பின்லாந்து நாட்டைச் சார்ந்த இயக்குனர் அகி கௌரிஸ்மதியின் பெயர் சர்வதேசத் திரைப்பட அரங்கில் விருதுகளை அவர் நிராகரிக்கும் போதெல்லாம் பெரிதும் அடிபடும். தீர்க்கமாயிருந்து அவற்றை நிராகரிப்பார். சர்வதேச அமைப்பான அம்னஸ்டி இண்டர்நேஷனல் வழங்கிய மனித உரிமைகள் குறித்த விருதொன்றை ஏற்றுக் கொண்டவர். இவ்வாண்டில் அவரின் ‘லைட்ஸ் இன் டஸ்க்’ படத்திற்காக வழங்கப்பட்ட சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான அகாதமி விருதை நிராகரித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் வெளிநாட்டுக் கொள்கைகளை எதிர்த்து அப்பரிசு வாங்க மறுத்ததாக அகி தெரிவித்தார். ‘அமெரிக்கா ஒரு பாம்பு. செத்துப்போன பாம்புதான். ஆனால் குரூரமானது. உலகத்தையே பணத்தால் சுருட்டிப் போட்டுக் கொள்ளலாம் என்று நினைக்கிற குரூர மிருகம்’ என்கிறார் அகி. ‘தோற்றுப் போகிறவர்களைப் பற்றி படம் எடுக்கிறவன் நான். நானும் தோற்றுப்போன மனிதன்தான்’. தோற்றுப் போகிற மனிதர்களைப் பற்றி மூன்று தொடர் படங்கள் (ட்ரையாலஜி) எடுத்திருக்கிறார். அதன் இறுதிப் படம்தான் ‘லைட்ஸ் இன் த டஸ்க்’.
தபால்காரனாக, கழிவறை துப்புரவாளனாக, திரைப்பட விமர்சகனாக என்று பல தொழில்களை மேற்கொண்ட அகி 90 நிமிடங்களுக்கு மேல் படங்கள் எடுக்கத் தேவையில்லை என்கிறார். 70 நிமிடப் படமே இறுதிப் படமானது. சுவீடன், ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிற்கு இடையில் தென்படுவது பின்லாந்து. 1980களின் இறுதியில் பொருளாதார தாராளமயம் மற்றும் திறந்தவெளி சந்தை அந்நாட்டைப் பொருளாதார ரீதியில் வெளிக்கொண்டு வந்தது. 1995 ஐரோப்பிய யூனியனில் இணைந்தது. அதிகமான முதியவர்களைக் கொண்ட நாடு. ஐம்பது சதவீதம் வாக்காளர்கள் ஐம்பது வயதைக் கடந்தவர்கள். வருடத்திற்குப் பதினைந்து முதல் இருபது படங்கள் மட்டுமே அங்கு தயாரிக்கப்படுகின்றன. 1990ல் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களால் பட எண்ணிக்கை சென்ற பத்தாண்டுகளில் வெகுவாகக் குறைந்திருந்தது.
‘லைட்ஸ் இன் த டஸ்க்’ படம் ஒரு வியாபார ஷாப்பிங் சென்டரில் காவலாளியாகப் பணிபுரியும் ஒருவனின் தோல்வியடைந்த வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. ‘மாலின்’ விரிந்த பரப்பில் திரிந்து அலைவதும், காலியான கடைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அவனுக்கு வேலையாகிறது. அவன் மூன்று ஆண்டுகள் அங்கு வேலை செய்தாலும், அவனது பெயர் அவனது மேலதிகாரிக்குத் தெரியாது. மற்ற காவலாளிகளும் அவனை நிராகரித்தே வந்திருக்கின்றனர். தெருவில் அமர்ந்திருக்கும் ஆப்ரிக்கப் பெண், தெரு நாய், துரித உணவு விற்கும் பெண் ஆகியோரே அவனின் கவனத்திற்குரியவர்கள். துரித உணவு விடுதிப் பெண் அவனுக்கு ஆறுதலாய்ப் பார்வையையும், வார்த்தைகளையும் வழங்குபவள். ஒரு மதுக்கடைமுன் கட்டப்பட்ட நாய் ஒன்று அவனை ஈர்க்கிறது. அதைச் சுட்டியவர்கள் மதுக்கடையில் இருப்பவர்கள் என்பதையறிந்து கேட்கிறான். அடிபடுகிறான். அவனுக்கு நட்பாகிற பெண்ணுடன் திரைப்படங்களுக்கும், உணவு விடுதிக்கும், ராக் இசை நிகழ்ச்சிகளுக்கும் செல்கிறான். ‘மாலில்’ இருக்கும் ஒரு தங்க நகைக் கடையில் நடக்கும் திருட்டிற்கு அப்பெண் உடந்தையாகிறாள். அவன் பிடிபட்டு சிறைக்குப் போகிறான். சிறையிலிருந்து திரும்பி வருபவன் அப்பெண்ணை மீண்டும் சந்திக்கிறான். அவள் ஏமாற்றி இருப்பது தெரிகிறது. அவள் இன்னொரு கூட்டத்தின் பிடியில் இருப்பவள். அந்தக் கும்பலிடம் சென்று மீண்டும் அடிபடுகிறான். துரித உணவு விற்கும் பெண் அவனுக்கு ஆறுதலாக இருக்கிறாள்.
அகங்காரம் கொண்ட சிநேகிதியாக அவனுடன் சில நாட்கள் திரிந்து அலையும் பெண் அவனை மிகவும் பாதிக்கிறான். குழந்தை மனத்தினனாக அவன் அவளிடம் தன்னை சமர்ப்பிக்கிறான். ஆனால் அவளோ பெற்றோரின் உள் மனத்தினளாக ஆணையிட்டுக் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறவளாக இருக்கிறாள். ‘சாதாரண காவலாளி நீ. எனக்காய் இவ்வளவு செலவு செய்கிறாயே?’ என்று கேட்கும்போது அவளிடம் குழந்தைத்தனம் இருக்கிறது. ஆனால் அதிகாரம் அவளுள் விசுவரூபித்து அவனைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுகிறது. துரித உணவு விற்கும் பெண் அவனுக்கு ஆறுதலாகவே இருக்கிறாள். முதிர்ந்த மனத்தோடு அவனை அணுகுகிறாள். அவளின் பார்வை ஆறுதலாக இருக்கிறது. புது சிநேகிதி பற்றி பொறாமை மீறி எச்சரிக்கையை அவள் பார்வை தருகிறது. தெருவில் பார்க்கும் ஆப்ரிக்க சிறு வயதுப் பெண் குழந்தை மனத்தோடே அவனை எப்போதும் அணுகுகிறாள். அவன் அடிபடும்போது குழந்தை மனத்தோடே பதறுகிறாள். அதிகாரத்தால் மற்றவர்கள் அவனைச் சிதைக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இந்த அதிகாரத்திற்கெதிரான எதிர்ப்புணர்வே தனது படங்கள் என்கிறார் அகி. அதிகாரம் குலைக்கும் மனித உரிமைப் பிரச்சினைகள் அவர் எழுப்பும் கேள்விகளில் முக்கியமானதாக இருக்கிறது. அதற்காகவே அவருக்கு அம்னஸ்டி இன்டர்நேஷனலின் மனித உரிமை விருது தரப்பட்டது.
தோற்றுப் போகிற ஒரு விவசாயப் பெண்ணைப் பற்றியபடம். ‘ஜஹா’. பின்லாந்து நாவல் இது. நான்காவது முறையாக இது அகியால் திரைப்பட வடிவமாக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் நடக்கும் கதையை அகி 1970களில் நடப்பதாக அவரின் திரைவடிவத்தில் அமைத்திருந்தார். ஒரு விவசாயப் பெண் கணவனுடன் குடும்பத்தையும், விவசாயத்தையும், கால் நடைகளையும் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாள். அந்தக் கிராமத்திற்கு வரும் நகரத்தைச் சார்ந்த ஒருவனின் மகிழ்வுந்து பழுதாகி விடுகிறது. அவன் தங்கும்போது விவசாயப் பெண்ணுடன் நட்பாகிறது. நகரவாழ்க்கை, நவீன வாழ்க்கை பற்றியக் கற்பனைகள் அவளை அவனுடன் நகரத்திற்கு வரச் செய்கிறது. கொஞ்சகாலம் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள். அவன் விபச்சார விடுதியொன்றில் அவளைத் தள்ளிவிட்டுத் தப்பித்து விடுகிறான். பத்தாண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட படமென்றாலும் பேச்சில்லாத, மௌனப்படமாக இதை எடுத்திருக்கிறார் அகி. துணையெழுத்தில் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. ஒரு நாவலைக் காவியத்தன்மைக்குக் கொண்டு செல்வதற்கு அப்படத்தின் பாணி பயன்பட்டதாக அகி சொல்கிறார்.
வெகு நிதானமான விவரிப்பைக் கையாள்கிறவர் அகி. பிரெஞ்சு இயக்குனர்கள், பாஸ் பைண்டரின் தாக்கங்களை உள்வாங்கிக் கொண்டவர். பாத்திரச் சித்தரிப்பிலும், நிதானமான விவரிப்பிலும் சாமான்ய மனிதர்களின் துயரங்களை ஆழமாகக் காட்டிவிடுபவர். திரைப்படத்தை ஒரு இருண்மைத் தன்மை கொண்ட விஷயத்திற்காகப் பயன்படுத்துவதாய் சொல்கிறவர் அகி.
அவரின் அமெரிக்கா பற்றிய விமர்சனத்தை ‘லெனின்கிரேடு பாய்ஸ் கோ அமெரிக்கா’ என்ற படத்தில் கிண்டல் தொனியாக்கியிருந்தார். ராக் இசை நிகழ்ச்சிகளை நடத்தும் சில இளைஞர்கள் புகழ்பெற வேண்டி அமெரிக்காவிற்குச் செல்கிறார்கள். அதைக் கிண்டல் தொனியுடன் சொல்லியிருந்தார்.
‘தி மேன் வித்தவுட் பாஸ்ட்’ என்ற அவரின் தோல்வியடைந்த மனிதர்களைப் பற்றிய பட வரிசையில் முக்கியமானதாகும். பெயரற்ற அவன் ஹெல்சிங்கி நகரத்திற்குப் புகைவண்டியில் வருகிறான். பூங்காவொன்றில் படுத்துத் தூங்குகிறான். காரணமில்லாமல் ஒரு கூட்டத்தால் அடித்து சித்ரவதை செய்யப்படுகிறான். நினைவு இழந்தவன் மறுபடியும் புகைவண்டி நிலையம் வந்து அங்கேயே புகைவண்டிப் பெட்டிகளுக்குள் அடைக்கலமாகிறான். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பயன் இருப்பதில்லை. சுற்றியிருக்கும் சாதாரண விளிம்பு நிலை மனிதர்களுடன் நட்பாகவும், அன்பாகவும் இருப்பதுதான் அவனின் வாழ்வாகிறது. இந்தப் படத்தில் அவனைத் தாக்கி காயப் படுத்துபவர்களுக்கு நோக்கம் எதுவுமில்லை. மனித வக்கிரத்தின் செயல்பாடு அது. ‘லைட் இன் டஸ்க்’ படத்தில் காவலாளியை அடித்துத் துன்புறுத்துபவர்களுக்கு அவனை ஏமாற்றுவது நோக்கமாக இருக்கிறது. எல்லோரும் அவர்களின் வக்கிரத்தின் வெளிப்பாடாய் வன்முறையைக் கையாள்கிறார்கள். ‘மேன் வித்அவுட் பாஸ்ட்’ படம் வெளிவந்தபோது அவருக்கு அப்படத்திற்காகப் பரிசு தரப்பட்டது.
உள்நாட்டில் போர் நடக்கிறபோது பரிசு எனக்குத் தேவையில்லை என்று நிராகரித்தார் அகி. போரும், இழப்புகளும் குரூரமானவையாக எடுத்துச் சொன்னார். நியூயார்க் திரைப்பட விழா பரிசொன்றையும் ஒரு தரம் அவர் வாங்கிக் கொள்ள மறுத்து நிராகரித்தார். அப்போது ஈரானியத் திரைப்பட இயக்குனர் அப்பாஸ் கியரஸ்டமிக்கு அந்தத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘விசா’ தர அமெரிக்கா மறுத்ததை எதிர்த்து அப்பரிசை நிராகரித்தார். இவ்வாண்டு புஷ்ஷை எதிர்த்துப் பரிசை நிராகரிக்க அவர் தீர்க்கமான முடிவுகளை வெளியிட்டு தன் எதிர்ப்புக் குரலை வெளிப்படுத்தியவர் அகி.