சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 23 அக்டோபர், 2014

சுத்த ஜாதகங்கள்


சுப்ரபாரதிமணியன் “


ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே” மணிகண்டன் சிரித்துக் கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும், சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்திலிருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். விறு விறுப்பான காற்று மெல்லப் பேருந்தைச் சூழ்ந்து கொண்டது. சோளப் பயிர்கள் குட்டையாய் நின்றிருந்தன. சில் வண்டுகளின் சப்தம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.அபரிமிதமான பனி எல்லோரையும் குறுகி கூச்சப்படச் செய்தது. மணிகண்டன் சுகன்யாவைப் பார்க்கிற போதெல்லாம் ” அழகி எப்படியிருக்கிங்க ” என்று கேட்பான். ’ அழகி ‘ படம் பார்த்துவிட்டு அழுத கண்களோடு திரையரங்கில் இருந்து வந்தபோது அவளைப் பார்த்து கிண்டலடித்தான். “என்ன இப்பிடி கலங்கிப் போயிருக்கீங்க. மனசுல யார் இருக்கான்னு புரியலையே…” “ஒருத்தருமில்ல… யாருக்காகவோ மனசு கஷ்டப்பட்டுது. ” அதன் பின் அவளைப் பார்க்கிற போதெல்லாம் ” அழகி “ என்று கூப்பிடுவது வழக்கமாகி விட்டது. லலிதா அந்த கிராமத்தில் ஓரளவு லட்சணமானவள். எப்படியோ லலிதாவுக்கு சுகன்யாவைப் பிடிக்காமல் போய்விட்டது. ஒரே தெருவைச் சார்ந்தவர்கள் என்றாலும் சரியாகப் பேசிக் கொள்ள மாட்டார்கள். முனிஸ்வரன் திருவிழாவில் சுகன்யா உடுத்தி வந்த சேலையைப் பற்றி லலிதாவிடம் கேட்டபோது அவள் அதை விலையுயர்ந்ததாகவும், சூரத்திலிருந்து வந்த புடவை என்று சொன்ன பிறகு ஏனோ பொறாமை அவள் மனதில் விருட்சமாகி விட்டது. திருவிழாவில் ராட்டனந்தூரி விளையாட்டில் அவளோடு விளையாடுவது பிடிக்கவில்லை. அதன் பின் பெரும்பான்மையானத் திருவிழாக்களிலும், கல்யாண விசேஷங்களிலும் அவள் அந்த புடவையுடன் தென்பட்ட போதெல்லாம் ல்லிதாவிற்குப் பேச தோன்றவில்லை. அதுவே பெரிய இடைவெளியாகி விட்டது. “புது எடத்துக்குப் போறீங்க. பாத்து ஒத்துமையா இருங்க. ஒரே ஊர்க்காரங்கங்கற பாசமாச்சும் இருக்கட்டும். ஆமா சுகன்யா உங்கப்பா எதையோ பறி கொடுத்தவர் மாதிரி உட்கார்ந்திருக்கிறார். நாலு வார்த்தை பேசிட்டு வாயேன்.” “என்னத்தெ பேச… எப்பபாரு… கண்ணு கண்ணுன்னு கொஞ்சிட்டு இருப்பாரு. நான் என்ன சின்னக் கொழந்தையா… வேலைக்குப் போறன்னு சொன்னப்புறம் அசலூரு அது இதுன்னு மொகம் கோணிருச்சு. என்ன சமாதானம் சொல்றது. போற எடத்திலே வாச்சா வாச்சதுதா , ஏச்சா ஏச்சதுதான்னு வேற சொல்றார்.” “நானும் சொல்லியாச்சு. ராமசாமி அண்ணன் விலாவாரியா சொல்லியிருக்கார். ஏதோ நாலைஞ்சு வருஷம் வேலை பாத்தா பெரிய தொகை கெடைக்கும். கல்யாணத்துக்கு பிரயோஜனமாகும்ன்னு… காதுலெ கேட்டுட்ட மாதிரி தெரியலே… எதுக்கும் பஸ் கௌம்பறதுக்கு முந்தி பேசிட்டு வாயேன்…” சுகன்யாவின் அப்பா நசிந்திருந்த சால்வையை திரும்பத் திரும்ப இழுத்து விட்டுக் கொண்டிருந்தார். வாயிலிருந்த பீடி கைவிரலின் துணையின்றி தனியாக இருந்தது. மெலிதானப் புகை லேசான பனியில் கரைந்து கொண்டிருந்தது. சிதைந்து போன பாறாங்கல்லின் மீது உட்கார்ந்திருந்தார். சுகன்யா அவருகில் சென்று மூட்டமாய் இருந்த வானத்தைப் பார்த்தபடி நின்றாள். “மனசைப் போட்டுக் கொழப்பிக்காதீங்கப்பா…” “செரி… நீ தீர்மானம் பண்ணிட்டே” “நான் மட்டுமா போறன். இந்த வூர்ல இதுவரைக்கும் நாப்பது பேரு போயாச்சு. இப்போ பத்த பேரு… எல்லாம் நல்லதாத்தா நடக்கும்.” “இங்க மழை பேஞ்சா மறுபடியும் வந்திருவியா..ஊர்லே வெள்ளாமையைக் காவல் காக்கறதுக்கு கூட ஆளில்லே. முடியாதவங்கதா ஊர்லே கெடக்கறாங்க.” “பாக்கலாமப்பா… வெள்ளாமையில கூலி கூடக் கெடைக்கறதில்லே… இந்த நெலைமையில அங்க நாலைஞ்சு வருஷம் இருந்தாத்தா அந்த முப்பாதாயிரம் கெடைக்கும். மழை பேஞ்சுட்டா மட்டும் பெருசா வெள்ளாமெ வந்து குவிஞ்சிடப் போகுதாம்மா…” “தனியா போறெ அதுதா…” “எவ்வளவு பேரு போயிருக்காங்க. அங்கிருக்கிற ஹாஸ்டலெ பத்தி எல்லாருந்தா சொல்றாங்களே… பாக்கலாம்.” “ஆனா எதுவாயிருந்தாலும் நெலத்தை வுட்டுப் போறதுங்கறது எவ்வளவு சிரமமா இருக்கு. என்னவிருந்தாலும் நெலம் உசிரில்லையா ..” “நீங்கதா இருக்கீங்களே” “நாமளே வேலை செஞ்சு பதனமா நெலத்தைப் பாத்துக்கறது வேற. கூலியாளெ வெச்சு பாக்கறது வேற. கூலியாளெ வெச்சு பாக்கற அளவு வருமானம் வருதா என்ன? அதுவும் கூலியாளு கெடைக்குதா என்ன? புகையிலையும், பருத்தியும், மஞ்சளும், சோளமும் வெளஞ்ச காலமெல்லாப் போயாச்சே. எல்லார்த்தையும் பஸ்ல ஏத்தி, லாரியில ஏத்தி கம்பனிகளுக்கு கொண்டு போயிடறாங்களே…” “செரி… பாக்கலாம்…” “மழை பேஞ்சா வந்துரணும் அவ்வளவுதா…” “போங்கப்பா… என்ன சொன்னாலும் நீங்க ஏத்துக்கப் போறதில்ல. மனசைப் போட்டுக் கொழப்பிக்காதீங்க.” மூன்று வருடங்கள் போகிற இடத்தில் வேலைக்கு இருந்தால் பெரிய தொகை கிடைக்கும். கல்யாணத்திற்கென்றாகும். அதற்கு சுமங்கலித் திட்டம், கண்மணித் திட்டம் என்றெல்லாம் பேர் சொல்லிக் கொண்டார்கள். கல்யாணத்திற்கு தங்கத் தாலியும், மொத்தமாய் முப்பதாயிரம் பணமும் கிடைக்குமாம். டீன் ஏஜ் பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். “ போறவங்கெல்லா தொலஞ்சுதா போறாங்க.. தொலையறதுக்குன்னே போறாங்க போல “ என்றுதான் அவர் சொல்லியிருந்தார். இப்படி போனவர்களில் நாலைந்து பேர் ஊருக்கேத் திரும்பவில்லை. டவுன்காரப் பசங்களைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே இருந்து விட்டார்கள். “ அவங்க கல்யாணம் பண்ணிட்டதெல்லா பொழங்கற ஜாதியில்லெ ” என்பது வேறு அந்த ஊருக்கு அவமானத்தைக் கொண்டு வந்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். இரண்டு பேர் போன நகரத்தின் ஓரச்சாலைகளில் பெட்ரோல் ஊற்றிக் கட்டைக்கரியாய் செத்து அனாதைப்பிணமாகக் கிடந்தார்கள். காதல், கல்யாண விவகாரம், பாலியல் துன்புறுத்தல் என்று ஒவ்வொரு கட்டைக்கரி பிணத்திற்கும் பின்னால் ஒரு கதை இருந்தது.கடைசியாக நாலைந்து பெணகள் கடத்திக் கொண்டு போகப்பட்டவர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. வடக்கிலிருக்கும் தீவிரவாதிகளின் ஆட்கள் தங்கள் உதவிக்கும், பாலியலுக்கும் அவர்களைக் கடத்திக் கொண்டு போனதாக செய்திகள் கசிந்து கொண்டிருந்தன. லலிதாவிற்கு சுத்த ஜாதகம்தான் . ஆனால் கல்யாணம் கூடி வரவில்லை.கல்யாண செலவிற்கென்று கடைசியாய் வந்த கொடுமணல் மாப்பிள்ளை வீட்டில் பணம் கேட்க அவர்கள் நழுவிவிட்டார்கள். “ இங்க நெலமெல்லாம் சாயத்தண்ணியில வீணாப்போச்சு .. வெள்ளாமையே ஆடு மாடு மேச்சு பொழப்பு நடக்குது. காசு எங்க கெடக்குதாமா” “ செரிதா… தண்ணியில்லாத ஊருக்கு எதுக்கு எங்க பொண்ணக் குடுக்க.. குடிக்கற தண்ணிக்கு நாலு மைல் போயி எடுத்துட்டு வர்றதுக்கு எம்பொண்ணுதா கெடச்சாளா “. செத்துப் போன அம்மாவின் புற்று நோய் எல்லா சொத்தையும் கரைத்து விட்டு அவளை வேலைக்குப் போக வைத்தது.அஞ்சு பவுனுக்கு குறைவாய் யாரும் பேச்செடுக்கவில்லை.பாதி செலவு போட்டுக் கொண்டாலும் போதும் என்று சில இடங்களில் பேச்சை போட்டு வைத்தார்கள். அதுதான் கடைசியில் கொடுமணல்காரர்களிடம் வெடித்து விட்டது. லலிதாவிற்கு எல்லாம் தள்ளிக் கொண்டு போனது. பேருந்திற்கு லலிதா வருவதற்கு கொஞ்ச நேரம் முன்னால் சுந்தரவடிவேல் வீட்டிற்கு வந்திருந்தான். அவன் கையிலிருந்த கவரில் சில புகைப்படங்கள் இருந்தன. முனியப்பன் கோவில் திருவிழாவில் சுந்தரவடிவேல் எடுத்த புகைப்படங்கள் அவை. “ எதுக்கு எங்கிட்டைன்னு கொண்டுட்டு வந்தேன். எதுவும் தப்பாயிரக்கூடாது பாரு.” ஜாதகம் கேட்பவர்களுக்குத் தரவென்று புகைப்படங்கள் எடுத்திருந்தான். “ மனசுக்குள்ள தொடச்செறியற மாதிரின்னு பண்றியாடா வடிவு. “ “ அப்பிடித்தா வெச்சிக்கோ லலிதா. எதுக்கு பல பேருக்குச் சிரமம்ன்னு…” “ ஆமா. போற எடத்திலே மூணு வருசம் முடிச்சாத்தா அந்த தாலியும், தங்கமும், பணமும் கெடைக்கும் “ “ அதிலேயாச்சும் வழி பொறக்கட்டும் “ “ அவனுக யாரு எங்க கல்யாணத்தை முடிவு பண்றதுக்குன்னு கோபமும், எரிச்சலும் வேற இருக்கு “ “ ஆமாம.. கையாலாகாத எரிச்சல்லே வர்ற கோபம் அது… கட்டுப்படுத்திக்கோ. பொழக்கற வழியெப்பாரு. “ சுகன்யாவிற்கு தோஷ ஜாதகம். கேது, ராகு தோஷம் அவளை அலைக்கழித்தது. எல்லாம் கூடி வருவதாக இருக்கும் அப்புறம் அது சரியில்லை, இது சரியில்லை என்று விலகிப்போய் விடும். எந்தக் காரணத்திற்காக ஒத்து வராமல் போய் விட்டது என்று சரியாகத் தெரியாமல் போய்விடும்.திருநள்ளாறு, கும்பகோணம் கோவில்கள், சோமனூர் குலதெய்வம் என்று எல்லா இடத்திற்கும் போய் பரிகாரம் பண்ணிக்கொண்டு வந்தாயிற்று. எதுவும் அமையவில்லை. அம்மாவும் மகளும் கொஞ்ச நாள் பிரிந்திருக்க வேண்டும் என்று தென்னம்பாளையத்து ஜோசியகாரர் சொல்லி விட்ட பின்புதான் அவள் அப்பா இப்படி வெளியில் வேலைக்குப் போகச் சம்மதித்தார். ’’ சுத்த ஜாதகக் காரங்களுக்கே பெரிய திண்டாட்டம் “ என்பதாய் அவர் சொல்லிக்கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் திடுமென பல மஞ்சள் நீர் திருஷ்ட்டித்தட்டுகள் முளைத்து விட்டன. ஆரத்தி தட்டு விசயத்தை யார் கிளப்பி விட்டது என்று தெரியவில்லை, அவரவர் வீட்டுப் பெண்களுக்கு முன்பாக ஒரு தட்டு நீண்டது. இளஞ்சிவப்பு நிறத்தண்ணீரில் வெற்றிலைத் துணுக்குகள் மிதந்தன. வலதுபுறமும் இடதுபுறமுமாக மூன்று முறை சுற்றி விட்டு வர்ண நீரை காலுக்கடியில் ஊற்றினார்கள். செம்மண் நிற நிலம் கொஞ்ச நேரம் நிறத்தை மாற்றிக் கொண்டது போல் விளையாட்டு காட்டி விட்டு ஈரமானது. ” என்னமோ வீர வெளையாட்டுக்குப் போற மாதிரி நமக்கு மரியாதை கிடைக்குது பாரேன் “ நமுட்டுச் சிரிப்பு உரத்ததாய் மாறி சிதைந்தது.. லலிதா வீட்டிலிருந்து யாரும் வரக்காணோம். சுகன்யா அக்கா லலிதாவையும் சேர்த்து நிற்க வைத்து ஆரத்தி எடுத்தாள். ஆரத்தி தண்ணீரின் இளஞ்சிவப்பு நிறம் லலிதாவிற்கு கொஞ்சம் பயம் தருவதாக இருந்தது. அதை முகத்தில் தெளித்து விட்டது போல் ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் அவளுக்கு வந்த்து. விஜயா விரைசலாகப் பேருந்தை நெருங்கிக் கொண்டிருந்தாள். அவள் கையில் தூக்கி வந்து கொண்டிருந்த கனத்த பை நழுவி தரையில் விழுந்தது. விஜயா அதை தூக்கியபோது அதில் ஒட்டியிருந்த மண் தூசி பரப்பியது. பட்பட்டென்று பட்டாசு வெடிக்கும் சத்தம் தொலைவில் கேட்டு எதிரொலித்துக் கொண்டிருந்தது. “என்ன பேக் கைப்பிடி கிழிஞ்சு போச்சு… எதுக்கு இத்தனை கனம்” “நாலஞ்சு வருஷம் இருக்கப் போறமல்ல…” “ஒண்ணா சேத்து கொண்டாந்தியாக்கும்” என்றபடி சுகன்யா அவளோடு ஒட்டி நடந்தாள். சுகன்யாவின் அப்பா உட்கார்ந்த பாறாங்கல்லிலிருந்து எழுந்து அவர்களைப் பார்த்தார். பட்டாசு சப்தம் திடுமெனக் கிளம்பி மறைந்தது.வெங்கச்சங்கற்களை வானத்தில் எறிந்த்து மாதிரி இருந்தது. “இன்னம் பட்டாசு வெடிக்கறானுக…” “நோம்பி இன்னம் நாலு நாளைக்கு இருக்கத்தானே செய்யும்” “இன்னும் ரெண்டு நாள் கழிச்சு கௌம்பலாமுன்னு மணிகண்டன் அண்ணன்கிட்ட சொல்லிப் பாத்தாச்சு. கேட்கலே… கௌம்பு கௌம்புன்னு அவசரம். வுட்டா பட்டாசை கையிலிருந்து புடிங்கிப் போட்டுட்டு வான்னு தரதரன்னு இழுத்துட்டு போயிருவாரு போல” “அவர் அவசரம் அவருக்கு… அய்… என்ன கண் புருவமெல்லா செதுக்கி இருக்கே… எங்க போனே…” “நானே பண்ணிட்டன். புது ஊருக்கு, புது எடத்துக்குப் போறமில்ல கொஞ்சம் நல்லா போலாமுன்னு…” “ஜமாயி விஜயா…” பேருந்துகள் கசகசவென்று குரல்கள் கிளம்பி நிறைந்தது. லேசான குளிரையும் மீறி ஜன்னல் கதவுகள் திறந்திருந்தன. தொலைக்காட்சிப் பெட்டியில் கரகரவென்று கோடுகள் கிளம்பி மறைந்தன. புதுப்படங்களாக போட்டால் நன்றாக இருக்கும் என நினைத்தாள் சுகன்யா. “புதுப் படங்க போடுவாங்களா” விஜயாவைப் பார்த்தபடி கேட்டாள். விஜயா கையிலிருந்த துணிப்பையை இறுக்கி மார்போடு அணைத்துக் கொண்டிருந்தாள். “புதுப் படங்கதா போடுவாங்க. பழசெல்லா யாரு பாப்பா…” விஜயாவோடு புது இருக்கையில் உட்கார்ந்தாள். லலிதா என்ன என்று பார்ப்பது போல பார்த்தாள். “லலிதா… விஜயாவோட உட்கார்ந்துக்கறன். அரட்டை அடிக்க சௌகரியமா இருக்கும்.” ரொம்ப நாளைக்கப்புறம் அவளிடம் பேசின வார்த்தைகள். தொண்டை கமறுவது போல இருந்தது. “நாம போயி சேர்றதுக்குள்ளாற எவ்வளவு படம் போடுவாங்க” விஜயா சுகன்யாவின் கண் புருவத்தருகில் இருந்த தூசியை விரலால் தட்டியபடிக் கேட்டாள். “மூணு நாலு படமாச்சும் போடுவாங்க. ரொம்ப தூரந்தானே. எல்லாம் புதுப்படங்களா இருக்கணும்.” “ஆமா நேத்தைக்கு, தீபாவளிக்கு ரிலீஸ் ஆனப் படங்களா இருக்கும் போ…” முன் வரிசையில் நாதஸ்வர கோஷ்டி நாகராஜன் உட்கார்ந்திருந்தான். அவனின் கையில் நாதஸ்வரத்தை துணியில் சுருட்டிக் கொண்டது போல் ஏதோ நீண்டிருந்தது. “ என்ன நாகராசா. நீயும் பஞ்சம் பிழைக்க பட்டணம் வர்றியா. இதுலெ சேந்துட்டே. அங்கெ போயி எங்களை வரவேற்க நாதஸ்வரம் வாசிக்க உன்னியே ஏற்பாடு பண்ணிட்டாங்களாக்கும் “ “ நீயும் அங்க வந்துட்டா அப்புறம் நம்மூர் கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசிக்க ஆளில்லாமெப் போயிரும். ” “ நாங்கெல்லா மூணு நாலு வருசம்ன்னு போயி திரும்பறப்போ நாதஸ்வரம் வாசிக்கறதுக்கு யாராச்சும் வேணுமில்லே..” நாதஸ்வர மூக்கு போல் உடம்பைத்திருப்பிக் கொண்டே நாகராஜன் சொன்னான். “ அப்போ யாராச்சும் இல்லாமெப் போயிருவாங்களா என்ன.. “ . “மானும் மயிலும் ஒன்றாய் திரியும் நானும் நீயும் சேர்ந்து திரிவோம்” தீபாவளியன்று வெளியாகியிருந்த புதுப்படத்தின் பாடலில் மூழ்கியிருந்தாள் லலிதா. ஆர்க்கெஸ்ட்ராவின் கனத்த இசை அந்த காம்பவுண்ட் எங்கும் நிறைந்திருந்தது. அபரிமிதமான சப்தம் காரணமாக காது அடைத்துக் கொண்டது போலிருந்தது. காதுகள் அடைத்துக் கொள்கிற போதெல்லாம் மூச்சை நன்றாக இழுத்து வாயை இறுக்கிக் கொண்டு காதுகளில் காற்றுக்குமிழிகள் படபடத்து வெளியேறுமாறு ‘தம்’ கட்டிப் பார்ப்பாள் லலிதா.. ஒரு தரம் மருத்துவரிடம் போன போது காது அடைத்துக் கொள்கிறது என்று சொன்ன போது மருத்துவர் அப்படிச் செய்யச் சொன்னார். அதன் பின் காது அடைத்துக் கொள்கிற போதெல்லாம் அப்படித்தான் செய்வாள். இப்போது ஆர்க்கெஸ்ட்ரா சவுண்ட் பாக்ஸ்சுகள் நாலாப்புறமிருந்தும் அபரிமிதமாய் பாட்டைத் துப்பிக் கொண்டிருந்ததால் காதுகள் அடைத்துப் போய் விட்டன என்று பட்டது அவளுக்கு. இப்போது ‘தம்’ கட்டிப் பார்க்க வேண்டாம். பிறகு பார்க்கலாம் என்று நினைத்தாள். ஆர்க்கெஸ்ட்ரா ஆரம்பித்து இரண்டு மணி நேரமாகி விட்டது. இன்னும் எத்தனை மணி நேரம் நடக்கும் என்ற தெரியவில்லை. அவளை மாதிரி ஆயிரக்கணக்கான பெண்கள் அந்தத் திறந்த வெளியில் அமர்ந்திருந்தனர். எல்லோரும் புதுத்துணியில் மினுங்கிக் கொண்டிருந்தனர். அவர்களெல்லாம் தீபாவளிக்கு ஊருக்குப் போக விடுமுறை தரப்படவில்லை என்றார்கள் துணியெடுக்க மட்டும் பேருந்தில் கூட்டிச் சென்று கூட்டி வந்திருக்கிறார்கள். ஊருக்கு சென்று விட்டால் திரும்புவதற்கு பத்து பதினைந்து நாட்களாகி விடும் என்று விடுமுறை தரவில்லையாம். பத்து பதினைந்து நாட்கள் வேலை ஆட்களில்லாமல் ஆர்டர் முடிக்க முடியாமல் தடைபடும் என்று சொல்லியிருக்கிறார்கள். நேற்றைக்கு ஹாஸ்டல் வளாகத்தில் பட்டாசுக் கட்டுகளைக் கொண்டு வந்து வெடித்திருக்கிறார்கள். இன்றைக்கு காலையிலிருந்து வேலை இருந்திருக்கிறது. மாலையில் இந்த ஆர்க்கெஸ்ட்ரா. ஊரிலிருந்து தனிப் பேருந்து நேராக ஆர்கெஸ்ட்ரா நடக்கும் இடத்திற்கு வந்து விட்டது. ஆர்க்கெஸ்ட்ரா நிகழ்ச்சி முடிந்த பின்பு ஹாஸ்டலுக்குப் போகலாம் என்று சொல்லியிருந்தார்கள். நுழைந்தவுடனே உப்புமா வடையும் கேசரியும் கொடுத்தார்கள். உப்புமாவில் கூட முந்திரி போடுவார்களா என்று ஆச்சர்யமாக இருந்தது. வடைக்கு தேங்காய் சட்னி பொருத்தமாக இருப்பதாகப்பட்டது லலிதாவுக்கு. இரண்டு முறை சட்னி வாங்கினாள். சாம்பார் வடை என்று ஒரு தரம் சாப்பிட ஆசை வந்தது. யாரும் இரண்டாவது முறை வடை என்று கேட்கவில்லை. கேட்டிருக்கலாம் என்று பட்டது அவளுக்கு. இவ்வளவு ருசியாய் வெள்ளை ரவை உப்புமாவை செய்ய முடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது அவளுக்கு. அவளுக்கு வெள்ளை ரவை உப்புமா பிடிக்காது. கோதுமை ரவைதான். கடலைப் பருப்பை நன்கு வறுத்து கோதுமை ரவையுடன் சேர்த்துக் கொண்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். வெள்ளை ரவையை எவ்வளவு நன்றாகக் கிண்டினாலும் புருடு புருடாக நின்று விடும். சிறு சிறு கட்டிகளாக ஒதுங்கும். கட்டி நசுங்குகிற போது உள்ளே ரவை அப்படியே வெள்ளையாக இருப்பது தெரியும். அது என்னவோ அவளுக்கு அருவருப்பைத் தந்திருக்கிறது. வெள்ளை ரவை உப்புமாவை சக்கரை சேர்க்காமல் அவளால் சாப்பிட முடியாது. கட்டாயப்படுத்தி விழுங்க வேண்டும். ஆனால் கோதுமை ரவை அப்படியில்லை. சட்னி எதுவுமில்லாமல் அவளால் சாப்பிட்டு விட முடியும். வெள்ளை ரவை உப்புமா இவ்வளவு ருசியாய் சாப்பிட்டதில்லை. பக்கத்திலிருந்த பெண் ஒல்லியாய் ஒடக்கான் மாதிரி இருந்தாள். “ஹாஸ்டல் சாப்பாடு வித விதமா இருக்கும் “ என்று வெள்ளை ரவை உப்புமா ருசி பற்றி வாய் விட்டுச் சொன்ன போது அவள் சொன்னாள். மேடைக்கருகில் உட்கார இடம் கிடைத்தது பற்றி லலிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மேடையில் பாடுபவர்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. பாடும் பெண்களையெல்லாம் கூர்ந்து பார்க்க முடிந்தது. பாடும் பெண்களெல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள். மேடை வெளிச்சத்தால் அவ்வளவு அழகாக இருக்கிறார்களா? இயல்பாகவே அழகு இல்லாவிட்டால் வெளிச்சத்தில் மட்டும் அது பெரிதாகத் தெரிந்துவிடாது என்றத் தீர்மானத்திற்கு வந்திருந்தாள். சுகன்யா எங்கு உட்கார்ந்திருக்கிறாள் என்ற தெரியவில்லை. பேருந்தில் வரும் போது அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது வெகு சௌகரியமாக இருந்தது. தொலைக்காட்சியில் போட்ட படங்களைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டே வந்தாள். படங்களில் வருகிற நடிகர், நடிகைகளைப் பற்றி அவள் நிறைய தகவல்களைச் சொன்னது ஆச்சர்யமாக இருந்தது. நடிகைகள் யார் யாருக்கு எந்த நடிகர்களோடு காதல், தொடர்பு, இரண்டாம் திருமணம், கர்ப்ப கலைப்பு என்று நிறையத் தகவல்களைச் சொன்னாள். “நீயுந்தா அழகா இருக்கே சுகன்யா. நல்லா மேக்கப் போட்டா சினிமா ஸ்டாரையும் மிஞ்சிருவே…” “உனக்கு மட்டும் என்ன கொறச்சல். கண் புருவாமல்லா செதுக்கி அழகாத்தா இருக்கே…” “இருந்தாலும் நீ நம்மூர் அழகியில்லையா…” ஆர்க்கெஸ்ட்ராவில் அடுத்த பாடலும் தீபாவளிக்கு வந்த புதுப்பாடலாக இருந்தது லலிதாவிற்கு மகிழ்ச்சி தந்தது. அவளுக்குப் பிடித்தமான அல்டிமேட் ஸ்டாரின் படத்திலிருந்து அந்தப் பாடல் அமைந்திருந்தது. காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு பாடலைக் கேட்க ஆரம்பித்தாள். வார்த்தைகள் புரியவில்லை. இசைக் கருவிகளின் சப்தம் எல்லாவற்றையும் மூழ்கடித்து விட்ட மாதிரியிருந்தது. விறுவிறுவென்று கூட்டம் கலைந்து விட்டது. ஆர்க்கெஸ்ட்டிராவில் பாடிய பாடகர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் புத்தகம், நோட்டு என்று எதுவுமில்லை. பர்ஸைத் தேடினால் ரூபாய் நோட்டு கிடைக்கும். அதில் கூட வாங்கலாம். ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் வாங்குகிற அளவு இவர்களென்ன சினிமாக்காரர்களா என்ற எண்ணமும் வந்தது. காம்பவுண்டிற்கு வெளியே நின்றிருந்த இன்னொரு பேருந்தில் ஆர்க்கெஸ்ட்ரா காரர்கள் உட்கார்ந்திருந்தனர். இசைக் கருவிகளை ஏற்றிக் கொண்டிருந்தார்கள். சுகன்யா பேருந்தருகில் நின்றிருந்தாள். அதில் வெள்ளைப்பறவையொன்று கண்களில் மினுக்கத்துடன் பறந்து கொண்டிருந்தது வெளிச்சத்தில் தென்பட்டது. “ஆர்கெஸ்ட்ரா பிரமாதமா இருந்திச்சில்லே. “விஜயா அவளருகில் சென்று நின்று கொண்டாள். “நம்ம பஸ் இது தானே” முன்பு அடையாளத்திற்காக பேருந்து எண்ணை மனதில் சொல்லிப்பார்த்துக் கொண்டிருந்தாள். ஏகதேசம் எல்லோரும் கூடிவிட்டனர். பேருந்து கதவுகள் திறக்கப்படாமல் இருந்தன. வானத்தில் ஜாலம் காட்டிக் கொண்டிருந்த பட்டாசு வெடிகளை எல்லோரும் பார்க்க ஆரம்பித்தனர். விதவிதமாய் வர்ணங்கள் சிதறி மிளிர்ந்தன. வானம் இருட்டையும் குளிரையும் மீறி பிரகாசித்துக் கொண்டிருந்தது. “ஹாஸ்டலுக்கு எவ்வளவு தூரம் போகணும்.” “எங்கியோ இங்கதா இருக்கற மாதிரி சொன்னாங்க. மணிகண்டனும் இறங்கிட்ட பொறகு கண்ணுல தட்டுப்படலே… மணிகண்டன் கிட்ட கேக்கலாமுன்னா ஆளெ தட்டுப்படலே..அவன் கமிசன் வாங்கிட்டு கெளப்பிட்டான் போல .” பேருந்தின் கதவுகள் திறக்கப்பட்டன. பேருந்து ஓட்டுனர் எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தான். அவன் கண்கள் சிவந்து முகம் வெளிறிப் போயிருந்தது. வியர்வையில் முகம் குளித்தது போலிருந்தது. கட்டங்கள் போட்ட சட்டை போட்ட ஒருவர் வந்து நின்றார். “ஆர்க்கெஸ்ட்ரா நல்லா இருந்துச்சில்ல…” யாரும் பேசாமல் புன்னகைத்தனர். “என்ன ஆர்க்கெஸ்ட்ரா நல்லா இல்லியா… சொன்னாத்தானே தெரியும்” “நல்லா இருந்துச்சுங்க சார்…” நாலைந்து பேர் கத்தினார்கள். கசகசவென்று குரல்கள் கிளம்பின. “டிபன் எப்பிடியிருந்துச்சு…” “நல்லா இருந்துச்சுங்க சார்…” இம்முறையும் நாலைந்து பேரிடமிருந்து குரல்கள் வந்தன. “என்ன மத்தவங்களுக்குப் புடிக்கலையா…” “புடிச்சிருந்துச்சு…” வெவ்வேறு பக்கங்களிலிருந்து குரல்கள் வந்தன. “செரி புடிச்சிருக்கும். ஹாஸ்டல் சாப்பாடுதா. எப்பவும் இது மாதிரி நல்ல சாப்பாடுதா… செரியா… செரி ஏறுங்க… ஹாஸ்டலுக்குப் போலாம்.” நிதானமாக ஒவ்வொருவராய் ஏறிக் கொண்டிருந்தனர். கட்டம் போட்ட சட்டைக்காரர் லலிதாவின் அருகில் வந்தார். “உங்க பேர் என்ன” ” லலிதா….” சுகன்யாவைப் பார்த்தபடியே “நீங்க ரெண்டு பேரும் பிரண்ட்ஸா… உங்க பேரு…” என்றான் “சுகன்யா…” “நல்ல பேரு…” பேருந்தின் உள்ளிருந்து சிரிப்பொலி தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. வானத்தின் குளுமை உடம்பை சிலிர்க்கச் செய்வதாகயிருந்தது விஜயாவிற்கு. கைகளை இறுக்கக் கட்டிக் கொண்டாள். “நீங்க ரெண்டு பேரும் இங்கிருங்க. உங்க பையை பஸ்ஸிலிருந்து எடுத்துக்குங்க.” “எதுக்கு” சுகன்யா பயத்தோடு கேட்டாள். “பங்களா வேலைக்கு ரெண்டு பேரு தேவைப்படுது அதுதா… மத்தவங்கெல்லா கம்பனி வேலைக்கு…” அவர்கள் இருவரும் ஒவ்வொருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டார்கள். வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருப்பதாக ஏகமனதாய் அவர்கள் மனதிற்குள் சொல்லிக் கொண்டார்கள்..