சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
திங்கள், 9 ஜனவரி, 2023
சுப்ரபாரதி மணியன் நேர்காணல்
கேள்விகள் மிலோ ராட் பாவிச் அவர்களுக்கானது...
( செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் அவர்களுடன் நடைபெற்ற ஒரு நேர்காணல் கேள்விகளை எனக்கானதாக எடுத்துக்கொண்டு இப்படி பதில் சொல்லி இருக்கிறேன் )
* உங்களுடைய செயல்கள், எதிர்வினைகள் எல்லாம் ஒரு குழந்தையினுடையது போலவே இருந்தன என்பதை கவனித்திருக்கிறேன் மிக முக்கியமான எழுத்தாளர் நீங்கள் என்ற உணர்வையே அவை தரவில்லை
உண்மைதான் நான் பெரும்பாலும் சாமானிய மனிதனாகவே இருக்கவும், வழி காட்டவும் விரும்புகிறேன் அப்படித்தான் நான் குழந்தைகளுடன் கூட பழகுகிறேன். எங்கள் வீதியில் உள்ள குழந்தைகளை என் வீட்டிற்கு வாரம் ஒரு முறை அழைத்து கதை சொல்லவும், ,ஓவியங்கள் வரையவும், சிற்றுண்டி சாப்பிடவும் என்று இப்பொழுது பொழுதைக் கழிப்பது உட்பட பலவற்றை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னை மறப்பதற்கு வேறு ஒரு உலகத்தை காட்டுவதற்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் அப்படியே தான் நானும் இருக்க விரும்புகிறேன்.
* நீங்கள் ஏற்கனவே எழுதிய புத்தகங்கள் நீங்கள் மேலும் தொடர்ந்து எழுவதை தடுக்கின்றனவா
அப்படி என்றும் ஒன்றும் இல்லை. ஆனால் பழைய புத்தகத்திலிருந்து மீண்டு நான் வெளிவர விரும்புகிறேன் திருப்பூரை பற்றி எழுதுகிற போது என் பழைய புத்தகங்கள் எப்படியோ இடைசஞ்சல்கள் ஆகி விடுகின்றன அவற்றை தான் தவிர்க்கவே விரும்புகிறேன் அவை என்னை தொடர்ந்து வருகின்றன. எழுதத் தடுப்பதில்லை ஆனால் வேறு களத்திற்கு போக தூண்டுகிறது
* ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கமும் முடிவும் இருக்கும்போது செவ்வியில் வழக்கில் உள்ள தொடக்கம் மற்றும் முடிவு பற்றிய கருத்தாக்கத்தை ஒடுக்குகிறோமோ, கைவிடுகிறோமா
எல்லா படைப்புக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட தொடக்கமோ முடிவோ இருக்கும். ஆனால் அதை எப்படி தொடங்க வேண்டும் அது எப்படி முடிய வேண்டும் என்பதற்கான சுதந்திரங்கள் அந்த படைப்பு மையத்தில் தான் இருக்கின்றது
*ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரே முடிவு தான் சாத்தியம் என நம்புகிறீர்களா?
அப்படி எதுவும் இல்லை தொடங்கும் போது நான் வேறொரு மனிதன். முடிக்கும் போது வேறொரு மனிதனாக இருக்கிறபோது எப்படி ஒரே முடிவு சாதகமானதாக இருக்கும் .
* இருப்பினும் சொல்கிறோம் பிறப்பிலிருந்து தொடங்கும் எதுவும் மரணத்தில் முடிகிறது என்று. ஆமாம் எல்லாம் பிறப்பிலிருந்து தொடங்கி மரணத்தில் முடிகிறதா
ஒரு வழிப்பாதை தான் ஆனால் அதையே நாம் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்க முடியாது. மரணம் இல்லாத ஒரு இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தான் நாம் நினைக்க வேண்டி இருக்கிறது.
• நம் வாழ்வின் கசப்பான நிதர்சனங்களை ஏற்று போராடும் ஆயுதமாக பேண்டஸியை கூறலாமா
பேண்டஸி என்பது ஒருவகை தப்பித்தல் தான். அப்படியும் கூறிக் கொள்ளலாம்
* உங்கள் பார்வையில் ஒருவர் உன்னதத்தை அடைய எந்த உண்மையை நோக்கி பயணப்பட வேண்டும்
எதார்த்தமாக இருப்பது ,மனசாட்சியுடன் இருப்பது, உணர்வுடன் இருப்பது ஆகியவை உண்மையை நோக்கிய பயணத்தில் சரியாக இருக்கும்.
* பயம் நம்மை படைப்பாற்றலை நோக்கி இட்டு செல்கிறதா
பதட்டம் இட்டு செல்கிறது என்று சொல்லலாம். பதட்டம் பயத்தை கொண்டு வந்து விடுகிறது. அதனால் பயமோ பதட்டமோ நிலை கொள்ளாமையும் படைப்பாற்றலை நோக்கி நகர்த்துகிறது என்று சொல்லலாம்
* உங்கள் மேல் ஆதிக்கம் செலுத்தும் பயம் ஏதாவது இருக்கிறதா
நம்மை பற்றி ஏதாவது அவதூறுகள் வந்து விடுமோ. அப்படி நம்முடைய செயலும் சொல்லோ அமைந்து விடக்கூடாது என்ற பயம் தான்
• நீங்கள் வியந்த முதல் எழுத்தாளரை உங்களுக்கு நினைவு இருக்கிறதா
•
நான் பார்த்து உயர்ந்த முதல் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவருடைய உருவம், மேடையில் அவர் பேசுகிற தோரணை இதுதான் அவரை நினைக்க வைத்தது
* உங்கள் எழுத்து நடைக்கு இந்த வாய்வழி பாரம்பரியம் எந்த அளவுக்கு முக்கியமாக அமைந்தது
பெரும்பாலும் வாய்வழி பாரம்பரியம் மற்றும் சொல்லாடல்களில் பாரம்பரியம் என்பது என்னை பொறுத்தவரையில் பலவீனமாக தான் இருக்கிறது. என் கொங்கு பகுதி பேச்சையே நான் ஒழுங்காக உருவாக்கிக் கொண்டு பதிவு செய்யவில்லை என்று தான் நினைக்கிறேன்
* உங்களைத் தூங்க வைக்கும் அளவிற்கு எழுதும் எழுத்தாளர்கள் யாரேனும் இருக்கிறார்களா இருக்கிறார்கள்.
வாக்கியங்கள் புரியாமல் அவற்றின் ஒருங்கிணைப்பு ஒரு அர்த்தத்திற்கு கொண்டு செல்லாமல் எழுதும் நவீன எழுத்தாளர்களை வாசிக்க முயன்று அப்படித்தான் தூக்கத்தைக்
கெடுத்துக் கொண்டிருக்கிறேன்.
*ஒரு எழுத்து பிரதி எப்போது ஒரு வாசகனை அலுப்படையச் செய்கிறது
வாசகன் அந்த எழுத்தாளருடைய பிரதி சார்ந்த அனுபவங்களை எப்போது தானும் கண்டிருக்க வேண்டும் அல்லது அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டும் அல்லது அந்த தளத்தில் அவன் சென்று இயங்குவதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் அப்படி இருக்கிற போது பிரதி வாசகனை அலுப்படைய வைக்காது.
* அழகை பார்த்து எப்போதாவது அலுப்படைந்திருக்கிறீர்களா?
இல்லை. அழகு என்பது புத்துணர்ச்சி ஊட்டுவது. அது ரசித்து மறந்து போவதல்ல. திரும்பத் திரும்ப மனதில் வந்து கொண்டிருப்பது
* நீங்கள் எழுதும் போது வாசகனைப் பற்றி நினைப்பதுண்டா
நிச்சயமாக இல்லை. என் எழுத்தில் என் அனுபவங்களும் உரையும் மொழியும் தான் முதன்மை படுகிறது. யாரை நோக்கி எழுதப்படுகிறது என்பதல்ல.
* ஒருவர் எந்த காரியம் செய்தாலும் அதில் அவரை சிறப்பானவராக எது ஆக்குகிறது என்பதை நீங்கள் கண்டுபிடித்து இருக்கிறீர்களா?
தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பது மனசாட்சியுடன் இருப்பது உணர்வு ரீதியாக இயங்குவது இதுதான் சிறப்பாக்கும் என்று நினைக்கிறேன்
• உங்கள் தேசத்தை பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்
பல நாடுகளை சுற்றி பார்த்தவன் என்ற முறையில் நம் நாடும் மிக உயர்ந்த நாடுதான் இயற்கை வளமும் அழவும் கொண்டது தான். ஆனால ஊழலும் அதிகாரமும் பல்வேறு தளங்களில் செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கிறது இதெல்லாம் இல்லாமல் நியாயமான வாழ்க்கையோடு கூடிய அணுகு முறையில் நம் நாட்டைப் போல அழகான நாடு வேறு இல்லை என்று தான் நினைக்கிறேன்
• ஒரு பெரும் எழுத்தாளர் பிறக்கிறானா அல்லது உருவாக்கப்படுகிறானா நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
•
எழுத்தாளன் சூழலால் உருவாக்கப்படுகிறாள் அவன் பிறப்பதாக இருந்தால் அவன் யாரிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று தெரியவில்லை
* ஒருவர் உங்களுடைய நாவல்களை படிக்கும்போது அவை ஒழுங்கமைக்கப்பட்ட மனம் கொண்ட ஒரு கணிதவியலாளரின் படைப்புகள் போன்ற எண்ணத்தை தோற்றுவிக்கின்றதே
இருக்கலாம். காரணம் நான் அடிப்படையில் ஒரு கணிதவியல் மாணவன். முதுகலை கணிதம் படித்தவன். ஆகவே அப்படி ஒரு தோற்றம் வந்துவிடலாம்.
* பொதுவாக ஒரு எழுத்தாளர் என்ன சொல்கிறார், என்ன செய்கிறார் அவருடைய கடமை என்ன. உலகின் நிலவும் குழப்பங்களுக்கு ஒரு ஒழுங்கமைப்பை எந்த வகையிலும் அவர் பங்களிக்கிறாரா
எழுத்தாளன் தான் வாழும் காலத்தில் மனசாட்சியாக எழுதுகிறார். அதன் மூலமாக நல்ல சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறார். சமூகத்தில் இருக்கிற ஒழுங்கமைப்பு என்பதில் அவர் அக்கறை கொண்டு செயல்படுகிறார். அந்த வகையில் தான் அவரை எழுத்தின் பயன்பாடு இருக்கிறது.
* ஒரு நாவலை எழுதி முடிக்கு முன்பே அந்த நாவலைத் தொடர வேண்டாம் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா
அப்படி பல சமயங்களில் அலுப்பு ஏற்பட்டிருக்கிறது ஆனால் அதை முடிப்பதில் தான் சவால் இருக்கிறது என்று தொடர் வேண்டி இருக்கிறது
* கனவுகள் காண இயலாத வாழ்க்கையை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியுமா
அப்படி என்றால் வாழ்க்கை இல்லாமல் தான்
போகும். கனவு என்பது ஓரிரு விஷயங்கள் பற்றிய ஆசையாக இருக்கிறது ஆனால் நிஜமான கனவாக தூக்கத்தில் வந்து போகவே இந்த அர்த்தத்தில் இருப்பதில்லை
• கனவு காணுதல் வாழ்க்கைக்கு அவசியமா தேவை
•
தேக்கத்திலிருந்து விடுபட கனவுகள் காண்பது தேவையாக இருக்கிறது அல்லது கனவில் இருந்து ஓடுவது தேவையாக இருக்கிறது. கனவில் இருந்து இன்னொரு கனவுக்கு ஓடுவது. பிறகு நிஜத்திற்கும்.
• நமது இருப்பின் காரணம் என்ன என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா
•
நம் இருப்பின் காரணம் இயற்கையாகவே நாம் பிறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்பதால் தான். அந்த இருப்பை நியாயப்படுத்த நாம் ஏதாவது செய்ய வேண்டி இருக்கிறது. அந்த வகையில் நாம் எதுவும் செய்கிறோம். நான் கொஞ்சம் எழுதுகிறேன்.
* உங்களுடைய பார்வையில் ஒரு மாபெரும் எழுத்து என்பது ஒரு மாபெரும் ஆன்மாவால் அல்லது ஒரு மாபெரும் மனத்தால் மட்டுமே எழுதப்படக்கூடியதா
அப்படி மாபெரும் ஆன்மா, மாபெரும் மனிதன் என்று எதுவுமே இல்லை. நியாயத்துடன் எதார்த்தத்துடன் அவன் பதிவு விட போது அது மாபெரும் எழுத்தாக அமைந்து விடுகிறது
* உங்கள் கூற்றின்படி ஒரு திறமையான எழுத்தாளரின் படைப்பை படித்து புரிந்து கொள்ள ஒரு வாசகன் திறமை மிக்கவனாக இருக்க வேண்டுமா
ஆமாம் திறமை என்பது வாசிப்பு திறமை தான். வேறு மொழி சார்ந்த அல்லது அறிவு சார்ந்த திறமை என்று எதுவும் தேவையில்லை
.
* திறமை என்பதை நீங்கள் வரையறுத்துக் கூற முடியுமா.
அதன் அளவுகோல் என்னவென்று நான் சொன்னது போல வாசிப்பும் தொடர்ந்து வாழ்க்கையை கவனித்துக் கொண்டிருப்பதும் அறிவு சார்ந்த தேடல்களும் என்று இந்த அளவுகோல்களை கொள்ளலாம்
* எடுத்துருவில் வாசிப்போரா அல்லது செவி வழி கேட்க விரும்புவோரா யாரை நோக்கி உங்கள் படைப்புகளை செலுத்துகிறீர்கள்
எழுத்தாளர் என்ற வகையில் என் எழுத்துக்களை வாசிப்பவரை நான் விரும்புகிறேன். ஆனால் செவி வழியாக தரும்போது அதை இன்னும் சரியான பதிவாக மனதில் இருந்து கொள்ளும்.
* ஒரு பெரும் கிரேக்க எழுத்தாளர் ஒருமுறை சொன்னார் நான் எனது கதையின் முடிவை கண்டறிய வேண்டும் அது நடந்து விட்டால் மற்றவை தாமாகவே ஒழுங்கமைந்து விடும் என்று.
நான் அப்படி நினைக்கவில்லை நான் கதையை முடிவு கண்டடையாமல் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். சூழலும் அறிவும் நீள்கிற சம்பவங்களும் சுற்றி இருப்பவையும் என்னை முடிவை கண்டறிய வைக்கின்றன
* நீங்கள் நாவல் எழுதும்போது முந்தைய நாள் நிறுத்தி இடத்திலிருந்து தான் துவங்குவீர்களா.
ஆமாம் அப்படித்தான் ஒரு தொடர்ச்சியை எதிர்பார்க்க முடியும் வேறு ஒரு இடத்தில இருந்து ஆரம்பித்து கொண்டு போய் எழுதுவது அதை வேறொரு வடிவ நாவலாக மாற்றலாம் ஆனால் அதற்கான வாசல்கள் எனக்கு குறைவாக இருப்பதாக நினைக்கிறேன்
* ஒரு புத்தகம் சுவாசிக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது?
அது எழுதுபவன் அனுபவிப்போடு செய்திருக்கலாம். ஆனால் வாசகன் அதை எப்படியோ படித்து முடிகிறபோது ஒரு புத்தகம் இயல்பாக இருக்கிறது உயிரோடு இருக்கிறது சுவாசிக்கிறது என்று சொல்லலாம்.
* திறமையற்ற வாசகர்கள் படிக்கும் போது ஒரு மாபெரும் எழுத்தாளர் காணாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளதா
இருக்கிறது. திறமையற்ற வாசகர் அதை புரிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கும் போது அவன் வாசிப்பதில் அர்த்தமில்லை
* இந்த புதிய தலைமுறை எந்த வகையில் வேறுபட்டது
விதவிதமான எழுத்துக்களைத் தருகிறார்கள். வெவ்வேறு வகையான துறை சார்ந்த எழுத்துக்கள் வருகின்றன மலைக்க வைக்கும், பிரமிக்க வைக்கும் அனுபவங்களை எல்லாம் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.
* தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் வளர்ச்சியும் புத்தகங்களின் வீழ்ச்சியும் ஒரே நேரத்தில் நிகழ்ந்துள்ளதா
அப்படித்தான் சொல்லலாம் ஆனால் புத்தகங்கள் வீழ்ச்சி அடையவில்லை என்று திரும்பத் திரும்ப நாம் உரத்து சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் ஏனென்றால் நாம் புத்தகங்கள் மத்தியில் இருக்கிறோம். அவற்றின் மத்தியில் இருந்து கொண்டு அவற்றை நாம் பழிக்க முடியாது.
* உங்களுக்கு தீர்வு கிடைத்ததா
என் படைப்பு தீர்வை நோக்கி நகர்கிறது. தீர்வை சமூகம் வழங்குகிறது அல்லது அரசியல்வாதி வழங்குகிறார் அரசியல்வாதி வழங்க நெடுங்காலம் தான் எடுத்துக் கொள்கிறது
.
* தற்போது உருமாற்றம் அடைந்து வரும் கலை வடிவங்கள் எவை
கலை வடிவங்கள் தன்னைத்தானே மீறுவதும் உருமாற்றம் அடைவதும் சாதாரணம்தான்.. இலக்கியம் முதல் திரைப்படம் வரைக்கும் எல்லாம் வடிவளவில் உருமாற்றங்களை தொடர்ந்து பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. தொடர்ந்து அவை தங்களுடைய வடிவங்களை மாற்றிக் கொள்ளும்
( உன்னதம் ஜூலை 2017 இல் வெளிவந்த செர்பிய எழுத்தாளர் மிலோ ராட் பாவிச் சிறப்பதழில் அவருக்கு தொடுக்கப்பட்ட கேள்விகளை வைத்துக்கொண்டு நான் பதில் கொடுத்திருக்கிறேன்)