சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 18 அக்டோபர், 2015

திருப்பூர் : மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட          :

சுப்ரபாரதிமணியன்



சில ஆண்டுகளுக்கு முன் சாயக்கழிவுகளும், சாயநீர் குட்டைகளும் அதிகமாகிக் கொண்டிருப்பதையும், ஒரு காதல் ஜோடி சாய நீர் கழிவுக்குட்டையில் விழுந்துத் தற்கொலை செய்து கொண்டது பற்றியும்

தற்கொலைக்களன் என்று சாய கழிவைக்குறியீடாக வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். சமீபத்திய செய்திகளில் திருப்பூர் நகரமே ஒரு தற்கொலைக் களன் ஆகியிருப்பதை அறிய முடிகிறது.. சென்னைக்கு அடுத்தபடியாக தற்கொலை விகிதம் திருப்பூரில் தான் அதிகம் என்பதை புள்ளி விபரக்கணக்குகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளைக்கு 30 தற்கொலை முயற்சிகளும், மாத்த்திற்கு 50 தற்கொலை சாவுகளும் பதிவாகின்றன. சென்றாண்டில் 495 தற்கொலை சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இவ்வாண்டின் முதல் ஆறு மாதத்தில் 350 பேர் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கின்றனர்..இவர்களில் 20 வயது முதல் 40 வயதிற்குற்பட்டவரே அதிகம். அதிலும் ஆண்கள் அதிகம்.

( முகூர்த்த நாட்களில் திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் நடைபெறும் திருமணங்கள்- தன்னிச்சையாக நாலைந்து யுவதிகளும், யுவன்களும் வந்து ஒரு திருமணத்தை நடத்துகிறார்கள். -, மற்றும் திருப்பூர் மகளிர் காவல் நிலையங்களில் நடைபெறும் இளம் வயதினரின் காதல் திருமணங்கள் ஆகியவற்றுக்கும் இந்த தற்கொலை விகித்த்திற்கும் வெகு சம்பந்தம் உண்டு. இதைத் தவிர சர்ச் நடவடிக்கைகள் தனி கவனம் பெறுகின்றன. மத மாற்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றசாட்டிலும் திருமண பந்தங்கள் அமைந்திருக்கின்றன. )

10லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரமாகி விட்டது திருப்பூர். இதில் பாதிக்கு மேல் வெளியூர்களில் இருந்து வந்த தொழிலாளர்களும், வந்து போகும் மக்களும் அடங்குவர். வெளியூர் என்பது வெளி மாவட்டங்கள் என்ற 5 வருடம் முன்பு இருந்த நிலை மாறி ஒரிசா, பீகார் போன்ற வேலை வாய்ப்பு மிகவும் குறைந்த மாநிலங்களும் இதில் அடக்கம். நேபாளம் சார்ந்த தொழிலாளர்களுக்கான தொழிற்சாலைகள் இங்கு சிலது உண்டு.

திருப்பூர் வேலை வாய்ப்புகளுக்கான ஒரு சொர்க்கம் என்று நம்பி இங்கு

படையெடுக்கிறார்கள். வேலைவாய்ப்பும் அதிக சம்பளமும் என்பது உண்மைதான். ஆனால் அடிப்படை ஆதாரங்களுக்கான செலவு என்பது இந்த அதிகப்படியான சம்பளத்தை விட குறைவாகத்தான் இருக்கிறது. வீட்டு வாடகையும், தண்ணீர் போன்றவைகளுக்காக செலவழிக்கப்படும் தொகையும் அதிகமாக இருக்கிறது. கிராமங்களில் நல்ல காற்றோட்டத்துடனும், ஓரளவு தண்ணீர் வசதியுடனும் வாழ்ந்தவர்கள் இங்கு புறாக்கூடு, குருவிக்கூடு வீடுகளில் வாழும் நிலை. பொதுக்கழிப்பறை கூட அதிகம் இல்லாத தெருக்கள் குப்பையால் நிரம்பி வழிகின்றன. பாலீதின் பொருட்களின் உபயோகம் அபரிமிதமாக இருக்கிறது. சாலை விரிவாக்கங்களால் மரங்கள் பிரதான சாலைகளில் அருகி விட்டன . அதனால் 5டிகிரி வெப்பம் அதிகரித்தே மிக வெப்பமான நகரமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கு

.

பல சமயங்களில் வேலை நிரந்தரமின்மையும், வேலை வாய்ப்பின்மையும் பணத்தட்டுப்பாடுகளை உருவாக்குகிறது.

இதனால் கடன் வாங்க வேண்டிய அவசியமும், அதற்கான வட்டியும் அவர்களை மீளச் செய்வதில்லை. ஊரில் இருப்பவர்கள் சொர்க்கபுரிக்குச் சென்றிருக்கும் தங்களின் குடுமப நபரின் வருமான சேமிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் போது க்டன் வாங்குவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. இந்த கடனிலிருந்து மீளவது சிரம்மாகி விடுகிறது. அதிகப்படியான உழைப்பை எதிர்பார்க்கிற நகரம் இது. எட்டு மணி நேர உழைப்பு என்பது இங்கு அமுலாக்கப்படுவதில்லை. குறைந்த்து 10 மணி நேர சிப்ப்ட் என்பதே நடைமுறையில் உள்ளது. அதிக நேரத்திற்கான இரட்டிப்பு சம்பளம் என்பது 10 மணி நேரத்தைத் தாண்டும் போது தான் சாத்தியமாகிறது. அதிக நேர உழைப்பு என்பது மனித உடலை இயந்திரமாக்கி , வயதையும், நோய்களையும் கூட்டி விடுகிறது. பனியன் கம்பனியில் வேலை செய்கிறவன் 40 வயதிற்கு மேல் வேலை செய்ய உடல் ஆரோக்கியத்தையும், பலத்தையும் பெற்றிருப்பதில்லை. கடன் தொல்லை போன்றவற்றிலிருந்து விடுபட தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கட்டுகளை வாங்குவதிலும் தன் சேபிப்பை செலவிடுகிறான். ஒற்றை பெற்றோர் முறையிலான

.

தொழிலாளியாய் ஆண் இங்கு வந்து வேலை செய்து வருமானம் ஈட்டும் போது பெண் ஊரில் இருந்து கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளையும், வருமானமில்லாத நிலத்தயும் பார்த்துக் கொண்டிருப்பாள். அல்லது ஆண் ஊரில் இருந்து கொண்டு பெண்ணை வேலைக்கு அனுப்புவதும் பெருமளவில் நடக்கிறது. ஊரில் கணவன் சிறு விவாசாய நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து கொண்டிருப்பான். குடும்பத்தை தாயுமானவனாக இருந்து காத்துக் கொண்டிருப்பான். பெண் இங்கு வந்து சம்பாதித்து மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்து கொண்டிருப்பாள். ஒற்றைப் பெற்றோர் முறையிலான இவ்வகைத் தொழிலாளர்கள் இங்கு வந்து தங்கி வேலை செய்யும் போது சுதந்திரமாய உணர்கிறார்கள். ஜாதி உணர்வை புறம் தள்ளி விட்டு இயல்பாய் இருக்கிறார்கள். அதிக நேரம் குறிப்பாய் இரவிலும் தொழிற்சாலையில் இருக்கும் கட்டாயத்தால் வேற்று பாலியல் தொழிலாளர்களுடனான பேச்சும், பழக்கமும் , தொடர்பும் பாலியல் தொடர்புகளாக மலர்கின்றன. .

. தொழிற்சாலை சூழலில் தனிமைப்பட்டு போயிருக்கிற தொழிலாளிக்கு பாலியல் தொடர்பு சகஜமும், இயல்புமாகிறது.. இது ஆரம்பத்தில் ஆறுதல் தந்தாலும் உளவியில் ரீதியான சிக்கல்களை ஆரம்பம் முதலே தந்து விடுகிறது. இந்த சிக்கல் தொடர்கதையாகி குற்ற நடவடிகைகளுக்கும், கொலைகளுக்கும் வழி வகுக்கின்றன. திருப்பூரில் குற்ற நடவடிக்கைகளும்,

கொலை விகிதங்களும் மிகவும் அதிகமாக இருக்கின்றன.

வெளியில் இருந்து வரும் தொழிலாளி தன்னை தொழிலாளியாக கருதுவதில்லை, அதற்க்கான உரிமைகளையும் கோருபவனாக இல்லை. மழை பெய்தால் ஊருக்குப் போய் விவசாயம் செய்யலாம் என்ற கனவில் பலர் இருக்கிறார்கள். அல்லது ஊரில் தாங்கள் பார்த்த வேலைக்கு தடங்கல் இல்லை என்றுத் தெரிகிற போது வெளியேறுப்வர்களும் இருக்கிறார்கள். அதிகப்படியான நேர உழைப்பால் அசதி மற்றும் ஓய்வின்மை அவனை வெளியேறத்துடிக்கிறவனாக்க்குகிறது.தொழிற்சாலையில் பிரச்சினை என்று வருகிற போது தொழிந்சங்கங்களை அணுகுவதை விட தொழிற்சாலையின் நிர்வாகிகளையோ, புரோக்கர்களையோ அணுகி தங்கள் பிரச்சினையை தீர்த்துக் கொள்வது ஏதுவாக இருக்கிறது. வாரம் 5 ஞாயிற்றுக்கிழமைகளில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் வேலை இருக்கும். மீதமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில் மதுவும், மூன்றாம் தரப்படங்களும் அவனுக்கு ஆறுதல் தருகின்றன. தொழ்ழிற்சங்கத்தினர் அவனை அணுகுவது கூட சிரமமாக இருக்கிறது. அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ந்ல்ல பூங்காக்களோ ( இருக்கு ஒரே பூங்கா மாசடைந்த நொய்யலின் ஓரம் சாயக்கழிவு துர்நார்றங்களை வீசிக்கொண்டிருப்பதாக இருக்கிறது. பெயர் பிருந்தாவன். பெயரில் என்ன இருக்கிறது. ) இல்லை. மாவட்டம் என்று ஆகிவிட்டாஅலும் மாவட்ட்திற்கான மையநூலகமோ இல்லை. மிகக் குறைந்த கொசுக்கடி நூலகங்களே உள்ளன. அதிகப்படியான மதுபானக் கடைகளும்,( 100) அதிக பெட்ரோல் பங்குகளும் உள்ள நகரம். குடிநீருக்காக கால்கடுக்க குடும்பப் பெண்கள் நிற்கவேண்டிய நிலை. மூன்று குடிநீர் திட்டங்கள் நிறைவேறி விட்டன. அதிலும் பிரைவேட் ப்ப்ளிக் பார்ட்னர் திட்டம் என்று ஆசியாவிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பவானி தண்ணீர் திட்டம் ஒரு வகையில் தோல்வியே. குடிநீருக்காக மக்கள் பணம் தருவதை கட்டயமாக்கும் திட்டம் இது.இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பின் திருப்பூர் மக்கள் தொகை இருபது லட்சத்தை தாண்டும் என்ற புள்ளிவிபரத்தை முன் வைத்து செயல்படும் திட்டங்கள் தேவையாக இருக்கின்றன. சாயத்தால் நொய்யல் ஆற்றையும் , மண்ணையும் மாசுபடுத்தி விட்டோம். அதை சுத்தம் செய்யலாம் வாருங்கள் என்று ஏற்றுமதியாளர்கள் பெரிய பெரிய பேனர்கள போட்டு தங்கள் குற்ற உணர்வை வெளிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள் சமீபத்தில். நொய்யலை சுத்தம் செய்கிறோம் என்று நகரத்தின் மையத்தில் சிறிய பகுதியை சுத்தம் செய்திருக்கிறார்கள் வளம் என்ற ஏர்றுமதியாளர்கள் சங்கத்து உறுப்பினர்கள். 1000 அங்கீகரிக்கப்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளன. இதற்காக எரியூட்டப்படும் மரங்களும், அவற்றின் சாம்பலும் ,துண்டு பனியன்களை வீட்டு உபயோகத்திற்காக எரியூட்டப்படும் கழிவும், சாயக்கழிவும் பெரும் அபாயங்களாக மாறி உள்ளன. தினசரி இங்கு விற்கப்படும் கொசுவர்த்தி நிவாரணி சுருளும் , திரவ புட்டியின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் விற்கப்படுவதில்லை.சாயப்பட்டறைக் கழிவுகளை மறுசுத்திகரிப்பு முறையில் நிவர்ர்த்தி செய்ய 30 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.200 நிறுவனங்கள் தனிப்பட்ட முறையிலும் வைத்துள்ளன. அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் உப்பின் அளவு அபரிமிதமாக இருப்பதால் பெரும் சுற்று சூழல் பாதிப்பு எற்படுகிறது.சாயக்கழிவுகளை கடலில் கலக்கும் திட்டம் அறிவிக்கப்பட்ட போது கலைஞருக்கு நன்றி தெரிவித்து பேனர்களும், தட்டிகளும் நகரம் முழுவதும் காணப்பட்டன. சாதாரண தொழிலாளி திருப்பூருக்கு சாயப்பிரச்சினையிலிருந்து விடிவு வந்து விட்டதென்று கலைஞரைப் புகழ்ந்து நெகிழ்ந்து போய் கிடந்தான். சுற்றுச் சூழல் பாதிப்பும் , சுற்று சூழல் அமைப்புகளின் எதிர்ப்பும் மீறி அது நிறைவேறப்போவதில்லை.தொழிற்சங்கவாதிகளும் , அரசியல் தலைவர்களும் ஏற்றுமதியாளர்களாகவும், பனியன் வியாபாரிகளாகவும் உள்ள சூழல் எந்த சுற்றுச் சூழல் சார்ந்த நம்பிக்கைக்கும் இடம் தருவதில்லை. தொழிற்சங்க்க கல்வியோ, அரசியல் கல்வியோ தொழிலாளிக்குத் . தர முடியாத நிலையில் தொழிற்சங்கங்களும், அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. வெளிநாட்டு ஆர்டர்கள் வருவதும் போவதுமான ஊரில் வேலை பல சமயங்களில் நிரந்தரமில்லாத்தாகி விடுகிறது. இது தரும் பாதுகாப்பின்மை அவனை பயத்திற்குள்ளாக்கி விடுகிறது. அவன் நிரந்தர தொழிலாளியாக இல்லாமல் பீஸ் ரேட் செய்கிறவனாக , காண்டிராக்ட் ஊழியனாக மாறிய நிரந்தரத்தன்மை இங்கு அவனை பாதுகாப்பில்லாதவனாக்கி விடுகிறது. குடும்பத்தினருடன் அவன் இருக்கும் நேரம் குறைவாகவே இருக்கிறது. குடும்பத்திலும் அந்நியனாகவே இருக்கிறான்.

சமூக மனிதனாக அவன் நடமாடுவதாற்கான சந்தர்ப்பங்கள் வெகுவாகக் குறைந்து விட்டது. கலாச்சாரத்தளத்தில் அவனின் செயல்பாடு முடக்கப்பட்டு விட்டது முந்தின தலை முறை படிப்பறிவை நிராகரித்துவிட்டு குழந்தைத்தொழிலாளியாக வளர்ந்ததின் பலனை திருப்பூரின் இன்றைய கேளிக்கை நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சார குடும்ப அமைப்புகளும், குற்ற நடவடிக்கைகளும் வெளிப்படுத்துகின்றன. இதிலிருந்து மீண்டு அவன் சக மனிதனாகவோ, சக் தொழிலாளியாகவோ சமூகத்தில் தன்னைப் பிணைத்துக் கொளவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து விட்டன. இந்த .சூழல்கள் அவனை சோர்வுள்ளவனாக, மனரீதியாக பாதிப்படைந்துள்ளவனாக அவனை மாற்றி விட்டது. இதுவே அவனை தற்கொலைக்குத் தூண்டுகிறது. அந்நிய செலவாணி தரும் டாலர் சிட்டி என்ற அடைமொழி மாறி தற்கொலை நகரம் என்றாகி விட்டது. வணிக நடவடிக்கைகளும், நுகர்வு கலாச்சாரமும் கலாச்சார அந்நியமாக்கலும் இதைத்தவிர வேறு எதையும் ஒரு தொழில் நகரத்தில் வாழும் மனிதனுக்குத் தந்து விடாது. திருப்பூரின் தொழில் வளர்ச்சி தந்திருக்கும் நிரந்த போனஸ் இது.


திருப்பூர் இலக்கிய விருது 2015
  (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)  

பரிசு பெற்றோர்:
1.நாவல் : ப.க. பொன்னுசாமி – நெடுஞ்சாலை விளக்குகள்
2. கட்டுரை: சேதுபதி – பாரதி தேடலில் சில பரிமாணங்கள்
3. சிறுகதை: முற்றத்துக்கரடி – இலங்கை அகளங்கன்
4. கவிதை:               எல்லாளக்காவியம்-                                                                  இலங்கை ஜின்னாஹ் சரிபுத்தீன்
5. சிறுவர் நூல் :                சொட்டுத்தண்ணீர் –
இலங்கை ஓ.கெ.குணநாதன்
6. மொழிபெயர்ப்பு: விஜயலட்சுமி சுந்தர்ராஜன் –                         இந்தி மொழிபெயர்ப்புகள்

அயலகப்பரிசுகள்  பெறும் படைப்பாளிகள்:

----------------------------------------
ஜெயந்தி சங்கர்
மாதங்கி
சிங்கை டாக்டர் லட்சுமி
நடேசன்
அயலகப்படைப்பாளிகளுக்கு பாராட்டுப்பத்திரம் சம்பந்தப்பட்டப் பதிப்பகங்களுக்கு அனுப்பிவைவக்கப்படும். மற்றவர்களுக்கு பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்

திருப்பூர் இலக்கிய விருது 2015
(கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)


7/272 குருவாயூரப்பன் நகர், 7வது தெரு , போயம்பாளையம், திருப்பூர் 641 602. Srisuganthi2014@gmail.com
கவி ராத்திரி நிகழ்ச்சி
  30வது தேசிய புத்தகத் திருவிழா

கவி ராத்திரி நிகழ்ச்சி  என்பிடி என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி அரங்கில் ( பழைய பேருந்து நிலைய சாலை ) ஞாயிறு மாலை நடைபெற்றது.  
      கவிஞர் ஜோதி தலைமை தங்கினார். என்சிபிஎச் நிர்வாகி குணசேகரன், செல்லம் ரகு, ஜீவானந்தம், துருவன் பாலா,  முகில் திரையகம் ராசு ஆகியோர்  முன்னிலை வகித்தனர். கனல்மதி, பூண்டி முருகானந்தன், செந்தமிழ்வாணன், ஸ்டிபன் முடியரசு, ஜோதி, சுப்ரபாரதிமணியன்,  ஆகியோர் கவிதைகள் வாசித்தனர். செந்தமிழ் வாணன்  வெளிவர இருக்கும் அவரின் புதிய நாவல் “ பித்தப்பிறை “ நாவல் பற்றிய அனுபவங்களை எடுத்துக்கூறி  அறிமுகப்படுத்தினார். சுப்ரபாரதிமணியன் தன் “ மந்திரச்சிமிழ் “ நூலை சுய அறிமுகப்படுத்தி அதிலிருந்து கவிதைகள் வாசித்தார். சாகித்ய அகாதமி பரிசை எழுத்தாளர்கள் திருப்பி அனுப்பி வருவது பற்றிய விவாதத்தை சிவகாமி துவக்கி வைத்தார்.சாகித்ய அகாதமி பரிசை திருப்பி அனுப்பிய தெலுங்கு கவிஞர் பூபால் ரெட்டியின் “ நட்சத்திரப்பூ “ நூல் அறிமுகம் செய்யப்பட்டது. திருப்பூர் கனவு அமைப்பு வெளியிட்ட  அந்த          “ நட்சத்திரப்பூ “ கவிதைத் தொகுப்பு கவிதை வாசித்தோருக்குப்  பரிசாகத் தரப்பட்டது.. என்பிடி என்சிபிஎச் புத்தகக் கண்காட்சி  நவம்பர் 30 வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. 10% கழிவு உண்டு. இலக்கியம், சுயமுன்னேற்றம் உட்பட அனைத்துப் பிரிவு நூல்களும் விற்பனைக்கு உள்ளன.  செய்தி: குணசேகரன் ( என்சிபிஎச்)


அரவணைப்பு : சுப்ரபாரதிமணியன்


 அந்த இரட்டைச்சக்கர வாகனம் அவளை இறக்கி விட்டுப் போனது. அவள் 1 வெகு பரபரப்புடன், கழுத்தில் படிந்திருந்த வேர்வையைத் துடைத்து விட்டு வீட்டுகுள் நுழைந்தாள். அவள் 2 கோபப்பார்வையுடன் பார்த்தாள். அவள் 1 உடம்பை ஒடுங்கிக் கொண்டு நின்றாள். அவள் கால்கள் உட்கார எத்தனித்து இயல்பாக்கிக் கொண்டது. உடம்பின் வலியை அவள் முகம் தேக்கிக் கொண்டிருந்தது.
“ அவன் யாரு ..உன்னை டிராப் பண்ணினவன் “
“ ஆபீஸ்லே கூட வேலை செய்யறவர்
“ என்ன பெரிய மரியாதை வேண்டிக்கெடக்கு “
“ எவ்வளவு வருசமாத் தெரியும்
மூணு வருசமாத்தா . அந்த ஆபீஸ் போனப்பறம் “
“அவன் கூட உறவு வெச்சிருக்கியா.. படுத்திருக்கியா “
“ இல்லெ.”  
உணமையைச் சொல்லு. “
“ இல்லெ “
“ ரெண்டு பேர்த்துக்கும் எடையிலான நெருக்கத்தைப் பாக்கறப்போ நல்ல பழக்கம் இருக்குமுன்னு தோணுது “
“ அப்பிடியெல்லா இல்லே. “
“பொய் சொல்றே. பொய் சொல்றவங்களெக் கண்டா எனக்குப் புடிக்காது. நீ வெளியே போ “
“ வெளியே போன்னா எங்க போவேன் இந்த ராத்திரியிலே.
“எங்காச்சும் போ. கோமிலே உன் பிரண்ட்ஸ் இல்லையா. ஹாஸ்டல்லே உங்க பிரண்ட்ஸ் இல்லையா. இல்லை இப்போ நீ எவன் கூட வந்தியோ அவன் இருக்கற எட்த்துக்குப் போ “
“ அதெப்படி போக முடியும் “
“ அவன் கூட உறவு வெச்சிருக்கியா ... படுத்திருக்கியே. போக வேண்டியதுதானே. எத்தனை தரம் படுத்திருக்கே. உண்மையைச் சொல்லு. பொய் சொன்னா புடிக்காது எனக்கு  “
“ நாலு தரம். உங்க கூட வந்தப்புறம் அது மாதிரி இல்லெ..
“என்னாச்சு..
“புடிக்காமெப் போச்சு. “
“ அப்போ.. நான் உனக்கு புடிக்காமெப் போயிட்டா, கசந்து போயிட்டா  வேறொருத்தன் கிட்டையோ, வேறொருத்திகிட்டையோ    போயிருவே ..இல்லையா.. அப்பிடித்தானெ.
“ அப்பிடியெல்லா இல்லெ. உஙக கிட்ட வந்தப்புறம் வேற எந்தப் பழக்கமும் இல்லெ.
“ உட்காராதே..எந்திரி. பொய் பேசற நீ எங்கூட இருக்க்க் கூடாது.
“ ரொம்ப கால் வலிக்குது. அதுதா உட்கார்ரன். இனி யார்கிட்டையும் தொடர்பு இருக்காது.
“ இல்லே நீ போயிரு.. நீ பொய் சொல்றே “
“ இல்லே. பொய் ஒன்னும் இல்லே. நம்புஙக. “
அவள்1 நெருங்கி வந்து கட்டிக்ப்பிடித்துத்  தோளில் சாய்ந்தாள். அவள்2 அவளை சற்றே தள்ளி விட்டாள். அவள் 1 சற்றே முன் நகர்ந்து போனவள் மீண்டும் அவள்  தோளைப்பிடித்தாள். பின்புறத்தை கட்டிக் கொண்டாள். அவள் 2 சுவரைப் பார்த்தபடி  நின்றாள். அணைப்பு இதம் தருவது போல் நின்றார்கள்.வாசலுக்கு வெளியே புடுபுடுத்து ஓடிய வாகனங்களின் அபரிமிதமான சப்தம்   அவர்களைப் பிரிக்க முடியவில்லை.
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,

திருப்பூர் 641 602    / 9486101003 /  subrabharathi@gmail.com

முற்றத்துக்கரடி: அகளங்கன் சிறுகதைகள்  : சுப்ரபாரதிமணியன்
---------------------------------------------------------------------------------------------------



 ஈழமக்கள் விடுதலைக்கான லட்சக்கணக்கான உயிர்தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டங்கள் பல பின்னடைவுகளைத் தந்து விட்டது.  யுத்தங்களின் பாதையில் நெடும்பயணம் சென்று விட்டனர் ஈழ மக்கள்.  அறுபதாண்டு குரல்கள்  ஓய்ந்து விட்டன.  இன அழிப்பு முயற்சிகளும்  இருந்து கொண்டே இருக்கின்றன. கனவுகளும் இருந்து கொண்டே இருக்கின்றன.  அகதிகள் நிலையை மீட்டெடுக்காமல்   கொல்லப்படாமல் திரிவதே சுதந்திரம் என்றாகி விட்ட்து. அந்த நாட்டு எழுத்தாளர்கள் தொடர்ந்து வாழ்தலுக்கான நீதியையும் அநீதியையும் பதிவு செய்து கொண்டே வருகிறார்கள்.பேரழிவுகள் தந்த உள்ளார்ந்த துயரங்களைத் துடைத்தெறிய முடியாமல்  இன்னும் எழுத்துக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.  போராட்டமும் வாழும் கனவும் தொடர்கிறது. போருக்குப் பின்னான நிகழ்வுகளும் மக்களைக் குரல் அற்றவர்களாக்கி விட்டது.  ஈனசுரங்களாய் பலவும் எழுகின்றன. வாழ்கிற பெரும் கனவிற்காக இன்னும் துயரங்களைச் சுமக்க வேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் அகளங்கன் இந்தத் தொகுப்பில் பதிவு செய்திருக்கிறார்.
    சமீபத்தில் அறுபது வயதைக்கடந்திருக்கிறார் அகளங்கன். அவரின் எழுத்துப் பணியில் கவிதைகள், கட்டுரைகள், நாடகம் என்றிருந்தாலும் சிறுகதைத் தொகுப்பு என்ற வகையில் இதுதான் முதலாவதாகும். 42 வது வயதில் அவரின் இந்நூல் 21 சிறுகதைகளை உள்ளடக்கியதாகும். இனத்தன்மையின் தனித்துவமும், வன்னிப்பகுதிமக்களின் இன்றைய வாழ்வியலும் என்ற வகையில் இக்கதைகள் அமைந்துள்ளன..வவுனியாவின் பம்பைமடு என்ற விவசாய கிராமத்தின் மண்ணின் வனப்பையும்  பண்பாட்டு விழுமியங்களையும் அசைபோடும் மனிதர்களைக் காட்டுகிறார். மரபு வகையில் அமையப்பெற்ற   நடத்தை முறைகளின் விசித்திரங்களையும் வாழ்வியலையும் போர்க்காலச் சூழலையும் அதன் பின்னதான வாழ்க்கையையும் விரிவான அளவில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஆசிரியராக பணிபுரிந்தவர் என்ற அளவில்  நகர்புற ஆசிரியப்பணியின் சூழல் சரியாக  துருவ நட்சத்திரம் போன்ற கதைகளில் வெளிப்பட்டிருக்கிறது.  ஆசிரியரால் உருவாக்கப்படும் சிறுவர்கள் ஆசிரியர்களை நினைவு கூர்தல் சகஜமே. அந்த நினைவுகூறலின் உட்சபட்சமாய்  ஏழேழு பிறப்பும் ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என்ற அவா எழுவது உன்னதமான ஆசிரியப்பணியின் லட்சியமாக இருக்கிறது. அதேபோல் எழுத்தாளன் ஆவது என்கிறதும் கூட. ஆனால் இன்றைய நிலை வேறு மாதிரியாக இருக்கலாம். ஆனால் அந்த உயர்ந்த லட்சிய  நிலையை மனதுள்  மீட்டெடுப்பதாய் அமைந்துள்ள சிறுகதைகள்  பள்ளிப்பருவத்தையும் ஆசிரியப் பணி குறித்த அக்கறையையும்   வெளிப்படுத்துகின்றன.
பள்ளி போர்க்காலச் சூழலில் படும் அவஸ்தையை பல கதைகளில் எடுத்துரைக்கிறார்  இதைச் சொல்வதற்கு  அவரின் ஆசிரியப்பணியின் நேர்மை முன்னிற்கிறது.  கவிதை எழுதுபவன் இராணுவத்தாரின் சோதனையில் அது அவர்களின் கையில் சிக்கி விட்டால் அது தரும் விளைவுகளையும் மனப்பதட்டத்தையும் உணர்ச்சிமயமாக்கியிருக்கிறார். கவிதை எழுதுவதே மனபாரத்தை, சுமையை இறக்கி வைப்பதற்குத்தான். ஆனால் அதுவே பாரமாகி ஒரு இளைஞனை மனஅழுத்த்தில் மூழ்கடிப்பதைச் சொல்கிறார்.போர்க்காலச்சூழல்  மனிதர்களையும் விவசாயக்குடிகளையும்  இளைஞர்களையும் அலைக்கழிப்பதை பல கதைகளில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.குண்டு வெடிப்பு மனித மனங்களை சுக்கு நூறாக்குகிறது.  பள்ளியிலேயே குண்டு வெடித்து மாணவர்களைச் சிதறச் செய்கிறது. யுத்தம்  ஏதோ மூலையில் நடந்தாலும் அதன் பதற்றம் வீட்டிலும் பள்ளியிலும் உணரப்படாமல் இல்லை.இராணுவ நடவடிக்கைகளால் ஊனமாவனவர்களின் அவலத்திற்கு கணக்கில்லை. .ஊனமாகிறார்கள். பென்சன் வாங்கப் போனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். ( வெயில் மட்டுமா சுகம் )  . எந்த வகையிலும் புறக்கணிக்கப்பட்ட  துன்ப நிலையில் குடும்பம் என்ற வண்டி நகர சிரமப்படுவதை கதைகள் சொல்கிறன.காதலித்தவள் இராணுவதினரால் பாலியல் வல்லுறவுக்குப்பட்ட நிலையில்  அவளை குடும்பமே நிராகரிக்கிற அவல  நிலையும் ஏற்படுகிறது ( மீண்டும் ஒரு குருஷேத்திரம் ) சொல்வதற்கு நேரடித்தளங்கள் தேவையில்லாத போது குறிப்பாய் உணர்த்துவது படைப்பமைதிக்கு சிறப்பாக இருக்கும் என்பதை     வத்துக்குளம் “ போன்ற கதைகள் எடுத்துரைக்கின்றன.  கொண்டல் பிசின் போன்ற கதைகளையும் இது போன்ற குறியீட்டு வகையில் சேர்த்துப் பார்க்கலாம். சாப்பாட்டிற்கு மீன் பிடிக்க வந்தவர்கள் பெரும் வியாபாரிகளாகி மீன் வளத்தைச் சூறையாடுவதை இக்கதையில் சொல்கிறார். ஆனால் குறியீட்டுத்தன்மையில் பல தளங்களை இக்கதை குறிப்பிட்டுச் செல்கிறது.கிராமிய அனுபவங்கள் வெகு சரளமாக இக்கதைகளில் ஊடாடி நிற்கின்றன. உணவு  பழக்க வழக்கங்கள், மக்களின் அன்பான உபசரிக்கும் முறை, கிராமிய தொன்மை முதற் கொண்ட  உணர்வுகள் போன்றவை  விரிவாகவே எடுத்துச் சொல்கிறார்.
போர்க்கால சூழல் இடப்பெயர்வுகளை கொண்டு வந்திருக்கின்றன. ஒரு புறம் சம்பாதிக்க போய் விட்டத் தலைமுறையினர். இன்னொரு புறம் உயிர் பிழைக்க இருப்பதை விற்று காசு பார்த்து அதைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் மத்தியில் செல்ல முடியாத முதியவர்கள் தங்களின் மண் மீதான பாசத்தையும் உயிர்ப்பையும் கண்ணீரோடு வெளிப்படுத்தும் அனுபவங்கள் நிறைய உள்ளன.தங்களை விட மோசமான வகையில் உடல் உறுப்புகளை இழந்து தவிக்கும் இளைய தலைமுறையினரைப் பார்த்து ஆறுதல் அடைவதும் நிகழ்கிறது ( இந்தப் பிள்ளைக்கு ), போர்ச்சூழலில் செல் வெடிப்பும் அதற்குப் பயந்து மக்கள் சிதறுவது, ஒளிந்து கொள்ளும் அனுபவங்களும் பல கதைகளில் பதிவாகியுள்ளன. போர் நின்று போனால் தனது வருமானம் நின்று போகுமே என்று நினைத்து  சங்கடப்படும் ஒரு சிறுவனின் மன்நிலை விசித்திரமாகத் தென்பட்டாலும் அவனின் இயல்பான எண்ணமாக இருப்பதை                யாழ்தேவி  “கதை சொல்கிறது. குழந்தைத் தொழிலாளியாக அவன் பெறும் கூலி அவன் குடும்பத்திற்கு உதவுகிறது.. கொழும்பு தாண்டிக்குளம் வரை சென்று திரும்பும் புகை வண்டியால் அங்கிருந்து அரை கிமீ தூரத்திற்கு  பயணிகளின் மூட்டைகளைக் கொண்டு செல்லும் குழந்தைத் தொழிலாளி அவன். கிராமப்புறங்களில் விவசாயிகள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். ஒரு விவசாயி சிறு வியாபாரி ஆகும் போது அவன் நடந்து கொள்ளும் “ முதாலாளித்துவ குணம் “ பற்றியும் பேசுகிறார். ஒரு நண்பனே அப்படி மாறும் போது நடக்கும் கூத்து உட்சபட்சமாகப் போய் விடுகிறது.  ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது வேறு. ஒருவரை ஒருவர் புகழ்ந்து காரியங்கள் சாதித்துக் கொள்ளும் மன்ப்பாங்கு பற்றிய மன அலசல்கள் இதில் உள்ளன.சாமியாரை நம்பும் மக்கள், அவர்களின் மன நிலையை சமூக நிலையைக் கொண்டு விமர்சனமாக்குகிறார்.  வேலைக்குப் போகிறவர்கள் சுபமாக திரும்புவார்களா என்றப்  பதைபதைப்பு, பள்ளிக்கு செல்கிற குழந்தைகள் உயிருடன் திரும்புவார்களா என்ற வேதனை, பென்சன் வாங்கச் செல்கிறவர்கள்  இராணுவத்தின் கெடுபிடிக்கு பயந்து உயிரைவிடாமல் வீடு திரும்புவார்களா என்ற பயம் போன்றவை கூட உளவியல் முறையில் அனுதாபங்களுடனும் பதை பதைப்புடனும் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.. இலங்கையின் சம்கால சூழலில் வாழ நேர்கிறவனின் நேர்மையான அனுபவங்களை சிறுகதைகளாக்கியிருக்கிறார்  அகளங்கன். “ நாளைக்கும் பூமலரும் “ என்பது அங்கே காதில் விழும் ஒரு பிரபலமான திரைப்பாடல் . அந்தத் தலைப்பில் இருக்கும் சிறுகதையின் மனப்பதட்ட்த்தைத் தாண்டி அது போன்ற நம்பிக்கைகளையும் இக்கதைகள் தருவதை மறுப்பதற்கில்லை. மிருகங்களும் தாவரங்களூம், பறவைகளும் வெறும் குறிப்பீட்டளவில் மட்டுமில்லாமல் அதன் வெவ்வேறு வகைப் பெயர்களுடனும் இயல்புடனும் இவரின் கதைகளில் தென்படுகின்றன. ஆண்களின் உளவியல், மற்றும் கிராமிய பெண்களின் உளவியலை கூர்ந்து நோக்கும் உரையாடல்களால் நிரம்பியிருக்கிறது. வழக்கமானக் கட்டமைபை தகர்க்கும் பெண்களும் இதில் தென்படுகிறார்கள். புலம்பலுக்குள் மாட்டிக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.அறிவூட்டும் சமூகக் கடமையை பேச்சுக்கள் மூலமும் வெளிப்படுத்தி வருபவர் . அந்த நோக்கில் சில பேச்சுக்களும் உள்ளன.
 குமார் என்ற பாத்திரத்தை மையமாகக் கொண்டு பல கதைகளின் உருவாக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.  அகதிமுகாம் நிலைகளும் போர்சூழலும் தீவிரமாக நம் கண்களில் நடமாட வைத்து விட்டார். அதேபோல் வவுனியா பிரதேச நில   அமைப்பும்,வைத்யசாலைகளும், விவசாய நிலங்களும்  மண்ணின் மணத்தோடு பதிவாகியுள்ளன.இவரின் ஆசிரியர் கதாபாத்திரம் ஆசிரியர் பணியின் மேன்மையை உணர்ந்து ஏழேழுப் பிறவிக்கும் ஆசிரியராகப் பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுவது போல் ஏழேழுப் பிறவிக்கும் எழுத்தாளராகப் பிறக்கும் அனுபவங்களைத் தீவிரமாகக் கொண்டிருக்கிறார் அகளங்கன்.
( முற்றத்துக்கரடி – அகளங்கன் சிறுகதைகள்-  எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வெளியீடு, கதிர்காமர் வீதி,  அமிர்தகழி, மட்டக்களப்பு   )



Kanavu,       8/2635, Pandian nagar, Tiruppir  641 602  ( ph. 9486101003 )

புதன், 30 செப்டம்பர், 2015

சிறுகதை                              தாண்டுதல்.
                           சுப்ரபாரதி மணியன்.

“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க”
“என்ன கதையா”
“சின்னக் கதையா“
“குட்டிக் கதையா“
“குட்டிகளைப் பத்தின கதையல்ல........சொல்லட்டுமா”
“சொல்லுங்க..குட்டிகளனு யாரும் வந்திடக்கூடாது”
“இந்த உலகத்திலே மொதல்ல மனுசங்க மட்டுந்தா இருந்திருக்காங்க. எல்லாருக்கும் ரொம்பவும் போர் அடிச்சுப் போச்சு. மனுசங்க மூஞ்சிய மனுசங்களே எத்தனை நாளைக்குப் பார்க்கிறது? வேற வழியில்லாம கடவுளைப் பார்த்திருக்காங்க. அவர் போர் அடிச்சுட்டுனு பிராணிகள், விலங்குகள்னு படச்சிருக்கார். அப்புறம் ஏரி, குளம், அப்புறம் மரங்கள் செடி கொடின்னு அப்புறம் பூக்கள் மல்லி......”
“மல்லிகையா மல்லிகைக்கு அவ்வளவு முக்கியத்துவமா”
“மல்லிகா”
“உம்”
“மல்லிகாவைப் படச்சிருக்கார்”
“என்ன ஐஸ் வெக்கரதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா”
வெட்கத்தால் முகம் சிவந்திருந்தது மல்லிகாவிற்கு வீரக்குமாரைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கம்பளிப் பூச்சியாய் அவன் மீசை உட்கார்ந்திருந்தது. இடது கன்னத்து மச்சம் பளபளத்துக் கொண்டிருந்தது, கண் புருவத்திலிருந்து ஒரு மயிர் நீண்டதாய் தொங்கியது. அவன் மெல்ல அதை இழுக்க சாய்ந்தான் வீரக்குமார் “அய்யே வலிக்குது”
“பேர்லதா வீரக்குமார். இந்த மயிரை இழுத்ததுக்கே அய்யோவா?”
“என் வீரத்தை எங்க காட்டனும்கறே மல்லிகா”
“காம்பவுண்ட் சுவரை எட்டிக் குதிக்கறதிலதா காமிக்கிறீங்க.. போதும். செரியா.”
வீரக்குமாரின் வீட்டிலிருந்து நூறடியில் புகைவண்டி நிலைய காம்பவுண்ட் சுவர் ஆரம்பிக்கும். அது புகைவண்டி இருப்புப் பாதையை ஒட்டி ஒரு கிலோ மீட்டருக்கு நீண்டிருக்கும். புகைவண்டி நிலையத்திற்கு போக வேண்டுமென்றால் காம்பவுண்ட் சுவரையொட்டி ஒரு கிலோ மீட்டர் நடந்து போக வேண்டும். பல வருடங்களாய் திருப்பூர் பனியன் கம்பெனிக்கு போகிறவன். காலை நேரத்தில் அவசர கதியில் கிளம்புகிறவனுக்கு காம்பவுண்ட் சுவர் பெரிய தடையாக இருந்தது. வீட்டிலிருந்து வெளியில் வந்ததும் வலது பக்கத்தில் ஒரு வேப்பமரம் அதன் வேர்கள் காம்பவுண்ட் சுவரை ஊடுருவிக் கொண்டு நின்றிருந்தது. அதன் கிளையொன்றைப் பிடித்து காம்பவுண்ட் சுவற்றின் மேல் ஏறி உட்கார்வான். பின் எம்பிக் குதிப்பான். வேப்பமரம் பெருத்துக் கொண்டே போனபோது அதை வெட்டிவிட்டார்கள். அதன் அடிப்பாகம் மட்டும் தலையை மண்ணுள் புதைந்திருக்கிற மனிதனைப் போல நின்றிருந்தது. வேப்ப மரத்தை வெட்ட விட்டிருக்கக் கூடாது என்று நினைத்தான். அதனடியில் சிறிய கல்லை  நட்டு இரண்டு நாள் குங்குமம் தெளித்திருந்தால் சிறு தெய்வம் ஆகியிருக்கும். வாரம் இரண்டு முழப் பூவை உதிர்த்துவிட்டுப் போனால் நிரந்தரமாகியிருக்கும். முனியப்பனோ அங்காளம்மாளோ ஏதாவது பெயர் வைத்திருக்கலாம். வேப்பமரமும் நிரந்தரமாயிருக்கும். நழுவவிட்டு விட்டோமே என்றிருந்தது வீரக்குமாருக்கு.
            காலை புகைவண்டி நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றிப் போவது அவனுக்கு அவஸ்தையாக இருந்தது. வேப்பமரத்தின் அடிப்பகுதியில் கால்களை வைத்து எம்பியபோது சட்டென காம்பவுண்ட் சுவரின் மேல் அவன் உடம்பு, உட்கார்ந்து கொண்டது ஒருமுறை. அது எதேச்சையாக நடந்தது போலிருந்தது. அதற்குப் பின் அப்படி எம்பி காம்பவுண்ட் சுவரின் மேல் உட்கார முடியவில்லை.
            திருப்பூருக்குப் பேருந்தில் கிளம்பிப் போவதென்பது பெரிய அவஸ்தையாக இருந்தது அவனுக்கு. வஞ்சிபாளையம், மங்கலம், கருவம்பாளையம் கடந்து பேருந்தில் தடக்தடக்கென்று உடம்பை இம்சைப் படுத்திக் கொண்டு போவதில் அலுப்பிருந்தது. பேருந்து நெரிசல் வேறு மூச்சு திணற வைத்தது. திருப்பூரின் குப்பையும், சாயக் கழிவும், அசுத்தமும் இன்னமும் மூச்சடைக்க வைக்கும் பனியன் கம்பெனியில் பேட்லாக் ஸ்டூலில் உட்கார்ந்தால்தான் ஆசுவாசம் பிறக்கும் அவனுக்கு.
அவனின் அம்மா கல்யாணப் பேச்சை எடுக்கிற போதெல்லாம் எரிச்சலடைவான். “ஏண்டா எரிச்சல் படறே. வார்ரவ ஒரு டி.வி.எஸ்ஸோ, பைக்கோ வாங்கிட்டு வரமாட்டாளா”
“வர்ரவகிட்ட எதுக்குக் கேட்டுட்டு. நானே சம்பாதிச்சு வாங்கிக்கிறேன்”
“சம்பாதிக்கிற வரைக்கும் என்ன பண்ணப் போறே”
 இரட்டைச் சக்கர வாகனம் வாங்குவதை விட காம்பவுண்ட் சுவரைக் கடப்பதுதான் அவனின் அப்போதைய லட்சியமாயிருந்தது. பள்ளியில் விளையாட்டில் அக்கறையில்லாதவன் ஓட்டப் பந்தயமோ, உயரந்தாண்டுதலோ மனசில் இருந்திருந்தால் காம்பவுண்ட் சுவரைக் கடப்பது சுலபம். பேட்லாக் மிஷின் முன்னால் உட்கார்ந்து பனியன் தைக்கிற நேரம் தவிர மற்ற நேரங்களில் பனியன் கம்பெனி இளம் பெண்கள் அவனை இம்சித்ததை விட காம்பவுண்ட் சுவர்தான் இம்சித்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் வீட்டிலிருந்து சற்றே வேகமாகக் கிளம்பியவன் ஓட்டமெடுக்க ஆரம்பித்தான். காம்பவுண்ட் சுவரின் வலது பக்க மூலையிலிருந்து கால்களை எம்பி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிவிட்டான். அவனுக்கு மலைப்பாக இருந்தது. எப்படித் தாண்டினோம் என்று ஆச்சரியப்பட்டபடியே பனியன் கம்பெனிக்குப் புகைவண்டி பிடித்துப் போனான். பிறகு தினந்தோறும் உடற்பயிற்சி போல வேகமெடுப்பதும், ஓடுவதும், காம்பவுண்ட் சுவரை அந்த வேகத்திலேயெ கடப்பதும் சாதாரணமாகிவிட்டது. தாண்டுவது வெகுவாக இருக்கட்டும் என்று “பவர் ஷு” ஒன்றையும் வாங்கிக் கொண்டான்.கொஞ்சம் வயிறு கனமில்லாமல் இருந்தால் சுலபமாயிற்று.
பனியன் கம்பெனி வேலைக்கு காலையில் கிளம்பும்போது   அம்மா வருவதைத் தவிர்ப்பான். “என்னடா வர்ரேன்னு சொன்னாக்கூட விறுவிறுன்னு போயிர்ரே”
“டிரெயினைப் பிடிக்க வேண்டாமாம்மா”
“வேற யாரையாச்சும் பாக்கணுமா, சைகை காட்டணுமா, பேசணுமா”
“நீதா ஆள் பிடிச்சுத் தரணும்”
“ச்சீ..பேச்சைப் பாரு”

அவன் அம்மாவும் ஒரு ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தாள். புகைவண்டி நிலையத்திலிருந்து அடுத்த வீதியில் அவளை ஏற்றிச் செல்ல மில்லின் ஒரு சிறப்புப் பேருந்து வரும்.
 “எப்படிம்மா உன்னை அந்த பஸ்ல ஏத்திக்கிறாங்க”
“ஏண்டா”
“சின்ன வயதில் பொண்ணுகளை சுமங்கலித் திட்டமுன்னு சொல்லி ஏத்திட்டுப் போறாங்க. அஞ்சு வருசம் வேலை செய், உங்க கல்யாணத்துக்கு முப்பதாயிரம் தர்ரமுன்னு கூட்டிட்டுப் போறாங்க, நீயும் அந்த மில்லுல வேலை செய்யற... உனக்கும் முப்பதாயிரம் கெடைக்குமா”
“சும்மா இருடா.... அது சுமங்கலிகளுக்கு”
அம்மாவை துன்புறுத்தி விட்டோமோ என்றிருக்கும் அவனுக்கு ஏதோ பேசுவதாக நினைத்துக் கொண்டு, அம்மாவை துன்புறுத்தி விடுவதாகத் தோன்றும். அப்பா மட்டும் இருந்திருந்தால், ” சுமங்கலி “ பேருந்தில் அவள் வேலைக்குப் போகும் அவசியம் இருந்திருக்காது.
ஒருநாள் அவனைப் பின் தொடர்ந்து வந்த அம்மா அவன் காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் புகைவண்டி இருப்புப் பாதைக்குப் போவதைப் பார்த்தாள். அதிர்ந்து போய்விட்டவளுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. அன்று மாலை உடம்பு சுகமில்லையென்று சீக்கிரமே மில்லிலிருந்து வந்துவிட்டாள். இப்படி காம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதிக்கிற வீரகுமாரை எந்த சிரமமும்  இல்லாமல் முழுசாய் பார்க்க முடியுமா என்ற பயத்தினாலேயே வீட்டிற்கு வந்துவிட்டாள்.
“என்னடா எத்தனை நாளா இந்தப் பழக்கம்”
“என்னமா.......... என்ன கண்டுபிடிச்சிட்டியா.........எந்த பிரண்டும் இல்லம்மா, கேர்ல்ஸ் கூட”
“அதெல்லா இல்லடா..... காம்பவுண்ட் சுவற்றை எட்டிக் குதிச்சு தாண்டிப் போறது”
“ரொம்ப நாளா நடக்குதம்மா”
“எப்படிடா”
“பழகிருச்சும்மா.....பயப்படாத”
“ஐய்யோ....பாத்தப்போ திக்குன்னு இருந்துச்சு. விசுக்குன்னு தாண்டிப் போயிட்டே இருந்தே”
“பழகிட்டம்மா”
“இதுக்காகவே உனக்கு ஒரு வண்டி வாங்கிக் குடுத்துரணும்”
“நீங்க காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டிப் போனதை நானும் இரண்டு மூணுதரம் பார்த்த ஞாபகம். என்னவோ பொண்ணுகளக் கவர் பண்றதுக்குக் குதிக்கிறீங்கன்னு நெனச்சேன். கொரங்கு தாவிப் போனது மாதிரி இருந்திச்சு”
“அப்பவே கொரங்குன்னு முடிவு பண்ணிட்டியா”
“இப்பவுந்தா......நாலு வீதித் தள்ளித்தானே, அப்புறம் என்னைப் பொண்ண பாக்க வந்தப்போ காம்பவுண்ட் சுவரைத் தாண்டி குரங்கென்ன நாலு வீதி தள்ளி வந்திருக்கன்னு நெனச்சேன். சிரிப்பா இருந்துச்சு அப்படி வெரசலா காம்பவுண்ட் சுவரைத் தாண்டிப் போகாட்டி என்ன.. போயி ரயில்வே ஷ்டேசன் கூட்டத்தில் கலந்துர்ணுமா”
“உன்னைக் கூட மொதல் மொதலா விநோதமான எடத்திலதா பாத்தேன். பெரியாஸ்பத்திரியில”
“ஆமாமா”
“பெரியாஸ்பத்திரியில மார்ச்சுவரி ரூமுக்கு முன்னால உட்கார்ந்திருந்தீங்க, என்னமோ ரொம்பவும் பழகினமாதிரி என்ன இங்க உட்கார்ந்துன்னு சட்டுன்னு கேட்டுட்டேன்”
“ஆமா நானும் சட்டுனு திரும்பிப் பாத்தா, பிணவறைன்னு போர்டு தொங்குது. பயமாப் போச்சு. பெரியாஸ்பத்திரியில கூட்டம். ஒரே க்யூ மயம். எங்காச்சும் நெழல்லே உக்காரணும்னு ஒதுங்கினேன். நீங்க சொன்னப்புறம்தான் தெரிஞ்சுது. அது மார்ச்சுவரி கட்டிடம்னு”
“என்ன உங்களுக்கு மார்ச்சுவரி கட்டடம்னா பயமா”
“ரொம்ப பயம். அந்தக் கூட்டத்தைக் கண்டாவே ஓடி ஒளிஞ்சுக்குவேன். திருவிழாக் கூட்டத்தில் ஒரு தரம், சந்தைக் கூட்டத்தில் ஒரு தரம்ன்னு தொலைஞ்சு போயிட்டேன். ஒரு தரம் திருப்பூர் பெருமாள் கோவில் தேர்த் திருவிழாவுல எங்கப்பாவை விட்டுட்டு யாரோ ஆம்பளை ஒருத்தர் கையைப் புடுச்சுட்டு நடந்துட்டிருக்கேன். தெரிஞ்சதும் பகீர்ன்னு பயம் வந்தது. வீர்ன்னு அலறிட்டேன். ரயில்வே ஸ்டேசன்ல காலையில பனியன் கம்பெனிக்குப் போற கூட்டத்தைப் பாத்த பயமா இருக்கும். நீங்க எப்படித்தா அந்தக் கூட்டத்தில் போறீங்களோ”
“உங்கக் கல்யாணத்துக்குக் கூட்டம் வருமே.... அதப் பாத்துட்டு ஒளிஞ்சிருவீங்களோ, மாப்பிள்ளைக் கோலத்தில் என்ன உக்கார வெச்சிட்டுத் தவிக்க வுட்டுறாதீங்க.. காம்பவுண்ட் சுவத்தைத் தாண்டறதில் ஒரு திரில். திருப்பூருக்குப் போற டிரென் கூட்டத்தில் நசுங்கறது ஒரு திரில், அப்புறம் திருப்பூர் போயி குப்பையில, ஜனங்க நெரிசல்ல நடமாடறதும் திரில்தா....”
இலவச அரசாங்க வண்ணத் தொலைக்காட்சி இருட்டாய் சும்மா பார்துக்கொண்டிருந்தது. தொலைக்காட்சி கண்ணாடியில் மல்லிகா உருவம் வந்து வந்து போனது. குளித்து முடித்து தலையை லகுவாக்கிக் கட்டியிருந்தாள். தலைமயிரிலிருந்து நீர் சொட்டி பின் ஜாக்கெட்டை நனைத்திருந்தது.
“என்ன உடுமலைக்காரியை வெச்சுட்டு அரட்டை........”
“ஒண்ணுமில்ல.... திலகவதிகிட்டே சட்டுன்னு  மனசுல வந்ததைச் சொல்லிட்டு இருந்தேன்”
“திலகவதிக்கென்ன திருமூர்த்திமலை தண்ணியும், உடுமலை குளுகுளுமாக நெலச்சு நிக்கறவளாச்சே, கௌம்பு. திலகதி.... ஞாயிற்றுக்கிழமை வேலை எவ்வளவோ  கெடக்குது. இவருக்கென்ன அசடு வழிய எதாச்சும் சொல்லிட்டிருப்பாரு....”  திலகவதி முன்புறம் போட்டிருந்த சடையை லாவகமாக பின்புறம் தள்ளி விட்டபடி பவித்ராவின் கன்னத்தைக் கிள்ளி விட்டுக் கிளம்பினாள். பவித்ரா வலி தாங்காது போல் வலியால் உஸ்ஸென்றாள். “கொழந்தையைக் கிள்ளறது உனக்குக் கெட்ட பழக்கம். எத்தனை தரம் சொல்றது....” திலகவதி முகத்தைக் கோணலாக்கிக் கொண்டு பவித்ராவிற்குக் கையசைத்துக் கிளம்பினாள்.
“திலகவதிகிட்ட என்ன சொல்லிக்கிட்டிருந்தீங்க......”
“உங்கிட்ட சொல்ல வேண்டாமுன்னுதா”
“சின்னதா கவிதை மாதிரி ஒரு ஸ்பார்க் மனசில வந்தது. அதுதா.“
 “என்ன”
“மூத்திரப் புரையைப் பெண்கள் கடக்கும் போது அதன் நாற்றம் உணர்வதில்லை நான். இதில் மூத்திரப் புரைன்னா என்னன்னு திலகவதி கேட்டிருந்தா,.....”
“பெரிய கவிதைதா....... எங்கிருந்து புடுச்சீங்க”
“டைரியைப் புரட்டினான். நான் எழுதுனது இருந்துச்சு”
“அவளுக்கு புரிஞ்சுதாமா”
“அதுக்குள்ளதா நீ வந்துட்டியே, செரி உனக்கொண்ணு”
“கதையல்லா வேண்டா. சின்னதா துணுக்கு மாதிரி ஏதாச்சும் சொல்லுங்க. இட்லிக்கு மாவு கலக்கிட்டு இருக்கேன். கதை எல்லாம் வேண்டாம். இப்பதா கதையெல்லாம் அரை நிமிசக் கதை, கால்பக்கக் கதைன்னு ஆயிப்போச்சு. துணுக்கா சொல்லுங்க. நேத்திக்கு தொட்டிச் செடி ஒன்னு காமிச்சான். அது வளர்வதற்கு நிழல் தேவையாமா? இருட்டிலே ராத்திரியிலே ஒளி வீசும்னு சொன்னான். அதுக்கு பேர் கேட்டேன். நீங்களே ஒன்னு வெச்சுக்கோங்கன்னான். நான் மல்லி.....”
“மல்லிகா” என்றால் மழலைக் குரலில் பவித்ரா. “போதும் போதும் ஐஸ் வெச்சது போதும். தலைக்குக் குளிச்சதே ஜிவ்வுன்னு இருக்கு. இதுல நீங்க வேற ஐஸ் வெச்சுட்டு, உங்களுக்குக் காலையிலே இட்லிக்கு தக்காளி குறுமாவும் மத்தியானம் சாப்பாட்டிற்கு நெத்திலி மீன் கொழம்பும் வெச்சுத் தரேன். ஐஸ் வெக்கத்தேவையில்ல. நெத்திலி மீனுக்கு பையை எடுத்துட்டுக் கிளம்புங்க.”
“மீன் மார்க்கெட்டுக்குப் போகணும்னா அலுப்பா இருக்கு. ரயில்வே ஸ்டேசனை கடந்துதான் போகணும். ரயில்வே காம்பவுண்டு சுவத்தைத் தாண்டு போறது கிண்டலா சவாலா எப்படி வேணுமின்னாலும் வெச்சுக்கங்க. கல்யாணத்திற்கு முந்தி பனியன் கம்பெனிக்குப் போக டெய்லி காம்பவுண்டு சுவத்தைத் தாண்டித்தானே போயிட்டிருந்தீங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நீதானே காம்பவுண்ட்டை தாண்டறதெல்லாம் வேண்டா. எதுக்கு ரிஸ்க்குன்னு தடா போட்டே. மீறவே முடியல. எனக்கு எதுக்குச் சிரமம். தாண்டரதுல பேலன்சு தப்பி விழுந்து கைகால் முறிஞ்சிறுமுன்னு பயம். அடி மனசுல வந்துருச்சு. பிரசவத்துக்கு நீ போயிருந்தப்போ, காம்பவுண்டு சுவத்தை தாண்டிடனும்னு நெனப்பேன். தாண்டரதில உள்ளுர பயம்தான்.”
“இன்னிக்கு முயற்சி பண்றது”
 “கொழந்தையை வச்சிட்டு சீண்டிப் பாக்கறயா”
“தாண்டப்பா” என்றாள் பவித்ரா.
“வேண்டாம்மா கைகால் முறிஞ்சு நான் கெடந்தா நீ அழுவியே. அதப்பாத்து எனக்கும் அழுகை வந்திரும்”
மீன் வாங்கப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பியவன், வாசலில் வந்து நின்று புகைவண்டிப் பாதை காம்பவுண்டு சுவரைப் பார்த்தான். அது நீளமாகி  ரொம்ப உயரத்திற்கு வளர்ந்து விட்டது போலிருந்தது.

                                                            -சுப்ர பாரதி மணியன்.
                                                            8/2635, pandian nagar,
                                                            tituppur. 641602
                                                            94861 01003