சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 14 ஜூன், 2013


 சிறுகதை: தங்கமே தங்கம் :
 
       சந்தானலட்சுமிக்கு தினசரிகளில் தங்கத்தின் விலை நிலவரம் பற்றிப் பார்ப்பது சமீபத்திய பழக்கமாகி விட்டது. அது எப்போது ஆரம்பித்தது  எனபது ஞாபகமில்லை.இரண்டு வருடங்களுக்குள்தான் இருக்கவேண்டும். கைக்கெட்டா தூரத்தில் பறந்து கொண்டிருந்ததிலுருந்துதான் என்பது ஞாபகம்.சென்னை விலை, உள்ளூர் நிலவரம், டாலர் மதிப்பு எல்லாம் அத்துப்படி. கையிலிருந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டாள்.
     சந்தியா வெற்றிலையைச் சுருட்டிக் கொண்டு வந்தாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த உடம்பை நிமிர்த்திக் கொண்டு வாயைத் திறந்தாள் சந்தானலட்சுமி. அசைவம் சாப்பிடுகிற நாட்களில் சந்தியா கூட இருந்து விட்டால் வெற்றிலை அவசியம் தருவாள்.இந்த வெத்தலை போடற பழக்கம் எப்போ ஆரம்பிச்சது சந்தியா
“ என் கல்யாணத்துக்குப் பிந்திதா. மாமியார் வீட்லே தவறாமெ பண்ணுவாங்க. அதுவும் அசைவம் இருக்கற நாள்லதா.
இளசாய் இரண்டு வெற்றிலை. லேசாய் துருவிய தேங்காய் பூ  கொஞ்சம். சுண்ணாம்பு ஓரத்தில். ஒரு துண்டு கிராம்பு. சிறு பாக்குத் துண்டு. மூடின வெற்றிலைக்குள் இதெல்லாம் இருக்கும். கண்களை மூடிக் கொண்டு வெற்றிலைச் சாறு தொண்டையில் இறங்குவது  சர்வ ரோக நிவாரணியாகப் படும்.
“ மாமியாருக்கு வெத்தலைதா சர்வரோக நிவாரணி. கொஞ்சம் சளின்னு இருமிட்டாப் போதும் இளசா வெத்தலையை நீட்டிருவாங்க. வெத்தலை சாறு குடிக்கறியான்னு பயமுறுத்தல் வேற இருக்கும்.வெத்தலைக்காம்பே அவங்க கிள்ளற லாவகமே தனி.
“நான் எப்போ பத்திரிக்கையிலே தங்கம் வெலையை டெய்லி பாக்கற பழக்கத்தை ஆரம்பிச்சேன்னு தெரியுமா சந்தியா.
“ இந்தப் பழக்கம் பத்தி எனக்கு எப்பிடி தெரியும். என்ன புதுசா இருக்கே
                       
“ என்னமோ தொத்திருச்சு.
“யாருகிட்ட இருந்து ...
யாருகிட்ட இருந்து.. ஞாபகம் வரமாட்டீங்குது. நிச்சயம் ஆபிஸ்ல யாராச்சுகிட்ட இருந்துதா இருக்கணும்.வீட்டிற்கு வரும் தமிழ் தினசரி. அப்புறம் அலுவலக மனமகிழ் மன்றத்தில் இரண்டு ஆங்கிலப் பத்திரிக்கைகளும், இரண்டு தமிழ் தினசரிகளும். அதெல்லாம் போதாதென்று இப்போதெல்லாம் பல இதழ்களில் விவாதக் கட்டுரைகள். தங்கம் உற்பத்தி குறைவு. அதனால் விலை ஏறிக்கொண்டே இருக்குமாம். அழகு என்பது அணிகலன்களிலா இருக்கிறது என்று சமாதானம் வேறு.
     சந்தான லட்சுமி ரொம்ப காலமாய் உடம்பில் மாட்டும் நகையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.காதுக்கம்மல், சின்னதாய் மூக்குத்தி, மெல்லிசான சங்கிலி. அவ்வளவுதான். காதுக்கம்மலை அவ்வப்போது மாற்றிக் கொள்வாள். அலிக்கம்ம்ல், மாங்காய் கம்மல் இரண்டும் அவளுக்குப் பிடிக்கும். மற்றபடி மூக்கும், கழுத்தும் எவ்வித மாற்றத்தையும் பார்த்ததேயில்லை. சமீபத்தில் ஒரு வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து  திரும்பும் போது  மூக்குத்திக் கம்மல் நழுவிவிட்டதை லேசாக உணர ஆரம்பித்த்தாள். என்ன ஆகியிருக்கு. அனாவிசியமாய் மூக்கைத் தேய்த்ததால் வந்த வினையா, சளி என்னமோ பிடிக்கப் போகிறது என்று மூக்கு நமநமத்தது போல இருந்தது  நழுவிப் போகச் செய்து விட்டதா. மூக்கின் மேல் வைர மூக்குத்தி இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.அலுவலகத்தில் எல்லோரும் வைரமூக்குத்திக்கு மாறி விட்ட பின்பு கடைசியாய்  மாறியவள் சந்தான லட்சுமிதான். “ கவர்மெண்ட் உத்தியோம்ம்னா சும்மாவா. இத்லே கூட காமிக்காட்டி எப்படி என்று தனலட்சுமி  கேட்பாள்.ராசி பார்த்து வைரம் போட வேண்டும். ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு விதமாயும், வர்ணமாயும்.நல்ல வேளை மூக்குத்தி தொட்டு நிற்கிறது. அதைக் கையில் பிடித்துக்கொண்டே பேருந்திலிருந்து இறங்கி  வீடு போக வேண்டுமா என்று பயமாக இருந்தது.என்னம்மா சிறு மூக்கு உடஞ்சு போச்சா. ரத்தம் வழியுதா. “  பேருந்தில் அவளின் அருகில்
                             
நின்று கொண்டிருந்த வயதானவள் கேட்டாள். “ அதெல்லாம் இல்லே அம்மா. மூக்குத்தி திருகாணி கழண்டு போயிருச்சு.
“ இந்த பஸ்லே எப்பிடி தேடறதம்மா..
“ ஸ்டாப்லே எங்காச்சும் நின்னாத்தா முடியும். . இந்த நேரத்தில எங்க நிக்கப் போகுது. போலீஸ்ஸ்டேசன்ல கொண்டு போய்  நிறுத்துனாத்தா உண்டுசொல்லியபடி சிரித்தாள் முதியவள். “ இன்னிக்கு வெள்ளிக்கிழமை வேறே..நகை எதுவும் தொலஞ்சு போகக்கூடாது. அபசகுணமாப் போயிரும்
“  மூக்குத்தி வுழுந்தாக்கூட வைரமிணுமிணுப்புலே கண்டு புடுச்சிரலாம். திருகாணியை எங்க போயித் தேடறது.வைரமூக்குத்தி தானே நீ போட்டுருக்கறது “ அவள் பரபரத்து  பேருந்தின் வேகத்தினை மீறி ஓடிக்கொண்டிருந்தாள். வீட்டிற்குப் போய் நுழைந்து விட்டால் போதும். வைரமூக்குத்தியைக் கழட்டி வைத்து விடலாம். அதையாவது காப்பாற்றிக் கொள்ளலாம்.பக்கத்தில் நின்றிருந்த பெரியவர் சொன்னார்: “ பஸ் கொஞ்சம் சாய்ஞ்சுட்டுதா போயிட்டிருக்கு. கவனிச்சீங்களா.  நிக்கறதிலே வலது பக்கம்தா உருண்டு போயிருக்கும். “ சொல்லியபடியே தேட ஆரம்பித்து விட்டார்.அப்புறம் கிடைத்த போது சொன்னார்: “ நீ மகாலட்சுமிதா. வெள்ளிக்கிழமையும் அதுவுமா கெடச்சுடுச்சு.
     அக்கா கலாவை எல்லோரும் தங்கம் என்றுதான் கூப்பிடுவார்கள். கலா தனது பெரிய மகளை அதன் பாதிப்பில்தான் வைரம் என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தாள்.அவள் கணவன் இறந்த போது “ இந்த தங்கத்தோட கதியைப் பாத்தியா.  காலம் பூரா மங்கித்தா கெடக்கணும் போல.இரண்டு குழந்தைகள் கலாவுக்கு. பிறந்த வீட்டிற்கு வந்து விடுவாளோ என்ற பயம் இருந்தது சந்தானலட்சுமிக்கு. வயதான மாமா, மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேறு யாருமில்லை என்பதால் அங்கேயே தங்கி விட்டாள். இரு அக்காக்களுக்கும் திருமணம் செய்து  வைத்ததில் அவளின் சம்பாத்தியம் முழுவதும் போய்விட்டது. அதனால் நகை என்று அதுவும் தனக்கென்று

                             
வைத்ததில்லை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்து விட்டாள். “ தங்கம் போடறது புடிக்கலே “ என்று சொல்லி வைத்திருந்தாள்..
“தங்கம் போடாட்டி என்ன. பிளாட்டினம் போடறது. இல்லே  .அதெல்லாம் தங்கத்தை விட விலை உசத்திதானே..
“கல்யாணம்ன்னு வரும் போது பாத்துக்கலாம் “  அச்யதிதியை அன்று நகைக்கடை முன்பு கூட்டம் நிரம்பி வழிவது அவளுக்கு பார்க்க எரிச்சலாக இருக்கும்.உடம்பில் போட்டுக் கொள்ளாமல் இருந்தால் பரவாயில்லை. ஏதாவது சேர்த்து வைக்கலாம் என்று பிறர் சொன்ன அறிவுரையும் மனதில் ஏறவில்லை.   
     கலாவின் கணவன் டாஸ்மாக் பாரில் குடித்துக் கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில்  செத்துப் போனான். மழைக்காலம். குளிர் வேறு கூட்டத்தை அதிகமாக்கியிருந்தது. சுவர் இடிந்து விழுந்ததில்  வெளியூர் தொழிலாளிகள் அதிகம் இறந்திருந்தனர். . நேபாளிகள், ஒரியர்கள் கூட இருந்தார்கள். சமீபத்தில் அந்த சாவுகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அந்த பாருக்கு அனுமதி தந்த மேலாளர் சொன்னார்: “ எல்லாம் கடவுளின் செயல். இப்படி சாகணும்னு அவங்க தலையிலே எழுதியிருக்கு. “
நீதிபதியும் சொன்னார்: “ அப்படியா. அப்போ நீங்க ஜெயிலுக்குள்ள இருக்கறது கடவுளின் செயல் . ஜெயிலுக்குப் போங்க.கலாவின் கணவன் இறந்த போது கூட  அப்படித்தான் பலர்  சொல்லிக்கொண்டிருந்தார்கள்.மேதைகளின் வார்த்தைகள் எப்போதும் ஒத்தே போகின்றன.
     அன்றைக்கு வீட்டில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது. உறவுகள் வந்திருந்தனர். கூட்டம் சேர்ந்து விட்டால்  அம்மாவுக்கு அலர்ஜி வந்து விடும். காலையிலேயே படுக்கைகுப் போய்விட்டாள். ஞாயிற்றுக் கிழமை வேறு . அசைவம்தான். ஆட்டுக்கறி முந்நூற்றைம்பது  ஆகி விட்டது. ஞாயிறில் அசைவம் இல்லாமல் யாருக்கும் சோறு இறங்காது. “ ஊறுகாய் அளவாச்சும்   இருக்கணும் என்பாள் அம்மா..அசைவம் சமைக்கிற நாட்களில் அதிகப்படியான வேலைகள் அவளுக்கு அலுப்பு தருவதாக
                            
சொல்லி படுக்கையில் தஞ்சமடைந்து விடுவாள்.ஊறுகா மாதிரி உடம்புலே நகை எனக்குப் போதும்மா “ என்று சந்தானலட்சுமி சொல்லிக்கொண்டிருப்பாள்.இரண்டு அக்காக்களை கரை சேர்ப்பதற்கு அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்றும் பட்டிருக்கிறது. பெண்களை கரை சேர்ப்பது அவ்வளவு எளிதா.  அதற்கப்புறம் தனக்கான நகைகள் என்பதில் காலம் கரைந்து விட்டது.இனிமேல்தான் ஆரம்பிக்க வேண்டும் என்று காலம் கடந்து கொண்டிருந்த்து.
     எதேச்சையாக குளியறைக்குப் போய் விட்டு வந்த சந்தான லட்சுமிக்கு அந்த மோதிரம் கண்ணில் பட்டது. எடுத்துப் போட்டுக் கொண்டாள். யாராவது காணவில்லை என்று கேட்கட்டும் .பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தாள். அவள் உடம்பில் எங்கும் ஒரு தம்பிடி நகைக் துணுக்கு கூடச் சேர்ந்து விடக்கூடாது என்றுஇருந்தவள் கையில் மோதிரம். அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது.  அழகாக இருக்கிறமாதிரி பட்டது.
     சந்தியா கொடுத்துவிட்டுப் போன வெற்றிலை வாயில் அடக்கி வைத்திருந்தது  ஏதோ நமநமப்பைத் தந்தது.  கொஞ்சம் கிராம்பு அளவு அதிகமாகியிருக்குமா. சுண்ணாம்பு அதிகமாகியிருக்குமா. நமநமப்பு வலியாய் வெளிப்பட்டது. மெல்ல ஈறுகளைப் பிடித்து இழுத்து. ஈறு பிய்ந்து போய் விடும் போல் இருந்தது. சற்றே அறைத்து சாற்றை விழுங்கி விட்டால் எல்லாம் சரியாகிப் போகும்.  வாயில் அடைபட்ட வெற்றிலை திடத்திலிருந்து கரையக் கரைய வலி கூடிக் கொண்டே போனது.இன்னும் தாங்கிக் கொள்ள முடியாது என்ற போது சொம்புத்தண்ணீருடன் வெளியே போனாள்.வெற்றிலைதுகள்கள் சிதைபட்டு விழுந்தன.
“ என்னாச்சு ..சந்தியா அவளருகில் வந்து நின்றாள்.
வாயைத்திறந்து காட்டியபோது வலது பக்க ஈறு வீங்கியிருப்பதாய் சொன்னாள். சுண்ணாம்பு அதிகமாகியிருக்குமோ.  கிராம்பு கிழிச்சிருக்குமோ
“எப்பிடியோ ஈறு வீங்கிப் போச்சு “
                             


“ வலிக்குதாடா “
“ஆமா
   சித்தாப்பா மகள் கவிதா  சந்தானலட்சுமி அருகில் வந்து நின்றபடியே அவளின்  இடது கையைப் பார்த்தாள். பாத்துரூமிலே வெச்சுட்டன் போல. தேடி ஓஞ்சு போச்சு.என்றாள் கவிதா.
“ :என்னடி பாம்பு விரல்லே மோதரம் போட்டிருக்கே “ சந்தியா அப்போதுதான் பார்தவள் புன்னகைத்தபடியே கேட்டாள்.புதுசா போடறதுனாலே தடுமாற்றம் போல “ கவிதாவின் மோதிரம். கொடுத்து விட வேண்டும்.
மோதிரத்தைக் கழட்டுவது சிரமமாகத்தான் இருந்தது சந்தான லட்சுமிக்கு.அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அந்த மோதிரம்.
 (குமுதம் சிறுகதை மலர் )


கானுயிர்
            வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் சமீபத்திய ஹாலிவுட் படமொன்றில் ராட்சதப் பிராணி யொன்றிலிருந்து கதை மாந்தர்கள் தப்பிப்பதைப் பார்த்து பெருமூச்செறிந்தாள் என் மகள்.
            "அப்பாடா... இந்த ராட்சதப் பிராணி கிட்ட இருந்து தப்பிக்கிறது எவ்வளவு கஷ்டம். இதெல்லாம் இப்போ இல்லை அல்லவா..."
            "இந்த வகைப் பிராணிகள் அழிந்து போய்விட்டன"
            "அப்பாடா... நாம தப்பிச்சம். இதுவெல்லாம் உயிரோட இருந்தா நம்ம மாதிரி மனுசங்களுக்கு எவ்வளவு தொல்லை".
            பிராணிகள், பறவைகளெல்லாம் இயற்கையை சமச்சீராக வைத்திருக்க உதவுபவை. இயற்கையின் அளப்பறியா சொத்து. ஆனால் அவை பற்றி நமக்குள் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்துக்களும், சொல்லாடல்களும் அவை மனிதனுக்கு எதிரானவை என்பதாக நிலை நிறுத்தி விட்டன.
            டைனசோர் முதற்கொண்டு முதலை, பாம்பு, பல்லி, குரங்கு என்று எல்லாவகைப் பிராணிகள், பறவைகளை கணினி மூலம் ராட்சத உருவங்களாக்கி அவை மனிதனுக்குத் தொல்லை தருவதாகவும் அவற்றிலிருந்து மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அதிதொழில்நுட்ப விஞ்ஞானக் கருவிகளையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துவதாகவும் வசூலை மையமாக வைத்த ஹாலிவுட் படங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டிருக்கின்றன. இவ்வகைப் படங்களை விரும்பிப் பார்க்கிறவர்கள் சிறுவர், சிறுமிகள் மற்றும் இளவயதினர். இவர்கள் மனதில் பிராணிகள், பறவைகள் பற்றிச் சுற்றிப் படரும் கருத்தமைவுகள் அவை மனிதனுக்கு எதிரானவை என்ற கருத்தைத் தொனிப்பவை.
            பொதுவாகக் காடு பற்றியச் செய்திகளும், கட்டமைப்பும் தவறானவையாக இருக்கின்றன. காடு அமைதியான இடம். இயற்கையின் மாபெரும் கொடையையும், பல நுண்ணுயிர்களின் இயக்கத்தையும் கொண்டவை. இயற்கையின் சமச்சீர் நிலைக்கு அவை மிகவும் உபயோகப்படுகின்றன. காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக இயற்கை பேரழிவுகளைத் தந்து கொண்டிருப்பதை சமீப வருடங்களின் புயல், வறட்சி, தண்ணீர், பூகம்பச் பிரச்சனைகளால் உணர்கிறோம். ஆனால் ஒரு நிச்சயமின்யையும், அமைதியின்மையையும் தொனிக்கிற பொருளில் "நாடு காடாக மாறிவிடக் கூடாது" என்ற சொல்லாடல் சாதாரணமாக நம்முன் பதிந்துவிட்டது.
            காட்டினுள் இருக்கும் பெரும்பான்மையான பிராணிகளும், பறவைகளும் மனிதனுக்கு எதிரானவை என்ற சொல்லாடல் நிலைபெற்று விட்டது. உதாரணத்திற்கு நரிகளை எடுத்துக் கொண்டால் அவை உண்ணிகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் மூலம் வரும் கொடிய நோய்களைக் காப்பவை. அவை தனியாக இயங்குபவை. ஆனால் நரிகள் கூட்டமாய் மனிதனைத் தாக்குவதையோ துன்புறுத்துவதையோ மையமாகக் கொண்ட சொல்லாடல்கள் நிலைபெற்றுவிட்டன. இந்தியாவில் இருக்கும் 3000 வகைப் பாம்பு வகைகளில் நூறில் ஒன்று மட்டமே விஷத்தன்மை கொண்டவை என்கிறார்கள். அவ்வாறு இருக்க எல்லாவகைப் பாம்புகளைப் பார்த்து பயம் கொள்ளப் பழகிவிட்டோம். அனகோண்டா போன்ற ராட்சதப் பாம்புகளைக் கொல்வதற்காய் துப்பாக்கிகள், பீரங்கிகள், அணுகுண்டுகள், லேசர் கதிர்வீச்செல்லாம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. பிராணிகள் நாம் அவற்றை துன்புறுத்தாத வரைக்கும் யாரையும் துன்புறுத்துபவை அல்ல.
            ஆனால் எந்தச் சிறு வகைப் பாம்பையும், பூச்சிகளையும் கண்டுவிட்டால் அடித்துக் கொல்லாவிட்டால் நமது தினசரித் தூக்கமும் இல்லாமல் போய்விடும் என்ற ரீதியில் அவற்றைக் கண்டதும் துவம்சம் செய்துவிடுகிறோம்.
            இலக்கியப் பிரயோகங்கள், உரைநடைச் சித்திரங்கள் கட்டமைத்திருக்கும் சொல்லாடல்கள் கானுயிர் இனத்திற்கே எதிரான வன்முறையானவை என்று நிரூபிக்கப்பட்டு வருகின்றன. பாம்புக் காது என்ற பிரயோகம் பொதுவில் உள்ளது. ஆனால் பாம்புகளுக்கு காது இல்லை. பாம்பு நேராக வருவதில்லை. ஆனால் அவற்றுக்கு வேறு வேலை எதுவும் இல்லை என்பதுபோல் நம்மைப் பார்த்து நேராக வருவதாய் சாதாரணமாய்க் காட்டப்படுவதுண்டு, பாம்புகள் ஒரு முறை மட்டுமே கொத்தும் இயல்புடையவை என்றாலும், அவை திரும்பத் திரும்பக் கொத்தும் ராட்சதர்களாய் சாதாரணமாய் காட்டப்படுகின்றன. இவைகளிலிருந்து நம்மைக் காப்பதற்காய் அவற்றை ஆயுதங்களால் கொத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று திரைப்படங்கள் மூலம் அதிநவீன லேசர் ஆயுதங்கள் வரை கண்டுபிடித்து விட்டோம். மற்றப் பிராணிகளைக் காட்டிலும் மனிதன் எந்த வகையிலும் உயர்ந்தவனல்ல என்பதை விஞ்ஞான உயிரியல் ஆய்வுகள் நிரூபிக்கின்றன. ஆனால் நமக்குள்ள ஆறாவது அறிவை வைத்துக்கொண்டு, மற்றப் பிராணிகள் நமக்குத் தாழ்ந்தவை, நமக்குத் துன்பம் விளைவிப்பவை என்ற கருத்தாக்கங்களை தொடர்ந்து இலக்கியம், உரைநடைச் சித்திரங்கள், ஊடகங்களின் கேளிக்கைகள் மூலம் நிரூபித்தாகிவிட்டது.
            பிராணிகள், பறவைகள், காட்டு உயிர்கள் நமக்கு சமச்சீரான இயற்கை வாழ்வைத் தருபவை என்ற கருத்தைப் புறந்தள்ளிவிட்டு, இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்வதையும், உள்வாங்கிக் கொள்வதையும், இயற்கை நமக்குப் பாதுகாப்பாவதையும் புறக்கணித்தாகிவிட்டது. இதன் மறுபுறும் பேரழிவுகள், வியாதிகள் என நிச்சயமில்லாத வாழ்வைப் பெற்றுள்ளோம்.
            பிராணிகள், பறவைகள் போன்றவை பற்றின நம் சித்திரங்கள், புராணங்கள், பாடத்திட்ட வரையீடுகள், இலக்கியம் மற்றும் நவீன ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்டவை. புராணம் மூலம் உருவாக்கப்பட்ட சித்திரங்கள் சில நீதிகளைச் சொல்லப் பயன்பட்ட வேகத்தில், விலங்குகள் குரூரமானவை என்பதாக நிலைநாட்டி விட்டன. புராண இலக்கியங்களைத் தவிர்த்துவிட்டு இலக்கிய மேன்மைக்கு போவது காலம் கடந்த நிராகரிப்பு உத்தி. இவற்றின் தொடர்ச்சியாகவே 'பேன்டஸி' வகை இலக்கியப் போக்குகள், தொலைக்காட்சி போன்ற நவீன ஊடகங்களின் சித்தரிப்புகள் இருக்கின்றன. இவற்றில் தென்படும் படைப்பாளியின் சுதந்திரப் பிராணிகளை அவைகளின் இயல்புக்கு மாறாகக் காட்டுவதில் பெருமளவு அதிகாரம் செயல்படுகிறது. இந்த வகை அதிகாரம் கட்டுடைக்கப்பட்டு, குரூரம், வன்முறை சார்ந்த பிரயோகங்களில் இருந்து பிராணிகள், பறவைகள் மீட்கப்பட வேண்டும்.
            இவற்றுக்கு சலீம் அலி, தியோடர் பாஸ்கரன், . முகமது அலி போன்றோரின் படைப்புகள் நிச்சயம் வழிகாட்டும். நம் கல்வித்துறை சார்ந்த பாடத்திட்டங்களிலிருந்து இவை ஆரம்பிக்கப்பட வேண்டும். கானுயிர் நமக்கு மிகவும் நெருக்கமான என்பதை உணர்தலில் இயற்கை நமக்கு நிறைந்த பாதுகாப்பைத் தரும். (  4tamilmedia.com )