காது கேளாமை, வாய் பேசாமையைக் குணப்படுத்தும் சிகிச்சை இரகசியங்கள் ( சீனா வெற்றிகரமான தேடல் அனுபவங்கள்)
சுப்ரபாரதிமணியன்
மாற்று மருத்துவம் பற்றி தீவிரமான அக்கறையை கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். ஆங்கில மருத்துவ முறைகள் சாதாரண மக்களுக்கு எட்ட முடியாத உயரத்தில் சென்றுகொண்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் குறைபாடுகளும், மோசமான சுகாதாரமும் விளிம்பு நிலை மக்களை நிரந்தர நோயாளிகளாக்கியுள்ளன. தமிழ் மரபின் மருத்துவ முறை சித்த வைத்தியம் உலகிற்கு இன்னும் இன்றும் பல விசயங்களைக் கற்றுக் கொடுக்கிறது.
சீனாவின் அக்குபஞ்சர் மருத்துவ முறை இந்தியாவில் 2003ல்தான் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டது. தமிழர்கள் பார்வையில் அதற்கு அங்கீகாரம் சமீபமாய் கிடைத்திருப்பதை அங்கங்கு தென்படும் அக்குபஞ்சர் மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன். சிகிச்சைக்கு வருபவரிடம் எதுவும் கேட்காமல் நோயை கண்டு பிடிக்கிற வித்தை அக்குபஞ்சர் மருத்துவருக்கு உண்டு. நம் உடம்பிற்கான மருந்து வேறெங்குமில்லை. நம் உடம்பிலேயே உண்டு என்பதைத் தெரிவிக்கும் எளிமையான, செலவு குறைவான மருத்துவ முறை அது..
சீனாவில் காது கேளாமை, வாய் பேசாமையையும் கூட குணப்படுத்தும் வெற்றிகரமான அனுபவங்கள் மாவோவின் புரட்சிகர காலத்தில் பொதுவுடமைத் தொண்டர்களால் நடந்தேறியிருப்பதை இந்நூலில் ( மூல ஆங்கில நூல் வெளியீடு 1972) செ. நடேசன் அவர்கள் மொழிபெயர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். மாவோவின் தத்துவார்த்த முறை ஒரு மருத்துவரை சிந்திக்கக் கற்றுக் கொடுப்பதோடு குணப்படுத்த முடியாத நோயையும் குணப்படுத்தும் என்பது நிருபணமாகிறது. அதிசய நிகழ்வு அது. பொதுவுடமைத்தத்துவத்திற்கு அந்த வலிமை உண்டு. மக்கள் விடுதலை இராணுவத்தின் மருத்துவர் சாவோ பு யு
பெற்ற வெற்றிகளை இந்நூல் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது.இது போல் மாற்று மருத்துவம் பற்றிய பல நூல்கள் தமிழுக்குத் தேவை..சாவோ பு யு போல் சமீபத்தில் நான் அறிந்து கொண்ட ஒரு மருத்துவர் இலங்கையைச் சார்ந்த ( 1822-1884 ) சாமுவேல் பிஸ்கிரின் தமிழில் மருத்துவப் பாடத்தைப் பயிற்றுவித்தவர். மருத்துவம் பற்றியக் கட்டுரைகள் 5000 பக்கங்கள் மொழிபெயர்த்தவர் 7 அறிவியல் நூல்களை வெளியிட்டவர். பாமரருக்கும் புரியும் வகையில் மருந்து, மகப்பேறு, மகளிர் நோயியல் குறித்து மருத்துவக் குறிப்பேடுகளை வெளியிட்டிருக்கிறார்.இலங்கையின் பூர்வீகத் தமிழரிடம் தமிழ் கற்ற கிரீன் “ மனிதனால் பேசப்படும் மொழிகளிலேயே மிகத் தூய்மையான, மெருகூட்டிய மொழி தமிழ் “ என்று குறிப்பிட்டிருக்கிறார். தனது கல்லறையின் மீது “ தமிழருக்கான மருத்துவ ஊழியர் “ என்ற வாசகம் பொறிக்குமாறு வேண்டிக் கொண்டதால் அமெரிக்காவில் உள்ள அவரது வொர்ஸ்டர் கிராமத்தில் நினைவுக்கல்லொன்று இந்த வாசகங்களுடன் இருக்கிறது. சாபோ பு யு, பிஸ்க்கிரின் போல் பலர் தமிழுக்கு அறிமுகப்படுத்தட வேண்டியவர்கள்,
தோழர் செ. நடேசன் அவர்கள் ஆசிரியர் கூட்டமைப்பின் தொழிற்சங்க செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டவர். கலை இலக்கிய இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர். அகால மரணமடைந்த அவரின் மகனின் பெயரில் இப்பதிப்பகம் மூலம் புத்தகங்களை வெளியிடுவது என்ற எண்ணத்தில் அவரின் இந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவருவது அவரின் தொடர்ந்த சமூக செயல்பாடுகளின் ஓர் அங்கமாக இருக்கிறது.