சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அண்டைவீடு: பயண அனுபவம்: புது எழுத்து

தற்கால வங்கதேச எழுத்து எப்படி இருக்கிறது என்று அறிய் ஆங்கிலத் தொகுப்புகளைத் தேடினேன். "Contemporary short stories in Bangladesh" என்ற University press limited வெளியிட்ட நூல் ஒன்று கிடைத்தது. பல்வேறு வகையான பிரச்சினைகள் தீவிரமாக ஆட்கொண்டிருக்கும் நாட்டின் படைப்புகளின் விஸ்தாரத்தை அதில் சரியாகவே அறிந்துகொள்ள முடிந்தது. 25 கதைகளைக் கொண்ட அத்தொகுப்பை நியாஜ் ஜாமன் என்பவர் தொகுத்திருந்தார். அதில் காணப்பட்ட சில கதைகளின் மையங்கள் பற்றி:

" பாக்லி மற்றும் ஒரு ஸ்டாப்வாட்சும் 400கலோரிகளும்" கதை பெண்களின் நிறைவேறாத பாலியல் ஆசைகளை மையமாகக் கொண்டவையாகும். தங்களை அடையாளம் கண்டுகொள்வதும் உணர்ந்து கொள்வதும் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர அவர்களுக்கு உதவுகிறது.

அல்முகமது என்ற சமீபத்திய கவிஞர் ஒருவரின் சிறுகதை "தி கார்மெண்ட் பிளட்." இது போல திருமணம் நிறைவேறாத பெண்ணின் பாலியல் அனுபவங்களையும், கிராம அனுபவங்களையும் சொல்கிறது.

" யாரும் என்னைப் பார்க்க வரவில்லை" என்ற ஹாசன் அஜிஜில் ஹக்கின் சிறுகதை குழப்பமும், சிக்கல்களும் நிறைந்த 1971ம் ஆண்டின் வஙகதேச விடுதலைப் போருக்குப் பின்னதான காலத்தைப் பற்றிப் பேசுகிறது. அந்தப் போரில் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் கவனிக்கப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் போன துயரத்தை இது மையமாகக் கொண்டது.

வங்கதேசத்திலிருந்து பிற நாடுகளுக்குப் பணம் சம்பாதிக்கும் பொருட்டு வேலை தேடிப் போகிறவர்களின் அனுபவங்களை மூன்று கதைகள் சொல்கின்றன.

அமெரிக்கன் விசா பெற்றபின்பு ஒருவனுக்குக் கிடைக்கும் மரியாதையும் கெளரவமும் பற்றி ‘டு லிவ் தி பேண்டஸி’ என்ற கதை சொல்கிறது. அதே சமயம் இன்னொரு கதை அமெரிக்கா சென்றபின் ஒரு வங்கதேசத்துக்காரனுக்கு ஏற்படும் அனுபவங்களையும் அவன் வங்கதேசத்துக்குத் திரும்பி வந்தபின் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சொல்கிறது. செலினா ஹுசைனின் கதை மலைவாழ் பிரதேச மக்களின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறது. சுதிப் என்ற வங்காள இளைஞன் அவனின் பெண் நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மூலம் சோர்வான சூழலுக்குத் தள்ளப்படுகிறான். நினைவுகளும், காதல் அனுபவங்களும் அவனை வேறு எங்காவது செல்லத் துரத்திக் கொண்டே இருக்கிறது. மலைப்பிரதேசத்தில் இருக்கும் நண்பனின் வீட்டிற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து வர எண்ணி மலைப்பிரதேசத்திற்குச் செல்கிறான்.

மலைப்பிரதேச மக்கள் ராணுவத்தினரின் அடக்குமுறைக்கும், கொடுமைக்கும் எதிராக ஒன்றுதிரண்டு போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை அங்கு சென்றபின் அறிகிறான். நிலத்தை விட்டு விரட்ட எத்தனிக்கப்படுகிறான். நண்பனின் சகோதரி ராணுவத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள்.

சக மலைவாசி மனிதர்களின் விரும்பத்தகாத செயல்களும் அவனை வருத்துகிறது. அவனின் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்து சம்பிரதாயங்களை எள்ளி நகையாடும் ஒரு கதையும் இதிலிருக்கிறது.ஜர்னா என்பவரின் கதையில் இரு இந்துக் குடும்பத்தின் சிதையும், மறுமலர்ச்சியும் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு முதிய தாயின் சஞ்சலங்களால் இக்கதை நிரம்பி உள்ளது. அவனின் மூத்தமகள் புஷ்பா மாமியாரின் தொல்லைகளும், தொந்தரவும் மீறி அம்மாவிடம் வந்து அடைக்கலமாகிறாள். பின்னர் அவளின் தனிமை தொந்தரவாக மாறுகிறது. சகோதரனின் நண்பனுடன் உறவும் பரிமாற்றமும் ஏற்படுகிறது. அவனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடத் துடிக்கிறாள். அவளின் இளைய சகோதரியின் திருமணத்தை இது பாதிக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆனாலும் புஷ்பா வெளியேறிவிடுகிறாள். அம்மா மிகுந்த சிக்கல்களுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள். பின்னர் அம்மா, புஷ்பா மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்தபின் ஆறுதல் அடைகிறாள். சனாதன விஷயங்கள் அவளைப் புறம்தள்ளி இருப்பதை உணர்ந்து கொள்கிறாள்.

அல்முகமது, ரிஜியா ரஹ்மான், சலீகா செளத்ரி போன்ற புகழ்பெற்ற முதிய எழுத்தாளர்களின் சிறுகதைகளோடு இளைய தலைமுறையைச் சார்ந்த நஸ்ரென் ஜாஹென், ஜானாஜ் முன்னி, அஹ்மது முஸ்தபா கமல் போன்ற இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

வங்கதேச மக்களின் நவீன வாழ்க்கைச் சிக்கல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்த வங்கதேச எழுத்தாளர்களின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. வங்கதேச ஆன்மாவின் யதார்த்தத்தை இவை கொண்டிருப்பது இதன் பலமாக இருக்கிறது.

வங்கதேசத்தில் இந்திப் படங்களைத் திரையரங்குகளில் திரையிட தடை இருக்கிறது. அவை வங்கதேசப் படங்களைப் பாதிப்பதால் இந்தத் தடை. ஆனால் வங்கதேசத்தில் இந்திய தொலைக்காட்சி வரிசைகள் பெரும்பான்மையானவற்றை அங்கு ஒளிபரப்ப கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அனுமதியளித்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். ஆனால் மேற்கு வங்காளத்தில் வங்கதேச தொலைக்காட்சி வரிசைகள் கிடைப்பதில்லை. சிலவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

கல்கத்தாவின் கல்லூரி சாலையிலும், காபிஹவுஸ் வட்டாரங்களிலும் வங்கதேச இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பதில்லை என்பது குற்றச்சாட்டாகவே இருக்கிறது. ஒரு சில கடைகளிலே அபூர்வமாகக் கிடைக்கின்றன. பிரிக்கப்படாத வங்காளத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சார அம்சங்கள் வலுவானவையாக இருந்தன. இந்தியாவிற்கு முன்னோடியாக அவை அமைந்திருந்தன. கோபாலகிருஷ்ண கோகலே (1866-1915) முன்பு சொன்னதாக ஒரு வாசகம் உண்டு: " வங்காளம் இன்று சிந்திப்பதை, இந்தியா நாளை சிந்திக்கும்"

நமது இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் கல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக (1772-1912) இருந்திருக்கிறது. தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், சுபாஷ் போஸ், எம்,என் ராய், அப்துல் ஹ்சிம் போன்றவர்கள் முன்னணித் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். கலாச்சாரத் தளத்தில் ராஜா ராம்மோகன் ராய், பக்கிம் சந்திர சட்டோபாத்யாய மைல்கள் மதுசூதன் தத், சரத் சட்டோபாத்யாய, ராவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல், சத்யஜித்ரே, அப்பாஸ் உதின் போன்றோர் இருந்திருக்கிறார்கள்.

தில்லியைத் தலைநகராகக் கொண்ட நடைமுறைகளும், இந்துக் கலாச்சார மேலாண்மையும் 1947 பிரிவினைக்குப் பிறகு இடைவெளியை ஏற்படுத்திவிட்டன. பாகிஸ்தானான பிறகு வங்காள கலாச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்புக் கலாச்சாரமாக சில சமயங்களில் வடிவெடுத்திருக்கிறது. சமஸ்கிருத தாக்கத்தை உடைத்தது, அராபிக், உருது பிரயோகத் தாவலும் முக்யமானவை. ஆனால் சுதந்திர இந்தியா வங்கதேசம் மலர்வதற்குக் காரணமான பின்பு கலாச்சார நடவடிக்கைகள் ஆரோக்யமாகவே இருந்திருக்கின்றன. முஸ்லிம் பெரும்பான்மை வங்காளிகளின் மேற்கு வங்காளமும் கலாச்சாரப் பிரிவினைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளன.

வங்கதேசத்தின் பிரபலமான எழுத்தாளர்கள் சம்சூர் ரஹ்மான், ஹிமாயுன் அகமத், தஸ்லிமா நஸ்ரின், செளகத் அலி, ரியாஜ் ரஹ்மான், அல் முகமது, நிர்முலெந்து கூன் ஆகியோரின் புத்தகங்களைக் கல்கத்தாவில் பெறுவது சிரமமாக இருக்கிறது. ஆனால் வங்கதேசத்தின் புத்தக சந்தைகளில், நியூ மார்க்கெட், நில்கத் பகுதி, டாக்கா நகரின் புத்தகக் கடைகளில் இந்திய வங்காள எழுத்தாளர்கள் சுனில் கங்கோபாத்யாய, சிர்சிந்து முகோபாத்யாய, சமரேஷ் மஜும்தார், புத்ததேவ் குக, சஜிப் சட்டோபாத்யாய ஆகியோரின் புத்தகங்கள் கிடைக்கின்றன என்கிறார்கள். டாக்கா சந்தையில் இந்திய வங்காள மொழிப் புத்தகங்களின் ‘பைரட்’ பிரதிகள் கிடைப்பதே அவற்றுக்கான வரவேற்பைச் சொல்வதாகப் பேச்சு அடிபட்டது.

இதேபோல் பாகிஸ்தான் எழுத்தாளர்களின் புத்தகங்கள் இந்தியாவில் கிடைப்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான் எழுத்தாளர்கள், பாகிஸ்தானில் வளர்ந்து பிற நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள், குழந்தை வயதிலேயே பாக்கிஸ்தானை விட்டு வெளியேறிய எழுத்தாளர்கள் என்று பலவகையான பாகிஸ்தான் எழுத்தாளர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வகைக்கு உதாரணமாக சிலர் தென்படுகிறார்கள். நடீம் அஸ்லாம் குழந்தைப் பருவத்தை பாகிஸ்தானில் கழித்தவர். அவரின் முதல் புத்தகம் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட்து. ஹனிப் குரோஸி பாகிஸ்தானில் வாழ்ந்தவரல்ல; தாரிக் அலி பாகிஸ்தானில் வாழ்ந்தவர். இங்கிலாந்தில் நெடும் காலம் வாழ்பவர்.

ஆங்கிலத்திலான பாகிஸ்தானி நாவல் என்பது மும்தாஜ் ஷான்னாவாஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது எனலாம். 36 வயது மும்தாஜ் ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். பாகிஸ்தான் பிரிவினை பற்றிய நாவலான கையெழுத்துப் பிரதியிலான அது அவரின் மறைவிற்குப் பிறகு 1950ல் அவரின் குடும்பத்தினரால் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் பாகிஸ்தானின் ஆட்சிமொழியான உருதுவின் ஆட்சி நீடித்தது.சதாத் மாஸ்டோ, இண்டசார் ஹுசைன், அப்துல்லா ஹுசைன் போன்ற உருது எழுத்தாளர்கள் உலகப்புகழ் பெற்றனர். அஹ்மத் அலியின் டுவிலிட் இன் டில்லி 1911ம் ஆண்டின் தில்லியின் முஸ்லிம்கள் வாழும் பகுதியைப் பற்றியதாக இருந்தது. முஹல்களின் வீழ்ச்சியும், ஆங்கிலேயர்களின் வருகையும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது இங்கிலாந்து பதிப்பகம் ஒன்றால் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. அலி 1947ல் டெல்லியில் பிறந்தவர். பிறகு நாடு கடந்து பாகிஸ்தானில் வாழ்ந்தவர். 1980 வரை ஆங்கில நாவல்கள் இங்கிலாந்து, அமெரிக்கா எழுத்தாளர்களாலே எழுதப்பட்டன். பாகிஸ்தான் ஆங்கில நாவலான பாப்சிசித்வாவின் ‘தி குரோ ஈட்டர்ஸ்’ பாகிஸ்தானின் பார்ஸி இனமக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திய ஆங்கில நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக விளங்கியது. 1997ல் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட 50 ஆண்டு பாகிஸ்தான் எழுத்தாளர்களின் ஆங்கில் எழுத்து முக்கியமானதாகும்.

"CONTEMPORARY SHORT STORIES IN BANGLADESH" தொகுப்பையும் இவ்வரிசையில் முக்கியமானதாகக் கொள்ளலாம்.