சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 22 ஏப்ரல், 2016

உலகப்புத்தக தினம்  : இரு நிகழ்வுகள்

1. சூழலியலாளர்  சின்ன சாத்தான் உலகப்புத்தக தினத்தை ஒட்டி ்திருப்பூர் பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில்  சிறப்பு உரையாற்றினார். தலைமையாசிரியை கிருஷ்ணுகுமாரி   தலைமை தாங்கினார்.  எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், மருத்துவர்  முத்து்சாமி உட்பட பலர்  பங்கேற்றனர் சின்னசாத்தானின் சமீப நூூல்         மலை முகடு சந்தியா பதிப்பகம், சென்னை வெளியீடு ரூ100/

இது அவரின் எட்டாவது நூலாகும்.சுற்றுச்சூழல் விசயங்களில் அக்கறை கொண்டு மரம் நடுதல், பள்ளிக்குழந்தைகள் மத்தியில் உரை ஆற்றுதல் என்று ஓய்வு வாழ்க்கையை பயனுள்ளதாக்கி வருகிறார் சின்ன சாத்தான் என்கிற சுகுமாரன்..இமயவலம், வனவலம் போன்றவை அவரின் முக்கிய சுற்றுச்சூழல் சார்ந்த நூல்களாகும்.


உலக புத்தக தின விழா. 2

திருப்பூர் பாண்டியன் நகர் ஏகே நெட் கபேயில் திருப்பூர் இணைய தள அணி சார்பில் அதன் பொறுப்பாளர் அருண் கார்த்திக் தலைிமையில் புத்தகங்கள் அறிமுகம், குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வழங்குதல் நடைபெற்றது.
படத்தில் அருண் கார்த்திக், சுப்ரபாரதிமணியன், மனோகர்,
புகைப்படங்கள்: : முகநூல் :Kanavu subrabharathimanian tirupur




திங்கள், 18 ஏப்ரல், 2016

எனது கனவு  இலக்கிய இதழ் 31ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.  உங்களின் படைப்புகளை, உங்கள் நண்பர்களின் படைப்புகளை அனுப்பி வையுங்கள்.
subrabharathi@gmail.com  / 8-2635 pandian nagar, tiruppur  641 602 /9486101003
                                                                 கனவு இலக்கிய வட்டம்  

             3 புதிய  நூல்கள் வெளியீட்டு விழா

     3 புதிய நூல்கள் வெளியீட்டு விழா 17/4/2016 ஞாயிறு 5 மணி  சமரச சன்மார்க்க சங்கக் கட்டடம் , மங்கலம் சாலை , அறிவுத் திருக்கோயில் பின்புறம், கருவம்பாளையம் , திருப்பூரில் நடைபெற்றது.


*  சுப்ரபாரதிமணியனின் “ வெள்ளம் “ ( சிறுகதைத் தொகுதி )
*  புலவர் வீ. சொக்கலிங்கம் அவர்களின்
அருவிச்சரம் ( கவிதைத் தொகுதி ).,  தவம் செய்த தவம் ( கட்டுரைத் தொகுதி ) ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

நூல்களை தமிழறிஞர் நீறணிபவளக்குன்றன் ( செயலாளர் , சன்மார்க்க சங்கம், திருப்பூர் ) வெளியிட்டுப் பேசினார். நூல் பிரதிகளை  ஜேசிஸ் தேவராஜ், கதிர்வேலு, பாண்டிச்செல்வம், வழக்கறிஞர் ரவி, அருள் செல்வம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழறிஞர் நீறணிபவளக்குன்றன் பேசியது :  “ தமிழுணர்வுடன் கூடிய  உலகப் பார்வை நமக்குத் தேவை. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பொதுமரபில் வளர்ந்த தமிழ்ச்சமூகத்தின் இன்றைய எழுத்தாளர் தலைமுறை உலக இலக்கியத்தின் முக்கிய பக்கங்களாகத் திகழ்கின்றது. படைப்பு உணர்ச்சி ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தேவை. படைப்பிலக்கிய உணர்ச்சி நிலையானது. பொருள் உணர்ச்சி சார்ந்த எண்ணங்கள் நிலையற்றவை. எனவேதான் படைப்பிலக்கியம் நீடித்து நிற்கிறது. அதே போல் தீங்கு செய்யாத சமய முறைகளே நிலைக்கும். சமூக அக்கறையுடன் கூடிய படைப்பிலக்கிய முயற்சிகளே காலத்தின் குரல்களாக நிற்பதால் அதுபோன்றப் படைப்புகளே நமக்குத் தேவை என்றார்.  

                       
நூல்கள் குறித்து   கேபிகே பாலசுப்ரமணியன் ( திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம் ) மதிப்புரை வழங்கினார். சித்ரா மு. ராமசாமி ( தலைவர் , சன்மார்க்க சங்கம், திருப்பூர் ) தலைமை தாங்கினார். ர.தங்கவேல் ( தலைவர், திருக்குறள் அறக்கட்டளை ) ,          பா. ஜீவானந்தம்  ( பொருளாளர் , சன்மார்க்க சங்கம், திருப்பூர் ), டிட்டோனி முத்துசாமி, கவிஞர்கள் ஜோதி, துருவன் பாலா, மனோகர், நாவலாசிரியர்  சிவராஜ், அன்பரசன், தலைமையாசிரியர் பொ.கருப்பசாமி  ஆகியோரும் பங்கு பெற்றனர். 

நூல்களின் ஆசிரியர்கள் சுப்ரபாரதிமணியன், சொக்கலிங்கம் ஆகியோர் எற்புரை வழங்கினர். விஜயா நன்றி கூறினார். கனவு இலக்கிய வட்டம்   --   சமரச சன்மார்க்க சங்கம், திருப்பூர் இணைந்து இவ்விழாவை நடத்தின.


புகைப்படங்கள்: முகநூல் :Kanavu subrabharathimanian tirupur
செய்தி : கே ஜோதி



                           மர மனிதன்:  ஓகே குணநாதனின் சிறுவர் நூல்

குறைந்த சொற்கள், நிறைந்த காட்சி ஓவியங்கள். விரிந்த களன், சிறந்த சுற்றுச்சூழல் செய்திகள்





     ஓகே குணநாதன் அவர்கள் இவ்வாண்டில் மூன்று பரிசுகளைத் தமிழகத்தில் பெற்று கவனத்திற்குரியவரானார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது,   ( சிவகாசி விழா ) ,  திருப்பூர் தமிழ்ச்சங்க விருது , திருப்பூர் இலக்கியப்பரிசு ( சுகந்தி சுப்ரமணியன் நினைவுப்பரிசு ) ஆகியவை அவை. தமிழகச் சிறுவர் இலக்கியப்படைப்பாளி மறைந்த கோவை பூவண்ணனை ஆதர்சமாகக் கொண்டவர்.அவரின் படைப்புகளின் சமீப மையம் சுற்றுச்சூழல் குறித்த அக்கறை என்பது குறிப்பிடதக்கதாகும்.
படங்கள் இல்லாத சிறுவர் நூல்கள் தமிழகத்தில் நிறைய வருகின்றன. படங்களும் அவை தரும் காட்சிப்படிமங்களும் சிறுவர்களுக்கான குதூகலத்தன்மை கொண்டதாகும். இதன் மறுபுறமாய்  ஓகே குணநாதன் நூல்களைச் சொல்லலாம்.அவற்றின் கதைப்பிரதிகளில் வரிகள் மிகக் குறைவாக இருக்கும். ஓவியங்களும், சித்திரங்களும் நிறைந்து காணப்படுவது அவரின் நூல்களின் சிறப்பியல்பு என்று சொல்லலாம்.
சமீபத்தில் அவர் கோவையில் குழந்தை எழுத்தாளர் செல்லகணபதியைச் சந்தித்த போது சிறுவர் இலக்கியம் சார்ந்த இயக்கங்கள் குறைந்து போயிருப்பதை கவலையுடன் அவதானித்தார். இது ஆரோக்யமானப் போக்கில்லை என்றும்  சொன்னார். 

தமிழ் இலக்கியச் சூழலில் இன்று 1000க்கும் அதிகமானோர் எழுதுகிறார்கள் . சிறுவர் இலக்கியம் எழுத 50 பேர் இருப்பார்களா என்பது சந்தேகம்தான். இவர்களுக்கு  தீவிர இலக்கியவாதிகளுடன் தொடர்பும் , உரையாடலும் இல்லாத்தால் ஒருவகை வெறுமை தெரிகிறது. தமிழில் கிளாசிக்சிறுவர் இலக்கியப் படைப்புகள் என்பது அருகிப்போய்விட்டது. சிறுவர் இலக்கியம்  நீதி கதைகளைத்தாண்டி வெகு சிரமப்பட்டு வெளியே வந்திருக்கிறது.  துப்பறியும் கதைகளும அரிதாகி விட்டன , புதிய கதை அம்சங்களை நோக்கி  ஒற்றைப்படை எண்ணிக்கையைத் தாண்டி நிறையப்பேர்  வந்து விட்டார்கள்.  பெரியவர்கள் குழந்தைகளுக்காக எழுதுவதும் இன்னும் ஆக்கிரமிக்கிறது. குழந்தைகள் எழுதுவதை இன்னும் ஊக்குவிக்கவேண்டும்.  இன்னும் மிருகங்களையும் பறவைகளையும் கொண்டே கதை சொல்ல வேண்டியிருக்கிறது, மனிதர்களும் , நிகழ்காலமும்,  நிகழ்காலப்பிரச்சினைகளும் வெகு தூரத்திலேயே நிற்கின்றன, ( மனிதர்களை வைத்து எழுதினால் யாரோ பகைத்துக்கொள்வது போல தூரமே நிற்கிறார்கள். அம்மா, அய்யாக்களைப் பற்றியா எழுதப்போகிறோம்.   ) இந்தச்சூழலில்தான்  ஓகே குணநாதன் குழந்தைகளுக்கு காட்சிப்பூர்வமாக நிறைய விசயங்களைச் சொல்லவும் உணர்த்தவும் விரும்புகிறார். அதை தன் நூல்களில் வெளிப்படுத்துகிறார். குறைந்த சொற்கள், நிறைந்த காட்சி ஓவியங்கள். விரிந்த களன், சிறந்த செய்திகள் என்பதே ஓகே குணநாதனின் சிறுவர் கதைகளின் சிறப்பு என்பதால் தமிழகச்சூழலில் எழுதப்படும் சிறுவர் கதைகளிலிருந்து மாறுபட்டு நிற்கிறார். விஞ்ஞானச்செய்திகள், மூட நம்பிக்கைகளை தகர்க்கும் சொல்லாடல்கள் என்று அவரின் சமீபப் படைப்புகள் கிரீடம் கொள்கின்றன

- சுப்ரபாரதிமணியன்
ஷாநவாஷின் “சுவை பொருட்டன்று-
பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள்
                     ---------------------- சுப்ரபாரதிமணியன்
----------------------------------------------------------------------------                                                            ஷாநவாஷின் சிறுகதையொன்றில் “ கறிவேப்பிலை “ கடைக்காரர் கறிவேப்பிலைக் கொத்தை சடக்கென்று ஒடித்து கொசுறு போடும்போது “ வேண்டாம் எங்கள் வீட்டில் கருவேப்பிலை கன்று இருக்கிறது “  என்று அம்மா சிரித்தபடி சொல்லும் வார்த்தைகள் இன்னும் வாடாமல் அப்படியே இருக்கிறது என்று ஆரம்பித்திருப்பார்..
நவாஸிடம் இந்த கொசுறு கறுவேப்பிலை வேலையெல்லாம் இல்லை. முழு கருவேப்பிலைக் கன்றையே கையில் எடுத்துத் தந்து விடுவது போலத்தான் அவரின் விஸ்தாரணமான பேச்சு இருக்கு.
 பரோட்டா, கறி என்று ஓரிரு வார்த்தைகளை தெளித்து விட்டால் போதும் அவர் அதுபற்றியெல்லாம்  விரிவாக, சுவரஸ்யமாகப் பேசிக் கொண்டே இருப்பார்.  அந்த வார்த்தைகளின் நதிமூலம் , அர்த்தம், கலாச்சாரம், அது தொடர்பான வெவ்வேறு கூறுகள் அவரின் பேச்சு விரியும். அவரின் உணவுக்கடைக்குப் பெயர் கறி வில்லேஜ்.

 அவர் கடையில் அதிகம் சாப்பிடக்கொடுக்கவில்லை. ஒரு மதியத்தில் நன்கு சாப்பிட்டு விட்டு பின்னதான அரைமணி நேரத்தில் சென்றிருந்தேன்.  சாப்பிட ஆசை இருந்தாலும் முடியவில்லை.  கறி என்பதற்கு விளக்கம் கேட்டால் 10 பக்கங்களுக்கு விபரங்கள் தந்து விடுவார். அப்படித்தான் பரோட்டா பற்றி அவர் சொல்வதும்.பரோட்டாவை முன்னிருத்தி அது தரும் கனவுகள், கற்பனைகள், அறிமுகப்படுத்தும் மனிதர்கள், பரோட்டாவும் மனிதர்களும் தரும் சுவையான அனுபவ எண்ணங்களை ஒரு நூலாய் வடிவமைத்திருக்கிறார்.

 நம்மூரில் சிங்கப்பூர் பரோட்டா, மலேசியா பரோட்டா என்று ஆரம்பித்து பாக்கிஸ்தான் பரோட்டா கூட வந்து விட்டது. பாகிஸ்தான் பரோட்டாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சமீபத்தில் வேலூர் அருகே ரகளை செய்த்து சமீபத்திய செய்தி.

பரோட்டாவுக்கு  எதிராக தமிழ்நாட்டில் ஒரு பெரிய இயக்கமே நடந்து வருகிறது. மருத்துவர் கு.சிவராமன் இதில் முக்கியப்போராளி.  நான் பரோட்டாவைப் பற்றி நினைக்கிற போது அவர் பேச்சு மனதில், கண்ணில் வந்து பரோட்டா சாப்பிடுவதை மறுக்க வைக்கும். ஆனால்  பரோட்டா பற்றி ஷாநவாஸ் பேசும் போது  சாப்பிடத்தோன்றும்.  தமிழ்நாட்டில் அய்ந்தாம் தர ஆட்டா மாவு பரோட்டாவுக்குப் பயன்படுகிறது  சிங்கப்பூரில் நாங்கள் பயன்படுத்துவது முதல் தர மாவு. தமிழ்நாட்டில் அந்தக் குரலுக்கு நியாயம் இருக்கிறது. அவர் பேச்சிற்குப் பின்னால் ஒரு வாய்  பரோட்டா அள்ளிப்போட்டுக் கொண்ட போது அவருக்கு ஒரு ஜே ( ஜெ. அல்ல )போடத்தோன்றியது.நாம் எதைச் சாப்பிடுவது என்பதையார் முடிவு செய்வது. விவசாயி, தரகன், மருத்துவர், சமையல்காரர், போகும் உணவகம் என்ற பட்டியலில் 50 சதம் விருப்பம் மட்டுமே நம்முடையது. என்கிறார் அவர்.  இயற்கை உணவிற்கு ஆதரவு இயக்கம் பல இடங்களிலும் பரவி வருகிறது. முட்டை, பால் முதல் எல்லாவற்றிலும் ரசாயனக்கலப்பு, கோழிக்கறி சாப்பிடுவதால் 7 வயதில் பெரியவர்கள் ஆகும் பெண் குழந்தைகள், சிறுமிகள். உடம்பைக்காக்க, எடையைக்குறைக்க ஆரோக்கியமாய் வாழ  என்று தேவையான  இயற்கை உணவை 3% மட்டுமே உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் இதை புணர் ஜென்ம வேளான்மை  என்கிறார் இவர்.  மனிதர்கள் பணத்தைச் சாப்பிட முடியாது என்று உணரும்போது அவர்களுக்கு வயதாகி விடுகிறது என்கிறார்.  சாதாபாவா, அண்டா பாவா, அம்பாசிக்  ( சாதா , முட்டை, சதுரப் பரோட்டாக்கள் ) என்று ஆரம்பித்து சுவைக்குள் நாக்கைக் கொண்டு வந்து விடுவார் ஷா.  6 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். புரோட்டா பற்றிய அனுபவங்கள கவிதை என்று ஒரு புத்தகமும் வெளியிட்டுள்ளார் சமீபத்தில் ( சுவை பொருட்டன்று )இந்நூலில் ஒரு சவுகரியத்திற்கு  கவிதை என்று பெயர் இட்டிருக்கிறார். பரோட்டா என்ற வஸ்துவை சிங்கப்பூர் சமூகம் எதிர் கொள்வதைச் சொல்கிறார். சத்துக்கோசம், சத்துளேர் ( உயர்ந்தவை ) என்கிறார்.காதலி போட்ட மோதிரம்  இடஞ்சல், கழற்று  என்று அதிகாரம் செய்ததால் பரோட்டா உருட்டுவதிலிருந்து வேறு வேலைக்குப் போகிறவன்,  80 வயதிலும் பரோட்டா சாப்பிடுகிறவர், எல்லா நடைகளும் பரோட்டா கடையை நோக்கி செல்வது , அந்தந்த புரோட்டாவின் ருசியை அடுத்தப் பரோட்டாவில் தேடுதல் பெரும் பிழை போன்ற அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். பல சொற்களில் வாழ்கிறது பசி என்று பல   பரோட்டா ருசியை உடம்போடு வளர்த்த மனிதர்களை அறிமுகப்படுத்துகிறார்..மூச்சைப்பிடித்து விசிறினாலும்/பக்குவமாய்  புரட்டி எடுத்தாலும் கடைசி நிமிடத் திருப்பத்தில்தான் நேர்கிறது புரோட்டாவின்  அடையாளம் “  என்கிறார்,பசியை பலபேர் பலவிதமாய் வெளிப்படுத்துகிறார்கள். அவசரகதியில், கோபத்தில் ,  பசியின் உடசத்தில் கூட . பல சொற்களில் வாழ்கிறது பசி என்கிறார்.

பரோட்டா எதிர்ப்பாளர்கள் கூட பரோட்டா என்பதற்கு பதிலாய், திணை, சாமை, மரவள்ளிக்கிழங்கு, கேழ்வரகு தோசை என்று கூட நிரப்பிக் கொண்டு இக்கவிதைகளைப் படித்து சுவாரஸ்யப்படுத்திக்கொள்ளலாம.
ஷா தோடம்பழம் “ என்று ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ( மூன்றாவது வலது கை என்ற தொகுப்பில்)  ஒரு பழத்தை முன் வைத்து மனித உறவுகளுக்குள் அது செய்யும் வித்தையைச் சொல்கிறார். அக்கதையின் இறுதி வாக்கியம் இப்படி முடிகிறது “ திஸ் ஒன் சுவீட் “ என்று பொதுமைப்படுத்துவார். அதைத்தான்  பரோட்டா நூலிலும் சொல்லியிருக்கிறார். “ ஒவ்வொரு முறையும்/ முதல் பேடாவைத் தட்ட ஆரம்பிக்கும்போது ஒரு விளையாட்டை புத்தம் புதிதாய் அணுகுவது போல் என்றும் இருக்கிறது  என்பதை அவரின் படைப்புகளை தொடர்ந்து கவனிக்கிற போது எல்லா இலக்கியப் படைப்புகளையும் இப்படித்தான் அணுகுகிறார்  என்பதும் தெரிகிறது.
இத்தொகுப்பைப் படித்து விட்டு  பரோட்டா  சாப்பிடாமல் இருந்தால் எப்படி. ..டுவா கோஸா “ ( இரண்டு பரோட்டா  ) என்று ஆர்டர் தரலாம் உடனே.

. ( சுவை பொருட்டன்று- பரோட்டாவை முன்வைத்து சில கவிதைகள் ஹாநாவஸ் வெளியீடு, சிங்கப்பூர் விலை 25 சிங்கப்பூர் வெள்ளி )

-------------சுப்ரபாரதிமணியன்

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

* நீரின்றி அமையாது உலகு

சுப்ரபாரதிமணியன்
            "அவர்கள் நம் நதிகளை விற்றார்கள்
      நமது கிணறுகள், ஏரிகள்
            ஏன் நம் தலைமேல் விழும் மழையைக்
            கூட விற்றார்கள்.
           
லண்டனிலும், கலிபோர்னியாவிலும் வசிப்பவர்களுடைய
            கம்பனி நம் தண்ணீரை வாங்கியிருக்கிறது
            இனிமேல் எதைத் திருடப் போகிறார்கள்
            நமது மூச்சுக் காற்றிலிருக்கும்
            நீர்த்துளிகளையா?
            அல்லது நமது நெற்றியில் முகிழ்க்கும்
           
வியர்வைத் துளிகளையா?"
            தண்ணீர் தனியார் மயமாக்கலை எதிர்த்து போராடும் மக்கள் மத்தியில் 'ஈவன் ரெயின்' என்ற ஸ்பானியத் திரைப்படத்தில் கதாநாயகன் பேசும் வசனம் இது).
            உலகில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு அய்.நா.சபை "வாழ்விற்கான தண்ணீர்" என்ற முழக்கத்தை முன் வைத்து 2005 ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை பல்வேறு திட்டங்களைத் தீட்டி உலக நாடுகளில் பல்வேறு பணிகளை நடத்தி வருகிறது. 'உலகில் இன்னும் 50 ஆண்டுகளில் சுத்தமான குடிநீரைப் பெறுவது மிகுந்த சவால் நிறைந்த விசயமாக இருக்கும். உணவு பொருள்களின் உற்பத்தி குறைந்து வருவதன் மத்தியில் உணவுப் பொருட்களின் தேவையும், சுமார் 300 கோடி உலக மக்களின் கழிவறை வசதித் தேவைகளும் பல சிக்கல்களை உருவாக்கும். நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து வருவதும் சிக்கல்களை உருவாக்கி வருகிறது.
      உலக நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இது இன்னும் தீவிரமாக இருக்கும். கடல் நீரை குடிநீராக்குவது, மழை நீரை குடிநீராகப் பயன்படுத்துவது, தேவை ஏற்பட்டால் கழிவு நீரையும் குடிநீர் ஆக்குவது, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கச் செய்வது போன்றவை மனதில் கொள்ள வேண்டியதாகிறது.
      தமிழகத்தின் சராசரி மழையளவு 1000 மி.மீ. இது நமக்கு கிடைப்பது சமீப ஆண்டுகளில் அரிதாகிக் கொண்டேயிருக்கிறது. தென்மேற்கு பருவக் காற்றும், வட கிழக்கு பருவக் காற்றும், கோடை மழையும் கணிசமாக மழையைக் கொண்டு வருகின்றன. வட இந்தியாவின் பல நதிகளில் ஓடும் நீரின் அளவில் இது குறைவே. கங்கையில் ஆண்டுக்கு ஒரு வாரம் ஓடும் வெள்ளநீரின் அளவு தமிழகத்தின் ஓர் ஆண்டுத் தேவையாகும். கடந்த பத்தாண்டுகளில் தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்தில் அதிகரித்துள்ளது. இது இன்னும் பத்தாண்டுகளில் இன்னும் தீவிரமாகும்.
      தூய்மையான தண்ணீர் என்பதை மனிதனின் அடிப்படை உரிமையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஆண்டுதோறும் சுத்தமான குடிநீர் கிடைக்காத காரணத்தால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர். அதில் குழந்தைகள் அதிகமாயும், பெண்கள் கணிசமாயும் உள்ளனர்.
      "நீருக்கு பொருளாதார மதிப்பு உள்ளது. இதை ஒரு வணிகப் பண்டமாக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. "நீர் ஒரு வணிகப் பொருள். அரிய நீர்வளத்தின் போட்டி மிக்க பயன்பாட்டின் அடிப்படையில் அதன் பொருளாதார மதிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டது. இந்த வகையில் தண்ணீரை தனியார் மயமாக்கும் முயற்சிகள் இந்தியாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம் முயற்சியால் தண்ணீர் ஏழைகளுக்கு கிடைப்பதை விட பண பலம் கொண்டவர்கள் செலவிடும் தொகைக்கு சாதாரணமாகக் கிடைத்து விடுகிற நிலை வந்து விட்டது.
            தென் அமெரிக்காவிலுள்ள பொலிவியா நிகாரகுவா, ஆப்ரிக்காவில் மொசாம்பிக், கென்யா, கானா, பர்கினபாசோ, ஈக்வடார், தான்சானியா போன்ற நாடுகளில் தண்ணீர் தனியார் மயம் சுலபமாகி விட்டது. திருப்பூரில் அமுல்படுத்தப்பட்ட மூன்றாம் குடிநீர் திட்டமும் இவ்வகையில் பொதுமக்கள், தனியார், கூட்டுப் பங்கீட்டை இன்னொருவகையான தனியார் மயத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
            தனியார் துறை, இந்த வணிகத்தில் நுழைவதற்கு பலவகைகளில் வரி விலக்கு அளித்து ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் போன்ற பல மாநில அரசுகள்  முறையற்று செயல்பட்டன. இப்போது எல்லா மாநிலங்களின் போக்கிலும் இதைக் காணலாம்.
            பொலிவியாவில் தனியார் மயத்திற்கு எதிரான போராட்டம் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டது. சட்டிஸ்கர் மாநில அரசு சியோநாத் நதியின் ஒரு பகுதியை ரேடியல் வாட்டர் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்ததால் அந்நதியின் கரையில் வாழும் மக்களின் மீன்பிடிக்கும் தொழிலும், நீரைப் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டதை எதிர்த்து அப்பகுதி மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி தங்கள் உரிமையை மீட்டனர்.
            நீர் என்பது அடிப்படை உரிமை என்பதற்கு பதிலாக அடிப்படை தேவை என்று சொல்லப்படும் சூழல் வந்துவிட்டது. உரிமை என்றால் ஒவ்வொருவருக்கும் அளிப்பது என்றாகும். தேவை என்பது விலை கொடுத்து வாங்க வலியுறுத்துவது.
            வளர்ந்த நாடுகளில் நீர் விநியோகம் என்பது பொதுத்துறையின் கீழ் உள்ளது. ஆனால் பொதுத் துறையின் கீழ் இருந்து தனியார் துறைக்கு செல்லும் பாதைக்கு வளர்ந்த நாடுகள் திட்டமிட்டு வலியுறுத்துகின்றன. எனவே அவை தாம் கடன் கொடுக்கும் நாடுகளிடம் தனியார் மயமாக்கலை வற்புறுத்தி நிர்பந்திக்கின்றன.
            இந்த வகை நீரை தொடர்ந்து மக்கள் பருக விளம்பரங்கள் மூலம் வலியுறுத்தப்படுகிறது. சுவை கூடுவதற்கு ரசாயனப் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அதில் பல பூச்சிக் கொல்லி மருந்துகளும் உள்ளன. இவை உடல் நலத்தை பாதிப்படையச் செய்பவை.
            இவற்றை வியாபார நோக்கம் கொண்டு பெரும் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கையில் எடுத்துக் கொண்டு லாபம் சம்பாதிக்கின்றன. இது சாதாரண மக்களைச் சுரண்டவும் ஊழல் பெருகவும் வழி வகுத்து விட்டது.
            21ம் நூற்றாண்டின் ஏற்படும் போர்கள் நீருக்கானதான இருக்கும் என்று திரும்பத் திரும்ப ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது.
            குடிநீருக்கே இப்பிரச்னைகள் என்கிறபோது விவசாயம் இன்னும் சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. மானாவாரி விவசாயம், பாசன விவசாயம் என்று விவசாயம் நடைபெறுகிறது. இவை இன்று வறண்ட நிலையிலேயே காணப்படுகிறது. நீர்நிலைகள் பொது சொத்தாக அறிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மிக முக்கியம். தூர்வாரலும், தடுப்பணைகளும் நீர் தேக்க பயன்படும். தொடர்ந்து மழை நீர் சேமிப்பு திட்டங்கள் அமுல்படுத்தவும் வேண்டியுள்ளது தனியார்கள் ஆழ்குழாய்களை அமைத்தலை முற்றிலும் தடை செய்ய வேண்டும். நீர் விளையாட்டுக்கு அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதும் தடை செய்யப்பட வேண்டியுள்ளது.
            "நீர் சிக்கல் என்பது ஒரு சூழலியல் நெருக்கடி. இதற்கு வியபார ரீதியாக தீர்வு என்பது பூமியை நாசப்படுத்தும். சூழலியல் சிக்கலுக்கு சூழலியல் ரீதியில்தான் தீர்வு காண முடியும்" என்கிறார் சூழலியல் போராளி வந்தனா சிவா.
            1300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட திருப்பூர் மாநகராட்சிகள் குடிநீர் வழங்குவதை தனியாரிடம் ஒப்படைக்கலாம் என்ற திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது.
            ஆயிரம் லிட்டருக்கு 45 ரூபாய் என சொல்லப்பட்டது. இந்த திட்டத்தின் படி அதிகபட்சமாய் சாயப்பட்டறைகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆனால் திருப்பூர் மற்றும் சுற்றியுள்ள 800 கிராமங்களுக்கு குடி தண்ணீருக்கான சாயப்பட்டறைகளுக்கு வழங்கப்படுவதில் பாதிதான் வழங்கப்படுகிறது. பவானி ஆற்றிலிருந்து ஒரு மில்லியன் லிட்டர் நாள் தோறும் எடுத்துக் கொள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுமதி தரப்பட்டு குறைந்தட்ச கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அது வேறு நிறுவனத்திற்கு விற்பனையாகிறது. சிவகங்கையில் சர்க்கரை ஆலை ஒன்று நாள்தோறும் 1 லட்சம் லிட்டர் நீரை உறிஞ்சி இன்னொரு தனியார் நிறுவனத்திற்கு விற்கிறது. தாமிரபரணியிலிருந்து நாள்தோறும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு அது வெறுமனே 6,000 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அது தனியார் குளிர்பானக் கம்பனியால் பல லட்சங்களுக்கு விற்பனையாகிறது.


சுப்ரபாரதிமணியன்.,      8/2635 பாண்டியன் நகர்.,          திருப்பூர் 641 602.          9486101003