வர்த்தகமாகிப் போன சிந்தனையை புத்தகங்களே மீட்கும்!
-----------------------------------------------------------
திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் நம்பிக்கை
14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சனியன்று
காலை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் சுமங்கலி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை
திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் வெளியிட, பாரதி
புத்தகாலயம் நிர்வாகி நாகராஜன், தாய்த்தமிழ்ப் பள்ளித்
தாளாளர் கு.ந.தங்கராசு, அனைத்திந்திய கலை இலக்கிய
பெருமன்றம் நிர்வாகி ரத்தினவேல் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். உடன் எழுத்தாளர்
சுப்ரபாரதிமணியன், முன்னாள் மாமன்ற
உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் உள்ளனர்.
உலகமயச் சூழலில் வர்த்தகமாகிப் போன சிந்தனையை
புத்தகங்களே மீட்க முடியும் என்று திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ்
கூறினார்.14வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமையன்று காலை புத்தக
வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ்
சிறப்புரை ஆற்றுகையில் கூறியதாவது:குழந்தைகளுக்கு இலக்கணம் சார்ந்த மொழியாக
தமிழைத் திணித்ததால்தான் அவர்கள் அச்சப்பட்டு விலகி இருக்கின்றனர். ஆனால்
குழந்தைகளின் உளவியலுடன் இணைந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தமிழில்
சிந்திக்கும் திறனைக் குழந்தைகளுக்குத் தர மறுத்துவிட்டோம்.தற்போது தமிழ்ப்
படைப்புலகில் 1950க்கு முந்தைய புத்தகங்கள் மறுபதிப்புகளாக வருகின்றன.
படைப்பிலக்கியங்கள் வருகின்றன. ஆனால் சிந்தனை இலக்கியங்கள் மிக மிகக் குறைவாக
வருகின்றன. தமிழில் சிந்திப்பது,
எழுதுவது
குறைந்துவிட்டது. அண்மையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அடக்கி
வைக்கப்பட்டிருந்தது வெளிவந்திருக்கிறது. இளைஞர்களுக்கு எல்லாவற்றையும் பற்றி
விமர்சனம் உள்ளது. ஆனால் நமக்கு தலைமைப் பண்புள்ள தலைவர்கள் இல்லை. தலைவர்கள்
வியாபாரிகளாக இருக்கின்றனர். பணம் சம்பாதிக்கத்தான் அரசியல் என்ற நிலை
உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித சுயநலமும் இல்லாத தலைவர்கள் அரிதாகவே
உள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையில்தான் நம்பக்கூடிய ஆதாரமாக புத்தகங்கள் திகழ்கின்றன.
உலகமயச் சூழலில் எல்லாமே வர்த்தகமாகிப் போனது. சிந்தனையும், செயலுமே வர்த்தகமாகிவிட்டது. சேவையாகத் தர வேண்டிய
கல்வியும், மருத்துவமும்
வியாபாரமாகிப் போனது. அரசுக்கே தவறான பார்வை உள்ளது. கல்வி நிலையங்களில் கட்டிடம், உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளதா என்று ஆய்வு
செய்யும் அரசாங்கம், நல்ல ஆசிரியர்கள், தரமான கல்வி இருக்கிறதா என்று பார்ப்பதில்லை.
சிந்தனையே வர்த்தகமாகிப் போன சூழலில் நமக்கு ஆதரவரளிக்கக் கூடியதாக புத்தகங்களே
இருக்கின்றன.
சொந்தமாக சிந்திக்கும் பக்குவத்தை புத்தக வாசிப்பே
வழங்கும்.தமிழ்ச் சமூகத்தில் திரைப்படத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது.
வன்முறையையும், காதலையுமே திரைப்படங்கள்
இளைஞர்களிடம் திணிக்கின்றன. ஆண்களின் வேலை காதலிப்பது, பெண்களின் வேலை காதலுக்கு இரையாவது என்பதாகவே
திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இத்தகைய உளவியல் பாதிப்புகளில் இருந்தும் விடுபட
புத்தகங்களே வழிகாட்டும். இவ்வாறு ஞானராஜசேகரன் பேசினார். முன்னதாக
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமை
வகித்தார். சுப்ரபாரதிமணியனின் சுமங்கலி நாவல் ஆங்கில மொழிபெயர்ப்பு, களவாடப்பட்ட குழந்தைப் பருவம் உள்ளிட்ட நூல்கள்
வெளியிடப்பட்டன. எழுத்தாளர் நித்திலன், கவிஞர்
ஜோதி, மொழிபெயர்ப்பாளர் ராம்கோபால்
உள்ளிட்டோர் உரையாற்றினர்.
வாசகர்கள் கருத்துக்கள்
நலமா. நன்றி