* 19வது கேரள சர்வதேச
திரைப்பட விழா
சுப்ரபாரதிமணியன்
திரைப்பட விழாக்கள் அதன்
கவர்ச்சியையும் இயல்பையும் இழந்து கொண்டிருக்கின்றன. உள்ளங்கையில் குறுந்தகடுகள்
குவிகையில் திரைப்பட விழாக்களுக்குச் செல்வது அவசியமற்றது, தேவையில்லாதது என்று
தோன்றினாலும் திரைப்பட விழாக்களில் அதிகமாகிக் கொண்டிருக்கும் பிரதிநிதிகள் எண்ணிக்கை
வெகுவாகக் கூடிக் கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் 5 ஆயிரம் பிரதிநிகள் கூடுவர்.
இப்போது திருவனந்தபுரத்தில் நடைபெறும் கேரள சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு 10
ஆயிரம் பேர் பதிவு செய்து கொண்டு கலந்து கொள்கிறார்கள். இவர்களில்
பாதிக்கும்மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.11 திரையரங்குகளில்
சர்வதேசப் படங்கள் திரையிடப்பட்டாலும் நல்ல திரைப்படங்களுக்கு முந்திய காட்சி முடிந்த பின் அடுத்த காட்சியின் வேறு
படத்திற்காக 2 மணி நேரம் கூட வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. படங்களுக்கான்
இடைவெளி நேரங்கள், மதிய உணவு நேரம், மாலை
நேரம் என இடைவெளி நேரங்களில் நடைபெறும்
இயக்குனர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், கருத்தரங்கு, திரைப்பட சம்பந்தமான
புத்தகவெளியீடுகள், திரைப்படக்கண்காட்சி போன்றவற்றில் கலந்து கொள்ள நேரம்
ஒதுக்காமல் அடுத்த படத்திற்கான வரிசையில்
நிற்கவேண்டியிருக்கிறது. வரிசையில் நிற்பது, குளிசாதனங்கள் அமைந்த
திரையரங்குகளில் தொடர்ந்து உட்கார்திருப்பது, இருக்கை கிடைக்காத போது தரையில் உட்கார்ந்து படங்கள்
பார்ப்பது, தரையில் உட்கார இடம் கிடைக்காத போது எங்காவது கால்கள் வைக்க இடம்
கிடைக்கிற இடத்தில் தொடர்ந்து நின்று கொண்டே படம் பார்ப்பது போன்ற சங்கடங்கள்
திரைப்பட விழாக்களுக்குச் செல்வதற்கான மன்நிலைகள
ஒதுக்கி வைத்துக் கொண்டே இருக்கச்செய்கிறது. பிரதிநிதிகளின் எண்ணிக்கையை
குறைக்கிற நடவடிக்கைகளிலும் அமைப்பாளர்கள் வெற்றி பெற முடியவில்லை. மணிக்கணக்கில்
வரிசையில் நின்று பார்க்கிற பல படங்களின் குறுந்தகடுகள் சுலபமாக வெளியில்
கிடைப்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. திருவனந்தபுரத்தைப் பொறுத்த
அளவில் நகரில் எங்கும் திருட்டு குறுந்தகடுகளை வாங்கி விட முடியாது என்பதாலா
கூட்டம் குவிகிறது என்ற சந்தேகம் உள்ளது,
ஒரே திரையரங்கை இரண்டாய், மூன்றாய் பிரித்து திரையரங்குகளின் எண்ணிக்கையை
அதிகமாக்கியதால் இருக்கைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. கேரளத்தில் திரைப்பட
சங்கங்கள் இன்னும் உயிர்ப்புடன் இயங்கி வருகின்றன.மாவட்ட அளவில் நிறைய் சிறு
திரைப்படவிழாக்களும் நட்த்தப்படுகின்றன.திரைப்படம் சார்ந்த நிறுவனங்கள்,
கல்லூரிகள் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டு நடந்து வருகின்றன என்பதும்
சிறப்பாகும்.இவ்வாண்டு தொடக்க விழாவில் கேரள கலை பாரம்பரிய நிகழ்ச்சிகள் எதுவும்
இல்லாமல் இருந்தது. சிக்கன நடவடிக்கையாம். அதிகப்படியான கூட்டத்தால் சோர்வு.
திரையரங்குகளுக்கு மத்தியில் இலவசமாய் போய் வர ஓடிக் கொண்டிருந்த ஆட்டோக்கள்
காணாமல் போனது போன்றவை குறைகளாக மனதில் தோன்றின. கேரள திரைப்பட விழாக்கள் இடதுசாரி
திரைப்படங்களுக்குப் பெயர் போனவை. இப்போதைய
காங்கிரஸ் அரசின் மறைமுகத் திட்டங்களால்
அவை மனதில் எடுத்துக் கொள்ளப்படாத மாதிரி தோன்றுகின்றது.
ஈரான் இயக்குனர் மக்பல்பப்பின் “பிரசிடென்ட் “ என்ற திரைப்படம்
திரையிடப்பட்ட ” கைரளி” தியேட்டரில் நிகழ்ந்த
அமர்க்களம் வெகுவாகச் சோர்வடையச் செய்தது.
2 மணி நேரத்திற்குமதிகமாக வரிசையில் நின்று ரசிகர்கள் திரையரங்குகளில்
நுழைகிறார்கள். 400 இருக்கைகள் கொண்ட
திரையரங்கு அது. அப்போதே முக்கியஸ்தர்கள், பிரபலங்கள் என்று 50% இருக்கைகள்
நிரம்பியுள்ளதைப் பார்த்து வந்தவர்கள்
கூச்சலிடுகிறார்கள். இன்னும் வந்து சேர்கிறவர்களால் கூச்சலும், முன்பு
இருக்கைகளில் வந்து ஆக்கிரமித்தவர்கள் வெளியேற வேண்டும் என்று கூச்சலும்
குழப்பமும் தொடர்கிறது. படம் தொடங்க 1 மணி நேரம் இருக்கிற சூழலில் இது
ஆரம்பிக்கிறது. கோஷம் எழுப்புகிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து
கொள்கிறார்கள். முக்கியஸ்தர்கள் வெளியேற வேணும் என்ற ஆர்ப்பாட்டம்.
கூக்குரல்கள்..பல முக்கிய அதிகாரிகள் வந்து சமாதானப்படுத்துகிறார்கள்.
முக்கியஸ்தர்கள் உட்கார்ந்திருக்கும் இருக்கைகளின் அருகில் நின்று அவர்களை முழுக்க
மறைக்கிறார்கள், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு படம் தொடங்கினாலும் இது தொடர்ந்து
கொண்டே இருக்கிறது. பலர் செய்தித்தாள்களைப் பிடித்து ஒளிக்கற்றைகளை மறைத்து
திரையில் படம் விழுவதைத் தடுக்கிறார்கள். 90% பேர் நின்று கொண்டே படம்
பார்க்கிறார்கள். முக்கியஸ்தர்கள் படம் பார்க்க முடியாதபடி எல்லோரும் நின்று
அவர்களின் பார்வையை தடை செய்கிறார்கள். பாதிப்படம் வரைக்கும் இந்தக் கூச்சல்,
குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. மக்பல்பப் போன்ற மகத்தான கலைஞனை அவமானப்படுடுதுவது போல் குழப்பம். தங்களின்
செயல் உள்ளூரின் நடவடிக்கையாக இருக்கலாம். ஒரு கலைஞனின் படைப்பிற்கே அவமானம்
தருவது போல் குழப்பம். படம் பார்க்கத் தடைகள். காட்சி ரத்து செய்யப்பட்டிருந்தால் இன்னும் அவமானகரமான
விசயமாக இருக்கும், அப்படியொரு முக்கிய
அரசியல் படத்தினை அவமதிப்பது போல் எல்லாம் நடந்தன.. இதற்காக கோஷம், ஆர்ப்பாட்டம்
செய்யும் இளைஞர்கள் சமூக நீதிக்கான் போராட்டங்களில் இதே உத்வேகத்துடன் கலந்து
கொள்வார்களா என்ற சந்தேகமும் வந்தது. (” தி பிரசிடெண்ட்” படம் நிலைகுலைந்து போன ஒரு
சர்வாதிகாரி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மாறு வேடம் போட்டு தன் சிறு வய்து
குழந்தையுடன் அலைவதையும் இறுதியில் பிடிபட்டு விடுவதையும் குழந்தையின்
சிரமங்களுடன் சொன்னது.)
Refugiado – ரெபூகியடோ-சிறந்த படத்திற்கான விருது கிடைத்த அர்ஜெண்டைனா படம்:7 வயது பையன் அம்மா தன்னை
வீட்டிற்குக் கூட்டிச் செல்ல வராத போது அம்மாவைத் தேடி அபார்ட்மெண்ட்டிற்கு
வருகிறான். அம்மா அடிபட்டு ரத்தக் காயத்துடன் கிடக்கிறாள். அவள் கணவனின் கொடுமை.
அவன் அவ்வப்போது அவளை அடிப்பவன் தான். மகனைக்கூட்டிக்கொண்டு அவள் காவல்துறையினரிடம்
தகவல் தருகிறாள்.ஆண்களால் பாதிக்கப்பட்ட இல்லத்திற்குப் போகிறாள். அங்கு
பாதுகாப்பில்லை என்று ஒரு சினேகிதியைப் பார்க்கப் போகிறாள். அவள் தன்னால் எதுவும்
செய்ய முடியாது என்று அந்தத்
தொழிற்சாலையில் வேலை செய்யும் பலரிடம் பணம் சேகரித்துத் தருகிறாள். ஒரு விடுதியில்
கெஞ்சி அறை எடுக்கிறாள். அவள் குளிக்கப்போன சமயத்தில் வந்த கைபேசி அழைப்பை
எடுக்கிறான் மகன், வெளியே சாப்பிட போய் விட்டு வந்தால் அவளுக்கு ஒரு பூச்செண்டு. கணவனிடம் இருந்துதான். மகன்
இருக்குமிடம் சொல்லியிருக்கிறான். இன்னொரு விடுதிக்கு சென்று தங்குகிறாள், அவனின்
தொடர்ந்த தொலை பேசி அழைப்புகள். எல்லாம் சரியாகிவிடும். வந்து விடு. அவனிடம்
அடைக்கலமாவதில் அர்ர்த்தமில்லை என்று முடிவு செய்து கொள்கிறாள். கர்ப்பமாக வேறு
இருக்கிறாள். இன்னொரு குழந்தையாவது பாதுகாப்பாக இருக்க வேண்டும். வீட்டிற்கு
திரும்ப வந்து கொஞ்சம் பொருட்களை பணத்தை எடுத்துக் கொள்கிறாள். மகன் வரமாட்டேன்
என்று பிடிவாதம் பிடிக்கிறான். அவனை சமாதானம் செய்வது சிரமமாகிவிட்டது.
அதற்குள் ஒரு தொலைபேசி. அவள் கணவன்
வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறான். ஓடுகிறாள்.அவன் முன்பே பலமுறை வந்து பார்த்து
சென்றிருக்கிறான். நெடும் பயணம் வெகுவான
பயத்துடன்.அம்மாவிடம் போகிறாள். அம்மா கர்ப்பத்தை அறிகிறாள். அவள் தனியாக
இருப்பவள். அம்மாவிடம் தன் தீர்மானத்தைச் சொல்கிறாள். பையனுக்குக்
குழப்பம்,அம்மாவின் கைபேசியை தண்ணீருக்குள் தூக்கி எரிகிறான். அம்மாவின்
தீர்மானத்திற்கு தான் வந்து விட்டதைப் போல் பாட்டியின் வீடு
திரும்புகிறான்.வயிற்றில் இருக்கும் குழந்தையையும், பையனையும் நன்கு காப்பாற்ற
முடியும் என்ற தீர்மானத்திற்கு அவள் வந்து விடுகிறாள். பயனின் உலக்தில்
குறுக்கிடுகிற பெரியவர்களின் வன்முறையும் விசித்திரங்களும் பையனை பயப்படவே
செய்கின்றன. பெண்ணின் பயமும் கணவனிடமிருந்து தப்ப முயல்வதும் திகிலுடன்
சொல்லப்பட்டிருக்கிறது.
சிறந்த இயக்குனர் : ஜப்பான் ஹிரோஷி டொடா
படம்: Summer, Kyoto. kyoto என்பது ஜப்பானின் பழமையான நகரம். ஒரு கோடை காலத்தில் ஒரு முதிய
தம்பதிகள் பற்றி படம் சொல்கிறது. செண்ட் பேக் எனப்படும் வாசனைப் பொருட்கள் அடங்கிய
சிறு பை தயாரிக்கும் தொழிலை அவர்கள் செய்கிறார்கள்.சாதாரணமாய் அவர்கள் வாழ்க்கை
சுமூகமாய் செல்கிறது. முதியவர் காலாற நடந்து செல்வது. வழியில் உள்ள கோவிலுக்கு
வணக்கம் சொல்வது ஏதாவது காணிக்கை போடுவது, தன் அலமாரியில் உள்ள உடுக்கை போன்றதை
எடுத்து வாசிப்பது, புராதன நடனமொன்றை மெல்ல வீட்டின் ஒரு புறத்தில் ஆடுவது என்று பொழுதைக் கழிப்பவர்.ஒரு நாள் நடந்து
சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த முதியவரைக்
காண்கிறார். போதையால் மயங்கிக் கிடப்பவர் என் நினைக்கிறார். ஆனால் எழுப்பிய போது பசியால் கிடப்பவர் எனத்
தெரிகிறது. வீட்டிற்கு அழைத்து வந்து சாப்பாடு போடுகிறார். உடை தந்து ஓய்வெடுக்கச்
செய்கிறார். முதியவர் 1 செய்யும் வேலையைப் பார்த்து தான் உதவ முடியுமா என்று
கேட்டு கொள்கிறார். அதிகப்படியான பைகள் ஆர்டர்
வந்திருப்பதால் செய்து தயாராக இருப்பதை கொண்டு போய் கடைக்காரரிடம் தரும்
வேலை தரப்படுகிறது. அவரும் முகவரி பெற்று போய் தருகிறார். அதற்கான பணமும் தரப்படுகிறது. கையில் கிடைத்த பணத்தில்
முதியவர் 2 நன்கு சாப்பிடுகிறார்.
முதியவர் 1 மனைவிற்கு முதியவர் 2
திரும்புவார் என்ற நம்பிக்கை இல்லை.கடைக்கு தொலைபேசி செய்து கேட்கும் போது அவர்
பணம் பெற்றுக் கொண்டு சென்று விட்டது தெரிகிறது. திரும்புவார் என்ற நம்பிக்கை
இல்லை. முதியவர் 1 நம்பிக்கை இழக்கிறார்.
நெடுநேரம் கழித்து முதியவர் 2 திரும்பி வந்து நிறைய செலவு செய்து விட்டதாகச்
சொல்லி மீதிப் பணத்தைக் கொடுக்கிறார்.பிறகு மெல்ல நடந்து வீதிகளைச் சுற்றிப்
பார்க்கிறார்.கடற்கரைக்குச் செல்கிறார் முதியவர் 2. கையில் மீன் பொம்மை உலோகத்தால்
செய்யப்பட்டதை எடுத்துப் பார்த்து பின் கடற்கரையில் எரிகிறார்.” நான் மறுபிறப்பில் மீனாய் பிறக்க வேண்டும் “
என்று சொல்லிக் கொள்கிறார். முதியவர் 1
நடை பயிற்சியாய் நடந்து கொண்டிருக்கிறார். முதியவர்கள் மூவரின் உலகம் பற்றிய கதை.
வேறு யாரும் அதில் குறுக்கிடுவதில்லை.மூன்றே கதாபத்ஹ்டிரங்கள். முதியவர்களின்
உலகில் குறுக்கிட யாருக்கும் அதிகாரம்
இல்லைதான்.
எனக்குப் பிடித்த ஒரு மலையாளப்படம்: ஜலம்சம் உலகமயமாக்கல் ஒரு சாதாரண விவசாயியை பிடித்து
ஆட்டும் ஆட்டம் பற்றி இப்படம் பேசுகிறது.விவசாய நிலம் இழந்து போய் அவன்
சாதாரணமாகத் திருடி,பொய் பேசி வாழ முற்படுவதைச் சொல்கிறது. சொந்த விவசாய நிலத்தை
வைத்து வாழ்கிறான். அறுவடை காலத்தில் சிறு சச்சரவால் கொலை நடந்து விடுகிறது. மழை
பெய்து எல்லாம் நசிந்து விடும் அதற்குள் அறுவடை நடந்தாக வேண்டும். வெளியூர்
ஆட்களைக் கொண்டு வந்து அறுவடை செய்ய முற்படுகையில் கொலை நடந்து விடுகிறது. மனைவி, குழந்தை, உறவுகள் எல்லோரும் அதிர்ந்து
போயிருக்கிறார்கள். சிறையில் அழுகையுடன்
வாழ்க்கையைக் கழிக்கிறான். சாவித்ரி குட்டி மீது அபாண்டமாய் அவன் மனைவி
குற்றம் வறுமையில் படிப்பு, குழந்தைகள் கன்னியாஸ்திரி ஆகிறார்கள்.சிறிஸ்துவ
சூழலும் குடும்பத்திற்கு வந்து விடுகிறது. வயல் எலியைக் கொல்லக் கூட விசம் வைக்க
வேண்டுமா.. விசம் வைத்தல் பாவமில்லையா என்று நினைக்கிற குடும்பம் அல்லல்படுகிறது.
சிறையில் இருந்து திரும்பும் விவசாயி பாருக்குச் சென்று குடிக்கிறான்.
பேருந்திலும் மற்ற இடங்களிலும் திருடுகிறான். மனைவி என்னைத் தொடாதே
என்கிறாள். சிறையில் விழிக்கும்போது
யாராவது குடும்பத்தை நினைத்து அழுதுகொண்டிருப்பது அவனை தொடர்ந்து வீட்டில் தூங்கச்
செய்கிறது. தூங்கித் தூங்கி பொழுதைக்
கழிக்கிறான்.ஒரு மகள் பொதுவுடமை
இயக்கத்திலும் சேர்ந்து பணிபுரிகிறாள்.
காலமும் நினைவுகளும் விவசாய நிலத்தை அழிந்து போகச் செய்து விடுகின்றன.
வடநாட்டிலிருந்தும் ஆட்கள் வந்து வேலை செய்கிறார்கள். அஸ்ஸாமியப்பாடலும்,
மலையாளப்பாடலும் அவர்களின் வாழ்க்கையில் இயைந்து போகிறது. இரவுகள் துன்பம்
தருகின்றன. நிலங்கள் நெல்வயல்களிலிருந்து மனைகளாகி விட்டன.சிறுசிறு திருட்டு
செய்து பிழைக்கிறான். வீட்டில் கசப்பு ஏற்படுகிறது. மீண்டும் சிறை. மீண்டு வந்து
ஒரு மகளுடன் வேறு இடத்திற்கு சென்று விவசாயம் செய்து பிழைக்கக் கிளம்புகிறான்.
விவசாய சடங்குகள், நம்பிக்கைகள், கிராமிய வாழ்க்கையின் அற்புதத் தருணங்களை
படத்தின் முற்பகுதியும், வறண்ட நிலமும், விவசாய நிலங்கள் அழிந்து போனக் கதைகளுமாய்
படம் நிறைந்திருக்கிறது.
அண்டை நாட்டுப்படங்களில் பங்களாதேஷின் ’‘ எறும்புக்கதை “ குறிப்பிடத்தக்கது.டாக்காவை அதன் அழுக்குத்தனத்தோடு
சரியாகக் காட்டியிருக்கும் படம்.நகரத்தின் புனித வாழ்க்கையும் நுகர்வு சார்ந்து
பழகும் மக்களின் இயல்பும் மித்து என்ற வேலையில்லாத இளைஞனை ரொம்பவும் பாதிக்கிறது.
எமெலெமில் சேருகிறான். ஓட்டை கைபேசி
வைத்திருக்கிறான். நிர்வாகம் நல்லதாக வாங்கச் சொல்ல புதியது வாங்கச்
செல்கிறான்.பழையதை விற்கும் ஒருவனிடமிருந்து பாதி விலைக்கு பெறும் அவனுக்கு அது ஒரு
நடிகையின் கை பேசி என்பது தெரிகிறது. அவள் கொண்டு வந்து கொடுத்து பணம் பெற்றுக்
கொள் என்கிறாள். அவள் தரும் அன்பளிப்பை மறுத்து எமெலெமில் சேரச் சொல்கிறான்.
அவளும் சேர்ந்து புகைப்படம் எடுத்து விளம்பரம் தர எமெலெமிற்கு வலு சேருகிறது.
அவளின் கைபேசியில் இருந்த வீடியோவை பதிவு செய்து வைத்திருப்பதாயும் தன்னுடன்
நட்பைத் தொடர்ந்தால் அதை வெளியிட் மாட்டேன் என்கிறான். அவளும் ஒப்புக் கொள்கிறாள்.
திரைப்படத்தில் நடிப்பது போல் பத்து நிமிடம் கணவன் மனைவியாக நடிக்க வேண்டும் என்ற
நிப்பந்தனையை அவள் ஏற்றாலும் பின் எரிச்சலுற்று துரத்தி விடுகிறாள். அவளின்
உதவியாளர் மூலம் வீடியோ பதிவானதைப் பெற முயற்சிக்கிறாள். வீட்டிற்குச் சென்று
மிரட்டுகிறாள். வீடு களேபரமாகிறது,
எமெலெமில்லும் சோதனை. கம்பனி மூடப்படுகிறது.முதலீட்டாளர்கள் பணம் கேட்டு
தொந்தரவு செய்கிறார்கள். வீட்டிற்கு வந்து தொல்லை தருகிறார்கள். நடிகையின் வீடியோ
தொந்தரவு வேறு. ஓடி ஒளிகிறான். நண்பனின் துணிக்கடையில் இரவு நேரங்களில் பெண் துணிபொம்மையுடன் படுத்துக் கொள்கிறான்.
தொந்தரவுகள் அவனை அலைக்கழிகின்றன. மன நிலை பிசகு ஏற்படுகிறது.அம்மா நான் பழையபடி
ஆகணும். பள்ளிக்குப் போகணும் என்று அரைக்கால் சட்டை, பை எடுத்து கிளம்புகிறான்.திருமணமாகாத
தங்கை “ அண்ணா, நீ தப்பிக்க நடிகிறாய்தானே . ஆமாம் என்று சொல் “ என்று கேட்டு
கதறுகிறாள்.எறும்பு உடம்பில் ஊறுவது போல்
அவனை பிரச்சினைகள் சூழ்ந்து அரித்துக் கொண்டிருக்கின்றன. மன நோயின் கூறுகளை அவனின் நடவடிக்கைகள் காட்டிக் கொண்டே
இருக்கின்றன.ஒரு இளைஞனை தடுமாற வைக்கிற எல்லாம் நடந்து கொண்டேஇருக்கின்றன.
துருக்கி திரைப்பட உலகம் நூற்றாண்டைத் தொட்டிருக்கிறது.. அதை ஒட்டிய பத்துத் சிறப்புத் திரைப்படங்களின் காட்சிகள் இருந்தன.குறைந்த அளவுப்படங்களே
எடுக்கப்படுகின்றன. அரசு உதவு, அய்ரோப்பிய நாடுகளின் உதவியால் சமீப ஆண்டுகளில்
படங்களின் எண்ணிக்கை அதிகரிட்திருக்கிறது. “சைலண்ட் னைட்” ஒரு இளம் பெண்ணின் முதல் இரவுக்கு முன்
அவளுக்கான சடங்குகளுடன் படம் ஆரம்பிக்கிறது. முதலிரவு அறைக்குள் செல்பவளுக்கு
அதிர்ச்சி. கணவனானவின் முதிய தோற்றம். குண்டு தொந்தி. பயந்து விடுகிறாள. அவன் நகை
போடுகிறான்.”நிறைய
நகை போட்டேன். நகைக்கடையையா கொண்டு வர முடியும் “
வார்த்தைகளால் அவளின் அழகை வர்ணிக்கிறான்.
ஆனல் அவள் அவனை தவிர்க்கிறாள்.அவளிடம் குழந்தைத் தனம் மேலிடுகிறது. நேரம்
போக்குவதற்காய் சிறுசிறு விளையாட்டில் ஈடுபடுகிறாள். அவனைப் பார்த்து பயமாக
இருக்கிறது என்கிறாள். அவன் மீசையை எடுத்து விட்டு வருகிறான். அவளுக்கு
சிரிப்பு.அவனுடன் படுக்கையில் இருப்பதை தவிர்க்கிறாள். காலையில் படுக்கை
விரிப்பில் அவர்கள் உறவு கொண்டதற்காய்
இரத்தக் கறை இருக்கவேண்டும். தவிர்த்தால் பெரும் விமர்சனமும் பழியும் வந்து
சேரும் என்று பயப்படுகிறாள். அவன் தன்
நிலைமையைச் சொல்கிறான். சிறையிலிருந்து
வருபவனுக்கு அம்மாவும் மற்றவர்களும் சேர்ந்து கல்யாணம் செய்து வைக்கிறார்கள். குடும்பப் பெருமைக்காக கொலை
செய்து விட்டு சிறைக்குப் போனவன். குடும்பம், குலப்பெருமைக்காக வீட்டில்
உள்ளவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு இந்த முதிய வயதில் வந்து நிற்பவன்.விடியல்
அவனுக்கு இன்னும் அகவுரவத்தைக் கொண்டு
வந்து விடும். கதறுவது போல் எல்லாவற்றையும் சொல்கிறான். அவள் மெல்ல மெல்ல இணங்கி வருவதாகச் சொல்கிறாள். விடியும் நேரம் வந்து விட்டது.
யாராவது வந்து கதவைத்தட்டி கேட்பார்கள். இரு முதிய பெண்கள் தூரத்திலிருந்து
கதவைத்தட்ட வந்து கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கிச் சப்தம் அறைக்குள்ளிலிருந்து
கேட்கிறது.இறந்தது. அவனா அவளா.. இருவருமா.
” பேர் கிரவுண்ட் அட்ரேசன் “ என்ற படம் கேளிக்கைப் பொருட்காட்சி ஒன்றை
மையமாகக் கொண்டு சுழல்கிறது, அவள் எப்பப்டியோ வாழ்க்கையில் வஞ்சிக்கப்பட்டவள்.
அம்மாவைப் பார்த்தே 7 வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு ஆணை நம்பி ஏமாந்தவள்.
பொருட்காட்சியில் பாடுவது, சிறுஅளவில் நடனமாடுவது
என்று வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவள். அவளின் பாதுகாவலனாய் இருப்பவன்
யாரும் அவளை அண்டாமல் பார்த்துக்கொள்கிறான். பொருட்கட்சியில் நடனங்கள்,
ராட்டாந்தூரிகள், பலூன் சுடுதல், என்று
வகைவகையான கேளிக்கை அம்சங்கள் உண்டு. பக்கத்தில் குழி தோண்டும் வேலையில்
ஈடுபட்டிருப்பவன் அவள் மேல் மையல் கொள்கிறான்.அவளை அடிக்கடி வந்து சந்திக்கிறான்,
பலரின் கண் அவன் மேல் விழுகிறது. வேலை செய்ய்யும் இடத்தில் மன உளைச்சல், அவளைச்
சந்திக்க ஏங்கும் தன்மை அவனை ஆலைக்கழிக்கிறது. இரவுகளில் படகில் ஏற்றிச் சென்று
பொழுதைக்கழிக்கிறன்.அவள் அம்மா, வாழ்க்கை சீரழிந்த்து பற்றியெல்லாம்
சொல்கிறாள்.வேலையை விட்டு விடுகிறான். அவளை எங்காவது சென்று விடலாம் என்று
வற்புறுத்துகிறான். பொருட்காட்சி காலமும் முடிகிறது. அவளின் பாஸ் அவளை தனியே விட்
விருப்பமில்லாமல் இருக்கிறான். அவன் பின் தொடர்கிறான். பாஸ் மனமிரங்கி அவளை
விட்டுவிடுகிறான். ஆனால் அவள் லாரியிலிருந்து இறங்கியவள் அவனுக்காக்க் காத்திருக்காமல்
தனி வழியே செல்கிறாள். கூத்தாடிப்பெண்ணான அவள் தனக்கு அந்த இளைஞன் பொருந்தி
வருவானா என்ற சந்தேகம் மேலிட அவள் பாதையைத் தேர்ந்தெடுக்கிறள்.பொருட்காட்சியில்
வாழும் மக்களின் நிலை, அவர்களின் பொருளாதாரம் சீரழிந்து வருவது, தொலைக்காட்சி
போன்றவற்றின் பாதிப்பால் கூட்டம் குறைந்து வருமானம் குறைவது போன்றவை முக்கிய
அம்சங்களாகக் காட்டப்பட்டுள்ளன.மின்சார விளக்குகள்,கவர்ச்சிகரமான உடைகள்,
கவர்ச்சிகரமானத் தோற்றத்தில் பொருட்காட்சி மிளிர்ந்தாலும் அங்கு அதைத் தொழிலாகச்
செய்யும் மனிதர்களின் உணர்ச்சிப் போராட்டமாக சொல்லப்பட்டிருக்கிறது. “ நான் அவனில்லை “ என்ற படத்தில் அவன் நடுத்தர வயதைக் கடந்தவன் உணவகம் ஒன்றில் பாத்திரங்களைக் கழுவும்
வேலையில் ஈடுபடுகிறவன்.நண்பர்களுடன், பெண்களுடன் சுற்றுவது.சோம்பியிருப்பது என்று
பொழுதை போக்குவான். ஒரு பெண்ணை நண்பர்களுடன் கூடிச் சென்று புணர்கையில் தப்பிக்க
இயலாமல் காவல்துறையினரிடம் சிக்கி சிறையில் அடைபடுகிறான். தன்னுடன் வேலைசெய்யும்
இன்னொரு பெண்ணின் சினெகிதமும், தொடர்பும் ஏற்படுகிறது. அவள் கணவன் பல
குற்றங்களுக்காக சிறை சென்றவன்.நண்பர்கள்
அவளை வேசி, தந்திரக்காரி என்று எச்சரிக்கை செய்கிறார்கள். பிறகு அவளை அந்தக்
கோலத்தில்தான் அவன் பார்க்கிறான். அவள் வேறு என்கிறாள். சிறையில் இருக்கும்
கணவனின் சாயல் முகத்தை சவரம் செய்து , முடி வெட்டிக் கொள்ள அவனுக்கும் வந்து
விடுகிறது.அவளும் இருவராக இருக்கிறாள் , அவனும் இருவராக இருக்கிறான். கணவ்ன்
சிறையிலிருந்து தப்பித்து வந்து தங்கும் விடுதியில் இவன் போய் பார்க்க மீண்டும் காவல் துறையினரிடம்
சிக்கிக் கொள்கிறான். ஒருதரம் அவள் தொலைக்காட்சியைப் பார்த்தபடி சொல்கிறாள்: ” இதில் வரும் பிம்பங்கள் பொய். செயற்கை போலியாய் புனைந்தவை “ என்கிறாள். அவர்களது
வாழ்க்கையும் அது போல் தான் ஆகிவிடுகிறது. இரட்டையர்களாய் அவர்கள் இருவரும்
தென்படுகிறார்கள்.எல்லோருக்கும் இப்படி இரட்டை வேசம் எப்படியோ அமைந்து விடுகிறது.
அவன்
சூப்பர் மார்கெட் ஒன்றில் பொருட்களின் விற்பனைக்காக பாடுபவன். ஓய்ந்த நேரங்களில்
நக ராட்சியின் குழந்தைகளுக்கு பாடல், இசை இலவசமாய் கற்றுக்கொடுப்பவன். இன்னொரு
நகரத்தில் ஒரு பாடகர் குழு தேவைப்படுவதால் அங்கு செல்கிறான். சூப்பர் மார்க்கெட்
பாடகி பெண்ணும் சேர்ந்து கொள்கிறாள். அவனுக்கு தலை விக் ஒன்று தேவை. அதை
பராமரிக்க, முக மயிர் அழகுக்காக பார்பர் ஷாப்காரன் ஒருவன் வந்து போகிறான். அவளுடன்
அவன் நட்பாகிறான். அவனின் லட்சியமெல்லாம் நகரத்தில் ஒரு பார்பர் ஷாப் வைக்க
வேண்டும் என்பதுதான். போதுமான வரவேற்பில்லை என்று அவனுக்கு வருமானம் இல்லாமல் போக
இருக்கும் காரை விற்று விட்டு அம்மாவிற்கு உடம்பு சுகமில்லை என்று
விடுதிக்கட்டணம், பாடகிக்கான சம்பளம் தந்து விட்டு கிளம்பி விடுகிறான். புது
பார்பர் ஷாப் கனவில் பாடகியும் இருக்கிறாள் புது நண்பனுடன். பொருளாதார நில்யின்
சீர்கேடுகள் ஆணை பாதித்து ஒரு பாடகனை முடக்கிப்போடுவதைப் பார்க்கலாம். முந்திய
படத்து நாயகனும் இது போல் தான் தனித்து விடப்பட்டவன். ஆனால் அவனுக்குப் பெண்
துணையும் , கேளிகையும்தேவைப்படுகிறது.இவன் பாடகனாக இருந்தாலும் முடங்கிப்
போகிறான். தனிமையை ரசிக்க வேண்டியதாகிறது இந்த “ யோகாட் ப்ளூஸ் “ படத்தில்.
சைலண்ட் நைட்டில் தனிமையைப் போக்கிக் கொள்ள நடுத்தர வயதைத் தாண்டியபோதில் திருமணம்
செய்து கொள்வதும் முதலிரவு அனுபவங்களும்
மோசமாகவே அமைகின்றன. பொருட்காட்சிப்படத்தில் பாஸ் குடும்பத்தை மீறி வேறு
பெண்களிடம் அதிகாரம் செலுத்துபவனாக இருக்கிறான். மோசமான பொருளாதாரத் தாக்கத்தை வெளிப்படுத்தும்
படங்களாக துருக்கிப் படங்கள் இருந்தன.அதனால் தனிமைப்படுத்தப்படும் ஆண்கள் அதிகம்.
அசையும் பிம்பங்களும் வண்ணங்களும் இயைந்து பார்வையாளனுக்கு தரும்
பல்வேறு அர்த்தங்களும் அனுபவ விரிப்பும் ரசனையுணர்வும் தரும் படங்களின்
நேர்த்திதான் படம் பார்ப்பதில் உள்ள சிரமங்களை மீறி ஆறுதல் தருகிறது. சத்தியமான
படங்கள் அந்த ஆறுதலை கலை ஒருமையிலும், ஆழத்திலும் வெளிப்படுத்துபவை.
subrabharathi@gmail.com
/ 8-2635 pandian nagar, tiruppur
641 602