சிறுகதை: கட்டு :
சுப்ரபாரதிமணியன்
இந்த
மாதம் சேவற்கட்டு இல்லை என்பதை தனக்குள் நிச்சயப்படுத்தி கொண்ட மாதிரிதான்
வால்பாறைக்குப் புறப்பட்டுபோனார் பொன்னையன்.
சேவற்கட்டு தடைபடுவது அவ்வப்போது நிகழ்வதுண்டு. உள்ளூர் முக்கிஸ்தர்கள்
சாவு, தேர்தல் நாள் , உள்ளூர்
திருவிழா நாட்கள் என்று வருகிறபோது தடைபடும். அல்லது தள்ளிப் போகும்.
இந்த முறை தடைபட்டது மனதை
வேதனைப்படுத்தியது.சேவற்கட்டின்போது கையில்
ஆழமாய்,, வெட்டப்பட்ட
கொய்யா போல் ,,பதிந்து விட்ட கத்தியின்
வடு போலாகிவிட்டது.
“ எளசுக என்னமோ தெரிஞ்சோ
தெரியொமெயோ பழகிடுச்சுக. என்ன பண்ண முடியும்.. எது தப்பு எது சரின்னு தீர்மானம்
பண்ற வயசா அது...பெரிய மனசு பண்ணி அதெப்பாத்திருக்கலா “
“ நீங்க பொலம்பறதெ
மனசுக்குள்ளார வெச்சுக்ஙக. முணுமுணூப்பு கூட பெரிசா இருக்கக் கூடாது .. ஆமா.
செவத்துக்கும் காதிருக்கும். எதுக்குங்க பொல்லாப்பு. ஓடிப்போன ரெண்டு பேரும்
பொழங்கற சாதியா என்ன... அப்புறம் சும்மா
வுட்டிருவாங்களா “ கனகம் சப்தம் போட்டு
அதட்டினாள். பூனையொன்று அவளின் காலடியில் வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது.
மியா என்று சப்தம் போட்டு மீசையைத் தடவிக்கொண்டிருந்த
பொன்னையனைப் பார்த்தது. அதன் விழிகளின் ஊடுருவல் வேறு பக்கம் பார்க்கச் செய்தது
அவரை. அதன் மீசை சிலிர்த்துக் கொண்டு நின்றது.
“ என்ன பார்வை பாரு..
ஆளையெக்கொல்ற மாதிரி “
“ ஆமா ..இந்தப் பூனையோட
பார்வைதா இந்த ஊர்லே இருக்கறவங்களுக்கும்.. ஜாக்கிரதையாத்தா இருக்கணும்”
“ நமக்குள்ள
பேசிக்கறதுதானே..... என்னமோ மனசு சங்கடமா இருந்துச்சு. அந்தப்பையன் கண்ணுலெயே
இருக்கான். சாவக்கட்டுநடக்கறப்போ அந்தப் பக்கம் நடமாடிட்டிருப்பான். கீழ வுழுந்து கெடக்கற கத்தியெ நிதானமா
பொறுக்கியெடுத்துத் தர்ரதேன்ன.. ஆளுகளுக்கு காயம் பட்டுட்டா ஈரத்துணி கொண்டு
வந்துட்டு கட்டு போட்டு பண்ற உபகாரம் என்னன்னு கண்ணுக்குள்ளையே இருக்கான்.
பவர்லூம் ஓட்டறதெ சாவக்கட்டன்னைக்கு
வுட்டுட்டு வந்து வேடிக்கை பாப்பான். சேவல் மேல பந்தயம் கட்டற பழக்கம் கூட இல்லை.
என்ன போட்டினு பாத்து நல்ல ஜெயிப்புன்னா ஆஹான்னு சொல்வான். அல்லாருக்கும் ஆதரவா
இருப்பான் .ரொம்ப நல்ல பையனாத்தா தோணுச்சு .”
“ அந்தப் பொண்ணெ கூடப்
பாத்திருக்கிங்களா ‘
“ பாத்த மாதிரி தா ஞாபகம்
இருக்கு. சேரிப்பொண்ணுக சீமை கருவேலவேலியோறமா சாவக்கட்டெ நின்னு வேடிக்கை
பாத்துட்டுப் போவாங்க. அதுல யாராச்சுமா கூட இருந்திருப்பா அந்தப் பொண்ணு “
“ நாளைக்கு போலீஸ் கேசுன்னு
வந்து அடையாளம் காட்டச் சொன்னா , அடையாளம் காட்டிருவீங்க
போல ‘
“ அதெல்லா இல்லே .. என்னமோ மனசு கேக்காமெ பேசறதுதா.’
“ செரி . அவங்க எங்க
இருக்காங்களாம்.. அதுதா ஓடிப்போனவங்க.. ”
“ எனக்கென்ன தெரியும் ..
என்னமோ என்ரகிட்ட சொல்லிட்டு போன மாதிரி பேசறெ.. எங்காச்சும் , ஏதாச்சும் டவுன்லெ இருப்பாங்க..டவுன்லதா சாதி தெரியாமெ
நடமாடலாம்.பாதுகாப்பாயும் இருக்கும் “
“ எந்த மூலைக்குப் போனாலும்
பையனோட சாதிக்காரங்க சும்மா வுட்டுருவாங்களா. எந்தத் டவுனா இருந்தாலும், எந்த பெரிய ஊரா இருந்தாலும் வுட்டிருவாங்களா.. உடுமலையில
என்னாச்சு. பட்டப்பகல்லியே வெட்டுனாங்களே”
“ கனகு.. என்னமோ பொம்பளையா
இருந்து நீ பேசற மாதிரி தெரியலே. உனக்குள்ளறமும் சாதிப் பேயி புகுந்திர்ச்சு போல “
“ அதெல்லா இல்லீங்க. என்னமோ
படபடன்னு பேசறதிலெ வந்திருச்சு அப்பிடி... எல்லா சுமுகமா நடக்கணும். இருக்கணும். “
அந்தக் காதலர்களைத் தேடி ஊரிலிருந்து நாலைந்து
குழுக்கள் புறப்பட்டுப் போய் விட்டதாகச் சொன்னார்கள். மூன்று நாட்களாக எந்தத்
தகவலும் இல்லை.ஊரில் பதைபதைப்பு இருந்து கொண்டிருந்தது.பவர்லூம்கள் ஓடாமல் நின்று
வேடிக்கை பார்த்தன. ஏதாவது தகவல் வந்தால்தான் வேறு வேலை என்பது போல் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தனர்.பேச்சிலும் மூச்சிலும் காதலர்கள் பற்றிய நினைப்பே
ஆகாசம் அளவு இருந்த்து.
முந்தின
நாள் இரவு வடக்குப்பக்கத்துச் சேரியில் சில வீடுகள் எரிக்கப்பட்டன. நாலைந்து ஆடுகள் தீயில் கருகிப் போய் விட்டன. இரண்டு
எருமைகள் தீய்க்காயங்களுடன் தப்பின.வீடு இழந்தவர்கள் சேவற்கட்டு மைதானமான
பொட்டல்காட்டு ஆலமரத்தடியில் தஞ்சம் புகுந்தார்கள்.வியாழக்கிழமை இந்த மாத்திற்கான
சேவற்கட்டு என்பதை முடிவு செய்திருந்தார்கள். மாதாமாதம் சேவற்கட்டு தினம் மாறும்
.சவுகரியத்துகேற்ப ஏதாவது ஒரு நாளில் வைத்துக் கொள்வார்கள். புதன் இரவு அந்தத்
தீக்கிரை சம்பவம் நடந்து விட்டது. எல்லாம் கரிக்கட்டையாய் கிடந்தததை வயது
வித்யாசம் பார்க்காமல் அழுது புலம்பி சொன்னார்கள்.. யார்யாரையோ சபித்துக்
கொண்டார்கள் ,.
“ செரிங்க .. சாவக்கட்டெ
வேடிக்கை பாக்க வர்ற அந்த பொண்ணுகளோ, அவங்க வூட்டுக்காரங்களோ
நம்ம வீட்டு வாசல்லே வந்து நின்னுருக்காறங்களா “
பொன்னையன் வீட்டு வாசலில் சேவற்கட்டு அன்று மாலையில் பத்துப் பேர் கொண்ட
கும்பல் சுலபமாய் வந்து சேர்ந்து விடும்.
கோச்சைக்கறியை ( சேவற்கட்டில் தோத்துப் போய் இழந்து விட்ட சேவல்) தீயில்
கருக்கி குடலை யெடுத்து சுத்தம்
செய்கிறதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.. கோழிக்குடல், குண்டிக்காய், வெட்டப்பட்ட கால் பகுதிகளை
யாராவது பெற்றுக் கொள்வர். சில சமயங்களில் கோச்சைக்கறி ஓரிரண்டுக்கு மேல் என்றாகிற போது கொஞ்சம் சந்தோஷத்துடன்
அவர்களின் முகங்களில் பிரகாசம் இருக்கும், பொன்னையனிடம் இருந்து அவர்
தருவதை யார் பெற்றுக் கொள்வது என்பதில் எந்தப்போட்டியும் இருக்காது. “ இந்த தபா நீ வாங்கு.. போன தபா பெரிசு வாங்குச்சில்லெ... அடுத்த தபா
கீரைக்காரி வாங்கட்டும் “ என்று தீர்மானித்துக்
கொண்ட மாதிரி கழிவுகளைப் பெற்றுக்கொள்ள
யாராவது தேர்வானவர் என்பது போல்
பொன்னையன் முன் வந்து நின்று பெற்றுக் கொள்வர். “ எங்க வூட்டு ஆம்பளெ சலவைப்பட்டறைக்குப் போனவங்க எந்த நேரம் வர்றாங்களோ. “ என்று யாராவது பெண் தயங்கிக் கொண்டு நின்றால் பொன்னையனே குடலை
ஈர்க்கங்குச்சியால் பிளந்து கழிவை
வெளியேற்றி சுத்தம் செய்து கொடுத்து விடுவார். “ சின்னதா
அறுத்துப் போட்டா பீன்ஸ்மாதரி வந்துருங்க... . மகராசி அம்மா வருட்டுமா ‘‘
என்று கனகத்திடம் சொல்லி விடைபெறுவார்கள். “ அந்தக்
காலத்திலெ இப்படி வந்துட்டுப் போறப்போ
உங்களுக்குக் குடுக்க கள்ளிப்பழமும் , எலந்தைப்பழமும் கெடந்திருக்கு.
இப்போ வேலியே இல்லாமெப் போச்சுங்க “ என்பார்கள். ” எதாச்சும்
குடுத்துதா வாங்கனும்ன்னு என்ன இருக்கு “ என்பார்
பொன்னையன்.
அவர் அப்பா காலத்திலிருந்து இது நடந்து கொண்டுதான்
இருந்தது. ஆவாரங்குச்சியை நிலத்தில் வைத்து நிழலைப்பார்த்து நேரம் சொல்வார் .ஜாமம், நாழி பார்த்து சேவலைச் சண்டைக்கு விடுவார்.பட்சி சாஸ்திரத்தை மனப்பாடமாக
மனதில் கொண்டிருப்பார். ஏகதேசம்
ஜெயிப்புதான், வெளியூர் கட்டுக்கென்று
போக மாட்டார். உள்ளூரில் நடக்கிற போது தகவல் கிடைத்தால் போவார்.
ஆலமரத்தடியில் நிரந்தரமாய் சேவற்கட்டு நடக்கிற
விசயத்தை அவர்தான் முன்னிருத்தி நிரந்தரமாக்கினார். ஆலமரத்தடியை
வாரச்சந்தையாக்கலாம் என்று சிலர் ரொம்ப நாள் யோசனையில் இருந்தார்கள்.
“ இருக்கற எடத்தெவுட்டுட்டு எதுக்கு மாத்தணும். “
“ ஆலமரத்துக்கு இங்கிலீஷ்லே
பானியன்னு பேரு.. வேறவரத்துக்கு வந்த வடநாட்டுக்காரங்க ஆலமரத்தடியிலதா வேவாரம்
பண்னியிருக்காங்க. இங்கிலீஷ்காரன் அதனாலதா பனியான்னு வடநாட்டுக்காரனையும்
கூப்புட்டிருக்கான். “
“ வெள்ளக்காரந்தா போயாச்செ.
இன்னம் எத்தனெ நாளைக்கு அவனெப் புடிச்சு தொங்கறது. வுடுங்க. அவன் கத்துக்குடுத்த
இங்கிலீஷ்தா ஒழிய மாட்டேங்குது. இந்த விசயத்தையாவது ஒழிப்போம் “
அதன் பின் ஆலமரத்தடி சேவற்கட்டுக்கான நிரந்தர
இடமாகி விட்டது.
” போலீஷ்காரன் , கடன்காரன்களெப்பாத்தா ஓடி ஒளியறதுக்கு செரியான எடமா இருக்கும் ஆலமரம் “
நேற்று கூட ஆலமரத்தடியில் போய் கொஞ்ச நேரம் உட்கார்திருந்தார் பொன்னையன்.
விஸ்தாரமாய் ஆலம் விழுதுகள் சுமைகல்
வரைக்கும் பரந்திருந்தன. நூறு அடிக்கும் மேலாக உயர்ந்திருந்தது. மிருதுவாகத் தோன்றும் விழுதுகள் பூமியில்
திடமானத் தூண்களைப் போல் நின்றிருந்தன.ஆல இலைகளை தையல் போட்டு பலகாரம் சுட்டு
வைக்க, சாமிக்கு படையல் வைக்க கனகம் பயன்படுத்துவாள்.சூரியன் வெகு சிரமப்பட்டு
புகுவது போல் நிழல் அடர்த்தியாய் பரவியிருக்கும் அதனடியில்..
முற்றின இலைகள் தோல் போல் கெட்டியாக அவரின் கால்களை நெருடியது.
ஆலம் பழம் கனிந்து சிவப்பாகி கிடப்பதை முகம் மலரச்
சொல்வாள் கனகம். ஆலமரத்தைப்பார்க்கும் போதெல்லாம் கனகம் கும்பிடுவாள். மகாவிஷ்ணு ஆல மரத்தின் பட்டை, பிரும்மதேவன் மரத்தின் வேர்கள், பரமசிவன் மரத்தின் கிளைகள்
என்றும் சொல்வாள்.
“ என் கொழந்தைகளுக்கு விஷ்ணு, பிரம்மன், பரமசிவன்ன்னு ஆலமரத்து
நெனப்புலே பேர் வெக்கணும். இப்போதைக்கு
சின்னவனுக்கு பரமசிவன்னு பேர் வெச்சதோட நிக்குது. “
”
ஆலமரம்மாதிரி அவன் நிக்கிட்டு கனகு. போதும் “
வால்பாறையின் தேயிலைத் தோட்டங்கள் அவள் கண்களில் நிழலாடின. இழவு கேடக அங்கு
அவளுக்குப் போக ஆசைதான். வால்பாறை முருகன் கோவில் விபூதி தனக்கு வந்து சேர்ந்து விடும் என்பதை முழுமையாக
நம்புகிறவள். தேயிலையின் இளம் பச்சை கண்களில் படந்து குளுமை வந்து விடுவது
அவளுக்குப் பிடிக்கும்..
“ சின்னவனை கூட்டிடுப்
போங்களேன் . அவனும் கொரங்கு அருவின்னு பாத்துட்டு குளிச்சிட்டு வரட்டும்.இந்த
ஓடிப்போனவங்க ரகளைலே ஸ்கூல் நாலு நாளௌக்கு தொறக்காது போல “
.
“ நான் வால்பாறை போகுலெம்மா.
வளச்சு வளச்சு போற ஹேர் பின் பெண்ட்டுலே உசிரே போகும். வாந்தியாகும். டவுன்
எக்ஸ்பிஷ்னுக்கு கூட்டிட்டு போறையா “
“ அதிலென்னடா விசேசம்.. “
“ பனிக்குகை, பனிமலை இருக்காமா .. குளிருமாமா. வால்பாறை மாதிரிதா இங்கயும் குளிருமாமா.
அப்பிடி செட்டப் பண்னியிருக்காங்களாம் .. போய்ப்
பாக்கலாம்மா “
“ போன தரம் எக்ஸ்பிஷனுக்குப்
போயி ரகளை பண்ணுன மாதிரி பண்றீராதடா. ராட்டாந்தூரி ஆடுனமா, பானி பூரி சாப்புட்டமான்னு கெளம்பறது நல்லது. “
“ அதெப்பிடம்மா. அங்க
எக்ஸ்பிஷ்ன்லே சாவக்கட்டுன்னு போட்டுட்டு வேடிக்கை பாக்க பத்து ரூபாயும் வாங்கிட்டு
சாணைக்கத்திக்கு பதிலா பிளாஸ்டிக் கத்தியெ
கட்டறாங்க “
“ வெளையாட்டுதாண்டா “
“ வெளையாட்டுதான்னாலும்
நெசம்ன்னு இருக்கணூம்மா. அப்பா கட்டற சாவக்கட்லே பாஷாணம் தடவுன கத்தியெ கட்டற வெளையாட்டெல்லா போயி நெசமான
கத்தி கட்டறாங்கில்லே ”
“ கத்தி கட்டுனாவே போலிஸ்
வந்திரும் ”
“ அவங்களும் காசு வாங்கிட்டு
வேடிக்கை பாத்துட்டுப் போயிடறாங்கம்மா. எக்ஸ்பிஷனுக்கு வேடிக்கை பாக்கப் போலாம்மா “
போனதரம்
டவுன்ஹால் எக்ஸ்பிஷனுக்கு போன போது ஆட்டுக்கிடாய் சண்டை, ராட்டாந்தூரி எல்லாம் இருந்தன. சேவல் சண்டை என்று போர்டு போட்டதைப் பார்த்து
அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கிப்
போனான். சேவல்களை மோத விட்டார்கள்.
கால்களில் பிளாஸ்டிக் கத்திகளைக்கட்டி
சண்டையிட வைத்தார்கள்.எந்த சேவல் களைத்து விழுகிறதோ அது தோற்றதாய்
சொன்னார்கள். நிஜ சேவற்கட்டுக்கத்தியொன்றை தந்து கட்டச் சொன்னான் பரமசிவன். யாரோ
அவனை அடிக்க வர கனகம் போய் இழுத்து வந்தாள்.
” எங்கத்தியெ கட்டியிருதா நெஜ சாவக்கட்டா
இருந்திருக்கும். பசங்கெல்லா கட்டு கட்டுன்னு ரகளை பண்னுனாங்க. “
வால்பாறைக்குப் போன பொன்னையனுக்கு அங்கு நிலை
கொள்ளவில்லை. இரவில் கடும் குளிர் தூங்க விடாமல் இம்சித்து விடிந்த பின்னரே
தூக்கத்தைக் கொண்டு வந்தது.சாவு காரியம் கேட்க வந்த இடம் . கேட்டாயிற்று .இனியும்
திரிந்து என்ன பார்க்க இருக்கிறது. ஆறுமாதத்திற்கொரு முறை வந்து போகிற இடம்தான்.
இரவுகளில் புலியும் யானையும் சகஜமாய் நடமாடுவதாய் தினசரிகளில் புகைப்படங்களைப்
பார்த்திருக்கிறார். இழவு கேட்டது போதும்
புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்தார். பாலாஜி கோவிலுக்குப் போகலாம் என்ற
எண்ணத்தையும் குளிர் புறந்தள்ளியிருந்தது.
“ இருந்து கறியாக்கித் தின்னுட்டுப் போலாங்கோ “
” குளிர் சிரம்மா இருக்கு.ஊசியா குத்துதே. புலியும்
யானையும் வேற கனவுலே வருதே..அட்டைக கால்லே ஏறிட்ட மாதிரி இம்சை”
“ குளிருக்குப் பயந்து
மில்வேலைகளுக்கு இங்கிருந்து உங்கூருக்குத்தா பத்து பதனஞ்சு பொண்ணுக போயிருக்காங்க. மாசம் ஒரு தரம் வந்துட்டுப்
போறாங்க. அவங்கெதாச்சும் உங்க கண்ணுக்கு படுவாங்களா.”
“டவுன் மில்லுகளா
இருக்கோணும். கண்லே படறதுக்கு வாய்ப்ப்பில்லே. குளிரெத்தாண்டி புலிகளுக்கும்
யானைகளுக்கும் பயந்து
போயிருப்பாங்கதானே ”
ஊர்
திரும்பிய போது ஆலமரம் வழியாய் போனால்
ஓடிப்போன காதலர்கள் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும், ஊர்
எப்படி இருக்கிறது என்று வீடு போகாமலே தெரிந்து கொள்ளலாம் என்று வந்தவர் இருட்டு ஆக்கிரமித்திருக்க
ஆலமரம் தனித்திருப்பதைக் கண்டார். இருட்டு எல்லாவற்றையும்
மறைத்திருந்தது.இருட்டைப் போர்த்திக் கொண்ட பிரமாண்டமான யானை போல் ஆலமரம் நின்றிருந்தது.
“ வீடு எரிஞ்து போனவங்க அங்கதா
இருந்தாங்க .. சாவக்கட்டு கட்டற ஆலமரத்தடியில எதுக்கு.. போங்கன்னு
விரட்டறதுக்குன்னு கொஞ்சம் பேர் வந்து தடியோட நின்னிருக்கங்கோ. எதுக்கு சிரமம்ன்னு
அவங்க கிளம்பிட்டாங்க “ கனகம் சொன்னாள்.
“ இப்போ எங்க இருக்காங்க”
“ செல்லப்பண்ணன் தோட்டத்திலெ
தங்கியிருப்பாங்க போலிருக்கு”
“ அவெரெ யாரும் கேட்கலியா “
“ கேட்டாங்க. ஆலமரத்தடி
சாவக்கட்டுக்குனு இருக்கற பொதுஎடம்தா அங்க
இருக்க உடமாட்டீங்கறீங்க. என் தோட்டத்திலெ வந்து இருக்கட்டும்... கவர்மெண்ட்காரங்க
வந்து ஏதாச்சும் வேற ஏற்பாடு பண்ற வரைக்கும் இருக்கட்டும்ன்னார். எல்லாரும் அவரோட
மொரட்டுத்தனம் தெரிஞ்சதுனாலே சண்டைக்குப் போகாமெ வெலகீட்டாங்க. நீங்க இவ்வளவு
வெரசலா வால்பாறையிலிருந்து சாவக்கட்டுக்குன்னா வந்தீங்க “
“ சாவக்கட்டா.. எப்போ.. ஆலமரத்தடியிலயா “
“ சந்தோசத்தைப் பாரு..
நாளைக்கு சாவக்கட்டுன்னு சொல்லிதா எல்லார்த்தையும் ஆலமரத்தடியிலிருந்து கெளப்பி வுட்டுட்டாங்க. சிலருக்குச்
சவுகரியமாப் போச்சு. நீங்க சாவக்கட்டு நாளைக்குன்னு தகவல் தெரிஞ்சிட்டுதா
வால்பாறையிலிருந்து கீழே எறங்கிட்டைன்னு நெனச்சன் ”
பொன்னையனின் மனதில் பட்சி சாஸ்திரம் புரண்டு ஓடியது. வால்பாறை குளிர்போல்
நாளைய சேவற்கட்டில் தன் வல்லூறு சேவல்
ஜெயிக்கப்போகிற ஆந்தை, மயில் வகையறா சேவல்கள்
கனவில் வந்து தூக்கத்தைப்பிடுங்கின . பாஷாணம் தடவிய கத்திகளைக்கட்டி சேவற்கட்டு
நடப்பதாய் கனவு வந்தது.புலிகளும் யானைகளும் கனவில் வராதது ஆறுதலாக இருந்தது பொன்னையனுக்கு..
அவர்
நினைத்தது போலத்தான் அவரின் வல்லூறுசேவல் மூர்க்கத்துடன் சண்டையிட்டு வெல்ல
மாலையில் இரண்டு கோச்சைகள் சேவற்கட்டின் முடிவில் வீட்டிற்கு வந்தன. ஒன்றை தீயில்
கருக்கி சுத்தமாக்கியவர் வீட்டுத்திண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்.
கருக்கும் போது வடக்குச் சேரி தீப்பிடித்து கருகிக்
கிடந்தது ஞாபகம் வந்தது. எல்லாம் அட்டைக்கரியாக்க் கிடந்தன. செத்துப்போன ஆடு, மாடுகளை இந்த களேபரத்தில் யாரும் சாப்பாட்டிற்கென்று தொட்டிருக்க
மாட்டார்கள் என நினைத்தார்.
திண்ணைப்பக்கம்
யாரும் வரக்காணோம். கழிவுகளை சுத்தமாக்கினார். கோழிக்குடலைக்கழுவி
துண்டாக்கினார்.பொலபொலவென்று விடியும் நேரத்து
வெளிச்சம் போல் குடல் துண்டுகள்
மின்னின.
” திண்ணைப்பக்கம் சின்னவனெக் கூடக் காணோம்...”
யாரும் திண்ணைப்பக்கம் வரக்காணோம்.பூனை அங்குமிங்கும் ஓடி நிழல்காட்டி
வேடிக்கை செய்தது.இருட்டு சீக்கிரம் லேசான நிழலை மறைத்து விடும்
போலிருந்தது.தூரத்துப் பார்வைக்கு எல்லாம் மங்கலாய் இருந்தது.இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டு கரிக்கட்டையாய் நிறைந்து விடும்
போலிருந்தது.
திண்ணையை விட்டிறங்கிய பொன்னையனின் கையில் ஒரு முழுக் கோச்சை
இருந்தது.அவரின் கட்டம் போட்டசட்டையில் ரத்தக் கறையும் கோச்சையின் பிசிறுகளும்
ஒட்டியிருந்தன.சட்டை ஒரு வித செம்மண் நிறத்தில்
திளைத்தது.
“ எங்கிங்க இன்னொரு
முழுக்கோச்சையோடக் கெளம்பீட்டீங்கீங்க. உங்க ஒறம்பறையாருக்காச்சும் குடுக்கறதா
சொல்லிட்டீங்களா.”
“ இல்லெ. செல்லப்பன்
தோட்டத்துக்கு .. “ என்றபடி சுத்தம் செய்ததை
ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வலது கையிலும் முழுக்கோச்சைக்கறியை இடது
கையிலும் பிடித்தபடி விரைசலாக நடக்க
ஆரம்பித்தார். முழுக்கோச்சையின் நான்கைந்து
இறகுகள் காற்றில் பறந்து அவருக்கு வழி காட்டியது.
Subrabharathimanian/8-2635 Pandian nagar,
Tirupur 641 602
094861 01003/ subrabharathi@gmail.com.
www.rpsubrabharathimanian.blogspot.com