சுப்ரபாரதி மணியனின் வேட்டை – ஒரு பார்வை
தேனம்மை லெக்ஷ்மணன்
சுப்ரபாரதி மணியனின் வேட்டை சாய நகரத்தில் மனிதர்கள் வேட்டையாடப்படுவதைக் குறிக்கிறது. பெரும்பாலும் இவரது கதைகளில் திருப்பூர் சம்பந்தப்பட்ட பின்னலாடைத் தொழிலும் தொழிலாளிகளும் அவர்களின் வாழ்வியல் அவலமும் சுட்டப்படும்.
இந்த நூலிலும் அப்படித்தான். ஊர் விட்டு ஓடிவந்து சினிமாவுக்கு நடிக்கப் போகும் பெண்கள் பற்றிப் படித்திருக்கிறோம். இதில் வேலைக்காக ஊரைவிட்டு வந்த பஞ்சவர்ணம் தன் முன்னிற்கும் மூன்று விதமுடிவுகளில் எதற்கு இரையாகப் போகிறாள் என்ற பதட்டத்தை உண்டாக்குகிறது வேட்டை.
மலையாளிகள் பற்றி எனக்கும் சில கருத்துண்டு. கம்யூனிஸ்டுகள் நிரம்பிய தேசம் என்றாலும் அங்கே நகைக்கடைகள்தான் அதிகம். தங்கம்தான் நிர்ணயிக்கிறது திருமணத்தை. பெண்களின் சபரிமலா என்று ஆற்றுக்கால் பகவதியைக் குறிப்பிட்டார் , திருவனந்தபுரத்தில் எங்களைக் கோயில்களுக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்வித்த கணவரின் நண்பர். திருமணமாகாமல் வாழும் முதிர்கன்னிகளைச் சுமந்திருந்தது திருவனந்தபுரம். அழகிகள் எல்லாம் நடிக்கப் போய்விட்டார்கள் அல்லது அரபு தேசத்துக்கு நர்சாகப் பணியாற்றப் போய்விட்டார்கள். இந்த அருந்ததி ராய் வீட்டுக்குப் போயிருந்த கதையில் சுப்ரபாரதி ஜெய் சபாஸ்டியன் திருமணத்தில் ஒரு நடிகையைத் தெரிந்த அளவுக்கு சொந்த தேசத்தில் ஒரு எழுத்தாளர் அறியப்படவில்லை என்பதையும் அவர்களின் நகைகள் ( மோகம் ) பற்றிய சிறுகுறிப்பும் நச்சென்று அளித்திருந்தார்.
முரகாமியின் யானை காணாமலாகிறது என்ற கதை போல இங்கே ஒரு நாய் சாயப்பட்டறையின் அழுக்குகளையும் கழிவுகளையும் யானையாகும் கதை. வளர்ப்புப்ராணிபோல அவர்கள் தங்கள் கழிவுகளைப் பெருக்கிக் கொண்டே போவதும் அதைப் பற்றிய சிந்தனை சிறிதும் இல்லாமலிருப்பதையும் சொன்ன கதை.
திடீரென்று விதிர் விதிர்க்கச் செய்த கதை மொட்டை. பெண்களுக்குள்ளும் ஆணாதிக்கம் உண்டோ என்று திகைக்க வைத்த கதை. உயிர்சுழி இன்றைய கருத்தரிப்பு மையங்களின் பணி சார்ந்தது. முடிவு கொஞ்சம் கொடுமைதான். உபயோகம் கொஞ்சம் விவேக் பாணி ஜோக் கதை. இப்படியும் உண்டுமா என்று நினைக்க வைத்தது.
பல கதைகள் தனியறைகளிலும் லாட்ஜ்களிலுமே நடப்பதைப் போன்று இருக்கிறது. கூட இருப்பது மனைவியா, துணைவியா, இல்லை கூட்டிக்கொண்டு வந்த பெண்ணா என்ற குழப்பம் நிகழ்கிறது. கசங்கல், வள்ளுவரின் வாட்ச்..,வாடகை ஆகியன.
கல் –மனைவியும் ஒரு விதத்தில் கல்நாயோ என்ற உணர்வு எழச் செய்த கதை. கும்பல் சாதாரண மனிதனையும் போலீசாரின் சில முன் அனுமானங்களில் போராட்டக்காரனாய் மாறியதாய் எண்ண வைக்கும் கதை.
கூட்டம் கூட்டுவது என்பது எளிதல்ல என்பதை கூட்டம் கதை விளக்கியது. எல்லா அவஸ்தையையும் நேரில் அனுபவித்தது போல் சிரிப்பைக் கொண்டுவந்த கதை. நடுவீதி உலா ரிட்டயர் ஆன மனிதரின் பார்வையில் உலகமும் அவர் மனைவியின் பார்வையில் அவரும் தென்படும் கதை.
பூச்சு இரு வேறு பெண்களின் மனநிலையையும் அவர்களின் வெளிப்பூச்சையும் புரிய வைத்த கதை. பெண்களைப் பெண்கள் புரிந்து கொள்கின்றார்கள் வேறு பேர் சூட்டுவதில்லை என்று ஆசுவாசம் தந்த கதை. புகை நிகழ்வுகளின் நிமித்தம் தனித்து வெளியிடங்களில் தங்க நேரும் ஒரு பெண்ணின் மனநிலையைப் ப்ரதிபலித்த கதை.
மொத்தத்தில் ஆதிக்க உலகில் வேட்டையாடப் படும் சாதாரணப் பெண்களின் பல்வேறு வாழ்வியல் நிலை பற்றியும் துயரம் பற்றியும் அதிகம் சொல்லிச் சென்றாலும் சாயப் பட்டறை ஊரினாலும் மேலும் ஆண்கள் தங்கள் வாழ்வியல் சிக்கல்களினாலும் வேட்டையாடப்படுவதையும் சொல்லிச் செல்கின்றன என்பது இதன் தனித்துவம்.
நூல்:- வேட்டை
ஆசிரியர் :- சுப்ரபாரதி மணியன்
பதிப்பகம் :- உயிர்மை.
விலை ரூ 90.