சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 8 செப்டம்பர், 2014

பேரிரைச்சல்

இங்குதான் இருந்தது
கடல்.
கடல் தண்ணீரில்
கரைந்த
நம் நிர்வாண பிம்பங்களை உண்ட
கடல் மீன்களுக்குப் பித்தேறின.

அலைகள் கரையைத்
தொட்டு விலகும்போது
நமது உடல்களின் உவர்ப்பில்
கொஞ்சம் உப்பு கூடிவிடுகிறது.

அதே கடலருகில் சூரியனின்
ஆயிரம் ஆயிரம் கரங்கள்
நம் வேட்கையின் சுவர்களில்
நிறங்களைப் பூசியதைக் கண்டோம்.

கடற்கரையின் தீராத மணல் வெளி
நமது தீராத விருப்பங்களை
எவ்வளவு குடித்த பிறகும்
சுவடற்று இருந்தது.
கடலின் அவ்வளவு
சப்தத்தையும் மீறித்தான்
நான் உனக்கு
அந்த வாக்குறுதியைக் கொடுத்தேன்

இப்போது
ஒரு கோடைகாலத்தின்
வெப்பம் மிகுந்த
அறையாக மாறிவிட்ட
இங்குதான்
இருந்தது கடல். ( மனுஷ்யபுத்திரன் )



இந்த எடம் முந்தி கடலா இருந்திருக்குமுன்னு தோணுதுஅவன் ஜன்னலினூடே பார்வையைச் செலுத்தியபடி சொன்னான். முகத்தில் சட்டென ஏதோ ஒட்டிக் கொண்டது போல அழுந்தத் தேய்த்துக் கொண்டான். அவன் பார்வை வெகு தூரத்தில் நிலைத்திருந்தது. வெறும் தலைகளை, நிலத்தில் நகரச் செய்த மாதிரி மக்களின் நகர்வு இருந்தது. வீதி முழுக்க மக்கள். எதையோ நோக்கி சரியாக நகர்வது போல நகர்ந்து கொண்டிருந்தனர்.
இந்த எடம் எப்பிடி கடலா இருந்திருக்கும். கடலுக்கும் இந்த ஊருக்கும் ரொம்ப தூரம்என்றாள் அவள். புடவையை கட்டிலின் மேல் விரித்து ஒரு பார்வை பார்த்தாள். புடவை கட்டிலுக்கு துணியொன்றைப் போர்த்தி விட்டது போலிருந்தது. “கடல் வந்து என்னென்னத்தோ கொண்டு போறாதப் பத்தி கேள்விப்பட்டிருக்கிறோம். சுனாமின்னு பெரிசு பெரிசா அலையெல்லா அடிக்கறதெ டிவியிலெ பாத்திருக்கன். அந்த மாதிரி அலையெல்லாம் வந்து எல்லாத்தையும் சுருட்டிட்டுப் போகணும். இந்த லாட்ஜை கூட
செரிசெரிஆரம்பிச்சுட்டே போலிருக்கு. கடல்ன்னு ஏதோ நெனப்பு வந்தது. சொன்னேன். இந்த ஊரே கடல் உள்ள ஊரா இருந்தா எப்பிடி இருக்கும்.”
நல்லாத்தா இருக்கும். கடல் வேண்டாம். குளம் இருக்கான்னு பாருங்க. வாளாங்குளம்ன்னு ஒண்ணு இருந்திருக்கு இங்க. இப்ப அது கூட பேருக்குத்தா இருக்கும். அந்தக் குளத்து மேல மாடிக்கட்டிடங்க வந்து கெடக்கும். ஆமா இந்த ஊருக்கு ஏன் அடிக்கடி கூட்டிட்டு வர்றீங்க. வேற எடம் கெடைக்கலியா…”
சட்டுன்னு ரெண்டு மணி நேரத்தில வந்தர்லாம். கோயில் உள்ள ஊரு. லாட்ஜ்க நிறைய இருக்கும். எடம் கெடைக்கும் சிரமம் இருக்காது…”
செரி அடுத்த தரம் நிஜமாவே கடல் இருக்கிற ஊருக்குப் போலாம்…”நான் ரெடி. உனக்குதா கஷ்டம். என்னன்னு சொல்லிட்டு அவ்வளவு தூரம் வருவே…”ஆமாஅது பெரிய சிக்கல்தா. வேண்டா. இந்த ஊர்தா சௌகரியம் போலிருக்கு
அவளுக்கு அடுத்த வாரம்   கொடுமணல் தங்கம்மன் கோவில் போக வேண்டிய வேலை ஞாபகம் வந்தது. அதுவும் ஆற்றங்கரையில்தான் இருக்கிறது. அங்கும் வெள்ளம் வந்த போதெல்லாம் கோவில் மூழ்கித்தான் போயிருக்கிறது. ஊரில் எல்லோரும் போவார்கள் வேறு வழியில்லாமல் பொங்கல் வைப்பதற்காக வேலைக்கு துணையாளாகப் போகவேண்டியிருக்கும்.
படுக்கை மீது இருந்த புடவையின் பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இளம் பச்சை நிறத்தில் பூக்கள் இருந்தன. உள்ளங்கை அளவு ஒவ்வொரு பூவும் விரிந்திருந்தது. பச்சை நிறத்தில் பூ என்பது அதிசயமாக இருந்தது போல பார்த்துக் கொண்டிருந்தாள். பூவின் ஓரத்தில் வெள்ளை கீற்றுகள் இருந்தன. இந்தப் புடவை உடுத்தும் போதெல்லாம் வெள்ளை நிற ஜாக்கெட் அணிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என நினைப்பாள். ஆனால் வெள்ளை நிற ஜாக்கெட் அவளிடம் இல்லை. வாங்கலாமா என யோசிப்பாள். எண்பது அளவு கொண்டது முப்பது ரூபாய்க்கும் குறைவானதுதான். ஆனால் வாங்கினதில்லை. வெள்ளை ஜாக்கெட் ஏனோ உறுத்துவது போலிருக்கும். பழுப்பு நிறம் சுமாராக இருக்கும். வெள்ளை என்றால் உறுத்தும். “என்ன முண்டச்சி போடறாதப் போட்டுட்டேன்னுயாராவது கேட்கக் கூடும். முண்டச்சி என்பவள் புருஷன் செத்துப் போகிறவள் மட்டுமா. புருஷன் இல்லாதவளும் முண்டச்சிதான். அப்படியென்றால் அந்த வசவு சொல்லுக்கு அவள் பொருத்தமுடையவளாக இருப்பதாகவே அவள் நினைப்பாள்.
என்ன பெரிசா யோசனையில இருக்கற மாதிரி இருக்குதுவெள்ளக் கலர் ஜாக்கெட் போடறதில்ல. வாங்கலாமான்னு நெனப்பு வந்துச்சு. அப்புறம் முண்டச்சி மாதிரி என்ன வெள்ளையில உடுத்திட்டுன்னு ஞாபகம் வந்துது. எனக்கு நானே முண்டச்சின்னு சொல்லிட்டேன். முண்டச்சி…”
என்ன அபச குணமா பேசிட்டு…”
புருஷன் இல்லாதவ மட்டுமில்லியா முண்டச்சி. புருஷன் செத்துப் போனவள் செறியானா முண்டச்சி. நாங்கெல்லா பாதி முண்டச்சிகளாபாதியோ முழுசோ எப்பிடியோ முண்டச்சிகசெரி என்ன அபசகுணமான்னு கேட்டுட்டு பொம்பளைக மாதிரி பேசிட்டு…”
என்னமோ மனசிலே வந்துது சொல்லிட்டேன்.” புடவையை நாலாய் மடித்துப் போட்டாள். தலையணை ஒன்றின் மேலுறை போல் அது கிடந்தது. பக்கத்தில் இருந்த தலையணையின் ஓரம் கிழிந்திருந்தது. அதன் உள் பகுதியிலிருந்த அழுக்கு அபரிமிதமாய் வெளித்தெரிந்தது. படுக்கையை நீவி விட்டுக் கொண்டாள். இன்னொரு தலையணை படுக்கை விரிப்பின் அடியில் இருந்தது.
என்ன இன்னிக்கு டி.வி. இருக்கற ரூம் வேண்டானுட்டே.”எதுக்கு அதுக்கு அம்பது ரூபா எக்ஸ்ட்டிரா செலவுன்னுதாபெரிசா மிச்சம் புடிக்கறே…”ஏதோ வீண் செலவு வேண்டான்னு…”செரி மத்தியானம் சினிமாவுக்குப் போலாமா…”அதுவும் வேண்டா…”
செலவை ரொம்பவும் கொறச்சுக்கறே…”
ஆமா அது எதுக்குன்னுதா. வெளிய போறப்போ யார் கண்ணுலே நாம பட்டிருவம்ன்னு பயந்திட்டு இருக்கணும். தியேட்டர்ல படம் போட்டதுக்கப்புறம் சாதாரணந்தா. ஆனா வெளிச்சமா இருக்கறப்போ அதே பயந்தாஅதுக்கு பதிலா ரூம்ல கெடந்தா தூங்குண மாதிரியுமாச்சு. ரெஸ்ட் எடுத்த மாதிரியுமாச்சு…”
ரயில்வே ஸ்டேசன் ரோட்லே பணியாரம் ஒண்னு விப்பாங்க அத வாங்கிச் சாப்புட வேண்ணா போலாம்
அவளுக்கு சலங்கைப் பணியாரம் ஏனோ ஞாபகம் வந்தது. பசைப்பயிறு, ஏலமாவு, கருப்பட்டி கலந்து கல்யாண வீடுகளில் போடுவார்கள். வீட்டுக்கு வரும் மாப்பிள்ளைக்கு போடும் முதல் பலகாரம் சலங்கைப் பணியாரம். அதை அவள் விரும்பிச் சாப்பிடுவாள். கடலை மாவை அள்ளி அள்ளி வைத்து நெய்யூற்றிச் சாப்பிட்டிருக்கிறாள்.
அவன் நான்கைந்து முறை கழிவறைக்குச் சென்று வந்து விட்டான். படுக்கைக்கும் கழிவறைக்கும் அல்லாடுபவனாக இருந்தான். ” மூங்கில் கொட்டத்திலே கெடக்கற மாடு மாதிரி கெடக்கீறேஎன்றாள். ” கை மருந்து வேணும்” “ அதுதா எல்லா மருந்தும் குடுத்தாச்சே “ “ தீரலே..” மாட்ட்டுக்கு நோவுன்னா பிரண்டை, பெருங்காயம், விளக்கெண்ணெய் போதும். உங்க நோவுக்கு வேறெ என்னவெல்லாமோ வேண்டியிருக்க்ல்ல..”
அவள் எழுந்து நின்று ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டாள். கம்பி துருவின் கசடு அவளின் கைகளில் ஒட்டிக் கொண்டது. ஒரு வகை செவ்வகத்தனம் அந்த ஜன்னலில் இருந்தது. சிறு சிறு செவ்வக வடிவங்களை அடைத்துப் போட்டு பெரிய செவ்வக வடிவத்தில் ஜன்னலை செய்த மாதிரி இருந்தது. இருநூறு அடி தூரத்தில் கூம்பு வடிவலாக ஒலி பெருக்கி முனை இருந்த. ஏதோ மசூதியின் மாடியாக இருக்கலாம். ஓதும் சத்தம் அவ்வப்போது கேட்கும் நேரத்தை அறிந்து கொள்வதற்கு அந்த ஓதும் சத்தம் உதவலாம். இப்போது என்ன நேரமிருக்கும். வெயிலின் வெளிச்சம் நேரத்தை கணக்கிடுவதற்கு ஏதுவாக அவளுக்கு இருக்கவில்லை.
நேரம் என்ன…”
என்ன பசியாகுதா…”
இல்லேதெரிஞ்சுக்கலாமுன்னு…”
டீ வேண்ணா சொல்லட்டுமா…”
வேணாம். ரூம் பசங்களோட பார்வையே செரியில்லை. என்னமா அவங்க பார்வை இருக்குது. உடம்பைத் துளச்சுட்டு போயிருது…”
நீயெதுக்கு அப்பிடியெல்லா நெனச்சுக்கறேஅவங்க சாதாரணமாத்தா பாக்கறாங்க…”
என்னமோ எனக்கு அப்பிடி எண்ணம். ஆமாஒண்ணு தெரியுமா. நம்ம ரூம்ல மேல பெருக்கல் குறி போட்டிருந்துச்சு. என்னமோ பயமா இருந்துச்சு. துணிஞ்சு ரூம் பையன் கிட்ட கேட்டுட்டேன். எதுக்கு பெருக்கல் குறின்னு…”
என்ன சொன்னான்.”
எனக்கு பயமாத்தா இருந்துச்சு. இப்பதா என்னென்னமோ நியூஸ் வருதேன்னு. ரூமுக்குள்ள ஏதாச்சும் கேமரா வெச்சு நம்மள படம் புடிப்பாங்களான்னு…”
புளு பிலிம்…”
ஆமா அதுதா…”
அதெல்லா காசு உள்ளவன் பெரிய பணக்காரங்கன்னு தெரிஞ்சுட்டு மிரட்டறதுக்காக. நம்ம மாதிரி எரநூறு ரூபாய்க்கு வாடகைக்கு வர்ரவங்கெல்லா சாதாரணமாத்தா இருப்பாங்க. செரி ரூம் பாய் என்ன சொன்னான்…”
என்னமோ சினிமா சூட்டிங்குன்னு வந்தவங்க ரூம் அடையாளம் தெரியறதுக்காக அப்பிடி பெருக்கல் குறி போட்டு வச்சிருப்பாங்களாமா. சூட்டிங்காரங்க காலையில நேரத்தில எழுப்பறது, காபி குடுக்கறதுண்ணு அடையாளம் பெருக்கல் குறியாமா…”
அவன் பெருமூச்சு விட்ட மாதிரி படுக்கையில் மல்லாந்து கிடந்தான். ஓரம் கிழிந்திருந்த தலையணையை தலைக்கு மேல் உயர்த்திப் பார்த்தான். “தலையணைன்னு ஸ்பெஷல் உபயோகம் இங்கதா…” அவள் பேசாமல் மூடியிருந்த கதவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஒரு வகை அழுக்குத்தனம் கதவு முழுவதும் அப்பியிருந்தது.
என்ன பேச மாட்டேங்கறே…”
நீங்கதா உபயோகம்ன்னு சொல்லீட்டீங்களே. இதையெல்லா யார்தா கண்டு புடுச்சாங்களோ…”
பெரிய யோசனைதா…”
ஆமா கதவு சாவி ஓட்டையை எப்பவும் அடப்பீங்களே…”
ஆமாமாமறந்திருச்சு…”
எழுந்தவன் அவனின் சுருண்டு கிடந்த ஜட்டியை எடுத்து கதவு சாவி ஓட்டைப் பகுதியில் மாட்டினான். சுருங்கிப் போன பழம் மாதிரி அது தொங்கியது.
நீ வீடியோ அது இதுன்னு பயப்படுவியே அது மாதிரிதா. எனக்கென்னமோ இந்த சாவி துவாரம் வழியா யாரோ பார்க்கற மாதிரி பிரம்மை இருக்கும். அதுதா…”
உங்க ஜட்டி எதை எதையோ நெனப்பூட்டுது…”
எதை…”
வேண்டா. நீங்களே யூகிச்சுக்குங்க.”
ஜட்டிக்குன்னு இப்பிடியொரு உபயோகம் இருக்கு பாருங்க…”
ஆமாஉன்னோட ஜட்டி என்ன இவ்வளவு நசிந்து கெடக்குதுநசிஞ்சு போன ஜட்டியை யூஸ் பண்றது நல்லதில்லே. இடுப்பைச் சுத்தி புண்ணு புண்ணா வரும். நசிஞ்சு பழசாகிப் போனதை தூக்கி எறிஞ்சிரு…”
அது ரொம்பவும் பழசுன்னு இல்லே. பிரவுண் கலர்ல அது அப்பிடித்தா இருக்கும்.”
அவள் படுக்கையின் ஓரத்தில் சாய்ந்து கொண்டாள். படுக்கையின் ஓரத்தில் சிறு கீற்றை கீறிவிட்டுப் போன மாதிரி கிடந்தாள். வாகனங்களின் இரைச்சலின் உச்சமாய் கிறிச்சிடல்கள் இருந்தன. அறைக்கு வெளியே யாரோ தடதடவென்று ஓடுவது போலிருந்தது.
என்ன சட்டுன்னு மொகம் வெளிருது…”
ஒண்ணுமில்லவெளிய என்னமோ சத்தம்…”
இது பகல்தானேஎன்ன சத்தமா இருந்தா நமக்கென்ன. இதுவென்ன ராத்திரியா. நீங்க எல்லாத்துக்கும் பயப்படறீங்க. சின்னதா சாமான்க வுழுந்தா கூட பயப்படறீங்க…”
என்னமோ பயம்போன தரம் வந்தப்போ பயத்திலெ ஓடி வந்த மாதிரி இருந்துச்சு…”
போன தரம் ஒண்ணும் செரியில்லேரொம்பவும் டென்ஷனாத்தா இருந்தீங்கடென்ஷன் அந்த ஒரு நாள் முழுக்கவும் இருந்துச்சு.”
ஒரு சின்ன சண்டை…”
என்ன…”
சம்பந்தமில்லாததுதா. டவுன்ல இருந்து பத்து பதினஞ்சு பேர் வந்திருந்தாங்க. வக்கீல், எழுத்தாளர், என்ஜி ஒன்று சொன்னாங்க. நொய்யல் பகுதி முழுக்க பாத்துட்டு பாதிக்கப்பட்ட கிராமம்ன்னு நம்ம ஊருக்கு வந்தாங்க. என்னென்ன பாதிப்புன்னு கேட்டிட்டிருந்தாங்க. இது மாதிரி மாசத்துக்கு நாலு பேர் வந்து சாயத் தண்ணி வர்ரதுனாலே என்ன பாதிப்புன்னு கேட்டுட்டு எழுதிட்டு போறாங்க. அவ்வளவுதா. கோர்ட் கேஷ்ன்னு எவ்வளவு பாத்தாச்சு. ஒண்ணும் பிரயோஜனமில்லை. வர்ரவனுக எழுதிட்டு போட்டோ புடுச்சிட்டு போறதோட செரிவந்தவங்க என்னை என்ன என்ன பிரச்னைன்னு துளச்சு துளச்சு கேட்டாங்க. எரிச்சலா போச்சு. வயசு நாப்பதாகுது. இந்த ஊர்ல வெள்ளாமைக்கு தண்ணி இல்லெ. சாயப்பட்டறை தண்ணி அறுபது எழுபது மையிலுக்கு அந்தப்புறம் இருந்து வந்து நெலத்தை நாசம் பண்ணிடுச்சு. இந்த ஊர்ல எந்த சம்சாரியை நம்பியும் பொண்ணு குடுக்க மாட்டீங்கறானுங்க வெளியூர்காரனுக. இந்த ஊர்ல வந்து எங்க பொண்ணு எப்பிடி பொழைக்கும். சாயத் தண்ணி பூமி. நெலம் கெடந்தாலும் விவசாயத்துக்கு லாயக்கில்லே. எவனும் பொணணு தரமாட்டேன்கறான். நாப்பது வயசில கல்யாணம் ஆகாமெ நிக்கறன் பாரு. இதுதா பிரச்னை இதுதா கொடுமைன்னு கத்திட்டேன்…”
உங்க பிரச்னையை சொல்லிட்டீங்க போல
அதுல ஒருத்தன் கிண்டலா என்னப் பாத்தான்.
அடுத்த தரம் நாங்க வர்ரப்போ உங்க வயசில ஒரு பொண்ணெ கூட்டிட்டு வர்ரோம்ன்னான். எனக்கு கோபம் திட்டிட்டேன். அப்புறம் அவங்க சாரின்னு மன்னிப்பு கேட்டாங்க. நான் சமாதானமாகலே. டென்ஷன். அன்னிக்குத்தா இங்க அந்த டென்ஷனோட வந்தன்
உங்க பிரச்னையை சொல்லிட்டீங்க. அவங்க வேற எதிர் பார்த்திருப்பாங்களோ என்னமோ…”
என்ன கெரகமோ…”
படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்தவன் மாதிரி மேஜை அருகில் சென்றான். அழுக்கடைந்திருந்த பிளாஸ்டிக் ஜக் மூடியைத் திறந்தான். தண்ணீர் நெளிந்து ஆட்டம் காட்டியது.
எந்த ஊருக்குப் போனாலும் தண்ணீ குடிக்க பயமா இருக்கு…”
நம்ம ஊரு சாயத் தண்ணீ இங்க எங்க வருது. குடிங்க…” அவன் பிளாஸ்டிக் ஜக்கை உயர்த்திக் கவிழ்த்தான். நீர் பொலேரென்று வாயில் விழுந்து சிதறியது. பனியனின் மேல்புறம் நீர் வழிந்து நனைத்தது.
எங்க ஊர்ல இந்த சாயத் தண்ணி பிரச்னையில பொண்ணு வாங்க முடியாமெ கல்யாணம் ஆகாதவங்க இருபத்தாறு பேர் இருக்கறம். நாங்க ஒண்ணா சேர்ந்து ஒரு சங்கம் அமைக்கலாம்ன்னு இருக்கம்.”
செரிதாநானும் ஒரு சங்கத்தில இருக்கணும். எதில சேர்றது.”
நீங்களும் ஒரு சங்கம் ஆரம்பிங்க.” அவன் வாய்விட்டு சிரித்தான். கண்களின் ஓரத்தில் நீர் கசிவு மினுமினுத்தது. உடம்பைச் சாய்த்து படுத்தான். மின் விசிறி ஓடும் கூரையைப் பார்த்தான்.
அவளுக்கு திருமணம் செய்து கொடுத்த போது கிராம நிலத்தைக் காட்டி திருமணம் நடந்தது. “ஒரே பொண்ணு. வர்ரவனுக்குதா இந்த நெலம்.” ஆனால் சில ஆண்டுகளில் சாயத் தண்ணீர் பூத்த நிலம் விவசாயத்திற்கு பயனில்லாமல் போய்விட்டது. நிலத்தை வாங்குவார் யாருமில்லை. தரிசாகிக் கொண்டிருந்தது. நிலத்தை விற்று வியாபாரம் செய்யலாம் என்று நினைத்திருந்த அவன் எரிச்சலுற்று அவளுடன் சண்டை போட்டு நொய்யல் கிராமத்திற்கு அனுப்புவான். நிலம் வாங்க யாருமில்லை. அவளும் ஊரிலேயே தங்கிவிட்டாள். கட்டை விரலில் இருந்த பச்சையைப் பார்த்துக் கொண்டாள். சின்னதாய் பூ ஒன்று பூத்திருந்தது. நெற்றி, கன்னம், கைகள், கால்கள் என்று பாட்டி பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறாள். பூ, தேள், கிளி, மயில், மீன் என்று பல உருவங்கள் அவள் உடம்பில் மிதக்கும்.
எங்களுக்கு ஒரு சங்கம் வெச்சா என்ன பேரு வைக்கலாம்
கணவன் விரட்டிய மனைவிகள் சங்கம்
செரிதா…”
எங்க சங்கத்துக்கு ஒரு பேரு சொல்லு…”
பொண்ணு கொடுக்காததால் பிரமச்சாரிகளானவன்கள் சங்கம்
பேரு ரொம்ப பெரிசா இருக்குது.”
நொய்யல் பிரம்மச்சாரிகள்
சுருக்கமா இருக்கு…”
படுக்கையில் இருபுற ஓரங்களில் அவர்கள் தனித்தனியே கிடந்தார்கள். அவள் அணிந்திருந்த நைட்டி பாதிக் கால்கள் வெளியே தெரியுமாறு விலகி சுருண்டிருந்தது. அவன் கைகளை நீட்டி அவளின் முதுகைத் தொட்டான்.
சாயங்காலம் ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போலாமா…”
உம்…”
முந்தியெல்லா நாம இங்க வந்தப்போ ரயில்வே ஸ்டேஷன்ல போயி உக்காந்திட்டிருப்போம். இருட்டுன பொறகு அங்கிருந்து மலையைப் பாக்கறது அழகா இருக்கும். எனனமோ சீரியல் லைட் போட்ட மாதிரி மலையில லைட்டுகளெல்லா எரிஞ்சிட்டிருக்கும். அதையைப் பாத்து பேசிட்டிருப்போம்.”
இப்போ அது கூட அலுத்துப் போச்சு. ஒரு தரமாச்சும் சண்முக நதி போகணும்…”
இப்ப அது நம்ம ஊர் ஆறு மாதிரி சாக்கடையாத்தா ஓடிட்டிருக்கும். சண்முக நதி போறதுன்னா மினி பஸ்ல போகணும். இல்லே குதிரை வண்டி புடிக்கணும்…”
வேண்டாவெளிய போகவே சங்கடமாயிருக்கு பயமாவும் இருக்கு…”
அவனின் கைகள் அவனின் முதுகைத் தொட்டு பரவ ஆரம்பித்தது. அவள் சிறு கூச்சத்துடன் உடம்பை  நெளித்தாள். உடம்பை திருப்பி அவன் முகம் இருக்கும் திசையில் புரண்டாள். உருண்டு கட்டிலைவிட்டுப் போய்விட வேண்டும் போலிருந்தது.
இது கூட அலுத்துப் போச்சு. தேவையா இருந்தாக் கூட அலுத்துதா போச்சுஎன்றாள். அவன் கைகளை மெல்ல சுருக்கிக் கொண்டான். கைகளை விரித்து உடம்பை முழு படுக்கையிலும் கிடப்பது போல செய்தான். ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல பெருமூச்சு விட்டான்.
அறையைத் திறந்து வெளியில் வந்தான். காரிடாரில் ஒருவன் குச்சி முனையில் கட்டியத் துணியில் தரையைத் துடைத்துக் கொண்டிருந்தான். தரை பளபளவென்று மினுங்கியது. எதிர் அறை முகப்பில் இரண்டு பிளாஸ்க்குகள் இருந்தன. நாலைந்து அறைகள் தாண்டிய முகப்பில் பாட்டில்கள் தென்பட்டன. சோடா பாட்டில்கள், மிரைல் பாட்டில்கள்மது பாட்டில்கள் கூட இருக்கலாம். மது பாட்டில்களின் வெவ்வேறு விதமான வடிவங்களால் அவை மது பாட்டில்கள் என்று கண்டுபிடிப்பது சிரமம்தான். மெல்ல அடுத்த முனைக்குச் சென்றான். விடுதியைத் தாண்டிய இடத்தில் பிரதான வீதி தென்பட்டது. இரண்டு குதிரை வண்டிகள் ஆளில்லாமல் நகர்ந்து கொண்டிருந்தன. ஏறத்தாழ பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று நகர்ந்தது. ஏகதேசம் அதில் எல்லோரும் மொட்டை அடித்திருந்தார்கள். மொட்டைகளுக்கு மத்தியில் நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி கால்களை எம்பியபடி நடந்து கொண்டிருந்தாள். அவளின் உடம்பு அவளுடன் ஒத்துழைக்காமல் இருப்பது போல சிரமம் முகத்தில் தெரிந்தது. அப்பெண் விடுதியைப் பார்த்து ஏதோ சொல்லியபடி நடந்தாள். இங்கு தங்கியிருந்திருப்பாளா. இங்கு தங்கி இளைப்பாற வேண்டும் என்ற ஆசையைச் சொல்லியபடி நகர்ந்து கொண்டிருப்பாளா என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. அறைக்கு போய் மல்லாந்து கிடக்கலாம். இப்போதெல்லாம் அவள் எல்லாம் வெறுத்துப் போச்சு என்று சாதாரணமாய் சொல்வது அவனுக்கு எரிச்சலாக இருந்தது. ஆனால் முயங்கித் தீர்த்து எழுகிற ஒவ்வொரு முறையும் குளித்து விடுகிறாள். பெரும்பாலும் தலைக்கு நீர் ஊற்றி குளிப்பாள். குளிப்பது அலுப்பே இல்லை என்பது போல குறிப்பாள். எல்லா அழுக்கையும் விரட்டிவிட முடியுமா அந்தக் குளியலால். ஆனால் விடுதித் தண்ணீரிலேயே அவள் பல முறை குறிப்பதுதான் அவனுக்கு ஆச்சர்யமாக இருக்கும். மெல்ல நகர்ந்து அறைக் கதவைத் தொட்டான். அது விதக்கென்று திறந்து கொண்டது. ஒரு நிமிடம் பயம் ஒட்டிக் கொண்டது. பூட்டிவிட்டு போயிருக்கலாம். காரிடரில் நடமாடும் அறைப் பையன்கள் யாராவது இந்த இடை நேரத்தில் கதவைத் தள்ளிப் பார்த்திருப்பார்களாஒரு வித பயம் உடம்பைக் கவ்வியது. குளித்தால் பயம் போகுமாபோனாலும் போகும். எதற்கும் குளிக்கலாம் என்று மெல்ல நகர்ந்தான்.
ஆற்றில் குளிக்கிற பழக்கமெல்லாம் இல்லாமல் போய் விட்டது. யாராவது வெளியூரிலிருந்து வந்தால் மட்டுமே ஆற்றைப் பார்க்கக் கிளம்ப வேண்டியிருக்கிறது. வெயில் அவ்வளவாய் உறுத்தவில்லை. மெல்ல ஆறு வரைக்கும் நடக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு. ஒரு கி.மீட்டர் நடக்க வேண்டியிருக்கும் இப்போது ஆறு வரைக்கும் கான்கிரீட் சாலை வந்து விட்டது. தெருக்கள் கான்கிரீட்டால் மூடப்பட்டு விட்டன. கான்கிரீட்கள் முடிகிற இடங்களில் ஏகமாய் குடிசைகள் இருந்தன. கான்கிரீட் குடிசை வாயில்களுக்குக் கொண்டு செல்வது அவனுக்கு விசித்திரமாய் பட்டிருக்கிறது. ஆறு வரைக்கும் நீளும் கான்கிரீட் சாலை ஆற்றையொட்டி ஒரு சிறு பாலமாக நீளும். அந்த சிறு பாலத்தின் இன்னொரு முனை கூடுதுறையில் இருந்தது. கூடுதுறையில் ஆறகள் சங்கமிப்பதைப் பார்க்க எல்லோரும் அந்த முனையில் நிற்பது வழக்கமாக இருக்கும்.
கான்கிரீட் சாலையின் இரு பக்கங்களிலும் வாழைகள் பச்சையாய் விரிந்திருந்தன. நீர்க்கசிவு தார்ச்சாலைகளின் ஓரம் வரைக்கும் இருந்தது. அவனுக்குக் குளிக்க ஆசையாக இருந்தது. கூடுதுறையில் குளிப்பதற்கென்று இறங்கி விட முடியாது. சாயக் கழிவுகளின் வர்ணத்தில் தண்ணீர் கடந்து போகும்.
நீரின் சலசலப்பு தெளிவாய் கேட்டது. பார்வை விரிகிற வரைக்கும் ஆறு பரந்து கிடந்தது. ஒரு பக்கமிருந்து நொய்யல் சாயக் கழிவுகளுடன் பரபரத்து வரும். இன்னொரு பக்கம் காவேரி சலசலத்து தெளிந்தபடி வரும். இரண்டும் கூடுதுறையில் சங்கமித்த மின் சாயக்கலவையுடன் ஆறு சென்று கொண்டிருக்கும். கூடுதுறைக்குப் பிறகு ஆற்றின் நிறம் சாயக் கழிவின் நிறமாக மாறிக் கொண்டே இருக்கும். அவ்வப்போது கலக்கும் சாயக்கழிவின் நிறமாக ஆற்றின் நிறம் மிளிர்ந்து கொண்டிருக்கும் வர்ணஜாலம் அதன் பின் பல கி.மீட்டர் தூரங்களுக்கு இருக்கும். இதுவே கூடுதுறையைசுற்றுலா தலமாக்கி விட்டிருந்தது. வந்து பார்ப்பவர்கள் நொய்யலின் வர்ண நிறத்தையும், காவேரியின் தெளிந்த நீரையும் ஒப்பிட்டு பேசிக் கொள்வார்கள். கூடுதுறைக்கு அப்புறம் வர்ணமாகிப் போகும் புது ஆற்றைப் பற்றிச் சொல்லிக் கொள்வார்கள். ஊருக்கு வருகிறவர்களுக்குக் காட்டவென்று கூடுதுறை ஆகிப்போனது அவனுக்கு நினைக்கச் சங்கடமாகவே இருந்தது.
குளிக்க வேண்டுமென்றால் கூடுதுறைக்கு முன்னால் வடக்கு புறத்தில் இருக்கும் வண்ணான் துறைக்குத் தான் செல்ல வேண்டும். வேறு எங்கு போனாலும் ஆளைத் தள்ளிக் கொண்டு போய் ஜலசமாதியாக்கி விடும். நொய்யலில் வெள்ளம் வந்தால் ஊரே தீவாகி விடும். நீந்தத் தெரிந்தவர் மட்டுமே கரையை அடையலாம். பாலம் கட்டினபின்பு இது மாறி விட்டது. வண்ணான் துறையில் காவேரி மட்டும் ஓடிக் கொண்டிருக்கும். வண்ணான் துறையே நெடுந்தொலைவு ஆகிவிட்டது போலிருந்தது அவனுக்கு. கரையில் உட்கார்ந்து தூண்டில் போட்டுக் கொண்டிருப்பவர்கள் கூட தென்படுவதில்லை. சாய ஆற்று மீனை உள்ளூர்காரர்கள் விரும்புவதில்லை என்பதுதான் காரணமாக அவன் மனதில் இருந்தது.
நொய்யல் பாய்ந்து வரும் பகுதி சாய்வு கோணத்தில் விரிந்து கிடந்தது. சாயக் கழிவைத் திறந்து விடும் நேரத்திற்கேற்ப நொய்யலின் நிறம் மாறும். இன்னும் கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால் அதன் நிறம் தென்பட்டு விடும் என்ற எண்ணம் வந்தது. காவேரி தெளிந்து தூரத்தில் ஓடிக் கொண்டிருந்தது.
நொய்யல் பகுதியில் யாரோ தண்ணீரில் இருப்பது தெரிந்தது. அதென்ன தலை முழுக்க நீண்ட முடி. கூர்ந்து பார்த்தான். நீரின் மினுங்களில் சாயத்தனம் தெரிந்தது. சூரிய ஒளியின் பிரதிபலிப்பில் நீர் வர்ணக் கோலமாய் நெளிந்து கொண்டிருந்தது. கூர்ந்து பார்க்கையில் மார்பை பாவாடையால் கட்டிய பெண் உருவம் என்பது தெரிந்தது.
அவன் திக்கித்து நிற்பவன் போலானான். நீரின் சலசலப்பு பெருத்த ஓசை போல் அவன் காதுகளை அடைத்தது. நெளிந்து வளைந்தக் கோடுகளால் ஆறு நிரம்பியிருந்தது.
ஐயோஎன்ன பண்றே நொய்யலுக்குள்ளே…” அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள். அவள் தலையை உலுக்கிக் கொண்டதில் நீர்த் திவலைகள் தெறித்தன.
என்ன பண்ணுவாங்ககுளிக்கறன்.”
குளிக்கற எடமா இது
ஆறு தானேஆத்துல குளிச்சா என்ன…”
ஐயோஎந்த நேரத்தில சாயத் தண்ணியைத் தொறந்து வுடுவாங்கன்னு தெரியாது.”
சாயத் தண்ணியை தொறந்து வுட்டாலும் ஒண்ணுதா. தொறந்து வுடாட்டியும் ஒண்ணுதா. குளிக்கறதுக்கு தானே ஆறு…”
உங் குளிக்கற ஆசையை வூட்ல வச்சுக்கோ. நொய்யல்ல தேவையா…”
எல்லாம் வெறுத்துப் போச்சு…” அவன் தலையைத் தண்ணீரில் மூழ்கடித்து மறைய ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. “குளிக்காணும்ன்னா வண்ணான் துறைக்கு அந்தப்பக்கமா போ…”
எல்லாம் வெறுத்துப் போச்சு.” சாய நீரில் தலையை நனைத்து தலை முடியை புது வர்ணமாக்கிக் கொள்பவள் போல மூழ்க ஆரம்பித்தாள். பதட்டத்தில் சாயக் கழிவில் அவனை யாரோ மூழ்கடிப்பது போல இருந்தது.
SUBRABHARATHIMANIAN, 8/2635 PANDIAN NAGAR, TIRUPPUR 641 602 9486101003


செவ்வாய், 2 செப்டம்பர், 2014

சிம்மாசனங்களும், துரோகங்களும்- வெ. இறையன்புவின் இரு நூல்கள்


சுப்ரபாரதிமணியன்



இவ்வாண்டில்  வெ. இறையன்புவின் இரு நூல்களை  நியூசென்சரி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
1. சிம்மாசன சீக்ரெட் 2. துரோகச்சுவடுகள்


தலைமைப்பண்பு பற்றி பேசுகிறபோதெல்லாம் அது பரம்பரையாக வந்தது போல் சொல்லும் பண்பு இருந்து கொண்டே இருக்கிறது. பிறப்பு தலைமைப்பண்பை தீர்மானிப்பதாய் இருப்பதாய் இருந்த மாயைகளும், கட்டமைப்புகளெல்லாம் தகர்ந்து விட்டன. தொடர்ந்த உழைப்பு, தன்னலமற்றத் தன்மை  தலைமைப்பண்பிற்கு வழிகோலுகிறது. அவ்வகையில் தலைமைப்பண்பிற்கான விசயங்களாய் விழிப்புணர்வுடன் இருத்தல், பேச்சில் கவனம கொள்ளுதல், துணிவுடன் தொடங்குதல், உடனடியாக முடிவெடுத்தல்., முடியும் வரை காத்திருத்தல், நேரமே உயிர் மூச்சாகக் கொல்லுதல் , இயல்பாக இருத்தல், அவமானங்களை எதிர் கொள்ளுதல், உடலை உறுதியாக வைத்துக் கொள்ளுதல், ஆபத்துடன் வாழ்தல்  ஆகியவற்றை முதன்மையானப் பண்பாக எடுத்துக் கொண்டு இந்நூலில் விவரிக்கிறார். எதற்குப்பிரச்சினை என்று நினைப்பவர்கள் மத்தியில்  தலைமைப்பண்பு பற்றிய விழிப்புணர்வையும், அதன் அம்சங்களையும் பற்றியத் தெளிவையும் ஏற்படுத்தவே இக்குறுநூல் என்றும் குறிப்பிடுகிறார்.குழுவை ஒருங்கிணைக்க வைப்பதற்காக எப்போதும் ஆபத்துடன் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அன்பினால் ஒன்று சேர்ப்பதை விட வெறுப்பினால் வென்று சேர்ப்பது எளிது எனபதை அவர்கள் அறிவார்கள் என்ற சின்னச் சின்னப் பிரச்சினைகளை பெரிதாக்கும் மனிதர்களின் பண்பு பற்றிய அலசல் நுணுக்கமானதாகும். சமூகம் எப்போதும் ஒத்துக் கொள்கிற போர் புரிய வீரம் அவசியம் என்பதை விடுத்து சமூகம் முன் வைத்தவற்றை எதிர்ப்பதற்கும், அவற்றை மறுதலிப்பதற்கும் அதிகமான துணிச்சல் தேவை என்பதை விரிவாக எடுத்துரைக்கிறார். இவ்வளவு சிரமப்பட்டு சிம்மாசனங்களை அடைவதைக் காட்டிலும் அவற்றை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்பது பற்றியும் அக்கறையை வெவ்வேறு கோணங்களில் காட்டுகிறார்.சிம்மாசனங்களை கைப்பற்றி உட்கார்ந்திருப்பதை விவும், சிம்மாசனங்களை விட நாம் மேன்மையானவர்களாக் இருக்க வேண்டும் . அப்போதுதான் நம்க்கும் பெருமை , சிம்மாசன நாற்காலிக்கும் பெருமை என்பதையும் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.ஒரு படைப்பிலக்கிய வாதியாகவும், மேடைப்பேச்சு மூலமும் லட்சக்கணக்கான மாணவர்களை, மக்களைச் சந்திக்கிறவராயும் இருக்கிற காரணத்தால் சமூக நுண்ணறிவு என்பது தலைமைக்குத் தேவையான முக்கியமான பக்குவம் என்பதை கூறுகிறார். சமூக நுண்ணறிவு பற்றி இவ்வளவு நுணுக்கமாகவும், அதன் தேவை கருதியும் ஒரு படைப்பிலக்கியவாதியால் தான் எடுத்துரைக்க முடியும் என்பது இந்நூலின் முக்கிய சிறப்பம்சம் எனலாம்.   ஒவ்வொரு பக்கத்திலும் சிம்மாசனங்களைத் தொட்டவர்களின் படங்கள் நிறைந்து ஆச்சர்யம் கொள்ளச் செய்கிறது.
தன்னம்பிக்கை பற்றி எழுதுகிறவர்கள், பேசுகிறவர்கள் பெரும்பாலும் எதிர்மறை அம்சங்களைப் பற்றிப் பேச மாட்டார்கள். நம்பிக்கையையே மூன்று வேளை உணவாகக் கொள்ளும்படி அறிவுறுத்துவர். .துரோகர்கள் நிறைந்த சமூகத்தில் அவர்களைப் புறந்தள்ளி விட்டு, நேர்மறை அம்சங்களைத் தொடர்ந்து கட்டமைத்துக் கொண்டு போய் வெற்றிக்கனி பறிக்க ஏணியைப் போடுவார்கள். அந்நிலையில் ஒரு நூலின் தலைப்பே      “ துரோகச் சுவடுகள் “ என்று தலைப்பிட்டு இறையன்பு அவர்களிடமிருந்து வெளிப்பட்டிருப்பது மாறுதலாயும் எதிர்மறை அம்சங்களிலிருந்து நேர் மறை அம்சங்களுக்கு போகும் பாதையைக்  காட்டுவதாகவும் இருக்கிறது.
வரலாற்றின் பல பக்கங்களிலும்   துரோகங்கள் சிம்மாசனங்களை எட்ட வைத்திருப்பதைக் காட்டுகிறார்.அதுவும் தற்கால அரசியல் சமூக சூழல்களில் துரோகங்களின் நிழல்கள் படிந்திருபதை இந்திராகாந்தியின் கொலை முதல் அரசியல் கட்சிகளின் கூட்டணி வரை சுட்டிக்காண்பிக்கிறார். துரோகங்களால் இழந்து போன சிம்மாசனங்களைப் பற்றிப் பேசும் போது  அவற்றால் வெவ்வேறு துறைகளின் நிகழ்ந்த குறைபாடுகள் பற்றியும் விரிவாகச் சொல்கிறார். உதாரணம் இந்திய மருத்துவ முறை பற்றியது.. சீடர்கள் முழுமையாக அறிந்தால் துஷ்பிரயோகம் செய்து விடுவார்களே என்ற அச்சத்தில்தான் இந்திய மருத்துவ முறைகள் முழுமையும் அடுத்தத் தலைமுறைகளை அடையாமல் போய் விட்டன. குறுகிய உள்ளம் படைத்தவர்கள் கையில் அரிய மருத்துவ முறைகள் அகப்பட்டு விட்ட்தால் அவை குணப்படுத்துவதை விட ரணப்படுத்துவதற்கு அதிகம் உபயோகப்படுத்தப்பட்டு விடும் என்ற அச்சமும் அதற்குக் காரணம் என்கிறார்.  துரோகிகளிடமிருந்து தப்பிப்பது எப்படி என்கிற கேள்வியும் அதற்கான பதிலும் இந்த நூலிலே அடங்கியிருக்கிறது. விரக்தியை  ஏற்படுத்துவது இந்நூலின் நோக்கமில்லை என்று எச்சரிக்கை செய்வதற்கான குரலாக அமைந்திருக்கிறது.
வழக்கமாய் நாம் கோடிட்டுக் கொள்கிற வரிசையில் இப்புத்தகத்தின் சில வரிகளைப் பார்க்கலாம்.:
* விசுவாசிகள் குறிஞ்சியைப் போலவும், துரோகிகள் நெருஞ்சியைப் போலவும் இருக்கிறர்கள்.
* வரலாற்றில் மகான்களும் இறைத்தூதர்களும் அருகில் கூட துரோகிகள் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என்கிற செய்தி நம்மை தொய்வடையச் செய்வதற்காக அல்ல. இன்னும் நாம் கூடுதலான எச்சரிகையாய் நடந்து கொள்வதற்காகவே..
* நம்பிக்கையை கைக்குட்டையாக்க் கையாள வேண்டுமே தவிர கால் சட்டையாக அணிய முடியாது. சந்தேகமும் சாப்பாட்டுடன் கலந்திருந்தால்தான் வாழ்க்கையில் சம்த்தன்மை ஏற்படும் என்பது சரித்திரம் உணர்த்தும் பாடம்.
* உழைத்தவர்களுக்குபோய்ச் சேர வேண்டிய அடையாளத்தை மறைத்து விட்டு தொடர்பில்லாத    நபருக்குப் பெருமைகளை அள்ளி வீசுவது வியர்வைச் சிந்தியவர்களுக்கு அயர்வைத்தருகிற அற்பச் செயல்.
*துரோகம் எப்போதும் நிகழ்வுகளின் தொடர்ச்சி. அது தலைமுறைகளை தாண்டியும் நீடிக்கும் வன்மம்.


( நியூசென்சரி பதிப்பகம், சென்னை 98  வெளியீடு.
1. சிம்மாசன சீக்ரெட் 2. துரோகச்சுவடுகள் இரண்டும் தலா ரூ 60 விலை )

எலிக்கடி


சுப்ரபாரதிமணியன்

குறிப்புப்புத்தகத்தை எடுத்தார் மாணிக்கம். கை மெல்ல உயர்ந்து உதட்டைத் தொட்டது. இது முத்தமா…மீண்டும் உதட்டருகே கொண்டு சென்று உதட்டை அதன் மீது அழுத்தினார் இது முத்தமா…பெண் உதடு பட்டால் மட்டுமே முத்தம். ஒரு வகைக் கிளர்ச்சியாகவே இருந்தது.
அகால நேரத்தில் லிப்டை விட்டு வருபவர்கள் அதிசியப் பிறவிகள் என்று சிலர் நினைப்பர். மாணிக்கம் கூட அப்படி நினைத்தார். அகால நேரம் என்றால் இரவு, நடுநிசி என்றில்லை. ஆட்கள் நடமாட்டம் குறைந்த நேரம். நல்ல வெயில் . நல்ல மழை நேரம். அல்லது எல்லோரும் ஓயவு எடுக்கும் நேரம். அவர்களுக்கு முத்தம் கிடைப்பதால் அதிசியப் பிறவிகள் …லிப்டில் முத்தம்…
குறிப்புப்புத்தகம், மஞ்சள் கோட்டு,டார்ச் லைட். இது மாணிக்கத்தின் அடையாளம். காவலாளி. பாதுகாவலன் வேலை .காசு பார்க்க ஒரு வேலை. சாகிற காலத்தில் ஒரு வேலை. இதில் எங்கே வந்தது முத்தம்.லிப்ட் பயண முத்தம் ஞாபகம் வந்தது.
அந்த லிப்ட் பயண சமயத்தில் சில பெண் பிள்ளைகளுக்கு அபூர்வ முத்தம் கிடைத்து விடுகிறது. லிப்ட்டை விட்டு வெளியே வரும் போது புன்சிரிப்பு இருக்கும். உதடுகள் சிவந்திருக்கும். யாராவது ஆண்கள் கன்னத்தை நிமிண்டி இருப்பார்கள். சில ஆண்கள் முத்தம் கேட்டே வாங்கியிருப்பார்கள். எல்லாம் கலி காலம் என்று மாணிக்கம் சொல்லிக் கொள்வார். மாணிக்கம் க்ரெண்ட் பசிபிக் அபார்ட்மெண்டின் காவலாளி. வயசாகிப் போன காலத்தில் அப்படி உத்யோகம்.
இன்றைக்கு அந்த வேடிக்கை இருக்காது. அது அபூர்வ வேடிக்கை.
சிட்டி கிளப் வீதியை நெருங்கினார். வாகனங்கள் பரபரத்து விரைந்தன.தேசியக் கொடிகள் படபடத்து பளிச்சிட்டன.வாகனங்கள் எங்காவது போய் முட்டி மோதிக் கொள்ளும். இங்கு அபூர்வமாய் விபத்து. தமிழ்நாடு போயிருந்தபோது பல விபத்துகளை பத்து நாட்களில் பார்த்தார். அவ்வளவு அவசரமாய் உயிரை விட்டு விடுகிறார்கள். மோட்சத்திற்கு குறுகிய வழி.மாணீக்கத்தின் சித்தப்பா கூட விபத்தில் உயிர் இழந்தவர்.
சித்தப்பாவை பார்க்கவே ஊர் போனார் மாணிக்கம். பிணமாய் பார்த்தார். எவ்வளவு அஜாக்கிரதை. உயிர் பலி..
இன்றைக்கும் ஒரு உயிர் பலி. அதனால் வேலைக்கு போக தயக்கம். மனதில் வலி… அல்லாமா… என்று அவர் மனம் அல்றியது.

லிப்டில் இருந்து வருபவர்களை பார்ப்பது போல அபார்ட்மெண்டின் உச்சிக்குப் போய் வேடிக்கை பார்ப்பார். முத்த்தை பல சம்யங்களில் வெளிப்படையாக ரசிக்க மாட்டார். உள்ளூற ரசிப்பார். ஆனால் உச்சிக்கு போய் கீழே பார்ப்பது அவருக்குப் பிடிக்கும். பெட்டிகள் மாதிரி கார்கள். தீக்குச்சிகள் மாதிரி ஆண் பெண்கள். டிராபிக் ஜாம். தீப்பெட்டிகளை நிறுத்தி வைத்த மாதிரி இருக்கும் . எங்கிருந்து பார்த்தாலும் இரட்டை கோபுரம் தெரியும்..எல்லா வீதிகளும் கடற்கரைக்குச் செல்லும் நக்ரத்தைப் போல் இங்கு எல்லா வீதிகளும் இரட்டை கோபுரத்தை நோக்கிச் செல்வதாகவே பட்ட்து.
இன்றைக்கு மனசு கெட்டு விட்டது அதை ரசிக்கிற மனம் இல்லை. ஒரு சாவு செய்தி மனதை மாற்றி விட்டது. வேலைக்கு போக வேண்டாம் என்றது மனம்.

மாணிக்கத்தை கடந்து போனாள் அந்த மலாய்காரி. தொடை தெரிய உடை. கத்தரித்த புருவம்.. சப்பை மூக்கு. ஆனால் வசீகரம் இருந்தது.
பெருமூச்சு விட்டார். அவளை ரசிக்கிற மனம் இல்லை. மனம்   ஒரு சாவு செய்தியால் நிரம்பி இருந்தது.. அந்த பெண் பிண்மானாலும் மேக்கப் போடுவாளா. பிணத்திற்கு யாராவது மேக்கப் போடுவார்களா. பண்க்காரப்பிணங்கள், அரசியல் வாதிகளின் பிணங்களுக்கு மேக்கப் அவசியம். எம்ஜிஆருக்கு மேக்கப் போட்டு படுக்க வைத்ததாக ராஜன் சொல்லியிருந்தார். அவர் எம்ஜிஆர் ரசிகர். அதைச் சொல்லும் போது அழுதார். அவர் சாவை பார்க்கவில்லை பத்துமலைமுருகனுக்கு விரதம் இருந்த்தால் ராஜன் சாவுக்கு போகவில்லை. பதினாறு முடிந்து போன போது அவர் போட்டோ வாடிய மாலையுடன் தொங்கிக்கொண்டிருந்த்து. போட்டோ மேக்கப் போட்டுதான் எடுத்திருந்தார் என்பது தெரிந்தது.முண்டக்கன்னியம்மன் படமும் பக்கத்தில் இருந்த்து. முண்டக் கன்னியம்மன் தலையில் பெரிய பொட்டு,

சாகிறவர்கள் நெற்றியில், தலையில் கூட அப்படி பெரிய பொட்டுதான் போடுகிறார்கள்.
தனக்கும் பெரிய பொட்டா. போடுவார்கள் முனியாண்டிக்கு பெரிய பொட்டா போட்டிருப்பார்கள். அனாதை பிணத்துக்கு பொட்டு போட யார் இருப்பார்கள்.
நீ அனாதை.
இல்லை மகன், மகள் இருக்கிறார்களே.
வீதியில் போகும் போது வாகனம் பட்டு இறந்து விட்டால் நீ அனாதைதான்.
இல்லை. என் பாக்கெட்டில் மலேயா அடையாள அட்டை இருக்கிறது. முகவரி இருக்கிறது,
முனியாண்டிக்கு..
இதெல்லாம் இல்லை.
ஏன் இல்லை.

தமிழ் நாட்டிலிருந்து ஓடி வந்தவன்.
எல்லாரும் ஓடி வந்தவர்கள்தான். பூர்வக் குடிகள் கூட.
முனியாண்டி டூரிஸ்ட் விசாவில் வந்து போகாமல் இருப்பவன். போலீசுக்கு பயந்து இருந்தவன்.

மாணிக்கத்தின் வீட்டுப்பின்புறம்தான் முனியாண்டி தங்கி இருந்தான். இரண்டு ஆண்டுகள்.எங்காவது மலேசியா போலீஸ் தென்பட்டால் ஓடி ஒளிவான். இரண்டு வருசம் ஒன்றும் தெரியவில்லை. ஒரு நாள் போலிஸ் மாணிக்கம் வீட்டுக்கு வந்தது.
அது மாதிரி யாராவது இருக்கிறார்களா
அதுமாதிரின்னா.
தீவிரவாதம், கலகக்காரர்கள்

யாரும்மில்லை.
டூரிஸ்ட் விசாவில வந்து ஓடி ஒளியறவன்

ஒருத்தரும் இல்லை.

மலேயா போலீஸ் போனபின் மகன் மாணிக்கத்தை பிடித்து உலுக்கினார்.
இந்த வேலை வேண்டாம். அந்த ஆளைத் துரத்து.

யாரு
முனியாண்டியை..
இருந்துட்டு போறார்.
போலீஸ் வந்துட்டு போறான்.
இருந்துட்டு போகட்டும்,
அந்த வேலை வேண்டாம். அனுப்பு.
அனாதை
ஜெயிலுக்கு முனியாண்டியா
வேணாம்.
இல்லெ நாமெல்லாமா ஜெயிலுக்கு போகவா..
முனியாண்டியே முன் வந்தான். என்னாலே உங்கக் குடும்பத்திலே சங்கடம் எதுக்கு. நானே போறன். கஸ்ட காலத்துக்கு உதவின்னீங்க.


அடுத்த நாள் பசிபிக் அபார்ட்மெண்டில் வேலை நேரத்தில் இருக்கும் போது முனியாண்டி வந்தான்.அவன் கண்களில் ஒரு வித அச்சம்.கையில் ஒரு பை. எங்கே போறே என்று மாணிக்கம் கேட்டான்.
எங்காச்சும். போலீசுலே அகப்பட்டா கஸ்டம். ஊருக்கு வழி தெரிஞ்சா போயிரணும்.
அது நல்லது.
அம்பது வெள்ளியாவது கொடுத்து அனுப்ப நினைத்தார். காலியான பாக்கெட் உறுத்தியது.
இரண்டு மாதம் கழித்து முனியாண்டியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.. கிள்ளானில் ஒரு தோட்டத்தின் ஓரத்தில் தகர சாளையில் தங்கியிருப்பதாய். சொன்னான் ஒரு சீன உணவகத்தில் வேலை. இதற்கு முன் நாலு வெவ்வேறு வேலைகள் பார்த்தாகிவிட்டது. வாழ்க்கை ஓடுகிறது என்றான். சம்பாதித்து ஊருக்கு பணம் அனுப்ப வந்தேன்.லட்சியம் மாதிரி அனுப்புவேன் என்றான்.
இன்னொருமுறை தொலை பேசியில் அழைத்தான்.உடம்பில் கொசுவோ, மூட்டைப்பூச்சியோ கடித்த மாதிரி கீறல்கள். ஏதோ ஆவிதான் தன் உடம்பை காயப்படுத்திக் கொண்டிருப்பதாக சொன்னான். எந்திரம் கட்டி பிரச்சினையைத் தீர்க்கணும்.ஆவி பெரிசாய் உடம்பைக் கெடுக்காமல் இருந்தால் சரி. பத்து, இருபது வெள்ளி செலவுடன் கழிந்து விட்டால் போதும் என்றான்.

அவனை நினைத்துக் கொண்டே நடந்தார் மாணிக்கம். போர்டு கார் ஒன்று உரசிக் கொண்டு விரைந்தது அவன் கூட ஏதாவது திட்டியிருப்பான். கில்லிங் என்ற வசவு இங்கு சாதாரணம்,.ஜாக்கிரைதையாக நடந்து போகணும். தள்ளாத வயது வேறு. பயத்தில் தள்ளாட்டம் வந்து விடக்கூடாது.

காலை செய்தித் தாளில்   பல சாவுச் செய்திகள். பல பாலியல் செய்திகள். பல வீடு உடைப்புச் செய்திகள். அதில் ஒன்று ஒரு சாவு பற்றியது. கிள்ளான் பகுதியில் தகர கொட்டையில் தனியேவசித்து வந்தவர்   எலிக்கடி மரணத்தால் சாவு. தமிழரா.. டூரிஸ்ட் விசாவில் வந்தவரா.. விசாரணை.
அது முனியாண்டிதான் என்று மாணிக்கம் பலமாக நம்பினார். நம் வீட்டை விட்டுப் போனார். கிள்ளானில் இருப்பதாக ஒரு தரம் போன். அப்புறம் காணோம். செத்துப் போனது நம்ம ஆள். அனாதைப் பிணமாக கிடந்திருக்கிறான்.

முனியாண்டி பற்றிய நினைப்பே காலை முதல் அவரை அலைக்கழித்தது.
கிள்ளான் போய் எங்கு விசாரிக்க.. கிள்ளான் புகை வண்டி நிலையத்திற்கு முன்புறம் சஞ்சித் துரை அலுவலகம். அங்கு லேசாய் விசாரிக்கலாம்.அந்த முச்சந்தியில் ” தண்ணிப் பீலி ” என்ற நீர்க்குழாய் அந்தக்காலத்தில் இருந்த்து. இப்போது இருக்குமா. குளிக்க, குடிக்க அந்த தண்ணிப் பீலி. தண்ணிப் பீலிக்காரன் ஒருவன் கூட வசூல் செய்து கொண்டு இருந்தான். நூறு வயசுக்கு மேல் இருக்கும்.அப்படி பழைய ஆள் யாராவது கிடைத்தால் விசாரிக்கலாம்
பசிபிக் அபார்ட்மெண்ட் அலுவலகம் முன் நின்றார். லிப்ட்டில் ஆட்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். வாகனங்கள் புர்புர் என்று விரைந்தன.அகால நேரத்தில் முத்தத்துடன் வரும் பெண்களை இன்று வேடிக்கை பார்க்க வேண்டாம். முனியாண்டியை நினைத்து மனம் பரபரத்தது.செத்தவன் எரிக்கப்பட்டிருப்பானா. அடையாளம் தெரியாத ஆள் என்று பிணக்கிடங்கில் கிடப்பானா.
“ இன்னிக்கு லீவு வேணும் மானேஜர்.”
“ என்ன விசேசம் “
“ ஒரு சாவு காரியம் மானேஜர் சார் “
“ மஞ்சள் கோட், குறிப்பு புத்தகம், டார்ச் லைட்டுன்னு வந்திருக்கே..”
“ இடையிலதா சாவு நியூஸ் கிடச்சது.”
“ உனக்கே சாவு வந்தது மாதிரி பொணம்மாதிரி மூஞ்சியெ வெச்சிருக்கே “
“ நெருக்கமான ஆள்”
“ எப்போ அடக்கம் “
“ மத்தியானம் “
’’ சரி தொலை. பகல் டூட்டிக்கு ஆள் தேடணும் “
” செரி மேனேஜர் சார்.”
அவர் உடம்பு ஏதோ காய்ச்சல் வந்த மாதிரி ஆகிவிட்ட்து. ஏதோ ஆவி புகுந்திருக்குமா. என்ன பரிகாரம் செய்யலாம், பசரட்த் முனியப்பன் கோவிலுக்குப் போகலாமா. எந்திரம் கட்டினால் சரியாகி விடும்..எச்சில் துப்பி நெற்றியில் பூசலாம். குளித்து விட்டு உடம்பைத் துடைக்கிற போது முதலில் முகத்தைத் துடைத்தால் மூதேவி வந்து உட்கார்ந்து கொள்வாளாம். உடம்பைத்துடைத்து விட்டுதான் முகத்தைத் துடைக்கவேண்டுமாம். சக்தர்மிணி சொல்வாள். இன்றைக்கு துண்டு நேராக முகத்திற்குச் சென்றது ஞாபகம் வந்தது.

சாமியாடிகள் யாரிடமாவது போய் பரிகாரம் கேட்கலாம். செம்பனைக்காட்டுக்குள் யாராவது சாமியாடி இன்னும் இருப்பான். ஆயாக் கொட்டகையில் இருந்த ராமண்ணன் செத்துப் போய் விட்டான். முன்பெல்லாம் கோவில் திருவிழா வாராவாரம் என்றாகி விடும் . ராமண்ணன் சாமியாடும்போதெல்லாம் திருவிழா தான். ஆற்றங்கரையோரத்திலிருந்து கேட்கும் எஸ்டேட் மேளத்தின் அதிரலில் ஊரே கூடி விடும் . அருள் பெற்று யார் யார் சாமியாடப்போகிறார்கள் என்று ஊகிக்க முடியாது. பெரிய கூட்டமே சாமியாடி பின் ஓய்ந்து விடும்.
புத்தகத்தால் முகத்தைச் சொறிந்தார். சொறிவது சுகம். சொறிந்து சொறிந்து புண் கூட ஆகலாம். எலி கடித்து புண் ஆன முகம் பற்றி யோசிக்க
ஆரம்பித்தார் மாணிக்கம்.முத்தத்தின் எச்சிலைத் துடைக்கையில் சொறிகிற மாதிரி அழுத்தமாய் ஏதாவது கீறல் எந்தப் பெண்ணிற்காவது ஆகியிருக்குமா என்று யோசிக்க ஆரம்பித்தார்.