சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 8 ஆகஸ்ட், 2013

தற்கொலைக் களங்கள்

தற்கொலைக் களங்கள்


சுற்றுச்சூழல் காப்பு பற்றின அக்கறை எந்த வகையிலும் இரு தளங்களைச் சார்ந்திருக்கிறது.
அதை வீட்டிற்குள் இருந்து கொண்டு, வீட்டிலிருந்து ஆரம்பிப்பது என்பது முதன்மை. வீட்டுப் பொருட்களின் உபயோகத்தில் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்பது, வீட்டுச் சூழலில் ஒரு சாதாரண அக்கறையைக் கைக்கொள்வது என்பன ஒரு தளத்தை சார்ந்தன. இன்னொரு தளத்தில் இயக்க ரீதியானச் செயல்பாடும், விழிப்புணர்வும் அடங்குகிறது.

    எல்லா இயக்கங்களும் வெகுஜன ஈடுபாட்டைக் கொண்டிருப்பது அவசியம். ஆரம்பத்தில் தனிமனித, குழு முயற்சிகளாக இவ்வகை இயக்கங்கள் இருப்பது தவிர்க்க இயலாததாகிறது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்த இயக்கங்கள் வெகு அபூர்வமாகக் காணக் கிடைக்கின்றன. தன்னார்வக் குழுக்களைத் தவிர்த்த வெகுஜனத் திரளைக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகள் இவ்வகை சுற்றுச்சூழல் ஈடுபாட்டை மிகவும் குறைவானச் சதவிகிதத்திலேயேக் கைக்கொள்கின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வும், இயக்க ரீதியான நடவடிக்கைகளும் பெரும் நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் எதிராக அமைந்துவிடுகின்றன. இன்றைய அரசியல் கட்சியினர் பெரும்பாலும் தொழிலதிபர்களாகவும், எந்த வகையிலேனும் தொழில்துறை சார்ந்த வியாபாரிகளாகவும் இருப்பதால் சுற்றுச்சூழல் பற்றின இயக்க ரீதியானச் செயல்பாட்டிற்குச் செல்வதில்லை. தொழிற்சங்கத் தலைவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். ஆண்டிற்கு பதினைந்தாயிரம் கோடி ரூபாயை அந்நியச் செலவாணியாகத் தரும் திருப்பூர் நகரின் அரசியல்வாதிகள், தொழிற்சங்கத் தலைவர்களில் கணிசமானோர் பின்னலாடைத் தொழில் சம்பந்தப்பட்டவர்களாய் இருப்பதால் சுற்றுச்சூழல், குழந்தைத் தொழில் எதிர்ப்பு இயக்கங்களில் பங்கு பெறுவது மிகவும் மேலோட்டமானதாக இருக்கிறது. மறுபுறம் சுற்றுச்சூழல் சார்ந்த இயக்கச் செயல்பாடுகள் தொழில் விஞ்ஞான ரீதியான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்றத் தீர்மானத்தை ஏதேனும் வகையில் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கிறார்கள்.

    அரசியல் கட்சிகளில் ஐந்தாண்டு தேர்தல் கால அறிக்கையில் ஓரிருவரிகள் சுற்றுச்சூழல் அக்கறை குறித்து தென்பட்டு மறைந்துவிடும். அவை அந்தந்த அரசியல் கட்கிள் சார்ந்த சில அனுதாபிகளின் சுற்றுச்சூழல் அக்கறையை வெளிக்காட்டிக் கொள்வதோடு சரி. இது குறித்துச் செயல்படும் தன்னார்வக் குழுக்களின் செயல்பாட்டை சுலபமாக உதாசீனப்படுத்தியும் விடுவது தாங்கள் சார்ந்த அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு விசுவாசமானதாக அமைந்து விடுகிறது.

    ஜனநாயக ரீதியாக எந்தவகை உரிமை குறித்தும் குரல் எழுப்ப யாருக்கும் தகுதி உண்டு. ஆனால் டாலர்களும், பவுண்டுகளுமாய் அந்நியச் செலவாணியைச் சம்பாதிக்கிற ஒரே உயர்ந்த பட்சத் தகுதி பல தொழில் அதிபர்களை, சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீது கட்டுப்பாடற்ற விமர்சனங்களைத் தந்துவிடுவது ஆச்சர்யமானது. நொய்யலை மாசுபடுத்தி பணம் சம்பாதித்துத் தரும் அந்நிய செலவாணி குறித்த உரிமை ஏகபோகமானது என்றக் குரலை சமீபத்தில் கேட்க நேர்ந்தது. அதற்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களின் நியாயங்களை மறுப்பது மட்டுமின்றி உரிமைகளைத் தட்டிக் கேட்கிற தன்மையையும் சமீபமாய் இங்கு கேட்டுணர முடிகிறது. இது ஒரு வன்முறையாகவே வளர்ந்து வருகிறது.

    அந்நிய செலவாணி பேராசை திருப்பூர் போன்ற நகரங்களை அந்நிய நாடுகளின் குப்பைக் கூடையாக்கி விட்டது. முறையான வளர்ச்சியில்லாத சுற்றுச்சூழலை அழிக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை உருவாக்கும் மனநிலையைக் கொண்ட புறநகர் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதே சமயம் தெளிவற்றதானத் திட்டங்களுடனான நகர மையங்கள் அதிகரித்து வருகின்றன. நிர்வாகத் தன்மையும், திட்டமிடலும் இல்லாத நகர் விரிவு பொதுமக்களை உளவியல் ரீதியில் சிரமத்திற்குள்ளாக்குகின்றன. நில உரிமையாளர்கள் தங்களின் பண ஆசையின் படி எதையும் செய்யலாம் என்றத் திட்டமிடுதலில் மட்டுமே செயல்படுகிறார்கள். உயிரினத்தின் சூழலை அது தகர்த்து வருவதை அறியாமல் இருக்கிறார்கள்.

    நொய்யலைச் சார்ந்த விவசாய நிலங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்களாக்கப்பட்டு விட்டன. எதிர்காலத் தொழிற்சாலைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டு வானம் பார்க்கின்றன. பருவ மழை என்பது தகர்ந்து போய், எதேச்சையான மழைப்பொழிவில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிற போதுதான் சாயக்கழிவுகள் அடித்துச் செல்லப்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. விவசாய நீர்ப்பாசனத்திற்காகக் கட்டப்பட்ட பல அணைகள் சாயக்கழிவுகளின் தேக்கத்திற்கென்றே மாறிவிட்டன.

    எழுநூறு அடிவரை, ஆயிரம் அடிவரைக்கும் துளையிட்டு நீர் பெறவே இயலாதபடி நான் வாழும் புறநகர் உள்ளது. லாரி மூலம் தருவித்துக் கொள்ளப்படும் தண்ணீர் ஒரு குடத்திற்கு ஒரு ரூபாய் என்றக் கணக்கிற்கு வந்து விடுகிறது. சாயம் தென்படாத நீர் கிடைக்கிற போது ஆசுவாசம் பிறந்து விடுகிறது. சுலபமாகப் பரவும் நோய்கள் மருத்துவமனைகளுக்கு கூட்டத்தைச் சேர்த்துவிடுகிறது. உலக வங்கியின் நிர்பந்தம், உதவியுடன் நவீனக் கட்டணக் கழிப்பிடங்கள் பெருகிவிட்டன. ஆனால் அவற்றைப் பராமரிப்போரின் அலட்சியமான மனப்போக்கு சகிக்கவியலாத கழிவறைக்குள் தினவாழ்க்கை ஆரம்பமாகிற அவலத்தைத் தந்து விடுகிறது.

    சிறு செடிகளும், தரைபாவின மர இனைங்களும் தென்படும் புறநகர் பகுதிகளில் வீசியெறியப்படும், காற்றில் அலைக்கழிந்து சிதறும் பிளாஸ்டிக் உறைகள் அவற்றின் மீது படிந்து நிரந்தரமாகி விடுகின்றன. வர்ண பிளாஸ்டிக் உறைகள் விரைவில் வெளுத்து விடுகின்றன. விடியற்காலை நேரங்களில் அவை வெள்ளைக் கொக்குகள், வெள்ளை நிறப் பறவைகள் உட்கார்ந்திருப்பதைப் போலவும் தோற்றம் தருகின்றன. சூரிய கிரணங்களின் பரப்பில் வெளிச்சம் பரவுகிறபோது அவை பிளாஸ்டிக் உறைகள் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுறுத்தி குப்புறத் தள்ளி விடுகின்றன.

    திட்டமிட்ட பணக்கார நகரப் பகுதிகள் நகரங்களின் ஏதேனும் மூலையில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் ஏழைகளுக்கு திட்டமிடாத நகரம் விரிந்து கொண்டே இருக்கிறது. ஏழைகளுக்காக உருவாக்கப்படும் உயிரற்றத் திட்டங்கள் அவர்களை வீடுகளில் இருந்து துரத்திவிடுகின்றன. இந்த உயிரற்றத் திட்டங்களில் தங்களை மூழ்கடித்து வருபவர்களில் தொழில் அதிபர்கள் சேர்கிறார்கள். மேற்கத்திய நாடகள் தங்களின் ஏற்றுமதிக் கொள்கைகளின் சரத்துகளில் வைக்கிற திட்டங்கள் அவர்களைப் பயமுறுத்துகின்றன.

    அபரிமிதமான லாபத்தில் ஒரு சிறு சதவீதத்தை சுற்றுச்சூழல் காப்பிற்கு செலவழிக்க வேண்டியக் கட்டாயம் மூச்சுத் திணற வைக்கிறது. வேறு வழியில்லை என்று கழுத்து நெரிபடுகிற போது அரசின் உதவித் திட்டங்களுடன் செயல்படத் துவங்குகிறார்கள். சாயக்கழிவுகளை வெளியேற்றும் திட்டங்களுக்கு அவர்கள் வெவ்வேறு தனியார் தொழில் நுட்ப வல்லுனர்களை அணுகுகிறார்கள். அவர்கள் தரும் திட்டங்களும், செலவுகளும் கணக்கில் கொண்டு குறைந்தபட்சச் செலவுத் திட்டங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். அத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர ஓரிரு வருடங்கள் ஆகிறபோது, அத்திட்ட அமைப்புகள் தொழில் நுட்ப ரீதியில் காலாவதியாகி விடுகின்றன. இன்னும் பெருத்த செலவிற்கு அடிகோலிடுகின்றன. பின்னலாடை ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் முந்தினத் தலைமுறையினருக்கு இது அதீத செலவாகவும் பட்டுவிடுகிறது. பின்னலாடை தொழில்நுட்பப் படிப்பு சார்ந்த ஒரு புதியத் தலைமுறை முழுமையாக உருவாக இங்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கலாம். வெறும் உழைப்பை மட்டும் மூலதனமாகக் கொண்டு வளர்ந்த ஒரு பணக்காரத் தலைமுறையினருக்கு சமீபத்திய ஏற்றுமதிக் கொள்கையில் சுற்றுச்சூழல், தொழிலாளர் நலன், குழந்தைத் தொழில் குறித்தவை அதிர்ச்சி தருவதில் ஆச்சர்யமில்லை.

    உயர்ந்தத் தொழில்நுட்ப பணிகளைக் கொண்ட அதிகபட்சமான பின்னலாடையைத் தயாரிக்கிற நோக்கம் கொண்டவர்கள் சுற்றுச்சூழல், தொழிலாளர் வாழ்சூழல் நிலையை மனதில் கொண்டு தயாரிப்பு நேர்த்தியில் சமீபத்தில் அறிவுறுத்தப்படுகிறார்கள். இது தவறும்போது ஏற்றுமதியாளர்கள் என்ற ஸ்தானத்தை அவர்கள் ஏகதேசம் இழக்க வேண்டியிருக்கும். சுற்றுச்சூழல் மாசடையாத உற்பத்திப் பொருளை மனதில் கொண்டு செயல்படுகிறபோது சுற்றுச்சூழல் பற்றின அக்கறை அவர்களுள் வந்துவிடுகிறது. இந்த சமீபத்திய அக்கறை கட்டாயம் என்ற ரீதியில்தான் வந்து சேர்ந்திருக்கிறது. குறிப்பிட்ட கால அளவில் பொருள் உற்பத்தி என்பதை தினசரி வாழ்க்கையின் நெடுநேர உடல் உழைப்பால் சாத்யம் என்று காட்டிவிட்டு, தரம் என்பதை இரண்டாம், மூன்றாம் பட்சமாக்கியவர்கள் தனித்து விடப்படுகிறார்கள். நெடுநேர உழைப்பு 45 வயதிற்கு மேல் ஆண்களை நிரந்தர ஓய்வாளர்களாக்கியிருக்கிறது.

    அரசாங்க உதவியுடன் நிறுவப்படம் சாயக்கழிவு நீக்கும் நிலையங்கள் முறையாக வடிவமைக்கப்படுவதில்லை. சமீபத்தில் திருப்பூரில் மத்திய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தினர் கண்டதொன்று அதிர வைத்தது. பல்வேறு சாயப் பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கவென்று கொண்டு வரப்படும் சாய நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாகச் செலுத்தப்படாமல், நிலத்தடியில் மறைமுகமாகப் புதைக்கப்பட்ட குழாய்கள் மூலம் ஒரு ஏரியில் கலப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் இருக்கையில் அதை வெற்றுப் பார்வைக்கென உருவாக்கியிருப்பது தெரிய வந்தது. இது சுற்றுச்சூழல் சார்ந்தவர்களின் அறியாமையோ, அலட்சியமோ, சட்டங்களின் இயலாமையோ அல்லது இவை அனைத்தும் சேர்ந்த கூட்டு எண்ணத்தின் வெற்றிடமா என்பது அதிர்ச்சி தருகிறது.

    சுற்றுச்சூழல் சார்ந்த பெரும்பான்மையானச் சட்டங்கள் சுற்றுச்சூழலின் மோசமான விளைவுகளைப் பற்றி மனதில் கொள்ளாமல் இயற்றப்பட்டதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் நீர்த்துப் போகும் தன்மையும் யாரையும் எளிதில் தப்பிக்க வைத்து விடுகிறது. ஒவ்வொருவரின் தேவையையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை இயற்கை தந்தாலும் அதை மீறி பேராசை கொள்ளும் மனிதமனம் நச்சுக்காற்றால் மூச்சு நெரிபடுவதை உணராமல் இருப்பது வினோதமானது.

    மனிதன் மற்ற உயிரினங்களுக்கு ஈடான வகையில் தன்னை எந்த நிலைக்கும் மாற்றிக் கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவனாகவும், சுற்றி சுற்றி உள்ள சுற்றுச்சூழலை மாற்றக்கூடிய நுண்ணறிவு கொண்டவனாகவும் இருந்த போதிலும் பெட்ரோல் புகையும், சாய நெடியும், உக்கிரமான வெயிலும் அவனின் சமநிலையைக் குலைக்கிறதில் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் அவனின் சுயசிந்தனைக்கும், பகுத்தறிவிற்கும் இடமில்லாமல் மூளையை ஸ்தம்பிக்கச் செய்யும் புறச்சூழல்கள் சுலபமாக உருவாகி வருகின்றன.

    சிறு குன்றுகளும், புல்வெளிகளும் கோடிக்கணக்கான ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட தொழிலதிபர் வீடுகளிலும், பூங்காக்கள் என்ற பெயரிலான உயர்ந்த நுழைவுக் கட்டண இடங்களிலும் காணக் கிடைக்கின்றன. குன்றுகளையும், புல்வெளிகளையும், ஏரிகளையும் முழுதும் தகர்த்து விட்டு அவற்றின் மாயத்தோற்றங்களை அங்கங்கே நிறுவுகிறார்கள்.

    இங்கு காதல் தோல்வியால் சாயக்கழிவுக் குட்டையொன்றில் சமீபத்தில் ஓர் இளைஞன் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டான். பெரும் தொழில் நகரங்கள் சாயக்கழிவுக் குட்டைகளாய், தற்கொலைக் களங்களாக மாறி வருகின்றன.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன் 
4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன் எழுதிய மேலும் சில சமூகப்பார்வை கொண்ட கட்டுரைகள் 

பிடித்திருக்கா? பகிருங்கள்!