அண்டை வீடு: பயண அனுபவம்
1971ன் வங்கதேச விடுதலை பற்றிய சில முக்கியமான படங்களை எடுத்தவர் தன்வீ ர் மொக்கமல் என்ற வங்கதேச இயக்குனர். பல திரைப்பட விழாக்களில் இவரின் படங்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. திரைப்பட விழாக்களில் இவரின் படங்களைப் பார்த்திருக்கிறேன். ரித்விக் கடக்கின் பாணியை இவர் திரை மொழியில் ஊடுருவியிருப்பதாகத் தோன்றியிருக்கிறது. டாக்கா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். படைப்பாளியும் கூட. இவரின் முதல் விவரணப் படமே ஒரு அரசியல் கவிதையொன்றை மையமாகக் கொண்டதுதான். நம்மூர் வீடியோ கடைகளில் நல்ல படங்கள் கிடைக்காத மாதிரி டாக்காவின் வீடியோ கடைகளில் தேடியபோது அவை கிடைக்கவில்லை. சமூக ஆர்வலர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்; சமூகப் பணியாளர்கள், தன்னார்வக் குழுவினர் அவரின் படங்களை நன்கு அறிந்திருந்தனர். அதைப் பலரிடம் கேட்ட போது அறிந்துகொள்ள முடிந்தது.
"ஸ்மிருதி எக்காடுர்" என்ற விவரணப் படம் வங்கதேசத்தில்
எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் 1971ல் கொல்லப்பட்டது பற்றிய
குரூர சித்தரிப்பாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தவறான
நடவடிக்கையால் வங்கதேச சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாகக்
குரல் தந்த எழுத்தாளர்கள் கொல்லப்பட்டது பற்றி இப்படம் பேசுகிறது.
வங்கதேச அக்காதமி வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் அடிப்படையில்
இப்படத்தை அவர் தயாரித்திருக்கிறார்.
‘சகோதரி’(ரெபையா) என்ற இவரின் படம் சோபாகிஸின்" ஆண்டிகனி"யை மையமாகக் கொண்டு 1971 வங்கதேச விடுதலை யுத்தத்தைக் காட்டி உள்ளது. ரெபையா, ரொக்கையா இரு அனாதைச் சகோதரிகள். முஸ்லிம் கட்சியைச் சார்ந்த பணக்காரரான அவரின் மாமாவின் பாதுகாப்பில் இருப்பவர்கள். சகோதரிகளின் சகோதரன் ஒருவன் பாகிஸ்தான் ராணுவத்திற்கெதிரான எழுச்சிப் படையில் சேருகிறான். கொல்லப்படுகிறான். அவனின் பிணத்தைப் புதைக்காமல் நதிக்கரையில் போடுகிறார்கள். பார்க்கிற கிராமத்தினர் பிணம் ஓர் எச்சரிக்கைக் குறியீடாகவும், பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்குப் பயம் தருவதாகவும் இருக்கும் என்கிறார்கள். ரெபையா பிணத்தைப் புதைக்க ஏற்பாடு செய்ய நதிக்கரைக்குச் செல்கிறாள். சுடப்பட்டுக் கொல்லப்படுகிறாள். ரெபையாவின் மரணம் கிராமத்தில் எழுச்சியை உண்டாக்குகிறது. கெரில்லா யுத்தத்தின் முதல் வெற்றியாகக் கணிக்கிறார்கள். ரெபையா வீரமரணம் அடைந்ததாக எழுச்சி கொள்கிறார்கள்.
"மதுமதி என்ற நதி" (நடா நாம் மதுமதி)யும் 1971ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு ஹேம்லெட் கதையை மறு வாசிப்பில் படமாக்கியிருக்கிறார். இதில் இந்து, முஸ்லிம் மதக்குறியீடுகளாக இருபாத்திரங்களை தன்வீர் உருவாக்கி இருக்கிறார். மொல்லா ஒரு நிலச்சுவான்தார். உள்ளூர் முஸ்லிம் தலைவர். அண்ணன் இறந்தபின்பு அண்ணியை மணந்து கொண்டவன். அண்ணிக்கு பச்சு என்ற மகன் இருக்கிறான். அவ்வூரின் அமுல்யா சக்ரவர்த்தி என்ற பிராமண ஆசிரியருக்கு சாந்தி என்ற விதவை மகள் இருக்கிறாள். வங்கதேசத்து யுத்தம் ஆரம்பித்த பின் மக்களைக் கொன்று குவிப்பதும், பாலியல் வன்கொடுமைகளும் சாதாரணமாகின்றன. பச்சு வங்கதேச கெரில்லாப் படையில் சேருகிறான். மொல்லா பாகிஸ்தான் ராணுவத்திற்குத் துணையாக இருக்கிறான். அமுல்யா சக்ரவர்த்தி கொல்லப்படுகிறான். சாந்தியை திருமணம் செய்ய மொல்லா கட்டாயப்படுத்துகிறான். பச்சு நதிக்கு அந்தப்புறம் கெரில்லா படையில் இருக்கிறான். நதியைக் கடந்து போய் பாகிஸ்தான் ராணுவத்தினரின் வன்கொடுமையை எதிர்க்கத் தயராகிறான்.
"நிஸ்ஸாகோ சாரதி" என்ற விவரணப் படம் 1971 போர் பற்றியது. தஜ்தீன் அகமத் என்ற ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நெருங்கிய நண்பர் பற்றியது. வங்கதேசத்தின் முதல் பிரதமரும் ஆவார். விடுதலை யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்.
1970ல் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சிக்கு முழு பலம் கிடைத்து தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். மக்களும், போராட்டக்காரர்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள். தஜ்தீன் தன் ஆதரவாளர்களுடன் இந்தியா வந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்கிறார். இந்தியா செய்த ராணுவ உதவியால் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியைத் தழுவுகிறது. ஏப்ரல் 1971ல் வங்கதேசம் உருவாகிறது. டிசம்பரில் வங்கதேசம் என்ற கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாக பிரகடனப்படுத்தப்படுகிறது. ஷேக் முஜிபுர் ரஹ்மான், தஜ்தீன் உட்பட்டோரின் மந்திரிசபை அமைகிறது.
நான்காண்டுகளில் 1975ல் ராணுவத்தின் ஒரு பிரிவினரால் ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். மூன்று மாதங்கள் கழிந்து தஜ்தீனும் டாக்கா மத்திய சிறையில் அடைபட்டிருந்தபோது கொல்லப்பட்டார். விடுதலைப் போரின் முக்கிய தளபதியாகக் கணிக்கப்பட்டு இப்படத்தில் அவர் முன்வைக்கப்படுகிறார்.
தன்வீர் மொக்கமல் அதிகாரத்துவத்தின் வன்முறை சகஜமாய் நிலவும் உலகில் தீவிரமான அக்கறையாகத் தன் எழுத்தையும், படத்தையும் எடுத்துக் கொண்டவர். இடதுசாரி பத்திரிகையாளராக விளங்கியவர். வங்கதேசத்தின் நிலமில்லாத ஏழை விவசாயிகளின் சங்க ஒருங்கிணைப்பில் பாடுபட்டவர். ஐந்து முழு நீளப்படங்களும், பதினோரு விவரணப் படங்களும் எடுத்திருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. திரைப்படம் பற்றின மூன்று நூலகளை எழுதியுள்ளார். மார்சிம் கார்க்கியின் "லோயர் டெப்த்"தை வங்காளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் இரு முக்கியமான படங்கள் 1) ‘லால்சால்’ 2).‘சித்ரா நடிர் பாரே’.
1) லால்சால் (எ ட்ரி வித்தவுட் ரூட்ஸ்):
கிராமப்புறத்தைச் சார்ந்த மஜித் ஒரு கல்லறைத் தோண்டி. அதில் ஒரு பக்கிர் (சாமியார்) இருந்ததாகச் சொல்கிறான், ஊர்மக்கள் அந்தக் கல்லறையை வழிபடத் துவங்குகிறார்கள். அவனுக்கு அது தொழிலாகியும் விடுகிறது: விவசாயப் பெண்ணை மணந்து கொள்கிறான். பணம் சேர்கிறது. புனிதமானவன் என்ற பெயரும் சேர்கிறது. இன்னொரு இளம் பெண்ணையும் வலுக்கட்டாயமாக மணந்து கொள்கிறான். இளம் மனைவி கல்லறையை உடைத்து அவனைப் பற்றி உலகிற்கு வெளிப்படுத்துகிறாள்.
2) சித்ரா நடிர் பாரே ( க்ய்ட் புளோஸ் ரிவர் சித்ரா):
சுதந்திரத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானில் வசித்து வந்த இந்துக்கள் பலர் இந்தியாவிற்கு இடம் பெயர்கிறார்கள். சித்ரா நதியின் ஒரு கரையில் வசித்து வரும் கதாநாயகனுக்கு இரு பையன்கள். மனைவியை இழந்தவன் அவன். இந்துக்களுடன் முஸ்லிம்கள் இணக்கமாக வாழ்கிறார்கள். பையன்கள் வளர்ந்து படிக்கிறார்கள். ஒருவன் பள்ளிப் படிப்பு முடிந்து 1960ல் கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்த அரசியல் போராட்டங்களின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக நிற்கிறான். அவன் கொல்லப்படுகிறான். கிராம மருத்துவரான அவனின் சகோதரனின் மகள் முஸ்லிம்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அலைக்கழிகிறாள். அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். பிரதான கதாபாத்திரத்தின் குடும்பத்தினரும் இந்தியாவிற்குக் குடியேற கல்கத்தாவைக் கடந்து போகிறார்கள்.
கார்மண்ட் கேர்ள்ஸ் ஆஃப் பங்களாதேஷ்" என்ற தர்வீன் மொக்கமலின் விவரணப் படம் மிக முக்கியமானப் படமாகும். சுகாதாரக் கேடுகளாலும், தொழிற்சாலைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாலும் இறந்துபோன மூவாயிரம் பெண்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. மலின உழைப்பினால் உலகச் சந்தையில் வங்கதேசத்தின் பின்னலாடை பெருமளவில் விற்பனையாகிறது. உற்பத்தியில் சீனாவுடன் போட்டி போடுகிறது. வலுவில்லாத தொழிற்சங்கங்கள். மலினமாகிப் போன பின்னலாடை உழைப்பாளிகள். 2010ம் ஆண்டு மேயில் நடைபெற்ற பின்னலாடைத் தொழிலாளிகள் போராட்டத்தை அரசாங்கம் அடக்கியது. பலர் கொல்லப்பட்டார்கள்
தன்வீர் எப்போதும் தான் விளிம்புநிலை மக்களின் ஆதரவாளனாகவே இருந்து வருவதைத் தன் எழுத்து, திரைப்பட ஆக்கங்களில் நிரூபித்திருக்கிறார். டாக்காவின் பின்னலாடைத் தொழிலாளர்கள் பற்றிய இவரின் படத்தை எங்கள் குழுவில் இருந்த தொழிற்சங்கத் தலைவர்களிடம் குறிப்பிட்டபோது திருப்பூர் அதிகமான குறும்பட இயக்குனர்களைக் கொண்ட ஊர் என்று சொல்கிறர்கள். ஆனால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள் பற்றி படம் எதுவும் எடுக்கவில்லையே என்று குறிப்பிட்டார்கள்.
அலோசியஸை இயக்குனராக்க் கொண்ட ‘சேவ்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் குறும்படங்கள் பற்றி அவர்களிடம் பட்டியலிட்டபோது ஒருவகைத் திருப்தியை அவர்களின் பதிலில் காண முடிந்தது. "சுமங்கலி" என்ற இளம் பெண்களைச் சுரண்டும் சுமங்கலித் திட்டம் பற்றிய ரவிக்குமாரின் இயக்கத்திலான படம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றிய " பார்வதி சபதம் " தாண்டவக்கோன் இயக்கம் , பேரெழில் குமரன் இயக்கத்திலான எனது கவிதை ஒன்றை மையமாகக் கொண்ட " சோற்றுப்பொட்டலம் " குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியது ஆகியவற்றை ‘சேவ்’ தயாரித்து வெளியிட்டுள்ளது.இதைத் தவிர எனது சிறுகதையொன்றை மையமாகக் கொண்ட "திருவிழா" படம் உட்பட 20 குறும்படங்கள் குழந்தைத் தொழில் உழைப்பை விமர்சித்து திருப்பூர் குறும்பட இயக்குனர்களால் வெளியாகியுள்ளன. ஆனால் விவரணப் படங்கள் பற்றிய அக்கறை அவர்களிடம் இல்லாதது பெரிய குறை.
subrabharathi@gmail.com
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -