ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்
------------------------------------
11-11-10 தேதிய “ தி இந்து “ தினசரியில்
திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “ திரைபட முன்னோட்டம் பற்றியக்
கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான என் அனுபவப்பகிர்வை எழுத வேண்டும் என்றுத் தோன்றியது.
2009 பிப்ரவரியில் திரைப்பட ஒளிப்பதிவாளர்
ராஜ்குமார் அவர்கள் தொடர்பு கொண்டு திருமதி ஜானகி விஸ்வநாதனுடன் சேர்ந்து ஒரு திரைப்பட
கதைப்பணியில் ஈடுபடக் கேட்டுக் கொண்டார்.அவரின் ” குட்டி” , ”கனவுகள் மெய்ப்படவேண்டும் ” படங்களைப் பார்த்திருக்கிறேன். ராஜ்குமார்
இரண்டிலும் ஒளிப்பதிவு பணியில் இருந்தவர்,ஒத்துக் கொண்டபின்பு திருமதி ஜானகி
தொலைபேசியில் பேசினார். தொடர்ந்து பேசிக்கொண்டேஇருந்தார். மின்னஞ்சலில் சில தகவல்களை
தர நானும் அக்கதைக்கான சம்பவங்களை தொடர்ந்து தந்து கொண்டிருந்தேன். தினமும் பெரும்
பேச்சுசுதான். பிப்ரவரி இரண்டாம் வாரத்தில் என் துறையில் ஒருவாரப் பயிற்சிஒன்றுக்கு
சென்னையில் இருந்த போது அவரைச் சந்திக்க பிப்ரவரி 15 மாலை தேதி தந்திருந்தேன். பிப்ரவரி
14 என் மனைவி கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் மாரடைப்பால் காலமானதால் நான் பயிற்சியின்
இடையிலேயே திருப்பூர் திரும்பி விட்டேன். திருமதி ஜானகியிடம் குறுஞ்செய்தியாக தெரிவித்தேன்.
பத்து நாள் இடைவேளைக்குப் பின் அவர்கள்
தொடர்பு கொண்ட போது சுகந்தியின் மரணம் தந்திருந்த சோர்விலிருந்து விடுபட வேண்டியிருந்த்தால்
அக்கதைபற்றித் தொடர்ந்து தொலைபேசியில் கலந்தாலோசித்தோம் . தபாலில் சம்பவங்கள் தொடர்ந்து
அனுப்பிக்கொண்டிருந்தேன். 40 காட்சிகளை வடிவமைத்திருந்தேன். ஒரு மாத இடைவெளியில் சாகித்திய
அக்காதமியின் நிகழ்ச்சிக்குச் சென்றபோது அவர்கள் வீட்டில் ஒரு முழு நாள் நான் எழுதிய
திரைக்கதை சம்பவங்களை முறைப்படுத்தினோம். .
பின்னர் தொடர்பு கொண்ட பலமுறை
சற்று தாமதமாகும் என்றார். பிறகு ஒருமுறை திரைக்கதை முயற்சிக்கு சன்மானம் கேட்டு கடிதம்
எழுதியபோது தொடர்பு கொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பினார். அவ்வளவுதான். பிறகு நாலைந்து
முறை அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கும் அதே பதில் குறுஞ்செயதிதான்.
“ காஞ்சீபுரம் “ திரைக்கதைவிசயத்தில் நடந்ததைப்
பற்றிய என் அபிப்ராயங்களை ” கனவு “ இதழிலும், திண்ணை, இனியொரு இணைய இதழ்களிலும் எழுதி இருந்த போது இப்படிக் குறிப்பிட்டிருந்தேன்.
”கனவு” 63 ம் இதழ் அக்டோபர் 2009 இதழில்
பக்கம் 24லில் இப்படி குறிப்பிட்டிருக்கிறேன்:
“ எனது சாயத்திரை நாவலை நான் திரைக்கதையாக்கி
வைத்திருந்ததை பெற்றுக் கொண்ட பிரபல இயக்குனர்கள் பட்டியலில் இப்போது 5 பேர் உள்ளனர்.
சமீபத்தில் ஒரு பெண் இயக்குனர் கேட்ட்தினால் “ ஆன்லைனில் ஒரு திரைக்கதை எழுதி முடித்தேன்.
பிளீஸ், பிளிஸ் என்று தொலைபேசியிலெயே தொடர்ந்து கேட்டுக்கொடிருந்தார்.
15 நாளில் முழுத் திரைக்கதையை ஆன்லைனில் எழுதி முடித்தேன். அது என்ன பாடு படப்போகிறதோ.
திரைப்படத்துறையைச்சார்ந்த ஒரு நண்பர் சொன்னார்: பத்து குயர் பேப்பர் வாங்கிக்குடுத்து
இதுதான் சன்மானமுன்னு அனுப்பிசிருவாங்க “
சினிமாவுலே இதெல்லாம் சகஜமப்பா”
“ ஓம் ஒபாமா” விசயத்தில் பத்து குயர் பேப்பரும்
கிடைக்கவில்லை. ஒரு பைசா சன்மானமும் கிடைக்கவில்லை.
நான் எழுதிய ” ஓம் ஒபாமா ‘ திரைக்கதையில்
சில சம்பவங்கள்.:
திருப்பூரை ஒட்டிய ஒரு கிராமம். பின்னலாடைத்துறை
தொழிலுக்கு அந்த கிராமத்திலிருந்து வரும் சிலரின் வாழ்க்கை. அதில் காதல் வயப்பட்ட ஒரு
ஜோடிபிரதானமாய். அந்த கிராமத்து அம்மன் கோவிலில் பூஜையின்போது நாதஸ்வரம் வாசிக்கும்
ஒரு குடும்பம். அந்த ஊர் பண்ணையரின் மகன் நிர்வாகத்திற்கு வரும்போது நாதஸ்வரத்திற்கு
பதிலாக கோவில் பூஜையின்போது சிடி போட்டு நாதஸ்வர ஓசை வந்தால் போதும் என்று அக்குடும்பத்திற்கு
வேலை போய்விடுகிறது.
இதில் வரும் பிரதான சிறுவன் பாத்திரத்தின்
அண்ணன் பனியன் கம்பனி வேலைக்குப் போய்விடும்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் விடியற்காலையில்
எழுந்து கோவிலுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் அப்பாவுடன் செல்லும் தொந்தரவில் திரைக்கதை
ஆரம்பிக்கிறது. பையன் குடும்பம் நாத்ஸ்வரம் ஓதி கடவுளை எழுப்புவதால் பையனுக்கு பள்ளியில்
மவிசு அதிகம். தங்கள் குறைகளை பையன் துயிலெழும் கடவுளிடம் சொல்லி அருள் பாவிக்க தலைமை
ஆசிரியர் முதற்கொண்டு பலர் வேண்டுகிறார்கள்,
பனியன் உற்பத்தி பாதிப்பு, அமெரிக்க இரட்டை கோபுர வீழ்ச்சி , பொருளாதார
தடுமாற்றம் திருப்பூர் பனியன் ஏற்றுமதி பாதிப்பில் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர்
அமெரிக்காவில் ஒபாமா வெற்றி பெற்றால் நிலைமை சீராகும். என்று வேண்டிக்கொள்கிறார்கள்
. ஓம் லாபம், எழுதுவதைப்போல் பலர் ; ஓம் ஒபாமா ; நாமம் எழுதுகிறார்கள். கிராம வாழ்க்கை, பனியன் உற்பத்தி பாதித்ததால் கிராம மக்களின் மனநிலை, பையனின் பள்ளி அனுபங்கள்..பையனும் ஓம் ஒபாமா எழுதுகிறான். பலன்
கிடைத்ததா என்பதை வெள்ளித்திரையில் காண்க.
நானும் வெள்ளித்திரையில் பார்த்துவிட்டு, அல்லது சிடி கிடைத்தால் பார்த்துவிட்டு அடுத்த அங்கலாய்ப்பிற்குப்
போகவேண்டும்.