வயிற்றின்
குரல்
சுப்ரபாரதிமணியன்.,
திருப்பூரில் வந்திறங்கும் அதிநவீன பின்னலாடை
இயந்திரங்களை அவ்வப்போது நடக்கும் உலக பின்னலாடைப் பொருட்கள் கண்காட்சியில்
பார்க்கிற போது வருத்தமே மேலிடும். அவ்வகை இயந்திரங்கள் மனித உழைப்பை நிராகரித்து
மனித உழைப்பை குறைத்து மதிப்பிட்டு தொழிற்சாலைகளுக்கு வெளியில் மனிதர்களைத் தள்ளுபவை. சாயப்பட்டறையின் ஜீரோ டிஸ்சார்ஜ் சம்பந்தமான
அதி நவீன இயந்திரங்களும், தொழில் நுட்பத்தைக் காட்டிப் பணம் பறிப்போகும் குறைந்த பாடில்லை.
ஆனால் சாயப்பட்டறை
கழிவு ஆற்றில் தொடர்ந்து ஓடுவதும், ஆழ் குழாய்கள் மூலம் நிலத்தடியில் அவை
பீச்சப்படுவதும் குறைந்தபாடில்லை.
பொருளாதரத்துவ தத்துவங்கள் பணம் பற்றிய
அக்கறையை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. பின்னலாடை தொழில் இன்று அதிகம்
புழக்கத்திலிருக்கும் பங்களாதேஷ், பாக்கிஸ்தான், கொரியா, சீன நாடுகளிலும் இது சம்பந்தமான நிலைமைகள்
மாறவில்லை. மொழியோ, பிரதேசமோ கணக்கில் வராது. பணக் கடவுளைத் தேடாது போகிறவர்களுக்கு எல்லா
பாதைகளும் அடைபட்டிருப்பது உபதேசமாய் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சக மனிதன் உண்மையிலிருந்து தூரமாகிக் கொண்டே
போய் பூமியில் பொருளைச் சேர்க்காதவர்கள் எந்த சாம்ராஜ்யத்தில் இடமில்லாமல் போகக்
கடவது என்ற சாபத்திற்கு உள்ளாகிறார்கள். சக மனிதனின் படைப்பாற்றலிலும், தேடலிலும் பணத்தைத் தேடுவது என்பது
பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்படுகிற வரை இவ்வகை தேடல் தொடர்ந்து
கொண்டேயிருக்கும். தொடர்ந்த உற்பத்திக்கான நியாயங்கள் வலுத்துக் கொண்டே போகும். அறம் என்பது உண்மை, மனிதம், உள்ளது நல்லது, நேர்மை ஆகியவற்றோடு தொடர்புடையது என்று
நம்புகிறவர்கள் மனச்சிக்கலுக்கு தொடர்ந்து ஆளாக வேண்டியிருக்கிறது. பின்னலாடை தரும் அந்நிய செலவாணியை மனதில்
கொண்டு மட்டும் மக்களின் வாழ்க்கை மூலாதாரங்களை நிலைக்கச் செய்ய முடியாது என்பதை
உணரும் சந்தர்ப்பங்களும் சில ஏற்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சியோ, பணப் பெருக்கமே பணத்தை விட மேலாக அதன்
மூலங்களாக கல்வி, நம் சமூக அமைப்பு முறை, நியாயம், அரசியல் சுதந்திரம், சுய தேசிய உணர்வு ஆகியவற்றிலும்
அடங்கியிருக்கிறது.
அழிக்கப்பட்ட ஆற்றையோ, நிலத்தடி நீர்ச்சூழலையோ மீண்டும் உண்டாக்க
எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பது மனதில் பெரும் கேள்விகளை எழுப்பும். அவற்றை மீட்டெடுக்க இயலாத சூழலில் வெவ்வேறு
வழிகளில் பணத்தைச் செலவு செய்து தீர்வுகளைத் தேடும் மனிதன் இனத்திற்கே துரோகம்
செய்வதை மெதுவாகவே உணர்ந்து கொள்வான். அதி நவீன தொழில் இயந்திரங்கள் மனித
உழைப்பையும் பயன்பாட்டையும் குறைத்து மனித இன நியாயங்களுக்கு வஞ்சகம் செய்து
மனிதனின் படைப்புத் திறனைக் குறைத்து சமூகச் சூழலை சோம்பலானதாக்குகிறது. அனைத்தும் பொது விஷயங்களாவதால் பின்னர்
விளையும் நன்மைகள் மனித குலத்திற்கு பல சமயங்களில் நேரிடையாகவும் அமைகிறது.
இயற்கை மூலதனங்களாய் அமையும் நீரும், எரிபொருட்களும் வருமானம் தரக்கூடியவையாக
மாற்றப்பட்டு விட்டன. ஆனால் அவற்றை மூலதனம் என்று மனதில் கொண்டால் அவை பற்றிய பாதுகாப்பும்
மனதில் இருக்கும். அவற்றை குரலாக சுரண்டுவது என்பதும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். அல்லாமல் இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல்
சீர்கேடு என்பது மிக முக்யத்துவம் பெருவதற்காக காரணங்கள் தொடர்ந்து
கொண்டேயிருக்கும். இயற்கையாகவே இல்லாதவற்றை உருவாக்குவதில் நமது விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப நிபுணர்களும் நிறைய கற்றுக்
கொண்டும்,
ஆராய்ந்தும் செயலில்
இறங்குகின்றனர். இவை தரும் அபாயமான விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது
கூட சிரமம்தான். உதாரணம் அணுமின் சக்தி.
வளம் என்பதை மனதில் கொண்டு மனிதன் தொடர்ந்து
செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது அறம் சார்ந்த பண்புகளின் வளர்ச்சி என்பதை வெறும்
தத்துவமாகப் பார்க்கிறவர்கள் சமூகவியலில் அதிகரித்து விட்டார்கள். மனிதனின் சூழலியலுடன் தொடர்பு கொண்ட
பொருளாதாரம் மனிதனைப் பற்றியும், சுற்றுச்சூழல் பற்றியும் இரு கண்களால் இயங்க
வேண்டியவை. இருக்கும் கண்களை அழுகிய பின் பிய்த்தெறிந்து விட்டு பணத்தைச் செலவழித்து
புதிய கண்களைப் பொருத்திக் கொள்வது தனி மனித சுதந்திரத்தை பொருளுக்கு
அடிமைப்படுத்துவதாகும்.
பெரும் விவசாய நிலங்கள் தொழிற்சாலைகளாக, ஆடம்பரமான மனைகளாக நிற்பது பலருக்கு ஆச்சர்யம்
தரும் விசயமாக இருக்கும். ஆனால் விவசாய நிலம் அழிந்து போனது என்பது இயற்கையை மனிதன் தன்னோடு
வைத்திருப்பது, மனித தன்மையோடு இருப்பது, விவசாயப் பொருட்களை வாழ்க்கையின் ஒன்றாக மாற்றி
மனிதனோடு இருக்கச் செய்கிற ஆயத்தங்களை இல்லாமல் செய்து விடுகிறது. வெற்று நிலங்கள், விவசாய நிலங்கள் சாயப்பட்டறைகளாக நிற்கலாம். அவை பணம் காச்சி மரங்களாக ஆச்சர்யப்படுத்தலாம். ஆனால் இயற்கையோடு இணைந்து வாழும் மனிதனின்
உயிர்ப்பை தேவை என்ற நிலைக்கு கொண்டு வருவது எல்லாவற்றையும் சமப்படுத்தி
விடமுடியாது.
சுற்றுச்சூழல் பிரச்னைகளால் வளர்ந்துள்ள
கேட்டைக் கட்டுப்படுத்த உயர் வளர்ச்சி தேவை என்பதை புதிய இயந்திரங்களின்
உற்பத்தியாளர்கள் சுட்டிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சுற்றுச்சூழல் பிரச்னைகளே
இப்போதடைந்திருக்கும் வளர்ச்சியால் வந்ததுதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தொழில் நுட்பமும், இயந்திரங்களும் வேலைப் பளுவைக் குறைக்கின்றது. உடல் உழைப்பு இல்லாத மனிதன் நரம்பு நிறைய
வேதனைகளைத்தான் அனுபவிக்க வேண்டியிருக்கிறது. வருங்கால அபாயம் என்ற வெடிகுண்டு
இச்செயல்களால் தொடர்ந்து தயாராகிக் கொண்டே இருக்கிறது.
இயற்கை சூறையாடப்பட்டு, உற்பத்தியும், பொருளாதாரமும் புள்ளி விபரங்களால் பெரிது
படுத்தப்பட்ட சூழல் உழைப்பு மனிதனை ஊனமாக்கி புதிய நவீன மனிதனை சோம்பலான
இயந்திரமாக, அரசின் இலவசத் திட்ட கொப்பரைகளை கையில் ஏந்திக் கொண்டு நிற்பவனாக இருக்கச்
செய்கிறது.
சமூகத்தின்
ஒரு பகுதியோ, நாடோ வளர்ச்சி பெறுவது என்பது மக்களின் வளர்ச்சியாக எடுத்துக் கொள்ள
முடியாததாகிறது. சிறுபான்மையை மனதில் கொண்டு வளர்ச்சியற்றதை ஒரு பெரும் சமூகமாக்குவதன்
மூலம் அவர்களை வளர்ச்சி பெற்றவர்களை மாற்றுவது பொய்யாகவே நிலை பெறும். அந்நிய செலவாணித் தொகையை குறிப்பிட்டு பெருமை
கொண்டே வயிற்றின் குரலை நிராகரிக்க முடியாது.
சுப்ரபாரதிமணியன்., 8/2635 பாண்டியன் நகர்., திருப்பூர் 641 602. 9486101003