பெரு
நகர மக்களின் வாழ்வியல்
நிஜந்தனின் ” பேரலை “ நாவலை முன் வைத்து....
சுப்ரபாரதிமணியன்
ஏழு நாவல்களை இதுவரை எழுதி
வெளியிட்டிருக்கிறார் நிஜந்தன்.
“ பேரலை
“ நிஜந்தனின் ஆறாவது நாவல்.முந்தின நாவல்களைப்
போலவே இதிலும் பெரு நகர மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்திருக்கிறார்.இவரின்
முதல் நாவல் “ மேக மூட்டம்” ரமணி,
மீனலோசனி தம்பதிகளின் பிணக்கையும் மீனலோசினியின் முன்னாள் காதலன் பீட்டரின்
குறுக்கீட்டால் சிதையும் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் விவரித்தது. மனநலவியாதியில்
எதிர் விளைவு இல்லாத மருந்தைக் கண்டு
பிடிக்கும் மனநல வைத்தியர் முயற்சிகளையும், சாவு பற்றிய மனக்குழப்பங்களையும் விவரித்தது.
“ பாபுஜியின் மரணம் ‘
” நான் நிழல் ” நாவலில் ஒரு புகைப்படக்காரரை
முன்வைத்து வாழ்வு பற்றிய பார்வை நகர்ந்தது. புகைப்படங்கள் பார்த்து கதை சொல்லும்
நினைவுகளும் ஆக்கிரமிக்கின்றன. அம்மாவுடன்
சித்தப்பாவின் உறவும் அவர்களுக்கு குழந்தை பிறப்பதும் அப்பாவுக்கு மட்டும்
அல்ல சுற்றியுள்ளவர்களுக்கும் மவுனத்தையே எதிர்வினையாக்க் கொள்ள வைக்கிறது.
திருடர்கள் வந்து போவது இன்னொரு தளத்திலும் நிகழ்கிறது. கதாநாயகனுக்கு
இடுப்பில் சீழ் கட்டி . இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அது உடைந்து அவஸ்தப்பட
வைகிறது.அதன் காரணமாக சகித்துக் கொள்ள முடியாமல் மனைவி மகாலட்சுமி விவாகரத்து கோருகிறாள்.அவனை ஆறுதல் படுத்துகிறவர்களாக
ஆர்த்தி போன்ற நர்ஸ்கள் இருக்கிறார்கள்
அது ஒரு குறியீடாக நாவல் முழுக்கக் கட்டமைக்கப்பட்டிருக்கிரது. .” புதிய வெயிலும்
நீலக்கடலும்”
நாவலில் குறும்படம், நவீனநாடகம் சர்ந்து
இயங்குகிறவர்களின் உலகம் சொல்லப்பட்டிருக்கிறது.
லதா வண்ணாத்திப் பெண் அம்மாவிற்குப் புற்று நோய். சித்தப்பா
சேகர் சலவைத் தொழில் செய்கிறவர். சித்த்ப்பா எய்ட்ஸ் வந்து செத்துப்
போகிறவர். கோபால் பேசன் டெக்னாலஜி படித்து விட்டு தொழில் செய்கிறவன். இடதுசாரி மனப்பான்மை கொண்ட கண்ணகி கணவனைச்
சுட்டு கொலை செய்கிறவளாக அவள் வாழ்க்கை
மாறி விடுகிறது.லதா கோபாலுடன் இருந்த வாழ்க்கையின் எச்சமாக கருக்கலைப்பு செய்து
கொள்ள வேண்டியதாகிறது. இசை அமைப்பாளரான
செல்லம் கண் பார்வை இல்லாதவன். மைத்துனியுடன் சேர்ந்து வாழ்கிறவன். சிவலிங்கம் போலீஸ் அதிகாரி ஆக இருந்து
அதிகாரத்தை அனுபவிக்கிறவர். எய்ட்ஸ் வந்து
சாகுமவரின் மனைவி சாவு அவருள்ளும் சாவு பயத்தைக் கொண்டு வருகிறது. கோபால்
துணிக்கடை ஆரம்பித்து நடிகையைத் திறப்பு
விழாவிற்கு அழைக்கிறான். லதாவுடன் உறவு கொண்டதை குறுந்தகடில் வைத்து
மிரட்டுகிறான். பைரவன் என்ற சாமியார்
பெரும் அதிகாரம் கொண்டவராக இருக்கிறார்.
இதய வலி வந்து செத்துப் போகிறார். தோழர் அய்யாவு லவுகீகக் கடமைகள் முடிந்து
புரட்சிக்கான ஆயத்தங்களும், நடவடிக்கைகளும் இனி தன் வாழ்க்கையாக அமையப் போவதாக
முடிவெடுத்துக் கொள்கிறார்.கோபாலும் அசோக்கும் ஒவ்வொருவரும் பெண் பிரச்சினை
காரணமாக அடித்துக் கொண்டு சாவின் எல்லைக்குப்
போகிறார்கள். இருப்பும் இல்லாமையும், குற்றமும் தண்டனையும், ஏற்றமும்
இறக்கமும் பல்வேறு உணர்வுத்தளங்களை
எழுப்புவதை இந்நாவல் சித்தரித்தது. ” சுவை
மணம் நிறம் “ நாவலில் நட்சத்திர விடுதியில் பெரும் சமையல்காரராக இருப்பவரின்
வாழ்க்கையில் திரைப்படம் சார்ந்தவர்கள்
குறுக்கிடுவதையும், பிரியும் மனைவியின்
தனித்த வாழ்க்கையும் கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்ணணியும் வாழ்வின்
அபத்ததையும் வெளிக்காட்டுகிறது.குறும்படம், திரைப்படம், சார்ந்த பெருநகர
மனிதர்களின் வாழ்க்கையை இந்நாவல்கள் கோடிடுகின்றன.
எண்பதுகளில் எழுதத் துவங்கிய நிஜந்தன் முன்பு சிறுகதைகள்,
குறுநாவல்கள், நாடகங்கள், அரசியல் தொடர்பான கட்டுரைகள், செய்தி தொலைக்காட்சி வேலை
, ஆங்கிலப் பத்திரிக்கையாளர் வேலை, தொலைக்காட்சி பொறுப்பாளர் என்று பலநிலைகளில் பெருநகர வாழ்க்கையை
மேகொண்டிருப்பவர். உடுமலை நகரத்தில் பிறந்து, கோவையில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து
சென்னை வாழக்கையில் சங்கமித்தவர். பெரும்பாலும் நகர அனுபவங்களில் திளைத்தவர்.
இவரின் படைப்புகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை பெரு நகர மனிதர்களின் வாழக்கையைப் பேசுபவை. யதார்த்த
வாழ்க்கையின் எல்லையில்லாத சமரசப் போக்குகளை கோடிடுபவை. வாழ்வின் அனுபவங்களூடே
சமூக வரலாற்றையும், சில கால கட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது.
வாழ்வின் அபத்தத்தை மெல்லிய நக்கல்தன்மையுடன் விவரிக்கிறது. விழிப்பு கொண்டவன்
உயர்ந்து கொண்டே போவதும் தெரிகிறது. சமூக நிகழ்வுகளை பதிவு செய்வதன் மூலம் அது
எழுப்பும் தார்மீகக் கேள்விகளையும் முன் வைக்கிறார். வாழும் காலத்தில் நிகழ் காலத்திற்கு எதிரான
அவலங்களையும், சந்தோசங்களையும் இயல்பாக பதிவு செய்கிறார். புனைவுகள் என்று ஒதுக்க முடியாத அளவில் அவரின்
பாத்திரங்கள் யதார்த்த ஒழுங்குக்குள்ளேயே வலம் வருகின்றன. நடந்து முடிந்த வாழக்கை நினைவுகளை அசை போடுவது
நடக்கிறது. மூன்றாம் மனிதர்களின் வாழ்க்கை என்றாலும் அதில் சுயம் கலந்திருப்பதை
அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. மனிதர்கள் உடலை பெரும் பாரமாகச் சுமந்து
செல்கிறார்கள். பாரத்திற்கு காரணமாக ஏதாவது நோய் இருந்து கொண்டே இருக்கிறது. அது
மரணத்தை நிழல் போல் படரச் செய்து கொண்டே இருக்கிறது. உடல் சார்ந்த புலன்
இன்பங்கள், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டு மனிதர்கள் இயங்குவதும் திருத்திக்
கொள்வதும் நடக்கிறது. சிறிய கதாபாத்திரங்களையும் முழுமையாக்கும் முயற்சியில்
ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையின் அபத்தங்களை நிலயின்மை, நிச்சயமின்மை, தெளிவின்மை ,
கண நேர தடுமாற்றத்தின் விளைவுகள், புதிர்தன்மை நிறைந்த யோசனைகள், கால இட வெளி
சம்பந்தமான தகவல்கள் என்று சொல்லிக் கொண்டே போகிறார். அவமானங்களும், பிரிவுகளும்
பகையும் தொடர்கிறது. மனிதர்களின் இறப்பு
துயரமானதாக இருக்கிறது. துன்பவியல் மரணத்தின் மூலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
. கொண்டாட்டங்கள் மனிதர்களின் அலைச்சல் மூலம் தெரிகிறது. சடங்குகள் தொலைந்து போய்
விட்ட நகர வாழ்க்கை. எல்லாம் அவசரகதியில் நடக்கிறது. பழகிய நாவல் மொழியை உடைத்தெறிகிறார். இதுவரை
தமிழ் நாவல் பரப்பில் தென்படாத மனிதர்களையும் அறிமுகப்படுத்துகிறார். வெளிமாநிலமனிதர்கள்,
வெளிநாட்டு மேல்தட்டு மனிதர்களின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது.
நிஜந்தன் இயங்கும் தொலைக்காட்சியின்
மொழியோ, திரைப்பட மொழியோ இவரின் நாவல் கட்டமைப்பிலும் வடிவத்திலும் கூட பாதிப்பு
செய்வதை நான்லீனியர் முறை, நாவலின் வடிவத்தை சீர்குலைப்பது, நாவலின் கட்டுமானத்தை
சமையல் குறிப்பு போல் புட்டு புட்டு
முன்வைப்பது ஆகியவற்றில் காணலாம். திரைமொழியில் வாய் மொழியும், காட்சி மொழியும்,
உடல் மொழியும் கலந்திருக்கும். இந்த திரை மொழி நாவல்களின் காட்சி விவரிப்பில்
பதிகிறது. உறவுகளுக்குள், உரையாடலாகும் பயன்பாட்டு மொழி துண்டுதுண்டாக இருந்தாலும்
காலகட்ட சம்பவங்களை , நினைவுகளை இணைக்கும்
பொதுக்களமாக நாவலில் விரிகிறது. ஆண் மையம்
கொண்ட அதிகார அரசியலை நுணுக்கமாக இந்நாவல்களில் கண்டு கொள்ளலாம்.
ஆறாவது நாவலான “ பேரலை” யில்
இதே அம்சங்களை காண முடியும். பேரலை ஏற்படுத்தும் பவுதீக விளைவுகளைத்தாண்டி
பேரலை உருவகமாக ஒவ்வொருவரின் வாழக்கையிலும் வந்து போகிறது. புரட்டிப் போட்டு
விடுகிறது. முதல் பகுதியில் விளம்பரக் கம்பனியில் வேலை பார்க்கும் அலிமா மற்றும்
அவளின் இரட்டையர்களில் இன்னொருவளான அதிபா முக்கிய கதாபாத்திரங்களாகச் சொல்லலாம்.
ஆயிசாவிற்கு கணவனை ( கபீர்) மீறி உமருடன் தொடர்பு இருக்கிறது. பத்மலட்சுமி பாதுகாப்பு பணி செய்கிறவள். பீனா பாஷ் சமூக
சேவை, நாடகத்தயாரிப்புகளில் அக்கறை கொண்டவள். கபிலன் குருடன் பாடகன் சரிதாவிற்கு
திரைப்பட இயக்குனர் ஆகும் ஆசையில் அவளின் செயல்பாடுகள் அமைகின்றன.. இந்தியாவிலும்
இந்தோனிசியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்க விவரிப்புகள் தகவல்களாக விரிவாக அமைகின்றன. ” வாழ்நாளில்
சுனாமி பார்த்து இறப்பதும் கஷ்டம், சுனாமி பார்க்காமல் இறப்பதும் கஷ்டம் “ என்று
பழமொழி இக்கதாபாத்திரங்களால் கட்டமைக்கப்பட்டது போல் சுனாமி அலைக்கழிக்கிறது, ஆயிஷாவின் கணவன் முதல் சுனாமியில் காணாமல்
போகிறான். இரண்டாம் சுனாமியில் அவளின் காதலன் காணாமல் போகிறான்.நாவலின் இரண்டாம்
பகுதி -“ எல்லையற்ற மகிழ்ச்சி “ இதில்
நகுலன், ராமசேசன்( பங்குதரகன் ), பீனபாஷ் ( நாடகக் காரன் ) அருணா ராம்சந்திரா
ஷன்பாக் ( செவிலி. பாலியல் பலாத்காரத்திற்கு
ஆளாகிறவள். ஆசனவாய் பலாத்காரம், ), பூவரசன்
( அரசியல்வாதி, கட்சி விளம்பரப்பட பிரியன் ). மூன்றாம் பகுதி “ உள்ளடுக்குகள் “-
சரிதா குறும்படங்கள் தயாரிக்கிறாள். டார்வின் தத்துவம் அலசப்படுகிறது. அணு சமாச்சாரம், கூடாங்குளம் சர்ச்சை
கூடவே வருகிறது . நான்காம் பகுதி “ என் பேரரசு “ என்று ஆயிஷாவின் கதை
சொல்லப்படுகிறது. அய்ந்தாம் பாகம் “ அருள்
“ பாபா இறந்து போகிறார். பத்மலட்சுமி
அவரின் சடலம் காண செல்கிறாள். கபிலன் வேளாஙகண்ணிக்கும், ராமசேசன் மொட்டை போட
திருப்பதிக்கு, அலிமா தர்க்காவிற்கு என்று பயணங்கள் தொடர்கின்றன. ஆறாம் பகுதி “
நூல் “ புத்தகக்கண்காட்சி, பதிப்பகம்
ஒன்றின் 50 புத்தகங்கள் வெளியீடு, சுனாமி நாள்
நூல்கள் வெளியியீடு, 50 நூல்கள் பற்றி விரிவான அறிமுகம், அந்தப்திப்பாளர் பற்றிய
குறிப்புகள் என்று எழுத்தாளர்களின் உலகத்தைக் கோடிடுகின்றன.
இப்படி இன்னும் நான்கு அத்தியாயங்கள்
நீள்கின்றன. இந்தக்கதைகளிலிருந்து எங்களை
விடுவியுங்கள் என்று கதாபாத்திரங்கள் பல சமயங்களில் அலறுகின்றன. நாவல் கதாபாத்திரங்களை
எப்படி முடித்து விடலாம் என்ற யோசிப்பும் ஒரு அத்தியாயமாக விரிகிறது. நாவல் எழுதி
முடித்த பின் வெளியீட்டு விழா பேச்சும் இருக்கிறது. பதிப்பாளர் அரவிந் அப்பாத்துரையும்
ஒரு பகுதியில் வருகிறார் “ நூல் ” அத்தியாயத்தில்
முன்பு ஒரு பதிப்பாளரும் வந்தார். ஒரே பெயரில் இருக்கும் பல கதாபாத்திரங்கள்
ஆண்களின் பல வடிவங்களாக, பெண்களின் பல வடிவங்களாக அமைந்திருப்பதைப் பற்றி சர்ச்சை
தொடர்கிறது.
முந்தின நாவல்களின் கதாபாத்திரங்களும் இதில்
வருகிறார்கள். இலக்கிய எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள், அறிஞர்கள் பலர் ஊடாக வந்து நாவலின் தளத்தை விரிவாக்கிக் கொண்டே
போகிறார்கள்.பல்வேறு தத்துவார்த்த சிந்தனைகளைப் பதிவு செய்ய்யும் முயற்சியாக
அக்கதாபாத்திரங்களின் வாக்கு மூலங்கள் அமைந்திருக்கின்றன.விரிந்த அளவு பரப்பில் வாழ்க்கை எதிர்கொள்ளுமொருவனுக்கு இந்த
வகை கதாபாத்திரங்களை , மனிதர்களை சந்திப்பது சுலபம். அதுவும் பெரு நகர மனிதனுக்கு
சுலபம்... பெரு நகர மனிதனல்லாதவனுக்கு இதெல்லாம் ஆச்சர்யம் தரும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள்
ஆனால் புனைவுகள் அல்ல என்பதையும் அவன் உணர்வான்..
என்பெயர் ராமசேசன் என்று இரண்டாம் பகுதியில்
ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவன் பங்கு தரகன். ஒரு உரையாடல் :
” பிம்பங்களை
உண்டு திருப்தி அடைந்து விட வேண்டுமா ராமசேசன் ‘
“ இல்லை மாலா. பிமபங்களைத் துரத்துவதுதான்
திருப்தி என்று நினைக்கிறேன். அதுவும் பணம் என்ற பெரும் பிமபம். அதுவும் பங்குச் சண்டையில் புரளும் பணம் என்பது
உண்மையில் இல்லாதது, அது வெறும் கற்பனையாக, குறியீடாகத்தான் இருந்து விடுகிறது.
அதை உண்மையாக மாற்ற முயல்வதுதான் தொடர்ந்து ஒரு போராட்டமாக இருக்கிறது மாலா “
“ இறுதியில் மிஞ்சுவது பணம்தான் ராமசேசன்.
தத்துவம் அல்ல. பணத்திற்கு கணக்கு உண்டு .தத்துவங்களுக்கு அல்ல “
ஏழாம் பகுதியில் இந்த வரிகள் தென்படுகின்றன.
“ வாழ வாருங்கள் . வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது.
“ என்பது நான் எழுதிய விளம்பர வரி. “
வாழ மறுங்கள் . வாழ்க்கை உங்களை விட்டுப் போய் விட்டது “
.
இந்த வகைத் தத்துவங்களுக்குள் பெருநகரத்தின் பெரும்பான்மையான மனிதர்கள்
அடங்கிப் போகிறார்கள் என்பதை அபத்தவகை கட்டுடைத்தலில் ” பேரலை” நாவல் விரவிக்கிடக்கிறது.
அவரின் ஏழாவது நாவல் ” என்
பெயர் ’ . நிஜந்தன்
என்ற பெயரில் பலர் இந்த நாவலில்
வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வெவ்வேறான வாழக்கை பற்றி விரிவாகவே
பேசுகிறார்.. ஒவ்வொருவருக்குள் தேடினால் வெவ்வேறு தத்துவ அம்சங்களும் சிதிலமும்
புதைந்து கிடைக்கிறது. இந்த நாவலில்
அவரின் முந்தைய நாவல்கள் பற்றிய அபிப்பிராயங்களும், அந்த நாவல்களின்
கதாபாத்திரங்களும் ஊடாடிச் செல்கின்றன.
பலர் அந்த கதாபாத்திரங்களின் பாதிப்பால் தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப்
பார்ப்பதும், பாதிக்கப்படுவதும் புனைவு யதார்த்த வாழ்வில் தரும் பிரதிபலிப்பும் காணக்கூடியதாக இருக்கிறது.
லட்சியங்களைக் கோடிடும் நாவல்களின் காலம்
எப்போதோ முடிந்து விட்டது. சரிவுகளும், மீறல்களும்., மதிப்பீடுகள் உடைபடுவதும்
சாதாரணமாகிப் போன காலத்தின் குறியீடுகளாக இந்த நாவல்கள் அமைந்திருகின்றன. மையம் அதிகாரக் குவிப்பை உண்டு பண்ணும் என்று நம்புகிறவர் நிஜந்தன். அதிகாரப்
பீடங்களைக் கொண்ட சமூகப் போக்கில்
படைப்புகள் மையம் சார்ந்தவையாக பெரும்பாலும் அமையும் போது அந்த மையத்தைத்
தகர்க்கும் முயற்சியில் இவரின் படைப்புகள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு தமிழின் குறிப்பிடத்தக்க
படைப்புகளை வெளிப்படுத்தியுள்ளது” புனைவின்
மயக்கம் எப்போதும் தீராதது. புனைவின் சவாலும் சலிக்காதது. இந்தப்பிரதிக்கான
புனைவின் போக்கும் அப்படியே “ என்கிறார்
நிஜந்தன்.
இவ்வகை விரிவான களங்களில் ஏழு நாவல்கள் மூலம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில்
நிஜந்தனின் படைப்புலகம் தமிழில் வெகுவாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டி விரிந்து கிடக்கிறது..
(விலை
ரூ 200, பாலம் பதிப்பகம், சென்னை 42
044-22434212 ., நிஜந்தன்
9884032075)
( சுப்ரபாரதிமணியன்., 8/2635 பாண்டியன் நகர்., திருப்பூர் 641 602. 9486101003 )