சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை
========================================== ====
தொழில் நிமித்தம் காரணமாக வெளியூர்களில் வசித்துவிட்டு 10 ஆண்டுகள் கழித்து எனது சொந்த ஊரான-பின்னலாடை நகரம்-திருப்பூருக்கு மீண்டும் குடிவந்தபோது நகரத்தின் முகம் புதிதாய் மாறியிருந்ததைக் கண்டேன். 10,000 ஆயிரம் கோடி போய் அந்நியச் செலவாநியைத் தரும் தொழில் நகரமாயிருந்தது. என்னுடன் படித்த பலர் ஏற்றுமதியாளர்களாகி இருந்தனர். ஆனால் இந்த வளர்ச்சிக்குப் பின்னால் நொய்யல் என்ற நதி காணாமல் போனதும், நொய்யல் சாயக்கழிவுகளின் ஓடையாகியிருந்ததும், ஐம்பதாயிரம் குழந்தைத் தொழிலாளர்களும், சுற்றுச் சூழல் கேடும் என்னை வெகுவாக பாதித்தது. இந்த பாதிப்பு சுற்றுச் சூழல் குறித்த அக்கறையாக என்னுள் விதைவிட்டது.
தொழில் வளர்சிக்குப் பின்னால் இருக்கிற மனிதர்களின் இடர்பாடுகளும், சுற்றுச்சூழல் கேடும், மனித உரிமை பிரச்சனைகளும் படைப்பினூடே சமூக இயக்கங்களிலும் பங்கு பெறச் செய்தது. என் போன்றோர் தொழில் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சாரமும் வலுப் பெற்றது. ஆனால் தொழில் வளர்ச்சி என்பது எதன் பொருட்டு என்ற கேள்வியும் தார்மிகமாய் முன் வைக்கப்பட்டு போராட்ட வடிவமானது.
அச்சூழல் “சாயத்திரை” நாவலை எழுத வைத்தது. சாயங்களை அப்பிக் கொண்டு திரிகிற மனிதர்கள். குழந்தைத் தொழிலுக்காக தங்கள் இளம் பருவத்தையும் கல்வியையும் இழந்த குழந்தைகள். காணாமல் போன நதி. இவை வெவ்வேறு கதாபாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டன. விளிம்பு நிலை மனிதர்களை பிரதானப்படுத்தி முன் வைக்கப்பட்ட இலகியப் பிரதியாக அது அமைந்தது. பின் நவீனத்துவ மனிதர்களும் உள்ளீடும் நாவலுக்கு பலமூட்டின. சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசைப் பெற்றது. ஆங்கிலத்தில் புதுவை பா.ராஜா அவர்களாலும் மொழிபெயர்க்கப்பட்டு இந்த நாவல் வெளிவந்திருக்கிறது. ஹிந்தியில் திருமதி மீனாட்சி பூரி அவர்களால் ரங்க் ரங்கிலி சாதர் மெஹெலி என்ற பெயரில் மொழிபெயர்ப்பாகியுள்ளது. தற்போது ஸ்டேன்லி அவர்களால் மலையாளத்திலும், தமிழ்ச் செல்வி அவர்களால் கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு ஒரே சமயத்தில் வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவன் என்றாலும் கன்னடம் வாசிப்பு இல்லாத குறை இப்போது இந்தப்பிரதியைக் காணும் போது ஏக்கமாக வடிவெடுக்கிறது .
தமிழில் இந்த நாவல் வெளிவந்து பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த நாவல் முன் வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது இன்னும் துயரமானது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன. அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன. கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் போன்றவை உலக அளவில் முதலாளித்துவதின் கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில் நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக் கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேராசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல் என்ற அளவில் இதைக் கன்னடத்தில் மொழிபெயர்த்த திருமதி.தமிழ்ச் செல்விக்கும், வெளியிடும் ரவிக்குமாருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
அன்புடன்________________
சுப்ரபாரதிமணியணின் ‘சாயத்திரை’
நாவலின் கன்னட மொழிபெயர்ப்பு சுப்ரபாரதிமணியன் பண்ணத்திர “நூலின் முன்னுரை இது
(புத்தக விலை . ரூ100 ,நவயுக பதிப்பகம், பெங்களூர் )
"நன்றி திண்ணை "
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -