திருப்பூர்
துசோபிரபாகரின் உரை நடை : சுப்ரபாரதிமணியன்
குறும்படங்களுக்கென்று
கால அளவு உண்டு. ஆனால் அந்தக்கால அளவைக்கடந்தவையாக திருப்பூர் துசோபிரபாகரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. ஒரு மணி
நேரத்தைக் கடந்தவையாகவும் அவரின் பல குறும்படங்கள் இருந்திருக்கின்றன. அவை
முழுத்திரைப்பட முயற்சியின் பயிற்சியாகவும் முயற்சியாகவும் இருந்திருப்பதைப்
பார்த்திருக்கிறேன். அவரின் ” கண்டாங்கி ”திரைப்படத்தில் அதன் தன்மையைக் காணலாம்.அவரின்
நீண்ட குறும்படங்களில் காமிரா மொழி ஒரு நாவலாசிரியரின் உரைநடை மொழியை
ஒத்திருப்பதைக் கண்டிருக்கிறேன். இவருக்கு நாவல் வடிவம் சிறப்பாக வரும் என்ற
எண்ணத்தை அந்தப்படங்கள்
எழுப்பியிருக்கின்றன. ஆனால் அவர் கவிதைகள், மேடைப்பாடல்களில் அதிகம் கவனம்
செலுத்துவதைக்கண்டிருக்கிறேன். ஒரு திரைப்பட முயற்சியாளனுக்கு திரைக்கதை உட்பட
பலவற்றைக்கையாளுவதில் தேர்ந்த வாசிப்பும் உரை நடையின் தேர்ச்சியும் பயனளிக்கும் என்பதை அவரிடமும்
சொல்லியிருக்கிறேன். கவிதைகள், மேடைப்பாடல்கள் முயற்சியை மீறி சமீபமாய் நாவல்கள் எழுதுவதிலும் அக்கறை
எடுத்துக் கொள்வது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. காமிரா மொழிக்கு இணையான நிதானமான
விவரிப்பும் கூர்மையும் இவரின் நாவல்களின்
பாத்திரப்படைப்புகளிலும், விவரிப்பிலும் காணமுடிகிறது. இந்நாவலில் அவர் படித்த காந்தி
கிராமப்பல்கலைக்கழக்த்தின் சூழலும் மாணவர்களின் உலகமும் சூழலை ஒட்டிய மக்களின் வாழ்வியலும் குறிப்பாக
சிறுமலை சார்ந்த கிராமிய மக்களின் வாழ்க்கையும் , சாதாரண மக்களின் பிரதிநிதிகளான
ஏழை மாணவர்களின் இயல்பும் ஆசையும் நேர்த்தியாகச்
சித்தரிக்கப்பட்டிருக்கின்றன .. அவரின் கவிதைகள் , மேடைப்பாடல்களின் தன்மை போல் பல
மையங்களையும் பிரச்சினைகளையும் ஒரு மலரின் வெவ்வேறு இதழ்களின் அடுக்குகள் போல் துசோபிரபாகர்
இந்நாவலின் களங்களை வடிவமைத்திருப்பது நாவல் வடிவத்தையும் அவர் சிறப்பாக்க்
கைக்கொள்ளும் வித்தையைச் சொல்கிறது.