சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

நியூட்ரினோ நியதி : விளைவும், ஆபத்தும் : ஒரு பார்வை

சுப்ரபாரதிய மணியன்

காளிதாஸ் அவர்களின் தலைமையிலான     கோவை "ஓசை"அமைப்பு நடத்திய சுற்றுச்சூழல் சுற்றுலாவின் போது நியூட்ரினோ திட்டம் பற்றி முதலில் அறிந்து கொண்டேன்.
நீலகிரியின் சிங்காரா பகுதியில் அப்போது நியூட்ரினோ மையம் அமைக்கப்படுவதாக இருந்தது. முழுக்க ராணுவக் கட்டுப்பாட்டில் இருப்பதும், நியூட்ரினோ திட்ட சுரங்க நடவடிக்கைகள் பைக்கார மின் திட்டத்தை பாதிக்கும் போக்கும் மக்களிடம் எதிர்ப்பைக் கிளப்பவே சிங்கார திட்டம் தற்போது தேனி மாவட்டதேவாரத்திற்கு மாறி உள்ளது.

120 ஆண்டுகள் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். நியூட்ரினோ என்றால் அணுவின் அடிப்படை துகள்கள் என்று சொல்லலாம். நுண் நொதுமி என்று தமிழில் அதற்குப் பெயரிட்டிருக்கிறது. நியூட்ரினோ அணு ஒளியை விட விரைவாக பயணம் செய்யக் கூடியது. 1330 கோடி செலவாகும். 2030 மீ ஆழம் சுரங்கம் தோண்டப்படும். 50 டன் எடையுள்ள மின் காந்தம் அந்த ஆழத்தில் அமைக்கப்படும்.

நில நடுக்கம், ஆழிப்பேரலை, புயல், வெள்ளம், பேரிடர் விபத்துகள், உலகத்தின் தொன்மை, உயிர்களின் தோற்றம் குறித்து நிறைய ஆய்வுகளை நியூட்ரினோ மையம் நிகழ்த்தும். சூரியனில் நடக்கும் பல்வேறு மாற்றங்கள், பிற கிரகங்களில் உள்ள உயிரினச் சூழல் பற்றியும் இது ஆய்வுகளை மேற்கொள்ளும்.

1965ல் கோலார் தங்கச் சுரங்கப் பகுதிகளில் இதை அமைக்க நடவடிக்கைகள் தொடங்கி புதுப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டன. நீலகிரி மலையில் அமைக்கப்படுவதால் காட்டுயிர்களின் அமைதிச் சூழல் பாதிக்கப்படும், என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 2030 மீட்டர் ஆழமான மலையைக் குடைதல், மரங்களை வெட்டுதல், கழிவுகளைக் கொட்டுதல் என்ற வகையில் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் என்ற எதிர்ப்பின் காரணமாக அங்கு கைவிடப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் இத்தாலியில் நியூட்ரினோ ஆய்வகத்தில் ஏற்பட்ட வேதிக்கசிவு, நிலத்தடி நீர் மற்றும் காட்டுயிர்கள் மீது ஏற்படுத்திய விளைவுகளால் அங்கு சுற்றுச் சூழல் அமைப்புகள் நடத்திய போராட்டத்தால் தற்காலிகமாக மூடப்பட்டது. இதைத்தவிர அமெரிக்கா, கனடா, ஜப்பான் நாடுகளிலும் இந்த வகை ஆய்வு மையங்கள் உள்ளன.

இந்த ஆய்வக கட்டுமானப் பணிகள் ஆரம்பத்தில் நிறைய சுற்றுச்சூழல் கேடுகளை உருவாக்கும். 2030 மீ ஆழமான சுரங்கம் தோண்டப்பட வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை. தற்போது தேர்வு செய்து அடிப்படை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேனி மாவட்டம் தேவாரம் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் நிறைந்த பகுதியாகும். இங்கு பொழியும் கணிசமான மழை காரணமாக தென் மாவட்டத்திற்கு தண்ணீர் கிடைக்கிறது. அப்பகுதியைச் சார்ந்த முல்லைப் பெரியாறு வைகையாறு போன்ற ஆறுகளுக்கு மூலாதாரமான சிறு ஆறுகள் மேற்கு தொடர்ச்சி மலைகளிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. தேவாரத்திற்கு அருகிலான மேக மலை காட்டு எருதுகள், யானைகளின் வாழ்விடமாக அறிவிக்கப்பட்ட இடமாகும் மலை அணில் வாழ்விடத்திற்கான சிறப்பிடமாக சுருளை மலை காட்டுப் பகுதி அமைந்துள்ளது.

வான்வெளியிலிருந்து வெளிப்படும் பிற கதிர்களால் நியூட்ரினோ துகள்களுக்கு பாதிப்பு ஏற்படும் நியூட்ரினோக்கள் எங்கும் ஊடுருவும். காஸ்மிக் கதிர்களை சிறந்த முறையில் வடிகட்ட கடினமான பாறை வகைகள் இப்பகுதியில் இருக்கின்றன. மலையைக் குடைந்து சுரங்கம் அமைக்கப்படும். இதைத் தொடர்ந்து அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள நியூட்ரினோ ஆய்வு கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் துகள்களை பூமிக்குள் ஊடுருவச் செய்து தேவாரம் ஆய்வகத்தின் வழியே பெறும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் பிற்காலத்திட்டமும் உள்ளது.

இயற்கையுடன் ஒன்றி வாழும் தேவாரம் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் கட்டுமான அளவிலேயே அதிகம் பாதிக்கப்படும் சுரங்கம் வெட்டுவதால் வெளியில் கொட்டப்படும் கழிவுகளும், அதை எடுத்துச் செல்லும் போக்குவரத்து நடவடிக்கைகளும், அதனால் உண்டாகும் ஒலி மாசும், காட்டுயிர்களுக்கும், காட்டு பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதாகவே அமையும். அமெரிக்கா, இத்தாலி, கனடா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவ்வகை ஆய்வுக்காக பழைய சுரங்கப் பகுதிகளை எடுத்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இங்கு புதிதாய் சுரங்கம் வெட்டப்படும் போது பல நுண்ணுயிர்கள், காட்டு விலங்குகள், மனிதர்களுக்கு கல்லறை எழுப்பப்படுவதும் நடக்கிறது.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதிய மணியன்

வெற்றிடத்தை நீலத்தால் நிரப்பும் வானம் : அமிர்தம் சூரியாவின் கவிதைகள்

சுப்ரபாரதிமணியன்


யானையின் பிரமாண்டம் எப்போதும் ஆச்சர்யப்படுத்துவதுண்டு. ஆனால் தேர்ச் சிற்பங்களுக்குள் அது அடைபட்டுப்போவது இன்னும் ஆச்சர்யமே தரும். கவிஞர்களின் வேலையில் சிற்பமாய் யானையை அடக்குவது என்றாகிவிடுகிறது.
சிறுகதை, கவிதை , பத்திரிக்கைப் பணி என்று இருப்பவர் அமிர்தம் சூர்யா. பத்திரிக்கைப்பணியே அவரின் நேரத்தைச் சாப்பிட்டு விடும். அதுவும் தீவிரமான கவிதை உணர்விற்கு எதிரான மனநிலையில் படைப்புகளை அணுகுகிறவருக்கு ஒவ்வொரு கவிதை ஆக்கமும் தவம்தான்.  பிரசவ அனுபவம்தான்.  ஆனாலும் பத்திரிக்கையாளனாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பல சமயங்களில்  கர்வம் இல்லாமல் போய் விடுகிறது. சிறுபத்திரிக்கைப்பணியில் ஆரம்பித்தது பெரும் பத்திரிக்கைப் பணியாகி விட்டது. கவிதையைக் கைவிடுவது சற்றே சிரமமானது. அடைமொழியை சுலபமாக கை விட்டு விடமுடியாது. அதனால் கவிதை  உடனான உறவை தவிர்க்க இயலாமல் வைத்துக் கொண்டே இருக்கிறார். அது இத்தொகுப்பில் தொடர்கிறது.கிணற்று பாறையிடுக்கில் கசியும் நீராய் இருந்து கொண்டே இருக்கிறது.

காலை நடைபாதை பயணம் பலருக்கு வணக்கம் சொல்ல வைக்கிறது. புன்னகையை உதிர்க்க வைக்கிறது.  பலமுகங்களை அறிமுகப்படுத்துகிறது.   பழைய முகங்களுடன் பரிச்சயத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கச் செய்கிறது.  அதையே கவிதையிலும் செய்யச் செய்கிறது.
நகரம் பற்றி அதிகம் பிரஸ்தாபித்துக் கொண்டே இருக்கிறவர் அமிர்தம் சூரியா.            நகரப் பட்சிகளின் காலையை விவரிப்பவர் ( 140 )புலியாய் நகர மக்கள் ஒவ்வொருவருக்கும் பயம் காட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.(5 ) மனிதன் யார் என்று சகமனிதனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் . கன்னித்தீவை ஏன் கண்டு பிடிக்க இயலவில்லை என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் ( 42 ) நகரங்களை விட்டு ஓடிப் போகிற பாதத் தடங்களைப் பற்றியும் பேசுகிறார். பூட்டிய கிராம வீட்டின் கொல்லைப்புற டிரங் பெட்டியைத் தேடும் ஆசையும் இருக்கிறது.நகரம் அவரை பயமுறுத்துவதை அவரின் சிறுகதைகளிலும் காணலாம். இந்தக்  கண்டடைதலுக்குக் காரணமாக வாழ்வைத் துழாவுதல் இக்கவிதைகளில் இருக்கிறது. சுருக்குப் பையில் – கடைசி ஒற்றைக் கொட்டைப் – பாக்கைத் தேடும்- பாட்டியின் விரல்களைப் போல்(28) . தருக்கத்தை மீறி சொல்லவும் இவருக்கு நிறையவே இருக்கிறது.மாயையின் பல அடவுகள் இவருக்கு விசித்திரம் காட்டுவதைச் சொல்லிக் கொண்டே போகிறார்.

கவிதை பற்றிய இவரின் முன் மொழிதல்களைக்கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.  மானுட மன இருளறையில் தேங்கிக் கிடக்கிறது குளமாய் / இறைத்தேன் வீதியில் பிசுபிசுத்த்து விரலில் வரியின் காயம் ./புன்னகையினுடே தெறித்தது பரண் இடிக்கும் சூட்சுமத்தின் பிம்பமும் அதனூடாக கூட்டமும் கூவலும் மாய தரிசனமாய்/ நமக்குத் தெரியாமல் நமக்குள் பசித்த காகமும் வெடித்த மதிலும்- விதைக்குப் பதிலாய்- முளைக்கத் தெரிந்த முற்றிய  வார்த்தைகள் / இயக்கும்-இயங்கும் வாழ்வை- மனதின் கதியில் காற்று- காற்றுமாதேவி தரிசனம் தொடர்கிறது யாதுமாகி.

    மரணம்  மாயையா. இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையில் தள்ளாடுகிறது இந்த மாயைத்தனம். மாயை குறித்து பேசும்  நிர்பந்தம் பெரும்பாலும் எல்லோருக்கும் ஏற்பட்டு விடுகிறது. வாழ்வின் யதார்த்தங்களை ஒப்புக்கொண்டு  வாழ்வை நிஜமாகவேக் கொண்டு நகர்ந்து  விடுவதை இக்கவிதைகள்  கோடிடுகின்றன.
 பூனை குறித்துச் சொல்லப்படுகிறதில் பூனைதான் என்று சொல்லப்படுவதில்லை. மனிதர்களின் தேவைகளைக் குறியீடாக்கிக் கொண்டே போவது போல் பல குறீடுகளை அடையாளம் கண்டு கொள்ள முடியும். குறியீடுகள் மூலமான சுய விசாரணை இக்கவிதைகளில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தேவதேவனுக்கு அருகாமையில் இவர் இருப்பதாய் ஜெய மோகன் சொல்கிறார்.  ஆனால் இயல்பு ஒழுங்காய் இக்கவிதைகள் செல்லாமல் தடைபடுவது அதற்கு எதிராக இருக்கிறது. வடமொழிச் சொற்களின் மீதான காமமும், தலைப்பிடப்படுவதில் இருக்கும் வலிந்த தன்மையும் தேவதேவனிடம் இருக்காது. உரையாடல்களுக்கான நிறைய சாத்தியங்களைக் கொண்டிருக்கும் இக்கவிதைகளில் பல  உரையாடல் தளத்திலேயே  கட்டமைக்கப்பட்டிருப்பது வாசகனுடனான உரையாடலை எளிமைப்படுத்தியிருக்கிறது.
  ( ரூ 100 , அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை )

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

நூல் அறிமுகம் - சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “ ’’ : சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987) சுஜாதா எழுதியது

சுஜாதாவின் வெள்ளி விழா முன்னுரை: சுப்ரபாரதிமணியனின் “ அப்பா “  ’’ :  சிறுகதைத் தொகுப்பிற்கு ( 1987)  சுஜாதா எழுதியதுசுதந்திரத்திற்குப் பின் பிறந்தவர்கள் தமிழில் இன்று எழுதும் சிறுகதைகளில் லேசான சோகம், லேசான அவநம்பிக்கை, சிறுகதை வடிவத்தைப் பற்றிய அக்கறையின்மை இவை மூன்றும் இருப்பதைப் பார்க்கிறேன். தமிழில் இலக்கியத் தரமான சிறுகதைகள் இன்று சிறுபத்திரிகைகளில் தான் எழுதப்படுகின்றன என்று சொல்பவர்கள் உண்டு. சில வயசான எழுத்தாளர்கள். நான் எழுதினதுக்கு பிற்பாடு நல்ல கதைகள் நின்றுவிட்டன. தமிழ்ச் சிறுகதை உலகம் எப்படித்தான் பிழைக்கப்போகிறதோ என்று கவலைப்பட்டுக் கொண்டு பல்செட்டை கழற்றி வைக்கிறார்கள். சில ஜாம்பவான்களும் சாம்ராட்டுகளும் நான் எழுதுவதுதான் இலக்கியம் மற்றதெல்லாம் ஊதுவத்தி வியாபாரம் என்கிறார்கள். இந்த வகை அதீத அபிப்பிராயங்கள் எல்லாம் எந்த இலக்கிய சூழ்நிலையிலும் ஒரு காசு பெறாது. இவைகளுக்குக் காரணங்கள் ஒரு புறம் பொறாமை, மற்றொரு புறம் இயலாமை. இவைகளையெல்லாம் நீக்கி விட்டு ஆரோக்கியமாக இன்றைய தமிழ்ச் சிறுகதை உலகைப் பார்த்தால் நம்பிக்கை பிறக்கக்கூடிய தரமான பல கதைகள் இன்றைய காலகட்டத்தில் எழுதப்படுகின்றன. இளைஞர்கள் தத்தம் புதிய புதிய கவலைகளையும் புதிய மன ஓட்டங்களையும் செதுக்கி வைத்தாற்போல வார்த்தைகளில் அவ்வப்போது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில்தான் எழுதுகிறார்கள். சிலர் பெரிய பத்திரிகைகளிலும் அனுமதி பெறுகிறார்கள்.
 பலர் சொந்தமாகவே கைக்காசை செலவழித்து அழகான புத்தக வடிவில் வெளிவருகிறார்கள். இந்த வகையில் தமிழில் வருஷத்துக்கு நாம் முன் சொன்ன கிழச்சிங்கங்களின் கவலையை மதிக்காது பத்துப் பன்னிரண்டு நல்ல கதைகள் தேறுகின்றன.
 இவ்வாறு நல்ல கதைகள் எழுதும் இவர்கள் பெரும்பாலோர் கவிதையிலிருந்து சிறுகதைக்கு வந்திருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலர் இன்னமும் கவிதையும் எழுதுகிறார்கள் (சிலர் அதே பெயரில் சிலர் புனை பெயரில்) சிலர் சித்திரங்கள் வரைகிறார்கள். சிலர் வண்ண ஓவியங்கள். இப்படி இவர்கள் தத்தம் உள்ளங்களை வெளிப்படுத்த அவ்வப்போது கிடைக்கும் சந்தர்ப்பங்களையும் சாதனங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த வகையில் சுப்ரபாரதிமணியனும் கவிதைகளும் கதைகளும் எழுதுகிறார். இந்த இரட்டை வேடத்தில் சிரமங்களும் சௌகரியங்களும் இருக்கின்றன. கவிதை மனமும் ஒரு கவிஞனின் உன்னிப்பான பார்வையும் சிறுகதைக்கு மிகவும் உதவும். அதே சமயம் சிறுகதை வடிவமும் கவிதை வடிவமும் வேறு வேறு. அதனால் சிறுகதையல்லாததையெல்லாம் சிறுகதை என்று ஆள்மாறாட்டம் செய்யக்கூடிய அபாயங்கள் கவிஞர்கள் எழுதும் சிறுகதைகளுக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
 நான் மேலே சொன்ன இரண்டு வகைக்கும் சுப்ரபாரதிமணியனின் இந்த தொகுப்பிலிருந்து உதாரணங்கள் காட்டி விளக்குமுன் சிறுகதை பற்றிய செய்திகள்:
 சிறுகதைக்கு மேற்கத்திய இலக்கியத்தில் முக்கியத்துவம் குறைந்து கொண்டு வருவதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். முதல் காரணம் எல்லாக் கதைகளும் எழுதப்பட்டு விட்டன. இனிமேல் புதுசாக சாத்தியக் கூறுகளை ஆராயவேண்டுமெனில் விஞ்ஞான கதைகளில்தான் முடியும் என்று ஒரு சித்தாந்தம் உண்டு.
 தலையணை நாவல்கள் லட்சக்கணக்கில் விற்க சிறுகதைத் தொகுதிகள் மேலைநாட்டில் விற்காததற்கு காரணம் என்னவென்று அவர்கள் கண்டுபிடிக்கவேயில்லை. இருப்பினும் சிறுகதை இலக்கியம் மறுகிக் கொண்டிருப்பது நிஜமே.
 தமிழில் அந்த நிலைமை இன்னும் வரவில்லை. தமிழ் வார மாதப் பத்திரிகைகளில் பெரும் அளவு சிறுகதைகளைப் பதிப்பித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். (அவைகளின் தரம் பற்றி நாம் இப்போது பேசவில்லை.) எண்ணிக்கையில் தமிழில் இப்போது சிறுகதைகள் நிறையவே எழுதப்படுகின்றன. ஆனால் நாவல்கள், கவிதைத் தொகுப்புக்கள் வெளிவரும் அளவுக்கு சிறுகதைத் தொகுப்புக்கள் வெளிவருவதில்லை. இதற்கு காரணம் பதிப்பாளர்கள் சிறுகதைத் தொகுப்புக்கள் அதிகம் விலைபோவதில்லை என்கிறார்கள். இரண்டு பாகம் மூன்று பாகம் என்று ஆயிரக்கணக்கில் பக்கங்கள் கொண்ட உறையூர் ஒற்றர்களைக் கொண்ட சரித்திர நாவல்களை எழுபத்தைந்து ரூபாய் கொடுத்து வாங்கத் தயாராக இருப்பவர்கள் சிறுகதைத் தொகுப்புக்களுக்கு ஆதரவு தராதது தமிழ் நாட்டின் எத்தனையோ சோகங்களில் ஒன்று.
 இதனால் மனசிழந்த நல்ல சிறுகதை எழுத்தாளர்கள் கவிதைக்குத் தாவி விட்டார்களோ என்று எனக்கு சந்தேகம் வருகிறது.
 நம்பிக்கை இழக்காமல் சுப்ரபாரதிமணியன் போன்றவர்கள் விடாப்பிடியாக சிறுகதை எழுதிக்கொண்டிருப்பதை உற்சாகப்படுத்த வேண்டும்.
 ஆரோக்கியமான சிறுகதைகளுக்கு வருவோம். கவிதையிலிருந்து சிறுகதைகளுக்கு வருவதில் உள்ள அவஸ்தைகளையும் ஆனந்தங்களையும் பற்றி சற்று முன் சொன்னேன். உதாரணங்கள் பார்க்கலாம்.
 தமிழில் புதுக்கவிதையின் பல வடிவங்களில் நினைவூட்டும் (Evocative) வகை கவிதைகள்தான் சிறுகதைகளுக்கு அருகே உள்ளன. இந்த வகை கவிதைகளை எல்லாப் புதுக்கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள். இரண்டு பேரை உதாரணம் காட்ட விரும்புகிறேன். கலாப்ரியா, கல்யாண்ஜி.
 "ராத்திரியே மார்ஜின் போட்டு
 கடவுள் துணை
 பெயர் வகுப்பு பிரிவு
 எழுதி வைத்த
 பரீட்சை பேப்பருடன்
 எதிர்ப்படும்
 கோயிலிலெல்லாம்
 திருநீறெடுத்து
 ஜியாமெட்ரிபாக்ஸில்
 போட்டுப் போவேன்."
 "போஸ்ட்மேன் வருகிற
 நடுப்பகல்த் தெருவுக்கு
 அதேயொரு தனிமையுண்டு
 அதே விபசாரப்பெண்
 கோர்ட்டில் கூண்டேறி
 புதுப் பேருக்கு
 அபராதம் செலுத்திவிட்டு
 மாமாவுடன்
 அடிவயிற்று வலியுடன்
 வீடு திரும்புவாள்.
 உச்சி வெயிலில்
 மந்த தகனமாகும்
 தும்பைச் செடியின்
 அதே வாசனை
 நாசி நெருடுகையில்
 போஸ்ட் மேன்
 கைவிரித்துப் போவான்"
இந்தக் கவிதையை சற்றே யோசித்துப் பாருங்கள். இது உங்கள் மனத்தில் ஏற்படுத்தும் வடிவங்கள் என்ன? யார் அந்த பெண்? யார் அந்த போஸ்ட்மேன்? அந்த ஜியாமெட்ரி பாக்ஸ் பையன் ஒரு வேளை நீங்களா?
 உங்கள் மனதில் நீங்கள் பார்த்த போஸ்ட்மேனும் நீங்கள் பார்த்த விபசாரியும் நினைவுக்கு வருகிறதல்லவா, இதைத்தான் நான் 'இவொக்கேஷன்' என்கிறேன்.
 கல்யாண்ஜியைப் பார்க்கலாம்.
 "வாகன உதிரிகள்
 கையில் கனக்க
 படித்த ஹைஸ்கூலில்
 நடக்கிற வாலிபால்
 போட்டியை
 காம்பவுண்டுக்கு வெளியே
 கரியும் காக்கியுமான உடுப்புடன் ரசிக்கிற
 ஒர்க்ஷாப் இளைஞன்."
இந்த வரிகளே லேசாக ஒரு கதை சொல்ல ஆரம்பிக்கின்றன. ஆனால் இதை ரசிக்க முக்கியமாக நீங்கள் உங்கள் ஊரில் இளமையில் காம்பவுண்டு சுவரிலிருந்து வாலிபாலோ புட்பாலோ பார்த்திருக்க வேண்டும். கரியும் காக்கியுமான ஸ்பேர்பார்ட் இளைஞர்களையும் கவனித்திருக்க வேண்டும். இந்த பிம்பங்களையெல்லாம் நம் மனதில் மீண்டும் எழுப்ப இந்த வரிகள் உதவுகின்றன.
 சில சமயம் கவிதை முழுக்கதையும் சொல்லிவிடுவதுண்டு. மறுபடியும் கல்யாண்ஜி:
 "பிச்சையெடுக்க
 கையை உயர்த்தின
 ஊமைப் பையனை
 வேலையில் சேர்த்து
 அளவில் பெரிய
 பழைய பனியனை
 அவனுக்கு மாட்டி
 ஏவிமேய்த்து
 சந்தோஷப்படுகிற
 டீக்கடை பாய்"
இது ஏறக்குறைய கதையே சொன்னாலும் இவொக்கேஷன் என்பது தொள தொள பனியனில் நான் பார்த்த குழந்தைகளால் எனக்குக் கிடைக்கிறது.
 எனவே இவ்வகை கவிதைகளுக்கும் கதை வடிவத்துக்கும் கொஞ்சம் குழப்பமும் மயக்கமும் ஏற்படுவது சாத்தியமே. அதுவும் கவிஞரே கதை எழுதும் போது பின்னோக்கில் Nostaigia என்று சொல்வார்களே பழைய ஆதங்க நினைவுகளை வடித்தெடுப்பதில் இந்த வகை கவிதைகள் மிகவும் பிரசித்தம். கவிஞரின் ஆதங்கங்கள் கவிதை படிப்பவனின் ஆதங்கங்களைத் தூண்டி விடுகின்றன.
 இதே வகையில் சிறுகதையிலும் இன்று பலர் ஆதங்கங்களையும் நினைவுகளையும் சொல்லி வருகிறார்கள்.
 "அப்பாவுக்கு ஆட்டுத் தலைக்கறி பிடிக்கும். தலை வாங்க வரும்போது மொகிதின் சொல்லி வைத்த மாதிரி ஆட்டுக் கால்களையும் தருவார். தீயில் கருக்கின பின்பு ஆட்டுக்கால்களை கழுவி கயிற்றில் கோர்த்து சமையற்கட்டில் அப்பா தொங்க விடுவார்."
 இந்த வரிகளுக்கும் நாம் முன்பு உதாரணம் காட்டிய கவிதை வரிகளுக்கும் ஒற்றுமையை கவனியுங்கள். இரண்டுக்கும் நோக்கம் ஒன்றே. கவிதை வரிகள் போஸ்ட் மேனையும் கடித எதிர்பார்ப்புக்களையும் டீக்கடை பாய்களையும் நினைவுபடுத்துகின்றன. கதையின் மேற்கோள் வரிகள் சின்ன வயசில் கசாப்புக்கடைக்குச் சென்று ஆட்டுக்காலும் தலையும் தின்றவர்களுக்கு ஒருவிதமான அன்னியோன்னியத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.
 மனதில் பிம்பங்களை ஏற்படுத்தும் முயற்சி நவீன தமிழ்ச் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்கும் பொதுவாக இருப்பதை நான் கவனிக்கிறேன்.
 கேள்வி: இந்த பிம்பங்களை எழுப்பினால் போதுமா, அது சிறுகதையாகிவிடுமா?
 நான் மேற்சொன்ன ஆட்டுத்தலை உதாரணம் சுப்ரபாரதிமணியனின் 'ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்' என்ற சிறுகதையிலிருந்து எடுத்தது. இந்தக் கதை, வடிவத்தில் சிறுகதை தானா என்று ஆராய்வதற்கு முன் இந்தத் தொகுதியிலிருந்து மற்றொரு கதை 'இன்னொரு முறை மௌனம்' என்கிற கதையையும் எடுத்துக் கொள்வோம்.
 இரண்டுமே வடிவமைப்பில் ஒரே வகைதான். முதல் கதை சொல்பவன் தன் அப்பாவின் ஆட்டுக்கறி சம்பவங்களை நினைவுபடுத்திக் கொள்கிறான். பின்னதில் கதை சொல்பவன் தன் நண்பனுடன் ஒண்டிக் குடித்தனம் இருந்தபோது எதிர்த்த போர்ஷனில் பார்த்த ஆந்திரப் பெண்ணை நினைவுபடுத்திக் கொள்கிறான்.
 இரண்டுமே ஒரு கையாலாகாத பார்வையாளன் கோணத்திலிருந்து கதையின் சம்பவங்கள் நடந்துபோன பின்னோக்காக சொல்லப்படுபவை. இதில் பின்னது சிறுகதை. முன்னது சிறுகதையல்ல.
 ஏன் என்று சொல்கிறேன்.
 இப்போது சிறுகதை வடிவம் என்ற ஒரு புகையான சமாசாரம் வருகிறது.
 வெறும் ஞாபகங்கள் மட்டும் சிறுகதையல்ல. ஜானகி ராமனின் சிறுகதைகள் சிலவற்றில் குறிப்பாக பிற்கால சிறுகதைகளில் இந்த மயக்கம் ஏற்படும்.
 ராஜகுமாரி கதையில் அப்பா ஆட்டுக்கறி தின்னும் நுணுக்கமான விவரங்கள் சொல்லப்படுகின்றன.
 மௌனம் கதையில் ஆந்திரப் பெண்ணின் உள்பாவாடை வரை விவரமாகச் சொல்லப்படுகின்றன.
 இருந்தும் முன்னதில் கதை வடிவம் இல்லை. பின்னதில் கதை வடிவம் இருக்கிறது.
 இரண்டு கதைகளும், ஏன் சுப்ரபாரதிமணியனின் பெரும்பாலான கதைகள் இந்த வடிவத்தைப் பெற்றிருக்கின்றன. சிறுவயதில், அல்லது சமீபத்திய இறந்த காலத்தில் நிகழ்ந்த சம்பவங்களை அல்லது சந்தித்த கதாபாத்திரத்தைப் பற்றி நினைவு கூர்வது அது மோர்க்காரியாக இருக்கலாம், ஆந்திரப் பெண்ணாக இருக்கலாம் அல்லது கதாசிரியரின் அப்பாவாக இருக்கலாம். எப்படியும் கடந்த காலத்து சம்பவத் தொடர்ச்சிகளை உன்னிப்பாக கவனித்த ஒருவன் மிக நுணுக்கமாக நினைவு கூர்வது இந்தக் கதைகளின் பொது அம்சமாகப் பார்க்கிறேன்.
 கிறிஸ்மஸ் தினத்தன்று கறிக்குழம்பும், முந்தின நாள் செய்து வைத்த மீன் குழம்பின் மிச்சமோ காலை பத்துமணிக்கு கண்ணெரிச்சலால் வரும் தூக்கமோ இத்தனை விவரங்கள் தேவைதானா இது கதையா கட்டுரையா பட்டியலா என்று வியக்கவைக்கும் அளவுக்கு அலுப்புத் தரும் விவரங்கள் தரும் பழக்கத்தை தற்கால இளம் எழுத்தாளர்களிடம் மிகுதியாகப் பார்க்கிறேன்.
 இதை (Catalogueing) காடலாகிங் என்று சொல்வார்கள். அமெரிக்க இலக்கியத்தின் ஜேடி சாலிங்கர் இவ்வகை பட்டியலிடுவதில் பிரியர். ஒரு அலமாரியைத் திறந்தால் அதில் உள்ள அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு விட்டுத்தான் மேலே கதை நகரும். இந்த ரீதியில் சுப்ரபாரதிமணியனின் கதைகளில் தேவைக்கு அதிகமாகவே விவரங்கள் தென்படுகின்றன.
 "இரண்டாவது உள் அறையில் சமையலுக்கென்று ஒரு பிரிவு ஒதுக்கப்பட்டிருக்கும். மாடியில் பொதுவாக பாத்ரூம் என்று தனியாக இருப்பினும் லெட்ரினுக்கென்று கீழேதான் போகவேண்டியிருக்கும். கீழே படிகளைக் கடப்பதற்கு முன் சீதா வீட்டு ஜன்னல் திறந்து கிடக்கும். லேசான வெளி வெளிச்சம் உள்ளே அடையாளம் காட்டும். உள் சமையல் அறையில் சீதா படுத்திருப்பதும் வெளி அறையில் பத்மா கணவனுடன் படுத்திருப்பதும் கண்ணில்படும்."
 பத்மா எந்த அறையில் படுத்திருந்தால் என்ன என்று கேட்பவர்களுக்கு ஆச்சரியகரமாக ஒரு விஷயம் சொல்லப் போகிறேன். இந்தக் கதைக்கு இத்தனை நுட்பமான விவரம் தேவைதான். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்ற கதைக்கு தேவையில்லை! ருசியான கறி சாப்பிடுவதைப்பற்றி ஆரம்பித்து இந்தக் கதை சேக் மொகிதீனிடம் அப்பா மட்டன் வாங்க வரும் ஞாபகத்திற்கு தாவுகிறது அங்கிருந்து, அம்மா அடுத்தபாராவில் சந்தனமாய் மிளகு அரைக்கிறாள்.
 அடுத்ததற்கு அடுத்த பாராவில் சின்ன வாணலியில் மிளகும் உப்பும் சேர்ந்து வாங்கி வந்த ஆட்டுத்தலை கறியாகும் பக்குவம். இப்படி ஆற அமர அவசரமே இல்லாமல் இரண்டு பக்கம் கழித்து கோழித்தலைக்கு பழனிவேலுவுடன் சண்டை என்று முதல் சம்பவம் வருகிறது. அதற்கப்புறம் அம்மா கோழிக்கறி சமைப்பதில்லை. கோவிந்தராஜ மாமாவை கல்யாணம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆதங்கத்தை தெரிவிக்கிறாள். அம்மாவின் புதைந்த ஆசை ஒன்று வெளிப்பட அந்த ஆசை தொடர்பாக கற்பனை சாத்தியக் கூறுகளுடன் கதை முடிகிறது.
 இந்தக் கதையில் சிறுகதை வடிவம் இருக்கிறதா என்று தீர்மானிப்பதற்கு முன் சிறுகதை வடிவம் என்று நான் எதைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 எந்தக் கதைக்கும் இந்த மாதிரி விவரங்கள், சூழ்நிலை வர்ணனைகள், பாத்திரப் படைப்புக்கள் எல்லாம் தேவைதான், எதற்கு? அந்தக் கதை மூலம் மனிதர்களுடன் மனிதர்கள் பழகுவதில் உள்ள முரண்பாட்டையோ மேம்பாட்டையோ சொல்வதற்கு. தேவைப்பட்டால்தான் அவைகளுக்கு இடம் அளிக்க வேண்டும் இல்லையெனில் கோழிக்கறி சமைப்பதைப்பற்றியோ சின்ன வெங்காயம் நறுக்குவதைப்பற்றியோ ஒரு கட்டுரை எழுதிவிட்டு போகலாம். ராஜகுமாரிக்கதையில் தலைப்பிலிருந்து கடைசிவரை மறைமுகமாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு விஷயம் மனசுக்குள் பொதிந்திருந்த ஆசை. அதை கடைசிப் பாராவில் வெளிப்படுத்த இத்தனை விவரங்கள் தேவை இல்லை என்று சொல்வேன் அதே போலத்தான், "சிலவேறு தினங்களில்" என்கிற கதையில் கதை சொல்பவரின் அப்பாவுக்கு கோழிச்சண்டையில் இருந்த பிடிவாதமான ஈடுபாட்டை விஸ்தாரமாக சொல்லி அதனால் அவர் குடும்பப் பொறுப்பு இல்லாமல் திரிந்த விவரங்களையும் சொல்லி தாத்தா இறந்து போனதும் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் கோழிச்சண்டைக்குப் போவதற்கு பட்சி சாஸ்திரத்தை தேடும்போது அம்மா இதுநாள் வரை படிந்திருந்தவள் ஒரு முதல் எதிர்ப்பாக அந்த புத்தகத்தை எரித்துவிட்ட செய்தி அறிந்து அவளை அடிக்கப்போன கையோடு ஞானோதயம் பெற்று எல்லாவற்றையும் விட்டு ஒழிக்கிறார்.
 இந்த கதைக்கும் ராஜகுமாரி கதைக்கும் ஒற்றுமையான விஷயங்கள் என்ன? ஒரு இந்திய மனைவியின் மௌனமான வாழ்க்கை. என்றாவது ஒருநாள் அவள் தன் எதிர்ப்பையோ ஆதங்கத்தையோ ஆசையையோ தெரிவிப்பது. இதை இன்னும் கொஞ்சம் சிக்கனமாக காட்டியிருக்கலாமே. கோழிச் சண்டையைப் பற்றியும் ஆட்டுக்கறி சமைப்பதைப் பற்றியும் தனக்கு நினைவிருக்கும் அத்தனை சங்கதிகளையும் சொல்லும் போது கதாசிரியர் சிறுகதை வடிவத்தை கோட்டை விடுகிறார்.
 வடிவம் உத்தமமாக அமைந்திருக்கும் கதைகளும் இந்த தொகுதியில் உள்ளன. "இன்னொரு முறை மௌனம்" என்ற கதை இதற்கு முதன்மையான உதாரணம். இதிலும் ஒரு பெண்ணின் அவலம்தான் கதை மையம். சற்று தூரத்திலிருந்து மாடியில் மூன்று போர்ஷன்களில் ஒரு போர்ஷனில் வசிக்கும் ஒரு பிரம்மசாரியின் கோணத்திலிருந்து முதல் போர்ஷனுக்கு குடி வந்திருக்கும் ஒரு குடும்பத்தைப்பற்றிய அன்றாட விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சொல்லப்படுகின்றன. இந்தக் கதையிலும் மற்ற இரண்டு கதைகள் போல நிறையவே விவரங்கள் இருந்தாலும் அத்தனை விவரங்களும் கதையின் மையக்கவலைக்கு ஏதோ ஒரு விதத்தில் செறிவூட்டுகின்றன. மெல்ல மெல்ல அந்த குடும்பம், அதன் உறவு விவரங்கள் வெளிப்படுகின்றன. இயல்பாக ஏதோ ஒரு பிறப்புபோல ஒவ்வொன்றாக ஒரு கோட்டுச் சித்திரம் மெல்ல மெல்ல வண்ணங்கள் நிரப்பப்பட்டு... முழு ஓவியமாவதுபோல கணவன் மனைவி கணவனின் தங்கை சீதா இப்போது சீதாவின் மேல் கதையின் கவனம் அதிகமாக அவளுடைய சுபாவம், பார்வையில் தாபம், அவளுடன் பேசமுடியாத தெலுங்கு, அவள் துவைக்கும் துணிகள் என்று மேலும் மேலும் அந்த பிம்பம் தீட்டப்படுகிறது. சீதாவின் மேல் ஏற்படும் ஒரு மாதிரியான ஆசைக்கு நம் பிரதிநிதியாக கதை சொல்லுபவன் ஏற்றுக் கொள்கிறான்.
 "தண்ணீர் பிடிக்கிறபோதும் பக்கெட்டைக் கொடுக்கிற போதும் பிற பொருட்களைத் தருகிறபோதும் அவள் கைபடுவதும் ஆடை விஷயத்தில் அசிரத்தையும் எங்கள் அறைப்பக்கமிருக்கும் பாத்ரூமிலிருந்து குலைந்த ஆடைகளுடன் வெளியாவதும் பற்றி தான் கவனித்திருப்பதாய் திருநாத் ஒரு முறை சொன்னான். இது எனக்கே ஆனது என்று மனசுள் வைத்திருந்தேன். இது பொதுவான விஷயமாகப் போய்விட்டது வருத்தமாக இருந்தது."
 இவ்வாறு மென்மையான எண்ணத் தீற்றல்களை வெளிப்படுத்தி சீதாவின் கதை பையனின் கோணத்திலிருந்து. விலகாமல் திறமையாகச் செல்கிறது. இளம் அண்ணனும், மனைவியும் அத்தனை அருகில் படுத்திருக்கும் போது அருகே இருட்டில் விழித்திருக்கும் திருமணமாகாத பெண்ணின் உள்ளக் கவலைகளை அந்த அறையில் நுழையாமலேயே நம்மால் உணர முடிகிறது.
 சீதாவின் சகோதரன் இறந்துபோய் பத்மா விதவையாகி தம்பி ராமகிருஷ்ணன் வந்து அவர்களை ஜுடிமேட்லாவுக்கு அழைத்துப் போனதும் அவர்கள் நம் பார்வையிலிருந்து விலகுகிறார்கள். அகஸ்மாத்தாக சில மாதங்கள் கழித்து சீதாவை சந்திக்கும்போது அவள் மற்றொரு சகோதரனுடன் முன் மாதிரியே கல்யாண நம்பிக்கையே இல்லாத இன்னம் இளைத்துப் போய் அழகு குறைந்த சீதாவை சந்திப்பதுடன் கதை முடிந்தாலும் அது நம்முள் எழுப்பும் சில எண்ணத் தொடர்ச்சிகள் முடிவதில்லை. ஊருக்கு ஊர் நாம் பார்க்கும் சீதாக்களை மனத்தில் கொண்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் உயிர் வாழ்தலின், பெண் ஜன்மத்தின் நகர வாழ்க்கையின் அநிச்சியம், பிரம்மசாரிகளின் மௌன அதைரிய ஆசைகள் யாவுமே வெவ்வேறு படிமங்களாக வெளிப்படுகின்றன. இவை அனைத்தையும் கொண்டு வருவதற்கு இக்கதையில் இத்தனை விவரங்கள் தேவைதான். சுப்ரபாரதிமணியனின் மற்றக் கதைகளையும் இந்த வடிவம், வடிவமற்ற ரீதியில் விமரிசிக்க முடியும். வடிவம் அமைந்திருக்கிறதா இல்லையா என்ற தீர்மானத்தை இனி நீங்களே ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.
 சுப்ரபாரதிமணியனின் தமிழ் நடையில் ஒரு கவிஞனின் பலங்களும் பலவீனங்களும் உள்ளன. நான் முன்பு குறிப்பிட்ட மாதிரி மெலிதான தீற்றல் போன்ற எண்ணங்களை சொல்ல முடிவது நிறை. "கணிசமான சதவிகிதத்தில் அரக்கனோ குழந்தையோ மென்மையோ நம்முள் உறைந்து போயிருப்பதை நாம் எப்போது முதல் முதலாக உணர ஆரம்பித்தோம் என்பது ஆச்சரியமான விஷயம்." இது முழுவதும் உங்களுக்கு முதல் படிப்பில் புரிந்தால் நீங்களும் கவிஞர்.
 ஏனெனில் கவிஞர்கள் "செல்லம்மாவை எனக்கு நினைவிருக்கிறது" என்று சொல்லமாட்டார்கள்.
 "புராதன ஓவியம் போல் செல்லம்மா நினைவுக்குரிய விஷயமாக எனக்குள் இன்னும் இருக்கிறாள்" என்று தான் சொல்வார்கள்.
பதிவுகளுக்கு அனுப்பியவர்: சுப்ரபாரதிமணியன் subrabharathi@gmail.com

புது நூல்: தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை - அ.முத்துலிங்கம்; உயிர்ப்பிக்கும் உரையாடல்கள்!சுப்ரபாரதிமணியன்"எங்களின் சின்ன உலகத்தினுள் வாழாமல் மற்ற எழுத்தாளர்கள் எப்படி எழுதுகிறார்கள் எப்படி சிந்திக்கிறார்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்று நேர்காணல் மூலம் அறிந்து கொள்வதுதான்” என்கிற ஈடுபாட்டில் அ.முத்துலிங்கம் அவர்கள்  வெளிநாட்டைச் சார்ந்த இருபது எழுத்தாளர்களை நேர்காணல் செய்து ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். கனடாவில் அலிஸ்மான்றோ, மார்க்ரெட் அட்வுட் போன்று நான்கு எழுத்தாளர்கள், அமெரிக்காவில் சிலர் , இங்கிலாந்தில்  ஒருவர் என்று அதன் பட்டியல் நீள்கிறது. அதை ஆறு ஆண்டுகளுக்கு முன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தலைப்பு  “வியத்தலும் இலமே“ “எழுத்தாளர்களை நான் தேடிப் போனதில்  வியக்க வைக்கும் ஏதோ அம்சம் அவர்களிடம் இருந்த்து. சமிக்னை விளக்குச் சந்தியில் நிற்கும் குழந்தை போல் நான் அவர்களால் கவரப்பட்டேன். அவர்களுடனான சந்திப்புகள் வெகு சுவாரஸ்யமாக  இருந்தன. அவர்கள் ஆடம்பரம் இல்லாதவர்களாகவும், மனித  நேயம் மிக்கவர்களாகவும் நம் மனதைச் சட்டெனத் தொடுபவர்களாகவும் இருந்தார்கள். ஒவ்வொரு சந்திப்பும் என்னை புது மனிதனாக மாற்றியது“ என்கிறார். வெற்றுச் செய்திகளை இறைக்காமல் எழுத்தாளர்களின் அனுபவம் சார்ந்த உலகங்களை
புனைகதைகளின் சுவாரஸ்யத்தோடு இயல்பாக வெளீப்படுத்தியிருக்கிறார். மெல்லிய நகைச்சுவை, எழுத்தாளர்களின் வெவ்வேறு கலாச்சாரச் சூழல், எழுத்தின் நுட்பமான அம்சங்களைக் கொண்டவை அப்பேட்டிகள்.
அ.முத்துலிங்கம் அவர்கள் பற்றிய சகஎழுத்தாளர்கள், வாசகர்களின்  கட்டுரைகளையும் , அவரின் பேட்டிகளையும் தொகுத்துப்  படிக்கிற போது  அவரின் பேட்டிகளில் இருக்கும் சுவாரஸ்யம் அவர் மற்ற எழுத்தாளர்களை நினைத்து வியத்தல் போல்  அவரைப் பார்த்து எவருக்கும் வியப்பைக் கொடுக்கும். அந்த வியப்பை இத்தொகுப்பும் கொடுக்கும்.  நேர்காணல்கள்  கூட ஒரு வகைப்படைப்பாக்கம்தான். பகிர்வும், விவாதங்களுமான கோப்பைக்குள் நிகழும் புயல்தான். கற்றறிந்த விசயங்களை, அனுபவப்பட்ட்தைச் சொல்வதும் அவரின் பரந்துபட்ட அனுபவ முதிர்ர்சியுடன் பல்வேறு விசயங்களை அருகருகே வைத்துப்பேசுவதில் இருக்கும் சுவாரஸ்யமும் இப்புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. 
சமீபத்தில் கனடா இணைய தளத்துக்காரர் , கிரிகெரி டியன், என்பவr அவரின் இணைய தளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுவரைச் சந்தித்திராத 100 பேருடன் தேனீர் அருந்தியபடிச் சந்திக்க விரும்பினார் ”  இந்த உலகம் தனிமைப்பட்டு விட்டது.  நாமெல்லாம் சமூக மனிதர்கள், சமூக விலங்குகள். ஆனால் ஏன் இப்படித் தனிமைப் பட்டுப் போனோம்.  பேச, பரிமாறிக் கொள்ள, கதைகள் சொல்ல, சிரிக்க, சந்தோசிக்க, கற்றுக் கொள்ள சந்திப்பு அவசியம் “ என்றார். aaஅவருக்கு 100 கோப்பைத் தேனீருடன், நூறு புது மனிதர்கள் கிடைத்திருப்பார்கள். உண்மைதானே.உரையாடல் என்ற வார்த்தையே  அகராதியில் இருந்து நீக்கப்பட்டு விடுமோ என்ற பயம் பல உளவியல் அறிஞர்களுக்கு வந்திருக்கிறது.வீடுகளுக்கு வரும் நண்பர்களோடு, உறவினர்களோடு  தொலைக்காட்சி பார்த்தபடி, கைபேசியில் குறுஞ்செய்திகளை அனுப்பியபடி, பார்த்தபடி தான் உரையாடுகிறோம்.பயணங்களின் போது காதுகளில் ஏதவது ஒயரைச் செருகி எதையாவது கேட்டுக் கொண்டிருக்கிறோம்.உரையாடுதல் என்ற  கலைக்கு  சாவு மணி அடிக்கிறோம்.கேட்க, பேச மறந்து விட்டவர்கள்  போலாகிவிட்டோம். 
நல்ல உரையாடல்கள் எதிரில் உள்ளவரின் மனதை அறிய, அவர் அறிவை அறிய,  உரையாடல் மூலம் பகிர்ந்து கொள்ள, கை குலுக்கிக் கொள்வதைப் போல. அப்புறம் சிந்தனைத் தெளிவிற்கு, கொஞ்சம் சேகரித்துக் கொள்ளவும் கூட.. முத்துலிங்கம் அவர்கள்  பகிர்ந்து கொள்ளும் வெவ்வேறு விதமான தகவல்களும் இலக்கிய அனுபவங்களும் அவருக்கே உரித்தானவை.அவரின்   “ குதிரைக்காரன் “ என்ற சமீபத்திய தொகுப்பிற்கான ( சென்றாண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான ஆனந்தவிகடன்  விருதை அந்நூல் பெற்றது ) முன்னுரையில் இப்படிச் சொல்கிறார்.: “ நூறு தேர்க்கால்கள் செய்த ஒரு தச்சருக்கு 101வது தேர்க்கால் செய்வது எத்தனை சுலபம். நூறு குதிரைகளை அடக்கிய வீரனுக்கு 101 வது குதிரையை அடக்குவது எத்தனை சுலபம். 100 ரோஜாக்கன்று நட்டு வளர்த்த ஒருவருக்கு 101வது ரோஜாக்கன்றை வளர்த்து எடுப்பது  எத்தனை சுலபம். ஆனால் சிறுகதைகள் அப்படியல்ல. 100 சிறுகதைகள் எழுதிய ஒருவருக்கு 101 வது சிறுகதை எழுதுவது அத்தனை எளிதாக  இருப்பதில்லை. உண்மையில் மிகவும் கடினமானது.  அது ஏற்கனவே எழுதிய நூறு கதைகளில் சொல்லாதது ஒன்றைச் சொல்ல வேண்டும். மற்றவ்ர்கள் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும்  இருக்க வேண்டும். “ புதிதைச்  சொல். புதிதாகச் சொல் “ என்பார்கள். இப்பேட்டிகளிலும் புதிது புதிதாக விசயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். பேட்டி எடுத்தவர்கள் பாக்யவான்கள்.
முத்துலிங்கம் அவர்களின் இப்பேட்டிகளையும் உரையாடல்களைய்ம் கவனிக்கிற போது கட்டுப்பெட்டியான குடும்பங்களில் ஆண்கள்  பேசுவதை எதிலும் குறுக்கிடாமல் , கேள்விகள் கேட்காமல் கண்களை சிமிட்டாமல் கேட்கும் பெண்களைப்  போல் இருக்க ஆசை வருகிறது.
                              
(விலை ரூ 120. கயல்கவின் பதிப்பகம் , சென்னை  9944583282)

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்

பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்சுப்ரபாரதிமணியன்பாரதி தன் வாழ்க்கையில் மூன்று அறங்களைத் தொடர்ந்து வலியுறுத்தியும் கடை பிடித்தும் வந்தார்.1. நமக்குத் தொழில் கவிதை. 2. நாட்டிற்குழைத்தல் 3. இமைப் பொழுதும் சோராதிருத்தல். எந்தக்காலத்திலும் யாரும் இந்த அறங்களை மனதில் கொள்ளும் போது வாழ்க்கை சேமமுறும். மரணத்திற்குப் பிறகும் வாழ்வு தொடங்குவதை அவரின் படைப்புகள் தொடர்ந்து காட்டி வந்திருக்கின்றன. அந்தப் படைப்புகளில் முனைவர் சொ. சேதுபதி தோய்ந்து உணர்ந்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. பாரதியின் படைப்புகள் பன்முகத்தன்மை கொண்டவை. அன்பின் தேடலாக  அமைந்தவை. சமகாலத்தன்மையை தொனித்துக் கொண்டே இருப்பவை.  இன்றைய உலக மயமாக்கல் சூழலில் அந்நிய முதலீடும் உலகமே சந்தையாகிக் கொண்டிருக்கும்  நிலையில் அந்நியத் தொழில் பெருக்கமும், உள் நாட்டுத் தொழில்களின் நசிவும், அதனால் உள்நாட்டுப் பொருளாதாரச் சிதைவும் பற்றியச் சிந்தனையை அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் பார்வையின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.ஈனர்கள் என்று சாடுகிறார். தீபாவளியை முன் வைத்து அவர் எழுப்பும் கேள்விகள் இன்றைய சூழலில் பெரும் பொருத்தப்பாடு கொண்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.பாரத தேசம்  சுதந்திரமடைந்து சுயராஜ்யம் ஸ்தாபித்து விட்டால் அந்த தினம் பாரதநாட்டில் எல்லா மதத்தினர்களுக்கும் பொதுவான ஓரு புதிய  தீபாவளியாய் விடும் என்று வெகுவாக நம்பியவர்.தூக்கமும் ஓய்வும் கூட எதிரிகளாய் அவருகுத் தென்பட்டிருக்கின்றன. எல்லா வகைப் பாடல்களையும் பாடியிருக்கும்பாரதி  தாலாட்டும், ஒப்பாரியும் பாடியதில்லை.வறுமையும் பிரச்னைகளும் அவரை நிலை கொள்ளாமல் தவிக்க வைத்தாலும் கூட அவரிடம் வெறுமை தென்படாமல் கவித்துவக் குரலை  வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார் என்பது எல்லா காலத்திலும் எவ்வகை சமூக மனிதனாக இருந்தாலும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
அதனால்தான் மரணமில்லா பெருவாழ்வும் அவனின் கனவாக இருந்திருக்கிறது.அவரின் இறுதிச் சொற்பொழிவினை ஈரோட்டில் கருங்கல் பாளையத்தில் நிகழ்த்தியிருக்கிறார்.அதன் தலைப்பு : ”  மனிதனுக்கு மரணமில்லை.”  அவரை சிறந்த சொற்பொழிவாளராகக் காட்டும் தரவுகளைத் தந்திருக்கிறார். இதைத்தவிர இஸ்லாம் மார்க்க மகிமை போன்ற சொற்பொழிவுகளை மேற்கோள் காட்டி இதைச் செய்திருக்கிறார்.
தாவரங்களின் வழி அன்பைத்  தனது தொழிலாக, மதமாக வரித்துக் கொண்ட  இன்றைய சுற்றுசுசூழல் கேடுகள் அபாயச் சங்காக ஒலிக்கு காலத்தில் சமூக மனிதனான எழுத்தாளர்கள் கை கொள்ள வேண்டியது அவசியமானது என்பதைத் கூர்ந்து  கவனிக்கிற போது அவதானிக்க முடிகிறது.பட்டுப்பூச்சிகளைக் கொன்று பட்டாடை உடுத்துவதில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது. பட்டுப்பூச்சியோடு நில்லாது அவரது உயிரன்பு ஆட்டுக்குட்டியின் மீது விழுந்து  அதை விற்க இழுத்துச் செல்லுபவனிடம் அதை விலை கொடுத்து வாங்கி அது கொலையாவதை  தவிர்க்கிறார். அதை தன் வீட்டு வேலைகார அம்மாக்கண்ணுவுக்கு வளர்க்கச் சொல்லி பரிசாக அளித்தவர். கழுதைக்குட்டியை தோளில் வைத்து கொண்டாடியக் காட்சி பல இடங்களீல் காட்டப்பட்டிருக்கிறது.திருவனந்தபுரம் மிருகக் காட்சிசாலையில்சிங்கத்துடன் உரையாடியவர். திருவல்லிக்கேணி கோவில் யானைக்கு தேங்காய் பழம் கொடுத்து  உபசரித்தவர். காக்கை குருவிகளுக்கு உணவு அளித்து புரந்தவர். புதுவைப் புயலின் போது மாண்ட 790 காக்கைகளை நல்லடக்கம் செய்தவர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொள்ள வலியுறுத்தியவர். சக உயிர்களின் இருப்பு எப்படி பூமியின் சமநிலைக்கு உதவுகின்றன என்பது பாரதியின் செயப்பாட்டால் விளங்கியதை சேதுபதி எடுத்துரைக்கிறார்.  . 
பலஅபூர்வமான  புதிய தரவுகளையும் செய்திகளையும் உள்ளடக்கியதாக இந்நூல் அமைந்திருக்கிறது. பாரதி தலைமறைவு வாழ்க்கையில் சென்னையிலிருந்து புதுவைப் பயணத்தை இரயில் மேற்கொண்டாரா, இல்லை படகில் சென்றாரா என்ற ஆய்வில் படகில் சென்றிரூகும் வாய்ப்பு பற்றி  எடுத்துரைக்கிறார். ( இதை மெய்பிக்க அவர் அரசாஙகத்தின் கெமிக்கல் எக்ஸாமினரின் முதல் நிலை உதவியாளரான நஞ்சுண்டராவ் வாரிசுகளை சேதுபதி தேடிச் சென்ற அனுபவங்களை நூலில் குறிப்பிடவில்லை. ஆனால் அதுவே ஒரு தனி நூல் அளவு விரிவானது)  படைப்புகளைத் தொகுக்கப்படுகிற போது ஏற்படும் மயக்கம் தந்திருக்கும் குழப்பத்தை சேதுபதி பாரதிதாசன் அரவிந்தர் மீது பாடிய அரவிந்த பாமபு என்ற கவிதை பாரதியின் பாடலென இடம்பெற்றிருப்பதை ஆதாரங்களுடன் காட்டுகிறார்.தன் நண்பரான அரவிந்தரின் நட்பு  ஆன்மீக இலக்கிய உறவாக இருந்ததைக் காட்டும் அத்தியாயங்கள் வெகு சிறப்பானவை.
பாரதி எப்பொருளையும் விட்டு வைக்கவில்லை. எந்தக்கடவுளையும் கூட.பக்தி இலக்கியப் பார்வையிலிருந்து  மாறுபட்டு செயலாக்க  நிலையில் நாயன்மார்களின் வரலாற்றை மீட்டுருவாக்கம்  செய்திருப்பதை சேதுபதி விரிவாய்ச் சுட்டிக்காட்டுவதில் நவீன நாயன்மாராக பொலிவுறும் பாரதியைக் காட்டுவதன் மூலம்    கலை வடிவம் மீறி செயல்வடிவிற்குறிய  அவசியத்தை  வலியுறுத்துகிறார். சமூக செயல்பாடுகளில் இன்றைய எழுத்தாளர்கள் நிற்க வேண்டிய இடம் எது என்பது இதனால் பூடகமாக சேதுபதி வெளிப்படுத்தியிருக்கிறார். என்பது சமகால முக்கியச் செய்தியாகும். அருணகிரிநாதர் முதற் கொண்டு அரவிந்தர் வரைக்கும்,  நவராத்திரி முதல் தீபாவளி வரை, மதம் முதல் தொழிலாளி வர்க்கம் வரை பாரதியின் பாடல்கள் கவிதையின், படைப்பிலக்கியத்தின்  உச்சமாயும், சமூக வாழ்வியலாகவும் அமைந்திருப்பதை சேதுபதி ஆழமான வாசிப்பு உணர்வுடன் வெளிப்படுத்தியிருக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.அருணகிரிநாதரின் கவிதைகளை மொழிபெயர்த்தது, நாயன்மார்களின் இலக்கியம் பற்றிய கட்டுரைகளை  சேதுபதி வெளிப்படுத்துவது பாரதியின் ஆழமான வாசிப்பின் அடையாளத்தையும் பன்முகத்தன்மையையும்  விரிவுபடுத்துகிறது.
மேடை வலிமை வாய்ந்த ஊடகமாக இருந்த காலத்தில் அவரின் சொற்பொழிவுகள் ஆவேசமும் நடைமுறைப்பேச்சுப் பாங்கும் கொண்டு எழுதிப் பழகும்முன் சொல்லிப் பழகுதல்  என்ற வகையிலான பயன்பாட்டிற்கும் ஏதுவாக இருந்திருக்கிறது..அவரின் படைப்புகளுக்காக அவரின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரின் பேச்சுகளே காரணமாகியிருக்கிறது. இதுவும் எழுத்துச் செயல்பாட்டில் முக்கியம் பெறுகிறது. சேதுபதியும் படைப்பிலக்கியத்தில் மட்டுமின்றி பேச்சு சாதுர்யத்திலும் அக்கறை கொண்டவர் என்கிற வகையில் பாரதியின்  வாழ்க்கையில் விரவியிருக்கும் பல முக்கியச் சம்பவங்களையும் சுவாரஸ்யமானச் செய்திகளையும் அவரின் கவிதைகளின் ஊடே கூட்டிச் சென்று பாரதியின் படைப்புகளில் மட்டுமின்றி வாழ்க்கைஊடாகவும் காட்டுவதில் இன்னொரு மகுடமாக இந்நூலை நிச்சயம் கூறலாம்.
நூல்: பாரதி தேடலில் சில புதிய பரிமாணங்கள்- முனைவர் சொ. சேதுபதி ரூ 115, நியூ சென்சுரி  புக் ஹவுஸ், சென்னை

நாவல் : தறிநாடா… –

சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

கலைச்செல்வி

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி என்று நாவலின் காலக்கட்டங்களை உரைத்துக் கொண்டே கதை நகர்வதால் முன்னுரைக்கு பதிலான பின்னுரையின் தொடர்பின்றி மறுபதிப்பு நாவலாக மனதிற்குள் பதிகிறது.
‘கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.. கவலை உனக்கிலை ஒத்துக் கொள்..’ என்ற கருத்து எதிர்மறையாகிறது. கற்றுக் கொண்ட கைத்தொழில் கண்ணெதிரே நசிந்துக் கொண்டிருக்க விட்டு செல்லவும் முடியாமல் தொட்டு தொடரவும் வழியின்றி போராட்டமாக மாறுகிறது. போராட்டம்.. போராட்டம்.. நீளும் போராட்டம்.. அரசியல் பாதுகாப்பின்மை.. பணபலமின்னை.. வலுவான ஆள் தொடர்பின்மை.. ஒருமித்த கருத்தின்மை.. ஜாதி ரீதியாக மட்டுமே கையெடுப்பு.. என்பது போன்ற காரணிகள் அமிழ்த்துவதில் பசி.. சாவு.. அழுகுரல்.. இவற்றோடு காவல்துறையினரின் அடக்குமுறையும் சேர்ந்து கொள்ள போராட்டம் கூர்மையை இழக்கிறது. இருப்பதை பிடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நிலைக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது.. என்ற உண்மை நிலைப்பாடு உருக்குலைந்து போகிறது.
நெசவுத்தொழிலின் பிரத்யேக வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தெளிவு செய்திருக்கலாம். தறிநாடா.. பாவு.. பாவடி.. பில்வேர்.. ஊடைநூல்.. ஜக்காடு மிஷின்.. என்ற நெசவுப்பயணத்தில் சவுண்டியம்மன் கோவில்.. அதை தொடர்ந்த சிறுசிறு நம்பிக்கைள்.. சம்பிரதாயங்கள்.. சிவனின் காரமடை பெருமாள் மீதான பக்தி.. அதை சுற்றியமைந்த கதைகள் போன்றவை நாவலை உயிர்ப்பாக்கி முன் செலுத்துகிறது.
ஒரு தொழிலின் நசிவென்பது முதலில் உணரப்படுவது அந்த தொழிலாளிகளால் தான். அவர்களின் குரல்கள் அலட்சியப்படுத்தப்பட்டு செய்யும் காலப்பயணம் முழுமையற்று தான் போகும். பொன்னுவை நேர்முகத்தேர்வுக்கு அனுப்பும் தகப்பன் ;நாங்கள்ளாம் ஏழப்பட்ட நெசவாள குடும்பம்ன்னு சொல்லுப்பா..’ என்ற ஒற்றை வார்த்தை ஒரு சமுதாய துயரத்தை உணர்த்துகிறது. ஆசாட மாதங்களில் தறிசாமான் கடையா.. அடகு கடையா என்ற சந்தேகம் வந்து விடும் என்ற பதிவுகள் மனதின் சுமைகள்;. கூரைப்புடவை.. ராஜாஜி கதர்.. ஆனந்தரங்கம் பிள்ளையின் நெசவுத்தொழில்.. இப்படியான தகவல்கள் ஏராளம். எண்ணங்களையும் எதிர்கால பயங்களையும் கனவுகளாக்கி வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
போராட்டத்தின் தொய்வுகளும் நிமிரல்களும் பத்திகளாக வெளிப்படாமல் கதாபாத்திர உரையாடல்கள் மூலம் தெரிய வருவது ஆறுதல்.  ‘ஸ்டிரைக் யார பாதிக்குது..? முதலாளிங்க அக்கறப்படல.. நாமளே இறங்கி வரணும்னு நெனப்பு அவங்களுக்கு.. கடைகளை கூட அபூர்வமா தான் தெறக்கிறாங்க.. எப்போஎப்போன்னு பாத்து நெஞ்ச சேலைய கொடுத்தமுன்னா காசு வேணும்னா உங்க சங்கத்துல கேளுங்கிறாங்க..’ இயலாமை வார்த்தைகளாகிறது. ‘பாவெல்லாம் நீட்டி எவ்ளோ நாளாச்சு..’ குலத்தொழிலின் ஏக்கம் வார்த்தைகளில் வடிகிறது.
ஏகப்பட்ட விஷயங்களை தொட்டு செல்லும் நாவலாசிரியர் பொன்னுவின் பாத்திரத்தில் தன்னையறியாது வெளிப்படுகிறார். ‘நெசவாளிங்க போராட்டத்துல உண்மையா நெசவு செய்றவங்கள மட்டும் போனா போதும்..’ என்று வரமறுக்கும் நேர்மை.. தகப்பனின் தழுதழுப்புக்கு ‘இரக்கப்படற உலகம் இது இல்லப்பா..’ என்ற சமுதாய புரிதல்.. என்று பொன்னுவின் மனப்போக்கு விரிவடைகிறது. நாராயணமூர்த்தி வேடமிட்ட பொன்னு.. தன்னை ஜாதிக்குள் சொருகிக் கொள்ளும் பொன்னு என்றிருந்தவன் வேலையின்றி சலித்து கிடந்ததில் பாசிபடர்ந்த குட்டைக்கு அழுக்கு துணிகளை வெளுக்க செல்லும் தாயும் சகோதரிகளும்.. சோறின்றி போனதில் மயங்கிய தாய்… காசின்றி போனதில் காத்து கருப்பு நம்பிக்கை.. இதற்கு ஒத்து ஊதும் காசி சித்தப்பா.. இப்படியான பற்பல நிகழ்வுகளில் பொன்னுவின் விழிப்புணர்வு உணர்த்தப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் வீழ்ந்து போன பரமேஸ்வரன் பொன்னுவின் மனதில் உயிர்த்து போகிறார்.. தோழர் ராஜாமணி நிலைத்து விடுகிறார்.. பொதுவுடமை சித்தாந்தத்தின் வழி செல்லும் மனதை கட்டுப்படுத்த முடியாது இறுதியாக பெற்றவர்களிடம் தன்னை தணித்துக் கொண்டு வாதிடும் பொன்னு.. அப்போதே புதுத்தோழர் உருவாகி விடுகிறான்;.
ஒரு விதமான ‘டிரண்ட் செட்டர்களாக..’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் தற்போதைய கதராடை காதலர்களை நோக்கி சொடுக்கி விட்ட சாட்டை இந்நாவல். வெகுஜன பார்வைக்கு உட்பட்டேயாக வேண்டிய நாவல்.
நாவலை முடிக்கும் போது காலங்களின் குரல்கள்; காதுகளில் தறிநாடா சத்தமாய்.. சத்தமாய்.. சத்தமாய்..
Print Friendly

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு

பெண் எழுத்தாளர்களின் சிறந்த நூல்களுக்கு ரூ 50,000 பரிசு

      கடந்த 3 ஆண்டுகளில் வந்த சிறந்த நூல்களை அனுப்பலாம். கவிதை, சிறுகதை நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு,ஆய்வு, நாடகம் அன்று அனைத்துப்பிரிவு நூல்களையும் அனுப்பலாம்.
ரூ50,000 பரிசு வழங்கப்படும்.
3 பிரதிகள் அனுப்ப வேண்டும்.
கடைசி தேதி :  15-4-2014
முகவரி:
அரிமா மு ஜீவானந்தம் இலக்கியப்பரிசு
பாலாஜி ரோடுலைன்ஸ்,
51/38, சரவணா தெரு,
அவினாசி சாலை,
திருப்பூர் 641 602