வியட்நாமியர் படித்து நெகிழ்ந்த கொங்குப் படைப்பு
: மெய்நிகர் சந்திப்பு உரை 26/4/20
கே.சுப்ரமணியன்: இஸ்கப் மாநிலச் செயலாளர் .. * தமிழ்நாடு க.இ.பெருமன்றம்)
சுப்ரபாரதிமணியன் பன்முகத் தன்மை வாய்ந்த படைப்பாளி. அவர் சிறுகதை நாவல் சிறுகதைகள் கட்டுரைகள் உட்பட பல்வேறு தளங்களில் படைப்புகளை எழுதி வருபவர் .
சுதேசமித்திரன் பத்திரிகையில் பாரதி 1909ல் ஒரு கட்டுரையில் இப்படி எழுதினார்: ” தமிழ்நாட்டில் எத்தனையோ பஞ்சம் உள்ளன அதில் ஒன்று எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் தராத பஞ்சம் ”என்ற வார்த்தைகள் ஞாபகம் வருகின்றன .அவருடைய சாயத்திரை நாவல் தமிழில் முக்கியமான போக்கை காட்டிய நாவல். மலையாளம் ஹிந்தி ஆங்கிலம் வங்காளம் கன்னடம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருப்பது சிறப்பாகும் நொய்யல் பண ஆசையால் முதலாளிகளால் சாயக் கழிவால் கெட்டுப்போனது .அதை சுற்றுசூழல் பிரச்சனையாக்கி நவீன வகை எழுத்துக்கள் மூலம் ஒரு நாவல் ஆக்கினார் .அதைப்பற்றி இந்தியா டுடே பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை கவனத்துக்குரியது அதில் பிரேமா நந்தகுமார் அவர்கள் ஒரு சிறு கதை ஒன்றையும் ஒரு கட்டுரைத் தொகுப்பு ஒன்றையும் இந்த நாவலோடு ஒப்பிட்டுள்ளார்.
1. நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமான தோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும்? அந்த விஷ மலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும். இந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப் பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள், வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும் ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோ எனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது.
2. 1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.
மாசு மனிதகுலத்தின் தீங்கு .அந்த நாவல் அதை நவீனப்பாணியில் வெளிப்படுத்தியது. சுமங்கலித் திட்டத்தில் இளம்பெண்கள் பாதிக்கப்படுவதும் உழைப்பு ரீதியாக சுரண்டப்படும் குறித்து பல்வேறு வழக்குகளில் நானும் பேசியிருக்கிறேன். பல கூட்டங்களில் பேசி இருக்கிறேன். சுப்ரபாரதிமணியன் தேநீர் இடைவேளை, முறிவு போன்ற நாவல்களில் இந்த பிரச்சனை சார்ந்த பெண்களுடைய வாழ்வியலை எழுதி இருக்கிறார். இந்த நாவல்களை பற்றி கோவை ஞானியின் ஒரு முக்கியமான கட்டுரையை உங்கள் பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். இன்றைய நெருக்கடிமிக்க வாழ்க்கைச் சூழலில் கனவுகளோடு, பெரிய லட்சியங்களோடு, தன்மானத்தோடு வாழ்கிற வாழ்க்கை சமூகத்தில் பெரும்பாலானர்களுக்கு மறுக்கப்படுகிறது. சுப்ரபாரதிமணியன் மட்டுமல்லாமல் எத்தனையோ எழுத்தாளர்கள் இந்தக் கதையை நெடுங்காலமாக நிறையவே சொல்லி வருகிறார்கள். நெருக்கடிகள் அதிகரிப்பதற்கு ஏற்ற விகிதத்தில் மனிதருக்குள் தகர்வுகளும் அதிகரிக்கின்றன. இதைச் சொல்வதற்குத்தான் படைப்பாளிகள் புதிதாக எழுத வேண்டியிருக்கிறது. 'தேநீர் இடைவேளை' நாவலில் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரச் சூழலில் தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக தென்மாவட்டங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்த மனிதர்கள் பற்றி ஏராளமான விவரங்களை சுப்ரபாரதிமணியன் சொல்கிறார் என்கிறார்.
வேற்று மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு இல்லை இன்றைய கொரானா காலத்தில் கால்நடையாக அவர்கள் ஊர் திரும்புகிற அவலம். மனிதநேயம் உச்சபட்சமாக காட்டப்படுவதாக உள்ளது அவருடைய நாவல்களில் .வியட்நாம் நாட்டிற்கு இரண்டு ஆண்டுகள் முன்னால் இஸ்க்கப் அமைப்பின் மூலம் 20 பேர் கொண்ட குழு சென்றிருந்தோம். அப்போது சுப்ரபாரதிமணியன் தன் படைப்புகளின் ஆங்கில நூல்களை கொண்டு வந்திருந்தார் வியட்நாமில் உள்ள ஹலாங் கவர்னர்,பண்பாட்டு மந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வியட்நாம் இந்திய நட்புறவுக் கழக தோழர்களுக்கு அவரின் நூல்கள் சிலவற்றை வழங்கினோம் பரிசாக. அவற்றைப் படித்துவிட்டு, குறிப்பாக மைரேசன் நூலை- சிலர் நெகிழ்ந்து போய் கண் கலங்கினார்கள் .
அவருடைய ரேகை ஒரு வித்தியாசமான நாவல் என்று சொல்லலாம் .சுந்தர ராமசாமியின் புளியமரத்தின் கதை நிலப்பிரபுத்துவ சமூகம் குடும்பம் சீரழிவது பற்றிய ஒரு படைப்பாகும் .வல்லிக்கண்ணன் அவர்களின் குடும்பத்தின் கதை நாவல் கிராமப்புறம் சார்ந்த ஒரு குடும்பத்தின் சிதைவை மையமாக வைத்துள்ளது அதேபோல இந்த ரேகை ஒரு கிராமத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுடன் அந்த மக்களுடைய வாழ்வியலையும் அவருடைய சிதைவுகளையும் சொல்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அருகே இருக்கும் பழையனூர் என்ற ஊர் இந்த நாவலில் களமாக இருக்கிறது .சண்முகநதி என்ற நதி அங்கே ஓடுகிறது .ஆனால் இந்த நாவலில் அது முருகநதி என்று குறிப்பிடப்படுகிறது. ஜோதிடம் பார்ப்பது பல தலைமுறைகள் அந்த கிராமத்தில் பல குடும்பங்களின் தொழிலாக இருந்து வருகிறது .அவர்கள் எல்லாம் இறைய நிலையில் என்ன ஆனார்கள் .அவர்களின் வாரிசுகள் வேறு தொழிலுக்கு போக வேண்டிய அவசியம் என்ன.அங்கிருந்த அரசியல் இயக்கங்கள் சாதிய முறைகள் போன்ற பல்வேறு அணுகுமுறைகள் இந்த நாவலில் உள்ளன.
இந்த நாவலின் தொடக்கத்தில் வள்ளுவர் சாதியை சேர்ந்த ஒருவன் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. திருவள்ளுவர் படமும் சிதைகிறது .ஜோசியம் சொல்லும் அவர்களுடைய வாரிசுகள் அதை கற்றுக் கொள்ளாமல் வேறு தொழிலுக்கு போகிறார்கள் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து முதலாளிகள் ஆகிறார்கள். சிங்கப்பூர் வேலை செய்கிறவன் திரும்பி வந்து அந்த நகரத்தில் அவனின் நடவடிக்கையை மேற்கொள்கிறான். கோபால் என்ற இளைஞர் ஜோதிடம் பார்த்து சென்னை கிளை, திருப்பூர் கிளை என்று ஆரம்பிக்கிறார். சினிமா உலகத்தில் ஜோதிடத்திற்கு பெரிய மதிப்பு இருக்கிறது ஜோதிடர்கள் 200 ,300 வருட கிராமிய முறைகள் சிதறி சிலர் முன்மாதிரியாக வெளியே வருகிறார்கள் ,விவசாயம் அழிந்து போக பல குடிகாரராக மாறுகிறார்கள், சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் காணப்படும் சுற்றுச்சூழல் அம்சங்கள் இந்த நாவலில் கூட உள்ளன ,அப்படித்தான் சண்முகநதி என்ற நதி சாயக்கழிவு, வீட்டு கழிவுகளும் சேர்ந்து நஞ்சு ஊட்டி ஓடுவதை காட்டி அதை சுத்தமாக வேண்டும் என்று ஒரு ஆசிரியர் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுடன் ஈடுபடுகிறார். இந்த நாவலில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் சுப்பையா. கலை இலக்கிய ஆர்வம் கொண்டவர். சிறுதெய்வ வழிபாட்டில் அக்கறை உள்ளவர். குறும்படம் வீதி நாடகங்கள் முற்போக்கு இயக்கங்கள் என்று செயல்படுகிறார் .ஆனால் அவர் செயல்பாட்டில் முற்போக்கு இயக்கங்கள் பல சமயங்களில் தடை செய்கின்றன. .கட்டுப்படுத்த விரும்புகின்றன. அவர் தொடர்ந்து சமூக பிரச்சனைகளை தன்னுடைய வீதி நாடகங்களிலும் கவனம் செலுத்தி ஒரு எதிர்ப்புக் கலைஞனாக முடிந்ததை இந்த நாவல் சொல்கிறது .அதேபோல கடவுள் எதிர்ப்பு சார்ந்த ஒரு கதாபாத்திரமும், ஹமீத் தேனீர் கடை போன்ற இடங்கள் மத நல்லிணக்கத்தின் அடையாளமாக இருப்பது சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன ,சண்முகம் சௌந்தர்யா என்ற கலப்பு மணம் புரிந்து கொண்டோரின் வாழ்க்கைச் சிக்கல்களை சொல்வது உடுமலை சம்பவத்தில் சங்கர் கௌசல்யா வை காட்டுகிறது. ஆனால் கொலை சம்பவத்திற்கு பிறகும் சவுந்தர்யா தீர்க்கமாக போராடி வாழ்வை முன்னிறுத்துவது நல்ல விஷயமாக இருக்கிறது .இயற்கை வேளாண்மை தமிழ் கல்வி அமெரிக்க இளைஞர் விவசாயத்தில் ஈடுபட்டுவருவது, உணவு அரசியல் போன்றவை பல்வேறு கதாபாத்திரங்களின் மூலமாக பூடகமாக சொல்லப்பட்டிருக்கின்றன. சாதி மோதல் ஆதிக்க சாதியினர் போக்கு பிணங்களை காவல்துறை அடக்கம் செய்யப்பட வேண்டிய நிலை போன்றவை காட்டப்படுகின்றன. பழையனூர் பழைய ஊராக இல்லை அது புதிராக இருக்கிறது. சாதி அடையாளம் தெரியாத வரை மனிதன் உயர்ந்தவன். சாதி அவனை மிருகமாக மாற்றி விடுகிறது என்ற குறிப்பு இந்த நாவலில் ஓரிடத்தில் இருக்கிறது. பல்வேறு இடங்களில் நகைச்சுவையும் கிண்டலுமாக இந்த நாவல் நகர்வது இன்னொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது .பரமேஸ்வரி என்ற ஏறத்தாள ஒரு விலைமாது ,அமலா என்ற பூக்காரி அவர்களுடைய வாழ்வியலை நடத்தி செல்லும் சிரமங்கள், கிராம சமூகத்தின் ஆதிக்க சாதி தன்னுடைய நிலை.. சுடுகிறது சமூக அரசியல், சாதி அரசியல் இதில் உள்ளன. இந்திய ஜனாதிபதி வழங்கிய கதா பரிசு தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர் விருது தமிழ்ச் செம்மல் விருது போன்றவை அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த அதிகாரங்களை அவர் தொடர்ந்து பெற வேண்டும் என்பதற்கு தகுதியாக அவருடைய படைப்புகள் இருக்கின்றன. சாயப்பட்டறை மூடப்பட்டு அதன் பின்னணியில் ஏற்படுகிற பொருளாதார ,கலாச்சார மாற்றங்களில் புலம்பெயர்ந்த மக்கள் நிலை பற்றி ஒரு நாவல் கூட நீர்த்துளி என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். அவர் வாழும் சமூகம் அவரை பாதிக்கிறது. தன் பாதிப்பை தொடர்ந்து படைப்பிலக்கியத்தில் பதிவு செய்து வருகிறார்.
*