சிறுகதை : சுப்ரபாரதிமணியன்
அதிகாரம்
சோற்றுக்கையின் பிசுபிசுப்பு வெளிச்சத்தில் மினுங்கிக் கொண்டிருந்தது.
கழிப்பறையில் குவிந்து கிடந்த அபரிமிதமான வெளிச்சம் பழனிக்கு கண்களைக் கூச்ச் செய்தது. எவ்வளவு
நேரம் ஆனாலும் இந்த எண்ணெய் மினுக்கல் போய் கை காயாது.. போகாது என்று தோன்றியது.
சாதாரண சோற்று மிச்சம் என்றால் காய்ந்து விடும் . ஆனால் எண்ணெய் கலந்து இந்த
மினுமினுப்பு அபரிதமாகி அறையையே நிறைத்துக் கொண்டிருப்பது போலிருந்தது.
வாஷ்பேசின் குழாய் மூடியைத்திரும்பத் திரும்ப திறந்தும் மூடியும் பார்த்தான்.
இடது கையால் அதன் மேல் படாலென்று தட்டு தட்டினான் . தண்ணீர் பொலீரென்று கொட்டி
விடும் என்று நினைத்தான். பேருந்து நிறுத்தங்களில் எடை பார்க்கும் இயந்திரங்களை
இப்படி தலையில் தட்டி காசை வரவழைத்த இரு முறை நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்து போயின
அது போல் இப்போதும் திரும்பத்திருமப அதன் மேல் தட்டினால் தண்ணீர் குபுக்கென்று
கொட்டும் என்பதை திடமாய் நம்பினான். . வாஷ்பேசின் கீழ்ப்பகுதியில் இருக்கும் திறந்து மூடும் உபாயத்தை திருகினான். தண்ணீர்
வராதது அவனை எரிச்சலடையச் செய்தது. கழிப்பறையிலிருந்து வெளிக்கிளம்பிய் நாற்றம்
ரொம்ப நேரம் அங்கு நிற்க முடியும் என்று தோன்றவில்லை.
அவன் பெரும்பாலும் மேல்தளத்தில் உள்ளக் கழிப்பறையைத்தான் பயன்படுத்துவதான்.
அலுவலகத்தில் மற்றவர்கள் இந்தக்கீழ்த்தளக் கழிப்பறையைப் பயன்படுத்துவார்கள்.
மற்றவர்கள் என்றால் அய்ந்து பேர். நான்கு பேர் வெளிப்புறப் பணியாளர்கள். இன்னொரு
அறையில் கணினியோடு மல்லாடும் ஒருவர் ஆறாவது விரல். முக்கியமான விரல் அவர்.
பழனி மேல்தளத்தில் உள்ளக் கழிப்பறையைப்
பயன்படுத்துவதற்குக் காரணம் அவன் அதிகாரி. ஆறு பேருக்கு அதிகாரி.அறையிலேயே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொள்வதால் கையோடு
கீழ்த்தளக்கழிப்பறை வாஷ்பேசினை டிபன்பாக்ஸ் கழுவப் பயன்படுத்துவார். இன்னும் இரண்டு தொலைபேசி இணைப்பகங்கள் தெற்கு,
கிழக்கு என்று ஏழு
கி.மீ தூரத்தில் இருந்தன. அவையும் அவனின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவற்றில் இருவர், நால்வர் என்று பணியாட்கள்
இருந்தனர்.எல்லாம் நகரின் மத்தியிலிருந்து தூரத்தில் பொதுமக்களின் பெரும்
சேவைக்கென எப்போதோ உருவாக்கப்பட்டவை. ( ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டவை
அல்ல. சுதந்திர இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. 1,76,000 கோடி ஊழலுக்குப் பின்னும்
உயிர்த்திருக்கும் துறை ) . அவர்கள் இந்தத் தலைமையகத்திற்கு பெரும்பாலும்
வரமாட்டார்கள். குட்டி ராஜ்யத்தின் அதிகாரி பழனி.
பழனிக்கு கிருஷ்ணன் பெயரைச் சொல்லிக் கத்தவேண்டும் போலிருந்தது. இங்கு எல்லா
உதிரிகாரியத்திற்கும் கிருஷ்ணந்ன்ன் .கத்திப் பயனில்லை.இப்போதுதான் சாப்பிட
வீட்டிற்கு சென்றிருந்தான்.அவ்வள்வுதூரம் குரல் கேட்காது. அப்புறம் பழனியின் குரல்
கீச்சுகீச்சான பலவீனமானதுதான்.
அந்தக்குட்டி இணைப்பகத்தில் எல்லாம்
கிருஷ்ணன்தான். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவன். இங்கு வந்து தற்காலிகப்
பணியாளராகச் சேர்ந்து 15 ஆண்டுகள் ஓடி விட்டன. இன்னும் நிரந்தரமாகவில்லை. துறை
தனியாருக்கு விலைபோகிக்கொண்டிருக்கிறது . எப்போது வேண்டுமானாலும் முழுமையாக
தனியாரிடம் போய்விடலாம். சென்ற ஆட்சியிலேயே அதற்காக ஆயத்தங்கள், மசோதாக்கள், 50 சதவீதத்திற்கும் அதிகமான
பங்குகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது
போன்றவை நடந்தேறிவிட்டன. இடதுசாரிகள் கொஞ்சம் அதிகம் உறுப்பினர்
எண்ணிக்கையில் பாராளுமன்றத்தில் இருந்து
சத்தம் போட்டு முட்டுக்கட்டை போட்டனர். அதனால் தாமதமாகிக் கொண்டிருந்தது. இன்னும்
சில நடவடிக்கைகள் பாக்கியிருந்தன. இந்த நிலையில் கிருஷ்ணன் தற்காலிகப் பணியாளராகவே
திருமணம் செய்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு அற்பச்சம்பளத்தில் ஓட்டிக்
கொண்டிருந்தான். வெளியே வேலை என்று போகிற போது கிடைக்கிற அதிகப்படியான வருமானம்,
புதிய
இணைப்புகளுக்காக தயார் செய்யும் போது
கிடைக்கும் அன்பளிப்பு என்று கொஞ்சம் உபரியாக ஏதோ கைக்கு வந்தன.மச்சின்ன் பேரில்
சிகார்டு விற்பது, புது தொடர்பு விசேசங்கள் என பிரான்சியையாக இன்னும் கொஞ்சம் உபரி பணம்
சேர்த்தான்.
வலது கை காய்வது மாதிரித்
தெரியவில்லை. தக்காளிச்சாதம் சாப்பிட்டது. அதன் எண்ணெய் பிசுக்குதான் ஒட்டிக்
கொண்டிருக்கிறது.கண்மணியிடம் கேட்டால் இதெல்லாம் எண்ணெய் இல்லை என்பாள்.
தக்காளியிலிருந்து வடிந்து இப்படி ஒட்டிக் கொள்கிறது என்பாள். இந்த எண்ணெய் பிசுபிசுப்பைப் போக்க மண் தரையில் கையை வைத்து அழுந்த தேய்க்கலாம்
என்று தோன்றியது.
கழிப்பறை குழாயில் தண்ணீர் வருவதில்லை. போரிங்க் தண்ணீர் எடுக்கும் மோட்டார்
பழுதாகி விட்ட்து. அதை பழுது நீக்க நான்காயிரம் ரூபாய் ஆகும் என்பதால் மூன்று
கொட்டேசன்கள் வாங்கி கோப்பை நகர்ந்த்தியிருந்தான் பழனி. இப்போதெல்லாம் உள்ளூர்
டிபுடி ஜெனரல் மேனேஜருக்கே அய்ந்தாயிரம் ரூபாய் வரைக்கும் தான் பண விவகாரத்தில்
அதிகாரம் இருந்தது. . முன்பெல்லாம் பழனிக்கு மூத்த அதிகாரிக்கே அந்த அளவு அதிகாரம்
இருந்தது. பணத்தேவைக் கோப்பு கிடப்பில் இருக்கிறது. .அதனால் அதுவும் பழுது
பார்க்கப்படாமல் கிடந்தது.
பிரதானக்குழாயிலிருந்து வாரம் ஒரு நாள் வரும் தண்ணீர் தொட்டியில் நிரம்பிக்
கொள்ளவென்று ஆகும் அதை கழிப்பறைகென்று கூட கிருஷ்ணன் தண்ணீர் எடுத்து பக்கெட்டில்
நிரப்பி வைத்துக் கொள்வான். அந்த வேலையும் அவனுடையது. தற்காலிகப் பணியாளர் வேலை.
அப்புறம் கழிப்பறை சுத்தம் செய்ய்யும் வேலையில் ஒப்பந்ததாரரிடம் அவனின் மனைவி
பெயரில் மாதச்சமபளம் பெற்று தன் வருமானத்தைக் கணிசமாகப் பெருக்கிக் கொண்டிருந்தான்
கிருஷ்ணன்.
கீழ்க் கழிப்றையில் தண்ணீர் இல்லை. மேல் தளக் கழிப்பறையில் அதிகாரி என்ற
வகையில் பழனி உபயோகப்படுத்துதற்கு தண்ணீர் கொண்டு வந்து வைக்கும் வேலையை கிருஷ்ணன் சரியாகவே செய்வான் என்ற முறையில்
மாடிப்படிகளைக் கடந்தான். அவனின் இடது கையிலிருந்த எண்ணெய்பிசுக்குடனான பாத்திரம் அவனைப்
பார்த்துச் சிரிப்பது போல் கழிவுகளுடன் இருந்தது. கோபம் வரும்போது அதை தரையில்
விசிரும் பழக்கம் அவனிடம் உண்டு. அதனால் அது அங்கங்கே முனைகளில் ஒடுங்கி
இருக்கும்.அவன் முகம் அது போல் இடுங்கி கோணலாகி இருப்பதாய் அவனுக்குள் நினைத்துக்
கொண்டான்,இப்போதும்
கூட கிருஷ்ணன் பெயரைச் சொல்லி அதை விசிறலாமா என்று நினைத்தான். எதுவும்
பயன்தரப்போவதில்லை. அது தரும் நாரச்சத்தம் காதை நிறைப்பதைத் தவிர .
வாட்டர்மணியைக்கண்டு பிடிப்பது
அடுத்த புலனாய்வுக்காரியமாக இருந்தது பழனிக்கு. கிறிஸ்டி ஒரு தன்னார்வ
நிருவனத்தில் மாலை நேர வகுப்பில் குழந்தைகளுக்கு
பாடம் சொல்லித்தருபவள்.அவளைக் கிறிஸ்துவச்சியாக அந்த வீதியில் உள்ளவர்கள்
அடையாளம் கண்டு கொள்வார்கள் . சேவை செய்பவளாகவும் .அவள்தான் கிருஷ்ணன்
திண்டாடுவதைப் பார்த்து விட்டு “ நேத்து ரோட்டு மொனையிலே
வாட்டர் மணி தண்ணி பைப்பிலே என்னமோ பண்னிட்டிருந்தான் . அவனக் கேட்டா செரியாத்
தெரியும் ” என்று புலனாய்வின் உச்ச கட்ட யோசனையைச் சொன்னாள்.
” வாட்டர் மணி கூட ராமண்ணனுன் இருந்தான் “ .
ராமண்ணன் பஞ்சாயத்து அலுவலகத்தில்
தற்காலிக வேலையாள். அல்லது பஞ்சாயத்துத் தலைவருக்கு எடுபிடி. கிருஷ்ணணைப் போலவே
நெடுநாளாகப் பணிபுரிபவன். கிருஷ்ணனுக்கு நன்கு பழக்கமானவன் கூட .
ராமண்ணனை கைபேசியில் பிடித்த பின்
அவனே அலுவலகம் வந்து விட்டான்.
“ தண்ணி வர்லீன்னாங்க. நாந்தா பைப்லெ கட் பண்னுனேன் “
“ எதுக்கு ..”
“ நீங்க எதுக்கு ஆபீஸ் போனே கட் பண்னுனீங்க “
“ பில் கட்டுலெ அதுதா”
“ நீங்களும் தண்ணி வரி கட்லே ரெண்டு வருசமா பஞ்சாயத்துக்கு . அதனாலதா “
“ அதுதா பைல் மூவ் ஆகியிட்டிருக்கே.. இது உங்களுக்கே தெரியுமே “
“ நீங்க தண்ணி வரி கட்டுங்க. நாங்க தண்ணி உடறம் “
“ அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் “
“எங்க ஆபீஸ் போனே கட் பண்ணுனீங்க. அதெ
கனைக்ட் பண்னுங்க . பைப்பையும் கனெக்ட் பண்றம் “
“ அதெல்லா எங்க கையில இல்லெ “
“ மொதல்லெல்லா பண்ணிகிட்டிருந்தீங்க ..”
“ அப்போ பழைய சிஸ்டம். பணம் கட்டுலீன்னா
கட் பண்ணுவம். அட்ஜஸ்ட்ம்ண்ட்லே உட்டிருவம். இப்போ அதெல்லா எலக்ட்ரானிக்ஸ்
சிஸ்டத்லே செண்ட்ரலைஸ் ஆயிருச்சு . இப்போ
டவுன் ஆபீசிலெதா அதெல்லா கம்யூட்டர்லே பண்ராங்க. அவங்கதா பண்ணனும் “
“ இது மாதிரின்னு சொல்லி கனைக்சன் குடுக்கச் சொல்லுங்க “
“ பணம் கட்டாமெ பண்ணமாட்டாங்க “
“ பஞ்சாயத்துக்கு பண்ட் ஒண்னூம் வர்லே . தீந்து போச்சு. அடுத்த செக் வரும் போது
கட்டிருவம் சி.எம். அம்மா உடம்பு செரியில்லாமெ இருக்கறதுனாலதா செக் கூட வர்லீன்னு
சொல்லிக்கறாங்க “
“ அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் “
“ஆபீஸ் போன் , பைப்லைன் மாதிரிதா இதுவும் சம்பந்தமத்லே இருக்கு. கையிலிருந்து காசு போட்டுக் கட்ட முடியாது . செக் வரும் போது
கட்டுவோம். அதுவரைக்கும் போன் வேலை செய்யணும் “
“ பணம் கட்டாமெ முடியாதே.. அதுவும் அது
விபிடி. வில்லேஜ் பஞ்சாயத்து போன்கற பேர்ல சாதாரண ஜனங்க ஊஸ் பண்ரதுக்கு இருக்கறது.
உங்க ஆபீசுக்குன்னு பயன்படுத்தறீங்க .
நாங்களும் உட்டுட்டு இருக்கம் “
“ பஞ்சாயத்துத் தலைவர் சொன்னார் . நான் கட் பண்ணிட்டேன். அவர்தா சொல்லணும்”
“ எவன்யா இவனுக்கெல்லா ஓட்டு போட்டுத் தலைவனாக்குனான். சம்பந்தமில்லாமெ
கவர்மெண்ட் பில்டிங்க்லெ தண்ணியெ கட்
பண்ணிட்டு ..”
“ என்ன இப்பிடி சொல்றீங்க “
“ ஆமா பின்னென்ன. இரு நியாயம் வேண்டாமா “
கிருஷ்ணனுக்கு சங்கடமாகப் போய்விட்ட்து. ராமண்ணன் அலுவலகமே வந்து விட்டான்.
எப்படியும் மடக்கி சமாதானப்படுத்திவிடலாம் என்று நினைத்திருந்தான்.இல்லாவிட்டால்
தெரு முனைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து கழிப்பறை உபயோகத்திற்கு நிரப்ப
வேண்டும். குடி தண்ணீருக்கு தினமும் ஒரு குடம் என்ற ரீதியில் வீட்டிலிருந்து
தண்ணீர் கொண்டு வர வேண்டும். அது அவனை உறுத்தியது.
ராமண்ணன் விறுட்டென்று போய் விட்டான். கிருஷ்ணன் ” போகட்டும் சார். பஞ்சாயத்துத் தலைவரைப் பாத்து
சொல்லீர்ரன் “ என்றான் .
ஆனால் நாலைந்து நாட்கள் சாப்பிட்ட
கையை மண்ணில் போட்டுத் தேய்க்காத குறையாக எப்படியோ கழுவுக் கொண்டிருந்தான் பழனி.
கழுவாமல் சாப்பட்டு பாக்சை வீட்டிற்குக் கொண்டு செல்லும் பழக்கம் வந்து
விட்டது..தினம் இலைப் பொட்டலம் கொண்டு வரலாமா என்று யோசித்தான். சாம்பார் ரசம்
என்று ருசி பார்த்த பின் வெறும் பொட்டல சாதம் திருப்திப்படுத்தாது என்பதும்
தெரிந்த்து. அலுவலகத்தைச் சார்ந்த
மற்றவர்கள் வெளி வேலைக்குச் சென்றால் அங்கேயே சாப்பிட்டனர். அல்லது அலுவலகத்தில்
சாப்பிடும் போது சோத்துக்கையை மட்டும் கழிவறைத் தண்ணீரில் கழுவுவதில் பழக்கப்படுத்திக் கொண்டனர் .
கிருஷ்ணனிடம் இருந்து அலுப்பான பெரு மூச்சுதான் ஏதாவது கேட்டால் வந்தது . ”சேர்மனைப் பாத்தீங்களா “
“ ராமண்ணன் வத்தி வெச்சுட்டான். எல்லாம் கெட்டுப் போச்சி “ என்பதைத் திரும்பத்
திருமபச் சொன்னார்.
“ என்னாச்சு.”.
“எவன்யா இவனுக்கெல்லா ஓட்டு போட்டுத் தலைவனாக்குனான்னு நீங்க சொன்னதே அப்பிடியே
அங்க சொல்லிட்டான். அவர் முடியாது போன்னுட்டார். தண்ணி வரி கட்டிட்டு சொல்லுனு
விரட்டிட்டார் “
“ ராமண்ணன் அதெ எதுக்கு அங்க
சொல்லணும். சாதாரணமாத்தானே பேசிகிட்டிருந்தோம். “
“ அதுதா .. ராமண்ணன் வத்தி வெச்சுட்டான்
. தண்ணி வரி பைல் என்னாச்சு சார் “
“ ஜிஎம் ஆபீசுக்குப் போயிருக்கு. இப்போ பினான்சியல் பவர் மாறிப் போனதாலெ செக்
அங்க இருந்துதா வரணுமாமா. அதுவும் ரெண்டு வருச பாக்கி வேற, தாமதமானதுக்கு காரணம்
கேட்கறாங்க “
கிருஷ்ணன் பார்த்தது கந்தசாமியை . அவர் மனைவிதான் ஒரிஜினல் பஞ்சாயத்துத்
தலைவர் . ஆனால் கையெழுத்து உட்பட கந்தசாமியே எல்லாவற்றையும் போட்டு நிர்வாகம்
செய்து வந்தார் . இரண்டு பருவங்கள் ,
பத்து ஆண்டுகள்
கந்தசாமி பஞ்சாயத்துத் தலைவர் ஆக இருந்தார்.அடுத்து அத்தொகுதி பெண்களுக்கென்று
ஒதுக்கப்பட்டதில் கந்தசாமியின் மனைவி நின்று வெற்றி பெற்றார். ஆனால் நிர்வாகத்தை
கந்தசாமியே தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்.
எனவே கிருஷ்ணன் பார்த்தது
கந்தசாமியைத் தான். ஒரிஜினல் பஞ்சாயத்துத் த்லைவரை அல்ல .
“ கொஞ்சம் வெயிட் பண்னீப்பாக்கலாம்
சார். அந்த ஆள் மனசு மாறுதான்னு . என்னதா இருந்தாலும் இவ்வளவு பழகியும் ராமண்ணன்
வத்தி வெச்சுட்டான் . வருத்தமா இருக்கு. நாந்தா சிரமப்படணும். பாக்கறன். காண்ட்ராக்ட்லே
என்னோட டூட்டி எட்டு மணி நேரம் இருந்த்தே ஏழு மணி நேரமா கொறச்சிருக்காங்க. சுத்தம்
பண்றதுக்கு எட்டு மணி வேலை எதுக்குன்னு அஞ்சு மணி நேரம்ன்னு பண்னியிருக்காங்க.
பிரயோஜனமில்லாமெத்தா இருக்கு. போயிட்டிருக்கு “
ஆறு பேருக்கு ஒரு தொழிற்சங்கம்
.தொழிற்சங்கப்பிரதி வேறு அவ்வப்போது தலைமையகத்திலிருந்து தண்ணீர்ப் பிரச்சினை
பற்றிக் கூப்பிட்டு மிரட்டிக் கொண்டிருந்தார். தொழிற்சங்க இலக்கியப்பிரிவின்
மாவட்ட, மாநில
மாநாட்டிற்கென்று பழனி நன்கொடை அவ்வப்போது கொடுத்திருக்கிறான்.
“ தண்ணி பிரச்சினை அப்பிடியே இருக்குதே காம்ரேட். நீங்க எங்க ஆளுனாலெ வுட்டுட்டு
இருக்கோம். நல்லதண்ணி பைப் பிரச்சினை. அப்புறம் போரிங்க் பைப் பிரச்சினை “
“போரிங்க் பைப் பிரச்சினை சீக்கிரம் முடிஞ்சும். மூணு கொட்டேசன் வாங்குனதிலெ
ஒண்ணுலே சின்ன ரிமார்க். அது முடிஞ்சிடும். ஒத்துழைங்க காம்ரேட்”
கோட்டப்பொறியாளர் அலுவலகத்திற்கு
வந்த நாளில் மாட்டிக் கொண்டான் பழனி. மாடி கழிப்பறையை அந்தப் பெண்மணியிடம் அவன் காட்டியிருக்கலாம். ஆனால் கோட்டப்பொறியாளர் கழிப்பறைக்குள் போன வேகத்தில் திரும்பி வந்து முகம் சுளிக்க நின்றார்.
“ என்ன இது இவ்வளவு மோசமா இருக்கு. டாய்லெட் கிளினிங்க்கு காண்டிரேகடர் பணம் தர்ரதில்லையா என்ன.பினாயில்
சப்ளை பண்றதில்லையா. தண்ணியில்லியா “
“ மேல இருக்கற டாய்லெட்டுக்குப் போங்க. கொஞ்சம் தண்ணிப் பிரச்சினை “
“ மேல இருக்கறது இருக்கட்டும். இதெப்பிடி கெடக்குது. காண்டிராக்ட் கென்சல்
பண்ணலாம் போலிருக்கு. பொண்டாட்டி பேர்ல
கிருஷ்ண்ந்தானே இந்த வேலையைச்
செய்யறார் “
“ மோட்டர் ரிப்பேர் பைல் ஜிஎம் ஆப்பீஸ்லெ பெண்டிங் மேடம் ..”
“ பஞ்சாயத்து கனெக்ஷனல் தண்ணி வருமே..”
“ அதுலே அடப்பு. ரெண்டு வருஷமா தண்ணி வரி அவங்களுக்குக் கட்டலே. அதனால “
“ கட் பண்ணிட்டாங்களா “
“ இல்லே வரும்.”
“ ஏதாவது இருந்தா சொல்லுங்க பஞ்சாயத்துத் தலைவர் கிட்ட பேசறன். இல்லீன்னா
கமிசனர்கிட்ட பேசலாம். தண்ணியில்லாமெ எப்பிடி பொழங்குவாங்க ஸ்டாப்... யூனியன் வேற
பிரச்சினை பண்ணப்போறாங்க.கழுகுப் பார்வையா எது கெடைக்கும், பிரச்சினை பண்ணலாமுன்னு
காத்திட்டிருக்காங்க “
“ மோட்டார் ரிப்பேரிங் பைல், தண்ணி வரி பைல் ரெண்டும் பெண்டிங்க்லே இருக்கு மேடம் “
“ கேபிள் பில் செட்டில் ஆகாதது பாக்க நாளைக்குப் போறென்னு சொன்னீங்கல்லெ. அப்போ
ஜிஎம் ஆபிசிலெ இந்த ரெண்டு பைலியும் பாத்துட்டு வாங்க என்னாச்சுன்னு ”
வியர்த்துக் கொட்டியது பழனிக்கு. எப்போதும் பழனி தொளதொள் சட்டையைத்தான்
அணிவான் . அப்போது அச்சட்டை கூட அவனின் உடம்பில் இல்லாமல் அவன் நிர்வாணமாக
இருப்பது போல் அவனுக்குப் பட்டது.மதியம் சாப்பிடாமல், சாப்பாட்டு பக்சைக் கழுவாமல் வெறு உணவு முறைக்கு மாறலாமா என்ற யோசிப்பு
வந்தது
வேறு வழியில்லை பஞ்சாயத்துத்
தலைவரிடம் சரணடைந்து விட வேண்டியதுதானா.
தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வீட்டிற்கு அருகில் பழனி பல ஆண்டுகள்
இருந்திருக்கிறான். தினமும் காலை நடை பயிற்சியில் பழக்கம். அந்தப் பழக்க
விசுவாசத்தில் இரண்டு முறை அவருக்கு வாக்குகள் வேறு போட்டிருக்கிறான்.
அந்தப்பழக்கத்தில் அவரிடம் ஒரு மனு கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்து அவர் காலை ஏழு
மணிக்குள்தான் வீட்டில் இருப்பார் என்று பல விதங்களில், பல திசைகளில் ஆராய்ந்து ஒரு நாள்
அவரைச் சந்தித்து மனு தந்தான்.
” உங்ககிட்ட இதுவரைக்கும் ஒண்னுக்குமே வந்த்தில்லே “
” பஞ்சாயத்துத் தலைவர்கிட்டப் பேசிடறன். நாளைக்கே தண்ணி
வந்துரும் “
கிருஷ்ணனுக்கு உடம்பு
சுகமில்லை. இருநாட்களாகக் காய்ச்சலாக படுத்துக் கொண்டான்.அன்றைக்கு கழிப்பறையில்
சொட்டு நீர்கூட இல்லாதது சாப்பிட்டு முடித்தபின்னே தெரிந்தது பழனிக்கு. குடிக்கக்
கொண்டு வந்த குடிநீர் குப்பியும் ஏகதேசம் காலியாகிவிட்டது. அதில் மிச்சமிருப்பதில்
கையைக் கழுவி தினசரித்தாளில் துடைத்து சரிசெய்து விட முடியாது எண்ணெய் பிசுக்குடன் இருந்த
சோற்றுக்கையுடன் கேட்டை விட்டு வெளியில்
வந்து நின்றான். அலுவலக எதிர் வீட்டு வீரப்பன் நின்றிருந்தார். அவர் நெற்றியில்
அழுத்தமானக் கோடாகியிருந்த
சந்தனக்கீற்றுகளையும் நடுபொட்டு சிவப்புக்குங்குமத்தையும் சுத்தமாய் கழுவ
ஒரு குடம் தண்ணீராவது வேண்டும் என்று பட்டது. அவர் செய்யும் ஜோசியர் வேலைக்கு அந்த
சந்தனக்கீற்றுகள் அவசியம் என்பது போல் படும்.
” என்ன உள்ள தண்னியில்லையா. எனக்கு ஜோஸ்யம் தெரியாதாக்கும் “ என்று கேட்பது போல்
அவரின் முகத்துக் கண்களின் மிரட்டல்
இருந்தது.கண்கள் எதையோ துழாவின. சோறுக்கையை மறைக்கிற விதமாய் பின்புறம் கொண்டு
போய் வைத்தான் பழனி. “ என்ன ஆபீசர் சார் சாப்புட்டீங்களா “
“ சாபுட்டேன்.. நீங்க சாப்புட்டீங்களா “
“ சாபுடணும். ஆமா எங்க கிருஷ்ணனே காணம் ரெண்டு நாளா..”
“ உடம்பு சொகமில்லெ . டூட்டிக்கு வர்ரலே . ஏதாச்சும் விசேசமா“
“ ரெண்டு பில்லு கட்ட பணம் தந்திருந்தன். புது கனெக்ஷ்னுக்கு டெபாசிட் பணமும்.
டவுனுக்குப் போகும்போதுதானே கட்டுவார்.
எங்க இந்த வெயில்லே கிளம்பிட்டீங்க ”
“ சந்தைபக்கம் சும்மாதா “
தூரத்துப்பார்வையில்
சந்தைத்திடலின் தார்ப்பாய் போட ஆயத்தமாக
மூங்கிலகள் நடப்பட்டு நின்றிருந்தன அநாதையாக. வலது பக்கம் போனால் தெருமுனை குழாய்
வரும் அதில் இப்போது தண்ணீர் வராது. இடதுபக்க சந்தைக்குள் ஒரு குழாய் இருக்கிறது.
அங்கு பெரும்பாலும் எல்லா நேரங்களிலும் தண்ணீர் வரும். சந்தைமைதானத்தில் அய்ம்பது இலங்கை அகதிக் குடும்பங்கள்
இருக்கின்றன.. அவர்களுக்கென்று பிரத்யேகமாகப் போட்டதாம். கிருஷ்ணன் அவ்வப்போது அங்கும் தண்ணீர் பிடிப்பான். அது
சற்றே தூரம் என்பதால் வலதுபுற பொதுக்குழாயைப் பெரிதும் பயன்படுத்துவான்.
பழனியி நடை சந்தை குழாயின் முன்
வந்து முடிந்தது.குழாயைத் திருப்ப தண்ணீர்
கொட்டியது. சோத்துக்கை கலவையாக மினுங்க குனிந்து
கொஞ்சம் மண்ணைத் தொட்டுத் தேய்த்தான்.. ப வடிவில் கீற்றுக் கொட்டைகளும்
ஆஸ்பெஸ்ட்டாஸ் கொட்டைகளும் அழுக்குடன்
நின்றிருந்தன. ஏதோரு தன்னாவ நிறுவனம் குழந்தைகளுக்கான மாலை நேர வகுப்புகள் பற்றி
ஒரு போர்டு மூலம் பறை சாற்றியது.
ஒல்லியாய் மேலே சென்றிருந்த வேப்பம்மர சொற்ப நிழலில் இரண்டு குழந்தைகள்
அரைகுறை ஆடையில் உட்கார்ந்திருந்தன. அவ்வப்போது அந்தப்பக்கம் வரும்போது இது போல்
சில குழந்தைகள், சில பெண்களைப் பார்த்திருக்கிறான். இலங்கை போன்ற அழகான நாட்டிலிருந்து விட்டு
இந்த ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குள் அப்படி இவர்கள் வாழ்க்கை நட்த்துகிறார்கள் என்பது
அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.பேண்ட்டை சற்றே இருகால்களிலும் சுருட்டி விட்டு
கால்களை நனைத்தான். முகம் கழிவிக் கொண்டான். முழங்கை வரைக்கும் நீர் விட்டு
கழிவுக் கொண்டான். பெருமூச்சுடன் வானம் பார்த்தான். வெளிறிய நீலத்துடன் பிரகாசமாய்
இருந்தது. ” பஞ்சாயத்துத் தலைவர்கிட்டப் பேசிடறன். நாளைக்கே தண்ணி
வந்துரும் “ என்ற பாராளுமன்ற உறுப்பினரின் வார்த்தைகள்
அந் நேரத்து சூரியப் பிரகாசமாய்
அவனுள் பரவியிருந்தது.
நாளை என்பது பல வாரங்களாகி விட்டன.எதுவும் நடக்கவில்லை. ஒருநாள் தொகுதி
பாராளுமன்ற உறுப்பினரிடம் கைபேசியில் பேசினான்.
“ என்ன பழனி.. பஞ்சாயத்துத் தலைவரை ஒரு தரம் பாத்திருங்களேன். சரியா “
வேறு வழியில்லை பஞ்சாயத்துத்
தலைவரிடம் சரண்டைந்து விட வேண்டியதுதானா. இதை பல மாதங்களுக்கு முன்பே
செய்திருக்கலாம். மனு பற்றி விசாரிக்கையில் சரியான பதில் வரவில்லை.
“பஞ்சாயத்துத் தலைவரும் எம்பியும் ஒரே சாதி. ஆதிக்க சாதி. அப்புறம் ஒரே
கூட்டம் வேற. சாதியிலெ ஒரே கூட்டம் . அப்பறம் பணம் கொள்ளையடிக்கிறக் கூட்டம் “
அம்பேத்கார் பேரவை
இராவணன் நக்கலுடன் பழனியிடம் சொன்னார்..
“ உங்களுக்காக
இதெ எங்க யூனியன்லெயும் பிரச்சினையாக்காமெ இருக்கம். எத்தனை நாளைக்கோ “ அவர் சக ஊழியர்.வெளிப்புற வேலை என்று இருப்பார்.
நிலுவையில் உள்ள இரண்டு கோப்புகளூம்
சீக்கிரம் முடிந்து விடும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் எத்தனை நாளைக்குக் காத்திருப்பது.
குடிநீர்பிரச்சினை, கழிப்பறை நீர் பிரச்சினை, அலுவலகத் தோட்டம் வேறு காய்கிறது,கொஞ்சம் பசுமையாய் இருக்கிறது
என்று தலைமையகத்தில் முன்பொரு கூட்டத்தில் பாராட்டுத் தெரிவித்திருந்தனர். அந்தப்
பாராட்டைக் காப்பாற்ற வேண்டும். வாமொழிப் பாராட்டுதான் . பாராட்டுப்ப்த்திரம்
என்று எதுவும் இல்லை. இருந்திருந்தால் திரும்பப் பெற்றிருப்பர்.
கோட்டப்பொறியாளரிடம் ராமண்ணன் போல் யாராவது உண்மை நிலையைப் போட்டுக் கொடுத்து
விட்டால் அலுவலக ரீதியாக நடவடிக்கை என்று
வரும். தொழிற்சங்கத்திடம் போய் நின்று பொய்
சொல்ல வேண்டியிருக்கும். முக்கியத் தொழிற்சங்கத்தைச் சார்ந்த முற்போக்கு இலக்கிய அமைப்பின் புரட்சிகர
இலக்கிய அமர்வுகளுக்குத் தவறாமல் போய் வந்தான் பழனி. தன் மீது கருணைப் பார்வை அல்லது தோழமைப் பார்வை
பட்டுமே என்று .. புரட்சிகர இலக்கியங்கள்
அவனுக்குப்பிடிக்காது என்றாலும் தவறாது சென்று வந்தான். சென்ற
வாரக்கூட்டத்தில் ஒரு தொழிற்சங்கத்தலைவர் ஒரு புரட்சிகர நூலை அறிமுகம் செய்தார்.
பெண் தொழிலாளர்களைப் பற்றிப் பேசினார். குறிப்பாக அவர்களுக்கான கழிப்பறை, பிரசவ கால சலுகைகள் பற்றி
விரிவாய் பேசினார். .அய்ந்துத்
தொழிலாளர்களுக்கு மேல் உள்ளத் தொழிற்சாலையில் பெண்களுக்குத்
தனிக்கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். கழிப்பறைகள் அமைந்திருப்பதும் அவற்றைப்
பயன்படுத்த நேரமும் என்பது பெண் தொழிலாளர்களைப் பொறுத்த வரை முக்கியமான
பிரச்சினையாகும். .இது ஆரோக்யம் சார்ந்த
முக்கியப் பிரச்சினையும் பெண்களுக்கான பாதுகாப்புப் பிரச்சினையும் கூட.
தொழிற்சாலைகளில் உற்பத்தி இலக்கு அடைய நேரத்தை இழக்க நேரிடும் என்று
கழிப்பறைக்குப் போக பல பெண்கள் விரும்புவதில்லை. பெண்கள் கழிப்பறையைப்
பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி முறைப்படுத்துவது என்பது சில
தொழிற்சாலைகளில் நடக்கிறது. பெரும்பாலும் அவை போதவில்லை, சுகாதாரமற்றதாக உள்ளன அல்லது
வெகுதூரத்தில் உள்ளன . கழிப்பறை விசயம் நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையின்
முக்கியப் பொருளாகும். ஆனால் . தொழிற்சங்கங்கள் மூலம் முதலில அதைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள
வேண்டும் என்றார் . சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளைப் பற்றிப் பேசினார்.
அவனின் ஆளுமைக்குட்பட்ட
இணைப்பகங்களில் பெண் தொழிலாளர்களே இல்லை என்பது அவனுக்கு ஆறுதலாக
இருந்தது.அவன் மனைவிக்கு கூட அதுதான் பெரும் ஆறுதல்.
கிருஷ்ணனிடம் கடைசி கட்ட ஆலோசனைகளைப்
பெறுவது என்ற யோசனையில் இருந்தான் பழனி.
“ சார் புது போன் கொஞ்சம் வந்திருக்கே. பழையதே ரீபிலேஸ் பண்ண கொஞ்சம்
தர்லாமா “
“ தர்லாமே. நாப்பது வந்திருக்கு. நாலு தர்லாம்,பத்து சதம் “
“ கரண்ட் ஆபீசிலே கேட்டாங்க, அப்புறம் பஞ்சாயத்து யூனியன்லே கேட்டாங்க “
“ குடுத்துட்டு ரசீது வாங்கிங்க “
“ பஞ்சாயத்து யூனியனுக்கு போறப்போ நீங்களும் வாங்க “
“ உம் “
“பஞ்சாயத்துத் தலைவர் இருக்கறப்போ சொல்றன் . போலாம் “
” பஞ்சாயத்துத் தலைவர்கிட்ட போய் நிக்கணுமான்னு. எவ்வளவு சிரமப்படறோம் .
ஒத்துழைக்கவே இல்லை பாருங்க .”
“ அங்க போயி மன்னிப்பு கேட்கறதெல்லா ஒண்ணுமில்லெ.சாரின்னு கூட சொல்ல வேனாம். கூட வாங்க. புது போன்
குடுத்துட்டு தண்ணி விசயம் பாத்திருங்கன்னு நான் சொல்றன். நீங்களும் ஆமா
பாருங்கன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அவர்கிட்ட
..போதும். ரோட்டு பைப்லெ தண்ணி புடுச்சிட்டு வர்றது எனக்கு சிரமமா இருக்கு
சார். வீட்லே தண்னி வந்தா கூட புடிக்கமாட்டன். இங்க தெருவிலெ அலையறன் “
“ சாரி ..செரி கிருஷ்ணன் போலாம். பஞ்சாயத்து போன் நல்லா வேலை
செய்யுதில்லே “
“ அய்க்கிய நாட்டு சப்சிடி இருக்கறதுனால சர்வீஸ் தடைபடக் கூடாதுன்னு டெயிலி போன்
பண்ணி டெஸ்ட் பண்ணி விபிடி ரிஜிஸ்டர்லே எண்ட்டீரி போடறமே சார் . தலைவர்கிட்ட
உங்களெப்பத்தி சொல்லிருக்கறன். கூட வாங்க போதும்
“
அன்றைக்கு உற்சாகமாக பழனி பத்து
போண்டாவும், பத்து மெதுவடையும் வாங்கிக்கொண்டான். அலுவலகத்திற்கு வரும் வழியில் நான்காம்
கி மீட்டரில் ஒரு தள்ளு வண்டிக்கடையில் அவை சுவையானதாக்க் கிடைக்கும். அளவில்
பெரிதாகக் கூட இருக்கும். நகரத்தின் எந்தக்கடையிலும் அவை மூன்று மடங்கு விலை
இருக்கும் . ஸ்டாப் மீட்டிங் என்று நடக்கிற நாட்களில் கவனமாக அதிகப்படியாக
வாங்கிச் செல்வான்.கூடவே பத்து ஜாங்கிரித் துண்டுகளும் வாங்கினான். அவ்வப்போது
போண்டாவும், மெதுவடையும் வாங்கிக் கொண்டு வந்து சகஊழியர்களை உபசரிப்பான்.அன்றைக்கு இனிப்பும் கூட வாங்கியிருந்தான்.
அவனின் வாகனம் அபரிமிதமான வேகத்தில்
சென்றது. பழையபடியே அலுவலகத்திலேயே டிபன்
பாக்சை கழுவி வீட்டிற்குச் செல்வது அவன் மனைவிக்குப் பிடித்திருந்தது. சாப்பிட்ட
எச்சில் கையை நன்கு சோப் போட்டுக் கழுவிக் கொள்வதில் எப்போதும்
அவனுக்கு ஆர்வம் உண்டு.
எண்ணெய்பிசுக்கில்லாமல் கணினியையும் கோப்புகளையும் தொடுவது அவனை வெகு
இயல்பாக்கியிருந்தது.. அலுவலகத் தோட்ட்த்தில் கருவேப்பிலை செடி துளிர்க்க
ஆரம்பித்திருந்தது. சீக்கிரம் அசோகமரம் பச்சையாக நிற்கும் போலிருந்தது. ஒருபெரும்
பிரளயத்திலிருந்து தப்பித்து விட்டது
போலிருந்தது.
“ பஞ்சாயத்து பைப் தண்ணி மறுபடியும் வர்தே அதுக்கா சார் டிரிட் “ என்று கேட்டார் இராவணன் .
“ எங்க யூனியன் கேஸ் எடுக்கத் தேவையில்லாமெ பண்ணிட்டீங்க. பஞ்சாயத்துத் தலைவர்
இருக்கானே ஆதிக்க சாதிக்காறன் சார் அவனும்
அவன் கூட்டமும். இந்த நாட்டெ சீரழிக்கறதே ஆதிக்க சாதி சார். நீங்க சொன்ன
ஒரு சின்ன கமண்ட்டே மனசிலெ வச்சிட்டு சிரமப்படுத்திட்டான் பாருங்க சார். “
“ அதில்லீங்க . எப்பவும் டிரீட் தர்ரதுதானே”
“ அது எனக்கும் தெரியும்தானே .ஏதோ சம்பந்தப்படுத்திச் சொன்னன் “
உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு அன்றைக்கு வந்திருந்தது.அதில்
அந்தப்பஞ்சாயத்து பிற்பட்டோர் தொகுதியாக அறிவிக்கப்பட்டிருந்ததை பழனி நினைத்துக் கொண்டான்.இராவணக்குத்
தெரியவில்லை போல.
கந்தசாமி இருமுறையும் சென்ற முறை பெண்கள் தொகுதி என்பதால்
அவர் மனைவி ஒருமுறையுமாக பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து அந்தப்பஞ்சாயத்தில்
அவர்கள் அதிகாரம் செய்து வந்திருப்பதை நினைத்துக் கொண்டான்.
என்னமோ பதிவு உயர்வுகிடைத்தது போல ஒரு மகிழ்ச்சி பழனியின் மனதுக்குள் வந்து
விட்டது.இங்கிருந்து நகர அலுவலகங்களில் ஒன்றுக்கு அவன் மாற்றம் கேட்டிருந்தது
கிடைத்து விட்டது போன்ற மகிழ்ச்சி
அவனுக்கு. குண்டுகுண்டான போண்டாவை அன்றைக்கு ரொம்பவும் ருசித்துச் சாப்பிட்டான்
பழனி..