சுயசரிதைத் துணுக்குகளும்,
சுயமரியாதைக் குறிப்புகளும்
முதல் தலைமுறை :
வெ.இறையன்புவின்
சமீபக்கட்டுரைகள் – தொகுப்பு( 2014 )
சுப்ரபாரதிமணியன்
” நான் அதிகம் செலவிடும் தொகை புத்தகங்களுக்காகத்தான்.அவையே என் மூளையின் முதலீடுகளாக
இருக்கின்றன.எளிமையான வாழ்வு, இயல்பான உணவு, அவா இல்லா பக்குவம் ஆகியவற்றால்
பணக்காரனாக இல்லாவிட்டாலும் மனக்காரனாக வாழ்கிறேன்.பெரிய இல்லத்தை விட பரந்த
உள்ளமே உயர்ந்த செல்வம்என்பதை அறிவேன்.
அதிகப் பணம் இருப்பவனை விட குறைவானத் தேவைகள்
இருப்பவனே செல்வந்தன் என்பது என் கொள்கை “. இறையன்புவின் இந்த
வாக்குமூலத்தைத் தாண்டி எதுவும் அவரின் படைப்புகளில் இருக்காதுதான். ஆனால் இதை வலியுறுத்தும்
ஒவ்வொரு சொல்லின் தீவிரமும் அவரின் எல்லாப் படைப்புகளிலும் தென்படுவதுண்டு.
இத்தொகுப்பின்
கட்டுரைகளை இப்படி பாகுபடுத்தலாம்.1. சுயசரிதை சார்ந்த அனுபவங்கள் 2.
விழிப்புணர்வு தரும் வாழ்க்கையின் வெற்றி அம்சங்கள் 3.
படைப்பாக்க அனுபவங்கள் 4. சில மனிதர்கள் 5.. சில உரைகள் 6. மாணவர்களின் படிப்பிற்காக சில
டிப்ஸ். 7. வேளாண்மையும், கல்வியும்.
1. சுயசரிதை சார்ந்த அனுபவங்கள் : வேளாண்மைக்கல்லூரி படிப்பு அனுபவங்களில்
ஆசிரியர்கள், பாட முறைகள், நண்பர்கள் பற்றியக் குறிப்புகள் உள்ளன. ஒருகாலத்திய
கோவை நகரத்தின் முகத்தையும் அறிந்து கொள்ள
முடிகிறது. விடுதியில் தங்கிப் படிக்கும் எந்த மாணவனுக்கும் நேரும் அனுபவங்கள் இவை.என்னதான்
சுவையானதாக இருந்தாலும் உணவு விடுதி
விமர்சனங்களுக்குத் தப்புவதில்லை. கல்லூரி காலச் சுற்றுலாக்களில் இருக்கும்
அலட்சியமும் ,கேளிக்கையும் சொல்லி மாளாது. வேற்று மாநிலங்களில் வேலை செய்யும் போது
அந்த மக்களின் இயல்பான வாழ்க்கை சொல்லப்படுகிறது. அதிகாரிகள் என்றாலே அதிகாரம்
மிக்கவர்கள். அதுவும் மொழி தரும் ஆதிக்கம் மனிதர்களைப் பிரித்து விடுவது பற்றிய
வேதனையை நகைச்சுவையோடு சொல்கிறார். இந்தி மொழி ஆதிக்கம், இந்தி மொழி பேசுபவர்கள்
நம்மைப் பார்க்கும் பார்வையும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இளமை என்னும்
தென்றல் காற்று வருடிச்செல்லும் பல
அனுபவங்கள் இத்தொகுப்பில் உள்ளன.
2. விழிப்புணர்வு
தரும் வாழ்க்கையின் வெற்றி அம்சங்கள் ; அடுத்தவர் நலனுக்காகச் செய்யப்படும்
ஒவ்வொரு செயலும் பிரார்த்தனையாக அமைந்து வெற்றிக்குப் படிக்கட்டுகளாகின்றன.ஒவ்வொரு
நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினாலே
வாழக்கை வழிபாடுதான் என்பதை சில
சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். அவை சாதாரண சம்பவங்கள். ஆனால் சாதனைக்கு அளவிடும்
வெகுளித்தனமான, நேர்மையான அனுபவங்கள்.
3. படைப்பாக்க
அனுபவங்கள் ; வாழ்க்கையின் பல்வேறு அனுபவங்கள்
படைப்புத்தளத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னைப்படைப்பாக்கு என்று
தொந்தரவு செய்து கொண்டே இருக்கும். உள்மனம் அவ்வகை சீண்டல்களால் நிறைந்திருக்கும்.
அந்தச் சீண்டல்கள் தொடர்ந்து இருந்து மன அழுத்தங்களாகி நீண்ட அளவுப்
படைப்புகளையும் தர வல்லவை. குறிப்பாக
நாவல் எழுதும் அனுபவங்களைச் சொல்லலாம்... மசூரி பகுதியின் பயிற்சி பற்றி ஒரு நீண்ட
கட்டுரை இருக்கிறது. பழங்குடியினரின் இடப்பெயர்வும், இடர்பாடுகளும் அவரை வெகுவாக
பாதித்திருக்கின்றன. ‘ பெரிய அணைகளின்
பெயரால் அந்த மண்ணில் வாழும் மைந்தர்கள்
எந்த உத்தரவாதமுமின்றி ஒரு நாள் தூக்கி
எறியப்படுவது பற்றியும், கரை மேல் தலைக்குப்புற விழுந்த மீன்களைப் போல எந்த
ஆரவாரமும் இல்லாமல் அவர்கள் பண்பாடும், இருந்ததும் கரைந்து போவது பற்றியும் ’’ அவரின் சிந்தனைகள் ஒரு நாவலாக பின்னர் பரிணமித்ததையும்
ஒரு கட்டுரையில் விளக்குகிறார். 1988ல் நர்மதை சர்தார் அணைப்பகுதிக்குச் சென்ற அனுபவங்கள் 1995ல் அதை ஒரு நாவலாக்கப்பயன்பட்டிருகின்றன.
அவ்வாண்டின் சிறந்த நாவலாக ( “ ஆற்றங்கரையினிலே.. “ என்ற நாவல்) அது திருப்பூர்
தமிழ்ச் சங்கத்தின் பரிசையும் பெற்றது.
4. சில மனிதர்கள்
: சந்திக்கிற நல்ல மனிதர்கள் பற்றி
பிறருக்குச் சொல்லாமல் விடுவதென்பது
அவர்களை மற்றவர்கள் அறிமுகப்படுத்தாமலும் அவர்களின் வாழ்க்கை அம்சங்களை முன்னெடுத்துச் செல்லாமலும்
தடைப்படுத்தும் செயல்களாகும்.அந்த வகையில் மோத்தி ராஜகோபால் பற்றிய கட்டுரைக்குப்
பின், வாசிப்பும் நேசிப்பும் கொண்ட ஒரு
உயர்ந்த மனிதரை இளைய தலைமுறை அறிந்து கொள்ள ஒரு கட்டுரை உதவுகிறது. இது போல்
பல்வேறு இடங்களில் பல்வேறு உயர்ந்த உள்ளங்களை முன்னம்
அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
5.. சில உரைகள் : இதிலுள்ள உரைகள் இளைஞர்களுக்கு வழி
காட்டுபவை. குறுக்கு வழிகளைத் தவிர்த்து உண்மையானத் தேடுதலை மேற்கொள்ள வேண்டிய
வழிகளைக் காட்டுபவை. உரைகள் பெரும்பாலும்
கை தட்டல், பொழுதுபோக்கு என்று மாறி காற்றில் கலந்து விடுபவை அந்த வகையில் அவை
அமைந்து விடாமல் எண்ணப்பதிவுகளாக அமைய இது போன்றத் தொகுப்புகள் வழிகோலுகின்றன. அவை
மாணவர்களோ, இளைஞர்களோ யாருக்கும் வழிகாட்டலாம். ஏன் இறையன்பு அவர்களுக்கே மசூரி
பயிற்சிப்பள்ளியில் ‘ கூந்தலின் கரைகளில் நரை ததும்ப, எந்த
ஒப்பனையிலும் கற்பனையானத் தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்யாமல் எளிமையாக கசங்கிய
பருத்திப் புடவையுடன் தீர்க்கமும், கண்ணியமும் கொண்ட விழிகளுடன் ‘ பேசிய ஒரு
பெண்ணின் உரைதான் அவரை “
ஆற்றங்கரையினிலே.. “ என்ற நாவல் எழுத அஸ்திவாரமாக இருந்திருக்கிறது. இதில் இடம் பெற்றிருக்கிற உரைகள் பல
இளைஞர்களுக்கு அடைக்கப்பட்ட வழிகளைத் திறந்து வைத்து வழிகாட்டும்தன்மை கொண்டவை
என்பது தெரிகிறது.அந்த வகையில் ஆனந்த விகடன்
வாசகர்களுக்கான சில உரைகள் இதில் தொகுக்கப்பட்டிருகின்றன. இன்னொரு புறம்
பெரும் உரைகள் கவனத்திற்குரியதாகின்றன..
சென்னை கமபன் விழாவின் “ கம்ப இராமயாணத்தில் போர்க்கலை “ என்ற தலைப்பில் அமைந்த
உரைக்குத் தேவைப்பட்ட வாசிப்பும் , உழைப்பும்
மனதை அதிரவைக்கிறது. அதன் மூலம் நியாயத்திற்காக , உண்மைக்காக ஒவ்வொரு மனிதனையும்
வீறு கொண்டு எழச்செய்யும் உண்மையான சக்தி
உருவாவது வெளிப்படுகிறது.வாசிப்பும் யோசிப்பும் மனதில் கொண்டு வரும்
மாற்றங்களைச் சொல்கிறது. கம்ப
ராமயாணமூலமும், கிரேக்க , இந்திய இதிகாசங்களோடும் இந்த உரையில் அவர்
பயணப்பட்டிருப்பதும் இன்னொரு வித்தியாசமானக்
கோணமாக அமைந்திருக்கிறது.உச்சி முதல் பாதம் வரை நம் உடம்ப்பிம் பாகங்களை நாம்
பராமரிக்க வேண்டிய அவசியம் பற்றியும்
அவற்றின் நுணுக்கமான செயல்பாடுகள் மூலம் உடம்பே கோவில் என்ற நிலைப்பாட்டைத் தக்க
வைத்துக் கொள்ளும் உரைகள் புதிதாகத் தோன்றுகிறது. உடம்பின் பாகங்கள் பற்றிய
வெவ்வேறு இலக்கியக் குறிப்புகளும், சம்பவங்களும் தரப்பட்டுள்ளன.
6. ” விரல்களையே நாராக்குபவர்கள் கைகளில்
பூக்கள் விரைவில் மாலையாகின்றன. கரங்களே உளியாகிறவர்கள் மத்தியில்
கற்கள் இளகிச் சிற்பமாகின்றன. பணியை நேசிப்பவர்கள் எவ்வளவு நேரம்
உழைத்தாலும் களைப்படிந்து காலாவதியாவதில்லை. உழைப்பே ஓய்வு என நினைப்பவர்களுக்கு வேர்க்குறுகளே
முத்தாரஙகள். ஒவ்வொரு பணியும் எதிர்பார்த்த மாதிரி கச்சிதமாக முடியும் போது
ஏற்படும் மகிழ்ச்சியே அடுத்த
பணிக்கான அடித்தளமாகி அதை கோபுரமாகக் கும்பிட வைக்கும் “ என்பதைத் திரும்பத் திரும்ப
வலியுறுத்துகிறார்.இதை மாணவர்களுக்கும், அவர்களின் படிப்பிற்குமாக வெவேறு
தளங்களில் பொருத்திப் பார்க்கச் செய்கிறார். வெற்றிக்கானப் படிக்கட்டுகளாய்
காட்டுகிறார்.
7. உதிரியான வகையிலமைந்துள்ள கட்டுரைகளில் ஆசிரியர் சமூகம் பற்றியக் கட்டுரையும்,
வேளாண்மை பற்றிய கட்டுரையும் மிக முக்கியமானவை. “ கிராமங்களோ முதுமக்கள் தாழிகளாகிவிட்டன. இன்று
நாம் முற்றிலுமாக விஞ்ஞானத்தின் வள்ர்ச்சி , தொழில் நுட்ப மாற்றங்களை மறுதலித்து
விட்டு பழைய முறையில் விவசாயம் செய்ய
முடியாது . ஆனால் அதே நேரத்தில் நம் மண்
சார்ந்த மரபுகளை முழுவதுமாக வழித்து
எறிந்து விட்டு மேற்கத்திய முறையிலேயே விவசாயம் செயவது சரியல்ல “ என்பதையும்
சுட்டிக்காட்டுகிறார்.பாடத்திட்டத்தைத் தாண்டி
ஆசிரியர்கள் குழந்தைகளை அணுகுவது, பாடப்புத்தகங்களைத் கடந்து செல்வது,
ஒவ்வொரு ஆசிரியரும் இறுதி வரை மாணவனாக இருப்பது போன்ற அம்சங்களை
வலியுறுத்துகிறார். கல்வி என்பது சமூக மாற்றத்திற்கான ஒரு அரசியல் நடவடிக்கை,
ஆசிரியர் என்பவர் நடுநிலையாக இருக்க முடியாது
என்பதை யோசிக்கையில் மாற்றுக்கல்வி சார்ந்த அம்சங்களை இவை கோடிவதும்
தெரிகிறது.
அடையாள அரசியல் பற்றி அதிகமாய் பேசப்படும் சூழலில் சாதாரண
மனிதனின் அடையாளச் சிக்கல் பற்றியும் இந்நூல் பேசுகிறது. அடையாளச் சிக்கல் என்று
எதுவுமில்லை. அடையாளமே சிக்கல்தான். இயறகை
நம்மைப் போதிய அடையாளங்களோடுதான் படைத்திருக்கிறது. ஆனால் நாமோ அவற்றில்
திருப்தியடையாமல் இன்னும் வேண்டும் என்று
அதிக அடையாளங்களை அப்பிக் கொள்ள ஆசைப்படுவதை பட்டியலிடுகிறார். சாதாரண
மனிதர்களின் இயல்பில் அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டு போகிற போது சிக்கல்ளைத்
தீர்த்துக் கொள்ள அடையாளங்களை வலிந்து
ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதையும் வலியுறுத்துகிறார்.ஆனால்
அரசியல் ரீதியான யோசிப்பிற்கு அவசியம் இல்லாமல் ஆரம்ப நிலையிலேயே அது நின்று
விடுகிறது.
இவற்றினூடே, வெற்றிக்கு சமரசம்
இல்லாத சுயமரியாதைத்தன்மை ஊடாட வேண்டிய
அம்சங்களை இந்நூல் நிறைத்துள்ளது.வாசிப்பின் சுவாரஸ்யத்தைக் கூட்ட இதில்
தென்படும் பிரதி சார்ந்த, சொற்பொழிவு சார்ந்த நகைச்சுவை தேனீரின் இனிப்பாக இயைந்து
அமைந்துள்ளது.மற்றத்தொகுப்புகளைப் போல குட்டிக்கதைகளின் ஆதிக்கம் அதிகம் இல்லாதது
ஒரு ஆறுதல்.
” எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் கண்டு பிடிக்க
வேண்டும் “ என்பதை முதல் தலைமுறையும் கண்டு கொள்ள இந்தப் பயணத்தை வாசகர்களுடன்
இறையன்பு நிகழ்த்தியிருக்கிறார். வாசிப்பும், கற்றலும் இலக்கு மட்டுமல்ல , இனிய பயணம் என்பதை
இக்கட்டுரைகள் மெய்ப்பிப்பதற்குக் காரணம் ’ ஒவ்வொரு நாளும்
சூரியன் புதிது ‘ என்பது போல இறையன்புவின் ஒவ்வொரு புத்தகமும் சொல்லும்
முறையிலும், புதுத்தகவல்களாலும் நிரப்பப்பட்டதாய் புதிதாக இருக்கிறது. என்பதுதான்.
( ரூ 110, 200
பக்கங்கள், விஜயா பதிப்பகம், கோவை வெளியீடு 0422- 2382614, 2385614 )
சுப்ரபாரதிமணியன், 8/2635 பாண்டியன் நகர்,