Review by Subrabharathimanian
: Kadal marangal book
காலத்தால் மாற்ற முடியாத புண்கள் :
வெள்ளியோடனின் “
கடல்மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பு
- சுப்ரபாரதிமணியன்
வெளிநாடு வாழ் எழுத்தாளர்களின்
படைப்பிலக்கியங்கள் வாசிப்பில் வெகு சுவாரஸ்யம் கொண்டதற்குக் காரணம் அந்தந்த
நாடுகளின் வேறுபாடான கலாச்சார அம்சங்களும் அனுபவங்களும். மலையாள படைப்பிலக்கியத்தில்
வெளிநாட்டு அனுபவக்கதைகள் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது . ஆக்கிரமித்திருக்கிறது
என்று சொல்லலாம்.அதற்க்குக்காரணம், கணிசமான அளவில் கேரளத்துக்கார்ர்கள் வளைகுடா
உட்பட வெளிநாட்டு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சமீபத்தில் “ ஆடு ஜீவிதம் “ என்ற நாவல் 1 லட்சம் பிரதி விற்றிருக்கிறது என்பது ஒரு முக்கிய செய்தி (
இதைத் தமிழில் உயிர்மெய் வெளியிட்டுள்ளது )
வெள்ளியோடன் கேரளத்துக்காரர்.
வெளிநாட்டில் வசிக்கிறார். வெள்ளியோடன்
இலங்கை, தாய்லந்து, ஈரான், பர்மா போன்ற
நாடுகளின் களத்தில் பல சிறுகதைகளை இத்தொகுப்பில் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார்.
கூடவே இந்தியாவில் கேரளா, பம்பாய் சார்ந்த கதைகளையும்.
இதன் தலைப்பை மையமாக்க் கொண்ட கதை
ஏதோவொரு வகையில் அகதியாக்கப்பட்ட
இந்தியர்களையோ, மற்ற் நாட்டினரையோ பொதுமைப்படுத்தியிருக்கிறது எனலாம். எந்த
எல்லையை அடைவது, எங்காவது அடைக்கலம் பெற வேண்டும் என்று படகில் அலையும் மனிதர்களைப்பற்றிப் பேசுகிறது.
இந்நூற்றாண்டு அகதிகளின் நூற்றாண்டாக உலகம் முழுக்க அகதிகளைக் கொண்டிருப்பதை குறியீடாக்கியிருக்கிறது.
உலகளவிலான மலையாள எழுத்தாளர்களுக்கான் ஒரு போட்டியில் முக்கியப் பரிசு பெற்றது
இக்கதை எனபது குறிப்பிடத்தக்கது. ஒரு முதிய எழுத்தாளரை மையமாகக் கொண்ட கதையில்
வாழ்வு பற்றிய பல விசாரணைகள் உள்ளன. வயதான அரபு நாட்டவர்கள் இங்கு வந்து இளம் பெண்களை
மணந்து விட்டு கர்ப்பம் அடைந்த பின்போ, வியாபார நிமித்தம் முடிந்த பின்போ இளம்
பெண்களை கைவிட்டுப்போகிற அவலத்தை சொல்லும் முத்அ
இதெல்லாம் தமிழ் நாட்டில் இல்லையென்று சொல்வது தவறானதுதான். ஆனால் கேரளா
அளவு பாதிக்கப்பட்ட பெண்கள் இங்கில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம் .
இதில் பலகதைகள் உலகளவிலான பல அரசியல்
பிரச்சினைகளைத் தொட்டுச் செல்கின்றன என்பது முக்கியமானது.ஈராக், பாலஸ்தீனம், ஈழம்,
உட்பட பல விசயங்கள் தொடப்பட்டிருக்கின்றன. வெளிநாட்டுக்களத்தில் சொல்லப்பட்ட மஜாஜ்
கதையைச் சொல்லக்கூட பெரும்பான்மையோருக்கு
தயக்கம், கூச்சம் இருப்பதை உடைக்கிறது.
அக்கதையின் பிரதி அரசியல் சார்ந்த உரையாடலாக ஒரு பெண்ணுடன் அமைந்திருக்கிறது.
அக்கதையின் இறுதியில் வெளிப்படும் மஜாஜ் செய்யும் பெண்ணின் செயற்கை மார்பகத்
தகவல்கள் போல் அந்த உரையாடலில் பல அரசியல் சார்ந்த அதிர்ச்சிகள் உள்ளன.
ஈழத்துத் தலைவர் பிரபாகரனின் மகன்
பாலச்சந்திரனின் மரணம் பற்றியக் கதையில் ( மரண வேர்) இது போல் ஈழம் அரசியல்
பிரச்சினைகள் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அக்கதையினை கேரள அரசு சார்ந்த ” கிரந்த லோகம் “என்ற இதழ் வெளியிட்டிருப்பது மலையாளச்சூழலில் எழுத்தாளனின் சுதந்திரம்
பற்றிக் கொண்டாட வைக்கிறது.. சிங்கள் இனவாதத்தின் உச்சம் பற்றி பேசும் அக்கதை போல்
பல கதைகள் வெவ்வேறு நாடுகளின் எதேச்சதிகாரம் பற்றிப் பேசுகின்றன கதாபாத்திரங்களின்
உரையாடல் மூலம்.
இக்கதைகளின் ஊடாகத் தென்படும் வன்முறை பல
வடிவங்களில் தென்படுகிறது. வயதான அரபு
நாட்டவர்கள் இளம் பெண்களின் மீது
செலுத்தும் பாலியல் விசயம் கூட அவ்வகையில் வன்முறையானதே. ஆசிரமத்திலிருந்து பாலியல் தொல்லைகளால் வெளியேறும்
பெண் இணையதள நட்பால் ஒருவனிடம் மாட்டிக் கொள்ளும் அவலம் ( பலி ) இந்த வன்முறையின் உச்சமாக உள்ளது.
இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்களே என்று
தயக்கமில்லாமலும் ஒரு கதை வடிவமைக்கிறது.நிராகரிக்கப்படும் தேசிய இனங்களின் சில
பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார். ( சிரியர்களின் விசா பிரச்சினை சான்று-சாறுண்ணி
),. கதைகளோடு இயைந்து போயிருக்கிற
முஸ்லீம் கலாச்சார வார்த்தைகள், தொன்மங்கள் இவரின் உரைநடையில் பலம்
சேர்க்கிரது. பல கதைகள் அரசியல் சமூகம்
சார்ந்த விமர்சனங்களாக அமைந்துள்ளன. அதில் தமிழனும் அவனின் மொழி பற்றிய
அக்கறையின்மை, சின்னத்திரை ஈர்ப்பு போன்றவை விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.தமிழ்மொழிபெயர்ப்பில்
இருக்கும் தவறுகள்
கலாச்சாரக்குழப்பங்களாகி விடுகின்றன..பல இடங்களில் கவித்துவ வார்த்தைகள்
மினுங்கி உள்ளிழுக்கின்றன. இக்கதைகளை தமிழுக்குக் கொண்டு வந்திருப்பவர் ஆர்.
முத்துமணி. கேரளத்தில் வசிக்கும் தமிழர். நடைபாதை வியாபாரி.
காலத்தால் மாற்ற முடியாத புண்கள் உண்டா
( சிண்ட்ரெல்லா ) என்று ஒரு கதை கேட்கிறது. அவ்வகைப்புண்கள் மலையாளிகளின் பார்வையில்
மலிந்திருப்பதை இக்கதைகள் சொல்கின்றன.
( வெள்ளியோடனின்
“ கடல்மரங்கள் “ சிறுகதைத் தொகுப்பு.
முதற்சங்கு பதிப்பகம், 19 மீட் தெரு , கல்லூரி சாலை , நாகர்கோயில் 1 (94420
08269 ) 88 பக்கங்கள் 70 ரூபாய்- )
subrabharathi@gmail.com Fb:
Kanavu Subrabharathimanian Tirupur
:
blog: www.rpsubrabharathimanian.blogspot.com
Home : 8/2635
Pandian nagar, Tirupur 641 602 /094861 01003