திருப்பூர் மக்கள் மாமன்றம் :
இலக்கிய விழா
திருப்பூர் மக்கள் மாமன்றம் ஏற்பாடு செய்திருந்த இலக்கிய விழா ஞாயிறு அன்று திருப்பூர் நஞ்சப்பா உயர்நிலைப்பள்ளியில்
நடைபெற்றது. திருப்பூர் மக்கள் மாமன்றம்
தலைவர் முனைவர் சி. சுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
விழாவில் சென்னை “ இலக்கியச் சோலை “ மாத
இதழ் தயாரித்த ” திருப்பூர் சிறப்பிதழை” பத்மஸ்ரீ டாக்டர் ஏ. சக்திவேல் ( தலைவர் , திருப்பூர்
ஏற்றுமதியாளர் சங்கம் ) வெளியிட்டார்.
ஜெய்ஸ்ரீ ராம் கல்விக்குழுமம், சேர்மன்
கே.எம். தங்கராஜ் தமிழறிஞர்களுக்கும் பல்துறை
சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கினார். அவர்
சார்ந்த கல்வி நிறுவனங்கள் ஏழை மக்களுக்கு செய்து வரும் கல்வி உதவியை விவரித்தார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் ( எழுத்துப்பணி ) ,
ஆனந்தகுமார் ( மக்கள் மாமன்றம்) , கேபிகே செல்வராஜ் ( கல்விச்சேவை ) , ஞானவேல் ( சமூக சேவை) என்.சிதம்பரம்( முயற்சி ) உட்பட பலர் விருது
பெற்றனர்.
பத்மஸ்ரீ சக்தி வேல் பேசியது:
” நேற்றைய
தொழிலாளர்கள் இன்றைய முதலாளிகள் “ என்பதை
திருப்பூரை பின்னலாடைத் தொழிலைச் சார்ந்தவர்கள் தொடர்ந்து உள்ளூர் தொழிலில் நிருபித்து
வருகிறார்கள். வியாபாரம் சார்ந்த ஒரு நகரில் நடப்பவை பெரும்பாலும் வணிகம் சார்ந்த நடவடிக்கைகளாக
இருக்கின்றன. ஆனால் நம்மை மேம்படுத்தும் இலக்கிய நடவடிக்கை சார்ந்த செயல்பாடுகள்
தொடர வேண்டும். வாசிப்பு என்பது சகமனிதனுக்கு, தொழிலாளர் அனைவருக்கும் தேவை.
அத்தகைய வேலைப்பளுவில் இருக்கிறோம். அதிலிருந்து விடுபட வாசிப்பும், வணிக
நோக்கமற்ற நடவடிக்கைகளும் மிகவும் தேவை.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் பேசியது:
பல்துறை சார்ந்த இதழ்களும் நூல்களூம்
நிறைய வெளிவரும் காலம் இது. பல்துறை சார்ந்த வாசிப்பும் பெருகியுள்ளது. ஆனால் இலக்கிய வாசிப்பு குறைந்திருக்கிறது. இலக்கிய
வாசிப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள்
நமக்குத் தேவை. நடைமுறைக் கல்வியிலிருந்து வேறுபட்டு மாற்றுக்கல்வியையும் அதன்
மூலமான மாற்றுச் சிந்தனைகளையும் உருவாக்க
இலக்கிய வாசிப்பு அவசியம். அதை பள்ளிகளிலிருந்தே இன்னும் தீவிர முயற்சிகளில் ஏற்படுத்தவேண்டும். அதற்குத்
தாய்வழிக்கல்வியும், பகுத்தறிவும் அடிப்படைகளாக இருக்கும்.
முன்னதாக கோவை கோகுலம் தலைமையில் நடந்த
கவியரங்கில் நம்ம ஊர் கோவிநாத், து.மு.சாமி, சிவதாசன், நவநீதன், சு.வேலுச்சாமி,
மு.மணிமேகலை பங்கேற்றனர்.
“ பெரியார் அண்ணா “ என்ற தலைப்பில் பாண்டி மு.
வேலு கருத்துரையாற்றினார். இலக்கியச்சோலை ஆசிரியர் சோலை தமிழினியன் ஏற்புரை
ஆற்றினார்.
“
இலக்கியச் சோலை “ மாத இதழ் தயாரித்த ” திருப்பூர் சிறப்பிதழில்” திருப்பூரைச் சார்ந்த 25 படைப்பாளிகளின்
படைப்புகள் இடம் பெற்றுள்ளன.