சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 24 ஜூன், 2014

இருக்கிற கடவுள்களும், இனி வரப் போகும் கடவுள்களும்! கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள். தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு

சுப்ரபாரதிமணியன்

தங்கர் பச்சானின் முதல் சிறுகதைத் தொகுப்பு " வெள்ளை மாடு "  வெளிவந்த போது முந்திரித் தோட்டத்து மனிதர்களின் வாழ்வியலை  அவ்வளவு நகாசு தன்மையுள்ளதாக இல்லாமல் வெளிப்பட்டிருபதாக ஒரு விமர்சனம வந்தது, பின் நவீனத்துவ எழுத்து  தீவிரமாக இருந்த காலகட்டம் அது. பின்நவீனத்துவக் காலகட்டத்தில் கலை அம்சங்களும் நகாசுத்தன்மையும் கூட அவலட்சணமே.காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் விவரிப்பில் இலக்கண நேர்த்தியோ  நகாசோ எதிர்பார்பது ஒரு நாகரீக சமூகமாகாது. அந்தக் குறறச்சாட்டு போல் அக்கதைகள் இல்லை.பசியின் கோரம் அடுப்புக்குத் தெரியாது  தீவிரப் பிரச்சினைக்கு நகாசு தெரியாது. தங்கர்பச்சானின் கதாபாத்திரங்கள்  பின்நவீனத்துவம் கொண்டாடும் விளிம்பு நிலை மனிதர்களே. விவசாயக்கூலிகள், சம்சாரிகள், கரும்புத்தோட்டத் தொழிலாளர்கள், வேதனையிலேயே உழன்று கொண்டிருக்கும் பெண்கள் எனலாம். கொம்புக்கயிறு  இல்லாத மாடு அவலட்சணமாக இருப்பது போல் அவலட்சனமான விளிம்பு நிலை மக்கள் இவருடையது.
குடிமுந்திரி கதையில் முந்திரி   மரத்தின் மீது ஏறி நின்று நெய்வேலி  சுரங்கக கட்டிடங்களை, புகைபோக்கிகளைப்  பார்க்கும் சிறுவர்கள் போல தங்கர்பச்சான் தோளில் ஏறி நின்று வாசகர்கள்  கடலூர்  மக்களின் வாழ்வியலைப் பார்க்க முடிகிறது.இதில் இவர் கையாளும் மொழி  உணர்ச்சிப்பிழமான கதை சொல்லல் மொழியாகும்.அந்த பாதிப்பே அவரின் திரைப்பட மொழியில் பல சமயஙக்ளில் உணர்ச்சி மயமான காட்சி அமைப்புகளால்பாதிப்பு ஏற்படுத்தி பலவீனமாக்குகிறது.. திரை தொழில் நுட்பம் தீவிர இலக்கியத்திலிருந்து பிறந்தது எனப்தையொட்டிய அவரின் காமிராமொழியும், சொல்லும் தன்மையும் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளன.
 முந்திய  மூன்று சிறுகதைத்தொகுப்புகள் , ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது  இந்த “ தங்கர்பச்சான் கதைகள்”  தொகுப்பு..இக்கதைகளில் பெரும்பான்மயானவை இலக்கியப் பத்திரிக்கைகளில் வந்தவை.  இலக்கியப் பத்திரிக்கைகளில் எழுதுகிற குற்ற உணர்வு பலருக்கு உண்டு, ஆனால் அதைப் பெருமிதத்தோடு இவர் சொல்கிறார். திரைப்படக்கலைஞனாக வாழ்க்கை வீணாகி விட்டது என்று இவர் தரும் வாக்குமூலம் இலக்கிய இதழ்களில்  கதைகள் எழுதுகிறவனுக்கு ஆறுதல் தருகிறது.
இலக்கியப்பிரதிகளை திரைப்படங்களாக்குகிற இவரின் முயற்சி இல்க்கியத்தளத்தில் இவருக்கு இருக்கும் அக்க்றையைக் காட்டுவதாகும்.கல்வெட்டு என்ற சிறுகதையின் தன்லட்சுமி " அழகி " ஆனாள்.  தலைகீழ் விகிதங்கள் முதல் ஒன்பது ரூபாய் நோட்டு,  அம்மாவின் கைபேசி  வரை நாவல்கள் படங்களாகியிருக்கின்றன.
மரபு ஒரு சுமையாக இல்லாமல் ஒரு வரமாகவோ, மகிழ்ச்சிக்குறிய விசயமாக பழக்க வழக்கங்களில் சடங்குகளில் மிச்சமிருப்பதை இவ்ரின் கதைகளின் போக்கில் தெரிந்து கொள்ள முடிகிறது. முந்திரிக்காடு  காலகாலமான சடங்குகளை தன்னுள் வைத்துக் கொண்டிருக்கிறது. சடங்குகளும் விதியும் இவரின் கதை முடிவுகளை சில கதைகளில் சாதாரணமாக்கி விடுகின்றன. இவரின் பெண் கதாபாத்திரங்கள் இந்தச் சடங்குகளுக்குள் அமிழ்ந்து போனவர்கள். மீட்சி இல்லாதவர்கள். கடவுள்களால் கைவிடப்பட்டவர்கள். அம்மாக்களின் முந்தானைக்குள் ஒளிந்து அறிமுகமாகும் இவரின் குழந்தைகளின் விளையாட்டு உலகம் அதிசயமானது. இயறகையின் மீதான நேசத்தில் உலவும் இவரின் கதாபாத்திரங்கள்,  கால்நடைகள் உயிர்ப்போடு இக்கதைகளில் உலாவுகின்றன. சாதியின் உக்கிரங்களையும் இவர் காட்டத் தயங்குவதில்லை.  நுகத்டியில் அமிழ்ந்து போகும் கடும் உழைப்பாளிப் பெண்கள் போலில்லாமல் சாதியால் அழுத்தப்பட்ட பிற்பட்ட சாதி சார்ந்தவர்கள் பல வகைகளில் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். கிணற்றுக்குள் சிறுநீர் கழிப்பது போன்ற சிறு சிறு எதிர்ப்புச் செயல்கள் மூலம் இது வெளிப்படுகிறது. பல கதைகளில் சாவைச் சந்திக்கிறோம். தற்கொலைகளில் நிறையப் பேர் இறந்து போகிறார்கள். எதிர்மறை கதாநாயகர்கள் பணத்துக்காக கொலைகளையும் செய்கிறார்கள். சாவு பற்றி இக்கதைகளில் அதிகம் பேசப்பட்டாலும் சாவு தீர்வல்ல என்பதையும் சொல்கிறார்.கிராமம் பற்றிய ஏக்கத்தையும் நகரம் பற்றிய பயத்தையும் இவரின் கதைகள் எழுப்புகின்றன..
இத்தொகுப்பில் பல இடங்களில் முன்னுரையிலும் ஆங்கிலக்கல்வியின் வன்முறை,  தாய்த்தமிழ்கல்வி பற்றி பேசுகிறார். மாற்று வைத்தியத்திற்கான தேவை குறித்துச்ச் சொல்கிறார்.கலாச்சாரம் சார்ந்த உடை, உணவு சார்ந்த நிறைய குறிப்புகளைக் காண முடிகிறது. இவையெல்லாம் மாற்றுப் பண்பாடு குறித்த இவரின் அக்கறையைக் காட்டுகின்றன.மண் சார்ந்த கதைகளை நுட்பமான பிரச்சினைகள் ஊடே படைத்திருக்கிறார்.  மாற்றுப்பண்பாடு குறித்த கேள்விகளுக்குப் பின் இருக்கும் இவரின் அரசியல்  குரலையும் இதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். 
1993ல் இவரின் முதல் சிறுகதை வெளிவந்தது. 10 ஆண்டுகளுக்குப்பின் இவரின் முதல் தொகுப்பு வெளிவந்தது. 20 ஆண்டுகளுக்குப்பின்  இந்த மொத்தத் தொகுப்பு வந்திருக்கிறது 20 கதைகளுடன். திரைப்படத் துறைப்பணிகளூடே இலக்கியப்பணியும் தொடர்கிறது, நனவோடை உத்தியும், கதைசொல்லியின் பார்வையும், காட்சி ரூப அம்சங்களும் கொண்ட இக்கதைகள் முந்திரிக்காட்டு மனிதர்களின் மனச்சாட்சியின் குரலாக அமைந்துள்ளன.
( உயிர்மை பதிப்பகம், சென்னை வெளியீடு
விலை ரூ 210 )

subrabharathi@gmail.com

இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில்- மறுவாசிப்பில் தி. ஜானகிராமன்..

1_barathimaniyan.jpg - 747.63 Kb

வியாழன், 19 ஜூன், 2014

அரசியல் செயல்பாடுகளூடே கொஞ்சம் கவிதைகள் பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…

சுப்ரபாரதிமணியன்

பாரதிவாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம்” -கவிதைத் தொகுப்பை முன்வைத்து…
சுப்ரபாரதிமணீயன்
கவிதை என்பது கைவாளா, போர்வாளா , காலவிரையமான பொழுதுபோக்கா, சொல்விளையாட்டா, ஆன்ம தரிசனமா, உளறலா, தத்துவமா, மொழியியல் ஜாலமா, கலாச்சார பரிவர்த்தனையா,கடவுளா, சாத்தானா, உயிரா , மயிரா என்று விவாதம் எப்போதும் இருக்கிறது.
கட்சி சார்ந்து இயங்குகிறவனுக்கு அது எப்படியும் ஆயுதம்தான். வெகுஜன அரசியல் சார்ந்த வாக்குப்பொறுக்கிக்கு அது வெற்று ஜாலம். ” நீ நிமிர்ந்தால் இமயமலை, நடந்தால் பாரத நதி ” என்று எந்தத்தலைவனையோ, தலைவியையோ புகழ்ந்து பாடும் யாசகக் குரல். ஆனால் சமூக நீதி இயக்கம் சார்ந்து இயங்குபவனுக்கு அது கைவாள்தான். மக்களிடம் தன் அரசியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு செல்லும் கருவிதான்.
பாரதிவாசன் தொடர்ந்து அரசியல் தளங்களில் இயங்கி வருகிறவர். 15 ஆண்டுகளுக்கு முன் அவரின் முதல் தொகுப்பு ” யாதெனீல் ..” கனவு வெளியீடாக வந்தது. அதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது முக்கிய நிகழ்வாகும். பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொண்டனர். ஞானக்கூத்தன், திலகவதி, கவிதாபாரதி, டொமினிக் ஜீவா, வ.அய். செ. ஜெயபாலன், அறிவுமதி மறைந்த இதயக்கனி இயக்குனர் செகநாதன், நிகழ் திருநாவுக்கரசு என்று பலர் கலந்து கொண்டனர். 15 ஆண்டுகள கழித்து 90 பக்கத்தில் அவரின் இரண்டாம் கவிதைத்தொகுப்பு வந்துள்ளது. கவிதையின் தேர்ந்த வாசகன் ஒருவனுக்கு, முறையான கவிதைப் பயிற்சி உள்ளவனுக்கு ஒருமாதம் என்பது ஒரு தொகுப்பை எழுதி வெளியிடபோதுமானது. ஆனால் 15 ஆண்டுகள் என்பது நீண்ட இடைவெளி . இந்த இடைவெளியில் அவர் அரசியல் செயல்பாடுகளால் தன் வானத்தை நிரப்பிக்கொண்டிருந்தார்.
மாற்றுத்திரைப்பட புத்தகங்களை வெளியிடுதல், அவற்றை விற்றல், மாற்றுத்திரைப்பட குறும்பட நிகழ்வுகள்,குறும்பட பயிற்சிப்பட்டறைகள், மாற்றுக் கல்வியான தாய்த்தமிழ்ப்பள்ளியின் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பு, மாற்று உணவு சார்ந்த விற்பனையக செயல்பாடுகள் , மாற்று மருத்துவம் சார்ந்த செயலாக்கங்களில் ஒருங்கிணைப்பு என்று தொடந்த செயல்பாடுகளில் இருந்திருக்கிறார். இவையெல்லாம் மாற்று பண்பாடு, மாற்று சமூகம் குறித்த அக்கறையான செயல்பாடுகள். இந்த மாற்றுப்பண்பாட்டுச் செயல்களுக்குப் பின் ஒரு அரசியல் இருக்கிறது அது தமிழ் தேசிய அரசியல்..ஒரு வகையில் சமரசம் செய்யாத அரசியல் குரல் அவருடையது. அவர் கடந்து வந்த பொதுவுடமைக் கட்சிகளின் மீதான விமர்சனத்தினூடே இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு வந்திருக்கிறார். அது ஈழம், முல்லைபெரியாறு, கூடாங்குளம் அணுமின்சக்தி என்ற கருத்து மோதல்களால் நிகழ்ந்ததாகும்.
அரசியலில் அக்கறை கொண்ட கவிதை மனம் எப்படி செயல்படும் . அதற்கு உதாரணம் இத்தொகுப்பு. அதிகமாய் காதல் கவிதைகள் இருந்தாலும் அவை சாதி மறுப்பை முன்வைக்கும் செயல்பாடுகளாகும்.காதலை எழுதுகிறவன் சாதியை வெளியேற்றுகிறவன் சாதி மறுப்பை செயல்பாடுகளால் காட்டுபவன் . காதல் உணர்வுகளோடு சமூகம் தரும் எல்லா வித செயல்பாடுகளுக்கும் தன் அரசியல் செயல்பாடுகளோடு இலக்கியத்திலும் பதிவு செய்கிறவனாகிறான்.அந்த வகையில் பாரதிவாசன் மாற்றுப் பண்பாடு குறித்த அரசியல் செயல்பாடுகளோடு தமிழ் இலக்கிய வாசகனாகவும், போராளியாகவும் பன்முகத்தன்மைகொண்டு செயல்படுகிற நிர்பந்தத்தில் தன்னைச் சளைக்காமல் ஈடுபடுத்திக் கொள்வேதே அவரின் இருப்பை இளைஞர்கள் மத்தியில் உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தத் தொகுப்பின் மூலமும்.
( பாரதி வாசனின் ” இடைவெளி நிரப்பும் வானம் “ கவிதைத்தொகுப்பு.. . ரூ60 / வெளியீடு : நிழல், 31/48 இராணி அண்ணா நக்ர், சென்னை 78 9444484868 ).

மேக வெடிப்புகள் - சுப்ரபாரதிமணியன்



கடந்த மாதம் பெய்த மழை சில உயிர்களை பலிவாங்கியது. வேலூரில் கூட ஒரு சிறுமி மழையால் அடித்துச் செல்லப்பட்டு இறந்து போனாள். மேகம் வெடித்து கொட்டியது போல் நான்கு நாட்கள் மழை பெய்து ஓய்ந்தது. சென்றாண்டு ஜீன் 14ல் உத்தரகாண்ட்டில் நிகழ்ந்த கொடுமையான மேகவெடிப்பு பல உயிர்களை பலி வாங்கியது. ஓராண்டில் நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் அதிகமே.
     சென்றாண்டு உத்தராகண்டில் ஒரு நாளில் 340 கி.மீ மழை கொட்டி எல்லாவற்றையும் சீர் குலைத்து விட்டது. 340 எண்ணுக்குள் அப்படியொரு அபாய எச்சரிக்கை . மேக வெடிப்பு என்று வானம் மக்கள் மேல் தகர்ந்து விழுந்து விட்டதைப் போன்று மழை கொட்டித் தீர்த்து கொண்டது. இயற்கை சார்ந்த பேரழிவு என்று சொல்லிக் கொண்டாலும் மனிதனின் தொடர்ந்த பேரழிவு நடவடிக்கைகளால் வந்த விதைதான் அந்த 340.

தேவர்களின் பூமி, பூலோக சொர்க்கம்  என்று சுற்றுலாவாசிகளாலும், பக்தர்களாலும் வர்ணித்து பூசிக்கப்பட்டது உத்தரகாண்ட் பிரதேசம். வடக்கில் திபெத், கிழக்கில் நேபாளம். அதன் எல்லைகள். மலை ஏறுதல், சிகரம் ஏறுதல், படகு சவாரிகள், இயற்கை எழில் என்று சுற்றுலாவாசிகளை கவர்ந்திழுக்கும் பிரதேசம். நிறைய ஏரிகளைக் கொண்ட நைனிடாலும், மலைகளின் ராணியான மசூரியும் இங்குள்ளது. ஜீன் 14ல் தங்கு பெய்த பெருமழை எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது.

மனிதப் பிணங்களும், கால்நடைகள் பிணங்களாயும் வெள்ளத்தில் மிதந்து சென்றன. சிவபெருமானின் சிலை வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டேயிருந்து விட்டு மெல்ல அடித்துச் செல்லப்பட்டது. நெடியக் கட்டிடங்கள் உருக்குலைந்து சிவபெருமானுடன் அடித்துச் செல்லப்பட்டன. எங்கும் வெள்ளம். தொடர்ந்த நிலச்சரிவுகள் . டேராடூன் வானிலை மையம் தந்த எச்சரிக்கையை பற்றி யாரும் பெரிதாய் அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. கேதார்நாத், பத்ரிநாத்தில் மேகவெடிப்பு நிகழப் போகிற அபாயமும், வானிலை அறிக்கைகளும் யாத்ரிகர்களையும், சுற்றுலாவாசிகளையும் உத்ரகாண்ட் பொது மக்களையும் அவ்வளவாக பாதிக்கவில்லை. இன்னொரு பெருமழை என்றே நினைத்திருந்தனர். ஆனால் நிகழ்ந்த பெருமழையின் பாதிப்பு பல லட்சக்கணக்கான மக்களின் வீடுகளைக் காணாமல் போயும், தங்களின் சுவடு தெரியாமல் இறப்பு மூலம் காணாமல் ஆக்கி விட்டது. நதிக்கரை மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் கட்டிடங்கள் மக்களின் மனதைப் போல் நொறுங்கின இடிபாட்டுக் கட்டிடங்களை ஒரு சேர குவித்து வைத்திருப்பது போன்ற உத்தரகாண்ட் பகுதி கட்டிட அமைப்புகள் சுலபமாக சரிந்து விழுந்து மறைந்து போயின. தொடர்ந்து கட்டப்பட்ட கட்டிடங்கள், தொடர்ந்த பயணங்களால் நில அதிர்வு, பிடிப்பு இல்லாமல் போன மண்ணின் தன்மை, தொடர்ந்த இயற்கை சார்ந்த நிராகரிப்புகள் பல லட்சக் கணக்கான மக்களை நிலைகுலைய வைத்து விட்டது. உயிரிந்தோர் ஆயிரம். காணாமல் போனோர் பல ஆயிரம். உயிர் வாதையிலிருந்து மீட்கப்பட்டோர் பல லட்சம் பேர். “சாம் தாம்கள்” என்றழைக்கப்டும். நான்கு புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத, கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை பிணக்காடாக மாறின. பல மடங்களும், ஆசிரமங்களும் நீரில் மூழ்கின. ரிஷிகளும் தாங்கள் கைவிடப் பட்டதை எண்ணிக் கதறினர். ரிஷிகேஷ் வழியாகப் பாயும் கங்கை நதியின் கரையோரப் பகுதியும் வெள்ள பாதிப்பிலிருந்து தப்பவில்லை.

2004ல் வந்த சுனாமி தேசத்தையே உலுக்கியது. இதற்கு ‘இமாலய சுனாமி’ என்று பெயர் சூட்டிக் கொண்டார்கள். இயற்கை விபரீதம் எல்லாவற்றையும் கேள்விக்குறியாக்கியது இமயமலையின் ஆன்மீக சாரத்தையும் உலுக்கிவிட்டது. உத்தரகாண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக காடழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவும் நில அபகரிப்பும் தொட்ர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்த யாத்திரிகர்களின் வருகையும் போக்குவரத்தும் இமாலயத் தவறுகளாய் படிக்கட்டமைத்து இமாலய சுனாமியை உருவாக்கிவிட்டது. யாத்திரை பருவம்  எனப்படும் யாத்ரீகள் அதிகம் காணப்படும் காலத்தில் நடந்ததால் மட்டுமே இது பேரழிவாகத் தெரிகிறது.  மற்றபடி அவ்வப்போது பெய்யும் பேய் மழைதான் ஜீனிலும் அங்கு பெய்தது. மலைப் பகுதிகளின் காடுகள் மழை நீரை கணிசமாக தம்மிடம் இருத்திக் கொள்கின்றன. வெள்ளம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கின்றன. மரங்களும், தாவரங்களும் இல்லாத வெறும் மண் நிரம்பிய மலைச்சரிவு மழைக்கு சிரமப்படும். மண்ணைக் கரைத்து நிர்மூலமாக்கும். அதே வகையான மலைச் சரிவுகளின் காடுகள் ஒரு வகையில் மழைக்கு பாதுகாப்பையும் தருவதாகும். மரங்களின் மீது மழை துளி விழும் போது  மழையின் வேகம் குறையும். மரங்களின் கீழே விழுந்து கிடக்கும் குப்பைகள் தண்ணீர் வேகமாக ஓடாமல் சற்றே வேகத்தைக் குறைக்கிறது. மழை நீரும் மெல்ல மெல்ல மண்ணுக்குள் இறங்குகிறது.  மரங்களின் வேர்களும் நீரை ஈர்த்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. நிலச்சரிவும், மண் அரிப்பும் ஏற்படாமல் அவை காக்கும். எனவே மரங்கள் பெரு மழையின் போக்கையும் மாற்றக் கூடியதுதான். மண் அரிப்பும் பெருமழையுடன் சேர்ந்து கட்டிடங்கள் நிலை குலைய வைத்துவிட்டது. 9000 கி.மீ உயரம் கொண்ட மிகப் பெரிய மலையான இமயமலை மேக வெடிப்பால் அதிர்ந்து விட்டது.

உத்தராயண் காலத்தில் உச்சமான ஒரு நாளில் சூரியன் இமயமலையின் தலை உச்சியில் சஞ்சரித்து “கோடை சந்தி”யை உலகுக்குக் காட்டி வியப்பளித்தது. தொடர்ந்து வந்த நாட்களின் மேக வெடிப்பு மழை இயற்கையை நாம் நிராகரித்து வருவதன் எச்சரிக்கையை “கோடை வெடிப்பாக்கி” அதிரவைத்து விட்டது. இந்த அதிரலை தொடர்ந்து உணர வேண்டிய அபாயம் இருப்பதை அனுபவங்கள் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிமணியன்

 

சுப்ரபாரதிமணியன்

சுப்ரபாரதிமணியன்
ஏழு நாவல்களை இதுவரை எழுதி வெளியிட்டிருக்கிறார் நிஜந்தன்.
“ பேரலை “ நிஜந்தனின் ஆறாவது நாவல்.முந்தின நாவல்களைப் போலவே இதிலும் பெரு நகர மக்களின்                 வாழ்க்கையைச் சித்தரித்திருக்கிறார்.இவரின்
முதல் நாவல் “ மேக மூட்டம்” ரமணி, மீனலோசனி தம்பதிகளின் பிணக்கையும் மீனலோசினியின் முன்னாள் காதலன் பீட்டரின் குறுக்கீட்டால் சிதையும் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் விவரித்தது. மனநலவியாதியில் எதிர் விளைவு இல்லாத மருந்தைக் கண்டு பிடிக்கும் மனநல வைத்தியர் முயற்சிகளையும், சாவு பற்றிய மனக்குழப்பங்களையும் விவரித்தது. “ பாபுஜியின் மரணம் ‘
” நான் நிழல் ” நாவலில் ஒரு புகைப்படக்காரரை முன்வைத்து வாழ்வு பற்றிய பார்வை நகர்ந்தது. புகைப்படங்கள் பார்த்து கதை சொல்லும் நினைவுகளும் ஆக்கிரமிக்கின்றன. அம்மாவுடன் சித்தப்பாவின் உறவும் அவர்களுக்கு குழந்தை பிறப்பதும் அப்பாவுக்கு மட்டும் அல்ல சுற்றியுள்ளவர்களுக்கும் மவுனத்தையே எதிர்வினையாக்க் கொள்ள வைக்கிறது. திருடர்கள் வந்து போவது இன்னொரு தளத்திலும் நிகழ்கிறது. கதாநாயகனுக்கு இடுப்பில் சீழ் கட்டி . இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அது உடைந்து அவஸ்தப்பட வைகிறது.அதன் காரணமாக சகித்துக் கொள்ள முடியாமல் மனைவி மகாலட்சுமி விவாகரத்து கோருகிறாள்.அவனை ஆறுதல் படுத்துகிறவர்களாக ஆர்த்தி போன்ற நர்ஸ்கள் இருக்கிறார்கள் அது ஒரு குறியீடாக நாவல் முழுக்கக் கட்டமைக்கப்பட்டிருக்கிரது. .” புதிய வெயிலும் நீலக்கடலும்” நாவலில் குறும்படம், நவீனநாடகம் சர்ந்து இயங்குகிறவர்களின் உலகம் சொல்லப்பட்டிருக்கிறது. லதா வண்ணாத்திப் பெண் அம்மாவிற்குப் புற்று நோய். சித்தப்பா சேகர் சலவைத் தொழில் செய்கிறவர். சித்த்ப்பா எய்ட்ஸ் வந்து செத்துப் போகிறவர். கோபால் பேசன் டெக்னாலஜி படித்து விட்டு தொழில் செய்கிறவன். இடதுசாரி மனப்பான்மை கொண்ட கண்ணகி கணவனைச் சுட்டு கொலை செய்கிறவளாக அவள் வாழ்க்கை மாறி விடுகிறது.லதா கோபாலுடன் இருந்த வாழ்க்கையின் எச்சமாக கருக்கலைப்பு செய்து கொள்ள வேண்டியதாகிறது. இசை அமைப்பாளரான செல்லம் கண் பார்வை இல்லாதவன். மைத்துனியுடன் சேர்ந்து வாழ்கிறவன். சிவலிங்கம் போலீஸ் அதிகாரி ஆக இருந்து அதிகாரத்தை அனுபவிக்கிறவர். எய்ட்ஸ் வந்து சாகுமவரின் மனைவி சாவு அவருள்ளும் சாவு பயத்தைக் கொண்டு வருகிறது. கோபால் துணிக்கடை ஆரம்பித்து நடிகையைத் திறப்பு விழாவிற்கு அழைக்கிறான். லதாவுடன் உறவு கொண்டதை குறுந்தகடில் வைத்து மிரட்டுகிறான். பைரவன் என்ற சாமியார் பெரும் அதிகாரம் கொண்டவராக இருக்கிறார். இதய வலி வந்து செத்துப் போகிறார். தோழர் அய்யாவு லவுகீகக் கடமைகள் முடிந்து புரட்சிக்கான ஆயத்தங்களும், நடவடிக்கைகளும் இனி தன் வாழ்க்கையாக அமையப் போவதாக முடிவெடுத்துக் கொள்கிறார்.கோபாலும் அசோக்கும் ஒவ்வொருவரும் பெண் பிரச்சினை காரணமாக அடித்துக் கொண்டு சாவின் எல்லைக்குப் போகிறார்கள். இருப்பும் இல்லாமையும், குற்றமும் தண்டனையும், ஏற்றமும் இறக்கமும் பல்வேறு உணர்வுத்தளங்களை எழுப்புவதை இந்நாவல் சித்தரித்தது. ” சுவை மணம் நிறம் “ நாவலில் நட்சத்திர விடுதியில் பெரும் சமையல்காரராக இருப்பவரின் வாழ்க்கையில் திரைப்படம் சார்ந்தவர்கள் குறுக்கிடுவதையும், பிரியும் மனைவியின் தனித்த வாழ்க்கையும் கோவை குண்டு வெடிப்பு சம்பவங்களின் பின்ணணியும் வாழ்வின் அபத்ததையும் வெளிக்காட்டுகிறது.குறும்படம், திரைப்படம், சார்ந்த பெருநகர மனிதர்களின் வாழ்க்கையை இந்நாவல்கள் கோடிடுகின்றன.
எண்பதுகளில் எழுதத் துவங்கிய நிஜந்தன் முன்பு சிறுகதைகள், குறுநாவல்கள், நாடகங்கள், அரசியல் தொடர்பான கட்டுரைகள், செய்தி தொலைக்காட்சி வேலை , ஆங்கிலப் பத்திரிக்கையாளர் வேலை, தொலைக்காட்சி பொறுப்பாளர் என்று பலநிலைகளில் பெருநகர வாழ்க்கையை மேகொண்டிருப்பவர். உடுமலை நகரத்தில் பிறந்து, கோவையில் பள்ளிப் படிப்பை தொடர்ந்து சென்னை வாழக்கையில் சங்கமித்தவர். பெரும்பாலும் நகர அனுபவங்களில் திளைத்தவர். இவரின் படைப்புகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் அவை பெரு நகர மனிதர்களின் வாழக்கையைப் பேசுபவை. யதார்த்த வாழ்க்கையின் எல்லையில்லாத சமரசப் போக்குகளை கோடிடுபவை. வாழ்வின் அனுபவங்களூடே சமூக வரலாற்றையும், சில கால கட்டத்தின் பகுதிகளையும் உள்ளடக்கியதாக அமைகிறது. வாழ்வின் அபத்தத்தை மெல்லிய நக்கல்தன்மையுடன் விவரிக்கிறது. விழிப்பு கொண்டவன் உயர்ந்து கொண்டே போவதும் தெரிகிறது. சமூக நிகழ்வுகளை பதிவு செய்வதன் மூலம் அது எழுப்பும் தார்மீகக் கேள்விகளையும் முன் வைக்கிறார். வாழும் காலத்தில் நிகழ் காலத்திற்கு எதிரான அவலங்களையும், சந்தோசங்களையும் இயல்பாக பதிவு செய்கிறார். புனைவுகள் என்று ஒதுக்க முடியாத அளவில் அவரின் பாத்திரங்கள் யதார்த்த ஒழுங்குக்குள்ளேயே வலம் வருகின்றன. நடந்து முடிந்த வாழக்கை நினைவுகளை அசை போடுவது நடக்கிறது. மூன்றாம் மனிதர்களின் வாழ்க்கை என்றாலும் அதில் சுயம் கலந்திருப்பதை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. மனிதர்கள் உடலை பெரும் பாரமாகச் சுமந்து செல்கிறார்கள். பாரத்திற்கு காரணமாக ஏதாவது நோய் இருந்து கொண்டே இருக்கிறது. அது மரணத்தை நிழல் போல் படரச் செய்து கொண்டே இருக்கிறது. உடல் சார்ந்த புலன் இன்பங்கள், பாலியல் தொந்தரவுகளுக்கு ஆட்பட்டு மனிதர்கள் இயங்குவதும் திருத்திக் கொள்வதும் நடக்கிறது. சிறிய கதாபாத்திரங்களையும் முழுமையாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். வாழ்க்கையின் அபத்தங்களை நிலயின்மை, நிச்சயமின்மை, தெளிவின்மை , கண நேர தடுமாற்றத்தின் விளைவுகள், புதிர்தன்மை நிறைந்த யோசனைகள், கால இட வெளி சம்பந்தமான தகவல்கள் என்று சொல்லிக் கொண்டே போகிறார். அவமானங்களும், பிரிவுகளும் பகையும் தொடர்கிறது. மனிதர்களின் இறப்பு துயரமானதாக இருக்கிறது. துன்பவியல் மரணத்தின் மூலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. . கொண்டாட்டங்கள் மனிதர்களின் அலைச்சல் மூலம் தெரிகிறது. சடங்குகள் தொலைந்து போய் விட்ட நகர வாழ்க்கை. எல்லாம் அவசரகதியில் நடக்கிறது. பழகிய நாவல் மொழியை உடைத்தெறிகிறார். இதுவரை தமிழ் நாவல் பரப்பில் தென்படாத மனிதர்களையும் அறிமுகப்படுத்துகிறார். வெளிமாநிலமனிதர்கள், வெளிநாட்டு மேல்தட்டு மனிதர்களின் வாழ்க்கையும் சொல்லப்பட்டிருக்கிறது. நிஜந்தன் இயங்கும் தொலைக்காட்சியின் மொழியோ, திரைப்பட மொழியோ இவரின் நாவல் கட்டமைப்பிலும் வடிவத்திலும் கூட பாதிப்பு செய்வதை நான்லீனியர் முறை, நாவலின் வடிவத்தை சீர்குலைப்பது, நாவலின் கட்டுமானத்தை சமையல் குறிப்பு போல் புட்டு புட்டு முன்வைப்பது ஆகியவற்றில் காணலாம். திரைமொழியில் வாய் மொழியும், காட்சி மொழியும், உடல் மொழியும் கலந்திருக்கும். இந்த திரை மொழி நாவல்களின் காட்சி விவரிப்பில் பதிகிறது. உறவுகளுக்குள், உரையாடலாகும் பயன்பாட்டு மொழி துண்டுதுண்டாக இருந்தாலும் காலகட்ட சம்பவங்களை , நினைவுகளை இணைக்கும் பொதுக்களமாக நாவலில் விரிகிறது. ஆண் மையம் கொண்ட அதிகார அரசியலை நுணுக்கமாக இந்நாவல்களில் கண்டு கொள்ளலாம்.
ஆறாவது நாவலான “ பேரலை” யில் இதே அம்சங்களை காண முடியும். பேரலை ஏற்படுத்தும் பவுதீக விளைவுகளைத்தாண்டி பேரலை உருவகமாக ஒவ்வொருவரின் வாழக்கையிலும் வந்து போகிறது. புரட்டிப் போட்டு விடுகிறது. முதல் பகுதியில் விளம்பரக் கம்பனியில் வேலை பார்க்கும் அலிமா மற்றும் அவளின் இரட்டையர்களில் இன்னொருவளான அதிபா முக்கிய கதாபாத்திரங்களாகச் சொல்லலாம். ஆயிசாவிற்கு கணவனை ( கபீர்) மீறி உமருடன் தொடர்பு இருக்கிறது. பத்மலட்சுமி பாதுகாப்பு பணி செய்கிறவள். பீனா பாஷ் சமூக சேவை, நாடகத்தயாரிப்புகளில் அக்கறை கொண்டவள். கபிலன் குருடன் பாடகன் சரிதாவிற்கு திரைப்பட இயக்குனர் ஆகும் ஆசையில் அவளின் செயல்பாடுகள் அமைகின்றன.. இந்தியாவிலும் இந்தோனிசியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்க விவரிப்புகள் தகவல்களாக விரிவாக அமைகின்றன. ” வாழ்நாளில் சுனாமி பார்த்து இறப்பதும் கஷ்டம், சுனாமி பார்க்காமல் இறப்பதும் கஷ்டம் “ என்று பழமொழி இக்கதாபாத்திரங்களால் கட்டமைக்கப்பட்டது போல் சுனாமி அலைக்கழிக்கிறது, ஆயிஷாவின் கணவன் முதல் சுனாமியில் காணாமல் போகிறான். இரண்டாம் சுனாமியில் அவளின் காதலன் காணாமல் போகிறான்.நாவலின் இரண்டாம் பகுதி -“ எல்லையற்ற மகிழ்ச்சி “ இதில் நகுலன், ராமசேசன்( பங்குதரகன் ), பீனபாஷ் ( நாடகக் காரன் ) அருணா ராம்சந்திரா ஷன்பாக் ( செவிலி. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகிறவள். ஆசனவாய் பலாத்காரம், ), பூவரசன் ( அரசியல்வாதி, கட்சி விளம்பரப்பட பிரியன் ). மூன்றாம் பகுதி “ உள்ளடுக்குகள் “- சரிதா குறும்படங்கள் தயாரிக்கிறாள். டார்வின் தத்துவம் அலசப்படுகிறது. அணு சமாச்சாரம், கூடாங்குளம் சர்ச்சை கூடவே வருகிறது . நான்காம் பகுதி “ என் பேரரசு “ என்று ஆயிஷாவின் கதை சொல்லப்படுகிறது. அய்ந்தாம் பாகம் “ அருள் “ பாபா இறந்து போகிறார். பத்மலட்சுமி அவரின் சடலம் காண செல்கிறாள். கபிலன் வேளாஙகண்ணிக்கும், ராமசேசன் மொட்டை போட திருப்பதிக்கு, அலிமா தர்க்காவிற்கு என்று பயணங்கள் தொடர்கின்றன. ஆறாம் பகுதி “ நூல் “ புத்தகக்கண்காட்சி, பதிப்பகம் ஒன்றின் 50 புத்தகங்கள் வெளியீடு, சுனாமி நாள் நூல்கள் வெளியியீடு, 50 நூல்கள் பற்றி விரிவான அறிமுகம், அந்தப்திப்பாளர் பற்றிய குறிப்புகள் என்று எழுத்தாளர்களின் உலகத்தைக் கோடிடுகின்றன.
இப்படி இன்னும் நான்கு அத்தியாயங்கள் நீள்கின்றன. இந்தக்கதைகளிலிருந்து எங்களை விடுவியுங்கள் என்று கதாபாத்திரங்கள் பல சமயங்களில் அலறுகின்றன. நாவல் கதாபாத்திரங்களை எப்படி முடித்து விடலாம் என்ற யோசிப்பும் ஒரு அத்தியாயமாக விரிகிறது. நாவல் எழுதி முடித்த பின் வெளியீட்டு விழா பேச்சும் இருக்கிறது. பதிப்பாளர் அரவிந் அப்பாத்துரையும் ஒரு பகுதியில் வருகிறார் “ நூல் ” அத்தியாயத்தில் முன்பு ஒரு பதிப்பாளரும் வந்தார். ஒரே பெயரில் இருக்கும் பல கதாபாத்திரங்கள் ஆண்களின் பல வடிவங்களாக, பெண்களின் பல வடிவங்களாக அமைந்திருப்பதைப் பற்றி சர்ச்சை தொடர்கிறது.
முந்தின நாவல்களின் கதாபாத்திரங்களும் இதில் வருகிறார்கள். இலக்கிய எழுத்தாளர்கள், அரசியல் பிரமுகர்கள், அறிஞர்கள் பலர் ஊடாக வந்து நாவலின் தளத்தை விரிவாக்கிக் கொண்டே போகிறார்கள்.பல்வேறு தத்துவார்த்த சிந்தனைகளைப் பதிவு செய்ய்யும் முயற்சியாக அக்கதாபாத்திரங்களின் வாக்கு மூலங்கள் அமைந்திருக்கின்றன.விரிந்த அளவு பரப்பில் வாழ்க்கை எதிர்கொள்ளுமொருவனுக்கு இந்த வகை கதாபாத்திரங்களை , மனிதர்களை சந்திப்பது சுலபம். அதுவும் பெரு நகர மனிதனுக்கு சுலபம்… பெரு நகர மனிதனல்லாதவனுக்கு இதெல்லாம் ஆச்சர்யம் தரும் சுவாரஸ்யமான கதாபாத்திரங்கள் ஆனால் புனைவுகள் அல்ல என்பதையும் அவன் உணர்வான்..
என்பெயர் ராமசேசன் என்று இரண்டாம் பகுதியில் ஒரு கதாபாத்திரம் அறிமுகமாகிறது. அவன் பங்கு தரகன். ஒரு உரையாடல் :
” பிம்பங்களை உண்டு திருப்தி அடைந்து விட வேண்டுமா ராமசேசன் ‘
“ இல்லை மாலா. பிமபங்களைத் துரத்துவதுதான் திருப்தி என்று நினைக்கிறேன். அதுவும் பணம் என்ற பெரும் பிமபம். அதுவும் பங்குச் சண்டையில் புரளும் பணம் என்பது உண்மையில் இல்லாதது, அது வெறும் கற்பனையாக, குறியீடாகத்தான் இருந்து விடுகிறது. அதை உண்மையாக மாற்ற முயல்வதுதான் தொடர்ந்து ஒரு போராட்டமாக இருக்கிறது மாலா “
“ இறுதியில் மிஞ்சுவது பணம்தான் ராமசேசன். தத்துவம் அல்ல. பணத்திற்கு கணக்கு உண்டு .தத்துவங்களுக்கு அல்ல “
ஏழாம் பகுதியில் இந்த வரிகள் தென்படுகின்றன.
“ வாழ வாருங்கள் . வாழ்க்கை உங்களுக்காகக் காத்திருக்கிறது. “ என்பது நான் எழுதிய விளம்பர வரி. “ வாழ மறுங்கள் . வாழ்க்கை உங்களை விட்டுப் போய் விட்டது “
.
இந்த வகைத் தத்துவங்களுக்குள் பெருநகரத்தின் பெரும்பான்மையான மனிதர்கள் அடங்கிப் போகிறார்கள் என்பதை அபத்தவகை கட்டுடைத்தலில் ” பேரலை” நாவல் விரவிக்கிடக்கிறது.
அவரின் ஏழாவது நாவல் ” என் பெயர் ’ . நிஜந்தன் என்ற பெயரில் பலர் இந்த நாவலில் வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் வெவ்வேறான வாழக்கை பற்றி விரிவாகவே பேசுகிறார்.. ஒவ்வொருவருக்குள் தேடினால் வெவ்வேறு தத்துவ அம்சங்களும் சிதிலமும் புதைந்து கிடைக்கிறது. இந்த நாவலில் அவரின் முந்தைய நாவல்கள் பற்றிய அபிப்பிராயங்களும், அந்த நாவல்களின் கதாபாத்திரங்களும் ஊடாடிச் செல்கின்றன. பலர் அந்த கதாபாத்திரங்களின் பாதிப்பால் தங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்ப்பதும், பாதிக்கப்படுவதும் புனைவு யதார்த்த வாழ்வில் தரும் பிரதிபலிப்பும் காணக்கூடியதாக இருக்கிறது.
லட்சியங்களைக் கோடிடும் நாவல்களின் காலம் எப்போதோ முடிந்து விட்டது. சரிவுகளும், மீறல்களும்., மதிப்பீடுகள் உடைபடுவதும் சாதாரணமாகிப் போன காலத்தின் குறியீடுகளாக இந்த நாவல்கள் அமைந்திருகின்றன. மையம் அதிகாரக் குவிப்பை உண்டு பண்ணும் என்று நம்புகிறவர் நிஜந்தன். அதிகாரப் பீடங்களைக் கொண்ட சமூகப் போக்கில் படைப்புகள் மையம் சார்ந்தவையாக பெரும்பாலும் அமையும் போது அந்த மையத்தைத் தகர்க்கும் முயற்சியில் இவரின் படைப்புகள் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு தமிழின் குறிப்பிடத்தக்க படைப்புகளை வெளிப்படுத்தியுள்ளது” புனைவின் மயக்கம் எப்போதும் தீராதது. புனைவின் சவாலும் சலிக்காதது. இந்தப்பிரதிக்கான புனைவின் போக்கும் அப்படியே “ என்கிறார் நிஜந்தன்.
இவ்வகை விரிவான களங்களில் ஏழு நாவல்கள் மூலம் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில் நிஜந்தனின் படைப்புலகம் தமிழில் வெகுவாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டி விரிந்து கிடக்கிறது..
(விலை ரூ 200, பாலம் பதிப்பகம், சென்னை 42 044-22434212 ., நிஜந்தன் 9884032075)
( சுப்ரபாரதிமணியன்., 8/2635 பாண்டியன் நகர்., திருப்பூர் 641 602. 9486101003 )

வியாழன், 12 ஜூன், 2014

ஜோதிஜியின் “ டாலர் நகரம் “

ஜோதிஜியின் “ டாலர் நகரம் “

சுப்ரபாரதிமணியன்

– சுப்ரபாரதிமணியன்
————–
படைப்பிலக்கியவாதிகளுக்கு இணையப் பதிவர்கள் மீது ஒரு வகைத் தீண்டாமை குணம் உண்டு. பெரிய தடுப்புச் சுவர் நின்றிருக்கும். பதிவர்கள் தமிழைப்பயன்படுத்தும் விதம், ஹைபிரிட் மொழி , அலட்சியத்தன்மை, குறைந்த வாசிப்பு, தன்னை வெகுவாக முன்னிறுத்தல் இவையெல்லாம் நெடும்கால தவமாய் இருந்து படைப்பிலக்கியம் செய்பவனை புறந்தள்ளும். பதிவர்களிடம் பேச விரும்பாத இலக்கியவாதிகளும் உள்ளனர்.வெகு சிலரே விதிவிலக்கு நான் அவ்வகைத் தீண்டாமையை வெகுவாக அனுஷ்டிக்கக்கூடியவனல்ல.
நண்பர் ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ( ஆனந்த விகடன் குழுமம்) என்னிடம் தொலைபேசியில் ஜல்லியடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு முறை தேவியர் இல்லம் பற்றிக் குறிப்பிட்டார். நானும் மேய்ந்ததில் திருப்பூர் வாசி என்பது தெரிந்தது.பின்னலாடை சார்ந்து பல கட்டுரைகள் இருந்தன.தொழில் சார்ந்த விபரங்களும், அணுகுமுறைகளும், ஏற்றுமதி கொள்கைகள் என்று நிறைய தகவல்கள்.
திருப்பூரைப் பற்றி அதன் நகரம்,தொழில், சுரண்டல், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை என்று இதுவரை சுமார் 100 சிறு கதைகளாவது வெளிவந்திருக்கும் சில நாவல்கள் கூட.பின்னலாடை சார்ந்த சிலர்-தொழிலாளர்கள், படித்தவர்கள்- அவற்றை எழுதியிருக்கின்றனர். ஆராய்ச்சிமுகமாக இங்கு வரும் வெளிநாட்டினர் அங்கு போய் அவிழ்த்து விடும் சமாச்சாரங்கள் டண்டன்னாக இருக்கின்றன. திருப்பூரைப் பற்றி வணிக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் அவை தரும் செய்திகள் அதிர்ச்சி தரத்தக்கவை. சில பெருமைப்பட வைப்பவை. கடின உழைப்பு, விருந்தோம்பல் என்றெல்லாம். அமைந்திருக்கும். உலகமயமாக்கலில் அதன் விளைவுகளை சுட்ட திருப்பூர் போதும்.. வகை வகையாய் பிரச்சினைகள். தீர்வுகள், டாலர்கள் பவுண்ட்கள், அந்நிய செலவாணி என்று.
தேவியர் இல்லம் என்பதை முன்பு ஏதோ டுடோரியல் காலேஜ் என்றுதான் நினைத்திருந்தேன். அந்த பெயரில் பள்ளி, டுடோரியல் காலேஜ் நடத்தினவர்கள் இருக்கிறார்கள். இந்த இல்லமும் ஒரு கல்லூரிதான். ஒரு வகையில் நிப்ட்கல்லூரி . பின்னலாடை பற்றி தகவல் குவியலகள். இதை எழுதுகிற ஜோதிஜி அந்த துறை சார்ந்து தொடர்ந்து தொழில் நிமித்தமாய் இயங்குகிறவர் என்பதால் அந்த துறை சார்ந்த கசமுசாக்கள், கிசுசிசுக்கள், நுட்பமான தகவல்கள் நிறைய கிடைக்கும்.பத்திரிக்கையாளர் பாணியில் . தினத்தந்தி வாசகனுக்கும், படிக்கிற கடைசி தரப்பு வாசகனுக்கும் சென்றடைய அளவில் எளிமையான மொழி, அஜல் குஜல் சமாச்சாரங்கள் என பதிவர்களின் மொழியில் சுலபமாக இயங்குபவர்.பின்னலாடைத் தொழிலில் இருக்கும் சிறுசிறு விசயங்கள் முதல் உற்பத்தி தந்திரம் வரை அலசல். ஒரு வகையில் விளிம்பு நிலைப் பார்வை. சுரண்டல், வில்லன் ஆசாமிகள் என்று அடையாளம் காட்டுகிறார். ஊர் இப்படியாகிப்போச்சே என்று அங்கலாய்ப்பும் இருக்கிறது.சில இடங்களில் நுணுக்கமான பார்வைகள், விவரிப்புகள் இலக்கிய நுட்பத்தை எட்டுவது நல்ல விசயம்.திருப்பூரைச் சார்ந்த வாசகனுக்கு இவை நுணுக்கமாய் தெரியலாம். வெளி அந்நியனுக்கு, சாதாரணஇந்தியனானவனுக்கு சிரமம்தான்.இதெல்லம் இவ்வளவு விரிவாய் எதற்கு என்று அலுப்பு ஏற்படலாம். ஜோதிஜி அலுப்பை உதறி விட்டுத் தொடர்கிறார். சொலவடைகள் , மச்சி மாமா சம்பாஷனைகள் போல் நறுக்கு தெறிக்கின்றன. 2015ல் 25,000 கோடி எட்டி விட வேண்டும் என்ற கனவும், சிரம் திசையும் காட்டுகிறார்.. பல இடங்களில் குதிரைப் பாய்ச்சல். சில இடங்களில் பந்தயக் குதிரை போல் வட்டத்துள் வந்து திரும்பக்கூறல்.வெளி ஆட்கள் வந்து பத்திரிக்கைப் பாணியில் எழுதுவது போய் அந்தந்த துறை சார்ந்தவர்களே நுட்பங்களுடன் எழுதும் பின்நவீனத்துவ காலகட்டம் இது. அந்த மாதிரி ஜோதிஜியும் இருக்கிறார். அதேசமயம் ஜோதிஜியின் உழைப்பும் சிரத்தையும் நல்ல சகுனங்கள். “ வாழ்க்கை விசனகரமானது என்பது உண்மையல்ல. அழுகையும் துயரமும் தவிர அதில் வேறொன்றும் இல்லை என்பதும் உண்மையல்ல. மனிதன் அதில் எதையல்லாம் தேடி கண்டு பிடிக்க விரும்புகிறானோ அவையெல்லாம் வாழ்க்கையில் உள்ளன. வாழ்க்கையில் எது இல்லையோ எது குறைவாக உள்ளதோ அதனைத் திருத்திக் கொள்ளும் சக்தி, உருவாக்கிக் கொள்ளும் சக்தி மனிதனிடம் உண்டு” என்கிறார் மார்க்சிம் கார்க்கி. அந்த வகை மனிதர்களில் ஒருவர் ஜோதிஜி. தொடர்ந்து போராடுதலை சாதாரணமாக்கிக் கொண்டும் எழுதியும் வருபவர். இந்தக் கட்டுரைகளில் நல்ல காரைகுடி சமையல் போல் , புளிப்பும், காரமும் உண்டு. பத்தியமும் உண்டு. வயிறு கெடாமல் இருக்க எல்லாம் தேவை. எது வயிறைக் கெடுக்காது என்பது திருப்பூர் வாசகனுக்கும், பின்னலாடை துறை பற்றி தெரிய ஆசைப்படுபவனுக்கும் புரியும். வெளிநாட்டு இணையதளமொன்றில் தொடராக வந்தது இது . ஜோதியின் தொடர்ந்த உழைப்பு இப்புத்தக வடிவத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறது.
– சுப்ரபாரதிமணியன், திருப்பூர்

சிறுகதை: தேர்

சிறுகதை: தேர்


தூரத்துப் பார்வைக்கு தேர் போலத்தான் இருந்தது. தேருக்கு உரிய சிற்பங்களோ அழகோ இல்லை. தேர் போன்ற வடிவில் இருந்தது. பாடையைத் தூக்குவது போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். பிளாஸ்டிக் குடங்கள், பக்கெட்டுகள், கழிவுப் பொருட்கள், டியூப் லைட்டுகள், மின்சார ஒயர்கள் என்று தாறுமாறாய் அந்தத் தேர் வடிவமைப்பில் இருந்தன. கூர்ந்து கவனிக்கிற போது ஒரு தேர் வடிவம்தான். ஆனால் முழுக்க கழிவு மற்றும் குப்பைப் பொருட்களால் ஆனது என்று தெரிந்தது அப்பாசாமிக்கு.  பாடையைப் போல் அதைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. தேருக்குப்பின்னால் இருவர் இருவராக வரிசையாக வந்து கொண்டிருந்தனர். அவர்களும் ஏதோ சப்தமிட்டு வருவது தெரிந்தது. பேனர்களும், வாசக அட்டைகளும் பிடித்தபடி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் மெல்ல நெருங்க கோஷங்கள் புரிய ஆரம்பித்தன. சின்ன ஊர்வலம்தான்.  அட என்ன... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துள் புகுகிறதே ஊர்வலம். ஒருவாரமாய் போலீஸ் காவலால் திணறியது மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இன்றைக்குக் காணோம். ஓரிருவர் பத்திரம் எழுதும் இடத்தில் தென்பட்டார்கள். ஊர்வலம் காம்பவுண்டுகள் புகுந்தது. கோஷங்கள் சற்று உரத்துக்கிளம்பின. ஊர்வலத்தை யாரும் தடுக்கவில்லை.
  குப்பை இல்லாத உலகத்தை உருவாக்குவோம். பிளாஸ்டிக் இல்லா உலகம் தேவை. கழிவுகளை காசாக்குவோம் என்ற வாசகங்கள் பேனர்களில் தென்பட்டன. கழிவுப் பொருட்களால் ஆன தேர் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. வாசல் முகப்பில்
                                                            2.
அந்தத் தேரை வைத்தார்கள். கோஷங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. நடுத்தர வயதுக்காரர் மிடுக்குடன் புடை சூழ வந்து நின்றார். தேரைச் சுமந்து வந்தவன் ஒரு மனுவை அவரிடம் கொடுத்தான். அவரும் அதை வாங்கிக் கொண்டு மெல்லியதாகப் புன்னகைத்தார். கைகூப்பியபடி உள்ளே மனுவுடன் திரும்பிச் சென்றார்.
 தேர் மீண்டும் வலம் வர ஆயத்தமாவது போலிருந்தது. காம்பவுண்ட் வலதுபுற மூலைக்குச் சென்றது. வாய் திறந்த சிமெண்ட் குப்பைத் தொட்டி குப்பைகளைச் சுமந்து கொண்டு கிடந்தது. தேரை அதில் சாய்த்தார்கள். பிளாஸ்டிக் பொருட்கள் சடசடவென்றச் சப்தத்துடன் அதன் வாய்க்குள் சென்று மறைந்தன. பேனர்களை சுருட்டிக் கொண்டவர்கள் கக்கத்தில் இடுக்கிக் கொண்டார்கள். அட்டை வாசகங்களை வைத்திருந்தவர்கள் வாய் பிளந்த குப்பைத் தொட்டிக்கு நகர்ந்தார்கள்.
 இன்றைக்கு மனுநாள் என்பது ஞாபகம் வந்தது அப்பாசாமிக்கு. ஒருவாரமாய் போலீஸ் பாதுகாப்பு காரணமாய் உள்ளே நுழைந்துவிட முடியவில்லை. மனுநாள் என்பதால் எந்தத் தடையும் இல்லை என்பது போல் எல்லோரும் சகஜமாய் நுழைந்து கொண்டிருக்கிறார்கள் என்று பட்டது. முதலில் மனு ஒன்றை எழுதி விடவேண்டும் என்றிருந்தது.இது ரொம்ப நாளாய் தவணையாய் இருக்கிறது.
    இன்னொரு தவணை விசயம் ரேசன் கார்டிற்கு கூடுதல் இணைப்புத் தாள் ஒட்டுவது. போன மாதம் முப்பதாம் தேதி கடைசி என்று அறிவிப்பு வந்தது, அப்புறம் நீட்டித்தார்கள். எப்போது போனாலும் ரேசன் கடையில் தேர்த்திருவிழா பார்க்க வந்த கூட்டம் போல் இருந்து கொண்டே இருந்தது.திருச்செல்வத்தின் பெயரை நீக்க வேண்டுமா. அப்படியெதுவும் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் அவன் வந்து விடலாம். குடும்ப அட்டையில் அவன் பெயர்  இருப்பது கூட இருப்பது போல நினைப்பு வந்தது அவருக்கு.
 கிராமத்திலிருந்து கிளம்பும்போது தேர் முட்டியைக் கடந்து வந்தது ஞாபகம் வந்தது. தேர் முட்டியிலிருந்து வெளியே தேரை இழுத்து வந்து வெயிலில் காயப்போட்டது போல போட்டிருந்தார்கள். அழுக்கடைந்து போன தேரின் மரச்சிற்பங்களைத் துடைத்துக் கொண்டிருந்தார்கள். லேசான கறுப்பு கலந்த வர்ணத்தை அடிக்கும் வேலையும் தொடர்ந்து கொண்டிருந்தது.

                                                     3
திருச்செல்வத்தை ஊருக்கு தேர் திருவிழாவிற்கு வர ஆயத்தமான இருக்கும்படி அப்பாசாமி கடிதம் எழுதி இருந்தார்."நீ போய் ஒரு வருடம் ஆகப் போகிறது. இந்த வருஷம் மாரியம்மன் தேருக்கு எப்படியும் கொஞ்சம் காசை சேர்த்துக் கொண்டு நீ வந்து விடு. பெரிய சேமிப்பு இல்லையென்றாலும் வந்து போகும் செலவை சமாளித்துக் கொள்வாய் என்று எண்ணுகிறேன். நீ  மலேசியாவிலிருது வரும்போது தங்க நகைகளையோ, பணத்தையோ, எலக்ட்ரானிக் பொருட்களையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நீ விரிவாய் எழுதவில்லை என்றாலும் அங்குள்ள நிலைமையை நீ எழுதி உள்ள வரிகளைக் கொண்டு யூகிக்க முடிகிறது. நீ நிலைபெற இன்னும் பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகக்கூடும் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது. அதனால் உன்னிடமிருந்து எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்பதை யதார்த்தமாய் சொல்லி விடுகிறேன். உன்னைப் பார்க்காமல் அம்மாவும், உன் மனைவியும் அழுகையால் தங்கள் வார்த்தைகளை இக்கடிதத்தில் நிரப்புகிறார்கள். நீ வந்து போவது மட்டும் எங்களுக்கு ஆறுதல் தரும். தேர்த்திருவிழா சமயம் என்பதால் உறவினர்களையும் பார்க்க வாய்ப்பாக அமையும். தேர்த்திருவிழாவிற்கு வருகிற மாதிரி உன் விடுமுறை நாட்களையும், பயணத் திட்டத்தையும் வகுத்துக் கொள். உன்னை ஆவலுடன்  எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்."
 கடிதம் எழுதியபின் மூன்று மாதங்களுக்குள் என்னன்னவோ நடந்து விட்டது. அவன் மலேசியா சிறைச்சாலையில் இருக்கிற விஷயம் வந்து சேரவே காலம் பிடித்தது. உயிருடன் இருக்கிறான் என்பது தெரிந்த போது பெருமூச்சு விட்டுக் கொண்டனர்.
சாவுக்கு கட்டும் சப்பரத்தை மங்கலமாக இருக்கட்டும் என்று தேர் என்று சொல்வார்கள். பிளாஸ்டிக் கழிவுகளால் ஆன அந்தத் தேரை குப்பையில் போட்டார்கள். சப்பரமோ தேரோ மண்ணாகும். இந்தப் பிளாஸ்டி பொருட்கள் மண்ணாகாதே.  நினைவுகளும் மக்காமல் வாழ்க்கை முழுக்க நிற்கும்.
 அப்பாசாமிக்கு கிராமத்து தேர் மிகவும் பிடிக்கும் வெவ்வேறு படிகளாக அது உயர்ந்து கூம்பாவதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருப்பார். யாளிகளும் அவற்றின் வாயிலிருந்து தொங்கும் விளக்குகளும் வெளிச்சம் பரப்பி எரிவதைப் போலிருக்கும். நடனமாடும், அபிநயக்கும் தேவர்கள் சின்ன உருவங்களாய் நேர்த்தியாக இருக்கும். அவற்றின் இடையில் ஒளிந்திருக்கும் இருட்டு அவரை பயமுறுத்திக் கொண்டே இருக்கும். பெரிய கற்களை முட்டுக் கொடுத்து தேர் நிலையில் அழுக்கடைந்து கிடப்பதைப் பார்க்க சங்கடமாக இருக்கும். சீக்கிரம் அழுக்கு  
                         
                                                           4
பரவிவிடும். தேர்த்திருவிழா சமயங்களில் நேர்ச்சைக்காக தேரின் அடியில் மஞ்சள் துணியை ஒற்றை ரூபாய் காணிக்கையோடு சேர்த்து சிலர் கட்டுவார்கள். அப்பாசாமி காணிக்கை பொட்டலம் கட்டி பல வருடங்கள் ஆகிவிட்டன. இவ்வருடம் திருச்செல்வத்தை அழைத்துக் கொண்டு போய் காணிக்கை பொட்டலம் கட்ட நினைத்திருந்தார்.
 "காணிக்கை பொட்டலம் கட்டலாம். மொட்டை கூட அடிக்கலாம். வூட்ல இருக்கறவங்க ஒரு ஆள் விடாமெ மொட்டை அடிக்கலாம். குலதெய்வம் கோவிலுக்கு கண்டிப்பாக கூட்டிக்கொண்டு போகணும் எப்படியிருந்தாலும் அவன் திரும்பி வரணும்" முன்பெல்லாம் இப்படித்தான் பிரார்த்தனை அவரின் மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும். இப்போதெல்லாம் பிரார்த்தனை மெல்ல மறைந்து போய் கேவலாய் அழுகைதான் முன் நிற்பது அவருக்கே அருவருப்பைத் தந்தது.
 மனுநாள் என்பதால் பரபரப்பாய் மக்கள் அலைந்து கொண்டிருப்பதாய் பட்டது. முகப்பிலிருந்து உள்நோக்கும் பாதையில் கசகசவென்று நின்று கொண்டிருந்தவர்களிடம் பரபரப்பு இருந்தது. அவசர கதியில் யாரையாவது இடித்துத் தள்ளி சங்கடப்படுத்திக் கொள்ள கூடாது என்ற நினைப்பு வந்தது. மனு கொடுக்கிற நாளில் எந்த சங்கடமும் வந்துவிடக் கூடாது. அது மனுவைக் கூட பாதித்துவிடும். மனுவின் கோரிக்கையைக் கூடப் பின் தள்ளிவிடும் என்று நினைத்ததை எண்ணி லேசாகப் புன்னகைத்துக் கொண்டார்.
 மாடிப்படியிலிருந்து வரிசை ஆரம்பித்தது. இப்போதே ஐம்பது பேருக்கு மேல் நின்றிருந்தனர். இன்னும் நாலைந்து பேர் நின்றால் கட்டிடத்தின் உள் நிழலில் இருந்து தப்பித்து வெளியே போய்தான் நிற்க வேண்டியிருக்கும். அந்த ஐம்பது பேரில் ஒருவராக வந்து விட்டது குறித்த ஆறுதல் இருந்தது. அப்பாசாமி ஒரு நாள் கிளம்பும்போது திருச்செல்வத்தின் ஜாதகத்தை எடுத்து வைத்திருந்தார். இன்னும் மஞ்சளாய் மின்னியது. ஓலைச் சுவட்டின் கீறல் போல் அதன் எழுத்து ஜாதகத்தாளை மீறிக் கொண்டுத் தெரிந்தது. அந்த ஒளியில் மகனின் எல்லாத் துயரங்களும் தொலைந்து போவதாய் நினைத்தார்.
 "இதை எதுக்கு எடுத்துட்டு" என்றாள் மனைவி. அவள் திருச்செல்வத்தின் நிலைமை எண்ணி திடுமென படுக்கையிலிருந்து எழுந்து தேம்பி அழுது  ஓய்ந்துவிட்டவள். கண் முன்னால தொலைஞ்சு போயிருந்தா கூட பரவாயில்லே
                                                    5
என்பாள். விமானம் ஏறி மேகத்துள் நுழைந்து தவறி விட்டவன் போலாகிவிட்டான் என்பாள்.
 "இதை எதுக்கு எடுத்துட்டு"
 "ஒரு பார்வை பார்த்தல்லாம்"
 "அவன் பிளைட் ஏறும்போது பாத்ததுதானே"
 "பாத்ததுதா"
 "அப்ப இல்லாதது இப்ப என்ன வரப் போகுது."
 "மனசு ஆறுதலாச்சும் இருக்குமே. அவன் தலையெழுத்து என்னன்னு பாக்கலாம். பெருமாள்  கோயில்லே ஒரு அர்ச்சனையும்."
 "அர்ச்சனையும் பொய். பூசாரி வாக்கும் முழுப்பொய் ஆசாரி வாக்கு அரைப் பொய் மாதிரி அது முழுப்பொய்தா. நம்மளெ நாமளே ஏமாத்திக்கறதுதா எல்லாமே பொய். அவன் தலை எழுத்து மட்டும் உண்மை"
 அவள் தழதழத்த குரலில் சொல்லி அழுதாள். பெரிய மகன் நம்பிக்கையோடுதான் இருந்தான். திருமணம் என்று வந்தபின் மாறிப்போய் விட்டான். அவனுக்கு அப்பாசாமி ரேஷன் கடைக்குப் போய் வருவது பிடிக்காது. "இந்த ரேஷன் அரிசி தின்ன உங்க காலத்தெ மறந்துட்டு நல்லதா சாப்புடுங்க. இது வேண்டாம்" என்று எரிச்சல்படுவான். அவன் விட்டுப் போனபின்பு அவர்களால் ரேஷன் அரிசிதான் குடும்பத்திற்கென்றானது. இளைய மகன் எப்படியோ சம்பாதித்து அதே வார்த்தைகளைச் சொல்லுவான் என்பது அப்பாசாமி மனதில் இருந்தது. மனது மட்டும் அலைபாய்ந்து உண்மைகளைப் பரபரத்துச் சொல்லிக் கொண்டிருந்தது.
 இதுவும் ஒரு வகை நாடு கடத்தலா. அவனே தன்னை கடத்திக் கொண்டு போய் அங்கு உட்கார்ந்து கொண்டான். அல்லது இது தீவுக்கடத்தலா.  ஏதாவது ஒரு தீவில் கொண்டு போய் விட்டு விட்டது போலிருந்தது. மலேசியா ஒரு தீவுதானா. கடலால் சூழப்பட்ட எல்லா நாடுகளும் தீவு என்றுதான் நினைப்பார்.. தேயிலைத்தோட்டம், ரப்பர் தோட்டம் போட தீவுகளுக்கு பொய் சொல்லி கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள். தொழு நோய் போன்று பெரு வியாதிக்கார்ர்களுகென்றும்,
                                                      6
சிறைக்கைதிகளுக்கென்று  தீவுகள் இருந்திருக்கின்றன. விமானத்தில் பயணம் போய் காணாமல் போனவர்களைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.  காணாமல் போனவர்களில் இதுவும் ஒரு வகை என்ற எண்ணம் வந்தது.திருச்செல்வனும் ஒருவன்.
எண்ணங்களை வைத்து நாட்களைக் கடத்துவது அலுப்பானதாக இல்லை அவருக்கு.
     
எண்ணங்கள் தேர் போல் ஆடி அசைந்து கொண்டிருந்தன அவருள்.


புதன், 4 ஜூன், 2014

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்


பதிவுகளில் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
         
பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்சுப்ரபாரதிமணியன்பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக  அமைந்தவை. சமகாலத்தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை.  இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும்  நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஈனர்கள் என்று சாடுகிறார். தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.பாரத தேசம்  சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஓரு புதிய  தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருகுத் தென்பட்டிருக்கின்றன. எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி  தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.வறுமையும் பிரச்னைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாமல் கவித்துவக் குரலை  வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லா காலத்திலும் எவ்வகை சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அதனால்தான் மரணமில்லா பெருவாழ்வும் அவனின் கனவாக இருந்திருக்கிறது.அவரின் இறுதிச் சொற்பொழிவினை ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.அதன் தலைப்பு : ”  மனிதனுக்கு மரணமில்லை.”  அவரை சிறந்த சொற்பொழிவாளராகக் காட்டும் தரவுகளைத் தந்திருக்கிறார். இதைத்தவிர இஸ்லாம் மார்க்க மகிமை போன்ற சொற்பொழிவுகளை மேற்கோள் காட்டி இதைச் செய்திருக்கிறார்.
தாவரங்களின் வழி அன்பைத்  தனது தொழிலாக, மதமாக வரித்துக் கொண்ட  இன்றைய சுற்றுசுசூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கு காலத்தில் சமூக மனிதனான எழுத்தாளர்கள் கை கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைத் கூர்ந்து  கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது.பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. பட்டுப்பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து  அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதை  தவிர்க்கிறார். அதை தன் வீட்டு வேலைகார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லி பரிசாக அளித்தவர். கழுதைக்குட்டியை தோளில் வைத்து கொண்டாடியக் காட்சி பல இடங்களீல் காட்டப்பட்டிருக்கிறது.திருவனந்தபுரம் மிருகக் காட்சிசாலையில்சிங்கத்துடன் உரையாடியவர். திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு தேங்காய் பழம் கொடுத்து  உபசரித்தவர். காக்கை குருவிகளுக்கு உணவு அளித்து புரந்தவர். புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வலியுறுத்தியவர். சக உயிர்களின் இருப்பு எப்படி பூமியின் சமநிலைக்கு உதவுகின்றன என்பது பாரதியின் செயப்பாட்டால் விளங்கியதை சேதுபதி எடுத்துரைக்கிறார்.  .
பலஅபூர்வமான  புதிய தரவுகளையும் செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக்கிறது. பாரதி தலைமறைவு வாழ்க்கையில் சென்னையிலிருந்து புதுவைப் பயணத்தை இரயில் மேற்கொண்டாரா, இல்லை படகில் சென்றாரா என்ற ஆய்வில் படகில் சென்றிரூகும் வாய்ப்பு பற்றி  எடுத்துரைக்கிறார். ( இதை மெய்பிக்க அவர் அரசாஙகத்தின் கெமிக்கல் எக்ஸாமினரின் முதல் நிலை உதவியாளரான நஞ்சுண்டராவ் வாரிசுகளை சேதுபதி தேடிச் சென்ற அனுபவங்களை நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவே ஒரு தனி நூல் அளவு விரிவானது)  படைப்புகளைத் தொகுக்கப்படுகிற போது ஏற்படும் மயக்கம் தந்திருக்கும் குழப்பத்தை சேதுபதி பாரதிதாசன் அரவிந்தர் மீது பாடிய அரவிந்த பாமபு என்ற கவிதை பாரதியின் பாடலென இடம்பெற்றிருப்பதை ஆதாரங்களுடன் காட்டுகிறார்.தன் நண்பரான அரவிந்தரின் நட்பு  ஆன்மீக இலக்கிய உறவாக இருந்ததைக் காட்டும் அத்தியாயங்கள் வெகு சிறப்பானவை.
பாரதி எப்பொருளையும் விட்டு வைக்கவில்லை. எந்தக்கடவுளையும் கூட.பக்தி இலக்கியப் பார்வையிலிருந்து  மாறுபட்டு செயலாக்க  நிலையில் நாயன்மார்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம்  செய்திருப்பதை சேதுபதி விரிவாய்ச் சுட்டிக்காட்டுவதில் நவீன நாயன்மாராக பொலிவுறும் பாரதியைக் காட்டுவதன் மூலம்    கலை வடிவம் மீறி செயல்வடிவிற்குறிய  அவசியத்தை  வலியுறுத்துகிறார். சமூக செயல்பாடுகளில் இன்றைய எழுத்தாளர்கள் நிற்க வேண்டிய இடம் எது என்பது இதனால் பூடகமாக சேதுபதி வெளிப்படுத்தியிருக்கிறார். என்பது சமகால முக்கியச் செய்தியாகும். அருணகிரிநாதர் முதற் கொண்டு அரவிந்தர் வரைக்கும்,  நவராத்திரி முதல் தீபாவளி வரை, மதம் முதல் தொழிலாளி வர்க்கம் வரை பாரதியின் பாடல்கள் கவிதையின், படைப்பிலக்கியத்தின்  உச்சமாயும், சமூக வாழ்வியலாகவும் அமைந்திருப்பதை சேதுபதி ஆழமான வாசிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.அருணகிரிநாதரின் கவிதைகளை மொழிபெயர்த்தது, நாயன்மார்களின் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை  சேதுபதி வெளிப்படுத்துவது பாரதியின் ஆழமான வாசிப்பின் அடையாளத்தையும் பன்முகத்தன்மையையும்  விரிவுபடுத்துகிறது.
மேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப்பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல்  என்ற வகையிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக்கிறது..அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது. இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது. சேதுபதியும் படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின்  வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கியச் சம்பவங்களையும் சுவாரஸ்யமானச் செய்திகளையும் அவரின் கவிதைகளின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்புகளில் மட்டுமின்றி வாழ்க்கைஊடாகவும் காட்டுவதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.
நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்- முனைவர் சொ. சேதுபதி ரூ 115, நியூ சென்சுரி  புக் ஹவுஸ், சென்னை
subrabharathi@gmail.com

திங்கள், 2 ஜூன், 2014

மிருக இயல்புகளும், மனித எதிர்வினைகளாயும் “ அசோகனின் வைத்தியசாலை “ நாவல்

நடேசன் முன்பே ” வண்ணாத்தி குளம் ” நாவல், “ வாழும் சுவடுகள் ” போன்ற நூல்களின் மூலம் அறிமுகமானவர்.           ” வண்ணாத்தி குளம் ” நாவலில்  இலங்கையச் சார்ந்த ஒரு கிராமத்தை முன் வைத்து அவர்கள் எவ்வித இனதுவேசமும் இல்லாமல் வாழ்ந்து வருவதையும், அதிலிருந்து ஒரு பெண் விடுதலை இயக்கத்திற்கானவளாக வெளிக்கிளம்புவதையும் காட்டியது. காதல் பிரச்சினைகள், அரசியல் காரணங்களை முன் வைத்து  கிராமநிகழ்வுகளூடே  இலங்கை மக்களின் வாழ்வியலை சித்தரித்த்து. 1980-1983 என்ற காலகட்டத்தைக் கொண்டிருந்தது. “ வாழும் சுவடுகள் “ என்ற அவரின் தொகுப்பில்  மனிதர்கள், மிருகங்கள் பற்றிய அனுபவ உலகில் விபரங்களும் உறவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்தது.  “ வைத்யசாலை ” என்ற இந்த நாவலை அதன் தொடர்ச்சியாக ஒரு வகையில் காணலாம்.தமிழ்சூழலில் மிருகங்கள் பற்றியப் பதிவுகள் குறைவே. விலங்குகள் மருத்துவம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டிருந்த ஜெயந்தன்  தன் படைப்பில் சிறிய அளவில் தன் மருத்துவமனை அனுபவங்களை  பதிவு செய்திருக்கிறார். பெரும்பாலும் வீட்டுக் கால்நடைகளை மருத்துவத்திற்கு கொண்டு வருகிறவர்களின் மன இயல்புகள், சமூகம் சார்ந்த் பிரச்சினைகளீன் அலசலாய்       அவை அமைந்திருக்கின்றன.  அசோகன் இந்த நாவலில் ஆஸ்திரேலியாவில் பிழைக்கப்போன சூழலில் அங்கு மிருக வைத்திய சாலையில் பணிபுரிந்த அனுபவங்களை சுவாரஸ்யமான நாவலாக்கியிருக்கிறார்.
சுந்தரம்பிள்ளை போர் சூழலிலிருந்து தப்பிக்கவும், வேலை நிமித்தமும் ஆஸ்திரேலியா போகிறான். மெல்பர்னில் ஒரு வைத்திய சாலையில் வேலைக்குச் சேர்கிறான்.” பனை ஓலைப்பையில் சரசரவென உயிர் நண்டு போல் குடைந்தது” போல 6 மாதம் வேலையில்லாமல் சிரமப்பட்டுத்தான் வேலை கிடைக்கிறது.மைலோ என்ற பூனையுடன் பேசுகிறான். நாய் கொட்டையடித்துப் பழக வேண்டியிருக்கிறது. காளை விதை சரி செய்ய வந்து போகிறது.  மிஷேல், ரிமதி பாத்த்விய போன்ற கூட வேலை செய்ய்யும் பெண்களின் உலகமும் காட்டப்படுகிறது.நாய்க்குட்டிகள் தத்தெடுப்பும் நடக்கிறது.பிறந்த நாட்கள் நாய்களுக்கென்றும் வந்து போகின்றன. பிறந்த நாள் பரிசும் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.பிணவாடை இல்லாத கிரிட்டோரியம் தென்படுகிறது. கெட்ட வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்படுவது சுலபமாக இருக்கிறது. ஓவர்டைம் வேலையின் சங்கடங்கள் சுந்தரம்பிள்ளைக்கும் இருக்கிறது. டாக்டர் காலோஜ் என்னும் தலைமை வைத்தியரின் பொறுமையை மீறும் அனுபவங்கள் விரிகின்றன.கலிபோர்னியா காட்டுத்தீ அனுபவங்கள், டண்டினோங் மலைத்தொடர் பற்றியும் சொல்லப்படுகின்றன.மெல்போர்ன் நகர உருவாக்கம் சொல்லப்படுகிறது.ஞாயிறு விடுமுறை நாட்கள் கழியும் விதம் சொல்லப்படுகிறது. விசேசமான பூனை ஒன்று 9 தரம் செத்து உயி பிழைக்கிறது. நாய்களின் கர்ப்பம் அலசப்படுகிறது. கணவன் மனைவி முரண் நீடித்துக் கொண்டே இருக்கிறது. காலோனிக்கின் முன்னாள் காதலி மஸா பற்றி சொல்லப்படுகிறது.  மூன்றாம் பாகத்தில் புது மானேஜர் வருகிறார்.புது சினேகிதி பெண் கிடைக்கிறாள். மதுவிடுதியும், பிறந்த நாள் கொண்டாட்டமும் சொல்லப்படுகிறது.   தமிழ் பாத்திரங்கள் அவ்வப்போது வந்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறர்கள். புலம் பெயர்ந்த் சூழலில் மாறின சிந்தனைமுறைகள் பற்றிப் பேசப்படுகிறது.வெளிநாட்டுச்சூழல்,உண்மை யதார்த்த்தோடு தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டியது பற்றிச் சொல்லப்படுகிறது.மருத்துவ உலகின் நிர்வாகம், ஆலோசனைகள் நீள்கின்றன.புதிய திணையான பகுதி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. ஜின் தற்கொலை நிகழ்கிறது.  பூனைகளைக் கருணைக் கொலை செய்ததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கணவன்கள் பிரிந்து சென்ற பின் பல பெண்கள் கஷ்டப்படுகிறார்கள். விவாகரத்துகள் நிகழ்கின்றன. ஆவி போல் உலவும் ஷாலற் பெண் பைத்தியம் பிடித்து அலைகிறாள். ஆண்டனி கதை விரிகிறது. சிட்னி நகர  கான்பரசிற்கு போய் அனுபவங்களை விவரிக்கிறான். கணவனை பக்கத்து அறையில் வைத்துக் கொண்டு உடல் உறவு கொள்கிறாள் ஒரு பெண். பெண்ணை மிருகத்தனமாக தாக்கும் அவள் கணவன். அவளின் காயங்கள், கணவனைப் பழி வாங்க அவள் அப்படி நடந்து கொள்கிறாள்.ஷ்ரன் கணவன் மனைவி சண்டை மணவிலக்கும் கொலை வரை செல்கிறது. கொலிங்புட் எனும் பூனை 15 வயது, கருணை கொலை செய்யப்படுகிறது.  வழக்கு நீதிமன்றத்திற்குப் போகிறது. கடைசியில் தூக்கு தண்டனை, கருணைக் கொலை பற்றிய விவாதங்கள் தொடர்கின்றன.
“ அசோகனின்  வைத்தியசாலை “ நாவல் மிருகங்களின் வாழ்க்கையில் கூடசேர்ந்து  வாழ நேர்ந்த மனிதர்கள் இதில் காணக் கிடைக்கிறார்கள்.மனித இயல்புகளும், மிருக இயல்புகளும் வெளிப்படுகின்றன. மனிதர்கள் மிருக இயல்பை ஏற்றுக் கொண்டு விசித்திரமாகச் செயல்படுபவர்களாகவும் இருக்கிறார்கள். மனிதர்கள் மிருக இயபைக் காட்டும் போது  ஆறிவு என்பது மறைந்து போகிறது. மிருகங்கள் கூட பல விசயங்களில் மனிதர்களுக்கு ஆறுதலாகவும், முன் உதாரணங்களாகவும் அமைந்து விடுகிறார்கள். இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவரான மனோஜ்தாசின் சில கதைகள் மிருகங்களுடனான மனித உறவுகளை விளக்குவதற்குப் பயன்பட்டதை அவரின் சில சிறுகதைகளை படிக்கையில் உணர்ந்திருக்கிறேன்.புலியொன்றை வைத்துடு வளர்த்து வருபவன் சுதந்திரம் என்பது அது காட்டிற்குள் திரிவது என்பதைக் கண்டு கொண்ட ஒருவன் அதை காட்டிற்குள் கொண்டு விடச் செய்கிற முயற்சிகள் தோற்றுப் போவதைக் காண்கிறான். முதலை ஒன்று ஒரு பெண்ணின் மீது மையல் கொண்டு அவளை இழுத்துச் சென்று குடும்பம் நடத்துகிறது. அது மனித உருவாகவும் ஆகும் இயல்பு கொண்டது. அது ஊருக்குள் வந்து இருக்கும் போது கொல்லப்படுகிற போது  அவற்றின் உறவில் ஏற்படும் அதிர்வுகளை இன்னொரு கதை பேசுகிறது. ஆந்தை பற்றிய ஒரு கதையின் சித்தரிப்பில் ஆந்தை மூடநம்பிக்கைகளின் குறியீடாகவும், கடவுளின்  நேரடி பிரதிநிதியாகவும் ஊருக்கு வந்து மக்களை மிரட்டுவதை ஒரு கதையில்  சித்தரித்தருக்கிறார். அதை ஜமீந்தார் ஒருவர் சுட்டுக் கொல்லும் போது அந்த ஊர் பயத்துள் மூழ்கிப் போவதை அக் கதையில் சொல்கிறார். இதேபோல் அசோகனின் இந்த நாவலில் மிருக இயல்புகளும், விசித்திரங்களும்  மனிதர்களை ஆட்டிப்  படைப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.சமநிலையான சமூகத்தில் மிருகங்களும் மனிதர்களும் இயைந்து உலாவுவதை மிருக வைத்திய சாலை ஒன்றை முன் வைத்து அசோகன் சொல்லிக் கொண்டு போகிறார்.    
ஆஸ்திரேலியா மக்கள் சமூகம் ஒருவகையில் அகதி மக்களையும், வேலை தேடி வருபவர்களையும் ஏற்றுக்கொண்டு இயங்க அனுமதிக்கிற சமூகமாகும். வேற்று மனிதர்களையும் சக மனிதர்களாகப் பார்க்கும் பார்வையில் விரிந்த அளவிலேயே செயல்படுகிறது. இதில் வரும் ஆஸ்திரேலிய மனிதர்கள்  அவ்வாறே இயங்கவும் செய்கிறார்கள். அந்த சமூகத்தில் வாழ நேர்ந்த அனுபவங்களை அசோகன் சொல்லிச் செல்கிறார்.வித்தியாசமான களத்தில் மனித  வாழ்வு இதில் புலம் பெயர்ந்த தமிழனின் அனுபவங்களாய் விரிந்திருக்கிறது.
subrabharathi@gmail.com

சுப்ரபாரதிமணியன்