சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 30 ஏப்ரல், 2011

கிணிகிணி:மாமா எங்க இருக்கீங்க

அண்டைவீடு : பயண அனுபவம்

டாக்கா விமான நிலையத்தில் இறங்கியதும் நண்பர்கள் வெளிநாட்டுத் தொலைபேசி வசதிக்காகப் பரபரத்ததைக் கண்டேன். ‘பங்களாலிங்க்’ என்ற தனியார் மொபைல் நிறுவன விளம்பரம் முகப்பில் எல்லோரையும் வரவேற்றது. அதன் இளம் பெண் ஒருத்தி தன் வலது கையினால் இதயத்தை தொடும் காட்சி கவர்ச்சிகரமான படமாகியிருந்தது. அதனருகில் நின்று நானும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். கல்கத்தா வரை தொலைத் தொடர்பு இருந்ததும் சட்டென மாயமாகி விட்டதையும் கண்டு தொழிற்சங்கத் தலைவர்கள் அக்கறையில் பரபரத்துக் கொண்டனர்.அதிமுக தலைவர் ஆனந்தன் முன்பே சர்வதேச இணைப்புப் பெற்றிருந்தாலும் இன்னும் ஒரு இணைப்பைப் பெற்றுக் கொண்டார். டாக்கா விமான நிலையத்தில் இறங்கியதும் இந்திய சேவை துண்டிப்பு.பாஸ்போர்ட், 2 புகைப்படங்களுடன்’ பங்களாலிங்’ சேவையில் உட்படுத்திக் கொண்டனர். ஒரு மணிநேர விமானப் பயணம் அவர்களின் உலகத்தையே துண்டித்துவிட்டது என்ற பயபீதியில் இருந்த தொழிற்சங்கத் தலைவர்கள் ஆறுதல் அடைந்தனர்.

‘சேவ்’ அலோசியஸ் சர்வதேச அழைப்பு வசதி எப்போதும் கொண்டவர். காலை மாலை, இரவு, உணவு இடைவேளை என்று அவர் வீட்டிலிருந்து அழைப்புகள். மனைவி, மகன், மகளிடமிருந்து வந்து கொண்டேஇருக்கும்."அட்டன்டென்ஸ்" கொடுத்துக் கொண்டே இருப்பார்.






அவர்களின் அழைப்பு அவரைக் கட்டுப்படுத்துவது போல இருக்கும். ‘சர்வதேச அழைப்பு வசதி பெறவில்லையா’ என்று அவர் என்னிடம் கேட்டார். மகள் கல்லூரி விடுதியில் இருப்பவர். அங்கு கல்லூரியில் கைபேசி தடைசெய்யப்பட்ட ஒன்று. அவரே கல்லூரி விடுதி பொதுதொலைபேசியில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டால்தான் உண்டு. கல்லூரி விடுதிக்கு நான் அழைக்க முடியாது. எனவே புதுவசதி தேவையில்லை என்றேன். கைபேசி இல்லாமல் வரும் நாட்கள் பழகிப்போவது ஆறுதலாகவே இருந்தது.

150 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வங்காள்தேசத்தில் 58 மில்லியன் மக்கள் கைபேசி சேவையைப் பயன்படுத்துகிறார்கள். "டிஜிட்டல் பங்களாதேஷ் 2021" என்ற திட்டம் வங்கதேசத்தில் அனைவரும் கைபேசி வசதி செய்ய வழிவகுக்கிறார்களாம்.( அப்போது 2021ல் இந்தியா வல்லரசு தானே!). 32 மில்லியன் கைபேசி சந்தாதாரர்களாக இருந்தவர்கள் இப்போது 58மில்லியன் ஆகி இருக்கிறார்கள். 34% மொத்த வசதியில் இங்கு. 2012ல் 70 மில்லியன் ஆகிறது.


வங்கதேசத்தில் கைபேசி சேவை வெகுதாமதமாகத்தான் ஆரம்பித்தது. உள்ளூர்ப்பிரச்சினைகள், உள்நாட்டு சிக்கல்கள், அரசியல் தடுமாற்றங்கள், சில விசயங்களில் பொது மக்களின் நிதானமில்லா பரபரப்பு நிலை இவையே தாமதத்திற்குக் காரணம் என்கிறார்கள் ‘சிட்டிசெல்’ என்ற நிறுவனம் 1997ல் கைபேசி சேவையைத் துவக்கியது. ‘இரமீன் சேவை’ அதிரடியாக வந்து அதை நிலைகுலைய வைத்தது. ஆப்கான் தேசத்தில் நிலைபெற்ற ‘டெலிய சொன்னீரா’ வின் சேவை மிக முக்யமான வருகையாக இருந்தது. 1980வரை ஏகபோக நிறுவனமாக இருந்த பசிபிக் டெலிகாம் சர்வீஸ் ஆதிக்கம் வீழ்ந்துவிட்டது.

சிட்டிசெல் என்ற ஹாங்காங் நிறுவனம் நிலைபெற்றுவிட்டது. கிரமீன், டெலிகாம் மலேசியா, பங்களாதேஷ் லிமிடெட், ஏகே டெலிகாம் கைபேசி சேவை கொடுத்துக் கொண்டிருக்கும் மற்ற நிறுவனங்களாகும்.

இந்தியாவின் பாரதி, ஏர்டெல், ரிலையன்ஸ் ஆகியவையும் இங்கு சேவையைத் தொடர்கின்றன. 10% கைபேசி சேவை உயர்வு என்பது 1.3% பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாக புள்ளி விபரக் கணக்குகள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு மூலதனங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கின்றன.



பங்களாதேஷ் டெலிகம்யூனிகேசன் சட்டம் 2010 சமீபத்தில் அமலுக்கு வந்துள்ளது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மேல் அதிக வரிச்சுமை செலுத்துவதாகவும், அவர்களுக்கு பாதகமாய் இருப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உலகவங்கி கூட பங்களாதேஷ் பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் ‘புதிய சட்டம் முதலீட்டைக் குறைக்கும். பெரிய அளவில் சட்டரீதியான சிக்கல்களை உருவாக்கும்’ என்று இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய சட்டம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்குப் பணம் சேர்க்கும் உத்தியென்றும், பெரிய அளவில் ஊழலை உருவாக்கும் என்றும் கருத்துள்ளது. ஊழல் தேசத்தில் இதை விட வேறெதுவும் பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள். அதேசமயம் டிஜிட்டல் பங்களாதேஷ் 2021 திட்டத்தைச் சீர் குலைக்கும் என்கிறார்கள்.

"வாட்சன், கம் கியர், ஐ வாண்ட் யூ" என்பது தான் கிரஹம்பெல் தொலைத் தொடர்வு வழியாய் அனுப்பிய முதல் செய்தி. வங்கதேசம், பாகிஸ்தான், கைபேசி சேவை "குண்டு வெடி, வன்முறை செய்" என்று உலகம் முழுவதும் தீவிரவாதத்தைப் பரப்பும் கிளைச் செயல்களில் பெரிதும் ஈடுபடுவதாகச் சொல்லப்படுகிறது. ‘டிஜிட்டல் பங்களாதேஷில்’ தீவிரவாதமும் தீவிரமாகும்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

அரசியல் தப்புத் தாளங்கள்

அண்டைவீடு : பயண அனுபவம்

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பிறந்தநாள் கூட்டம் அன்று என்பதை டாக்கா செய்தித்தாள்களின் இன்றைய செய்திகள் நிகழ்ச்சியில் படித்தேன். கட்சித் தலைவர் என்ற முறையிலோ, பிரதமர் என்ற முறையிலோ அவருக்கு வாழ்த்து சொல்லி எவ்வித விளம்பரங்களைச் செய்தித்தாட்களிலோ, ப்ளக்ஸ் பேனர் விளம்பரங்களாகவோ டாக்காவில் தென்படாதது ஆச்சர்யம் தந்தது. விசாரித்தபோது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் போதான ஊர்வலங்கள், கூட்டங்கள் ஆகியவை முன்னர் ஏதோவொருவகையில் பிரச்சினைக்குள்ளாகியிருப்பது தெரிய வந்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்த தின நாட்களிலும் இதேபோல் கடைபிடிக்கப்படுவதால் எல்லாம் அடக்கி வாசிக்கப்படுவதாகச் சொன்னார்கள். ராணுவ முறையிலான கட்டுப்பாடுகள் இதற்கு உதவுகின்றன. தேர்தல் காலத்திலும் இந்த வகையான கட்டுப்பாடுகள் தேர்தல் வன்முறையைத் தவிர்க்க உதவுகின்றன என்கிறார்கள்.

தேர்தல் சமயத்தில் கூட ஷேக் ஹசீனா கட்சியின் தேர்தல் பிரச்சார சின்னமான விளக்கோ, எதிர்க்கட்சியினரின் படகோ சிறுசிறு கட்அவுட்டுகளாகப் பொறிக்கப்படும் அவ்வளவுதான் என்கிறார்கள்.

இவ்வாண்டு தமிழகத்துத் தேர்தல்களில் தேர்தல் கமிசன் எடுத்த கெடுபிடிகள் காரணமாக தெருக்களில் கட்சிக்கொடிகளும், தட்டிகளும், அலங்கார வளைவுகளும் இல்லாத்து போலவே டாக்கா நகரத் தெருக்கள் சுத்தமாக இருந்தன.

ஷேக் ஹசீனா சமரசவாதியாகவும் இந்தியாவுக்கு ஓரளவு விசுவாசியாகவும், அமெரிக்காவுக்கு இரட்டை மடங்கு முழு விசுவாசியாகவும் விளங்குகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்னால் ராணுவப்படையினர் நடத்திய கலகத்திற்குப் பின் அவரின் கெடுபிடி குறைந்திருக்கிறது. ஷேக் ஹசசீனா ஆட்சிக்கு வந்த மூன்று மாதங்கள் ஆன நிலையில் சென்றாண்டு பிப்ரவரி 25ல் துணை ராணுவ படைத் தலைமையகம் உள்ள பில்கானாவில் ராணுவ ஆண்டு விழாக் கொண்டாட்டம் நடைபெற்றபோது அதைச் சுற்றி வளைத்த சிப்பாய்கள் தலைமை இயக்குனர் ஷகில் அகமதையும், அவரது மனைவியையும், ராணுவக் குடும்பத்தினர் 140 பேரையும் ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொன்று பிணங்களைப் பெரிய குழி வெட்டிப் புதைத்தனர். இராணுவ சிப்பாய்களுக்கு வழங்கப்படும் சம்பளம், சலுகைகள், வெவ்வேறு அலவன்சுகள் குறைவானது என்ற எதிர்ப்பின் தொடர்ந்த அடையாளத்தின் முக்கிய நிகழ்வாக அதை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் மாபியா கூட்டாளிகள் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ ஷேக் ஹசீனாவைச் சுட்டு இராணுவ ஆட்சி நடத்த திட்டமிட்ட சதி திட்டமிட்டது. தோல்வியடைந்துவிட்டது. நிலைமை தீவிரமானால் இந்தியா இராணுவ படை விமானங்களை அனுப்பி ஹசீனாவை மீட்டு வர திட்டங்கள் இருந்திருக்கிறது.

தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இஸ்லாமிய தாலிபான்களின் எதிர்தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. வங்கதேசத்தில் தாலிபான் தாக்குதல் நடவடிக்கைகள் அவ்வப்போது நிகழ்கின்றன. 1971ல் வங்கதேசம் பிறப்பெடுத்தபின்பு ஷேக் முஜிபிர் ரஹ்மான் குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் விசுவாச ராணுவ கும்பலால் கொல்லப்பட்டார். பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி ஜியா உர் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியாவும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் மகள் ஷேக் ஹ்சீனாவும். மாறி மாறி பிரதமர் பதவிகளை வகித்து வருகிறார்கள். 1971ல் நடந்த போர்க்குற்றங்களை விசாரிக்கும் மசோதா நிறைவேற்றியும் அது நடைமுறைக்கு வரவில்லை.

முந்தின பாகிஸ்தான் அதிபர் சர்தானி போன்றவர்கள் போர்க்குற்ற விசாரணையை நிறுத்தச் சொல்லி ஷேக் ஹசீனாவுக்கு மிரட்டல் விடுத்ததால் அது கைவிடப்பட்டது.

அமெரிக்காவும் இஸ்லாமிய அமைப்புகளைத் தத்தெடுத்து வெறிச்செயல்களை பாகிஸ்தானிலும், வங்கதேசத்திலும் நிகழ்த்தி வருகிறது. பாகிஸ்தான்-ஆப்கான் எல்லையையொட்டி உள்ள வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மெளலானா பஸ்லுல்லா என்பவர் தலைமையிலான அமைப்புக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்கின்றன. இதை அமெரிக்காவே ஊக்குவித்து வருகிறது.

வடமேற்கு எல்லைப்புற ஸ்வாட் சமவெளி பாகிஸ்தானின் ஸ்விட்சர்லாந்து என்று அழைக்கப்படுகிறது. இச்சமவெளியை மையமாகக் கொண்டு நடந்து வரும் சுற்றுலா வருமானம் இத்தாக்குதல்களால் வெகுவாகக் குறைந்துள்ளது. இந்த மகாணத்தில் இருந்து 5 இலட்சம் மக்கள் வங்கதேசத்திற்கும் அகதிகளாக வந்திருக்கின்றனர்.

இந்த அகதிகளால் ஷேக் ஹசீனாவுக்கு தலைவலிதான். அரசியல் விமர்சனங்கள் அவரையே ‘அரசியல் அகதி’ என்றழைக்கின்றன.

வியாழன், 14 ஏப்ரல், 2011

வாகன நெரிசல்

அண்டைவீடு : பயண அனுபவம் :



டாக்காவிலிருந்து 29கி.மீ. தொலைவிலான பழைய பானம் நகரைப் பார்க்கச் செல்வதற்கு நான்குமணி நேரம் பிடித்தது. தினமும் இந்த அனுபவம்தான் எங்களுக்கு. டாக்கா நகரத் தெருக்களின் வாகன நெரிசல் பயமுறுத்தக் கூடியதாக இருந்தது.

பானம் நகரம் 13ம் நூற்றாண்டு வரை இந்துக்களின் ஆட்சியில் இருந்திருக்கிறது. அதன் பின் முகலாயரின் ஆட்சிக்கு வந்த பின் நிகழ்ந்த வியாபாரப் பரிமாற்றங்கள் அதைத் தலைநகராக்கியிருக்கிறது. துணிகளுக்குப் பெயர் பெற்ற நகரமாகியிருக்கிறது. இப்போது கூட அங்கு செல்லும் யாத்திரிகர்களை வழிகாட்டிகள் துணிக்கடைக்குத்தான் அதிகம் கூட்டிச் செல்கிறார்கள். வங்கதேசத்தின் நாராயண கஞ்ச் மாவட்ட்த்தில் சிட்டகாங் செல்லும் வழியில் இது அமைந்திருக்கிறது. இங்கு வசித்து வந்த இந்துக்கள் 1965ல் இந்திய பாகிஸ்தான் யுத்தத்தின்போது இந்தியாவிற்குச் சென்று விட்டதால் வேறு யாரும் குடியேறாமல் பிரமாண்டமான 50க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் அவற்றின் 500 வருட பாரம்பரியத்தையும், பழமையையும் தாக்குப்பிடிக்க முடியாமல் தகர்ந்து போய் சிதிலங்களாக நிற்கின்றன. பழம் மசூதியொன்றும், நாட்டுப்புறவியல் அம்சங்கள் கொண்ட கண்காட்சியும் , நடந்து சென்று இளைப்பாறக்கூடிய தோட்டங்களும் முக்கியமானவை.





டாக்காவின் வாகன நெரிசலுக்குக் காரணமாக பலவற்றைச் சொல்லலாம். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பிரதான சாலையின் " பேபி டாக்ஸி" என்ப்படும் இரட்டை என்ஜின் குட்டி வாகனங்கள். இவை தரும் புகையும் புழுதியும் அபரிமிதமானவை. ஒரு பேபி டாக்ஸி 30 சாதாரணக் கார்களுக்குச் சமம். அவ்வளவு சுற்றுச்சூழல் சிரமம் தருபவை. அவற்றை மாற்றும் திட்டத்தில் பச்சாசை டாக்ஸிகள் சூற்றுச்சூழல் கேடற்றவை என்று சிலதை அரசும் வீதிகளில் ஓட விட்டிருக்கிறது. கால்களில் மிதித்துச் செல்லும் ஏழு லட்சம் ரிக்சாக்கள் நகரில் ஓடுகின்றன. இவற்றில் அய்ம்பது சதவீதத்திற்கு மேற்பட்டவை அனுமதி பெறாதவை. இவை பெரும்பாலும் ஆண்களால் ஓட்டப்படுபவை.

பின்னலாடைத் தொழிலாளர்களில் 80% பெண்கள் இருக்கிறார்கள். ஆண்களை ரிக்சா மிதிக்க இட ஒதுக்கீடு செய்து கொண்டவர்கள் போல என்று எங்கள் குழு தலைவர் அயெண்டியூசி தண்டபாணி கூறினார் (அங்கங்கே தொழிலதிபர்களைச் சந்திக்கிற கூட்டங்களில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு வெளியேறிவிடுவார் அல்லது போலாம் என்று அவசரப்படுத்துவார். காரணம் கேட்டால் பொய் சொல்லறத எத்தன நேரந்தான் கேட்டுகிட்டிருக்கிறது என்பார்).

சுத்திகரிக்கப்படாத பெட்ரோல் உபயோகத்தின் அபரிமிதம், டீசல் விநியோகத்தில் குறைபாடுகள், முறையான கட்டமைப்புகளுடன் தொழிற்சாலைகள் அமையாதது, சுற்றுச் சூழல் சீர்கேட்டிற்கு முக்கிய காரணங்கள் என்கிறார்கள். இவை தரும் சப்தக் கேடு நாராசமாகிறது. டாக்கா வீதிகளில் நாள் முழுக்க ரிக்சாக்களின் மணியடிச் சப்தங்கள் நாராசமாய் ஒலித்துக் கொண்டே இருக்கும். 45% ரிக்சாக்களால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. ரிக்சாக்களுக்கு இணையாக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களால் வீதிகள் நிரம்பி வழிகின்றன. புதிதாய் வருகிற கார்களை 5 வருடம் கழித்துதான் இறக்குமதி செய்ய வேண்டும் என்ற கட்டாயச் சட்டத்தால் வீதிகளில் ஓடும் வெளிநாட்டுக் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கிறார்கள். தொலைபேசித்துறை, மின்துறை போன்றவற்றின் தொடர்ந்த குழிதோண்டும் செயல்பாடுகள், முறையில்லாத பார்க்கிங், கி.மீட்டர் கணக்காக வீதிகளில் தொங்கிச் செல்லும் கேபிள் இணைப்புகளின் ஒயர்களை சரிசெய்வோரின் கூச்சல், வீதியோரத்து மினி ஒர்க்சாப்புகள் ,நடைபாதை மீறி தாறுமாறாய் செல்லும் மக்களின் இயல்பு நெரிசலுக்குக் காரணங்களாக இருக்கின்றன. வங்கதேசம் முழுவதும் 5 மெட்ரிக் டன் வாகனங்கள் இருக்கிறதென்றால் டாக்காவில் மட்டும் 1 மெட்ரிக் டன் வாகனங்கள் ஓடுகின்றன.




அரசியல் கட்சிகள் நடத்தும் பேரணிகள் நகரை ஸ்தம்பிக்கச் செய்கின்றன. டிராபிக் ஜாம் ஏற்படும் போது ரிக்சாக்காரர்களும் , கார்காரர்களும் அவற்றை தண்ணீர் ஊற்றிக் கழுவுவது, சுத்தம் செய்வது போன்றவற்றுக்கு அந்த நேரத்தை வீணாக்காமல் ஒதுக்குகிறார்கள். டிராபிக் ஜாம் நேரங்களில் எங்கள் வாகனத்தின் சுற்றிலும் நெருக்கும் ரிக்சாக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எங்களின் பொழுதுபோக்காக இருந்தது.

திங்கள், 11 ஏப்ரல், 2011

நம்பி வந்தோரை ஏமாற்றாது .............திருப்பூர்

ஆனந்த விகடனில் ........


புதன், 6 ஏப்ரல், 2011

பருத்திக்காடு” – நூல் வெளியீடு

திருப்பூர் எட்டாவது புத்தக கண்காட்சியில் திருப்பூர்


படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான “பருத்திக்காடு” வெளியிடப்பட்டது.



சுப்ரபாரதிமணியன் தலைமை வகித்தார். திருப்பூர் தமிழ்ச்சங்க செயலர்



ஆடிட்டர் லோகநாதன் “பருத்திக்காடு” நூலை வெளியிட, வழக்கறிஞர்



சங்கத் தலைவர் சொக்கலிங்கம், வெற்றித் தமிழர் பேரவைத் தலைவர்



ஜீவானந்தம், வழக்கறிஞர் மோகன், டாப்லைட் வேலு, ஆகியோர் பிரதிகளைப்



பெற்றுக் கொண்டனர்.


வழக்கறிஞர் சி.ரவி நூல் குறித்த அறிமுகம் உரை நிகழ்த்தினார்..


எழுத்தாளர்கள்



மகுடேஸ்வரன், குழந்தைவேலு, தாண்டவக்கோன், காரை. சந்திரசேகர்,



ஆசீர்வாதம் மற்றும் புத்தக கண்காட்சி அமைப்பாளர் கே.ஆர். ஈஸ்வரன்,



கலைவாணி சோமு, ராம மூர்த்தி, நிஷார் அகமது பழ.விஸ்வநாதன் உட்பட



பலர் முன்னணி வகித்தனர். பிரதிகள் கனவு முகவரியில் கிடைக்கும்








பருத்திக்காடு- திருப்பூர் படைப்பளிகளின் தொகுப்பு 2010 : பங்கு பெற்ற


படைப்பாளிகள்:


சிவதாசன்/ சுப்ரபரதிமணியன்/ சாமக்கோடங்கி ரவி/ சுந்தர் அனர்வா/


மகுடேஸ்வரன்/ ஆதலையூர் சூரியகுமார்/



குழந்தைவேலு/ இரத்தினமூர்த்தி/ ஆர்.பி.ராஜநாயகம்/



காரை சந்திரசேகரன்/ தாண்டவக்கோன்/ சுகன்யா/ சுபமுகி/



கிரிஜா சுப்ரமணியம்/ ஆலம்/ காயாதவன்./ ஆர்.ஆர். பாலகிருஷ்ணன்/


ரவி மகேஷ்/ ஆசிர்வாதம்/ திருப்பூர் டி.குமார்/ டாக்டர் செலவராஜ்/


நாகேஷ்வரன்/ டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா/ சிவக்குமார் பிரபு/


நாதன்ரகுநாதன்/ சி.சுப்ரமணியம்/ முத்துபாரதி/ து.ஜோ. பிரபாகர்/


ஆர்.காளியப்பன். விலை ரூ 70/




பிரதிகளுக்கு : கனவு, 8.2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602.
















” கனவு” இலக்கிய கூட்டம்





“கனவு” இலக்கிய வட்ட மார்ச் கூட்டம் ஓஷோபவனில்


நடைபெற்றது. வழக்கறிஞர் சுகன்யா தலைமை தாங்கினார். துணை கலெக்டர்


செல்வராஜ் முன்னிலை வகித்தார். சுப்ரபாரதிமணியன் திருப்பூர்


படைப்பாளிகளின் இலக்கியத் தொகுப்பான ” பருத்திக்காடு” ( வெளியீடு: கனவு


பதிப்பகம், திருப்பூர், பக்கங்கள் 144, விலை ரூ.70) நூலை அறிமுகப்படுத்தி


பேசினார். நாவலாசிரியர் தி. குழந்தைவேலு “ தந்திர கவசம்” என்ற


அவருடைய புதிய நாவலின் அனுபவங்களை விளக்கினார். சிவதாசன்


“ தென் கொங்கு” என்ற உடுமலை ‘துரை அங்குசாமி’ எழுதிய நூலை


அறிமுகப்படுத்தினார். வழக்கறிஞர் சி.ரவி, கவிஞர்கள் ரத்தினமூர்த்தி , ஜோதி,


ஆகியோர் இன்றைய திருப்பூர் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்


பற்றி பேசினார்.



செய்தி: சி.ரவி


வழக்கறிஞர்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

அண்டைவீடு: பயண அனுபவம்: புது எழுத்து

தற்கால வங்கதேச எழுத்து எப்படி இருக்கிறது என்று அறிய் ஆங்கிலத் தொகுப்புகளைத் தேடினேன். "Contemporary short stories in Bangladesh" என்ற University press limited வெளியிட்ட நூல் ஒன்று கிடைத்தது. பல்வேறு வகையான பிரச்சினைகள் தீவிரமாக ஆட்கொண்டிருக்கும் நாட்டின் படைப்புகளின் விஸ்தாரத்தை அதில் சரியாகவே அறிந்துகொள்ள முடிந்தது. 25 கதைகளைக் கொண்ட அத்தொகுப்பை நியாஜ் ஜாமன் என்பவர் தொகுத்திருந்தார். அதில் காணப்பட்ட சில கதைகளின் மையங்கள் பற்றி:

" பாக்லி மற்றும் ஒரு ஸ்டாப்வாட்சும் 400கலோரிகளும்" கதை பெண்களின் நிறைவேறாத பாலியல் ஆசைகளை மையமாகக் கொண்டவையாகும். தங்களை அடையாளம் கண்டுகொள்வதும் உணர்ந்து கொள்வதும் பிரச்சினைகளிலிருந்து வெளியே வர அவர்களுக்கு உதவுகிறது.

அல்முகமது என்ற சமீபத்திய கவிஞர் ஒருவரின் சிறுகதை "தி கார்மெண்ட் பிளட்." இது போல திருமணம் நிறைவேறாத பெண்ணின் பாலியல் அனுபவங்களையும், கிராம அனுபவங்களையும் சொல்கிறது.

" யாரும் என்னைப் பார்க்க வரவில்லை" என்ற ஹாசன் அஜிஜில் ஹக்கின் சிறுகதை குழப்பமும், சிக்கல்களும் நிறைந்த 1971ம் ஆண்டின் வஙகதேச விடுதலைப் போருக்குப் பின்னதான காலத்தைப் பற்றிப் பேசுகிறது. அந்தப் போரில் பாடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் கவனிக்கப்படாமலும், அங்கீகரிக்கப்படாமலும் போன துயரத்தை இது மையமாகக் கொண்டது.

வங்கதேசத்திலிருந்து பிற நாடுகளுக்குப் பணம் சம்பாதிக்கும் பொருட்டு வேலை தேடிப் போகிறவர்களின் அனுபவங்களை மூன்று கதைகள் சொல்கின்றன.

அமெரிக்கன் விசா பெற்றபின்பு ஒருவனுக்குக் கிடைக்கும் மரியாதையும் கெளரவமும் பற்றி ‘டு லிவ் தி பேண்டஸி’ என்ற கதை சொல்கிறது. அதே சமயம் இன்னொரு கதை அமெரிக்கா சென்றபின் ஒரு வங்கதேசத்துக்காரனுக்கு ஏற்படும் அனுபவங்களையும் அவன் வங்கதேசத்துக்குத் திரும்பி வந்தபின் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சொல்கிறது. செலினா ஹுசைனின் கதை மலைவாழ் பிரதேச மக்களின் அனுபவங்களைக் கொண்டிருக்கிறது. சுதிப் என்ற வங்காள இளைஞன் அவனின் பெண் நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மூலம் சோர்வான சூழலுக்குத் தள்ளப்படுகிறான். நினைவுகளும், காதல் அனுபவங்களும் அவனை வேறு எங்காவது செல்லத் துரத்திக் கொண்டே இருக்கிறது. மலைப்பிரதேசத்தில் இருக்கும் நண்பனின் வீட்டிற்குச் சென்று சில நாட்கள் தங்கியிருந்து வர எண்ணி மலைப்பிரதேசத்திற்குச் செல்கிறான்.

மலைப்பிரதேச மக்கள் ராணுவத்தினரின் அடக்குமுறைக்கும், கொடுமைக்கும் எதிராக ஒன்றுதிரண்டு போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதை அங்கு சென்றபின் அறிகிறான். நிலத்தை விட்டு விரட்ட எத்தனிக்கப்படுகிறான். நண்பனின் சகோதரி ராணுவத்தினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள்.

சக மலைவாசி மனிதர்களின் விரும்பத்தகாத செயல்களும் அவனை வருத்துகிறது. அவனின் சிக்கல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்து சம்பிரதாயங்களை எள்ளி நகையாடும் ஒரு கதையும் இதிலிருக்கிறது.ஜர்னா என்பவரின் கதையில் இரு இந்துக் குடும்பத்தின் சிதையும், மறுமலர்ச்சியும் காட்டப்பட்டிருக்கிறது. ஒரு முதிய தாயின் சஞ்சலங்களால் இக்கதை நிரம்பி உள்ளது. அவனின் மூத்தமகள் புஷ்பா மாமியாரின் தொல்லைகளும், தொந்தரவும் மீறி அம்மாவிடம் வந்து அடைக்கலமாகிறாள். பின்னர் அவளின் தனிமை தொந்தரவாக மாறுகிறது. சகோதரனின் நண்பனுடன் உறவும் பரிமாற்றமும் ஏற்படுகிறது. அவனுடன் வீட்டை விட்டு வெளியேறிவிடத் துடிக்கிறாள். அவளின் இளைய சகோதரியின் திருமணத்தை இது பாதிக்கும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஆனாலும் புஷ்பா வெளியேறிவிடுகிறாள். அம்மா மிகுந்த சிக்கல்களுடன் வாழ்க்கையைத் தொடர்கிறாள். பின்னர் அம்மா, புஷ்பா மகிழ்ச்சியாக இருப்பதை அறிந்தபின் ஆறுதல் அடைகிறாள். சனாதன விஷயங்கள் அவளைப் புறம்தள்ளி இருப்பதை உணர்ந்து கொள்கிறாள்.

அல்முகமது, ரிஜியா ரஹ்மான், சலீகா செளத்ரி போன்ற புகழ்பெற்ற முதிய எழுத்தாளர்களின் சிறுகதைகளோடு இளைய தலைமுறையைச் சார்ந்த நஸ்ரென் ஜாஹென், ஜானாஜ் முன்னி, அஹ்மது முஸ்தபா கமல் போன்ற இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

வங்கதேச மக்களின் நவீன வாழ்க்கைச் சிக்கல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்த வங்கதேச எழுத்தாளர்களின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. வங்கதேச ஆன்மாவின் யதார்த்தத்தை இவை கொண்டிருப்பது இதன் பலமாக இருக்கிறது.

வங்கதேசத்தில் இந்திப் படங்களைத் திரையரங்குகளில் திரையிட தடை இருக்கிறது. அவை வங்கதேசப் படங்களைப் பாதிப்பதால் இந்தத் தடை. ஆனால் வங்கதேசத்தில் இந்திய தொலைக்காட்சி வரிசைகள் பெரும்பான்மையானவற்றை அங்கு ஒளிபரப்ப கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு அனுமதியளித்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். ஆனால் மேற்கு வங்காளத்தில் வங்கதேச தொலைக்காட்சி வரிசைகள் கிடைப்பதில்லை. சிலவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

கல்கத்தாவின் கல்லூரி சாலையிலும், காபிஹவுஸ் வட்டாரங்களிலும் வங்கதேச இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பதில்லை என்பது குற்றச்சாட்டாகவே இருக்கிறது. ஒரு சில கடைகளிலே அபூர்வமாகக் கிடைக்கின்றன. பிரிக்கப்படாத வங்காளத்தின் அரசியல், பொருளாதார, கலாச்சார அம்சங்கள் வலுவானவையாக இருந்தன. இந்தியாவிற்கு முன்னோடியாக அவை அமைந்திருந்தன. கோபாலகிருஷ்ண கோகலே (1866-1915) முன்பு சொன்னதாக ஒரு வாசகம் உண்டு: " வங்காளம் இன்று சிந்திப்பதை, இந்தியா நாளை சிந்திக்கும்"

நமது இந்தியாவை பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் கல்கத்தா இந்தியாவின் தலைநகரமாக (1772-1912) இருந்திருக்கிறது. தேசபந்து சித்தரஞ்சன்தாஸ், சுபாஷ் போஸ், எம்,என் ராய், அப்துல் ஹ்சிம் போன்றவர்கள் முன்னணித் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். கலாச்சாரத் தளத்தில் ராஜா ராம்மோகன் ராய், பக்கிம் சந்திர சட்டோபாத்யாய மைல்கள் மதுசூதன் தத், சரத் சட்டோபாத்யாய, ராவீந்திரநாத் தாகூர், காஜி நஸ்ருல், சத்யஜித்ரே, அப்பாஸ் உதின் போன்றோர் இருந்திருக்கிறார்கள்.

தில்லியைத் தலைநகராகக் கொண்ட நடைமுறைகளும், இந்துக் கலாச்சார மேலாண்மையும் 1947 பிரிவினைக்குப் பிறகு இடைவெளியை ஏற்படுத்திவிட்டன. பாகிஸ்தானான பிறகு வங்காள கலாச்சாரம் இஸ்லாமிய எதிர்ப்புக் கலாச்சாரமாக சில சமயங்களில் வடிவெடுத்திருக்கிறது. சமஸ்கிருத தாக்கத்தை உடைத்தது, அராபிக், உருது பிரயோகத் தாவலும் முக்யமானவை. ஆனால் சுதந்திர இந்தியா வங்கதேசம் மலர்வதற்குக் காரணமான பின்பு கலாச்சார நடவடிக்கைகள் ஆரோக்யமாகவே இருந்திருக்கின்றன. முஸ்லிம் பெரும்பான்மை வங்காளிகளின் மேற்கு வங்காளமும் கலாச்சாரப் பிரிவினைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளன.

வங்கதேசத்தின் பிரபலமான எழுத்தாளர்கள் சம்சூர் ரஹ்மான், ஹிமாயுன் அகமத், தஸ்லிமா நஸ்ரின், செளகத் அலி, ரியாஜ் ரஹ்மான், அல் முகமது, நிர்முலெந்து கூன் ஆகியோரின் புத்தகங்களைக் கல்கத்தாவில் பெறுவது சிரமமாக இருக்கிறது. ஆனால் வங்கதேசத்தின் புத்தக சந்தைகளில், நியூ மார்க்கெட், நில்கத் பகுதி, டாக்கா நகரின் புத்தகக் கடைகளில் இந்திய வங்காள எழுத்தாளர்கள் சுனில் கங்கோபாத்யாய, சிர்சிந்து முகோபாத்யாய, சமரேஷ் மஜும்தார், புத்ததேவ் குக, சஜிப் சட்டோபாத்யாய ஆகியோரின் புத்தகங்கள் கிடைக்கின்றன என்கிறார்கள். டாக்கா சந்தையில் இந்திய வங்காள மொழிப் புத்தகங்களின் ‘பைரட்’ பிரதிகள் கிடைப்பதே அவற்றுக்கான வரவேற்பைச் சொல்வதாகப் பேச்சு அடிபட்டது.

இதேபோல் பாகிஸ்தான் எழுத்தாளர்களின் புத்தகங்கள் இந்தியாவில் கிடைப்பது அபூர்வமாகத்தான் இருக்கிறது. பாகிஸ்தான் எழுத்தாளர்கள், பாகிஸ்தானில் வளர்ந்து பிற நாடுகளில் வாழும் எழுத்தாளர்கள், குழந்தை வயதிலேயே பாக்கிஸ்தானை விட்டு வெளியேறிய எழுத்தாளர்கள் என்று பலவகையான பாகிஸ்தான் எழுத்தாளர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த வகைக்கு உதாரணமாக சிலர் தென்படுகிறார்கள். நடீம் அஸ்லாம் குழந்தைப் பருவத்தை பாகிஸ்தானில் கழித்தவர். அவரின் முதல் புத்தகம் பாகிஸ்தானை மையமாகக் கொண்ட்து. ஹனிப் குரோஸி பாகிஸ்தானில் வாழ்ந்தவரல்ல; தாரிக் அலி பாகிஸ்தானில் வாழ்ந்தவர். இங்கிலாந்தில் நெடும் காலம் வாழ்பவர்.

ஆங்கிலத்திலான பாகிஸ்தானி நாவல் என்பது மும்தாஜ் ஷான்னாவாஜ் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது எனலாம். 36 வயது மும்தாஜ் ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார். பாகிஸ்தான் பிரிவினை பற்றிய நாவலான கையெழுத்துப் பிரதியிலான அது அவரின் மறைவிற்குப் பிறகு 1950ல் அவரின் குடும்பத்தினரால் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் பாகிஸ்தானின் ஆட்சிமொழியான உருதுவின் ஆட்சி நீடித்தது.சதாத் மாஸ்டோ, இண்டசார் ஹுசைன், அப்துல்லா ஹுசைன் போன்ற உருது எழுத்தாளர்கள் உலகப்புகழ் பெற்றனர். அஹ்மத் அலியின் டுவிலிட் இன் டில்லி 1911ம் ஆண்டின் தில்லியின் முஸ்லிம்கள் வாழும் பகுதியைப் பற்றியதாக இருந்தது. முஹல்களின் வீழ்ச்சியும், ஆங்கிலேயர்களின் வருகையும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அது இங்கிலாந்து பதிப்பகம் ஒன்றால் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. அலி 1947ல் டெல்லியில் பிறந்தவர். பிறகு நாடு கடந்து பாகிஸ்தானில் வாழ்ந்தவர். 1980 வரை ஆங்கில நாவல்கள் இங்கிலாந்து, அமெரிக்கா எழுத்தாளர்களாலே எழுதப்பட்டன். பாகிஸ்தான் ஆங்கில நாவலான பாப்சிசித்வாவின் ‘தி குரோ ஈட்டர்ஸ்’ பாகிஸ்தானின் பார்ஸி இனமக்களின் வாழ்க்கையை வெளிப்படுத்திய ஆங்கில நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக விளங்கியது. 1997ல் ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் வெளியிட்ட 50 ஆண்டு பாகிஸ்தான் எழுத்தாளர்களின் ஆங்கில் எழுத்து முக்கியமானதாகும்.

"CONTEMPORARY SHORT STORIES IN BANGLADESH" தொகுப்பையும் இவ்வரிசையில் முக்கியமானதாகக் கொள்ளலாம்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

விடுதலை யுத்தப் படங்களும், தன்வீர் மொக்கமலும்

அண்டை வீடு: பயண அனுபவம்

1971ன் வங்கதேச விடுதலை பற்றிய சில முக்கியமான படங்களை எடுத்தவர் தன்வீ ர் மொக்கமல் என்ற வங்கதேச இயக்குனர். பல திரைப்பட விழாக்களில் இவரின் படங்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றன. திரைப்பட விழாக்களில் இவரின் படங்களைப் பார்த்திருக்கிறேன். ரித்விக் கடக்கின் பாணியை இவர் திரை மொழியில் ஊடுருவியிருப்பதாகத் தோன்றியிருக்கிறது. டாக்கா பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் பயின்றவர். படைப்பாளியும் கூட. இவரின் முதல் விவரணப் படமே ஒரு அரசியல் கவிதையொன்றை மையமாகக் கொண்டதுதான். நம்மூர் வீடியோ கடைகளில் நல்ல படங்கள் கிடைக்காத மாதிரி டாக்காவின் வீடியோ கடைகளில் தேடியபோது அவை கிடைக்கவில்லை. சமூக ஆர்வலர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்; சமூகப் பணியாளர்கள், தன்னார்வக் குழுவினர் அவரின் படங்களை நன்கு அறிந்திருந்தனர். அதைப் பலரிடம் கேட்ட போது அறிந்துகொள்ள முடிந்தது.

"ஸ்மிருதி எக்காடுர்" என்ற விவரணப் படம் வங்கதேசத்தில்

எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் 1971ல் கொல்லப்பட்டது பற்றிய

குரூர சித்தரிப்பாகும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் தவறான

நடவடிக்கையால் வங்கதேச சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாகக்

குரல் தந்த எழுத்தாளர்கள் கொல்லப்பட்டது பற்றி இப்படம் பேசுகிறது.

வங்கதேச அக்காதமி வெளியிட்டிருக்கும் புத்தகங்களின் அடிப்படையில்

இப்படத்தை அவர் தயாரித்திருக்கிறார்.



‘சகோதரி’(ரெபையா) என்ற இவரின் படம் சோபாகிஸின்" ஆண்டிகனி"யை மையமாகக் கொண்டு 1971 வங்கதேச விடுதலை யுத்தத்தைக் காட்டி உள்ளது. ரெபையா, ரொக்கையா இரு அனாதைச் சகோதரிகள். முஸ்லிம் கட்சியைச் சார்ந்த பணக்காரரான அவரின் மாமாவின் பாதுகாப்பில் இருப்பவர்கள். சகோதரிகளின் சகோதரன் ஒருவன் பாகிஸ்தான் ராணுவத்திற்கெதிரான எழுச்சிப் படையில் சேருகிறான். கொல்லப்படுகிறான். அவனின் பிணத்தைப் புதைக்காமல் நதிக்கரையில் போடுகிறார்கள். பார்க்கிற கிராமத்தினர் பிணம் ஓர் எச்சரிக்கைக் குறியீடாகவும், பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்குப் பயம் தருவதாகவும் இருக்கும் என்கிறார்கள். ரெபையா பிணத்தைப் புதைக்க ஏற்பாடு செய்ய நதிக்கரைக்குச் செல்கிறாள். சுடப்பட்டுக் கொல்லப்படுகிறாள். ரெபையாவின் மரணம் கிராமத்தில் எழுச்சியை உண்டாக்குகிறது. கெரில்லா யுத்தத்தின் முதல் வெற்றியாகக் கணிக்கிறார்கள். ரெபையா வீரமரணம் அடைந்ததாக எழுச்சி கொள்கிறார்கள்.

"மதுமதி என்ற நதி" (நடா நாம் மதுமதி)யும் 1971ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு ஹேம்லெட் கதையை மறு வாசிப்பில் படமாக்கியிருக்கிறார். இதில் இந்து, முஸ்லிம் மதக்குறியீடுகளாக இருபாத்திரங்களை தன்வீர் உருவாக்கி இருக்கிறார். மொல்லா ஒரு நிலச்சுவான்தார். உள்ளூர் முஸ்லிம் தலைவர். அண்ணன் இறந்தபின்பு அண்ணியை மணந்து கொண்டவன். அண்ணிக்கு பச்சு என்ற மகன் இருக்கிறான். அவ்வூரின் அமுல்யா சக்ரவர்த்தி என்ற பிராமண ஆசிரியருக்கு சாந்தி என்ற விதவை மகள் இருக்கிறாள். வங்கதேசத்து யுத்தம் ஆரம்பித்த பின் மக்களைக் கொன்று குவிப்பதும், பாலியல் வன்கொடுமைகளும் சாதாரணமாகின்றன. பச்சு வங்கதேச கெரில்லாப் படையில் சேருகிறான். மொல்லா பாகிஸ்தான் ராணுவத்திற்குத் துணையாக இருக்கிறான். அமுல்யா சக்ரவர்த்தி கொல்லப்படுகிறான். சாந்தியை திருமணம் செய்ய மொல்லா கட்டாயப்படுத்துகிறான். பச்சு நதிக்கு அந்தப்புறம் கெரில்லா படையில் இருக்கிறான். நதியைக் கடந்து போய் பாகிஸ்தான் ராணுவத்தினரின் வன்கொடுமையை எதிர்க்கத் தயராகிறான்.

"நிஸ்ஸாகோ சாரதி" என்ற விவரணப் படம் 1971 போர் பற்றியது. தஜ்தீன் அகமத் என்ற ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நெருங்கிய நண்பர் பற்றியது. வங்கதேசத்தின் முதல் பிரதமரும் ஆவார். விடுதலை யுத்தத்தை முன்னின்று நடத்தியவர்.



1970ல் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் கட்சிக்கு முழு பலம் கிடைத்து தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் ஷேக் முஜிபுர் ரஹ்மானைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். மக்களும், போராட்டக்காரர்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள். தஜ்தீன் தன் ஆதரவாளர்களுடன் இந்தியா வந்து அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்திக்கிறார். இந்தியா செய்த ராணுவ உதவியால் பாகிஸ்தான் ராணுவம் தோல்வியைத் தழுவுகிறது. ஏப்ரல் 1971ல் வங்கதேசம் உருவாகிறது. டிசம்பரில் வங்கதேசம் என்ற கிழக்கு பாகிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து பிரிந்து தனி நாடாக பிரகடனப்படுத்தப்படுகிறது. ஷேக் முஜிபுர் ரஹ்மான், தஜ்தீன் உட்பட்டோரின் மந்திரிசபை அமைகிறது.

நான்காண்டுகளில் 1975ல் ராணுவத்தின் ஒரு பிரிவினரால் ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிறைபிடிக்கப்பட்டு கொல்லப்படுகிறார். மூன்று மாதங்கள் கழிந்து தஜ்தீனும் டாக்கா மத்திய சிறையில் அடைபட்டிருந்தபோது கொல்லப்பட்டார். விடுதலைப் போரின் முக்கிய தளபதியாகக் கணிக்கப்பட்டு இப்படத்தில் அவர் முன்வைக்கப்படுகிறார்.

தன்வீர் மொக்கமல் அதிகாரத்துவத்தின் வன்முறை சகஜமாய் நிலவும் உலகில் தீவிரமான அக்கறையாகத் தன் எழுத்தையும், படத்தையும் எடுத்துக் கொண்டவர். இடதுசாரி பத்திரிகையாளராக விளங்கியவர். வங்கதேசத்தின் நிலமில்லாத ஏழை விவசாயிகளின் சங்க ஒருங்கிணைப்பில் பாடுபட்டவர். ஐந்து முழு நீளப்படங்களும், பதினோரு விவரணப் படங்களும் எடுத்திருக்கிறார். சிறுகதைகள், கவிதைகள் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. திரைப்படம் பற்றின மூன்று நூலகளை எழுதியுள்ளார். மார்சிம் கார்க்கியின் "லோயர் டெப்த்"தை வங்காளத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவரின் இரு முக்கியமான படங்கள் 1) ‘லால்சால்’ 2).‘சித்ரா நடிர் பாரே’.

1) லால்சால் (எ ட்ரி வித்தவுட் ரூட்ஸ்):

கிராமப்புறத்தைச் சார்ந்த மஜித் ஒரு கல்லறைத் தோண்டி. அதில் ஒரு பக்கிர் (சாமியார்) இருந்ததாகச் சொல்கிறான், ஊர்மக்கள் அந்தக் கல்லறையை வழிபடத் துவங்குகிறார்கள். அவனுக்கு அது தொழிலாகியும் விடுகிறது: விவசாயப் பெண்ணை மணந்து கொள்கிறான். பணம் சேர்கிறது. புனிதமானவன் என்ற பெயரும் சேர்கிறது. இன்னொரு இளம் பெண்ணையும் வலுக்கட்டாயமாக மணந்து கொள்கிறான். இளம் மனைவி கல்லறையை உடைத்து அவனைப் பற்றி உலகிற்கு வெளிப்படுத்துகிறாள்.

2) சித்ரா நடிர் பாரே ( க்ய்ட் புளோஸ் ரிவர் சித்ரா):

சுதந்திரத்திற்குப் பின்னால் பாகிஸ்தான் பிரிவினையின்போது கிழக்கு பாகிஸ்தானில் வசித்து வந்த இந்துக்கள் பலர் இந்தியாவிற்கு இடம் பெயர்கிறார்கள். சித்ரா நதியின் ஒரு கரையில் வசித்து வரும் கதாநாயகனுக்கு இரு பையன்கள். மனைவியை இழந்தவன் அவன். இந்துக்களுடன் முஸ்லிம்கள் இணக்கமாக வாழ்கிறார்கள். பையன்கள் வளர்ந்து படிக்கிறார்கள். ஒருவன் பள்ளிப் படிப்பு முடிந்து 1960ல் கிழக்குப் பாகிஸ்தானில் நிகழ்ந்த அரசியல் போராட்டங்களின் போது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக நிற்கிறான். அவன் கொல்லப்படுகிறான். கிராம மருத்துவரான அவனின் சகோதரனின் மகள் முஸ்லிம்களால் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அலைக்கழிகிறாள். அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். பிரதான கதாபாத்திரத்தின் குடும்பத்தினரும் இந்தியாவிற்குக் குடியேற கல்கத்தாவைக் கடந்து போகிறார்கள்.



கார்மண்ட் கேர்ள்ஸ் ஆஃப் பங்களாதேஷ்" என்ற தர்வீன் மொக்கமலின் விவரணப் படம் மிக முக்கியமானப் படமாகும். சுகாதாரக் கேடுகளாலும், தொழிற்சாலைக் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாலும் இறந்துபோன மூவாயிரம் பெண்களைப் பற்றி இப்படம் பேசுகிறது. மலின உழைப்பினால் உலகச் சந்தையில் வங்கதேசத்தின் பின்னலாடை பெருமளவில் விற்பனையாகிறது. உற்பத்தியில் சீனாவுடன் போட்டி போடுகிறது. வலுவில்லாத தொழிற்சங்கங்கள். மலினமாகிப் போன பின்னலாடை உழைப்பாளிகள். 2010ம் ஆண்டு மேயில் நடைபெற்ற பின்னலாடைத் தொழிலாளிகள் போராட்டத்தை அரசாங்கம் அடக்கியது. பலர் கொல்லப்பட்டார்கள்

தன்வீர் எப்போதும் தான் விளிம்புநிலை மக்களின் ஆதரவாளனாகவே இருந்து வருவதைத் தன் எழுத்து, திரைப்பட ஆக்கங்களில் நிரூபித்திருக்கிறார். டாக்காவின் பின்னலாடைத் தொழிலாளர்கள் பற்றிய இவரின் படத்தை எங்கள் குழுவில் இருந்த தொழிற்சங்கத் தலைவர்களிடம் குறிப்பிட்டபோது திருப்பூர் அதிகமான குறும்பட இயக்குனர்களைக் கொண்ட ஊர் என்று சொல்கிறர்கள். ஆனால் திருப்பூர் பின்னலாடைத் தொழிலாளர்கள் பற்றி படம் எதுவும் எடுக்கவில்லையே என்று குறிப்பிட்டார்கள்.

அலோசியஸை இயக்குனராக்க் கொண்ட ‘சேவ்’ அமைப்பு வெளியிட்டிருக்கும் குறும்படங்கள் பற்றி அவர்களிடம் பட்டியலிட்டபோது ஒருவகைத் திருப்தியை அவர்களின் பதிலில் காண முடிந்தது. "சுமங்கலி" என்ற இளம் பெண்களைச் சுரண்டும் சுமங்கலித் திட்டம் பற்றிய ரவிக்குமாரின் இயக்கத்திலான படம், தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றிய " பார்வதி சபதம் " தாண்டவக்கோன் இயக்கம் , பேரெழில் குமரன் இயக்கத்திலான எனது கவிதை ஒன்றை மையமாகக் கொண்ட " சோற்றுப்பொட்டலம் " குழந்தைத் தொழிலாளர்கள் பற்றியது ஆகியவற்றை ‘சேவ்’ தயாரித்து வெளியிட்டுள்ளது.இதைத் தவிர எனது சிறுகதையொன்றை மையமாகக் கொண்ட "திருவிழா" படம் உட்பட 20 குறும்படங்கள் குழந்தைத் தொழில் உழைப்பை விமர்சித்து திருப்பூர் குறும்பட இயக்குனர்களால் வெளியாகியுள்ளன. ஆனால் விவரணப் படங்கள் பற்றிய அக்கறை அவர்களிடம் இல்லாதது பெரிய குறை.

subrabharathi@gmail.com