பேட்டி: சுப்ரபாரதிமணியனுடன் ( Pudhu punal July issue)
50 வது நூலும் 30ம் ஆண்டு கனவு இலக்கிய இதழும்
கேள்வி; சமீபத்தில்
உங்களின் 50வது நூல் கோலாலம்பூரில் வெளியிடப்பட்டது குறித்து..
கலைஞன் பதிப்பகம் தன்
60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை முன்னிட்டு 60 நூல்களை மலேசியா கோலாலம்பூரில்
வெளியிட்டது. அதில் 50 பேர் தமிழக எழுத்தாளர்கள் . பத்துப்பேர் மலேசியா
சிங்கப்பூர் எழுத்தாளர்கள்.50 எழுத்தாளர்களையும் கலைஞன் பதிப்பகம் கோலாலம்பூருக்கு
அழைத்துச் சென்றிருந்தது. அதில் என் சிறுகதைத் தொகுப்பு ‘ குகைகளின் நிழலில் “
ஒன்று. அது என் 50வது நூல்.
அந்தத் தொகுப்பில் பல
கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். 2012ல் மலேசியா
தமிழ் எழுத்தாளர் சங்கம் நாவல் பட்டறை ஒன்றை நடத்த என்னை அழைத்திருந்த்து.அதன்
பின் மலேசிய பயண அனுபவம், நாவல் பட்டறை அனுபவம், படித்த மலேசியா எழுத்தாளர்கள்
நூல்கள், சந்தித்த எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் என்று 25 கட்டுரைகள்
எழுதியிருந்தேன். அது “ ஓ.. மலேசியா “ என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன் . நூல்
இன்னும் வெளியாகவில்லை. மலேசியப்பின்னணி நாவல் ஒன்றையும் எழுதினேன் “ மாலு “(
உயிர்மை பதிப்பக வெளியீடு சென்னை ) . அதில் டூரிஸ்ட் விசாவில் கோலாலம்பூர் சென்று
வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனின் தலை மறைவு வாழ்க்கை பற்றி சொல்லியிருக்கிறேன்.
அகிலன் மலேசியாவில் ஒரு மாதம் தங்கியிருந்து எழுதிய “ பால் மரக்காட்டினிலே “
நாவல் மலேசியப்பின்னணி நாவல் ஆகும். “
ஓ.. மலேசியா ““ மாலு “ ஆகிய நூல்களில் இடம் பெறாத மலேசிய அனுபவங்களை சில சிறுகதைகளாகவும் எழுதினேன்.அந்தச்
சிறுகதைகள் ‘ குகைகளின் நிழலில் “ தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.. அந்த்த் தொகுப்பில்
பல கதைகள் மலேசியா பின்னணிக்கதைகள் என்பதை விசேசமாகச் சொல்லலாம். ஆனால்
முழுத்தொகுப்பையும் அப்படி அமைத்திருக்கலாம் என்று நினைத்தேன். .
.கொங்கு நாட்டினரை விருந்தோம்பல் , உபச்சாரத்திற்கு பெருமை கொள்ளும் விதமாய்
சொல்வார்கள். மலேசியா அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது என்று சொல்லும் அளவு பலமான
உபச்சாரம் இருந்தது. அடுத்தத் தொகுப்பில்
மலேசியா அனுபவ முத்திரையை அழுத்தமாகப்
பதிக்கவேண்டும் என்ற ஆசை பிறந்தது. “ பால் மரக்காட்டினிலே “ “ மாலு “ நாவல்கள்
போல் 50 மலேசியா பின்னணி நாவல்கள் வெளிவரவேண்டும் என்ற விருப்பத்தை அந்த மாநாட்டில்
நான் தெரிவித்தேன். அடுத்த குதிரைப்பயணத்திற்கு
கலைஞன் பதிப்பகம் தயாராகி வருகிறது.அதன் 60 ஆம் ஆண்டு பதிப்புப் பணியை
முன்னிட்டு 60 தமிழ்க்கவிஞர்கள் பற்றிய
நூல்களை இவ்வாண்டில் வெளியிட
ஆயத்தம் செய்து வருவதைக்குறிப்பிடலாம்.
கேள்வி: இந்தத் தேர்தலில் தாங்கள்
எதிர்பார்த்தது என்ன
இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எனது
அய்ரோப்பிய நாடுகளின் பயணத்தில் பசுமைக் கட்சிகள் பற்றித் தெரிந்து கொண்ட போது
ஆச்சர்யமாக இருந்தது.
அப்போதே அவற்றின் வயது
முப்பதாகியிருந்தது.அப்படி
பசுமைக்கட்சிகளின் கூட்டமைப்பு இன்றைக்குத் தேவையாக இருக்கிறது. இந்த முறை அப்படி
ஒரு இயக்கம ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்த்தேன்.
அய்ரோப்பிய நாடுகளில் அப்போதே கிரீன் பீஸ் இயக்கம் மிகவும் வலிமை வாய்ந்த
இயக்கமாக இருந்தது.
இவர்கள் ’ ரெயின்போ வாரீயர் ‘
என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சிக்கான பரிசோதனைக்
கப்பலை வைத்திருந்தனர்..கடற்பகுதிகளில் பல்வேறு பருவங்களில் இக்கப்பல்கள் ஆராய்ச்சிகள் செய்வர்.
பிரஞ்சு நாடு அணு ஆய சோதனை செய்த
பலமுறை இக்கப்பலில் சென்ற இந்த இயக்கத்தினர்
அதை பெரிதும் எதிர்த்து ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தனர். இடதுசாரி இயக்கங்களைப் போல பெரும் பலம் வாய்ந்த எதிர்க்கட்சிகளாகவும்
விளங்கினர். கிரீன் பார்ட்டி
அப்போதைய தேர்தலில் 15 thதசதவீதம் ஓட்டு பெற்றிருந்தனர். பெர்லின் சுவரை இடித்த ஜெர்மானியர்கள் கிரீன் பார்ட்டியில்
பெருமளவில் இருந்தனர். இங்கிலாந்தில் இவர்கள் வெளியிடும் பத்திரிக்கையின் பெயர் “ ரெட் பெப்பர் “.
நம் இந்தியக் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களின் போது தேர்தல்
அறிக்கைகளிலாவது நம் சுற்றுச் சூழல்
பிரச்சினைகள் வெளிப்படுமா என்று பல கட்சிகளை அணுக முடிந்திருக்கிறது. ஓரிரு கட்சிகள் ஒத்துழைத்திருக்.இம்முறையும் சில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அது தென்பட்ட்து.
அங்கெல்லாம் சூழலியல் என்பது அரசியலின் முக்கியமானதொரு அம்சமாகியுள்ள
காரணத்தினால் பசுமைக்கட்சிகள் தோற்றம் அவசியம் என்பது உணரப் பெற்று பாராளுமன்ற
ஆசனங்களையும் கைப்பற்றி மனிதருக்கும் சுற்றுச் சூழலுக்கும் இடையிலான நெருக்கமான
பிணைப்புப் பற்றி மக்கள் மத்தியில் கூடுதல் விழிப்புணர்வு உருவாகுவதற்கு பெரும்
பங்களிப்பைச் செய்து வந்திருக்கின்றன என்று சொல்லாம்.
கேள்வி: எழுத்தாளனுக்கென்று தனியாக சமூகக் கடமை என்றிருக்கிறதா
சமூகக்
கடமை என்று தனியே வந்து எதுவும் குறுக்கே நிற்பதில்லை. சமூகத்தில் அவனின் பங்கு என்ன
என்பதை அவனே தீர்மானித்தாலும், அறிந்து கொண்டிருந்தாலும் பாமரத்தனமாய் அதை வெளிப்படுத்திக்
கொண்டிருக்க வேண்டியதில்லை.
அவன் உள்ளுணர்வாக அதை
மனதில் இருத்திக் கொண்டே எழுதுகிறான் எழுத்தின் ஒரு பங்காக சமூகத்திற்கு
பயன்படுதல் பற்றி அவன் விரிவாய் சந்திக்க வேண்டியிருப்பதில்லை. ஆனாலும் தன்னைச் சார்ந்த
உலகத்தை விரித்துக் கொண்டே போவதில் தொடர்ந்த வாசகன் அவனின் சமூகப் பொறுப்பை
அறிந்து கொள்ளவும் ஏதுவாகிறது. கதாபாத்திரங்களும் அவன் பிரயாணிப்பது ஏதுவாகிறது. சமூகத்திற்கும் எழுத்தாளன்
என்ற தனி மனிதனுக்குமான உரையாடலாகக் கூட அது தொடர்கிறது. இதைப் பதக்கிற தனிமனித
வாசகனும் தனக்கானப் பிரதியை உருவாக்குவதிலும், சமூகம் பற்றின தனது விமர்சனத்தை முன் வைப்பதிலும்
கவனமுள்ளவனாகிறான்.
தன்னை ஒரு வாசகனாக முன்
நிறுத்தி அப்படைப்பை மீண்டும் வாசிப்பதில் எழுத்தாளனுக்கு அலுப்பேற்பட்டு விடலாம். ஆனால் வாசகன் எழுத்தாளனின்
உலகை அறிந்து கொள்கிறான்.
எழுத்தாளன் எழுதுவதோடு
நின்று விடுகிறானா என்பதும் கேள்வியாகிறது.
எழுத்தாளனின் சமூகக் கடமை
பற்றி வலியுறுத்தப்படும் பொழுது அவனுக்கு திகைப்பேற்பட்டு விடலாம். அந்த திகைப்பு சமூகக் கடமை
காரணமாகவே எழுத நேர்ந்தது என்ற அவனின் தீர்மானம் சந்தேகத்திற்கு
இடமளிக்கப்படுவதால்தான்,
எழுதுகிறவன் என்ற
காரணத்தினாலேயே செயலாளியாக,
போராளியாக தன்னை ஓர்
உருவமாக்கிக் கொள்கிறதும் இயல்பாகவே நிகழ்கிறது. சமூகம் சார்ந்த ஒவ்வொரு
விஷயத்திலும் அவன் எழுத்தின் மூலம் எதிர்வினையாற்ற வேண்டியிருப்பதால் அது மேலும்
உறுதிப்படுகிறது.
தன்னை முன்னிருத்தியோ, தனது படைப்பை முன்னிருத்தியோ
அவன் செயல்படுகிறவனாக வெளிப்படுகிறான். சமூக நிகழ்வுகளுக்கும், நிறுவனங்களுக்கும் எதிரான செயல்பாடாகவே அவன் படைப்புகள்
முன் நிற்கின்றன.
நவீன எழுத்தைச் சார்ந்து
படைப்பாளி இயங்கும் போது சாதாரண வாசகனை சென்றடைய முடிவதில்லை. சென்றடைகிற வாசகனும் படைப்பின்
வெறுமை, அவநம்பிக்கை குறித்து
பயப்படுகிறான்.
படைப்போடு எப்படி
தன்னைப் பொருத்திக் கொள்வது, எழுத்தாளனின் அனுபவத்தை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பது
தேர்ந்த வாசகனுக்குப் பெரிய சிக்கலாய் அமைந்ததில்லை. வெறுமையும், அவநம்பிக்கைத் தொனிப்
படைப்புகளை மீறி வாசிப்பனுபவம் ஊடே அவன் பயணம் செய்வது இயல்பான விஷயமாகவே அமைந்து
விடும். ஆனால் படைப்பின் பயன்பாடு குறித்து
உடனடி விளைவுகளை எதிர்பார்க்கிறவனுக்கு சத்தமிடாத படைப்புகளில் அவநம்பிக்கை
வைக்கிறான்.
அவனுக்கு போஸ்டர், தட்டிகள், பொதுக் கூட்ட மேடைகளின்
கோஷங்கள் உணர்ச்சி தருபவையாக இருக்கின்றன. இந்த வகை உணர்ச்சிகளைத் தரும் எழுத்தாளன் அவனை
ஆகர்சிக்கலாம்.
பெரும் சமூக அநீதிகளுக்கு
எதிராக உடனடியாகக் கிளர்ந்தெழுபவனல்ல எழுத்தாளன். கண்டனங்கள், ஊர்வலம், சிறு போராட்டம் இவற்றில்
கலந்து கொள்ளவே அவனுக்கு வாய்ப்பமையும்..
ஒற்றைக் குரலாகத்தான்
எழுத்தாளனின் படைப்பை மற்றவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் அது ஒற்றைக் குரல் இல்லை. பல ஆண்டுகளாக சமூகம் பற்றின
அவதானப்பின் ஒட்டு மொத்தமான அனுபவக் குரல். தனிப்பட்ட உணர்ச்சி என்ற வகையில் அது தென்பட்டாலும் வாசகன்
தன்னை அதில் உணர்ந்து கொள்வதில் ஒற்றைக் குரலின் வீச்சும், தீவிரமும் தெரிந்து கொள்கிறான். ஆனால் குரல் கொடுக்க
குடியாதவர்களின் குரலாக அவள் வெளிப்படுகிறான் என்பது உண்மையானது. இந்தக் குரலே சமூகத்தின்
குரலாகவும் அமைந்து எழுத்தாளனை சமூக மனிதனாக்குகிறது.
கேள்வி : இவ்வாண்டில்
தங்களின் வெளிநாட்டுப்பயண அனுபவம் எப்படியிருந்தது
மலேசியாவில் புத்தக வெளியீட்டிற்காக போனபின்
அங்கிருந்து சிங்கப்பூர் , இந்தோனிஷியா, தாய்லந்து என்று சென்றிருந்தேன். சிங்கப்பூர்
முன்பே சென்றதுதான். இந்தோனிஷியா, தாய்லந்து என்று சென்றபோது நம் ஊரின் பொதுபுத்தியில்
இருக்கும் ஆங்கிலம் பற்றிய கற்பிதம் எவ்வளவு தவறு என்று சுலபமாகத் தெரிந்தது. அங்கெல்லாம்
ஆங்கிலப்பயன்பாடு என்பது இல்லை. தாய்மொழி பயன்பாடு அதிகம். அது போதும்
என்கிறார்கள்.இங்கு தாய்த்தமிழ்ப்பள்ளிகள்
நலிந்த நிலையில் உள்ளன. மலேசியாவில் 540 தாய்த்தமிழ்ப்பள்ளிகளை அரசே நடத்துகிறது.குறைபாடுகள்
இருந்தாலும் தாய்த்தமிழ்ப்பள்ளிகள் அங்கே ஆரோக்யமாகத் தெரிகின்றன. முந்தைய
அய்ரோப்பிய நாடுகள், இங்கிலாந்து பயணம் போல் விரிவானதில்லை இம்முறை.
கேள்வி: தங்களின் கனவு இலக்கிய இதழ் 30ம் ஆண்டைப்பூர்த்தி செய்கிறது.
வாழ்த்துக்கள். அந்த அனுபவம் பற்றி..
செகந்திராபாத்தில் வேலை நிமித்தமாக 8 ஆண்டுகள் இருந்தேன். அங்கு பிராமண சமூகம் பெரிய அளவில்
கலாச்சார நடவடிக்கைகளில் இருந்தது.
அசோக மித்திரனின்
படைப்புக்களமாக இருந்த நகரம்... இளைஞர்களின் படைப்பாக்க முயற்சிக்கு இதழ்
தேவைப்பட்டது. ஆந்திர மாநில தமிழர் பேரவை என்ற அமைப்பினர் நடத்தி வந்த ஒரு இதழை மீட்டுருவாக்கம் செய்ய
நினைத்தோம் அவர்கள் தீவிரமான பெரியார்சீடர்கள். அவர்கள் ஒத்துக்கொள்ளாத போது “
“
கனவு ”என்ற இதழை ஆரம்பித்தேன். இரண்டு இதழ்கள் உள்ளூர் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி வந்தன. பிறகு தமிழகத்திலிருந்து படைப்புகள் வாங்கி பிரசுரிக்க ஆரம்பித்தேன். 30 ஆண்டுகள் ஓடி விட்டன. முதல் 20 ஆண்டுகளில் வெளிவந்த தேர்வு செய்யப்பட்ட படைப்புகளை காவ்யா
பதிப்பகம் 700 பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இன்றைய முக்கிய
படைப்பாளிகள் பலரும் அதில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஜெயமோகன் தயாரித்த
மலையாளக்கவிதைகள் , அசோகமித்திரன்,
சுந்தரராமசாமி
சிறப்பிதழ்கள், திரைப்பட நூற்றாண்டை ஒட்டிய 5 சிறப்பு இதழ்கள் யமுனா ராஜேந்திரனின் தயாரிப்பில், புலம்பெயர்வு இலக்கிய சிறப்பிதழ்கள், இலங்கை, சிங்கப்பூர் சிறப்பிதழ்கள் , பாவண்ணன் தயாரித்த கன்னட சிறப்பிதழ் , நோபல் பரிசுபெற்றவர்களின் கதைகள் சிறப்பிதழ் ஆகியவற்றைக்
குறிப்பிடலாம் இளம் படைப்பாளிகளின்
மேடையாக அது இருந்து வந்துள்ளது. எனது சொந்த கைக்காசுதான். இழப்புகளைக் கணக்கிட்டால்
மனச்சோர்வுதான் மிஞ்சும். தொடர்ந்து இயங்குவதுதான் ஆறுதல்.
பேட்டி : ஜனனி
காயத்ரி , மேட்டுப்பாளையம் photos in
google tamil