இவ்வாண்டின் பல்வேறு சர்வதேசத் திரைப்பட விழாக்களில் அதிக ரசிகர்களைக் ‘கிறங்கடித்தபடம்’ அல்லது திகிலூட்டிய படமென்றால் அதை லார்ஸ் வான் ட்ரையரின் ‘ஏன்ட்டிகிரைஸ்ட்’ என்று சொல்லலாம். கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது எழுந்த சர்ச்சைகள் வெவ்வேறு நாடுகளில் திரையிடப்பட்டபோதும் தொடர்ந்தன. ஏகமாய்க் கூட்டங்களை இப்படத்திற்குச் சேர்த்தது. ஒரு பெண் கணவனுக்குச் செய்யும் சித்ரவதைகளின் உச்சத்தைக் கண்ட சில ஆண்கள் மயக்கமுற்று விழுந்தனர். திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் என் அருகில் அமர்ந்திருந்தவர் ஒருவர் மயக்கமுற்றார். திரையரங்கில் பல சமயங்களில் அமளியும், சலசலப்பும் இருந்தன.
லார்ஸ் எப்போதும் சர்ச்சைக்குரிய இயக்குனராகத்தான் இருந்து வந்திருக்கிறார். 1995ல் ‘டாக்மே’ படங்கள் என்ற தலைப்பில் அவரும் சில இயக்குனர்களும் பாலியல் சம்பந்தமான படங்களை ஹாலிவுட் படங்களுக்கு எதிரானவையாக எடுக்க ஆரம்பித்தனர். அது ஒரு இயக்கமாகவே வளர்ந்தது. பெண் ரசிகர்களுக்காகவே ‘போர்னோ’ படங்களை 1998ல் எடுத்திருக்கிறார். படுக்கை அறைக் கதைகள், அதீத சிருங்காரக் கதைகள் என அவை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவை வெகு ஜனப் படங்களாகவும் அமைந்திருக்கின்றன. தன்னுடைய படங்கள் பற்றிய பெருமிதத்தில் எப்போதும் இருப்பவர். சில்மிஷக் குணம் கொண்ட அவரின் இயல்புகளை அவரின் படங்களில் காணலாம். உதவியோ, குரூரமோ, மகிழ்ச்சியோ வெகு துள்ளலாக வெளிப்படும் அவரிடம். கடவுள் முன் கூட தலைவணங்கத் தேவையில்லை. கடவுள் என்று ஒருவன் இல்லவே இல்லை. இருந்தாலும் அவனிடம் தலைவணங்கத் தேவையில்லாததால் அகங்காரத்துடன் நிற்கிறேன் என்பவர். ‘டாக்மே’ வகைப் படங்கள் வறட்டுவாதப் படங்களாய், பரிசோதனை அமசங்களைக் கொண்டு கிண்டல் தொனியில் வெளிப்பட்டவை. ஓரினப் பாலுணர்வு இயக்குனர் என்று அவரின் சில படங்களை முன் வைத்து அவர் பட்டம் சூட்டப் பெற்றிருக்கிறார். பத்து ஆண்டுகள் ‘டாக்மே’ வகைப் படங்களை ‘ஒரு போக்காக’ ஹாலிவுட் படங்களுக்கு எதிராக நிறுவியவர். அவை பெரும்பாலும் வெளிப்புறப் படப்பிடிப்புகள் இல்லாமல், கட்டிடங்களுக்குள் நிகழும் சம்பவங்களாகவே அமைந்திருக்கும். படப்பிடிப்பிற்கான ஒளி அமைப்போ, ஒலி வகையோ இல்லாமல் இயற்கையில் கிடைப்பதைப் பயன்படுத்தினார். அந்த வகையில் 18 படங்கள் வெளிவந்தன. 2005க்குப் பின்னால் அவ்வகைப் படங்களை அவரே நிராகரிக்க ஆரம்பித்தார். ‘போர்னே’ படங்கள் எடுக்கத் தனி நிறுவனமொன்றை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்தவர் 1998ல் தாஸ்தாவிஸ்கியின் ‘இடியட்டை’ எடுத்து சர்வதேச அரங்கில் பேசப்பட்டார். 2008ல் ‘டான்சர் இன் த டார்க்’ படத்தின் பாடல்கள் அவரை வேறு உச்சங்களுக்குக் கொண்டு சென்றன. 2003ல் வெளிவந்த ‘டாக்வில்லே’ அமெரிக்க சமூகத்தின் குரூரங்களைத் தோலுரிப்பதாக இருந்தது. தரையில் வரையப்பட்ட ‘செட்டுகள்’ என்பது அதன் சிறப்பம்சமாக அமைந்தது.
‘ஏன்ட்டிகிரைஸ்ட்’ அவரின் ‘போர்னோ’ பிம்பத்தை உடைக்கவில்லை. அதிலிருந்து அவர் மீளவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டாலும் வியாபார நோக்கங்களுக்காக அவை பயன்படுத்தப்படவில்லை என்கிறார். குளியலறையில் தம்பதியர் உடலுறவில் ஈடுபட்டிருக்கும்போது அவர்களின் நாலாவது மாடி ஜன்னலைத் திறந்து விளையாடும் சிறு வயது மகன் தவறி விழுந்து சாகிறான். அப்பெண்ணிற்கு அது உறுத்தலாக அமைகிறது. ஒருவகையான பய உணர்ச்சியும் எதிர்பார்ப்புமான நோய் அவளைப் பீடிக்கிறது. அவளின் கணவன் ஒரு மருத்துவ நிபுணன். அவளின் பயத்தைப் போக்குவதற்காய் சிகிச்சையைத் தொடங்குகிறான். குடும்ப உறுப்பினர்களுக்கு உளவியல் மருத்துவர்கள் சிகிச்சை தருவது தவறானது என்று சிலர் எச்சரிக்கை செய்கின்றனர். பயத்திலிருந்து அவள் விடுபட உடலுறவு என்பதை அவள் திரும்பத் திரும்பக் கையாள்கிறாள். அதுவே அவளை ஆசுவாசப்படுத்துகிறது. பாலியல் நடவடிக்கைக்குள்ளேயே மருத்துவக் கணவனும் அமிழ்ந்து போகிறான். அவளை ஒரு காட்டு மர பங்களாவிற்குக் கூட்டி வருகிறான். இயற்கை அவளைச் சாந்தப்படுத்தவில்லை. ‘இயற்கை சாத்தானின் தேவாலயம்’ என்கிற அவள் அது தரும் சலனங்களுக்கு எதிராய் உடலுறவே தீர்வு என்று நினைக்கிறாள். கணவனைத் துன்புறுத்துகிறாள். அவனால் உடலுறவு முடியாதபோது சித்ரவதை செய்கிறாள். அவனை அடித்துக் காயப்படுத்துபவள் காலில் துளையிட்டு கல் சக்கரத்தை மாட்டித் துன்புறுத்துகிறாள். அவன் தப்பித்து நரிக்குகையில் ஒளிந்தாலும் கண்டுபிடித்து சித்ரவதை செய்கிறாள். பிளவுண்ட அவளின் மனம் சில சமயம் அதிலிருந்து மீண்டு ஆறுதல் தருகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் சித்ரவதை. கணவன் அவளை அடித்து தீயிட்டுக் கொளுத்துகிறான். இயற்கை சூழ்ந்த பகுதியின் குரூரச் செயல்கள் அவனைத் திகைப்படையச் செய்கின்றன. ட்ரையரின் டென்மார்க் நாட்டில் இப்படத்திற்கு எதிர்ப்பு இல்லை. ஆனால் பல நாடுகளில் திரையிடத் தயக்கம் காட்டி எதிர்ப்புணர்வைத் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் இப்பெண்ணுள் நிறைந்திருக்கிற பய உணர்ச்சியை லார்ஸின் உள்மன உறைவாகச் சொல்லலாம். நிஜத்தில் பய உணர்ச்சியில் மூழ்கிப் போகிறவர்தான் இயக்குனர் லார்ஸ். எல்லாவற்றையும் கண்டு பயம் கொள்கிற மனோபாவம் கொண்டவர். விமானம் ஏறிப் பயணம் செய்வது மிகுந்த பயத்தை அவருக்குத் தந்திருக்கிறது. விமானப் பயணம் என்பதாலேயே அமெரிக்கா சென்றதில்லை. பெரும்பாலும் தரை மார்க்கமாகவே பயணம் செய்பவர் விமானப் பயணங்களை உயிர்பயம் காரணமாகவே தவிர்த்து வந்திருக்கிறார்.
இப்படம் நான்கு பாகங்களைக் கொண்டிருக்கிறது. ‘துக்கம்’ என்ற பிரிவில் பையனின் மரணச் சடங்குகள் நடைபெறுகின்றன. ‘வலி’ என்ற பிரிவில் நடைபாலத்தில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ‘நரி வாழும் குகையில்’ அடுத்த பாகம் அமைந்திருக்கிறது. ‘மூன்று பிச்சைக்காரர்கள்’ என்ற கடைசி பாகத்தில் மர பங்களாவின் கூரைமீது வந்து பயமூட்டுகிற காகம், நரி, வந்துபோகும் மான் ஆகியவற்றைக் குறியீடாகக் கொண்டு நடக்கும் மன சித்வதைகள் அமைந்திருக்கின்றன. ‘இயற்கை சாத்தானின் தேவாலயம்’ என்ற அவளின் எண்ணம் நிறுவப்படுகிறது. இரண்டு நடிகர்கள் மட்டுமே படம் முழுக்க இடம்பெற்றிருக்கிற கறுப்பு-வெள்ளைபடம் இது. கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலியல் வன்முறை குறித்த விஷயங்களுக்காக ‘எதிர் விருது’ பெற்றிருக்கிறது. "படம் இயக்குவதைத் தவிர எல்லாமும் எனக்குப் பயம் தருபவை" என்கிறார் லார்ஸ். ‘காலணியில் நுழைந்துவிட்ட சிறு கல்போல உறுத்திக் கொண்டிருக்க வேண்டும் திரைப்படங்கள்’
நாத்திக வழிக் குடும்பம் அவருடையது. 1995ல் மரணப்படுக்கையில் இருந்த அம்மா, அவனின் அப்பா என்று அறியப்பட்டவர் அப்பா அல்ல, இசை ஞானம் மிக்கவரின் வாரிசாகத் தன் மகன் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு இசை ஞானமுள்ளவரிடமிருந்து குழந்தைப்பேற்றைப் பெற்றதாகச் சொல்கிறாள். லார்ஸ் அப்பாவைத் தேடிப் போய் கண்டடைகிறான். ஆனால் திரும்பத் திரும்ப மகன் தன்னைச் சந்திக்க வருவதை அப்பா விரும்பவில்லை. தொடர்ந்து தன்னைச் சந்திக்க வந்தால் நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன் என்று மிரட்டி அனுப்பிவிடுகிறார். அவர் தந்த மிரட்டல் பயமாகி அவரைத் தூர விலகி இருக்கச் செய்திருக்கிறது.
ஒவ்வொரு கிறிஸ்துமஸின்போதும் 3 நிமிடங்கள் மட்டுமே படமெடுத்து அவற்றைத் தொகுத்துப் படமாக்கும் முயற்சியைத் தனது புதிய சோதனை முயற்சி என்கிறார். 1991 முதல் 2014 வரை கிறிஸ்துமஸ் நிகழ்வுகளின் தொகுப்பு ஒரு பரிசோதனை முயற்சியாக அமையும் என்கிறார் ‘பயந்தாங்கொள்ளி’ லார்ஸ்.
சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -