சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
வெள்ளி, 17 மார்ச், 2023
சிங்கப்பூர் இலக்கியம் : சுப்ரபாரதி மணியன்
49வது சென்னை புத்தகக் கண்காட்சியில் சிங்கப்பூர் இலக்கியம் என்ற ஒரு குறிப்பிடத்தக்க புத்தக அரங்கமும் இடம் பெற்று இருந்தது அந்த அரங்கத்தில் ஹேமா அவர்களின் வாழைமர நோட்டு என்ற நூலை முன்வைத்து சிங்கப்பூர் இலக்கியம் பற்றிய பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
சமீபத்தில் ” காரிகாவனம் “ என்ற சிங்கப்பூர் வாழ் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தொகுத்து நான் ஒரு நூலை காவ்யா பதிப்பகம் மூலம் கொண்டு வந்திருக்கிறேன் .அதைத்தவிர ” ஓ.. சிங்கப்பூர் ”என்ற தலைப்பில் அங்கு வசிக்கும் நவாஸ், குமார் உட்பட பல்வேறு தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றிய கட்டுரைகளை எழுதியத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன்.
சிங்கப்பூர் இலக்கியத்தின் முக்கிய கூறுகளாக அந்த எழுத்தாளர்களின் வேராக இருக்கிற தமிழ்நாட்டு மண்ணின் உறவுகள் பற்றியும் பாசப்பிணைப்பு ஏக்கம் பற்றியும் பல்வேறு கதைகளை நாம் பார்க்கலாம் இன்னொரு பக்கம் சிங்கப்பூரில் இடம்பெயர்ந்த சூழலின் அனுபவங்களை பலர் விரிவாக எழுதியிருக்கிறார்கள். ஒருவகையில் புலம்பெயர் இலக்கியம் என்ற வகையில் கூட அவர்களின் ஆர்வங்களை எடுத்துக் கொள்ளலாம்.
திருப்பூரில் சக்தி விருது என்று ஒரு விருது ஆண்டுதோறும் பெண் எழுத்தாளர்களுக்கு தரப்படுகிறது. அந்த விருதை சிங்கப்பூரைச் சார்ந்த மணிமாலா மதியழகன் முதல் ஹேமா வரை பலர் பெற்றிருக்கிறார்கள. அந்த திருப்பூர் சக்தி விருது பெற்ற நூல் தான் ” வாழை மர நோட்டுகள் ” என்ற ஹேமா அவர்களின் கட்டுரை நூலாகும்
படைப்பிலக்கியத்தில் நுழைகிற பல பேர் கவிதையிலிருந்து உரைநடைக்கு செல்வார்கள் ஆனால் இவர் சிறுகதையிலிருந்து கட்டுரை போன்ற வடிவங்களுக்கும் வந்திருக்கிறார் என்பது முக்கியமாக இருக்கிறது.. சிறுகதை போன்ற முயற்சி விளக்கத்தில் இருந்து பதிவு எழுத்து வகைகள் என்பதற்கு இந்த நூல் மூலம் ஹேமா அவர்கள் வந்திருக்கிறார்கள். 2018 திரு சீரங்கன் டைம்ஸ் இதழில் அவர் ” இரைச்சல் “ என்ற ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது ஜெல்லி என்ற ஒரு பெண்ணும் அவளைச் சுற்றிய சூழலும் பற்றி அமைந்த கதை. மாயக்குரலில் அவளுக்கு தென்படும் பல விஷயங்களை அந்த கதையில் அலசி இருக்கிறார். அந்த மாயக்குரல் சிங்கப்பூரில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு பற்றிய பல்வேறு சம்பவங்களை தேடுவதற்கு ஹேமா அவர்களுக்கு வழி வகுத்திருக்கிறது ஆதாரத்தையும், வரலாற்று பதிவுகளையும் மையமாக கொண்ட படைப்புகளை தேட வைத்து இருக்கிறது. வரலாற்றை உணர்வாய் செய்வதும் வரலாற்றை மீட்டு வாசகர்களுக்கு நினைவு படுத்துவதும் அவருக்கு தேவை என்று பட்டிருக்கிறது வரலாற்றை திரும்பத் திரும்ப இன்றைய இளைஞர்கள் மத்தியில் பேசப்பட வேண்டி இருக்கிறது. படைப்புகளாகத் தர வேண்டி இருக்கிறது. மறந்து விடுதல் மக்கள் இயல்பு ஞாபகப்படுத்துவது எழுத்தாளன் கடமை என்று சொல்வார்கள். அந்த வகையில் தான் சிங்கப்பூரின் சரித்திரத்தில் ஒரு பகுதியை ஹேமா அவர்கள் இந்த புத்தகத்தில் ஞாபகப்படுத்துகிறார். 1931 ஜப்பான் சீனாவிற்குள் ஊடருகிறது. சிங்கப்பூரில் இருக்கிற சீனர்கள் தங்கள் நாட்டுக்கு ஆதரவாக நிதி திரட்டியும் அனுப்புகிறார்கள்.. இந்த நிலையில் 1942 முதல் சுமார் நான்கு ஆண்டுகள் ஜப்பானியரின் படையெடுப்பும் ஆக்கிரமிப்பு சிங்கப்பூர் மக்களை எப்படி சிரமப்படுத்தி இருக்கிறது என்பதை இந்த புத்தகம் சொல்கிறது .தாய்லாந்து மற்றும் வடக்கு மலேயா கரைகளில் வந்திறங்கிய ஜப்பான் வீரர்கள் மிதிவண்டியின் மூலமாக சிங்கப்பூர் நகரத்திற்கு செல்கிறார்கள்.. வெடி குண்டு தாக்குதல் நடைபெறுகிறது.. தீயில் பல கட்டடங்கள், வீடுகள் எரிகின்றன. மருத்துவமனைகளும் இந்த குண்டு தாக்குதலுக்கு இலக்காகின்றன.. மருத்துவமனையில் இருக்கிற நோயாளிகள் தண்ணீர் கூட கிடைக்காமல் சிரமப்படுகிறார்கள் அப்படி சிரமப்படுகிற ஒரு மருத்துவமனை சார்ந்த நோயாளிகளை வெளியில் கூட்டி செல்கிறார்கள். அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும், பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் தனியே கூட்டிச் செல்லப்பட்டு கொல்லப்படுகிறார்கள்..நாஜிக்கள் விஷவாயுக்களை செலுத்தி கொள்வதைப் போல கொல்லப்படுகிறார்கள். முக்கிய நீர் தேக்கங்கள் மாசுபடுகின்றன. அங்கே பிணங்கள் கிடக்கின்றன சாலைகளில் புதைக்கப்படாத பிணங்கள் கிடக்கின்றன. கேத்தா என்ற 16 மாடி கட்டிடம் அப்போது பிரசித்தி பெற்றது. ஜப்பான் கொடி அங்கே ஏற்றப்படுகிறது. அந்த சமயத்தில் சீனப் புத்தாண்டு வருகிறது. வழக்கமான புத்தாண்டு என்றால் கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால் போர் ஆக்கிரமிப்பு சூழலில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்க இயலவில்லை. வீட்டில் இருக்கும் துண்டு துணியை வெட்டி அவற்றில் சிவப்பு வட்டம் போட்டு தங்களின் நாட்டு கொடி எது என்று இருக்கிற அபிமானத்தை வெளிப்படுத்துகிறார்கள். ” எங்களுக்கு உங்கள் மீது பகையில்லை கீழ்படிய தயாராக உள்ளோம் “ என்று குறிப்பிடுகிறார்கள். போர் கைதிகளாக பிடிக்கப்படுபவர்கள். சிரமப்படுத்தப்படுகிறார்கள் சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். சரியான உணவு இல்லை சயாம் பர்மா ரயில் பாதை கட்டுமானத்திற்காக அதில் பல இந்தியர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். சிங்கப்பூரில் உணவு பொருட்களுக்கு தடை இருக்கிறது. உள்நாட்டு உணவு போதிய அளவில்லை. இருக்கிற உணவுப் பொருட்களையும் ஜப்பானியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். உணவு பஞ்சம் வந்துவிடுகிறது. கள்ள சந்தையில் மக்கள் உணவு பொருட்களை வாங்க வேண்டி இருக்கிறது. ஒரு மூட்டை விலை 200 வெள்ளிக்கு கூட போய் விடுகிறது. இந்த நிலையில் பணம் பற்றாக்குறை ஏற்படுகிற போது ஜப்பானியர்கள் பணம் அச்சிட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் வாழை மர நோட்டுகளை பணமாக அச்சிடுகிறார்கள். ஆரம்பத்தில் அதில் வரிசை எண்கள் இடுகிறார்கள். பின்னால் அந்த வரிசை எண்களும் இல்லாமல் வாழை மர நோட்டுகள் வருகின்றன. கள்ளச் சந்தையில் டாலர் மதிப்பு உயர்கிறது. ஜப்பானியருடைய வாழை மர நோட்டுக்கு மதிப்புக்கு குறைகிறது. சிறு பொருளை வாங்கக்கூட பை நிறைய கை நிறைய பண நோட்டுகளை எடுத்துச் செல்கிறார்கள் பணத்தை விட சம்பளமாக கொடுத்த உணவு பொருட்களுக்கு மதிப்பு இருக்கிறது. உணவு பொருட்கள் திருடப்படுகின்றன பல மணி நேரம் வரிசையில் நின்று உணவு பொருட்களை பெறுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் 20 கட்டி அரிசி சுண்ணாம்பு கலந்து வழங்கப்படு.ம் ஆனால் அதுவே பின்னால் குறைக்கப்படுகிறது. உணவு பிரச்சினை வருவதால் வீடுகளில் செடிகள், தாவரங்கள் காய்கறிகளை வளர்க்கச் சொல்லி அரசாங்கமே சொல்கிறது. குறைந்த விலையில் விதைகளை தருகிறார்கள். பள்ளிகளில், கைதிகளின் முகாம்களில் இதுபோல செடிகள் நடப்படுகின்றன, மரவள்ளி கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவை சீக்கிரம் வளரும் என்பதால் அவற்றை வளர்க்க முன்னுரிமை தரப்படுகிறது. சோளம் நிலக்கடலை கலந்த ரொட்டியை சாப்பிட வேண்டியிருக்கிறது. வளர்கின்ற செடியில் இருக்கிற கிழங்கை பிடுங்கி செடியை மட்டுமே நட்டு விட்டு போகிற மாதிரி பல விஷயங்களும் நடக்கின்றன. ரொட்டியின் மூலப் பொருட்கள் கூட கிடைப்பதில்லை. சோளம் கேழ்வரகு இவற்றை வைத்து ரொட்டி தயாரித்து உண்கிறார்கள் அரசாங்கம் தருகிற நூடுல்ஸ் சிவப்பு பனை எண்ணெய் வாசனை உடன் இருக்கிறது. அதை தண்ணீரில் அலசி வெயில் காய வைத்து தான் சாப்பிட வேண்டி இருக்கிறது. புதிய குடியேற்றங்கள் ஏற்படுகின்றன. காடுகளை அழித்து தற்காலிக சாலைகள், வீடுகள் ஏற்படுத்தப்படுகின்றன எண்ணெய், சோப்பு பால் போன்ற பொருட்களும் உணவு பொருட்களும் தாமாகவே வளர்த்து,செய்து கொள்ளும் வேலையை மக்கள் கற்றுக் கொள்கிறார்கள், மீன், வாத்து, கோழி போன்றவை வளர்க்கக் கற்றுக் கொள்கிறார்கள். வீட்டு தோட்டங்கள் மக்களுக்கு பயன்படுகின்றன. ( இந்த சமயத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தால் தடைகள் ஏற்பட்ட போது கியூபாவில் மாடி விட்டு தோட்டங்களும் வீட்டு தோட்டங்களும் அமைக்கப்பட்டது ஞாபகம் வருகிறது.) ஜப்பானியருக்கு எதிராக சிங்கப்பூர் கொரில்லாப் படை பல எதிர்ப்புகளை தெரிவிக்கிறது. உணவுகளை எடுத்துச் செல்கிறது. இருவருக்கும் மத்தியில் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உணவும் பரிமாறி கொள்ளப்படுகிறது. அங்குள்ள பெண்கள் விலை மாதர்களாக ஆக்கப்பட்டு ஜப்பானிய வீரர்களால் பயன்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு கல்லறை தோட்டம் என்பது கூட இல்லை. அப்போதுதான் அந்த விலை மாதர்களில் சில நிர்வாகிகள் ஒரு கல்லறை தோட்டத்தை அமைக்கிறார்கள் .அதில் இறந்து போன ஜப்பான் வீரர்களின் அஸ்தியும் வைக்கப்படுகிறது. 1951 இல் ஜப்பான் சிங்கப்பூர் அமைதி ஒப்பந்தம் ஏற்படுகிறது. ஜப்பானியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் அமைகின்றன. சூதாட்ட கூடம் அமைக்கப்படுவதும் பல பூங்காக்கள் பாலியல் விடுதிகளாக மாற்றப்படுவதும் நடக்கிறது. பல மனநல மையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில் அங்கு இந்திய தேசிய ராணுவத்தின் பங்களிப்பும் என்ன என்பதை பற்றி ஹேமா அவர்கள் இந்த நூலில் சொல்லியிருக்கிறார். 1945 செப்டம்பர் 2ம் தேதி நேச நாடுகள் மத்தியில் ஜப்பான் சரணடைகிறது. ஆனால் சிங்கப்பூரை மீட்டெடுக்க முயற்சி தொடர்ந்து பல ஆண்டுகள் நடக்கிறது .இந்த காலகட்ட விஷயங்களை சுமார் 20 கட்டுரைகளாக ஹேமா அவர்கள் சிராங்கூன் டைம்ஸ் பத்திரிகை எழுதுகிறார். அதுதான் அவருடைய முதல் புத்தகமாகவும் அமைகிறது. சிங்கப்பூர் இலக்கிய பரிசுகள் பலவற்றை பெற்றிருக்கிறார். சிங்கப்பூர் தேசிய போட்டிகளில் கவிதை சார்ந்து இயங்கி பாராட்டை பெறுகிறார். கணையாழி, கனலி, தமிழ் முரசு, சிராங்கூன் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் அவருடைய படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு பற்றி எழுதுகிற ஹேமா அவர்கள் ஜப்பான் சார்ந்த பல்வேறு படைப்புகளையும் பின்னர் முன் வைத்திருக்கிறார். ஜப்பான் ஆலயங்கள், செரிமலர்கள், மரங்கள் உட்பட ஜப்பானியரின் வாழ்வியலை பற்றியும் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அந்நிய மனிதர்கள் என்ற தலைப்பில் அவர் எழுதி இருக்கிற சிங்கப்பூர் மனிதர்களின் சித்திரங்கள் முக்கியமானவை ” உறுதுயர்” என்ற ஒரு சிறுகதையில் அவரின் நுணுக்கமான விவரிப்புகள் ஆச்சரியப்படுத்துகின்றன.. டச்சுக்காரர்களில் வருகையால் நடந்த வரலாற்றை மாற்றங்களையும் ஒரு சில கட்டுரைகளில் எழுதி இருக்கிறார். இவரின் சிங்கப்பூர் பொன்விழா சிறுகதை தொகுப்பு நூலில் இடம் பெற்ற ”ஒளி தேடும் விட்டில் பூச்சி” என்ற கதையும் முக்கியமானது. இந்த கதைகளில் அவர் இளைய தலைமுறை சார்ந்தவர்களை, குழந்தைகளுடைய இயல்பை நுணுக்கமாக விவரத்திருக்கிறார் இந்த நுணுக்கமான விவரிப்புக்கள் ஹேமா அவர்களின் இந்த புத்தகத்திலும் இடம் பெற்று இருக்கிறது. ஒரு முக்கியமான காலகட்டத்தை பிரதிபலிக்கிற விதமாக அமைந்த ஹேமா அவர்களின் இந்த கட்டுரை தொகுப்பு சிங்கப்பூர் சரித்திரத்தின் ஒரு பகுதியை துல்லியமாக சித்தரிக்கிறது. அவரின் புனைவு எழுத்துக்களின் மத்தியில் இதுவும் முக்கியமாகிறது
சுப்ரபாரதி மணியன்
( சென்னை 49 வது புத்தக கண்காட்சியில் பேசியது )