சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 28 ஆகஸ்ட், 2013

கரையும் நதிக்கரைகள்

கரையும் நதிக்கரைகள்


விநாயகர் சதுர்த்தியின் விசர்ஜன வைபத்தை நொய்யல் கரையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் வெளியூரிலிருந்து வந்த ஒரு நண்பர், என் புன்னகையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு நொய்யலில் தண்ணீர் ஓடினால் தானே.
 சாயத் தண்ணீர் அல்லவா இருக்கிறது. இதுவும் சௌகரியம்தான். சாயத் தண்ணீரிலேயே விக்ரகங்களைப் போட்டு விடுவது சுலபம்தான் என்றார்.

    நொய்யலில் சாயத்தண்ணீர் ஓடுகிறது. தொழிற்சாலைக் கழிவுகள், சாயப்பட்டறைக் கழிவுகள், நகரக் கழிவுகள் எல்லாம் சேர்ந்து நொய்யலுக்கு நதி என்ற பிரயோகத்தை பொருத்தமில்லாமல் செய்கின்றன. 170 கி.மீ பயணம் செய்யும் நொய்யல் சுமார் 50 கி.மீ.க்கு மாசுபடாத நதியாகத்தான் பயணிக்கிறது. கோவை வெள்ளிங்கிர் மலையில் உற்பத்தியாகி நீலியாறு. பெரியாற்றுடன் கலக்கும்போது நொய்யலாகிறது. பின் 170 கி.மீ. பயணத்தில் காவேரியுடன் கலக்கிறது. 50 கி.மீ.க்கு மாசுபடாத நதியாக வருவது திருப்பூரில் விரிவுபடுத்தப்பட்டப் பகுதிகளில் சேரும்போது சாயக் கழிவுகளுக்கான கழிப்பிடமாகி விடுகிறது. அதன்பின் கழிவுநீர் பயணம்தான், ரசாயனக் கலவைகளின் மினுமினுப்பில் ஒரத்துப்பாளையம் அணையில் தேங்குகிறது.

    500 ஏக்கர் பாசனத்திற்காக கட்டப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை இன்று சாயக் கழிவுகளை தேக்குவதற்கான அணையாகிவிட்டது. இருபோகம் பருத்தி, கேழ்வரகு, புகையிலை, சோளம் விளைவித்த அப்பகுதி நிலம் விவசாயத்திற்கு லாயக்கற்றதாகி விட்டது. கொடுமணல் பகுதிப் புகையிலை முன்பெல்லாம் பிரசித்தி பெற்றது. கொடு மணலில் அகழ்வாராய்ச்சிக்காக வருபவர்களுக்கு சாயத் தண்ணியின் ரசாயன உபாதை இன்னொரு ஆராய்ச்சிக்கானத் தளமாகிவிட்டது.

    ரூ. 15,000 கோடி ரூபாய் அன்னியச் செலவாணி திருப்பூர் பனியன் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. இதற்கான ஆதாரங்களில் ஒன்றான சாயப்பட்டறைகளின் கழிவு ரசாயன நீர் நொய்யலை ரசாயன நதியாக்கி விட்டது. நதியோர விவசாய நிலங்களில் ரசாயனத்தன்மை விளைச்சலுக்கு ஏற்றதாயில்லை. மேல்நாட்டு வணிக ஒப்பந்தக் கட்டாயங்களும், மாசுக்கட்டுப் பாட்டு வாரிய அறிவுரைகளும் சில ரசாயன நீர் சுத்திகரிப்பு ஆலைகளைத் தோற்றுவித்திருக்கின்றன. இவை மொத்தமான பனியன் தொழிற்சாலைகளின் சதவிகித உபயோகத்தில் மிகவும் அற்பமான சதவீதம்தான்.

    சாயத் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களில் சேமித்து வைக்கப்படும் நிலக்கழிவுகளை என்ன செய்வது என்பது தீர்க்க முடியாததாகி விடுகிறது. பல சாயப்பட்டறைகள் இந்த திடக் கழிவுகளை சிறு வண்டிகளில் வெளிப்புற ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு போய் தள்ளிவிடுகின்றனர். சுத்திகரிப்பு ஆலைகளில் மூட்டைகளாக கட்டி வைக்கப்பட்டிருக்கும் திடக்கழிவுகள் நாட்போக்கில் சிதைந்தும் பிய்ந்தும் அலட்சியமாக்கப்பட்டு விடுகின்றன. இவை நொய்யலின் கரைகளில் இருக்கும் சௌகரியத்தால் மழைக் காலங்களில் உருகி நொய்யலில் கலந்து விடுகின்றன. பிய்ந்த மூட்டைகளிலிருந்து பலத்தக் காற்றின் மூலம் பரவும் திடக் கழிவுத் துகள்கள் குவாலிஸ், போர்டு, சுமோக்களில் செல்பவர்களின் மூக்கு நாசிகளைத் தொடுவது சிரமம். ஆனால் சாதாரண மக்களை சுலபமாகவே எட்டி விடுகின்றன.

    சாயக் கலவைகளில் சுமார் இருநூறு வகை ரசாயனப் பொருட்கள் சோடியம் குளோரைடு, பெராக்ஸைடு. சல்பியூரிக் ஆசிட் போன்றவை உள்ளன. 1.5 கோடி லிட்டர் சாயத் தண்ணீர் தினமும் வெளிவேற்றப்படுகிறது. பதினைந்தாயிரம் பேர் சாயத் தொழிலிலும், ஒரு லட்சம் பேர் பனியன் தொழிலிலும், சுமார் 4 லட்சம் பேர் மறைமுகமாகவும் இதில் ஈடுபட்டிருக்கிறார்கள். கணிசமான வருமானத்தைத் தருகிற உபயம் சுற்றுச்சூழல் பற்றின கேடுபற்றி இதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அக்கறையைத் தருவதில்லை. கண் துடைப்பாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவதும், மிகவும் உச்சபட்சமாக தொழில்நுட்ப கூறுகளைக் கொண்டு செய்யப்படும் பனியன் தொழிலில் சாயத்திடக் கழிவுகளை என்ன செய்வது என்று தெரியாமல் கொட்டிக் கிடப்பதை அகற்ற அந்நியச் செலவாணி தரும் நகரத்துத் தொழில் நுட்பங்களும், விஞ்ஞான முறைகளும் பயன்படாமல் இருப்பது ஆச்சர்யம் தருகிறது. பனியன் ஏற்றுமதியாளர்கள் அவ்வப்போது திடக்கழிவுகள் குறித்தும் பட்டறைகளை நடத்துகின்றனர். இன்னும் சரியான தொழில் நுட்பம் அவர்களுக்குக் கற்பிக்கப்படவில்லை என்பதைக் குறையாகச் சொல்கின்றனர்.

    பொது நல மனுக்கள், தன்னார்வக் குழுக்களின் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரைகள் திடக்கழிவுகள் பக்கம் நெருங்காமலே வேடிக்கை பார்க்கின்றன. விஞ்ஞான வளர்ச்சிகள், தொழில்நுட்ப அசாத்தியங்கள் என்ற வெள்ளை அறிக்கைகள் இந்த திடக்கழிவுகள் மற்றும் நொய்யலின் சாயக்கழிவுகளைச் சுத்திகரிக்கப் பயன்படாதது பெருத்தக் கேள்விக் குறிகளாகவே உள்ளன.

    தொடர்ந்து ரசாயனக் கலவைகளின் வட்டமாகவே நொய்யலை மாற்றிவிட்டன. நொய்யல் காவேரியாற்றில் கலந்த பின்பு கரூர் போன்ற நகரங்களின் சாயச் சேர்க்கை இன்னும் நதியை ரசாயனப் பாதையாக்கி விட்டது.

    முன்பெல்லாம் ஆடிப்பெருக்கின் போதும், பூப்பறிப்பு நோன்புகளின் போதும் நொய்யல் ஆற்றில் மக்கள் வெள்ளம் கரை புரண்டோடும். நொய்யல் பற்றியும், வெள்ளப் பெருக்கு பற்றியும் உவகையுடன் பல்வேறு நாட்டுப் பாடல்கள் கிளம்பும். இன்று அவையெல்லாம் ஆடியோ கேசட்டுகளில் மட்டுமே அடக்கமாகி விட்டன. ஆடிப் பெருக்குகளில் காவிரித்தாய், நொய்யல் ஆற்றுத் தண்ணீருக்காகக் காத்திருந்து பாடுமாம்:

    "யார் யாரோ வந்தாலும்
    பேரூர் பெரிய மகள்
    நொய்யலைக் காணலியே"

    பிறந்த வீட்டிற்குச் சிக்கல்களுடன் வரும் மகள்களுக்கு தாய் எப்போதும் சொல்லும் அறிவுரை: "எப்ப வந்தாலும் அவரோட வா. தனியா வராதே. இல்லீன்னா வரவே வராதே." இதேபோல் காவிரித்தாயின் இன்றையப் புலம்பல் இப்படியாக இருக்கலாம்:

    "நல்லபடியா வர்றதா இருந்தா வா
    பெரிய மகள் நொய்யலே
    இல்லீன்னா வரவேண்டா"
    நொய்யலின் கூக்குரல் சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் விழாமல் நொய்யல் மறைந்த நதியாகி விட்டது. காவிரித் தாயின் குரல் காதுள்ளவர்களிடம் சென்று நொய்யல்
மகளுக்கும் வெளிச்சம் கிடைக்க வழிகள் தெரிய வாய்ப்புகள் குறைந்துள்ளன.