திக்குத் தெரியாத உலகில்-- சுப்ரபாரதிமணியன்
ஒரு கிராம் வைரஸ் படுத்தும் பாடு :
” பழைய வாஸ்துதா இது. ஆனால் பாலோ
பண்ணறது நல்லது ”
குவிந்து கிடந்த செய்தித் தாள்களை பார்த்து
நண்பர் சொன்னார்:
“ இதிலே இருக்கற கொலை, கொள்ளை , கற்பழிப்பு ,
மோசமானச் செய்திகள் வீட்லே தங்கறது நல்லா
இல்லே.இதுகளெத் தூக்கிப் போட்டிருங்க. இதிலெ இருக்கற நெகட்டிவ் விசயங்கள்
நெகட்டிவ் வைப்பரேசன் தரும். நமக்குச் சிரமமாகும். இதுவும் கழிவுதான். மனக்குப்பையாகும் ”
தினசரிகளை, செய்தித்தாள்களை குப்பையாகப் பார்க்க மனசு சற்றே
யோசிக்கும். தினசரி ...அதனுடன் நெருக்கமாக உறவாடிக் கொண்டிருக்கிறோம். சேகரித்து
வைக்கிறோம். முக்கிய செய்திகளை நறுக்கி பத்திரப்படுத்துகிறோம். அவை பழுப்பாகிப்
போனாலும் எடுத்துத் தூரப்போடுவதில்லை. கோப்பாக்கி பைண்ட் செய்து வைத்துக்
கொள்கிறோம்.பாதுகாப்பாகவே வைக்க எண்ணுகிறோம். இவற்றை குப்பை , கழிவு என்ற ரீதியில்
பார்க்க மனம் ஏனோ சில சமயங்களில் தடுமாறும்.
வீட்டில் இருக்கும் மின்கழிவுகளை சுலபமாக தள்ளி விடக்கூட மனம் ஒப்புவதில்லை. பழைய
கைபேசிகள் ஞாபகார்த்தமாக இருக்கட்டுமென்று
பாதுகாத்து வைக்கிறோம். பயன்படுத்திய பேட்ட்ரிகள், பிரிண்டர்கள் (
எப்பவாச்சும் எங்காச்சும் பயன்படும். ஏதாச்சும் வெலைக்குப் போகாமியாப் போகுது
என்று ) சில வருடங்கள் பாதுகாப்பிலேயே வைக்கிறோம்.
வீட்டினை சுத்தம் செய்யும் எந்த பெண் மணியும் வீட்டில் இருக்கும் மின் குப்பைகளை உடனே அடையாளம் கண்டு சொல்லி விடுவார். வெள்ளையடிப்பு, வர்ணமடிப்பு, சுத்தமாக்கும் போது இவையெல்லாம் குவிந்து கொண்டிருப்பது தொடர்ந்து உறுத்தும். தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதனப் பெட்டி, துவைக்கும் எந்திரம், கணிணி, கைபேசி, மிக்ஸி, மைக்ரோ ஓவன், டி.வி.டி, மியூசிக் பிளேயர், குளிர்சாதனப் பெட்டிகள், கேமிரா, ரீபில் பேனாக்கள், நாற்காலிகள், பென்டிரைவர்கள், கைக்கெடிகாரங்கள் என்று இவையெல்லாம் பழசாகிற போது குவிந்து கிடக்கும்.
வழக்கமாய் பாலிதீன் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், உணவுப் பொருட்களின் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் போன்று இப்போது மின் பொருட்களின் கழிவுகளும் சேர்ந்து விட்டன. இவ்வகைக் கழிவுகள் இந்தியாவின் பெரிய நகரங்களில் மட்டும் 5 கோடி டன் எடையளவு சேருகின்றன.
இப்போதெல்லாம் எல்லா வீடுகளிலும் சீனப் பொருட்கள் ஏதாவது இருப்பதை சுலபமாகக் காணலாம். சீனா, தாய்லாந்து நாட்டிலிருந்து மலிவான மின்னணுப் பொருட்கள் இங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. குறைந்த காலத்தில் அவை மின் கழிவுகளாகி விடுகின்றன.
இவற்றின் தரம் பற்றியோ, நீடித்த உழைப்பு பற்றியோ எதுவும் கவலைப்படுவதில்லை. விலை மலிவு என்பது முக்கிய காரணம். "இந்த வெலைக்கு நம்ம ஊர் சரக்கு கெடைக்காது. கேரண்டி இல்லை. ரொம்பநாள் வந்தா உங்க லக்" என்று அறிவுறுத்தப்பட்டு விற்கப்படுபவை இவை. வெகு சீக்கிரம் அதை வாங்கும் நமக்கு 'லக்' இல்லாமல் போகவும், அந்தப் பொருட்கள் 'லக்' இல்லாதவையாக மாறி மின் குப்பைகள் என்ற முத்திரைகளுடன் வீட்டின் மூலையில் கிடக்க ஆரம்பிக்கின்றன.
இவை மறுசுழற்சிக்கு கொண்டு செல்லப்படுவது வெகு அபூர்வம் 5% மறு சுழற்சிக்கு போவதாகச் சொல்லலாம். மற்றவை மற்ற குப்பைகளுடன் சேர்ந்து எங்காவது மண்ணுள் புதையுண்டு போகின்றன.
பாதரசத்தின் உற்பத்தியில் பாதி அளவு மின்னணு பொருட்களின் தயாரிப்பிற்கு பயன்படுகிறது. உதாரணமாக தொலைக்காட்சி பட டியூப்கள், ஒளி தரும் விளக்குகள், கைபேசிகள், மின் கலங்கள், வெப்பக்
கட்டுப்பாட்டுக் கருவிகளின் பயன்பாட்டிலும் தயாரிப்பிலும் பாதரசம் பயன்படுகிறது.
பாதரசம் நிலத்தடி நீரில் கலந்து குடிநீராக சுலபமாக வீட்டுக்குள் வந்து சேர்ந்து விடுகிறது. இரத்தத்தில் சிறுகச் சிறுக சேர்கிறது. மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றை மெல்ல மெல்ல பாதிக்கும். பாதரசம் மனிதனின் நினைவுகளை பாதிப்படையச் செய்கிறது. கருவுருதல், இனப் பெருக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
காரீயம், குரோமியம் போன்ற வேதியப் பொருட்கள் கணிணியின் பல பாகங்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கணிணி தயாரிப்பில் 10 கிலோ பிளாஸ்டிக் பயன்படுகிறது. காரியமோ, குரோமியமோ, பிளாஸ்டிக்கோ எரிக்கப்படுகிற போதும், அவை கழிவாகத் தள்ளப்படும் போதும் நரம்பு மண்டல பாதிப்பு, சிறுநீரக இனப் பெருக்க உறுப்புகளை பாதிப்பதும் சாதாரணமாக இருக்கிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகள், சௌதி அரேபியா, மலேசியா போன்ற நாடுகள் அங்கு சேர்க்கப்படும் மின் குப்பையை அவர்கள் நாட்டில் அழிப்பதில்லை. அது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் என்று சீனாவுக்கும், இந்தியாவிற்கும் மறு சுழற்சிக்காக அனுப்புகின்றவை. இங்கு குறைந்த செலவில் மறு சுழற்சியில் புது பரிமாணம் பெற்று அந்த நாடுகளுக்குச் செல்கின்றன. மறு சுழற்சி என்பது இங்கு சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.
நம் நாட்டின் பெரு நகரங்களின் மின் குப்பையிலிருந்து மின் சாதனங்களின் உதிரி பாகங்கள் குறைந்த விலையில் இங்கு விற்கப்படுகின்றன. சிறு வியாபாரிகள் உதிரி பாகங்களை வாங்கி குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கின்றனர். இவற்றின் தயாரிப்பிலும், பயன்பாட்டிலும் வெளிப்படும் கதிர் வீச்சு குழந்தைகளின் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும் தன்மை கொண்டது.
இவ்வகை குப்பையை அதிக அளவில் வெளித்தள்ளும் நாட்டில் முதன்மையானது அமெரிக்கா. அவற்றை அமெரிக்கா சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்துவிட்டு தன் நாட்டை சுற்றுச்சூழல் பாதிப்பின்றி சாதாரணமாக வைத்துக் கொள்ள முயல்கிறது. யாராவது உதவி என்று கேட்டுவிட்டால் போதும் அங்கிருந்து இலவசமாக கணிணிகள் தருகிறோம் என்று அனுப்பும் போது இவையும் சேர்த்தே அனுப்பப்படுகிறது. துறைமுகங்களில் பல கன்டெய்னர்களில் இவ்வகை கழிவுகளோடு உதவி கணிணிகள் நிறைய இறங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைத் தவிர நம் கடலோரப் பகுதிகளில் இவ்வகைக் குப்பையைக் கொட்டிச் செல்வதற்கும் கப்பல் திரிவதுண்டு.
சாதாரணமாக நம் வீட்டில் பயன்பtututuத்தி
தூக்கி எறியப்படும் மின் கலத்தை (பேட்டரி) தூக்கி குப்பையில் போடுகிறோம். மின்கலத்தில் உள்ள உலோகத் துகள் நிலத்திற்குள் சுலபமாக ஊடுருவும் தன்மை கொண்டது. நீரை சுலபமாக மாசுபடுத்துகிறது. அவை குப்பைகளில் போட்டு எரிக்கப்படுவதால் காற்று மாசுபட்டு தீங்கிழைக்கிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய யூனியன் திடக்கழிவு சம்பந்தமான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. இவை எங்கோ உற்பத்தி செய்யப்படுகிறதோ அங்கேதான் அழிக்கவும், மறு சுழற்சி செய்யவும் வேண்டும் என்று அச்சட்டம் வலியுறுத்துகிறது, ஆனால் நடைமுறையில் இதற்காய் வேறு நாடுகளை தேடி அவற்றை குப்பைக் கூடையாக்கி விட்டனர். இந்தியாவிலும் உச்ச நீதிமன்றம் இது சம்பந்தமாக ஒரு உத்தரவு போட்டும் நடைமுறைத் திட்டங்கள் இல்லாமல் இருக்கிறது. பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இச்சட்டங்கள் வழி வகுக்குகின்றன. ஆனால் பெரிய பாதிப்பும் விழிப்புணர்வும் பொது மக்களிடம் இது பற்றி இல்லாமலிருக்கிறது.
நம்மிடம் உள்ள மின் சாதனங்களை திரும்ப திரும்ப வாங்கிக் குவிப்பதில் கவனம் வேண்டும். அழகுக்காகவும், புதிய வடிவ கவர்ச்சிக்காகவும் அவற்றை திரும்பத் திரும்ப வாங்குவதைத் தவிர்க்கலாம். மின் குப்பை மறு சுழற்சி நிறுவனங்களிடம் இவ்வகைக் குப்பையை ஒப்படைக்கலாம். அவ்வகை நிறுவனங்களுக்கு அரசு மானியம் தருவதும் அவசியம்.
புது தில்லி போன்ற நகரங்களில் 50,000 தொழிலாளர்கள் மின்னணுக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எவ்வித பாதுகாப்பு உறைகளும், உத்திகளும் இல்லாமல் அவர்கள் ஈடுபடுவது அபாயகரமானதாக உள்ளது.
மின்னணு கழிவுகளை மறு சுழற்சி செய்ய தகுந்த முறைகளும், உடல் நலப் பாதிப்பு நிர்பந்தங்களும், வழிகாட்டும் நெறிமுறைகளும் சரியாக முறைப்படுத்த வேண்டியிருக்கிறது.
105
நாடுகளின் குப்பைத் தொட்டியாகி உள்ளது இந்தியா. ஊழலால் மலிந்துள்ள இந்தியாவின் மின் குப்பை பெருக்கத்தை கட்டுப்படுத்த சில நடைமுறை சட்டங்கள் போதும். புதைப்பதா எரிப்பதா என்ற பட்டிமன்றம் தேவையில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சி இ-மெயில், இ-வணிகம், இ-பத்திரிக்கைகள் என்று மகிழ்ந்திருக்கும் நேரத்தில் இ-குப்பையும் பெரிய பாரமாகி அழுத்துகிறது.
முகச்சவரம் செய்யும் பிளேடை
இரண்டாக உடைத்து பலமுறைப் பயன்படுத்துகிறோம். காகிதம் நறுக்குவது,பென்சில் சீவுவது,நகம் நறுக்குவது,நூலை அறுப்பது, பழங்கள் லேசாகச் சீவுவது என்று.
காலியான தண்ணீர் கேனினை
பூச்செடி வளர்க்க, சொட்டு நீர் பாசனப் பாய்ச்ல் தாளம் போடுவது,பெட்ரோல் வாங்குவது,தீர்த்தம் பிடிப்பது,மழைத் தண்ணீர் பிடிப்பது என . ஒன்றிலிருந்து புதிய பொருளை கண்டுபிடித்து பயன்படும்
வித்தையை
ஜுகாட் என்று அழைப்பார்கள். ஒருவனே பல
வேலைகளைச் செய்யும்போது அவனை ஜுகாட் என்று
பல இந்திப் படங்களில் அழைத்திருப்பதைக் கேட்டிருக்கிறேன்.
இந்த ஜீகாட் வேலையில் சாதாரண செய்தித்
தாட்களை பட்டம் விடப்பயன்படுத்துவது. , அழுக்கு துடைக்கப்பயன்படுத்துவது,
பலகாரங்கள் கட்டப் பயன்படுத்துவது , அபூர்வமாய் பட்டங்கள் செய்ய
பயன்படுத்துவது என்ற ரீதியில் இருக்கும்
போது அவற்றைக்கொண்டு காகிதப் பைகளைச் செய்ய பக்கத்து வீட்டில் வேலையில்லாமல்
சும்மா இருப்பவர்களைக் கொண்டு ஒரு வேலையை ஆரம்பித்து அவர்களுக்குச் சிறு உதவியை
கூலியாய் கொடுக்க முடிந்ததில் சிறு ஆறுதல்
எனக்கு. கொரானா காலத்து பொழுதுபோக்காய் சிலருக்கும் சிலருக்கு கிலோ அரிசியையும்
தந்தது .
” சீனாவிலெ கரோனா வைரஸ் புறப்பட்ட நேரம், புறப்பட்ட
திசை வாஸ்து சரியில்லெ. அதுதா இப்பிடி அலைக்கழிக்குது. ஒரு கிராம் வைரஸ்தா உலகை இப்பிடி
சிரமப்படுத்துது . ஒரு கிராம் கழிவுதா அது“ என்றார் அந்த வாஸ்துவை முக்கிய
வஸ்துவாக எண்ணிக்கொண்டிருக்கும்
செய்தித்தாள் வாஸ்து சொன்ன நண்பர்.
கொரானா காலத்து மூடநம்பிக்கைகளுக்கும் அளவில்லை