கொங்கு நாட்டு வட்டார மொழிப்பிரயோகமும், வாழ்க்கையும் கவனிக்கத்தகுந்த அளவில் நாவல்குமாரகேசனின் படைப்புகளில் சமீபத்தில் வெளிப்பட்டிருப்பதால் அவரைக் கூர்ந்து கவனித்து வந்தேன். பெயரில் இருந்த விசித்திரத்தன்மையும் கூட. நாவல் என்பது பழமா, ஊரா, பெண்ணா என்று குழப்பம் தந்த்து..குமாரகேசன் என்ற பெயர் குமரேசனிலிருந்து ஏதோ மருவி யிருப்பது தெரிந்தது. அத்ற்கெல்லாம் விளக்கம் அவரின் நூலில் இருக்கிறது. அதை வெகு தாமதமாகவே தெரிந்து கொண்டேன். அவர் கொங்கு நாட்டு ஆசாமி . கேரளாவில் தொழில் செய்கிறார் என்பதும்,கொங்கு வட்டாரப் பிரயோகம் தவிர இவரின் படைப்புகளில் குழந்தைகள் உலகமும், பிராணிகளின் உலகமும், தொன்மங்களின் மறு வாசிப்பும் கவனிக்கத்தக்கது..
குமரகேசனின் குழந்தைகள் பிராணிகளை மிகவும் நேசிக்கிறார்கள். மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் பெயர் இட்டு அழைக்கிறார்கள். சகமனிதனாய் நட்த்துகிறார்கள். அதனால்தான் அவர்களை காயடித்து, பின் சாமிக்கு பலியிடும் போது வாழ்க்கையின் விளிம்பிற்கே சென்று விடுகிறார்கள். தன் பக்கத்து நியாயமும், எதிர்ப்பும் எப்படியோ காட்டி ஓய்ந்து விடும் போது சுக்கு நூறாக உடைந்து போகிறார்கள். எறும்புகளைக்கூட அழுத்தமாய் தள்ளி விடும் இயல்பில்லாமல் மெதுவாக ஊதித் தள்ளி விடுகிறார்கள்.மதிய உணவிற்காக விறகைச் சேமிக்க விறகு வெட்டப்போய் பாம்பு தீண்டி துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.பள்ளிக்கல்வி மறுக்கப்பட்ட சாதாரண குழந்தைகளை ஈரத்துடன் காட்டுகிறார். பிராணிகளுக்கும் ஆன்மா இருப்பது போல அவைகள் மகிழ்ச்சி கொள்வதாய் எழுதப்பட்டுக்கும் வரிகள் அற்புதமானவை.கொளிஞ்சி விற்று வருகிற காசில் மசாலா வடை வாங்கித்தின்கிற ஆசை போல இவர்களின் ஆசைகள் மலிந்து கிடக்கின்றன.
அன்பும், மனித நேயமும் கிராம மக்களிடம் வெகு சிறப்பாக வெளிப்படும் போது இருக்கும் மனப்பகிர்தல் விரிவாகச் சொல்லப்படுகிறது., அவர்களில் சிலர் ஏமாற்றுவர்களாக இருப்பது காட்டப்படுகிறது. ஏமாற்றுகிற கர்ப்பிணிப் பெண், சாமக்கோடாங்கியின் பின்னணியும் தெரிவதில்லை ஆனால் சங்கடப்படுத்துகிறது.மண்ணின் மனிதர்களான ஆதிவாசிகள் ஒவ்வொரு இடமாய் அலைக்கழிக்கப்படுகிற விசயமும் கூட. கடவுள்கள் கூட அவர்களைக் காப்பாற்றுவதில்லை. அவர்களே வெறுமனே கோபம் கொண்டு முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள் . ஒரு பக்கம் சாயப்பட்டறைகள், இன்னொரு பக்கம் தோல் பதனிடும் தொழிற்சாலைகள். இவற்றுக்கிடையே இருந்து காலம் தள்ள முடியாத கடவுள்கள் தொலை தூரம் ஓடிப்போகிறார்கள். சாலை விஸ்தாரத்தில் பிடறி தள்ளி ஓடிப்போகிறார்கள். நாத்திகத்திற்கு வலுசேர்க்கும் படிமங்கள்.இன்னொரு புறம் வரலாற்றை படிமமாக்குகிற முயற்சியாக கோட்டை பொம்மாக்கா போன்ற கதைகள் தென்படுகின்றன. ஆடு மேய்க்கும் பெண் நரியையும் சகா போல் நேசிக்கிறாள். ஆனால் அந்த கர்ப்பிணிப் பெண்ணை நரி வயிற்றைக் கிழித்துப் போட்டு விடுகிறது. மனிதர்களின் நம்பிக்கை துரோகங்கள் போல் பிராணிகளிடதிலும் உள்ளது.பூர்வீக வீட்டில் கழுதைகளின் ஓலம் போல் சடங்குகளை கிண்டல் செய்கிறவை புது வார்ப்புகள் ..கிராமங்கள் மாறாமல் இருக்கின்றன். வாகனங்களின் அபரிமிதமாக இயக்கம் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருப்பதைக் காட்டுகிறார்..கொங்கு மொழி வாயிலாக ஒரு கதை சொல்லியும், குழந்தை மனமும் சரியாக வெளிப்பட்டிருக்கிறது.இதில் வரும் சில கதைகளின் தர்க்க்குறைபாடுகளை இதன் முழு எதார்த்தமும், சொல்லும் மொழியும் மறைத்து விடுகிறது. கிராமிய வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையோடு இணைக்கும் கணிகள் இல்லாமல் இருக்கின்றன.
உலகம் விரிந்ததாய் எல்லோருக்குமான களமாய் இருக்கிறது. ஆனால் தங்களுக்கான வெளியும் இடமும் அற்றவர்களாய் போய் விடுகிற மனிதர்களை இவர் பெரும்பாலும் காட்டுகிறார். ஆடுமாடுகளை நேசிக்கும் சிறுவன் அவனின் உலக்த்திலிருந்து துரத்தப்பட்டு கிணற்றில் விழ நேருகிறது, படிக்கப் போய் மதிய உணவு சமயலுக்காக சிறுவர்கள் விறகுவெட்டிகளாகிறார்கள். மசால் வடை வாசனை பிடிக்க கொளுஞ்சி பிடுங்கப் போய் விடுகிறார்கள். தன் குடும்ப வாழ்க்கை மேம்பட வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் இழக்கும் பெண்ணும் தாய் வீட்டுற்குத் துரத்தப்படுகிறாள்.ஆதிவாசிகள் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டு துரத்தப்படுகிறார்கள். வேறு மாநில தமிழர்கள் துரத்தப்படவும் பல காரணங்கள் அமைந்து விடுகின்றன. ..தங்களுக்கான வெளியை இழந்து போய் நிற்பவர்களாக இருக்கிறார்கள்.
இவரின் பிரதேசம் பற்றி இவரே இப்படி சொல்கிறார்:” கொங்கு தேசத்தில் ஏகதேசமாக தென்கிழக்குப் பகுதிதான் நான் பிறந்த பூமி. விவசாயிகளில் இரண்டு ரகம் உண்டு. செழிப்பான ஆற்றுப் படுகைகளில் வ்யல்பரப்புகளுடன் வாழ்பவனும் விவசாயிதான். கள்ளிமரங்கூட பல்வற்றிக்கிடக்கு மேட்டாங்காடுகளில் காடுகரையுடன் காலந்தள்ளுபவனுன் விவசாயிதான். கண்ணுக்கெட்டும் தொலைவிற்கு குளமோ ஆறோ நீர் ஆதாரம் கொண்ட மலையோ தட்டுப்படாத பகுதிதான். ஆனி, ஆடியில் பனைமரம் கூட வாடி நிற்கும். பல பஞ்சத்திலும் சிறுகச்சிறுக உயர்ந்து வளர்ந்து சிறிதேனும் பசுமை கொண்டிருந்த பனை மரங்களும் குருத்து தொங்கி காயந்து விழுந்தன. பனை மரங்கள் ஜீவமரணப் போராட்டதுடனே வழங்கிய பதனியும் நுங்கும் சேகாயும், பனம்பழமும், பனஞ்கிழங்கும் எமது மக்களின் பசியைப் போக்கியதை விட பட்டினியைப் பல நாட்கள் குறைத்தன. இது போக ஆடுமாடுகளுக்கு வேப்பிலையும், அரப்பிலையும், வேலாங்காயும் தழையும் வளர்ப்புத்தாயாக வழங்கிய மரங்கள் கூட காலத்தின் கொடூரத்தால் எம்மை விட்டுப் பிரிந்தன. பலவற்றை வயிற்றுக்காகவே இழக்க வேண்டியிருந்த்து. கையை வெட்டி வித்துப் பிழைப்பது போலிருந்தது நிலைமை. கால ஓட்டத்தில் பஞ்சத்தின் கோரப்பிடியால் சோறு போட்ட ஆடு மாடுகளையும் காசிற்கு விறக் வேண்டியது வந்தது. ஒரே தலைமுறையில் முட்டிதூக்கிப் பஞ்சம், துவரைப் பஞ்சம், கோதுமைப்பஞ்சம் எனப் பல வறட்சியில் மக்கள் அலைக்கழிந்து போனார்கள். கூலிக்காரர்களும் பண்ணையக்காரர்களும் பிறந்த மண்ணை விட்டு பிழைப்புத்தேடி புலம் பெயர்ந்து புறப்பட வேண்டிய துர்நிலை ஏற்பட்டது. இளைய தலைமுறையினர்க்கு கல்வி கற்க வேண்டிய சமயத்தில் குடும்பத்ஹ்டைக் காப்பாற்ற புலம் பெயர்ந்து அடுத்த மண்ணிற்கு புறப்பட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. பிறந்த பூமியென்று புலம்பிக் கொண்டிருந்தால் இடுப்புக் கோவணம் கூட மிஞ்சாது என்றதோர் நெருக்கடி. இதையெல்லம் மீறி என்ன நடந்தாலும் பிறந்த மண்ணிலேயே சாவோம் என்று வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்க்கைதான் இத்தொகுப்பில் இடம் பெற்ற அனேக கதைகள்.”
எழுதிச் செல்லும், சொல்லும் விதத்தில் நுணுக்கமானப் பார்வை. சிறுகதைகளின் முரண் வலிந்து இல்லாததாய் இயங்கிறது. ஜாதியக் குழுக்களும், முரணும், சங்கடங்களும் ஒளிவு மறைவின்றி சொல்லப்பட்டிருக்கிறது. இளம் பிராயத்தில் மனதில் ஆழப்பதிந்து போன சுவடுகள்.கொங்கு மொழி படைப்பிலக்கியத்தில் காணாமல் போய்க் கொண்டிருக்கும் சூழலில் அதை நுணுக்கமாகவும் ஆழமாகவும் பயன்படுத்தும் லாவகம்.நாவல் குமரேசனிடமிருந்து விரிவான நாவல் வடிவப்படைபடைப்புகளை எதிர்பார்க்க வைக்கிறது. கொங்கு கலாச்சார அம்சங்களில் ஆழமான ஈடுபாடு.மொழியின் லாகவம், மக்களை வாசிக்கிற அக்கறை இவையெல்லாம் அந்நிய மாநிலத்தில், அந்நியப்பட்ட சூழலில் தன் வேர்களை அடையாளப்படுத்துகிற முயற்சியாக குமரகேசனின் எழுத்து வெளிப்பட்டிருக்கிறது. இது இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும்.
(ரூ 80/ வெளியீடு: அன்னை ராஜராஜேஸ்வரிர் பதிப்பகம், சென்னை 11)
= சுப்ரபாரதிமணீயன் subrabharathi@gmail.com