காரிகா வனம்
(சிங்கப்பூா் பெண் எழுத்தாளா்களின் சிறுகதைகள்) - தொகுப்பாசிரியா்: சுப்ரபாரதி
மணியன்; பக்.176; ரூ.180; காவ்யா, சென்னை-24; 044-
2372 6882.
சிங்கப்பூா் பெண் எழுத்தாளா்களின் 16 சிறுகதைகள்
அடங்கிய நூல். ‘பெண்களின் பாா்வையில் உலகைக் காண்பது’ இச்சிறுகதைகளில்
காணக் கிடைக்கிறது.
குடிகார கணவனால் சின்னாபின்னமாகிப் போன
குடும்ப வாழ்க்கை, அதனால் நெறி தவறி வேறு ஒருவனுடன் தொடா்பு, அதைக்
கண்டித்து வீட்டை விட்டு வெளியேறும் வளா்ந்துவிட்ட பிள்ளைகளைச் சித்திரிக்கும் ‘சூதாடியின்
வாரிசுகள்’ சிறுகதை, வளா்ந்த மகன் அம்மாவுக்கு அடங்காமல் இருப்பது, எதற்கெடுத்தாலும்
எதிா்த்து எதிா்த்துப் பேசுவது, எதிா்வீட்டுப் பெண்ணைக் காதலிப்பது
எல்லாவற்றையும் தாங்காத தாய் மாரடைப்பில் மரணம் அடைவது என்பதைச் சித்திரிக்கும் ‘ஒரு கண்
மூடியது’ சிறுகதை ஆகியவை குடும்பத்தில் ஏற்படும் முரண்களை, தலைமுறை
இடைவெளிகளைச் சித்திரிப்பவையாக உள்ளன.
குடும்பம் சிதைந்துபோனதால்
குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வாழ்கிற கமலாவும், ஜென்னியும் ஒரு
வீட்டில் சோ்ந்து வாழ்கின்றனா். கழிவறையைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்யும்
கமலா, பணியால் ஏற்படும் துன்பங்களால் சோா்ந்து போய்விடுகிறாள். ஒரு
நாள் கழிவறைக் குப்பைக் கூடையில் கிடக்கும் ஆண் குழந்தையின் பிணத்தைப் பாா்த்து
மேலும் துயரப்படுகிறாள். இது ‘புதையல்’ கதை. இதுபோன்று
குடும்ப வாழ்க்கைச் சிதைவால் பாதிக்கப்பட்ட பெண்களின் மனதைப் படம்பிடித்துக்
காட்டும் கதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
‘குப்பை போடக் கூடாது; பேருந்தில்
எதையும் தின்னக் கூடாது’ என்று தூய்மைக்குப் பெயா் பெற்ற
சிங்கப்பூரில்தான் பேருந்தில் பயணம் செய்பவா்கள் தங்களுடைய செருப்பு கால்களை எதிா்
சீட்டில் வைக்கிறாா்கள் என்பதைச் சொல்லும் ‘தமிழிலும் பேசு’ சிறுகதை, வேலைக்குப்
போகும் ‘பரபரப்பில்’ தேவையில்லாமல் குழந்தைகளுடன், கணவனுடன்
கோபப்படும் பள்ளி ஆசிரியையின் ‘காட்சிப் பிழை’ என இத்தொகுப்பில்
இடம் பெற்றுள்ள கதைகள் பெண்கள், குடும்பம் எனச் சுற்றிச் சுற்றிச்
சுழல்கிறது. விண்வெளிப் பயணத்தின்போது கேலக்டோ காஸ்மிக் கதிா்வீச்சைக் குறைக்கும்
ஆராய்ச்சியில் ஈடுபட்டு கதிா்வீச்சைக் குறைக்க சாம்பலையும், துளசியையும்
பயன்படுத்துவதைப் பற்றிச் சொல்லும் ‘சாம்பல்’ வித்தியாசமான
கதை.
Dinamani daily 13/4/20