் எடுத்துக்  கொள்ளலாம். அது சூப்பர் மார்கெட்டில் இருப்பதையோ, வேறு எங்கோ இருப்பதையோ காட்டிக் கொண்டாலும் பரவாயில்லை. அய்ந்து மெகா பிக்சல்கள் இருக்கும்படி போர்ட்ராய்ட் எபெக்ட்டுடன் ஒரு புது கை பேசி வாங்கி விட வேண்டுமென்பது அவளின்  சமீபக் கனவாகி விட்டது.  
      தொடாமல் பார்க்கவும் என்று அகழ்வாரய்ச்சிக் கூடங்களில் இருப்பது போல்  தொங்கும் போர்டுகள் இல்லாமல் இப்போதைய பெரிய மளிகைக்கடைகளும்,சூப்பர் மார்க்கெட்டுகளும், மால்களும் இருப்பதாய்  சுகன்யாவிற்குத் தோன்றும். மளிகைக்கடையென்றால் என்ன அண்ணாச்சி என்று பேசிக் கொண்டே நாலு அரிசிமணியை வாயில் போட்டுக் கொள்ளலாம். புளித் துணுக்கை எடுத்துப் பிய்த்துப் போட்டுக் கொள்ளலாம்.பெரிய இடங்களில், கடைகளில், மால்களில் அதெல்லாம் இல்லாமல் போய் விட்டது.எல்லாம் பிளாஸ்டி பைகளுக்குள்ளும், அட்டைப்பெட்டிகளுக்கும் அடைபட்டுப் போய் விட்டது.எதையும் கண்ணில் பார்ப்பதோடு சரி.என்ன ஏதாச்சும் செய்யேன் என்று அவை  சவால் விட்டபடி இருக்கும். அடுக்குகளில் விரிந்து கிடக்கும் பிளாஸ்டி  பொட்டலங்களையும், டப்பாக்களையும் பார்த்துக் கொண்டிருந்தாள் சுகன்யா. அந்த  நேத்ரா  மாலில்பிளாஸ்டிக்கின் ஆதிக்கம்  அதிகம் என்பது போல் எல்லாம் பிளாஸ்டிக் பையினுள்  மலிந்து கிடந்தன.
அப்போதுதான் மின்சாரம் தடைபட்டு மீண்டு வந்ததால் அங்கிருந்த இருட்டு விலகி அவளுக்கு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்த மாதிரி சிறிய பரவசம் வந்தது. மெழுகுவர்த்தி வீட்டில் இல்லாதது பற்றி அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. எப்போது வேண்டுமானாலும் போகும் வரும். அதுதான் மின்சாரம்.
    எதிரிலிருந்த வரமிளகாய்  பொட்டலத்தின் விலை அவளை பயமுறுத்தியது.  மிளகாய் அரைக்கிற பழக்கமெல்லாம் போய் விட்டது பற்றி அம்மா போன வாரம் சொல்லிக் கொண்டிருந்தாள். இப்போது எல்லாம் பொட்டலமாகக் கிடைக்கிறது. மசாலா பொடியில், மிளகாய் பொடியில் செங்கல் தூள் இருப்பதாய் அதை அம்மா சமைக்கத் தூவும் போது சுகன்யா நினைப்பாள். ரசமோ, சாம்பாரோ கொதிக்கிற போது வரும் மணம் அவளுக்குப் பிடித்திருந்தது. செங்கல்லை அப்போதெல்லாம் அவள் நிராகரித்தே மணத்தை நுகர்வாள்.
செங்கல் கலந்ததுக்கே இந்த மணத்தை இப்பிடி ரசிக்கறையே . உங்க பாட்டி செஞ்சு குடுக்கற மிளகா, கொத்துமல்லிப் பொடின்னா  அதுக்குள்ளயே வுழுந்து கெடப்பே நீ “ . அம்மாவுக்கு உதவுவதோடு சரி. முழுமையாக ஒரு நாள் கூட சமைத்ததில்லை அவள் .
     ” நல்லா சமையல் பண்ணுனா புருசன்னு  எவனையாவது கண்டுபுடுச்சு எவன்கிட்டையாச்சும் துரத்திருவேன்னு பயமாடி.காலேஜ் படிக்கற பொண்ணு பாடத்தோட இதுவும் கத்துக்கணும்   “ என்று அம்மா கூட சொல்லியிருக்கிறாள்.
      அவளின் தலை வலது பக்கம் திரும்பிய போது அவளைப் பார்த்த  கறுப்புக்கண்ணாடிக்காரன் பார்வையைத் தாழ்த்தி  ஹார்லிக்ஸ் பாட்டிலுக்குள் புகுத்திக்கொண்டான். முந்நூற்று அறுபது டிகிரி கோணத்தில் தலையைத் திருப்பினால் இது போல் பல கறுப்பு, சாதாரண கண்ணாடிக்காரர்கள் தென்படுவர். வெகு பாதுகாப்பாக இருப்பதற்காக வந்த இடம் என்பதை தனக்குள் சொல்லிக் கொண்டாள்.  இல்லை . பாதுகாப்பில்லையோ “ முணகிக் கொண்டாள்.
     இடது  பக்கத்தில் முக்கால் பேண்ட்டும், டாப்ஸ்சும் அணிந்திருந்த பெண்மணி இரண்டு வயது குழந்தையை தரதரவென்று இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருந்தாள். அக்குழந்தை கையில் சாக்லெட் பார் ஒன்று இருந்தது.
 “ இன்னொன்னும்மா “ என்று குழறியது அது.
சென்றதரம் வந்திருந்த போது இப்படித்தான் முக்கால் பேண்ட்டும் டாப்சும் அணிந்த பெண்ணொருத்தி கனிஷ் கனிஷ் என்று கத்தியபடி திரிந்து கொண்டிருந்தாள்.
 “ வீட்டுக்காரரா
“ அவரெ இவ்வளவு மரிதையா கூப்படணுமா என்ன “
 “ பின்னே “
“ மை சன்.  அய்ஸ்கிரீம் வாங்கறப்போ எங்க போனானோ “ .அய்ஸ்கிரீமை வாயில் வைத்தபடியே முக்கால் பேண்ட்காரி சொன்னாள். அய்ஸ்கிரீமை சுவைத்தபடியே குழந்தையைத் தேடினாள்.
   சுகன்யாவிற்கு முக்கால் பேண்ட்டும், டாப்சும் போட ஆசைதான். ஆனாலும் அப்படியெல்லாம் போட்டுக் கொண்டு  சேரியிலிருந்து கிளம்பி விடமுடியாது.படிப்பு முடிந்து வேலைக்குப் போய் விட்டால் அதெல்லாம் முடியும். 
      சுகன்யா  பேருந்தை விட்டு இறங்கியதும் இன்றைக்கு கல்லூரிக்குப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தாள்.இரசாயன வகுப்பு அசைன்மென்ட் முடித்திருக்கவில்லை. போனால் முடிக்காததற்காக அபராதம் கட்டவேண்டும். போகாமல் இருந்தால்  கல்லூரிக்கு வராதததற்காகப் அபராதம்  கட்டவேண்டும். இரண்டும் ஒன்றுதான். அதற்காய் வீட்டில் இருக்க முடியாது. 
      இன்றைக்கு வீட்டில் இருக்க முடியாததற்கு வேறு காரணம் இருந்தது. எப்போதும் வீட்டில் இருக்க முடியாததற்கு இருக்கும் காரணம் அவள் அப்பா டாஸ்மாக் வாசனையோடு வீட்டில் இருப்பார் என்பதுதான். அரசு கஜானாவை நிரப்பும் பொறுப்பானக் குடிமகன்  என்று அவர் பொறுப்பாய் நினைத்துக் கொள்வார். இன்றைக்கு வீட்டில் இருக்க முடியாததற்கு காரணம் இருந்தது அப்பாவை ஜாமீனில் எடுக்க அம்மா காவல் நிலையம் செல்கிறாள். நீயும் வாயேன் என்று கூப்பிட்டு போய் அங்கே நிற்க வைத்து விட்டால் சிரமமாக நெளிந்து நின்று கொண்டிருக்க வேண்டும் . அதுதான்.
அப்பா ராம்ராஜ் இருபத்தைந்து வருடங்களாகக் குடித்துக் கொண்டிருப்பவர். முன்பெல்லாம் கள்ள சாராயம் , பாலக்காட்டு கள்ளு, நம்பியாம் பாளையம் ஒரு மரத்துக் கள்ளு என்றெல்லாம் குடித்துக் கொண்டிருப்பார். டாஸ்மாக் என்று வந்த பின் வார்த்தை மாறாதவர் மாதிரி  வேறு எந்தக் கடைக்கும் , வகைக்கும்  மாறாதவர். போன வாரம் அவர் வாங்கின குவார்டர் சரக்கிற்கு அய்ந்து ரூபாய் அதிகம் வாங்கினார்கள் என்று டாஸ்மாக் கடை வாசலில் உட்கார்ந்து போராட்டம் நடத்துகிறேன்  என்று இருந்தவரை யாரோ வீட்டிற்கு தள்ளிக்கொண்டு வந்து போட்டு விட்டுப் போனார்கள். உடம்பில் கொஞ்சம் சாரு காயம் இருந்தது.யாரோ அடித்திருக்க வேண்டும். அதெல்லாம் இல்லை என்றுதான் சொன்னார். அன்றைக்குத் தூங்கி எழுந்தவர் சுகன்யாவிடம் பேப்பர் ஒன்றை வாங்கி எழுதிக் கொண்டே இருந்தார்.
“ என்னப்பா.. மனுவா..
“ போராட்ட அறிவிப்புக்கு முந்தின ஏற்பாடு “ 
“ அப்பிடின்னா..
“ மொதல்லே தலைமைச்செயலகத்துக்கும், சூப்பரெண்ட் ஆப் போலீஸுக்கும் ஒரு மகஜர் அனுப்பறன்
“ என்ன சாராம்சம் அப்பா. ரேசன் கடையிலெ  1 கிலோ பிளிச்சிங் பவுடர் வாங்குனாத்தா 5 கிலோ கோதுமை போடறம்ன்னு சொல்றாங்களே அதைப்பத்தியா..
“அது உங்க கோரிக்கை . எங்க கோரிக்கைன்னு தனியா இருக்குதில்லெ..
“அப்பிடியா “
“ கேட்டு தெரிஞ்சிக்க. ஒண்ணு வாங்கற சரக்குக்கு  பில்லு கொடுக்கணும். ரெண்டு. கேமரா பொருத்தி வெக்கணும். சரக்கு போட்டுட்டு பிளாட் ஆகிறவங்கிட்ட பர்ஸ், செல்போன், நகைன்னு திருடறவங்களெ புடிக்கணும்.அதுக்கு கேமரா வேணும்.ஜெனரேட்டர் இல்லாத பாருக்கு லைசென்ஸ் தரக்கூடாது. பவர் இல்லீன்னா,  கரண்ட் போயிருச்சுன்னா குடிச்சுட்டு டேபிள்லெ வெக்கற சரக்கு  காணாமெப் போயிருது. பார்ல குடிச்சிட்டு வெளியெ வர்றவங்க வண்டியோட்டுனா புடிக்கறாங்க. இது செரியில்லே.  பாருக்குள்ள விக்கற சாமன்களுக்கு வெலை நிர்ணயம் வேணும். சாக்னா அயிட்டம், டம்ளர் எல்லாத்துக்கும் ..
   எழுதி விட்டு சுகன்யாவிடம் ஸ்டம்ப் கேட்டார். அவள் பர்ஸில் தேடி எடுத்த போது அய்ந்து ரெவின்யூ ஸ்டாம்புகளும், ஒரு அய்ந்து ரூபாய் ஸ்டாம்பும் இருந்தன.  இந்த வாரம் ஸ்காலர்சிப் வருமென்று ரெவின்யூ ஸ்டாம்ப்புடன் காத்திருந்தாள் அவள். ஒரு அஞ்சு ரூபா ஸ்டாம்பு தா இருக்கு
“ ரெவியூ ஸ்டாம்பு ஒட்டலாமே. குடிமகன்க ஏதாச்சும் ஸ்டாம்ப் ஒட்டுனா போதும்.
“ பார்லிமெண்ட்லே அதுக்கு சட்ட திருத்தம் கொண்டார இன்னொரு மனு எழுதுங்கப்பா “. இருந்தது  ஒரு அய்ந்து ரூபாய் ஸ்டாம்ப்.
 அய்ந்து ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி யாருக்கு அனுப்பினார் என்று தெரியவில்லை. ஒரு வாரம் கழித்து காவல்துறையிலிருந்து வந்து அழைத்துக் கொண்டு போனார்கள். தொலை பேசி செய்து கைதாகி விட்டதாகத் தகவல் சொன்னார்கள். குடித்து விட்டு ரகளை செய்ததாகச் சிறையில் அடைப்பதாகச் செய்தி சொன்னார்கள். அவர் எழுதிய மனுதான் அவரை சிறையில் அடைத்து விட்டது என்று அம்மா கூட சொன்னாள்.கொஞ்சம் காசு தயார் பண்ணி அப்பாவை மீட்க அம்மா இன்று காவல் நிலையம் செல்கிறாள்.
   பனியன் கம்பனிக்கு பீஸ் மடி வேலை சம்பளம் இன்று இல்லாமல் போகும் அவளுக்கு. மங்கலம் கிராம வங்கிக்குப் போய் விவசாயக் கடை என்ற பெயரில் நகைக் கடனாய் காசு வாங்கி வந்திருந்தாள். அம்மா கருமத்தாம்பட்டிக்கு  வேறு இன்று போவதாகச் சொல்லியிருந்தாள். சித்தியைப் பார்க்க. அவளின் கிராமத்தில் அவளையும் சேர்த்து 49 விதவைகள் இருந்தார்கள். அதுவும் மதுவால் செத்துப் போனவர்களின் மனைவிமார்கள் அந்த 49 பேர்.உங்கப்பா என்னையும் அந்த லிஸ்ட்லே சேர்த்திடுவார் போல இருக்கு “ என்று சொல்லி பல தரம் அழுதிருக்கிறாள்.

     அம்மாவுக்கு தொலைக்காட்சியில் இந்திப்படங்கள் பார்க்கப் பிடிக்கும்.           யாதோங்கி பாராத் காலம் தொட்டு இந்திப்படங்களை விரும்பிப் பார்ப்பதாகச் சொல்வாள். வசனங்கள் புரியாவிட்டாலும் முழுக்கதையைத் தெரிந்து கொண்டவள் மாதிரி சொல்வாள்.         மொகலே ஆசம் அவளுக்குப் பிடித்த படம். அதில் வரும் வசனம்   ஒன்று அவளுக்குப் பிடித்திருப்பதை அடிக்கடி சொல்லிக் கொள்வாள்; “ இரவில் எரியும் மெழுகுவர்த்திகள் பகலில் அணைத்து விடப்படுவது  ஏன் தெரியுமா.  அவை இரவின் ரகசியங்களை பகலிற்குத் தெரியப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான். நீயும் அது போல வாயை மூடிக்  கொண்டிரு “ என்பான் சலீம் அதில் .
      அது போல் ஊட்டு ரகசியங்கள்ன்னு என்கிட்டே பொதஞ்சு கெடக்கு.என்பாள்.      “ இது எப்பிடி உனக்குப் புரிஞ்சுது அம்மா ‘
“ எங்கையோ  படிச்சது அந்தப்பட வசனம். மனசிலே  நின்னுடுச்சு. வாழ்க்கையோட இருட்டு மாதிரி “
  மாலில் மின்சாரத் தடை சட்டென பயமுறுத்தியது. இருட்டைக் கண்டால் அவளுக்கு எப்போதும் பயம்தான். வீட்டில் நைட் லேம்ப் சாதாரணமாக மாலையானால் எரிய ஆரம்பித்து விடும்.இரவு முழுக்க எரியும். குறைந்த வெளிச்சம் இல்லாமல் அவளால் தூங்க முடியாது. இருட்டு வெகுவாய் குறைந்த வெளிச்சம் என்று சொல்லிக் கொள்வாள்.
     சட்டென மின்சாரம் போய் இருட்டு ஆக்கிரமித்தது. உடனே ஜெனரேட்டர் போடுவார்களே. காணோம். எல்லாம் இருட்டில் கிடந்தன. எதிரில் மெழுகுவர்த்தி பெரியசுருளாய் கிடந்தது, இவ்வளவு பெரிய சுருளை வாங்க அவளிடம் காசு இல்லை. அம்மா மின்வெட்டு சமயங்களில் பெரிய பெரிய மெழுவர்த்திகளை வாங்குவாள்.  அவை உருகி மீண்டும் அவையே வளர்கிற மாதிரி, விறகுக்கட்டை போல என்று வகை வகையாய் வாங்கிக் கொண்டு வருவாள். மாத மளிகைச் சாமான் சரக்குப் பட்டியலில் மெழுகுவர்த்தியை சேர்த்து நான்கு வருடங்களாகின்றன.
 சோமனூர் சித்தியை கடைசியாகப் பார்த்த போது ஒரு தேவாலயத்தின் முன் புறம் மெழுகுவர்த்தி விற்றுக் கொண்டிருந்தாள். அவள் மனநலம் பாதிக்கப்பட்டவளாக ஒரு விடுதியில் இருந்த போது அங்கு  தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகளை ஞாயிறு அன்று  தேவாலயம் முன் கொண்டு வந்து விற்பார்கள். அய்ந்து வருடம் விடுதியில் இருந்தவள் செத்துப்போனாள். அவளின் மகள் தங்கம் திருமணம் வெகுவாகத் தடைபட்டு  அவள் சொந்த சாதியை விட்டு  கல்யாணம் செய்து கொண்ட பின்பு சித்தப்பா நோயாளியாகிவிட்டார்.
தேவாலயங்களில் மெழுகுவர்த்திகளைப் பார்க்கிற போது ஆச்சர்யமாக இருக்கும் அவளுக்கு. பகல் நேரத்திலும் எதற்கு இப்படி எரிந்து உருகுகின்றன. இதுவே  இரவு நேரம் என்றால் மின்சாரத்தைத் துண்டித்து விட்டு கூட வேடிக்கை பார்க்கலாம். 
    பள்ளியில் படிக்கும் போது வேளாங்கன்னிக்கு சுற்றுலா சென்றிருந்தாள். வகை வகையாய் மெழுகுவர்த்திகளை அங்குதான் பார்த்தாள். கடற்கரையிலிருந்து பார்க்கும்போது தேவாலயம் பெரிய மெழுகுவர்த்திகளை சேர்த்து நிறுத்தி வைத்த மாதிரி  இருந்தது. ராட்சத மெழுகுவர்த்திகளாய் தேவாலய கோபுரங்கள் நிற்பதாய் தோன்றியது.
 நிர்ப்பயா மரணத்தின் போது உள்ளூரில் கல்லூரி மாணவிகள் நடத்திய ஊர்வலங்களில் மெழுகுவர்த்தி ஏந்தித் தான் போராட்டம் நடந்திருக்கிறது. இரண்டாம் ஆண்டு பவுதீகம் படித்த செல்வராணி மீதான பாலியல் வன்முறையில் அவள் இறந்த போதும் மெழுகுவர்த்தி ஏந்திப்போராட்டம் நடைபெற்றது.அவள் இருந்த வீட்டு சொந்தக்காரன்தான் அப்படிச் செய்தவன்.
    அடுத்த  வரிசைக்கு வந்திருப்பதாக உனர்ந்தாள். இந்த வரிசையில் குழந்தைகளுக்கான பொருட்கள். வெவ்வேறு வகையான சோப்புகள், வெவ்வேறு வகையான பவுடர்கள், சிறுசிறு விளையாட்டுப் பொருட்கள் வெகு ஒழுங்கமைப்புடன்  இருந்தன. இதில் எதுவும் உபயோகித்து  தான் வளர்ந்தவளில்லை என்று சொல்லிக் கொண்டாள். ஒரே ரக சோப் வாழக்கை முழுவதும்,     ஒரே ரக சோப்பால் குடும்பத்திலிருப்பவர்களுக்கும் என்று ஒரு ஜென்மம்  சென்று விட்டிருக்கும்.  அவள் வேலைக்குப் போயாவது அடுத்த தலைமுறைக்கான  புதிய சோப்பை   வாங்க வேண்டும் என்று பலதரம் நினைத்திருக்கிறாள்.
அமெசான் காட்டு மூலிகையிலிருந்து தயாரான சோப்பாக வாங்க வேண்டும் “

புரூக் மாலில் இருக்கும் பொம்மைகள் கையில் இருக்கும் துணியோ, பையையோ காட்டி வாங்குங்கள் என்று சொல்வது போல் அசைவுகள் கொண்டதாய் புதிதாய் வடிவமைக்கப்பட்டிருப்பதாய் அஞ்சலி சொல்லியிருந்தாள். இன்றைக்கு அதைப் பார்க்க புரூக் மாலுக்குப் போயிருக்கலாம். புதிதாய் ஏதாவதை மாலில் பார்த்ததாக  அஞ்சலி போல் பீற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும்.

யாருடைய கண்களோ தன் மீது படர்ந்திருப்பது போல் பட்டது. கண்களைத் தாழ்த்தியபடியே கழுத்தைத் திருப்பிப் பார்த்தாள். யாரும் தென்படவில்லை. கழுத்தின் பின்பக்கம் கண்காணிப்பு கேமரா இருந்தது. தன்னை பலருக்கும் அது காட்டிக்கொண்டிருக்கும். யாரும் தன்னைப் பார்க்கவில்லை. தான் தனிமையாக்கப்பட்டவள் . யாரும் அவளைத் தொந்தரவு செய்ய முடியாது என்று நினைத்திருந்தவளுக்கு பின்பக்க கண்காணிப்புக் காமிரா சுரீரென்று மண்டையில் எதையோ போட்டு விட்டுப் போனது.தன்னை இங்கு வந்ததிலிருந்து  இது பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறதா. தனியாக இருப்பதாய் இறுமாந்திருந்தவளுக்கு பலர் வேடிக்கை பார்க்கிற விசமாகி விட்டதா. திக்கென்றிருந்தது.  இப்படி மால்களில் திரிகிற போது யாராவது என்ன வேணும் . உதவலாமா என்று கேட்டால் எரிச்சலுடன் தயாராக பதிலை வைத்திருப்பாள். அவர்களைத் தவிர்த்து விடுவாள்.
   பிளாஸ்டிக் பைகளில் பரோட்டாவும், சப்பாத்தியும், தாளித்த சேமியாவும் கூட இப்போதெல்லாம் இங்கே தென்படுகின்றன. ஆனால் குறைந்த கைப்பணம் அதன் மீதெல்லாம் ஆசையை வளர்க்க விட்டதில்லை. கையிலிருக்கும் சின்ன நாரத்தங்காய் இலை மடிப்பு  நாலு வாய் சாதத்தை குவித்திருக்கும்.அது போதும். அம்மாவிடம் காசு கேட்பது அழுகையைக் கொண்டு வந்து விடும் அவளுக்கு.
 மளிகைச்சாமன்களின் குவியல் கண்களிலிருந்து அகலவில்லை. அவள் நிற்கிற இடத்திலிருந்து நாலு அடி தள்ளி ஒரு அறை என்று தொனிக்கும் வகையில் கதவொன்று இருந்தது.மின்வெட்டு இருளாக்கும் நேரத்தில் யாராவது ஒரு எம்பு எம்பி உள்ளேத் தள்ளி விட்டால் போது அறைக்குள் சென்று கிடக்க வேண்டும். இருட்டுக்குள் நடப்பது நல்லதாக இருக்காதே.பயம் உடம்பை உலுக்கி நகரச்செய்தது. தனியாக திரைப்படம் பார்க்கப்போன  ரோசி அப்படித்தான் கழிப்பறையில் ஆடைகள் அலங்கோலமாக்கப்பட்டுக் கிடந்தாள்.
   சட்டென இதெல்லாம் நினைக்கையில் உடம்பு தெப்பலாய் வியர்வையில் நனைந்து விட்டதை கழுத்தில் இருந்த கசகப்பால் உணர்ந்தாள்.

     செத்துப் போய் விடுபவர்களை நினைவு படுத்துவதற்குத்தான் மெழுகுவர்த்திகளா...நிர்ப்பயா, ரோசி, செல்வராணி  என்று வன்கொடுமையில் செத்துப் போனவர்களுக்காக மெழுகுவர்த்திகளை ஏந்தி ஊர்வலம் போயிருக்கிறாள். இப்படி தனிமையில் எங்காவது சிக்கிக் கொண்டால்  தனக்கும் மெழுகுவர்த்திகளை யாராவது ஏந்த வேண்டியிருக்குமா. உடம்பு நடுங்க  ஆரம்பித்தது. 
இரண்டு மூன்று முறை வெளிச்சம் வந்து பத்து நிமிடங்களுக்கொரு முறை மின்சாரம் தவறியதைச் சொன்னது. ஜெனரேட்டர் ஏதோ சிரமத்திலிருக்க வேண்டும்..இருட்டில் மால் மூழ்கி மெதுவாக அவ்வப்போது உயிர் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வும், ஏதாவது தாறுமாறாய் நடந்து விட்டால் என்னவாவது என்ற கவலையும் அவள் உடம்பைச் சட்டென நடுங்கச் செய்தது. மாலுக்குள் நுழைகிற போது தப்பித்தலாய்,பாதுகாப்பாய் இருப்பதாய் உணர்ந்திருந்தாள். இப்போது எல்லாம் மாறி விட்டது போல் உடம்பில் வியர்வை பெருகெடுத்தது.
  அப்பாவிற்காக இன்று காவல் நிலையம் சென்றிருக்கும் அம்மா, அவளுக்காகவும் அப்புறம் காவல் நிலையம் செல்ல  வேண்டியாகி விடும். உடம்பு பதற ஆரம்பித்தது.
     
      கல்லூரிக்குப் போகத்தோன்றாத போதெல்லாம் ஏதாவது மாலுக்குள் வந்து புகுந்து கொள்வாள். இப்போது நகரில் நான்கு மால்கள் வந்து விட்டன.பழைய சூப்பர் மார்க்கெட்டுகள் சோபை இழந்து விட்டன. அவற்றில் இரண்டு டாஸ்மாக் பார்களாகி விட்டன.  மால்களில் நல்ல குளிர்சாதனங்கள் உள்ளன. இரண்டு மணி நேரமாவது உடம்பிற்கு உறுத்தல் இல்லாமல்  கழிந்து விடும். சும்மா வெளியே போகக் கூடாது என்று ஏதாவது நோட்டுப் புத்தகத்தையாவது வாங்கிக் கொண்டு கிளம்பி விடுவாள். இன்றைக்கும் நோட்டுப்புத்தக வாங்க அவளிடம் காசு இருந்தது. குண்டு மெழுகுவர்த்தி வாங்க காசு இல்லை.
   எதிரில் இருக்கும் மெழுகுவர்த்தியை எடுத்து பற்ற வைக்கக் கூட  தீப்பெட்டி வேண்டும். மின்சாரம் வரும் வரை கொஞ்சம் இருட்டில்தான் இருக்க வேண்டும். அது கொஞ்சம் பயத்தைக் கொண்டு வந்திருந்தது அவளுக்கு.ஜோசப்  அவளை கல்லூரி காண்டீனில் தொட்டபோது ஏற்பட்ட  பயம் போல மெல்லக் கிளம்பியது.
 பாட்டிக்கு அப்படியொரு பழக்கம் எப்படி ஏற்பட்டதென்று தெரியவில்லை.கோபமாய் இருக்கும் சமயங்களில் எரியும் மெழுகுவர்த்திச் சொட்டுகளை விசிறி கையில் பட வைத்து  விடுவாள். கை எரியும். அவள் சொல்வதைக் கேட்காததற்கு தண்டனை போலச் சொல்லிக் கொள்வாள்.அது எரிந்து உருகி நிலைகுலைந்து போவதைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.ஆனால் பாட்டியின் சமையல் அபாரமாக இருக்கும். மெழுகுவர்த்தி சிதறலில் சந்தோசம் கொள்ளும் பாட்டி  சமையலில்  ஆச்சர்யம் தருபவளாக  இருப்பது அவளுக்கு வியப்பே  தரும்.
     மின்சாரம் தவறிய இருட்டு   சூழ்ந்து கொண்டது. இந்த இருட்டில் எத்தனை நேரம் நிற்பது.இருட்டில் எது நடந்தாலும் அபாயகரமானதாக இருக்கும். யாராவது மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து வெளிச்சம் காட்டினால் பரவாயில்லை என்பது ஞாபகம் வந்தது. இருட்டு அவளை பயமுறுத்தி உடம்பை நடுங்கச் செய்தது.
   சட்டென வெளிச்சம் பரவி பலநூறு மெழுகுவர்த்திகளை  ஒன்றாய் பற்றவைத்தது போல் இருந்தது.மின்சாரம் வந்து விட்டது. மறுபடியும் போகும். வரும் அதுதான் மின்சாரம். இது என்ன விளையாட்டு.இருட்டு போய் வரும்  இந்த வெளிச்சம் எல்லாவற்றையும் நல்லதாக்கி விடும்.அப்பா விடுதலையாகி வந்து விடுவார். அம்மா இந்த வாரம்  பனியன் கம்பனியில் முழு வாரச் சம்பளம் வாங்குவாள். காலர்ஷிப் இந்த வாரம் வந்து விடும். பர்சிலிருக்கும் ரெவின்யூ ஸ்டாம்ப் அதை வாங்க சரியாகப் பயன்படும்.அம்மாவுக்கு கொஞ்ச நாளைக்கு பாரம் குறையும்.இப்படி கல்லூரிக்குப் போகாமல்  பயந்து நிற்பதை உதறி விட வேண்டும் என்ற நினைப்பு வந்தது.

        இப்போது ஒரு பீரியட் முடிந்திருக்கும். அடுத்த பீரியடில் கூட சேர்ந்து கொள்ளலாம். அசைன்மென்ட் எழுதாதற்கு அபராதம் கூட கட்டி விடலாம். இப்படி எங்கோ ஒளிந்து கொண்டிருப்பது பிரச்சினையைத் தீர்த்து விடாது. தப்பித்து மாலில் ஒளிந்து கொள்வதும், கொஞ்சம் பொழுது போக்குவதும் தற்காலிகமானதே. பிரச்சினையை எதிர் கொண்டுதான் ஆக வேண்டும். அம்மா பிரச்சினையை எதிர்கொள்ளாமல் இருந்தால் அப்பாவின் ஜாமீனுக்காக நகையை அடமானம் வைத்து காசு சேர்த்து இன்றைக்குப் போயிருக்க மாட்டாள். அப்பாவைப் புறக்கணித்து விட்டு குடும்பத்தை மனதில் கொள்ளாமல் இருந்தால் குடும்பம் நாசமாகி இருக்கும். அம்மா எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளித்து தானும் உயிரோடு இருக்கிறாள். தன்னையும் உயிரோடு வைத்திருக்கிறாள். எத்தனையோ ரகசியங்களை, வேதனைகளை, சந்தோசங்களை மனதுள் போட்டு மூடி வைத்துக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றுகிறாள்.கல்லூரிப்பிரச்சினைகளை எதிர் கொள்ள மனமில்லாமல் மாலுக்குள் ஒளிந்து கொள்வதால் பிரச்சினைகள் தீர்ந்து விடுமா என்ன..யோசனை வந்தது அவளுக்கு.

   இன்றைய பிரச்சினையை நாளைக்காவது எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.அது கல்லூரி ஆக இருந்தாலும், வீடாக இருந்தாலும், கல்லூரி கேண்டீனாக இருந்தாலும்.. கல்லூரி மாணவியாக, அம்மாவாக, பாட்டியாக எல்லாவற்றையும் சந்தித்தேயாக வேண்டும். இல்லாவிட்டால் மெழுகுவர்த்தி ஏற்றி வேடிக்கை காட்டி இரு நிமிடம் மவுனமாய் இருந்து, பின் கல்லூரி வகுப்புப் பெயர்   பட்டியலில் இருந்து அவள் பெயரை நீக்கி விடுவார்கள்.குடும்ப அட்டையிலும் ஒரு கிலோ அரிசியும், கால் கிலோ சக்கரையும், இலவசப் பொருட்களும் பெற முடியாதபடி  பெயர் இல்லாமல் போய் விடும் .  அங்கிருந்து உடனே வெளியேறி விடுவது என்ற தீர்மானத்தைத் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டாள்.
  அவள் குளிர்நிரம்பிய அந்த கட்டிடத்தை விட்டு உடனே மெல்ல வெளியேறும் போது மளிகைப் பொருட்கள் மெல்ல நழுவி தூரம் போயின.அப்பாவும், அம்மாவும் நெருக்கமாய் கூட இருக்கிற உணர்வு  மெல்ல வந்தது. வெளிப்பகுதியின்    வெளிச்சம் சூடாய் அவள் மீது இறங்கியது. பயத்தை உதறி விட்டு நடப்பது ஆசுவாசப்படுத்தியது  
   மாலுக்கு வெளியே ஒரு கோடி மெழுகுவர்த்திகளின் கூட்டாய் சூரியனின் பிரகாசம் விரிந்திருந்தது. பகல் சூரியனின் வெப்பச் சூட்டை மீறி பாதுகாப்பாய் உணர ஆரம்பித்தாள்..
  
   * சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,

திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.com