சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 18 ஜனவரி, 2017

மனசாட்சியே எழுத்து : சுப்ரபாரதிமணியன்

இம்மாதம் ஜனவரி 2017ல் தி இந்து தமிழ் பத்திரிக்கையில் என் சாயத்திரைநாவல் வெளியீட்டு விழா திருப்பூரில் நடந்தது பற்றிய   செய்தியை நொய்யல் “ பற்றியத் தொடர் -எடுத்து வைத்து  மனதில் கொண்டு வந்து பார்த்தேன்
18 ஆண்டுகளுக்கு முன் எழுத்தாளர் சாயத்திரைநாவல் வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. திலகவதி உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்கள் பலர், இந்த நாவலில் முன்வைக்கப்பட்டிருந்த சாயப்பட்டறைகள், அவற்றால் ஏற்படும் சூழல்கேடுகள் குறித்து விமர்சித்துப் பேசினர்.

இதில் சிறப்புரையாற்றிய ஜெயகாந்தனின் மாறுபட்ட சிந்தனையுடன்கூடிய உரைவீச்சு: சாயம் தீது. சாயம் கொடிது. சாயம் கூடாது. அதை ஒழித்தே தீர வேண்டும் என்று உரக்கவே சொல்கிறார்கள். அழுத்தமாக, அதற்கு எதிரீடாகவே சொல்கிறேன். சாயம் அவசியம். சாயம் தேவை. சாயம் மனிதகுல வளர்ச்சியின் மற்றொரு பரிணாமம். அது இல்லையெனில் நமக்கு இந்த நட்சத்திர விடுதி சுகம் கிடைக்குமா? இந்த நகரின் வியப்பூட்டும் வளர்ச்சி சாத்தியமா? ஆயத்த ஆடைகளை விதவித வண்ணத்தில் மனிதர்கள் அணிந்து அழகு காட்டிட முடியுமா? சாயம் நமக்கு கொடுத்த கொடைகள் இவை. சாயம் விஞ்ஞானம். சாயத்தால் தீது விளைந்தால், அது அடியோடு கூடாது என்று கூச்சலிடுவதில் என்ன நோக்கம் இருக்கிறது. சாயத்தின் தீமைகளை அகற்ற புதிய, புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்; உருவாக்க வேண்டும். அடுத்தகட்ட பயணத்துக்கும் அதை அனுமதிக்க வேண்டும். அதுதானே அறிவுடமை?’’.

ஜெயகாந்தன் அன்று பேசியது இப்போது பலருக்குத் தெரியாது. ஆனால், அவர் பேசிய காலத்துக்கு முன்பும், பின்பும், அந்த சாயம் என்ன பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதை திருப்பூர் மக்களும், சுற்றுவட்டார விவசாயிகளும், ஆண்டுக்கு ரூ.26 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் பனியன் நிறுவன உரிமையாளர்களும் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

இது யோசிக்கையில் "கலை என்பது பிரச்சனையை சுற்றி எழுப்பப்படும் புனைவே" என்ற
 சார்த்தரின் வாசகம் கடந்த சில நாட்களாய் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது.
இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்தப் பிரச்சினைகளை எழுத்தாளன் தான் ஊடுருவிப்பார்க்கவேண்டியிருக்கிறது. அறிவியலும் தொழில்நுட்பமும் பணமாற்றங்களும்  மனிதனின் முன்னேற்றத்திற்கானதல்லாமல் சுய சிதைவை நோக்கியே சென்று கொண்டிருக்கிறது என்பதை என் சொந்த ஊரின் மக்களின் வாழ்க்கை திரும்பத் திரும்ப உணர்த்திக் கொண்டே இருக்கிறது. . அந்தச் சிதைவு தரும் கண்ணோட்டம் அபத்தம் சூன்யம் என்று வாழ்க்கை பற்றி வழக்கமான சொற்களாலேயே இறுதியில் புரிந்து கொள்ளப்படுகிறது. கடவுள் இருக்கிற உலகு என்று இதை  பெரும்பான்மையான உழைக்கும் மனிதனும் நம்புகிறான்.
நிச்சயமற்றதான வாழ்வில் மனிதனின் இருத்தலுக்கு இருக்கும் ஏதோ அர்த்தத்தை சின்ன வட்டங்களுக்கும் அடைத்துக் கொள்கிறான்.எந்த வித அர்த்தமும் இல்லாத உலகில்  கடவுள் பற்றின கருத்துக்கள் கொஞ்சம் பிடிமானதாய் தற்காலிகமாய் இருக்கிறது கொஞ்ச காலம்.சமூகத்தையும்  ம்னிதனையும் மாற்றி அமைக்க்க் கூடிய தத்துவ விசாரங்களோ  அறிவியல் தேடல்களோ பாடத்திட்டத்தோடு நின்று விடுகின்றன அந்தப்பாடத்திட்டங்களுக்கு கூட கட்டுப்பாடு என்பது போல் குழந்தைகளை குழந்தைத் தொழிலாளி ஆக்கிவிடுகிறோம் எங்கள் ஊரில். .எந்த உலகம் மனிதனின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளதோ அது அவனிடமிருந்து உழைப்பிலும் வாழ்வதிலும் அந்நியப்பட்டு நிற்கிறது. அர்த்தமற்ற உலகம். அர்த்தத்தைத் தேடும் மனித மனம் தடுமாறிக்கொண்டே இருக்கிறது.இந்தத் தடுமாற்றம்தான்  ஒரே ஒரு தீவிரமானப் பிரச்சினை தற்கொலையில் சென்று முடிவதுதான் வாழக்கையில் ஏதோ கணத்தில்  நம்புகிறான். அந்த தற்கொலைக்குமுன்பாக கொஞ்சம் வாழ்ந்து பார்க்கிற ஆசையில் நாட்களைக் கடத்துகிறான் சாதாரண மனிதன், சாதாரணத் தொழிலாளி...



இன்னொருபுறம் இவ்வாண்டில் வந்திருக்கும் என் மூன்று நாவல்ள் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
1. * நைரா  - ( நைரா- நைஜீரிய  ரூபாய் )
உலகமயமாக்கல் வியாபாரச்சந்தைகளை   எல்லா நாடுகளுக்குமாய் திறந்து விட்டிருக்கிறது. வியாபாரம, பிரச்சினைகள் என்று மக்கள் அலைகிறார்கள். புலம்பெயர்ந்தும் வாழ நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படி பல மாநில மக்களும், வேற்று நாட்டு மக்களும் தொழில் நகரங்களில் வாழ்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் நைஜீரியர்கள். வியாபாரம் சார்ந்து வந்து குழுக்காக வாழ்கிறார்கள். வாழும் இடங்களில் அவர்களின் நடவடிக்கையால் உள்ளூர் மக்களுக்கு  கலாச்சார அதிர்ச்சி  ஏற்படுகிறது. அந்நியமும் ஏற்படுகிறது. அவர்களின் புறச்சித்திரங்கள் லகுவாகக் கிடைத்து விடுகிறது. அக அளவில் அவர்களின் பிரச்சினைகள் பன்முகத்தன்மை கொண்டாதாய் இருக்கிறது. அவ்வகை மக்களின் ஒருகுறிப்பிட இடத்தில் குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளும் அனுபவங்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. உள்ளூர் மக்களின் அதிர்ச்சி அனுபவங்களும் கூட. எப்படியும்   சிக்கல்கள் சார்ந்த வலிகளாயும் இருக்கின்றன.. புதிய திறப்பாய் பலரின் வாழ்க்கை இதில் காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் வாழும் மனிதர்களின் மன நெருக்கடிகளும், கல்வியின் வழியே பார்க்கும் பார்வையும் இதில் குறிப்பிடத்தக்கது.
* 2 .கோமணம் நாவல் பாதயாத்திரை என்பது வாழ்க்கை பயணத்தின் ஒரு பகுதி . அந்தப் பயணத்தின் வழியே வர்க்க வேறுபாடு. சாதியம், பண ஆதிக்கம், பக்தியின் போலித்தனம் போன்றவற்றை சுப்ரபாரதிமணியன் வெளிப்படுத்தி பல    சமூக அவலங்களை வெளிக்கொணர்கிறார். குறிப்பாக குடிசார்ந்த விசயங்கள், பெண்களின் பிரச்சினைகள், தொழிலாளர்களின் நிலை என்று பல கோணங்களை இந்நாவல் காட்டுகிறது. பகுத்தறிவுப் பார்வை ஊடாடி நிற்பது ஆசிரியரின் சரியான நிலையைச் சொல்கிறது. புதிய களம், திருப்பூரைத் தாண்டிய சுப்ரபாரதிமணியனின் அனுபவங்கள் 

3.  “  முறிவு நாவல்
நவீன முதலாளித்துவம் பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாகவே வைத்திருக்க விரும்புகிறது. சமூகத்தளத்தில் போராடி முன்னுக்கு வர அவர்களுக்குத் தளம் இயல்பாகக் கிடைக்கிறதா என்றால் சிரமம்தான். முதல் புள்ளியிலிருந்தே அவள் மீண்டும் மீண்டும் செயல்படவேண்டியிருக்கிறது. அல்லது அங்கேயே முடங்கி விட வேண்டியிருக்கிறது. பட்டாம்பூச்சியாக முயலாமல் க்ம்பளீப்பூச்சிகளாக  முடங்குகிற பெண் தொழிலாளிகளில் ஒரு பாத்திரத்தை மையமாகக்  கொண்டு இந்நாவல் பெண் தொழிலாளியின் அவ்வகை  மாதிரி வாழ்க்கையை முன் வைக்கிறது. சுப்ரபாரதிமணியனின் 14 வது நாவல் இது. இவரின் பல நாவல்கள் பல முக்கிய இலக்கியப்பரிசுகளையும், பல மொழிகளில் மொழியாக்கமும் செய்யப்பட்ட சிறப்புகளையும் கொண்டவை.பல பல்கலைக்கழகங்களில் பாடநூலாகவும் 75க்கு மேற்பட்ட ஆய்வாளர்களையும் உருவாக்கியுள்ளன.  .. இந்நாவலும் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது

இவற்றை முன் வைத்து என் படைப்புத்தன்மை பற்றி யோசித்துப்பார்த்தேன்

            மனிதனின் மனதை  நிரப்புவதற்கு   ஏதோ மலை உச்சியை அடைகிற பிரயத்தனத்தில் ஈடுபடுகிறான். அந்த மலை உச்சிக்கு காவடி எடுத்துக் கொண்டு போகிறான். அங்கு போகையில் தீர்த்த செம்புகள், அலங்காரங்கள் அவன் எடுத்துச் செல்லும் காவடியை கனமாக்குகின்றன.கீழே இறங்கும் போது தீர்த்த கலசங்களில் இருந்த தண்ணீர் இல்லாமல் இருக்கிறது. ஆனால் அலங்காரங்கள். , விபூதி, பஞ்சாமிர்தம் என்று எடை குறைவதில்லை.மகிழ்ச்சியுடன் இருப்பதாக தனக்குத்தானே  கற்பனை செய்து கொள்கிறான். குசிப்படுத்திக் கொள்கிறான்.அதற்குத்தான்  கெடாவெட்டுகளும், கிரகப்பிரவேசங்களும், கருமாதி முற்றங்களும் இருக்கவே செய்கின்றன. புலனின்பங்களில்   கிடைக்கும் ஆனந்தம் பெரிய  ஆறுதலாகிறது. யதார்த்த உலகின் மீது காட்டப்படும் அலட்சியம் அவனை உறுத்துவதேயில்லை. ஆனால் உயிர்த்தெழுதுவிடலாம் என்ற நப்பாசை இருந்து கொண்டே இருக்கிறது.  கல் நெஞ்சம் சாதாரணமாகவே உருவாகி விடுகிறது .  சகமனிதர்களைப் பற்றிய  அனுதாபம் கூட இருப்பதில்லை.கடவுள் குறித்த அனுதாபம் இருக்கும் அளவுக்குக் கூட.... யதார்த்தத்தின் உண்மை அவன் தனக்குள்ளாகவே  வாழ்ந்து கொண்டிருப்பதைச் சொல்கிறது. இறந்து போகிறவர்களின் கதையை ஒவ்வொருவரும் எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள்.  அவனின் வார்த்தைகளை யாரோ இட்டு நிரப்பிக் கொள்கிறார்கள். அந்த வார்த்தைகள் சாதாரண மனிதனின் வார்த்தைகள்.
அழுக்கடைந்த சிறு நதிகளின் பரப்புகளுக்கு இடையே கொலைகளாலும் துக்கங்களாலும் தன்னை நிறுத்திக் கொள்கிறான.  தேவதூதர்களும் கடவுள்களும் சாத்தான்களும் மதுப்போத்தல்களும் கொஞ்சம் அபூர்வமாய் புத்தகங்களும் கடைசிப்புழுக்கள் தின்ன யாரின் பின்னாலோ அணிவகுத்து நிற்கிறான். விசாரணை என்பதெல்லாம் இல்லை. அதற்கான நிதானமான மொழி என்று எதுவும் இல்லை என்பதும் தெளிவாகிறது.மொழி இழந்த்து போல் இயந்திரங்களுடன் உரையாடிக் கொண்டே இருக்கிறான். வார இறுதியில் சம்பளப் பணத்துடன்  அதிகமாகவே உரையாடுகிறான். நேசம் கொள்கிறான். வருடம் ஒருதரம் போனஸ்.( அதுவும் பீஸ் ரேட், தினசரி கூலி என்றாகி விட்ட99 சதம் தொழிலாளிக்கு வெறும்  பிஸ்கட்) என்பதெல்லாம் அவனின் கனவுக்குள்தான் இருக்கிறது.  
ஆன்மீக ஆறுதல் தர நிரம்பப்பேர் தென்படுகிறார்கள் ஒரு சூரியனைப்போல் சுற்றிதிரிகிறார்கள். கடவுளின் இருப்பு பற்றி கேள்வி எழுப்புகிறவர்களின் குரல் உரக்க இல்லாமல் போகிறபடியாகிறது . ஒழுங்கமைக்கப்பட்ட பயணத்திற்கு கூட கடவுள் வருவார் என்றே சில சமயங்களில் நம்பி நடக்கிறான்.சுதந்திரத்தின் பொருளை அற்ப போதைக்குள்ளும் தள்ளாடல்களுக்குள்ளும் மலை ஏறுவதிலும் மலைப்பிரசங்கத்திலும் கண்டடைகிறான். .   ஒப்புதல் வாக்குமூலம் என்ற் ஒன்று நிரந்தரமாக்க் கல்லில் பொதிக்கப்பட்டே இருக்கிறது,

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்துக்குக் கொண்டுவரும் பணியை மேற்கொண்டபோது, அது மிகவும் கடின மானது என்று நினைத்தேன்; மனிதர் யாரும் தங்களுடைய ரகசியத்தைக் காப்பாற்றும் திறனற்றவர்கள். ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான்; அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறதுஎன்று யாரோ சொன்னது ஞாபகம் வருகிறது..அந்தக்கசிவை கொஞ்சம் கதைகளாய் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.15 நாவல்களும் 200 கதைகளும் 52 புத்தகங்களும் என்று அவை என் முன் நின்று எனக்கே ஆச்சர்யம் தந்தாலும் என் நகரத்தில்  சாதாரண தொழிலாளி வார சம்பளத்தை மனதில் கொண்டு செயல்படுவதைப் போல கூட இல்லாமல்  எந்த நப்பாசையுமின்றி   தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.இதுவே இந்நகரினை குறித்துப்பேச  ஆசைப்படுகிற ஒருவனின் மனச்சாட்சியின் குரலாக இருக்கிறது.

 subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003



புதன், 11 ஜனவரி, 2017

கதை கதையாய் காரணங்கள் : சுப்ரபாரதிமணியன்
-------------------------------------------------



     சின்னான் ( 4  எப் வகுப்பு )  மயங்கி விழுந்தபோது       அவனைப் புடிங்கடா ..புடிங்கடா “  என்று யாரோ சொல்வது அவன் காதுகளில் சரியாகவே விழுந்தது.
காலை அரசுப்பள்ளிப் ப்ரேயரில் அப்படியொன்றும் நேரம் ஆகிவிடவில்லை. அப்படியொன்றும் வெயில் வந்து விடவில்லை. சுள்ளென்று சுட்டெரிக்கவுமில்லை. மிதமாகத்தான் இருந்தது.

விழுந்தவனை சேகர் மடியில் கிடத்திக் கொண்டான்.அவன் நாலைந்து நாளாய் பள்ளிக்கு வரவில்லை. ஏதாவது மளிகைக்கடையில், திருமணமண்டபங்களில்  மாலை நேரங்களில் வேலை என்று போய் விடுபவன். படிச்சுட்டு வேலைக்குத்தா போகப் போறன். அதுதா இப்பவே ஆரம்பிச்சுட்டேன் என்பான். அதனாலே எதுக்குப் படிக்கணும் என்று பள்ளிக்கு வராதது பற்றி யார் கேட்டாலும் பதில் சொல்வான். அவன் தான்  இன்றையப் பிரேயரில் திருக்குறள் படிக்க இருந்தவன். அந்த நேரம் பார்த்து கழிப்பறைக்குப் போய் விட்டான்.
      தேவி   அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்”  என்று திருக்குறளை ஒப்புவித்து விட்டு அதற்கு அர்த்தம் சொன்னாள். தினசரி தாளிலிருந்து செய்தி படித்த காமேஷ் சீனப்பிரதமர் இந்தியா வருகை பற்றிச் சொன்னான். சீனப்பிரதமர் மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டார். அரசு பள்ளிக்கு இலவச தினசரியை வழங்கும்  ஜாகீர் வீடு அதே தெருவில்தான் இருக்கிறது.  அவர் தினசரியை படித்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்கு அனுப்புவார். அடுத்த  நாளில்  ஆசிரியைகள் மத்தியில் போய்விட்டு வந்தபின் காலை பிரேயரில் யாராவது ஆசிரியை கையில் அது அகப்படும்.  என்ன படிக்கச் சொல்ல என்பதில் ஆராய்ச்சியெல்லாம் இருக்காது. காலை  பிரேயர் ஆசிரியை ( யாராவது ஒருத்தர் ) யாரையாவது அழைத்து இன்னிக்கு இதை படிச்சுடு என்று நீட்டி விடுவார். இன்றைக்கு காமேஷ் கையில் அது வந்து விட்டது. அவனும் வீட்டில் செய்தி அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் போடும் அப்பாவால் சீனப்பிரதமர் ஊருக்குப் போய் விட்டதை அறிந்திருந்தாலும் அவர் வருகையைப் பற்றி இன்றைக்கே பள்ளியில் அறிவித்தான். அவன் அப்பாவிற்கு தெரிந்திருந்தால் ரொம்பவும் வருத்தப்படுவார். சூடான செய்திகளுக்கு அலைவரிசைகளைத் திருப்பிக் கொண்டிருக்கும்  அவர் இப்படி ஆறின பழங்கஞ்சியை தன் மகன் குழந்தைகளுக்கு வாசிப்பது பிடிக்காமல்தான் இருக்கும்.
    பள்ளியில் செய்தி வாசிப்பிற்குப் முன்னால் கதை வாசிப்பு என்று ஒன்று இருக்கும். இன்றைக்கு கதை வாசிப்பு என்றில்லாமல் கதை ஆரம்பித்தது பற்றி சுந்தரக்கண்ணன் சொன்னான்.




. கி.மு.700ல் முதல் கதை பாறைகளில் எழுதப்பட்டது.
அது கில்காமிஸ் காவியம்: கில்காமேஷ் உருக் தேசத்தை ஆண்ட கொடிய அரசன். அவனுடைய அட்டூழியம் தாங்காமல் மக்கள் கடவுளிடம் முறையிட அவர் எங்கிடு என்ற மிருக மனிதனை சிருட்டிக்கிறார் எங்கிடுவை மயக்கி போருக்கு அழைத்துவர பேரழகியான கணிகையை அனுப்புகிறார்கள். கில்காமேசுக்கும் எங்கிடுவுக்கும் இடையில்  யுத்தம் ஆரம்பமாகி முடிவில்லாமல் நீடித்ததால் அவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். மாபெரும் செயல்கள் செய்வதற்காக இருவரும் தேசயாத்திரை சென்றபோது வழியில் ஒரு ராட்சசனைக் கொல்ல கடவுளர்கள் எங்கிடுவைப் பழி வாங்குகிறார்கள். அவன் இறந்துபோக கில்காமேஷ் துக்கம் தாங்காமல் நீண்டநாள் புலம்புகிறான் இறுதியில் கில்காமேஷ் ராச உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு மிருகத் தோலை அணிந்து மரணம்  அடைகிறான். களிமண்ணில் எழுதி சுட்டு பார்வைக்கு அக்காலத்தில் வைக்கப்பட்டது. .
   பிரேயரின் போது சூரியன் சுட்டெரித்து  மயங்கி விழுந்தவர்கள் பட்டியலில்  நிறையப் பேர் இருந்தார்கள். கவுன்சிலர்  இலவச புத்தங்கள் வழங்க வந்த நாளன்றுதான் யோகநாதனும் சுருண்டு விழுந்தான்.

     சின்னான் தலைமையாசிரியர் அறையில் தூக்கிக் கொண்டு போய் கிடத்தப்பட்டான். தலைமையாசிரியர் இல்லாமல் அப்பள்ளியில் தலைமையாசிரியைதான் இருந்தார். அப்படியிருக்கையில் தலைமையாசிரியர் என்று போர்டு சின்னதாய் தொங்குவது சின்னானுக்கு எப்போதும் ஆச்சர்யமே அளித்திருக்கிறது.  அவன் வாய் டிபன் பாக்ஸ்  டிபன் பாக்ஸ் என்றே முணுமுணுத்தது.
நான்காம்  வகுப்பிற்குள் ஆசீரியை காந்தாள் நுழைந்ததும் சின்னான் சின்னான் என்றுதான் குரல்கள் வந்தன கசகசவென்று. அவனுக்கொன்னுமிலடா.. ரெஸ்ட் எடுக்கிறான். அடுத்த வகுப்புக்கு வந்திருவான்.”  வாய்ப்பாடுகளிலிருந்துதான் அவள் ஆரம்பிப்பாள் . காந்தாள் கணித ஆசிரியை. அன்றும் வாய்பாட்டிலிருந்து அய்ந்து இடங்களை பூர்த்தி செய் என்ற ரீதியில் எழுதிப் போட்டு விட்டுப் போய் விட்டாள்.
 “ சின்னானைப் பாத்துடுட்டு வந்தர்றன்.  அமைதியா இருங்கோ “  .
   சின்னான் வாய் டிபன்பாக்ஸ் டிபன் பாக்ஸ்  என்று முணுமுணுத்தது.  அது அவன் கைகளுக்கு வந்து விட்டது.  அவன் கண்களை மலங்க மலங்க்  விழித்து பசி என்றான்.   ”  உன் டிபன் பாக்ஸ்தா இருக்கே. யாரோ கால்களில் தள்ள தரையில் கிடந்தவனின் தலை அருகில் வந்து நின்றது.
நான்காம் வகுப்பில் சர்ச்சை ஆரம்பித்தது. சின்னானுக்கு என்னவாகியிருக்கும். ஏதாவது உடம்பு சரியில்லையா. மருத்துவமனைக்கு கொண்டு போகப் போகிறார்களா. மருத்துவரே பள்ளிக்கு வந்த சந்தர்ப்பங்கள் உண்டு. பசியால் மயக்கம் போட்டிருப்பானா. பசியென்று சொல்லி விட்டால் போது ஏதாவது கிடைக்கும். குறைந்தது பன்னோ, தேனீரோ கூட இருக்கலாம்.பக்கத்துக் கடையிலிருந்து பக்கோடா கூட கிடைக்கலாம். பக்கத்து கடை பக்கோடான்னா நானும் மயங்கி விழத் தயார் என்றான் சிஜீ.
டிபன் பாக்ஸைத் திறந்து அவுக் அவுக்கென்று   தாளித்த சாதத்தை விழுங்கினான். அவனுக்கு அவசரத்தில் விக்கிக் கொண்டால் என்னவாகும் என்ற பயத்தில் மகேஸ்வரி ஓடிப்போய் அவளின் பாதுகாப்பான மினரல் பாட்டிலைக் கொண்டு வந்து நீட்டினாள்.
காலையில் சாப்புடிலியா..
 “ அம்மா பனியன் கம்பனி வேலைக்கு நேரமாச்சுன்னுனு இதைக் கையில் குடுத்துட்டு வெரசலா போயிட்டாங்க
தொண்டையில் சோறு அடைத்திருக்க வந்த குரலில் அதன் அர்த்தம் தெரிந்தது.      ஸ்கூலுக்கு வந்த பொறகு சாப்பிபுட்டிருக்கலேமே.
 “ என்னமோ பயம். அப்புறம் சாப்புடலாமுன்னு
சாப்புட்டுத் தொலச்சிருக்கலா..
அவன் பல நாட்கள்  சாப்பாடு எதுவும் இல்லாமல்தான் வருவான். மதிய உணவு வரைக்கும் பசியைத் தாக்குப்பிடித்து விடுவான். மதிய உணவு சாப்பிட்டபின் தூக்கக் கலக்கம் வந்து விடும் . சமாளிப்பதில் சிரமம் என்பது போல் ஆகிவிடும்.
     நான்காம் வகுப்பில் ( எப் ) விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. சின்னான் மயங்கி விழுந்ததற்கான காரணங்கள் பற்றி;
1. இன்று கணக்கு மார்க் தரப்போவதாக காந்தாள் ஆசிரியை சொல்லியிருந்தார். சின்னான் கணக்கில் வீக்.  பெயிலாகி நிற்பவர்களில் அவனும் ஒருவன் எப்போதும்.              2. ஆங்கிலப்பாடத்தை  நேற்று ஒரு தாளில் எழுதியிருந்தான். நோட்டில்தான் எழுதிக்கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தொடர்சி இருக்கும். பின்னால் திருப்பி பார்ப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நோட்டில்லாமல்  ஆங்கில வகுப்பிற்கு வரக்கூடாது என்று இளஞாயிறு ஆசிரியர் கட்டளை
.3. அவன் அம்மாவிற்கு உடம்பு சுகமில்லை. அந்தக் கவலை.
4. நேற்று  மோகன்ராசு ஆசிரியரிடம் அடி வாங்கியிருந்தான். அவன் சட்டை மோசமான அழுக்கில் இருந்ததால்.
5. நோ டீச்சிங்.. ஒன்லி கோச்சிங் என்று எழுதச் சொல்லிக் கொண்டே இருக்கும் துளசி டீச்சருக்கு அவனைப் பிடிக்காது.

டிபன் பாக்ஸில் இருந்தை அவுக் அவுக் என்று சாப்பிட்டு முடித்ததில் ஆசிரியைகளுக்கு ஆறுதல். டிபன் பாக்ஸிலேயே கைகழுவிக் கொள் என்று மகேஸ்வரி ஆசிரியை பாட்டிலை நீட்ட  நாலைந்து விரல்களைச் சேர்த்து  வினோதமாய்க் கழுவினான்.மெல்ல தூக்கம் வருவது போல கண்களை மூடினான்.    படுத்துக்கோ என்ற வார்த்தைகள் ஆறுதல் தந்தன. கண்களை மூடிக் கொண்டான். அம்மா சின்ன வயதில் பள்ளிக்கூடம் போகலியா பூச்சாண்டி கிட்டக் குடுத்திருவன்”  என்று பயமுறுத்துவாள். பள்ளிகூடத்தில் நிறைய பூச்சாண்டிகள் இருப்பதாய் அவன் ஒருதரம் சொன்னபோது வகுப்பில் எல்லோரும் வெகுவாகச் சிரித்தார்கள். ஆமோதிக்கிற சிரிப்பு அது.

சுப்ரமணி அறுபத்தாறு மார்க்”   தேங்ஸ் டீச்சர்
ராஜி இருபத்தஞ்சு
ஜெயபால் நாப்பது
சின்னான் எழுபது . குட் நன்றி டீச்சர்.

கணக்குத்தாளை வாங்கியபோது அவன் உடம்பு நடுங்குவதாக இருந்தது. காந்தாள்  ஆசிரியை இல்லை. வேறு கணக்கு ஆசிரியர் வந்து விட்டார்.  பிரபாகர். இனி நல்ல மார்க்தான் வரும்.

தூக்கத்திலிருந்து  விழிப்பு வந்து விட்டது. நல்ல தூக்கம்.. பூச்சாண்டி எதுவும் தூக்கத்தில் வரவில்லை. அவனைச் சுற்றி யாருமில்லை. எதிர் பீரோவின் மீது உலக உருண்டை நீலக்கலரில் உட்கார்ந்திருந்தது. இந்தப்பள்ளிக்கு வந்த பின் உலக உருண்டையை அவன் தொட்டுப் பார்த்த்தில்லை. யாரும் தொடக்கூடாது.  எல்லா நாடுகளும் நீரில் அமிழ்ந்திருப்பது போல் தென்படும்.முந்தின திருநீலகண்டபுரம் பள்ளியில் உலக உருண்டையைத் தொட்டதால் பிரம்படிபட்டிருக்கிறான்.  எழுந்து  கதவு ஓரம் வந்து நின்றான். தொட்டிப்பக்கம் எல்லோரும் தட்டுகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். மதிய சத்துணவு   நேரம் முடிந்து விட்டது. அவனுக்கென்று யாரும் எடுத்து வைத்திருக்கப்போவதில்லை. மதிய சாப்பாடு இல்லை. ராத்திரி வரை தாக்குப்பிடிக்க வேண்டும்.
காலையில் மயங்கி விழுந்ததை விட பசி மறுபடியும் வயிற்றைக் கவ்வும், மதிய உணவு அவனுக்கென்று இல்லாமல் போய் விட்டது பற்றி அவனுக்கு நினைப்பு பெரும் சுழலாய் எழுந்து அவனை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பசி சுழலை எதிர்பார்த்திருந்தான்.

சின்னான் நிமிர்ந்து உட்கார முயன்றான். யாருக்கும் அவன் சொல்லாத மயங்கி விழுந்ததன் காரணம் அவனுள் சுழன்றது.
அப்பா ரேசன் கார்டை மளிகைக்கடையில் அடகு வைத்திருந்தார், ரேசன் கடைக்குப் போகமுடியவில்லை என்று அம்மா அழுது கொண்டிருந்தாள். அவன் அப்பள்ளியில் சேரும் போது அவன் பள்ளி டிசி ரேசன் கடையில்தான் இருந்தது அடகுக்கு. அதை மீடக அம்மா அழுதழுது காசு சேர்த்தாள். நானெல்லா காதெத் தொட்டு காமிச்சு  பள்ளிக்கூட்த்திலே சேந்து படிச்சேன். அப்பிடி தொட்டு காமிச்சு சேரு போடா என்று அவர் விரட்டினார்.திருநீலகண்டபுரத்திலிருந்து  பாண்டியன் நகர் பள்ளிக்கு மாற வேண்டியிருந்தது. சாயப்பட்டறை மூடப்பட்டதில் வேலையில்லாமல்   போய்  வீடு மாற்றும் படலம் மறுபடியும்..  கடன்  கொடுத்தவர்கள் தொல்லை வேறு..
அவன் வகுப்பு மாணவர்கள் அவன் மயங்கி விழுந்ததற்கான காரணப்பட்டியல் போட்டது அவனுக்குத் தெரியவில்லை. அதில் நான்கு காரணங்கள் இருந்தன.

அவன் பட்டியலில் ஒன்றுதான்.








சிறுகதை:    கட்டு : சுப்ரபாரதிமணியன்


     இந்த மாதம் சேவற்கட்டு இல்லை என்பதை தனக்குள் நிச்சயப்படுத்தி கொண்ட மாதிரிதான் வால்பாறைக்குப் புறப்பட்டுபோனார் பொன்னையன்.  சேவற்கட்டு தடைபடுவது அவ்வப்போது நிகழ்வதுண்டு. உள்ளூர் முக்கிஸ்தர்கள் சாவு, தேர்தல் நாள் , உள்ளூர் திருவிழா நாட்கள் என்று வருகிறபோது தடைபடும். அல்லது தள்ளிப் போகும்.
இந்த முறை தடைபட்டது மனதை வேதனைப்படுத்தியது.சேவற்கட்டின்போது கையில்  ஆழமாய்,, வெட்டப்பட்ட கொய்யா போல் ,,பதிந்து விட்ட கத்தியின் வடு போலாகிவிட்டது.
எளசுக என்னமோ தெரிஞ்சோ தெரியொமெயோ பழகிடுச்சுக. என்ன பண்ண முடியும்.. எது தப்பு எது சரின்னு தீர்மானம் பண்ற வயசா அது...பெரிய மனசு பண்ணி அதெப்பாத்திருக்கலா
நீங்க பொலம்பறதெ மனசுக்குள்ளார வெச்சுக்ஙக. முணுமுணூப்பு கூட பெரிசா இருக்கக் கூடாது .. ஆமா. செவத்துக்கும் காதிருக்கும். எதுக்குங்க பொல்லாப்பு. ஓடிப்போன ரெண்டு பேரும் பொழங்கற சாதியா என்ன...  அப்புறம் சும்மா வுட்டிருவாங்களா கனகம் சப்தம் போட்டு அதட்டினாள். பூனையொன்று அவளின் காலடியில் வந்து உட்கார்ந்து வேடிக்கை பார்த்தது. மியா என்று சப்தம் போட்டு மீசையைத்  தடவிக்கொண்டிருந்த பொன்னையனைப் பார்த்தது. அதன் விழிகளின் ஊடுருவல் வேறு பக்கம் பார்க்கச் செய்தது அவரை. அதன் மீசை சிலிர்த்துக் கொண்டு நின்றது.
என்ன பார்வை பாரு.. ஆளையெக்கொல்ற மாதிரி
ஆமா ..இந்தப் பூனையோட பார்வைதா இந்த ஊர்லே இருக்கறவங்களுக்கும்.. ஜாக்கிரதையாத்தா இருக்கணும்
நமக்குள்ள பேசிக்கறதுதானே..... என்னமோ மனசு சங்கடமா இருந்துச்சு. அந்தப்பையன் கண்ணுலெயே இருக்கான். சாவக்கட்டுநடக்கறப்போ அந்தப் பக்கம் நடமாடிட்டிருப்பான்.  கீழ வுழுந்து கெடக்கற கத்தியெ நிதானமா பொறுக்கியெடுத்துத் தர்ரதேன்ன.. ஆளுகளுக்கு காயம் பட்டுட்டா ஈரத்துணி கொண்டு வந்துட்டு கட்டு போட்டு பண்ற உபகாரம் என்னன்னு கண்ணுக்குள்ளையே இருக்கான். பவர்லூம் ஓட்டறதெ   சாவக்கட்டன்னைக்கு வுட்டுட்டு வந்து வேடிக்கை பாப்பான். சேவல் மேல பந்தயம் கட்டற பழக்கம் கூட இல்லை. என்ன போட்டினு பாத்து நல்ல ஜெயிப்புன்னா ஆஹான்னு சொல்வான். அல்லாருக்கும் ஆதரவா இருப்பான் .ரொம்ப நல்ல பையனாத்தா தோணுச்சு .
அந்தப் பொண்ணெ கூடப் பாத்திருக்கிங்களா
பாத்த மாதிரி தா ஞாபகம் இருக்கு. சேரிப்பொண்ணுக சீமை கருவேலவேலியோறமா சாவக்கட்டெ நின்னு வேடிக்கை பாத்துட்டுப் போவாங்க. அதுல யாராச்சுமா கூட இருந்திருப்பா அந்தப் பொண்ணு
நாளைக்கு போலீஸ் கேசுன்னு வந்து அடையாளம் காட்டச் சொன்னா , அடையாளம் காட்டிருவீங்க போல
அதெல்லா இல்லே ..    என்னமோ மனசு கேக்காமெ பேசறதுதா.
செரி . அவங்க எங்க இருக்காங்களாம்.. அதுதா  ஓடிப்போனவங்க..
எனக்கென்ன தெரியும் .. என்னமோ என்ரகிட்ட சொல்லிட்டு போன மாதிரி பேசறெ.. எங்காச்சும் , ஏதாச்சும் டவுன்லெ இருப்பாங்க..டவுன்லதா சாதி தெரியாமெ நடமாடலாம்.பாதுகாப்பாயும் இருக்கும்
எந்த மூலைக்குப் போனாலும் பையனோட சாதிக்காரங்க சும்மா வுட்டுருவாங்களா. எந்தத் டவுனா இருந்தாலும்எந்த பெரிய ஊரா  இருந்தாலும் வுட்டிருவாங்களா.. உடுமலையில என்னாச்சு. பட்டப்பகல்லியே வெட்டுனாங்களே
கனகு.. என்னமோ பொம்பளையா இருந்து நீ பேசற மாதிரி தெரியலே. உனக்குள்ளறமும் சாதிப் பேயி புகுந்திர்ச்சு போல
அதெல்லா இல்லீங்க. என்னமோ படபடன்னு பேசறதிலெ வந்திருச்சு அப்பிடி... எல்லா சுமுகமா நடக்கணும். இருக்கணும்.
அந்தக் காதலர்களைத் தேடி ஊரிலிருந்து நாலைந்து குழுக்கள் புறப்பட்டுப் போய் விட்டதாகச் சொன்னார்கள். மூன்று நாட்களாக எந்தத் தகவலும் இல்லை.ஊரில் பதைபதைப்பு இருந்து கொண்டிருந்தது.பவர்லூம்கள் ஓடாமல் நின்று வேடிக்கை பார்த்தன. ஏதாவது தகவல் வந்தால்தான் வேறு வேலை என்பது போல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.பேச்சிலும் மூச்சிலும் காதலர்கள் பற்றிய நினைப்பே ஆகாசம் அளவு இருந்த்து.
  முந்தின நாள் இரவு வடக்குப்பக்கத்துச் சேரியில் சில வீடுகள் எரிக்கப்பட்டன. நாலைந்து  ஆடுகள் தீயில் கருகிப் போய் விட்டன. இரண்டு எருமைகள் தீய்க்காயங்களுடன் தப்பின.வீடு இழந்தவர்கள் சேவற்கட்டு மைதானமான பொட்டல்காட்டு ஆலமரத்தடியில் தஞ்சம் புகுந்தார்கள்.வியாழக்கிழமை இந்த மாத்திற்கான சேவற்கட்டு என்பதை முடிவு செய்திருந்தார்கள். மாதாமாதம் சேவற்கட்டு தினம் மாறும் .சவுகரியத்துகேற்ப ஏதாவது ஒரு நாளில் வைத்துக் கொள்வார்கள். புதன் இரவு அந்தத் தீக்கிரை சம்பவம் நடந்து விட்டது. எல்லாம் கரிக்கட்டையாய் கிடந்தததை வயது வித்யாசம் பார்க்காமல் அழுது புலம்பி சொன்னார்கள்.. யார்யாரையோ சபித்துக் கொண்டார்கள் ,.
செரிங்க .. சாவக்கட்டெ வேடிக்கை பாக்க வர்ற அந்த பொண்ணுகளோ, அவங்க வூட்டுக்காரங்களோ நம்ம வீட்டு வாசல்லே வந்து நின்னுருக்காறங்களா
            பொன்னையன் வீட்டு வாசலில் சேவற்கட்டு அன்று மாலையில் பத்துப் பேர் கொண்ட கும்பல் சுலபமாய் வந்து சேர்ந்து  விடும். கோச்சைக்கறியை ( சேவற்கட்டில் தோத்துப் போய் இழந்து விட்ட சேவல்) தீயில் கருக்கி  குடலை யெடுத்து சுத்தம் செய்கிறதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.. கோழிக்குடல், குண்டிக்காய், வெட்டப்பட்ட கால் பகுதிகளை யாராவது பெற்றுக் கொள்வர். சில சமயங்களில் கோச்சைக்கறி ஓரிரண்டுக்கு  மேல் என்றாகிற போது கொஞ்சம் சந்தோஷத்துடன் அவர்களின் முகங்களில் பிரகாசம் இருக்கும்பொன்னையனிடம் இருந்து அவர் தருவதை  யார் பெற்றுக் கொள்வது  என்பதில் எந்தப்போட்டியும் இருக்காது. இந்த தபா நீ வாங்கு.. போன தபா பெரிசு வாங்குச்சில்லெ... அடுத்த தபா கீரைக்காரி வாங்கட்டும் என்று தீர்மானித்துக் கொண்ட மாதிரி கழிவுகளைப் பெற்றுக்கொள்ள  யாராவது தேர்வானவர் என்பது போல்  பொன்னையன் முன் வந்து நின்று பெற்றுக் கொள்வர். எங்க வூட்டு ஆம்பளெ சலவைப்பட்டறைக்குப் போனவங்க எந்த நேரம் வர்றாங்களோ. என்று யாராவது பெண் தயங்கிக் கொண்டு நின்றால் பொன்னையனே குடலை ஈர்க்கங்குச்சியால் பிளந்து  கழிவை வெளியேற்றி சுத்தம் செய்து கொடுத்து விடுவார். சின்னதா அறுத்துப் போட்டா பீன்ஸ்மாதரி வந்துருங்க... . மகராசி அம்மா வருட்டுமா ‘‘ என்று கனகத்திடம் சொல்லி விடைபெறுவார்கள்.             அந்தக் காலத்திலெ  இப்படி வந்துட்டுப் போறப்போ உங்களுக்குக் குடுக்க  கள்ளிப்பழமும் , எலந்தைப்பழமும் கெடந்திருக்கு.  இப்போ வேலியே இல்லாமெப் போச்சுங்க என்பார்கள்.            எதாச்சும் குடுத்துதா வாங்கனும்ன்னு என்ன இருக்கு என்பார் பொன்னையன்.
அவர் அப்பா காலத்திலிருந்து இது நடந்து கொண்டுதான் இருந்தது. ஆவாரங்குச்சியை நிலத்தில் வைத்து நிழலைப்பார்த்து  நேரம் சொல்வார் .ஜாமம், நாழி பார்த்து சேவலைச் சண்டைக்கு விடுவார்.பட்சி சாஸ்திரத்தை மனப்பாடமாக மனதில் கொண்டிருப்பார்.  ஏகதேசம் ஜெயிப்புதான், வெளியூர் கட்டுக்கென்று போக மாட்டார். உள்ளூரில் நடக்கிற போது தகவல் கிடைத்தால் போவார்.
ஆலமரத்தடியில் நிரந்தரமாய் சேவற்கட்டு நடக்கிற விசயத்தை அவர்தான் முன்னிருத்தி நிரந்தரமாக்கினார். ஆலமரத்தடியை வாரச்சந்தையாக்கலாம் என்று சிலர் ரொம்ப நாள் யோசனையில் இருந்தார்கள்.
 “ இருக்கற எடத்தெவுட்டுட்டு எதுக்கு மாத்தணும்.
ஆலமரத்துக்கு இங்கிலீஷ்லே பானியன்னு பேரு.. வேறவரத்துக்கு வந்த வடநாட்டுக்காரங்க ஆலமரத்தடியிலதா வேவாரம் பண்னியிருக்காங்க. இங்கிலீஷ்காரன் அதனாலதா பனியான்னு வடநாட்டுக்காரனையும் கூப்புட்டிருக்கான்.
வெள்ளக்காரந்தா போயாச்செ. இன்னம் எத்தனெ நாளைக்கு அவனெப் புடிச்சு தொங்கறது. வுடுங்க. அவன் கத்துக்குடுத்த இங்கிலீஷ்தா ஒழிய மாட்டேங்குது. இந்த விசயத்தையாவது ஒழிப்போம்
அதன் பின் ஆலமரத்தடி சேவற்கட்டுக்கான நிரந்தர இடமாகி விட்டது.         
போலீஷ்காரன் , கடன்காரன்களெப்பாத்தா ஓடி ஒளியறதுக்கு செரியான எடமா இருக்கும் ஆலமரம்
      நேற்று கூட ஆலமரத்தடியில் போய் கொஞ்ச நேரம் உட்கார்திருந்தார் பொன்னையன். விஸ்தாரமாய் ஆலம் விழுதுகள்  சுமைகல் வரைக்கும் பரந்திருந்தன. நூறு அடிக்கும் மேலாக உயர்ந்திருந்தது.  மிருதுவாகத் தோன்றும் விழுதுகள் பூமியில் திடமானத் தூண்களைப் போல் நின்றிருந்தன.ஆல இலைகளை தையல் போட்டு பலகாரம் சுட்டு வைக்க, சாமிக்கு படையல் வைக்க  கனகம் பயன்படுத்துவாள்.சூரியன் வெகு சிரமப்பட்டு புகுவது போல் நிழல் அடர்த்தியாய் பரவியிருக்கும் அதனடியில்..
     முற்றின இலைகள் தோல் போல் கெட்டியாக அவரின் கால்களை  நெருடியது.
ஆலம் பழம் கனிந்து சிவப்பாகி கிடப்பதை முகம் மலரச் சொல்வாள் கனகம். ஆலமரத்தைப்பார்க்கும் போதெல்லாம் கனகம் கும்பிடுவாள்.  மகாவிஷ்ணு ஆல மரத்தின் பட்டை, பிரும்மதேவன் மரத்தின் வேர்கள், பரமசிவன் மரத்தின் கிளைகள் என்றும் சொல்வாள்.
என் கொழந்தைகளுக்கு விஷ்ணு, பிரம்மன், பரமசிவன்ன்னு ஆலமரத்து நெனப்புலே   பேர் வெக்கணும். இப்போதைக்கு சின்னவனுக்கு பரமசிவன்னு பேர் வெச்சதோட நிக்குது. “       
     ” ஆலமரம்மாதிரி அவன் நிக்கிட்டு கனகு. போதும் 
     வால்பாறையின் தேயிலைத் தோட்டங்கள் அவள் கண்களில் நிழலாடின. இழவு கேடக அங்கு அவளுக்குப் போக ஆசைதான். வால்பாறை முருகன் கோவில் விபூதி தனக்கு  வந்து சேர்ந்து விடும் என்பதை முழுமையாக நம்புகிறவள். தேயிலையின் இளம் பச்சை கண்களில் படந்து குளுமை வந்து விடுவது அவளுக்குப் பிடிக்கும்..
சின்னவனை கூட்டிடுப் போங்களேன் . அவனும் கொரங்கு அருவின்னு பாத்துட்டு குளிச்சிட்டு வரட்டும்.இந்த ஓடிப்போனவங்க ரகளைலே ஸ்கூல் நாலு நாளௌக்கு தொறக்காது போல “ .
நான் வால்பாறை போகுலெம்மா. வளச்சு வளச்சு போற ஹேர் பின் பெண்ட்டுலே உசிரே போகும். வாந்தியாகும். டவுன் எக்ஸ்பிஷ்னுக்கு கூட்டிட்டு போறையா
அதிலென்னடா விசேசம்..
பனிக்குகை, பனிமலை இருக்காமா .. குளிருமாமா. வால்பாறை மாதிரிதா இங்கயும் குளிருமாமா. அப்பிடி செட்டப் பண்னியிருக்காங்களாம் .. போய்ப்  பாக்கலாம்மா
போன தரம் எக்ஸ்பிஷனுக்குப் போயி ரகளை பண்ணுன மாதிரி பண்றீராதடா. ராட்டாந்தூரி ஆடுனமா, பானி பூரி சாப்புட்டமான்னு கெளம்பறது நல்லது.
அதெப்பிடம்மா. அங்க எக்ஸ்பிஷ்ன்லே சாவக்கட்டுன்னு போட்டுட்டு வேடிக்கை பாக்க பத்து ரூபாயும்  வாங்கிட்டு   சாணைக்கத்திக்கு பதிலா பிளாஸ்டிக் கத்தியெ  கட்டறாங்க 
வெளையாட்டுதாண்டா
வெளையாட்டுதான்னாலும் நெசம்ன்னு இருக்கணூம்மா. அப்பா கட்டற சாவக்கட்லே பாஷாணம் தடவுன  கத்தியெ கட்டற வெளையாட்டெல்லா போயி நெசமான கத்தி கட்டறாங்கில்லே
கத்தி கட்டுனாவே போலிஸ் வந்திரும்
அவங்களும் காசு வாங்கிட்டு வேடிக்கை பாத்துட்டுப் போயிடறாங்கம்மா. எக்ஸ்பிஷனுக்கு வேடிக்கை பாக்கப் போலாம்மா
  போனதரம் டவுன்ஹால் எக்ஸ்பிஷனுக்கு போன போது ஆட்டுக்கிடாய் சண்டை, ராட்டாந்தூரி எல்லாம் இருந்தன. சேவல் சண்டை என்று போர்டு போட்டதைப் பார்த்து அம்மாவிடம் பத்து ரூபாய் வாங்கிப்   போனான். சேவல்களை  மோத விட்டார்கள். கால்களில் பிளாஸ்டிக் கத்திகளைக்கட்டி  சண்டையிட வைத்தார்கள்.எந்த சேவல் களைத்து விழுகிறதோ அது தோற்றதாய் சொன்னார்கள். நிஜ சேவற்கட்டுக்கத்தியொன்றை தந்து கட்டச் சொன்னான் பரமசிவன். யாரோ அவனை அடிக்க வர கனகம் போய் இழுத்து வந்தாள்.    
      ” எங்கத்தியெ கட்டியிருதா நெஜ சாவக்கட்டா இருந்திருக்கும். பசங்கெல்லா கட்டு கட்டுன்னு ரகளை பண்னுனாங்க.
வால்பாறைக்குப் போன பொன்னையனுக்கு அங்கு நிலை கொள்ளவில்லை. இரவில் கடும் குளிர் தூங்க விடாமல் இம்சித்து விடிந்த பின்னரே தூக்கத்தைக் கொண்டு வந்தது.சாவு காரியம் கேட்க வந்த இடம் . கேட்டாயிற்று .இனியும் திரிந்து என்ன பார்க்க இருக்கிறது. ஆறுமாதத்திற்கொரு முறை வந்து போகிற இடம்தான். இரவுகளில் புலியும் யானையும் சகஜமாய் நடமாடுவதாய் தினசரிகளில் புகைப்படங்களைப் பார்த்திருக்கிறார்.  இழவு கேட்டது போதும் புறப்பட்டு விடலாம் என்று முடிவு செய்தார். பாலாஜி கோவிலுக்குப் போகலாம் என்ற எண்ணத்தையும் குளிர் புறந்தள்ளியிருந்தது.
 “ இருந்து கறியாக்கித் தின்னுட்டுப் போலாங்கோ “   
       ” குளிர் சிரம்மா இருக்கு.ஊசியா குத்துதே. புலியும் யானையும் வேற கனவுலே வருதே..அட்டைக கால்லே ஏறிட்ட மாதிரி இம்சை
குளிருக்குப் பயந்து மில்வேலைகளுக்கு இங்கிருந்து உங்கூருக்குத்தா பத்து பதனஞ்சு பொண்ணுக  போயிருக்காங்க. மாசம் ஒரு தரம் வந்துட்டுப் போறாங்க. அவங்கெதாச்சும் உங்க கண்ணுக்கு படுவாங்களா.
டவுன் மில்லுகளா இருக்கோணும். கண்லே படறதுக்கு வாய்ப்ப்பில்லே. குளிரெத்தாண்டி புலிகளுக்கும் யானைகளுக்கும் பயந்து  போயிருப்பாங்கதானே  
   ஊர் திரும்பிய போது  ஆலமரம் வழியாய் போனால் ஓடிப்போன காதலர்கள் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும், ஊர் எப்படி இருக்கிறது என்று வீடு போகாமலே தெரிந்து கொள்ளலாம்  என்று வந்தவர் இருட்டு ஆக்கிரமித்திருக்க ஆலமரம் தனித்திருப்பதைக் கண்டார். இருட்டு எல்லாவற்றையும் மறைத்திருந்தது.இருட்டைப் போர்த்திக் கொண்ட பிரமாண்டமான யானை போல் ஆலமரம் நின்றிருந்தது.
வீடு எரிஞ்து போனவங்க அங்கதா இருந்தாங்க .. சாவக்கட்டு கட்டற ஆலமரத்தடியில எதுக்கு.. போங்கன்னு விரட்டறதுக்குன்னு கொஞ்சம் பேர் வந்து தடியோட நின்னிருக்கங்கோ. எதுக்கு சிரமம்ன்னு அவங்க  கிளம்பிட்டாங்க கனகம் சொன்னாள்.
இப்போ எங்க இருக்காங்க
செல்லப்பண்ணன் தோட்டத்திலெ தங்கியிருப்பாங்க போலிருக்கு
அவெரெ யாரும் கேட்கலியா
கேட்டாங்க. ஆலமரத்தடி சாவக்கட்டுக்குனு இருக்கற  பொதுஎடம்தா அங்க இருக்க உடமாட்டீங்கறீங்க. என் தோட்டத்திலெ வந்து இருக்கட்டும்... கவர்மெண்ட்காரங்க வந்து ஏதாச்சும் வேற ஏற்பாடு பண்ற வரைக்கும் இருக்கட்டும்ன்னார். எல்லாரும் அவரோட மொரட்டுத்தனம் தெரிஞ்சதுனாலே சண்டைக்குப் போகாமெ வெலகீட்டாங்க. நீங்க இவ்வளவு வெரசலா வால்பாறையிலிருந்து சாவக்கட்டுக்குன்னா வந்தீங்க
சாவக்கட்டா..  எப்போ.. ஆலமரத்தடியிலயா
சந்தோசத்தைப் பாரு.. நாளைக்கு சாவக்கட்டுன்னு சொல்லிதா எல்லார்த்தையும் ஆலமரத்தடியிலிருந்து   கெளப்பி வுட்டுட்டாங்க. சிலருக்குச் சவுகரியமாப் போச்சு. நீங்க சாவக்கட்டு நாளைக்குன்னு தகவல் தெரிஞ்சிட்டுதா வால்பாறையிலிருந்து கீழே எறங்கிட்டைன்னு நெனச்சன்
   பொன்னையனின் மனதில் பட்சி சாஸ்திரம் புரண்டு ஓடியது. வால்பாறை குளிர்போல் நாளைய சேவற்கட்டில் தன் வல்லூறு சேவல்  ஜெயிக்கப்போகிற ஆந்தை, மயில் வகையறா சேவல்கள் கனவில் வந்து தூக்கத்தைப்பிடுங்கின . பாஷாணம் தடவிய கத்திகளைக்கட்டி சேவற்கட்டு நடப்பதாய் கனவு வந்தது.புலிகளும் யானைகளும் கனவில் வராதது  ஆறுதலாக இருந்தது பொன்னையனுக்கு..
  அவர் நினைத்தது போலத்தான் அவரின் வல்லூறுசேவல் மூர்க்கத்துடன் சண்டையிட்டு வெல்ல மாலையில் இரண்டு கோச்சைகள் சேவற்கட்டின் முடிவில் வீட்டிற்கு வந்தன. ஒன்றை தீயில் கருக்கி சுத்தமாக்கியவர் வீட்டுத்திண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்.
கருக்கும் போது வடக்குச் சேரி தீப்பிடித்து கருகிக் கிடந்தது ஞாபகம் வந்தது. எல்லாம் அட்டைக்கரியாக்க் கிடந்தன. செத்துப்போன ஆடு, மாடுகளை இந்த களேபரத்தில் யாரும் சாப்பாட்டிற்கென்று தொட்டிருக்க மாட்டார்கள் என நினைத்தார்.
 திண்ணைப்பக்கம்  யாரும் வரக்காணோம். கழிவுகளை சுத்தமாக்கினார். கோழிக்குடலைக்கழுவி துண்டாக்கினார்.பொலபொலவென்று விடியும் நேரத்து  வெளிச்சம் போல்  குடல் துண்டுகள் மின்னின.
 ” திண்ணைப்பக்கம் சின்னவனெக் கூடக் காணோம்...
           யாரும் திண்ணைப்பக்கம் வரக்காணோம்.பூனை அங்குமிங்கும் ஓடி நிழல்காட்டி வேடிக்கை செய்தது.இருட்டு சீக்கிரம் லேசான நிழலை மறைத்து விடும் போலிருந்தது.தூரத்துப் பார்வைக்கு எல்லாம் மங்கலாய்  இருந்தது.இன்னும் கொஞ்ச நேரத்தில்  இருட்டு கரிக்கட்டையாய் நிறைந்து விடும் போலிருந்தது.
திண்ணையை விட்டிறங்கிய  பொன்னையனின் கையில் ஒரு முழுக் கோச்சை இருந்தது.அவரின் கட்டம் போட்டசட்டையில் ரத்தக் கறையும் கோச்சையின் பிசிறுகளும் ஒட்டியிருந்தன.சட்டை ஒரு வித செம்மண் நிறத்தில்  திளைத்தது.

எங்கிங்க இன்னொரு முழுக்கோச்சையோடக் கெளம்பீட்டீங்கீங்க. உங்க ஒறம்பறையாருக்காச்சும் குடுக்கறதா சொல்லிட்டீங்களா.
இல்லெ. செல்லப்பன் தோட்டத்துக்கு .. என்றபடி சுத்தம் செய்ததை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு வலது கையிலும் முழுக்கோச்சைக்கறியை இடது கையிலும்  பிடித்தபடி விரைசலாக நடக்க ஆரம்பித்தார். முழுக்கோச்சையின் நான்கைந்து  இறகுகள் காற்றில் பறந்து அவருக்கு வழி காட்டியது.

Subrabharathimanian/8-2635 Pandian nagar, Tirupur 641 602
094861 01003/ subrabharathi@gmail.com. www.rpsubrabharathimanian.blogspot.com





திங்கள், 9 ஜனவரி, 2017

விளிம்பு நிலை மக்களுக்கான அறம் :சுப்ரபாரதிமணீயன்
-----------------------------------------------------
 ( ஒரு நாடோடிக்க்கலைஞன் மீதான் விசாரணை அண்டனூர் சுரா சிறுகதைகள்.208 பக்கங்கள், விலை ரூ180., இருவாட்சி வெளியீடு, சென்னை )

அண்டனூர் சுராவுன் இத்தொகுப்பின் கதைகளின் பொதுவான அம்சமாக விசாரணை அல்லது உரையாடல் என்பதாய் பெரும்பான்மையானக் கதைகள் அமைந்திருக்கின்றன. இது தீவிரமான வகையில் அரசியல் தளத்தில் இயங்குகிறது என்பது முக்கியம். அந்த வகையில்தான் நாடோடிக்கலைஞனோவாச்சாத்திப் பெண்ணோ தென்படுகிறார்கள், தங்கள் துயரங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
பள்ளி ஆசிரியர் என்ற வகையில் குழந்தைகளுடன் பழகுபவர் சுரா. அதனால் குழந்தைகளின் உலக்த்தைச் சிறப்பாகச் சித்தரித்துள்ளார். யானை கதையில் அப்பா யானை சத்தம் போடுது என்கிறார். குழந்தையோ பிளிறுது என்று நுணுக்கமாய் சொல்கிறது..இது மரம், பறவை பற்றிய குறிப்புகளில் கூட  நுண்ணியத்தன்மை தென்படச்செய்கிறது..  பன்றியை விற்கிற தகப்பவனிடம் குழந்தை கேட்கும் கேள்வி அதிர வைப்பதுதான்.பாரதி செல்லம்மா, மனைவியைப்பற்றி எழுதாமல் கண்ணம்மா என்ற கற்பனைக்காதலி பற்றி பாடியிருப்பது பற்றிய அவருடனான விசாரணை படைப்பு எந்த தளத்தில் யதார்த்தச் சுழலோடு இயங்கலாம் என்பதைச் சுட்டுகிறது. இலங்கை அகதியின் உயிர்பிழைக்கும் ஆசை  குழந்தையின் வாயை பொத்துவது மீறி மூக்கையும் பொத்தி விடுகிற அவலம். கல்வித்துறை சார்ந்த வன்முறை எனபதையும் இவர் தொடாமலில்லை. இந்த வன்முறையைச் செய்யும் அதிகார வர்க்கம் எடுக்கும் மாயா ஜாலங்கள் விதவிதமானவை. நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியின் முகத்தில் கரிபூசப்படுகிறத் தன்மையில்  ஆளை சிறைக்கம்பிகளுக்குள் மாற்றி விடுகிற ஜாலம் பயமளிக்கிறது. இந்த அதிகாரம் வெளிநாட்டின் நிறுவனம் ஒன்றின்  வேலை  நேர்முகத்தில் எல்லா முகங்களையும் காட்டி விடுகிறது. லெக்கின்ஸ் பற்றிய  எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும் அது கல்லூரி ஏழைப்பெண்ணிற்கு சுரிதாரைவிட விலைக்குறைவானது என்பதால் பிடித்தமாகி இருந்தாலும் சிக்கலை உண்டுபண்ணுகிறது.. பசு பற்றிய சர்ச்சைகளில் சுவரொட்டி சாப்பிடும் ஒரு  பசு பலியாவது உட்சபட்ச துயரம்.இந்தவகைத்துயரங்களை சற்று மிகைப்படுத்துலுடன் சிலகதைகளில், சொல்லப்பட்டிருக்கிரது. உப்பு கதையில் கூட பல்வேறு அரசியல் விமர்சங்களை நாசூக்காகச் சொல்கிறார். சீனப்பட்டாசு பற்றிய கதை அந்த வகையில் சொல்கிறார்..

சென்னை மொழியை லாவகமாக்க் கையாள்கிறவர் வேற்று  நாட்டுப் பிரச்சினைகளைக் கையாண்டு , பாலஸ்தீனம், இஸ்ரேல் என்று அதில் தன் எழுத்துப் பயிற்சியை நீட்டிக்கொண்டு போவ்து நல்ல சவால் அம்சமே.
பாடம் சொல்லும் முறைகளின் வேறுபாடு பற்றி ஒரு கதையைப் பள்ளிச் சூழலில் எழுதியிருக்கிறார். கதை சொல்லும் முறைகளின் வேறுபாட்டில் இவர் தன்னை அக்கறை கொண்டிருப்பதும் நல்ல விசயம்.உள்தரிசன அம்சங்களில் அக்கறை கொள்ளாமல் பிரச்சினைகள் சார்ந்தே படைப்புக்களங்களை உருவாக்யிருக்கிறார். அது ஏழைகளுக்கான, விளிம்பு நிலை மக்களுக்கான அறமாக உயர்ந்து நிற்கிறது.
( ஒரு நாடோடிக்க்கலைஞன் மீதான் விசாரணை அண்டனூர் சுரா சிறுகதைகள்.208 பக்கங்கள், விலை ரூ180., இருவாட்சி வெளியீடு, சென்னை )