இன்குலாப் நேர்காணல்
சுப்ரபாரதிமணியன்
நல்ல உரையாடல்கள் எதிரில் உள்ளவரின் மனதை அறிய, அவர் அறிவை அறிய, உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்ள, கை குலுக்கிக் கொள்வதைப் போல. அப்புறம் சிந்தனைத் தெளிவிற்கு, கொஞ்சம் சேகரித்துக் கொள்ளவும் கூட.. நேர்காணல்கள் மூலம் பெறப்படும் தகவல்களும், அனுபவங்களும், அதுவும் படைப்பிலக்கியத்தின் ஒரு பகுதி என்று உணர வைக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கோவை வானொலியில் கவிஞர் இன்குலாப்புடன் வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர் ஸ்டாலின் அவர்கள் நிகழ்த்திய ஒரு நீண்ட நேர்காணல் “ ஒரு மகுடத்தைச் சிறகுகள் சுமந்து செல்லாது “ என்ற தலைப்பில் அகரம் பதிப்பகம் ஒரு நூலை வெளியிட்டுள்ளது. ஸ்டாலின் இதுவரை 25 நூற்கள் எழுதியிருப்பவர். கிரேக்க நாடகங்கள் பத்திற்கும் மேற்பட்டவை இவரின் மொழிபெயர்ப்பில் முக்கியத்துவம் பெற்றவை.
சுப்ரபாரதிமணியன்
இந்த நேர்காணல் படைப்பாளிக்கும், சமுதாயத்திற்கும் உள்ளத் தொடர்பு, அவனின் கலகத்தன்மை பற்றி பெரும்பாலும் பேசுகிறது.எதிர்குரலும், மாற்றத்திற்கான தன்மையும் இயங்கியலாக தொடர்வதைச் சொல்கிறது. நெருக்கடி நிலை கால கட்டம், உலகமாதல் சூழல், அது சார்ந்த படைப்பு மனம் பற்றின அக்கறைகள் ஒரு படிப்பாளி சூழலை எதிர்கொள்ள வேண்டிய அணுகு முறைகளைச் சொல்கிறது. தமிழ் தேசியம் குறித்த விவாதத்தையும் முன் வைக்கிறது.
அரசு சார்ந்த நிறுவனமான வானொலி நிலையம் சுதந்திரமாக அரசியல், புரட்சிகர விசயங்களை உரையாடலில் பகிர்ந்து கொள்ளச் செய்திருப்பது ஆரோக்கியமாகத் தென்படுகிறது. ஸ்டாலின் முன் வைக்கும் காத்திரமான கேள்விகளும், இன்குலாப்பின் சிந்தனைகளும் ஒரே அலை வரிசையில் செயப்படுவது இந்த நேர்காணலை சுவாரஸ்யமானதாக்குகிறது. உரையாடலுக்கான வெளி எவ்வளவு பரந்தது என்பதும் தெரிகிறது.உரையாடல்கள் கொண்டு செல்லும் சிந்தனைகளும், பரிமாற்றங்களும், ப்டைப்பிலக்கியத்தின் ஒரு பகுதியாக்குகிறது.
( ரூ 60, அகரம், தஞ்சை )