இங்குதான் இருந்தது
கடல்.
கடல் தண்ணீரில்
கரைந்த
நம் நிர்வாண பிம்பங்களை உண்ட
கடல் மீன்களுக்குப் பித்தேறின.
அலைகள் கரையைத்
தொட்டு விலகும்போது
நமது உடல்களின் உவர்ப்பில்
கொஞ்சம் உப்பு கூடிவிடுகிறது.
அதே கடலருகில் சூரியனின்
ஆயிரம் ஆயிரம் கரங்கள்
நம் வேட்கையின் சுவர்களில்
நிறங்களைப் பூசியதைக் கண்டோம்.
கடற்கரையின் தீராத மணல் வெளி
நமது தீராத விருப்பங்களை
எவ்வளவு குடித்த பிறகும்
சுவடற்று இருந்தது.
கடலின் அவ்வளவு
சப்தத்தையும் மீறித்தான்
நான் உனக்கு
அந்த வாக்குறுதியைக் கொடுத்தேன்
இப்போது
ஒரு கோடைகாலத்தின்
வெப்பம் மிகுந்த
அறையாக மாறிவிட்ட
இங்குதான்
இருந்தது கடல்.
( மனுஷ்யபுத்திரன் )
“இந்த எடம் முந்தி கடலா இருந்திருக்குமுன்னு தோணுது”
அவன் ஜன்னலினூடே பார்வையைச் செலுத்தியபடி சொன்னான்.
முகத்தில் சட்டென ஏதோ ஒட்டிக் கொண்டது போல அழுந்தத் தேய்த்துக் கொண்டான்.
அவன் பார்வை வெகு தூரத்தில் நிலைத்திருந்தது.
வெறும் தலைகளை,
நிலத்தில் நகரச் செய்த மாதிரி மக்களின் நகர்வு இருந்தது.
வீதி முழுக்க மக்கள்.
எதையோ நோக்கி சரியாக நகர்வது போல நகர்ந்து கொண்டிருந்தனர்.
“இந்த எடம் எப்பிடி கடலா இருந்திருக்கும்.
கடலுக்கும் இந்த ஊருக்கும் ரொம்ப தூரம்”
என்றாள் அவள்.
புடவையை கட்டிலின் மேல் விரித்து ஒரு பார்வை பார்த்தாள்.
புடவை கட்டிலுக்கு துணியொன்றைப் போர்த்தி விட்டது போலிருந்தது.
“கடல் வந்து என்னென்னத்தோ கொண்டு போறாதப் பத்தி கேள்விப்பட்டிருக்கிறோம்.
சுனாமின்னு பெரிசு பெரிசா அலையெல்லா அடிக்கறதெ டிவியிலெ பாத்திருக்கன்.
அந்த மாதிரி அலையெல்லாம் வந்து எல்லாத்தையும் சுருட்டிட்டுப் போகணும்.
இந்த லாட்ஜை கூட”
“செரி…
செரி… ஆரம்பிச்சுட்டே போலிருக்கு.
கடல்ன்னு ஏதோ நெனப்பு வந்தது.
சொன்னேன். இந்த ஊரே கடல் உள்ள ஊரா இருந்தா எப்பிடி இருக்கும்.”
“நல்லாத்தா இருக்கும்.
கடல் வேண்டாம்.
குளம் இருக்கான்னு பாருங்க.
வாளாங்குளம்ன்னு ஒண்ணு இருந்திருக்கு இங்க.
இப்ப அது கூட பேருக்குத்தா இருக்கும்.
அந்தக் குளத்து மேல மாடிக்கட்டிடங்க வந்து கெடக்கும்.
ஆமா இந்த ஊருக்கு ஏன் அடிக்கடி கூட்டிட்டு வர்றீங்க.
வேற எடம் கெடைக்கலியா…”
“சட்டுன்னு ரெண்டு மணி நேரத்தில வந்தர்லாம்.
கோயில் உள்ள ஊரு.
லாட்ஜ்க நிறைய இருக்கும்.
எடம் கெடைக்கும் சிரமம் இருக்காது…”
“செரி அடுத்த தரம் நிஜமாவே கடல் இருக்கிற ஊருக்குப் போலாம்…”“நான் ரெடி.
உனக்குதா கஷ்டம்.
என்னன்னு சொல்லிட்டு அவ்வளவு தூரம் வருவே…”“ஆமா…
அது பெரிய சிக்கல்தா.
வேண்டா. இந்த ஊர்தா சௌகரியம் போலிருக்கு”
அவளுக்கு அடுத்த வாரம்
கொடுமணல் தங்கம்மன் கோவில் போக வேண்டிய வேலை ஞாபகம் வந்தது.
அதுவும் ஆற்றங்கரையில்தான் இருக்கிறது.
அங்கும் வெள்ளம் வந்த போதெல்லாம் கோவில் மூழ்கித்தான் போயிருக்கிறது.
ஊரில் எல்லோரும் போவார்கள் வேறு வழியில்லாமல் பொங்கல் வைப்பதற்காக வேலைக்கு துணையாளாகப் போகவேண்டியிருக்கும்.
படுக்கை மீது இருந்த புடவையின் பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இளம் பச்சை நிறத்தில் பூக்கள் இருந்தன.
உள்ளங்கை அளவு ஒவ்வொரு பூவும் விரிந்திருந்தது.
பச்சை நிறத்தில் பூ என்பது அதிசயமாக இருந்தது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.
பூவின் ஓரத்தில் வெள்ளை கீற்றுகள் இருந்தன.
இந்தப் புடவை உடுத்தும் போதெல்லாம் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைப்பாள்.
ஆனால் வெள்ளை நிற ஜாக்கெட் அவளிடம் இல்லை.
வாங்கலாமா என யோசிப்பாள்.
எண்பது அளவு கொண்டது முப்பது ரூபாய்க்கும் குறைவானதுதான்.
ஆனால் வாங்கினதில்லை.
வெள்ளை ஜாக்கெட் ஏனோ உறுத்துவது போலிருக்கும்.
பழுப்பு நிறம் சுமாராக இருக்கும்.
வெள்ளை என்றால் உறுத்தும்.
“என்ன முண்டச்சி போடறாதப் போட்டுட்டேன்னு”
யாராவது கேட்கக் கூடும்.
முண்டச்சி என்பவள் புருஷன் செத்துப் போகிறவள் மட்டுமா.
புருஷன் இல்லாதவளும் முண்டச்சிதான்.
அப்படியென்றால் அந்த வசவு சொல்லுக்கு அவள் பொருத்தமுடையவளாக இருப்பதாகவே அவள் நினைப்பாள்.
“என்ன பெரிசா யோசனையில இருக்கற மாதிரி இருக்குது”“வெள்ளக் கலர் ஜாக்கெட் போடறதில்ல.
வாங்கலாமான்னு நெனப்பு வந்துச்சு.
அப்புறம் முண்டச்சி மாதிரி என்ன வெள்ளையில உடுத்திட்டுன்னு ஞாபகம் வந்துது.
எனக்கு நானே முண்டச்சின்னு சொல்லிட்டேன்.
முண்டச்சி…”
“என்ன அபச குணமா பேசிட்டு…”
“புருஷன் இல்லாதவ மட்டுமில்லியா முண்டச்சி. புருஷன் செத்துப் போனவள் செறியானா முண்டச்சி. நாங்கெல்லா பாதி முண்டச்சிகளா… பாதியோ முழுசோ எப்பிடியோ முண்டச்சிக… செரி என்ன அபசகுணமான்னு கேட்டுட்டு பொம்பளைக மாதிரி பேசிட்டு…”
“புருஷன் இல்லாதவ மட்டுமில்லியா முண்டச்சி. புருஷன் செத்துப் போனவள் செறியானா முண்டச்சி. நாங்கெல்லா பாதி முண்டச்சிகளா… பாதியோ முழுசோ எப்பிடியோ முண்டச்சிக… செரி என்ன அபசகுணமான்னு கேட்டுட்டு பொம்பளைக மாதிரி பேசிட்டு…”
“என்னமோ மனசிலே வந்துது சொல்லிட்டேன்.”
புடவையை நாலாய் மடித்துப் போட்டாள்.
தலையணை ஒன்றின் மேலுறை போல் அது கிடந்தது.
பக்கத்தில் இருந்த தலையணையின் ஓரம் கிழிந்திருந்தது.
அதன் உள் பகுதியிலிருந்த அழுக்கு அபரிமிதமாய் வெளித்தெரிந்தது.
படுக்கையை நீவி விட்டுக் கொண்டாள்.
இன்னொரு தலையணை படுக்கை விரிப்பின் அடியில் இருந்தது.
“என்ன இன்னிக்கு டி.வி.
இருக்கற ரூம் வேண்டானுட்டே.”“எதுக்கு அதுக்கு அம்பது ரூபா எக்ஸ்ட்டிரா செலவுன்னுதா”“பெரிசா மிச்சம் புடிக்கறே…”“ஏதோ வீண் செலவு வேண்டான்னு…”“செரி மத்தியானம் சினிமாவுக்குப் போலாமா…”“அதுவும் வேண்டா…”
“செலவை ரொம்பவும் கொறச்சுக்கறே…”
“ஆமா அது எதுக்குன்னுதா. வெளிய போறப்போ யார் கண்ணுலே நாம பட்டிருவம்ன்னு பயந்திட்டு இருக்கணும். தியேட்டர்ல படம் போட்டதுக்கப்புறம் சாதாரணந்தா. ஆனா வெளிச்சமா இருக்கறப்போ அதே பயந்தா… அதுக்கு பதிலா ரூம்ல கெடந்தா தூங்குண மாதிரியுமாச்சு. ரெஸ்ட் எடுத்த மாதிரியுமாச்சு…”
“ஆமா அது எதுக்குன்னுதா. வெளிய போறப்போ யார் கண்ணுலே நாம பட்டிருவம்ன்னு பயந்திட்டு இருக்கணும். தியேட்டர்ல படம் போட்டதுக்கப்புறம் சாதாரணந்தா. ஆனா வெளிச்சமா இருக்கறப்போ அதே பயந்தா… அதுக்கு பதிலா ரூம்ல கெடந்தா தூங்குண மாதிரியுமாச்சு. ரெஸ்ட் எடுத்த மாதிரியுமாச்சு…”
“ ரயில்வே ஸ்டேசன் ரோட்லே பணியாரம் ஒண்னு விப்பாங்க அத வாங்கிச் சாப்புட வேண்ணா போலாம்”
அவளுக்கு சலங்கைப் பணியாரம் ஏனோ ஞாபகம் வந்தது.
பசைப்பயிறு, ஏலமாவு,
கருப்பட்டி கலந்து கல்யாண வீடுகளில் போடுவார்கள்.
வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்கு போடும் முதல் பலகாரம் சலங்கைப் பணியாரம்.
அதை அவள் விரும்பிச் சாப்பிடுவாள்.
கடலை மாவை அள்ளி அள்ளி வைத்து நெய்யூற்றிச் சாப்பிட்டிருக்கிறாள்.
அவன் நான்கைந்து முறை கழிவறைக்குச் சென்று வந்து விட்டான்.
படுக்கைக்கும் கழிவறைக்கும் அல்லாடுபவனாக இருந்தான்.
” மூங்கில் கொட்டத்திலே கெடக்கற மாடு மாதிரி கெடக்கீறே
” என்றாள். ” கை மருந்து வேணும்”
“ அதுதா எல்லா மருந்தும் குடுத்தாச்சே
“ “ தீரலே..” “ மாட்ட்டுக்கு நோவுன்னா பிரண்டை,
பெருங்காயம், விளக்கெண்ணெய் போதும்.
உங்க நோவுக்கு வேறெ என்னவெல்லாமோ வேண்டியிருக்க்ல்ல..”
அவள் எழுந்து நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டாள்.
கம்பி துருவின் கசடு அவளின் கைகளில் ஒட்டிக் கொண்டது.
ஒரு வகை செவ்வகத்தனம் அந்த ஜன்னலில் இருந்தது.
சிறு சிறு செவ்வக வடிவங்களை அடைத்துப் போட்டு பெரிய செவ்வக வடிவத்தில் ஜன்னலை செய்த மாதிரி இருந்தது.
இருநூறு அடி தூரத்தில் கூம்பு வடிவலாக ஒலி பெருக்கி முனை இருந்த.
ஏதோ மசூதியின் மாடியாக இருக்கலாம்.
ஓதும் சத்தம் அவ்வப்போது கேட்கும் நேரத்தை அறிந்து கொள்வதற்கு அந்த ஓதும் சத்தம் உதவலாம்.
இப்போது என்ன நேரமிருக்கும்.
வெயிலின் வெளிச்சம் நேரத்தை கணக்கிடுவதற்கு ஏதுவாக அவளுக்கு இருக்கவில்லை.
“நேரம் என்ன…”
“என்ன பசியாகுதா…”
“இல்லே… தெரிஞ்சுக்கலாமுன்னு…”
“டீ வேண்ணா சொல்லட்டுமா…”
“வேணாம். ரூம் பசங்களோட பார்வையே செரியில்லை. என்னமா அவங்க பார்வை இருக்குது. உடம்பைத் துளச்சுட்டு போயிருது…”
“என்ன பசியாகுதா…”
“இல்லே… தெரிஞ்சுக்கலாமுன்னு…”
“டீ வேண்ணா சொல்லட்டுமா…”
“வேணாம். ரூம் பசங்களோட பார்வையே செரியில்லை. என்னமா அவங்க பார்வை இருக்குது. உடம்பைத் துளச்சுட்டு போயிருது…”
“நீயெதுக்கு அப்பிடியெல்லா நெனச்சுக்கறே…
அவங்க சாதாரணமாத்தா பாக்கறாங்க…”
“என்னமோ எனக்கு அப்பிடி எண்ணம். ஆமா… ஒண்ணு தெரியுமா. நம்ம ரூம்ல மேல பெருக்கல் குறி போட்டிருந்துச்சு. என்னமோ பயமா இருந்துச்சு. துணிஞ்சு ரூம் பையன் கிட்ட கேட்டுட்டேன். எதுக்கு பெருக்கல் குறின்னு…”
“என்னமோ எனக்கு அப்பிடி எண்ணம். ஆமா… ஒண்ணு தெரியுமா. நம்ம ரூம்ல மேல பெருக்கல் குறி போட்டிருந்துச்சு. என்னமோ பயமா இருந்துச்சு. துணிஞ்சு ரூம் பையன் கிட்ட கேட்டுட்டேன். எதுக்கு பெருக்கல் குறின்னு…”
“என்ன சொன்னான்.”
“எனக்கு பயமாத்தா இருந்துச்சு.
இப்பதா என்னென்னமோ நியூஸ் வருதேன்னு.
ரூமுக்குள்ள ஏதாச்சும் கேமரா வெச்சு நம்மள படம் புடிப்பாங்களான்னு…”
“புளு பிலிம்…”
“ஆமா அதுதா…”
“புளு பிலிம்…”
“ஆமா அதுதா…”
“அதெல்லா காசு உள்ளவன் பெரிய பணக்காரங்கன்னு தெரிஞ்சுட்டு மிரட்டறதுக்காக.
நம்ம மாதிரி எரநூறு ரூபாய்க்கு வாடகைக்கு வர்ரவங்கெல்லா சாதாரணமாத்தா இருப்பாங்க.
செரி ரூம் பாய் என்ன சொன்னான்…”
“என்னமோ சினிமா சூட்டிங்குன்னு வந்தவங்க ரூம் அடையாளம் தெரியறதுக்காக அப்பிடி பெருக்கல் குறி போட்டு வச்சிருப்பாங்களாமா.
சூட்டிங்காரங்க காலையில நேரத்தில எழுப்பறது,
காபி குடுக்கறதுண்ணு அடையாளம் பெருக்கல் குறியாமா…”
அவன் பெருமூச்சு விட்ட மாதிரி படுக்கையில் மல்லாந்து கிடந்தான்.
ஓரம் கிழிந்திருந்த தலையணையை தலைக்கு மேல் உயர்த்திப் பார்த்தான்.
“தலையணைன்னு ஸ்பெஷல் உபயோகம் இங்கதா…”
அவள் பேசாமல் மூடியிருந்த கதவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வகை அழுக்குத்தனம் கதவு முழுவதும் அப்பியிருந்தது.
“என்ன பேச மாட்டேங்கறே…”
“நீங்கதா உபயோகம்ன்னு சொல்லீட்டீங்களே. இதையெல்லா யார்தா கண்டு புடுச்சாங்களோ…”
“பெரிய யோசனைதா…”
“ஆமா கதவு சாவி ஓட்டையை எப்பவும் அடப்பீங்களே…”
“ஆமாமா… மறந்திருச்சு…”
“நீங்கதா உபயோகம்ன்னு சொல்லீட்டீங்களே. இதையெல்லா யார்தா கண்டு புடுச்சாங்களோ…”
“பெரிய யோசனைதா…”
“ஆமா கதவு சாவி ஓட்டையை எப்பவும் அடப்பீங்களே…”
“ஆமாமா… மறந்திருச்சு…”
எழுந்தவன் அவனின் சுருண்டு கிடந்த ஜட்டியை எடுத்து கதவு சாவி ஓட்டைப் பகுதியில் மாட்டினான்.
சுருங்கிப் போன பழம் மாதிரி அது தொங்கியது.
“நீ வீடியோ அது இதுன்னு பயப்படுவியே அது மாதிரிதா.
எனக்கென்னமோ இந்த சாவி துவாரம் வழியா யாரோ பார்க்கற மாதிரி பிரம்மை இருக்கும்.
அதுதா…”
“உங்க ஜட்டி எதை எதையோ நெனப்பூட்டுது…”
“எதை…”
“வேண்டா.
நீங்களே யூகிச்சுக்குங்க.”
“ஜட்டிக்குன்னு இப்பிடியொரு உபயோகம் இருக்கு பாருங்க…”
“ஆமா…
உன்னோட ஜட்டி என்ன இவ்வளவு நசிந்து கெடக்குது…
நசிஞ்சு போன ஜட்டியை யூஸ் பண்றது நல்லதில்லே.
இடுப்பைச் சுத்தி புண்ணு புண்ணா வரும்.
நசிஞ்சு பழசாகிப் போனதை தூக்கி எறிஞ்சிரு…”
“அது ரொம்பவும் பழசுன்னு இல்லே.
பிரவுண் கலர்ல அது அப்பிடித்தா இருக்கும்.”
அவள் படுக்கையின் ஓரத்தில் சாய்ந்து கொண்டாள்.
படுக்கையின் ஓரத்தில் சிறு கீற்றை கீறிவிட்டுப் போன மாதிரி கிடந்தாள்.
வாகனங்களின் இரைச்சலின் உச்சமாய் கிறிச்சிடல்கள் இருந்தன.
அறைக்கு வெளியே யாரோ தடதடவென்று ஓடுவது போலிருந்தது.
“என்ன சட்டுன்னு மொகம் வெளிருது…”
“ஒண்ணுமில்ல…
வெளிய என்னமோ சத்தம்…”
“இது பகல்தானே…
என்ன சத்தமா இருந்தா நமக்கென்ன.
இதுவென்ன ராத்திரியா.
நீங்க எல்லாத்துக்கும் பயப்படறீங்க.
சின்னதா சாமான்க வுழுந்தா கூட பயப்படறீங்க…”
“என்னமோ பயம்…
போன தரம் வந்தப்போ பயத்திலெ ஓடி வந்த மாதிரி இருந்துச்சு…”
“போன தரம் ஒண்ணும் செரியில்லே…
ரொம்பவும் டென்ஷனாத்தா இருந்தீங்க…
டென்ஷன் அந்த ஒரு நாள் முழுக்கவும் இருந்துச்சு.”
“ஒரு சின்ன சண்டை…”
“என்ன…”
“சம்பந்தமில்லாததுதா.
டவுன்ல இருந்து பத்து பதினஞ்சு பேர் வந்திருந்தாங்க.
வக்கீல், எழுத்தாளர்,
என்ஜி ஒன்று சொன்னாங்க.
நொய்யல் பகுதி முழுக்க பாத்துட்டு பாதிக்கப்பட்ட கிராமம்ன்னு நம்ம ஊருக்கு வந்தாங்க.
என்னென்ன பாதிப்புன்னு கேட்டிட்டிருந்தாங்க.
இது மாதிரி மாசத்துக்கு நாலு பேர் வந்து சாயத் தண்ணி வர்ரதுனாலே என்ன பாதிப்புன்னு கேட்டுட்டு எழுதிட்டு போறாங்க.
அவ்வளவுதா. கோர்ட் கேஷ்ன்னு எவ்வளவு பாத்தாச்சு.
ஒண்ணும் பிரயோஜனமில்லை.
வர்ரவனுக எழுதிட்டு போட்டோ புடுச்சிட்டு போறதோட செரி…
வந்தவங்க என்னை என்ன என்ன பிரச்னைன்னு துளச்சு துளச்சு கேட்டாங்க.
எரிச்சலா போச்சு.
வயசு நாப்பதாகுது.
இந்த ஊர்ல வெள்ளாமைக்கு தண்ணி இல்லெ.
சாயப்பட்டறை தண்ணி அறுபது எழுபது மையிலுக்கு அந்தப்புறம் இருந்து வந்து நெலத்தை நாசம் பண்ணிடுச்சு.
இந்த ஊர்ல எந்த சம்சாரியை நம்பியும் பொண்ணு குடுக்க மாட்டீங்கறானுங்க வெளியூர்காரனுக.
இந்த ஊர்ல வந்து எங்க பொண்ணு எப்பிடி பொழைக்கும்.
சாயத் தண்ணி பூமி.
நெலம் கெடந்தாலும் விவசாயத்துக்கு லாயக்கில்லே.
எவனும் பொணணு தரமாட்டேன்கறான்.
நாப்பது வயசில கல்யாணம் ஆகாமெ நிக்கறன் பாரு.
இதுதா பிரச்னை இதுதா கொடுமைன்னு கத்திட்டேன்…”
“உங்க பிரச்னையை சொல்லிட்டீங்க போல”
“அதுல ஒருத்தன் கிண்டலா என்னப் பாத்தான்.
அடுத்த தரம் நாங்க வர்ரப்போ உங்க வயசில ஒரு பொண்ணெ கூட்டிட்டு வர்ரோம்ன்னான்.
எனக்கு கோபம் திட்டிட்டேன்.
அப்புறம் அவங்க சாரின்னு மன்னிப்பு கேட்டாங்க.
நான் சமாதானமாகலே.
டென்ஷன். அன்னிக்குத்தா இங்க அந்த டென்ஷனோட வந்தன்”
“உங்க பிரச்னையை சொல்லிட்டீங்க.
அவங்க வேற எதிர் பார்த்திருப்பாங்களோ என்னமோ…”
“என்ன கெரகமோ…”
படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்தவன் மாதிரி மேஜை அருகில் சென்றான்.
அழுக்கடைந்திருந்த பிளாஸ்டிக் ஜக் மூடியைத் திறந்தான்.
தண்ணீர் நெளிந்து ஆட்டம் காட்டியது.
“எந்த ஊருக்குப் போனாலும் தண்ணீ குடிக்க பயமா இருக்கு…”
“நம்ம ஊரு சாயத் தண்ணீ இங்க எங்க வருது.
குடிங்க…” அவன் பிளாஸ்டிக் ஜக்கை உயர்த்திக் கவிழ்த்தான்.
நீர் பொலேரென்று வாயில் விழுந்து சிதறியது.
பனியனின் மேல்புறம் நீர் வழிந்து நனைத்தது.
“எங்க ஊர்ல இந்த சாயத் தண்ணி பிரச்னையில பொண்ணு வாங்க முடியாமெ கல்யாணம் ஆகாதவங்க இருபத்தாறு பேர் இருக்கறம்.
நாங்க ஒண்ணா சேர்ந்து ஒரு சங்கம் அமைக்கலாம்ன்னு இருக்கம்.”
“செரிதா…
நானும் ஒரு சங்கத்தில இருக்கணும்.
எதில சேர்றது.”
“நீங்களும் ஒரு சங்கம் ஆரம்பிங்க.”
அவன் வாய்விட்டு சிரித்தான்.
கண்களின் ஓரத்தில் நீர் கசிவு மினுமினுத்தது.
உடம்பைச் சாய்த்து படுத்தான்.
மின் விசிறி ஓடும் கூரையைப் பார்த்தான்.
அவளுக்கு திருமணம் செய்து கொடுத்த போது கிராம நிலத்தைக் காட்டி திருமணம் நடந்தது.
“ஒரே பொண்ணு.
வர்ரவனுக்குதா இந்த நெலம்.”
ஆனால் சில ஆண்டுகளில் சாயத் தண்ணீர் பூத்த நிலம் விவசாயத்திற்கு பயனில்லாமல் போய்விட்டது.
நிலத்தை வாங்குவார் யாருமில்லை.
தரிசாகிக் கொண்டிருந்தது.
நிலத்தை விற்று வியாபாரம் செய்யலாம் என்று நினைத்திருந்த அவன் எரிச்சலுற்று அவளுடன் சண்டை போட்டு நொய்யல் கிராமத்திற்கு அனுப்புவான்.
நிலம் வாங்க யாருமில்லை.
அவளும் ஊரிலேயே தங்கிவிட்டாள்.
கட்டை விரலில் இருந்த பச்சையைப் பார்த்துக் கொண்டாள்.
சின்னதாய் பூ ஒன்று பூத்திருந்தது.
நெற்றி, கன்னம்,
கைகள், கால்கள் என்று பாட்டி பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறாள்.
பூ, தேள்,
கிளி, மயில்,
மீன் என்று பல உருவங்கள் அவள் உடம்பில் மிதக்கும்.
“எங்களுக்கு ஒரு சங்கம் வெச்சா என்ன பேரு வைக்கலாம்”
“கணவன் விரட்டிய மனைவிகள் சங்கம்”
“செரிதா…”
“எங்க சங்கத்துக்கு ஒரு பேரு சொல்லு…”
“பொண்ணு கொடுக்காததால் பிரமச்சாரிகளானவன்கள் சங்கம்”
“பேரு ரொம்ப பெரிசா இருக்குது.”
“நொய்யல் பிரம்மச்சாரிகள்”
“சுருக்கமா இருக்கு…”
படுக்கையில் இருபுற ஓரங்களில் அவர்கள் தனித்தனியே கிடந்தார்கள்.
அவள் அணிந்திருந்த நைட்டி பாதிக் கால்கள் வெளியே தெரியுமாறு விலகி சுருண்டிருந்தது.
அவன் கைகளை நீட்டி அவளின் முதுகைத் தொட்டான்.
“சாயங்காலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போலாமா…”
“உம்…”
“முந்தியெல்லா நாம இங்க வந்தப்போ ரயில்வே ஸ்டேஷன்ல போயி உக்காந்திட்டிருப்போம்.
இருட்டுன பொறகு அங்கிருந்து மலையைப் பாக்கறது அழகா இருக்கும்.
எனனமோ சீரியல் லைட் போட்ட மாதிரி மலையில லைட்டுகளெல்லா எரிஞ்சிட்டிருக்கும்.
அதையைப் பாத்து பேசிட்டிருப்போம்.”
“இப்போ அது கூட அலுத்துப் போச்சு.
ஒரு தரமாச்சும் சண்முக நதி போகணும்…”
“இப்ப அது நம்ம ஊர் ஆறு மாதிரி சாக்கடையாத்தா ஓடிட்டிருக்கும்.
சண்முக நதி போறதுன்னா மினி பஸ்ல போகணும்.
இல்லே குதிரை வண்டி புடிக்கணும்…”
“வேண்டா…
வெளிய போகவே சங்கடமாயிருக்கு பயமாவும் இருக்கு…”
அவனின் கைகள் அவனின் முதுகைத் தொட்டு பரவ ஆரம்பித்தது.
அவள் சிறு கூச்சத்துடன் உடம்பை
நெளித்தாள். உடம்பை திருப்பி அவன் முகம் இருக்கும் திசையில் புரண்டாள்.
உருண்டு கட்டிலைவிட்டுப் போய்விட வேண்டும் போலிருந்தது.
“இது கூட அலுத்துப் போச்சு.
தேவையா இருந்தாக் கூட அலுத்துதா போச்சு”
என்றாள். அவன் கைகளை மெல்ல சுருக்கிக் கொண்டான்.
கைகளை விரித்து உடம்பை முழு படுக்கையிலும் கிடப்பது போல செய்தான்.
ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல பெருமூச்சு விட்டான்.
அறையைத் திறந்து வெளியில் வந்தான்.
காரிடாரில் ஒருவன் குச்சி முனையில் கட்டியத் துணியில் தரையைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
தரை பளபளவென்று மினுங்கியது.
எதிர் அறை முகப்பில் இரண்டு பிளாஸ்க்குகள் இருந்தன.
நாலைந்து அறைகள் தாண்டிய முகப்பில் பாட்டில்கள் தென்பட்டன.
சோடா பாட்டில்கள்,
மிரைல் பாட்டில்கள்…
மது பாட்டில்கள் கூட இருக்கலாம்.
மது பாட்டில்களின் வெவ்வேறு விதமான வடிவங்களால் அவை மது பாட்டில்கள் என்று கண்டுபிடிப்பது சிரமம்தான்.
மெல்ல அடுத்த முனைக்குச் சென்றான்.
விடுதியைத் தாண்டிய இடத்தில் பிரதான வீதி தென்பட்டது.
இரண்டு குதிரை வண்டிகள் ஆளில்லாமல் நகர்ந்து கொண்டிருந்தன.
ஏறத்தாழ பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று நகர்ந்தது.
ஏகதேசம் அதில் எல்லோரும் மொட்டை அடித்திருந்தார்கள்.
மொட்டைகளுக்கு மத்தியில் நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி கால்களை எம்பியபடி நடந்து கொண்டிருந்தாள்.
அவளின் உடம்பு அவளுடன் ஒத்துழைக்காமல் இருப்பது போல சிரமம் முகத்தில் தெரிந்தது.
அப்பெண் விடுதியைப் பார்த்து ஏதோ சொல்லியபடி நடந்தாள்.
இங்கு தங்கியிருந்திருப்பாளா.
இங்கு தங்கி இளைப்பாற வேண்டும் என்ற ஆசையைச் சொல்லியபடி நகர்ந்து கொண்டிருப்பாளா என்ற எண்ணம் அவனுக்கு வந்தது.
அறைக்கு போய் மல்லாந்து கிடக்கலாம்.
இப்போதெல்லாம் அவள் எல்லாம் வெறுத்துப் போச்சு என்று சாதாரணமாய் சொல்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது.
ஆனால் முயங்கித் தீர்த்து எழுகிற ஒவ்வொரு முறையும் குளித்து விடுகிறாள்.
பெரும்பாலும் தலைக்கு நீர் ஊற்றி குளிப்பாள்.
குளிப்பது அலுப்பே இல்லை என்பது போல குறிப்பாள்.
எல்லா அழுக்கையும் விரட்டிவிட முடியுமா அந்தக் குளியலால்.
ஆனால் விடுதித் தண்ணீரிலேயே அவள் பல முறை குறிப்பதுதான் அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.
மெல்ல நகர்ந்து அறைக் கதவைத் தொட்டான்.
அது விதக்கென்று திறந்து கொண்டது.
ஒரு நிமிடம் பயம் ஒட்டிக் கொண்டது.
பூட்டிவிட்டு போயிருக்கலாம்.
காரிடரில் நடமாடும் அறைப் பையன்கள் யாராவது இந்த இடை நேரத்தில் கதவைத் தள்ளிப் பார்த்திருப்பார்களா…
ஒரு வித பயம் உடம்பைக் கவ்வியது.
குளித்தால் பயம் போகுமா…
போனாலும் போகும்.
எதற்கும் குளிக்கலாம் என்று மெல்ல நகர்ந்தான்.
ஆற்றில் குளிக்கிற பழக்கமெல்லாம் இல்லாமல் போய் விட்டது.
யாராவது வெளியூரிலிருந்து வந்தால் மட்டுமே ஆற்றைப் பார்க்கக் கிளம்ப வேண்டியிருக்கிறது.
வெயில் அவ்வளவாய் உறுத்தவில்லை.
மெல்ல ஆறு வரைக்கும் நடக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.
ஒரு கி.மீட்டர் நடக்க வேண்டியிருக்கும் இப்போது ஆறு வரைக்கும் கான்கிரீட் சாலை வந்து விட்டது.
தெருக்கள் கான்கிரீட்டால் மூடப்பட்டு விட்டன.
கான்கிரீட்கள் முடிகிற இடங்களில் ஏகமாய் குடிசைகள் இருந்தன.
கான்கிரீட் குடிசை வாயில்களுக்குக் கொண்டு செல்வது அவனுக்கு விசித்திரமாய் பட்டிருக்கிறது.
ஆறு வரைக்கும் நீளும் கான்கிரீட் சாலை ஆற்றையொட்டி ஒரு சிறு பாலமாக நீளும்.
அந்த சிறு பாலத்தின் இன்னொரு முனை கூடுதுறையில் இருந்தது.
கூடுதுறையில் ஆறகள் சங்கமிப்பதைப் பார்க்க எல்லோரும் அந்த முனையில் நிற்பது வழக்கமாக இருக்கும்.
கான்கிரீட் சாலையின் இரு பக்கங்களிலும் வாழைகள் பச்சையாய் விரிந்திருந்தன.
நீர்க்கசிவு தார்ச்சாலைகளின் ஓரம் வரைக்கும் இருந்தது.
அவனுக்குக் குளிக்க ஆசையாக இருந்தது.
கூடுதுறையில் குளிப்பதற்கென்று இறங்கி விட முடியாது.
சாயக் கழிவுகளின் வர்ணத்தில் தண்ணீர் கடந்து போகும்.
நீரின் சலசலப்பு தெளிவாய் கேட்டது.
பார்வை விரிகிற வரைக்கும் ஆறு பரந்து கிடந்தது.
ஒரு பக்கமிருந்து நொய்யல் சாயக் கழிவுகளுடன் பரபரத்து வரும்.
இன்னொரு பக்கம் காவேரி சலசலத்து தெளிந்தபடி வரும்.
இரண்டும் கூடுதுறையில் சங்கமித்த மின் சாயக்கலவையுடன் ஆறு சென்று கொண்டிருக்கும்.
கூடுதுறைக்குப் பிறகு ஆற்றின் நிறம் சாயக் கழிவின் நிறமாக மாறிக் கொண்டே இருக்கும்.
அவ்வப்போது கலக்கும் சாயக்கழிவின் நிறமாக ஆற்றின் நிறம் மிளிர்ந்து கொண்டிருக்கும் வர்ணஜாலம் அதன் பின் பல கி.மீட்டர் தூரங்களுக்கு இருக்கும்.
இதுவே கூடுதுறையை
“சுற்றுலா தலமா”க்கி விட்டிருந்தது.
வந்து பார்ப்பவர்கள் நொய்யலின் வர்ண நிறத்தையும்,
காவேரியின் தெளிந்த நீரையும் ஒப்பிட்டு பேசிக் கொள்வார்கள்.
கூடுதுறைக்கு அப்புறம் வர்ணமாகிப் போகும் புது ஆற்றைப் பற்றிச் சொல்லிக் கொள்வார்கள்.
ஊருக்கு வருகிறவர்களுக்குக் காட்டவென்று கூடுதுறை ஆகிப்போனது அவனுக்கு நினைக்கச் சங்கடமாகவே இருந்தது.
குளிக்க வேண்டுமென்றால் கூடுதுறைக்கு முன்னால் வடக்கு புறத்தில் இருக்கும் வண்ணான் துறைக்குத் தான் செல்ல வேண்டும்.
வேறு எங்கு போனாலும் ஆளைத் தள்ளிக் கொண்டு போய் ஜலசமாதியாக்கி விடும்.
நொய்யலில் வெள்ளம் வந்தால் ஊரே தீவாகி விடும்.
நீந்தத் தெரிந்தவர் மட்டுமே கரையை அடையலாம்.
பாலம் கட்டினபின்பு இது மாறி விட்டது.
வண்ணான் துறையில் காவேரி மட்டும் ஓடிக் கொண்டிருக்கும்.
வண்ணான் துறையே நெடுந்தொலைவு ஆகிவிட்டது போலிருந்தது அவனுக்கு.
கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருப்பவர்கள் கூட தென்படுவதில்லை.
சாய ஆற்று மீனை உள்ளூர்காரர்கள் விரும்புவதில்லை என்பதுதான் காரணமாக அவன் மனதில் இருந்தது.
நொய்யல் பாய்ந்து வரும் பகுதி சாய்வு கோணத்தில் விரிந்து கிடந்தது.
சாயக் கழிவைத் திறந்து விடும் நேரத்திற்கேற்ப நொய்யலின் நிறம் மாறும்.
இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் அதன் நிறம் தென்பட்டு விடும் என்ற எண்ணம் வந்தது.
காவேரி தெளிந்து தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
நொய்யல் பகுதியில் யாரோ தண்ணீரில் இருப்பது தெரிந்தது.
அதென்ன தலை முழுக்க நீண்ட முடி.
கூர்ந்து பார்த்தான்.
நீரின் மினுங்களில் சாயத்தனம் தெரிந்தது.
சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் நீர் வர்ணக் கோலமாய் நெளிந்து கொண்டிருந்தது.
கூர்ந்து பார்க்கையில் மார்பை பாவாடையால் கட்டிய பெண் உருவம் என்பது தெரிந்தது.
அவன் திக்கித்து நிற்பவன் போலானான்.
நீரின் சலசலப்பு பெருத்த ஓசை போல் அவன் காதுகளை அடைத்தது.
நெளிந்து வளைந்தக் கோடுகளால் ஆறு நிரம்பியிருந்தது.
“ஐயோ…
என்ன பண்றே நொய்யலுக்குள்ளே…”
அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.
அவள் தலையை உலுக்கிக் கொண்டதில் நீர்த் திவலைகள் தெறித்தன.
“என்ன பண்ணுவாங்க…
குளிக்கறன்.”
“குளிக்கற எடமா இது”
“ஆறு தானே…
ஆத்துல குளிச்சா என்ன…”
“ஐயோ…
எந்த நேரத்தில சாயத் தண்ணியைத் தொறந்து வுடுவாங்கன்னு தெரியாது.”
“சாயத் தண்ணியை தொறந்து வுட்டாலும் ஒண்ணுதா.
தொறந்து வுடாட்டியும் ஒண்ணுதா.
குளிக்கறதுக்கு தானே ஆறு…”
“உங் குளிக்கற ஆசையை வூட்ல வச்சுக்கோ.
நொய்யல்ல தேவையா…”
“எல்லாம் வெறுத்துப் போச்சு…”
அவன் தலையைத் தண்ணீரில் மூழ்கடித்து மறைய ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது.
“குளிக்காணும்ன்னா வண்ணான் துறைக்கு அந்தப்பக்கமா போ…”
“எல்லாம் வெறுத்துப் போச்சு.”
சாய நீரில் தலையை நனைத்து தலை முடியை புது வர்ணமாக்கிக் கொள்பவள் போல மூழ்க ஆரம்பித்தாள்.
பதட்டத்தில் சாயக் கழிவில் அவனை யாரோ மூழ்கடிப்பது போல இருந்தது.
SUBRABHARATHIMANIAN, 8/2635 PANDIAN NAGAR, TIRUPPUR
641 602 9486101003