சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 13 ஆகஸ்ட், 2015

போபால் : சவத்தின் விலை மிகச் சொற்பம்
                                                                      சுப்ரபாரதிமணியன்
      போபாலில் விச வாயு நினைவுச் சின்னம் பற்றி விசாரித்தபோது பலரும் போபால் நினைவு மருத்துவமனையைப் பற்றியே சொன்னார்கள். போபால் நினைவுச்சின்னம் பார்க்கவே சிரமப்பட வேண்டியிருந்தது.  கெடுபிடிகள்.. அசுரன் பிடித்த நகரம் போல் சோபை இழந்து இருக்கிறது  பழைய போபால்... யூனியன் கார்பைடு  தொழிற்சாலைக்கு அருகாமையில்  சுலபமாய் 5 கி மீ பகுதியில் வசிப்பவர்கள் படும் சிரமங்களை    நினைத்துப் பார்க்கவே வேதனை பெருகுகிறது
   போபால் நினைவுச்சின்னம்  பார்க்க கெடுபிடிகள்  சோர்வைத் தந்தன. முகப்பு காவலாளிகள் கும்பல் உள்ளே அனுமதிக்க முடியாது என்றார்கள். ஆங்கிலம் எதற்கும் பயன்படாது போலிருந்தது. வற்புறுத்தவே ஒரு காவலாளிகூடவே வந்து   பொது நல அதிகாரியைப் பார்க்கச் சொன்னார்கள். அவர் இன்னொருவரை துணைக்கனுப்பினார். இருவரும் கூட இருக்க நினைவுச் சின்னத்தைப் பார்த்தோம். போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவு கூற ஒரே ஒரு  மலர்வளையம் மட்டுமே நினைவுச்சின்னத்தின் கீழ் இருந்தது. ஒரே ஒரு  மலர்வளையம் வைக்க மட்டும் அனுமதியா. அல்லது யாரும் கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்வி மனதில் வந்தது. ஹோப் அண்ட் ஹோமேஜ் என்ற ஆங்கில எழுத்து  வரிகள் மின்னின.புகைப்படம் எடுத்த கணத்திலேயே உடனே கிளம்பச் சொன்னார்கள். அந்த இரு காவலாளிகளும் நாங்கள் வெளியேறுவரை முகப்பு கதவு வரை எங்கள் கூட இருந்து வெளியே அனுப்பி வைத்தார்கள்., அதன் பின்புறம் இருந்த 6 கி,மீ அப்பால் இருந்த  யூனியன் கார்பைடு  தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டோம். சில புகைப்படங்கள் எடுத்தோம். துரத்திவந்தவர்கள் எச்சரிக்கை செய்து அனுப்பினர், உள்ளே கொட்டிக் கிடக்கும் கழிவுகள் பல ஆயிரம் டன்கள் நிலத்தையும் , நீரையும் தொடர்ந்து மாசுபடுத்தி மக்களை நோயாளிகளாகவும் பிணங்களாகவும் ஆக்கியிருக்கிறது.  திருப்பூரில் சாயக்கழிவுகள் அங்கங்கே கொட்டிக்கிடப்பது ஞாபகத்திற்கு வந்தது.இன்னும் போபால் கார்பைடு தொழிற்சாலைக்குள் 18,000 டன் நச்சுக்கழிவு கொட்டிக்கிடக்கிறது. ( திருப்பூரின் இவ்வாண்டின் பின்னலாடை சார்ந்த  அந்நிய செலவாணி வருமானம் 18,000 கோடி ரூபாய் என்ற ஞாபகம் வருகிறது.). முப்பதாண்டுகளுக்கு முன்னதாகவே 2000 லாரிகள் கொள்ளுமளவு கழிவு அங்கிருந்தது. கழிவைக் கொட்ட 32 ஏக்கர் பரப்பு குளம் அமைக்கப்பட்டு அதில் கழிவு தேங்கியிருக்கிறது.  இது போபால் நகரைச்சுற்றியிருக்கும் மண்ணையும் நிலத்தடி நீரையும் நச்சாக்கி விட்ட்து.இந்த நச்சுக் கழிவை எரிக்கும் முயற்சியில் 10 பேர் பார்வையிழந்ததால் அதுவும் கைவிடப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு கொண்டு செல்லும் முயற்சிகள் அம்மாநில மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட்து. ஜெர்மனிக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு ஜெர்மன் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இவற்றை அக்ற்றக்கோரி அமெரிக்க நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகள் அங்கு நிராகரிக்கப்பட்டன.புதிய டவ் நிர்வாகமும் மத்திய அரசும் இதில் கண்ணாமூச்சியும், பாராமுகமும் காட்டுகின்றன.
        சுற்றிப்பார்த்த போது தொழிற்சாலையின் சுவர்களில் நிறைய வாசகங்கள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருந்தன.டவ் கெமிகல்ஸ் நிர்வாகமே. இந்தியாவை விட்டு வெளியேறு. இனி உனக்கு இங்கு வேலை இல்லை” “ குற்றவாளிகளை தண்டிக்கவும் “.      “ நஷ்ட ஈட்டுத் தொகையை சரியாக வழங்கு.  தொடர்ந்த மருத்துவ  வசதி செய்து கொடு”  “அரசே.. கெட்டுப் போன சுற்றியுள்ள பகுதிகளை சீர் அமை . பாதிகப்பட்டவர்களுகு அவர்களின் உடல் நலம்  பற்றிய  புத்தக ஆவணங்களை வழங்கு “ என்றபடி அந்த வாசகங்கள் இருந்தன, 
    முப்பதாண்டுகளுக்கு முன்னால் டிசம்பரின் அந்த குளிர்நாளில்  வழக்கமான பராமரிப்பு பணியின்போது  துருப்பிடித்த குழாய்கள் கசிந்து ரசாயனம் தேக்கி வைக்கப்பட்டிருந்த தொட்டியில் பாய்ந்தது. புகை மண்டலம் மேலெழுந்து  தொழிற்சாலையைத் சூழ்ந்து கொண்டது. மரணப்பிடிக்குள் போபால் நகரம் வந்து விட்டது.கண் எரிச்சல், மூச்சுத்திணறில் மக்கள் மூச்சடைத்தது.  பலர் செத்து விழுந்தனர். பலர் கண்ணில் பட்ட ( எரியும் கண் காட்டிய ) கழிவுநீர்க்  குட்டைகளில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். வாந்தியும் , மலமுமாக விழுந்து தவித்தனர். உடனடியாக 10,000 பேர் செத்துமடிந்தனர். தொழிற்சாலையை சுற்றி இருந்த 6 லட்சம் மக்களின் நுரையீரல்களில் விச வாயு புகுந்து இன்னும் பாதிப்பைத் தந்து வருகிறது. செத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்பது போல பாதிக்கப்பட்டவர்கள் குற்றுயிரும் குலையுமாக வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் 2 லட்சம் பேர் 15 வயதிற்கும் குறைவானவர்கள். அவர்களில் பலரை விசவாயு பற்றிய 30 ஆண்டு நினைவு நாள் மேடையில் , கூட்டத்தில்  போபால் விசவாயு பீடிட் மகிளா உத்யோக் சங்காதன் ஏற்பாடு செய்திருந்த சுல்தானியா ஜனன மருத்துவமனை பூங்காவில் நடந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.  மேதா பட்கரின் ஆவேசமான பேச்சில் அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது  ,நானும் என் பங்கிற்கு ஒரு கவிதையை எழுதினேன்.
எங்கள்து கண்கள் பறிக்கப்பட்டபின்
எங்கள் உயிர்கள் பிடுங்கப்பட்ட பின்
நாங்கள் நடைபிணங்களான பின்
நீங்ள் செய்ய ஒன்றிருக்கிறது.
வருடாந்திர திதிக் கூட்டம்
மலரஞ்சலி
கொஞ்சம் பூக்கள்
சிலவரிகளில் கொஞ்சம் கவிதைகள்.
பிறகு அடுத்த வருட்த்திற்கு காத்திருப்பது.
மேத்தா பட்கர் முழங்கிக் கொண்டிருந்தார்” “ மோடியிடமும் , முதலமைச்ச்ர் சிவராஜ் சவுகானிடமும் இன்னும்   அதிகம் எதுவும் எதிர்பார்க்க முடியாது “
பூங்காவின் முகப்பில் மூன்று பொம்மைகள். நீதித்துறை, சட்டம், பன்னாட்டு கம்பனிகள் கம்பீரமாய எங்களை ஒன்றும் செய்து விட முடியாது  என்ற நோக்கில் நின்று கொண்டிருந்தார்கள். மேத்தா பட்கர் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்.

 இந்திய விவசாய புரட்சி உரங்களைக் கட்டாயமாக்கி விட்டபோது   பூச்சி கொல்லி மருந்துகளுக்காக, செயற்கை உரங்களின் உறபத்திக்காகத்  தொடங்கப்பட்டதுதான் போபால்  யூனியன் கார்பைடு தொழிற்சாலை. செத்து விழுந்தவர்கள், மாடுகள் என்று எல்லோருக்கும் ஒரே இடத்தில் எரியூட்டு நடந்திருக்கிறது.  அவை எரியூட்டப்பட்ட போது எழுந்த புகை  அதைச் செய்த ராணுவத்தினரை பாதித்து மூச்சு திணற வைத்திருக்கிறது.
இன்னுன் பாதிப்பாய் 300% குறைப்பிரசவம். 200% சிசு மரணம் நிகழ்கிறதாம். இன்னும் 2 லட்சம் பேர் பாதிக்கபட்டு சிரம்ப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.உயிர் பழைத்தவர்களை பெரும் பாலும் தாற்காலிக பாதிப்பிற்கு உள்ளானவர்ளே என்று வகைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.பாதித்த ஆறுமாதற்குப்பின் மத்திய பிரதேச அரசு 87 கோடி ரூபாய் ஒதுக்கி ஆரம்பத்தில் ரூ200 பிறகு 750 ரூபாயும் நிவாரணம் தந்தது. குடும்பத்திற்கு 1500 ரூபாய் . 13 ஆண்டுகளுக்குப் பின்  யூனியன் கார்பைடு நிறுவன பங்குகள் விற்க முற்பட்டபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு 500 கட்டில்கள் கொண்ட சிறப்பு மருத்துவமனையை நிறுவி எட்டாண்டுகள் இலவச சிகிச்சை தர  ஆணையிட்டது. அந்த மருத்துவம்னை வளாகத்தில்தான் நினைவுச்சின்னம் உள்ளது. ஹோப் அண்ட் ஹோமேஜ் என்ற ஆங்கில எழுத்து  வரிகள் மின்னிக் கொண்டிருக்கிறது.நம்பிக்கை  பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பான்மையோருக்கு ரூபாய் 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரைதான் இழப்பீடு தரப்பட்டிருக்கிறது.
                  விபத்து நடந்த அடுத்த ஆண்டு “ போபால்  விச வாயு கசிவுச் சட்டம் “ ஒன்றை மத்திய அரசு நிறைவேற்றி யூனியன்கார்படிடுடன் பேச்சு வார்த்தை நடத்தியதில் ரூ1750 கோடியை இழப்பீட்டு வைப்புத் தொகையாக  அளிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால்   அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றமும் வழக்கு இந்தியாவில்தான் நட்த்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது.இந்திய அரசு இரு மடங்குத் தொகையைக் கேட்ட்து. ஆனால் அதில் 15% தந்து நிர்வாகம் விலகிக் கொண்டது. பல்வேறு தன்னார்வக் குழுக்கள் நீதிமன்றத்தை அணுக 2010ல் தொழிற்சாலையின் இயக்குனர், செயல் தலைவருக்கு 2ஆண்டுகள் சிறை தண்டனை தந்தது. உடனே அவர்கள் பிணையில் வெளிவந்து விட்டனர். மேல்முறையீடு நடந்து கொண்டிருக்கிரது இன்னும். அந்த்த் தீர்ப்பில் அதன் நிறுவனத்தலைவர் வாரன் ஆண்டர்சன் பற்றி ஒரு குறிப்பு இல்லை. அமெரிக்க யூனியன் கார்பைடு நிறுவனம்  தன்னைக்குற்றவாளியாக்க இந்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று நிராகரித்தது. வாரன் ஆண்டர்சன் மீது உயிர்ப்படுகொலைக்காக வழக்குமன்றம் பின் 10 ஆண்டு சிறை வழங்கினாலும் அவர் ஆஜராகாததால் தப்பியோடியக் குற்றவாளி என்றும், இந்திய அரசு அவரை இந்தியாவிற்கு கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும் என்று சொல்லி விட்ட்து. ஆண்டர்சனை ஒருமுறை கைது செய்து பின் மத்திய அரசு அவர் தப்பிப் போக வழிசெய்தது. உச்சநீதிமன்ற வழக்கொன்றும் கிடப்பிலேயே உள்ளது.பாதிக்கப்பட்டவர்களுக்கான  நிவாரணத் தொகை சொற்பமாகவே இதுவரை கிடைத்துள்ளது.      

   போபால் பேரழிவு பற்றி 1991 ல் மகேஷ் மதாஷ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது. பல ஆவணப்படங்கள் வெளிவந்திருக்கின்றன.
போபால் பேரழிவின் முப்பதாவது ஆண்டை நினைவுபடுத்துகிற விதமாய் ரவிகுமாரின் இயக்கத்தில் போபால்: ஏ பிரேயர் பார் ரெயின் “ என்ற திரைப்படம் வெளிவந்திருக்கிறது. யூனியன் கார்படு தொழிற்சாலையின் முக்கியஸ்தரான ஆண்டர்சன்  சென்றாண்டு இறந்து போனதால் இப்படம் வெளியாவதில் இருந்த தடைகள் நீங்கியிருந்தன.  திலீப் என்ற ரிக்‌ஷா தொழிலாளிக்கு  யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் வேலை கிடைக்கிறது.அந்த ஆலைக்குள்  நடக்கும் விபத்து காரணமாக பணியாளர் ஒருவர் இறந்து விட  அந்த வேலைக்கான எந்தத் தகுதியும் இல்லாவிட்டாலும் அவனுக்கு அந்த வேலை கிடைக்கிறது. பல அப்பாவிகள் முன்னமே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அதேபோல் அவனுடனும் சிலர் சேர்கிறார்கள்.  அவனின் சகோதரியின் திருமண நாளில் கசியும் விச வாயு கசிவு காரணமாக திருமண விழாவுக்கு வந்த பலர் செத்து விழுகிறார்கள். கண் எரிச்சல், உடல் உபாதைகளால் பலர் கழிவு நீர் குட்டைகளுக்குள்  விழுந்து செத்துப்போகிறார்கள். மருத்துவமனைகளில் பிணக்குவியல். சாலைகளில் பிணக்குவியல்.வாந்தியும், பேதியுமாய் செத்து விழுபவர்கள் பலர்.. தொழிற்சாலையில் ஏற்படும் சிறு அளவிலான பழுது கண்டு பிடிக்கப்படுகிற போது மேலாளர் வெளியே சொல்லாதே . வேலை போய் விடும் என்று மிரட்டி விடுகிறான்.சாதாரண ஏழையான திலீப் தன் வாழ்க்கையை கார்பைடு தொழிற்சாலை வேலை மேம்படுத்தும் என்ற கனவில் இருந்தவனுக்குப் பேரிடி.. vissவிசவாயு கசிவு எவ்வித பராமரிப்பும் இல்லாமல் ஆலை ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு உள்ளூர் பத்திரிக்கையாளனிடம் சொன்னாலும் அதை பத்திரிக்கை எச்சரிக்கையாக்குவதற்கு முன் விபத்தும் நிகழ்ந்து விடுகிறது. திலீப் இந்த செய்திகளை முன்னம் உள்ளூர் பத்திரிக்கையாளன் மோத்வானிக்குச் சொல்லியிருக்கிறான்.  மோத்வானி விசாரிக்கையில் கார்பைடு ஆலையில் நடக்கும் பல் முறைகேடுகள் தெரிய வருகின்றன. எழுதுகிறார். தொழிற்சாலையைப் பார்வையிட வரும் ஆண்டர்சன் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை மாற்ற முயல்கிறார். அரசியல்வாதிகளை கைக்குள் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்.      பாதுகாப்பு கெடுபிடிகள் எங்கள் நாட்டில் அதிகம் என்பதாலேயே இந்தியாவில் இந்தத் தொழிற்சாலையை அமைத்தோம். இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிகள் இங்கும் என்றால் இங்கு அமைக்க வேண்டியதில்லையே “ என்கிறார். இப்படத்திலும் வாரன் ஆண்டர்சன் சற்றே மனிதாபிமானம் உள்ளவராகவும், கடின உழைப்பாளியாகவும் காட்டப்பட்டிருக்கிறார். திலீப்பின் குடும்பத்தைச் சார்ந்தே படம் இயங்குகிறது. விபத்துக்கும் முன் தொழிற்சாலை நடவடிக்கைகளும்  சிறுசிறு விபத்துகளும் அதிர்வுடன் காட்டப்பட்டுள்ளன. விபத்திற்குப் பின் சொல்லப்பட்ட விசயங்கள் குறைவாகவே இருக்கின்றன.வாரன் ஆண்டர்சன், அரசியல்வாதிகள் மீதான விமர்சமும் குறைவாகவே இருக்கிறது. பலியானவர்களுக்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கோ கிடைக்காத அநீதி பற்றி அதிகம் இப்படம் பேசவில்லை. என்பது குறைதான். ஆனால் இன்றைய தலைமுறை இப்பேரழிவை அறிந்து கொள்ள இப்படம் ஆதாரமாக அமைந்துள்ளது.போபால் மக்களின் வாழ்க்கையோடு வெகு நெருக்கமாக அப்படம் இல்லை. ஆனால் போபால் பற்றிய உண்மைகளைக் கொண்டிருந்த படம்.
மத்திய பிரதேச முதல்மந்திரி 30 ம் ஆண்டு நினைவை ஒட்டி அரசு ஏற்பாடு செய்திருந்த கூட்ட்த்தில் பேசும் போது                            “பாதிக்கப்பட்டவர்களின் குரலை சரியாகப் புரிந்து கொண்டுள்ளோம் “ என்று பேசினார்.பாதிக்கப்பட்டவர்களின் ஈனக்குரலினைச் சொல்லும் படம் இது.
  கூட்டம் நடந்த் இடத்திற்கு மேற்பகுதியில் ஒரு ஏரி தென்பட்டது. சென்ற போது ஏரியின் மீது ஒரு அம்மன் கோவில் தென்பட்டது.. அம்மன் கர்ப்பகிரகத்தைச் சுற்றிலும்  இரும்பு கம்பி பார்டர் . அதில் வேண்டுதல் போன்று சிறு சிறு துணிகள் கட்டப்படிருந்தன. அதில் பிளாஸ்டிக் பைகளும் நிறைய கட்டப்பட்டிருந்தன. சிறு துண்டுத்துணிகளுக்கு மாற்றா அவை. நேர்த்திக்கடனுக்கு பிளாஸ்டிக்கும் வந்து விட்டது  தெரிந்தது.  நடந்த களைப்பு  தீர  கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தேன். கால்கள் அம்மன் இருக்கும் திசையில் இருந்தன. உடல் ஊனமுற்றவன் ஒருவன்   என்னைப் பார்த்து முறைத்தான். அவனை கோவிலைச் சுற்றிப்பார்த்தபோது கவனித்திருந்தேன். இரு கைகளையும் சேர்த்து கடவுளை நோக்கி கூப்ப முடியவில்லை.. கைவிரல்கள் சேர சிரமப்பட்டன. நான் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்ததை அவன் ஆட்சேபிப்பது தெரிந்தது. கால்களைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்து விட்டேன்  அந்த ஏரியிலிருந்து சிறு செம்பில் நீர் மொண்டு கொண்டு வந்து பலர் அம்மன் மேல் விடுவது தெரிந்தது. உடம்பும் முகமும் கோண அவனும் தண்ணீர் கொண்டு வந்து விட்டான். கோபத்தில் என்தலையில் ஊற்றி விடுவானோ என்ற பயம் இருந்தது  அவனுடன் மெல்ல பேச்சு கொடுத்தேன். முப்பாதாண்டுகளுக்கு முன் அவன் சிறு குழந்தையாக  இருந்திருக்கிறான. விச வாயுவால் பாதிக்கப்பட்ட்வன் நான். என் வீட்டில் இருவர் இப்படி. எல்லா வீடுகளிலும்  யாராவது இருக்கிறார்கள் என்னைப் போல் ஊனத்துடன் “
           போபாலில் பலரைக்கவர்ந்த இடம் ஹனுமன் கஞ்ச்.  அங்கு ஹனுமன் கோவில் கட்டப்பட்டது குறித்த ஒரு கதை உள்ளது. பேகம் ஹாஜகான் ஆட்சி காலத்தில் நடந்ததாம் .  கமால்மகராஜ் என்ற சாமியார் ஒரு ஆலமரத்தடியில் இருந்து கடவுள் வழிபாடு செய்து வந்தாராம். வழிபாட்டின் போது சங்கு ஊதுவாராம்.அது பேகம் அவர்களுக்கு தொந்தரவு தந்திருக்கிறது. அவரைக் கொல்ல ஆணையிட்டிருக்கிறார்.  படை வீரர்கள்  அவரைத் தேடிப் போன போது அவர் இறந்து கிடந்திருக்கிறார்.  ஆனால்  வழிபாட்டு நேரத்தில் சங்கொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. படைவீரர்கள்  அவர் உடலை வெட்டி பிய்த்துப் போட்டு விடுகிறார்கள்.அதன் பின்னும் சங்கொலி கேட்கிறது.
        யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் நடந்த அந்த விபத்தின் போது உடனடியாக எச்சரிக்கை ஒலிப்பான் ஒலித்திருக்க வேண்டும். ஒலிக்கவில்லை. அது அணைத்து வைக்கப்பட்டிருந்த்தாம்.
  இப்போது சொல்லப்படுவதெல்லாம் செவிடன் காதில் ஊதப்படும் சங்கின் ஒலியாகத்தான்  இன்றைக்கு இருக்கிறது..தங்கள் முதுகிலும் மனதிலும் பிணங்களைச் சுமந்து கொண்டு ஊர் முழுக்க பலர் சபித்தபடி திரிந்து கொண்டிருக்கிறார்கள்.செத்துப் போன சவங்களின் விலை சொற்பமாகத்தான் இருக்கிறது.


subrabharathi@gmail.com  / 8-2635 pandian nagar, tiruppur  641 602