சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 30 மார்ச், 2009

சுகந்தி சுப்ரமணியன்

சுப்ரபாரதி மணியன் வீட்டிற்கு ஒரு முறை ஈரோடு நாங்கள் இருவரும் சென்று விட்டு திருப்பூர் திரும்பிய போது அவர் அழைத்து சென்றிருந்தார் .
அங்கே அவர் துணைவி சுகந்தி என்னிடம் " அய்யா ! என் கணவர் உங்களை பற்றி நிறைய சொல்லியிருக்கிறார் . எனக்கு தமிழ் கற்று கொடுங்கள் அய்யா " என்று கேட்டார் . ஐந்து வயது குழந்தையாக தோன்றிய சுகந்தி யை மன பாரத்துடன் நான் பார்த்த போது இருபது வருடங்களுக்கு முன் அவருடைய " புதையுண்ட வாழ்க்கை ' கவிதை நூலை பற்றி புதுவையில் நடத்திய கருத்தரங்கம் என் நினைவில் நிழலாடியது .
சுப்ரபாரதி மணியன் உள்ளே சமையல் அறைக்கு சென்ற போது சுகந்தி " அய்யா ! உங்கள் பேனாவை எனக்கு தாருங்கள் அய்யா " என குழந்தை கேட்பது போல கேட்டார் . நான் உடனே அவரிடம் கொடுத்தவுடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார் . அதன் பின் சுப்ரபாரதி மணியனும் நானும் பேசுவதை ஆர்வத்துடன் ஜன்னலில் பார்த்துக்கொண்டிருந்தார் .
ஒரு ஐந்து வயது கூட நிறைவேறாத சிறுமியை த்தான் சுகந்தியிடம் காண முடிந்தது . அன்று சுப்ரபாரதி மணியன் , சுகந்தி , இரு மகள்கள் இவர்களை எண்ணி மிகுந்த வியாகுலம் அனுபவித்தேன் .
சென்ற மாதம் மறைந்த சுகந்தி சுப்பிரமணியன் அவர்களுக்கு மார்ச் 15 தேதியன்று திருப்பூர் மத்திய அரிமா சங்கத்தில் அஞ்சலியுரை நிகழ்த்தினேன். இந்த மரணம் சுகந்திக்கு பரிபூரண விடுதலை தான் . அவர் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு நீரில் இருந்து வெளிவந்த மீன் போல சொல்லணா துயரத்தை அனுபவித்த பெண்மணி . கணவருக்கு , மகள்களுக்கு பாரமாக வாழ நேர்ந்த துர்பாக்கியசாலி .இவர் கணவர் சுப்ரபாரதி மணியன் சிலுவை சுமந்திருக்கிறார் என நான் சொல்வேன் . தன் மனைவியின் மனநோய் அவருக்கு ஏற்படுத்திய உளைச்சல் ,அவமானம் , வேதனை குறித்து ஒரு போதும் ஒரு முணுமுணுப்போ , பல்கடிப்போ எப்போதும் அவரிடம் இருந்து கேட்க நேர்ந்ததில்லை . இரண்டு பெண் பிள்ளைகள் . அவர்களுக்கு தாய் சிலையாகி போன நிலையில் மணியனே பிள்ளைகளுக்கு தாயுமானவர் . சுகந்தியின் புதையுண்ட வாழ்க்கையை மீட்டு விடதளரா நம்பிக்கையோடு மீண்டு எழுதலின் ரகசியம் என்று தன்னால் செப்பனிடப்பட்ட சுகந்தியின் கவிதைகளுக்கு பெயர் வைத்தார் .
காலச்சுவடு பத்திரிகையில் அம்பையும் , உயிர்மையில் கவிஞர் சுகுமாரனும் அஞ்சலி கட்டுரை எழுதியுள்ளனர் . சுகுமாரனின் அஞ்சலி சிறப்பாக வந்திருந்தது .
காலச்சுவடு அம்பை அஞ்சலி ...
'நாச்சார் மட விவகாரம்' சிறுகதை சுந்தர ராமசாமிக்கு ,கண்ணனுக்கு எப்படிப்பட்ட அவமானத்தை தந்தது என்பதை நான் நன்கறிவேன் . சு. ரா இது பற்றி என்னிடம் போனில் மிகுந்த துக்கத்துடன் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. கண்ணனும் தன் மன உளைச்சலை என்னிடம் சொல்லியிருக்கிறார் .
சு ரா இறந்த பின் ஜெகம் பிராடு தூங்காம , பேலாம , சாப்பிடாம எழுதுன இருநூறு பக்க புத்தகத்தில் சு ரா வின் ஆளுமை எந்த அளவுக்கு சிதைக்கப்பட்டு விட்டது என்று கண்ணன் என்னிடம் தொலைபேசியில் வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் . சொல்லப்போனால் அந்த புத்தகம் பற்றி கண்ணனும் நானும் பரஸ்பரம் வருத்தம் தெரிவித்துக்கொண்டோம் . ஏனென்றால் என்னைப்பற்றியும் ரொம்ப அவதூறாக , சுந்தர ராமசாமியோடு ஜெகம் பிராடுக்கு மனஸ்தாபமே ஏதோ என்னால் தான் என அதில் அந்த ஆசாமியால் எழுதப்பட்டிருக்கிறது .
அந்த ஜெகம் பிராடு இணைய தளத்தில்கூட சுகந்தி பற்றி சில தேவையில்லாத விஷயங்கள் இப்போது எழுதப்பட்டுள்ளது.
..
சரி . இப்போது அம்பை அஞ்சலி என்ற பெயரில் சுப்ரபாரதி மணியனுக்கும் அவருடைய இரண்டு பெண்பிள்ளைகளுக்கும் எப்பேர்ப்பட்ட அவமானத்தையும் , மன உளைச்சலையும் உண்டு பண்ணியிருக்கிறார் என்பதை கண்ணன் உணர்ந்திருந்தால் காலச்சுவடில் இதை பிரசுரித்திருப்பாரா ?
தனக்கு வந்த கஷ்டம் மற்றவர்களுக்கு வரலாகாது என்பது கண்ணனுக்கு பொருட்டில்லையா? அம்பையின் அஞ்சலியில் நாச்சார் மட கூறுகள் இல்லையா ? அடுத்தவங்க குடும்பத்தில் தலையிட அவசியமில்லை என்று எழுதிக்கொண்டே அம்பை என்னவெல்லாமோ எழுதியிருக்கிறார்.இது போன்ற விஷயங்களை காலச்சுவடு ஆசிரியர் எடிட் செய்ய வேண்டாமா ?
......
அருண் குமார் பின்னூட்டத்திற்கு என் பதில்நாச்சார் மட விவகாரம் மற்றும் தூங்காம பேலாம சாப்பிடாம எழுதுன மாதிரி நாலாந்தரமாக Character assasinationசெய்து எழுதி விடவில்லை என்பதற்காக நன்றி தெரிவிக்கலாம் .நல்லவேளை அம்பை போல சுகந்தி, மணியன் இருவர் பற்றி வன்மமாக பெரிதாக எழுதவில்லை தான் . ஆனால் ஜீப்பை எடுத்துக்கொண்டு சுகந்தி போலிஸ் ஸ்டேசன் போய் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக எழுதியுள்ளது அநாகரீகம் இல்லையா ? மணியனின் சுற்று சூழல் அக்கறையையும் அவரது எழுத்து பற்றியும் இணைத்து ஒரு நுண் அரசியல் வார்த்தையை மணியன் இந்த துயர சூழலில் எங்ஙனம் எதிர்கொள்வது ?சுகந்தி பற்றிய அஞ்சலியில் மணியன் இன்றைய எழுத்து பற்றி ஏன்தீர்ப்பு ? விமர்சனம் ?

R P ராஜநாயஹம்

எதிர்வினை
----------
அவதூறு நோய்க்கிருமியிலிருந்து
நான் எப்போது விடுதலை பெறுவேன்
சுப்ரபாரதிமணியன்
அம்பையின் ‘சுகந்தி அஞ்சலி’ படித்தேன். என்னைப் பற்றியும் என்னைச் சுற்றியுள்ளவர்கள் பற்றியும் பொய்யான, தவறான, துஷ்பிரயோகத் தகவல்களை அம்பை அள்ளித் தெளித்திருந்தார். இதைக் காலச்சுவடு வெளியிட்டது துரதிஷ்டமானது.
சுகந்தி 11.02.09 அன்று காலமானார். 14.02.09 அன்று அம்பை என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதன் பதிவு என்னிடமுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டதன் ஒரு பகுதி: “உங்களைப் பற்றிப் பல விஷயங்களில் நான் மிகவும் தவறாகப் புரிந்து கொண்டேன் என்பதை வெகுதாமதமாக உணர்கிறேன். சுகந்தியால் நீங்கள் நீண்ட நெடும்காலம் கஷ்டப்பட்டுள்ளீர்கள். இனிமேலாவது உங்கள் வாழ்க்கை நிம்மதியானதாக இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். என் தவறான புரிதல்களுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.” அவரது தொலைபேசி உரையாடல் இப்படியிருக்க அஞ்சலி ‘அர்ச்சனை’ காலச்சுவட்டில் வேறுவிதமாய் இருப்பது அதிர்ச்சி தந்தது.

சுகந்தியின் நோய் குறித்தும் அதற்கான சிகிச்சை குறித்தும் நான் எழுத்தில் பதிவுசெய்து வெளிப்படுத்த வேண்டுமெனப் பல எழுத்தாளர்கள், நண்பர்கள் பல சமயங்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது என் குடும்ப வாழ்க்கையோடானது என்பதால் தவிர்த்து வந்திருக்கிறேன். அவரின் நோய்த் தன்மையிலிருந்து விடுபட, சிகிச்சை முறையாகவே எழுத்தையும் அவர் எழுதியதை நான் ஊக்குவித்துப் பயிற்சியாகவும் மேற்கொள்ளச் செய்தேன். இலக்கிய வாசிப்பையும் அப்படித்தான் ஊக்குவித்தேன். (சாதாரண கிராமத்துப் பெண் அவர். +1 படித்தவர். இலக்கிய வாசிப்பு எதுவும் இல்லாத சாதாரண குடும்பம். 1984இல் திருமணம்.) ஆனால் நாளாக நாளாக நோயின் தன்மை வெகுதீவிரமடைந்து தொடர்ந்து கடுமையான மருத்துவ சிசிச்சைக்கு அவரை உட்படுத்தியது. கவிதையெழுதும் வெளிப்பாட்டுப் பயிற்சிமுறை பற்றியோ 17 ஆண்டுகளுக்கு மேலாக எனது சேமிப்பின் பெரும் பகுதியை அவரின் சிகிச்சைக்கென்று செலவழித்துவந்தது பற்றியோ என் இரு பெண் குழந்தைகள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் வளர்ந்து, இயல்பான குழந்தைப் பருவத்தை இழந்தது பற்றியோ நல்ல கல்விச் சூழல் அவர்களுக்கு அமையாதது பற்றியோ என் வாழ்க்கையின் மிக முக்கியமான நீண்ட காலம் துயரத்தால் நிரம்பியது பற்றியோ நான் எங்கும் எழுத்தில் வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில் அரைகுறைத் தகவல்களைக் கொண்டும் பிறரது பிதற்றல்களைக் கொண்டும் அம்பை அஞ்சலியை எழுதியுள்ளார்.

அஞ்சலியில் புகைப்படம் இல்லாததற்கு வருத்தம் தெரிவித்துள்ள காலச்சுவடு அம்பையின் தவறான தகவல்களைப் பிரசுரித்ததற்கு வருத்தம் கொள்ளவில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன் சுகந்தி ‘கவிஞர் மீரா’ விருது பெற்றபோது அவரின் ஏற்புரை + கவிதைகளைக் காலச்சுவடு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியதற்குப் பிராயச்சித்தமாக மரணமடைந்தபோது ‘அர்ச்சனை’யைக் கொட்டியது.

சுகந்திக்கு அஞ்சலியாகப் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர் என்ற வகையில் நண்பர் ஜெயமோகன் அவரின் வலைப்பூவில் (Jeyamohan. in) பிப்ரவரி 13 தேதியிலேயே எழுதியிருப்பதை வாசகர்கள் படித்து அம்பை கூறியுள்ளவற்றுக்கு விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். (அம்பை என்னுடன் தொலைபேசியில் பேசியது பிப்ரவரி 14). மாலதி மைத்ரி, லீனாமணிமேகலை, சுகிர்தராணி, இன்பா சுப்ரமணியம் ஆகியோர் இணைந்து 28.02.09 அன்று சென்னையில் நடத்திய அஞ்சலிக் கூட்டத்தில் அசோகமித்திரன் அவர்கள் பேசியதைக் கேட்டறிந்து கொள்ளலாம். (அக்கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. அசோகமித்திரன் அவர்கள், அவரின் கூட்டப் பேச்சு பற்றி அடுத்த நாள் தொலைபேசியில் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.)

17 வருடங்களுக்கு மேலாக நோயுடன் போராடி மிகுந்த சிரமங்களை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த சுகந்தி, மாரடைப்பு மூலம் “விடுதலை” பெற்றுவிட்டாரெனத் தோன்றுகிறது. ஆனால் அம்பை போன்றோர் அள்ளித் தெளிக்கும் அவதூறு நோய்க்கிருமியிலிருந்து நான் எப்போது விடுதலை பெறுவேன் எனத் தெரியவில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு இது என்னையும் என் மகள்களையும் என் உறவினர்களையும் அலைக்கழித்து அவர்களையும் சிகிச்சைக்கு உட்படுத்த நேருமோ என்னும் பயம் என்னை நிலைகுலைய வைக்கிறது.